Advertisement

அத்தியாயம் 8
அலாதியான காதலால்
உன் காலடித் தடத்தைக்
கூட சிற்பமாக செதுக்க
ஆசை கொண்டேன் நான்!!!
தன்னுடைய அண்ணன் சொன்ன படியே வேலை கிடைத்திருந்த கம்பெனிக்கு உடல் நிலை சரியில்லை என்றும் ஜாயின் செய்வதற்கு கொஞ்சம் அவகாசம் வேண்டும் என்றும் மெயில் அனுப்பி வைத்தாள் ஆஷா. 
காலேஜ் முடிந்ததால் ஆஷா அடிக்கடி மனோஜைப் பார்க்க வில்லை. அவளால் வெளியே செல்லவும் முடியவில்லை. பிரண்ட்ஸ் கூட வெளியே போனால் தான் அவனைக் காண முடியும் என்று யோசித்தவள் பின் தன்னுடைய தோழியை போனில் அழைத்தாள். 
அவளும் “எனக்கும் வீட்ல சரி போர். பொருட்காட்சி போட்டுருக்காங்க ஆஷா. போகலாம் டி”, என்று சொன்னதும் சந்தோசமானாள் ஆஷா. பின் இப்போதெல்லாம் சிவானி இல்லாமல் இவள் வெளியே செல்வதில்லை என்பதால் சிவானியை போனில் அழைத்தாள். 
“சிவானி, நான் தீபிகா கூட சேந்து பொருட்காட்சி பாக்க போறேன். நீ வரியா? நீயும் வா டி, பிளீஸ்”, என்று கேட்டாள் ஆஷா. 
“நான் அண்ணன் கிட்ட கேட்டு சொல்றேன் ஆஷா பேபி”, என்று சொன்ன சிவானி உடனே மனோஜை கான்பரன்சில் அழைத்து விட்டாள். 
ஆஷா கால் ஹோல்டில் விழ “இவ சரியான அண்ணன் கோண்டு”, என்று எண்ணி புன்னகை வந்தது ஆஷாவுக்கு.
“நீ மட்டும் என்னவாம்?”, என்று கேலி செய்தது அவள் மனசாட்சி. 
சிவானி கேட்டதும் அனுமதி கொடுத்த மனோஜ் “அம்மா அப்பா கிட்ட கேட்டுட்டு போ டா அம்மு. அப்புறம் பாத்து பத்திரமா போயிட்டு வரணும் என்ன? சீக்கிரமா வீட்டுக்கு வந்துரனும்”, என்று சொன்னான். 
“சரிண்ணா”, என்று சொல்லி அவன் காலை கட் செய்தவள் ஆஷாவிடம் “வரேன்”, என்று சொன்ன பிறகு தான் அம்மா அப்பாவிடமே சொல்ல போனாள். 
ஆஷாவும் புஷ்பாவிடம் சென்று அனுமதி வாங்கி விட்டு தோழிகளுடன் கிளம்பினாள். வெயில் மண்டையைப் பிளக்க பொருள்காட்ச்சி ஆசையைக் கை விட்டு விட்டு படத்துக்கு சென்றார்கள். பின் மதியம் ஹோட்டலுக்கு சென்று உணவை முடித்து விட்டு தேவையான பொருள்கள் வாங்கினார்கள்.
பின் சிவானியை அவர்கள் வீடு இருக்கும் தெரு முனையில் இறக்கி விட்டு விட்டு மாலை வீட்டுக்கு போகும் வழியில் மனோஜைப் பார்க்க சென்றாள். மனோஜ் மெக்கானிக் ஷாப் இருக்கும் தெருவின் ஆரம்பித்திலே தன்னுடைய வண்டியை நிறுத்தியவள் வண்டியை தள்ளிக் கொண்டே சென்றாள். 
யாராவது வண்டிக்கு என்ன ஆயிற்று என்று கேட்டால் வண்டி ஸ்டார்ட் ஆக வில்லை என்று சொல்லிக் கொள்ளலாம் என்பது தான் அவள் எண்ணம். அதே போல அவள் செல்லும் போது எதிர்பாராத விதமாக அவன் முன்னே வந்து நின்றான் ஜெயச்சந்திரன்.
அவனை அங்கே எதிர் பாராத ஆஷா “அத்தான், நீ என்ன இங்க?”, என்று திகைப்புடன் கேட்டாள். 
“நான் வரது இருக்கட்டும், நீ எதுக்கு வண்டியை தள்ளிக்கிட்டு வர? என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் ஜெயச்சந்திரன். 
“அது….அது வந்து வண்டி ஸ்டார்ட் ஆகலை”
“சரி என்ன செய்யுறதா உத்தேசம்?”, என்று அவன் கேட்டதும் உஷாரானாள் ஆஷா. இவனிடம் கவனமாக பேச வில்லை என்றால் தேவையில்லாத பிரச்சனை வரும் என்று எண்ணியவள் “அதோ அந்த மரத்தடி நிழல்ல வண்டியை நிறுத்திட்டு அம்மா இல்லைன்னா அப்பாக்கு போன் பண்ணலாம்னு நினைச்சேன்”, என்றாள். 
“அதெல்லாம் வேண்டாம் ஆஷா. அதோ அங்க தான் மெக்கானிக் கடை இருக்கு. நான் கொண்டு போறேன். நீ நம்ம கார்ல வீட்டுக்கு போ. நான் வண்டியை சரி பண்ணி வாங்கிட்டு வரேன்”, என்று சொல்லி வண்டியை தொடப் போனான். 
“வேண்டாம், வேண்டாம், நானே பாத்துக்குறேன். நீ போ. உனக்கு வேலையிருக்கும்”, என்றாள் ஆஷா. 
மனோஜை பார்க்க எண்ணி தான் அவள் இன்று வீட்டை விட்டே வந்தது. அப்படி இருக்க அவனைப் பார்க்கும் நேரத்தில் இவன் வந்து இப்படி நிற்பான் என்று அவள் கனவா கண்டாள். 
“ஆஷா சொல்றதைக் கேளு. நீ கார்ல போ. நான் வண்டியை எடுத்துட்டு வரேன்”
“ஒண்ணும் வேண்டாம். எனக்கு தான் என்னோட வண்டியை யாரும் ஓட்டினா பிடிக்காதே. அப்புறம் என்ன? நீ போ. நான் சரி பண்ணிட்டு போயிருவேன்”
“அப்ப உங்க அம்மா அப்பா வந்தா என்ன செய்வ? அவங்க கூட போவ தானே?”
“அது தான் இல்லை. அம்மா அப்பா கூட அந்த மெக்கானிக் ஷெட்டுக்கு போய் என் வண்டியை சரி பண்ணிட்டு நான் போவேன் போதுமா?”, என்று சொன்னவளுக்கு இவன் இங்கே இருந்து கிளம்ப மாட்டானா என்று இருந்தது. 
“எதுக்கு தான் இப்படி பிடிவாதம் பிடிக்கிறியோ தெரியலை. சரி வா. நானும் உன் கூட கடைக்கு வரேன். நீ கிளம்புன அப்புறம் நான் போறேன்”, என்று சொல்லி முன்னே நடந்தான். அதற்கு மேல் மறுத்தால் அவன் சந்தேகப் படுவான் என்பதால் சரி என்று சொல்லி மனோஜ் கடையை நோக்கி வண்டியை செலுத்தினாள். 
ஆஷாவைப் பார்த்ததும் “ஐ அண்ணி”, என்று சொல்ல வந்த ஜெகன் அவளின் பின்னே வந்தவனைக் கண்டு “அண்ணன், வண்டி வந்துருக்கு”, என்று குரல் கொடுத்தான். 
வெளியே வந்த மனோஜ் ஆஷாவையும் கூடவே நிற்கும் அவளுடைய அத்தை மகனையும் அங்கே எதிர் பார்க்க வில்லை. 
ஒரு நொடியில் வந்த அதிர்ச்சியை மறைத்துக் கோண்டு ஜெயச்சந்திரனைப் பார்த்து “வண்டிக்கு என்ன ஆச்சு?”, என்று கேட்டான் மனோஜ். 
அவளிடம் கேட்காமல் அவனிடம் கேட்டவளை முறைத்த படி அங்கே நின்றாள் ஆஷா. 
“என்ன ஆச்சுன்னு தெரியலை. வரும் போது வண்டி நின்னுருச்சுன்னு நினைக்கிறேன். நீங்க கொஞ்சம் பாருங்க”, என்று சொன்ன ஜெயச்சந்திரன் ஆஷா புறம் திரும்பினான். 
அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு வண்டியை பார்க்க ஆரம்பித்தான் மனோஜ். 
ராமும் ஜெகனும் கூட “வந்தவன் யாரா இருக்கும்? அண்ணனுக்கு போட்டியா வந்த வில்லனா இருக்குமோ?”, என்று எண்ணிக் கொண்டு தங்கள் வேலையை செய்து கொண்டிருந்தார்கள். 
ஆஷாவோ ஜெயச்சந்திரன் எப்போது அங்கிருந்து செல்வான் என்று எண்ணிய படியே நின்றாள். 
“இன்னைக்கு எங்க போன ஆஷா? காலேஜ் முடிஞ்சதும் வீட்ல போர் அடிக்குதா?”, என்று கேட்டான் ஜெயச்சந்திரன். 
தன்னவனைக் காண ஆவலுடன் வந்தவளின் பிளாணை சொதப்பிய ஜெயச்சந்திரனை எண்ணி எரிச்சல் வந்தாலும் “ஆமா போர் அடிச்சது. அதான் பிரண்ட்ஸ் எல்லாரும் சேந்து பொருட்காட்சிக்கு போனோம்”, என்று சொன்ன ஆஷா மனோஜை நோட்டம் விட்டாள். 
அவன் எதுவோ போதி மரத்தடியில் அமர்ந்திருப்பதை போல முகத்தை வைத்துக் கொண்டு வேலை பார்த்துக் கொண்டிருந்தான். 
வேலை பார்த்துக் கொண்டிருந்தான் என்று சொல்வதை விட வேலை பார்ப்பது போல நடித்தான் என்று தான் சொல்ல வேண்டும். அவன் தான் பார்த்த உடனே வண்டியில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கண்டு பிடித்து விட்டானே. 
“எப்பவும் இப்படி செய்யுறதே இவளுக்கு வேலையா போச்சு. முன்னாடி சைக்கிளை இவளே பஞ்சர் பண்ணிட்டு வருவா. இப்ப நல்லா இருக்குற வண்டியை ரிப்பேர்னு சொல்லிட்டு வாறாளே? இன்னைக்கு கூட வேற ஒருத்தன் வந்து நிக்குறான்? இவன் அவளோட அத்தை பையனா இருக்குமோ? ஆமா நிர்மல் சொன்ன அவங்க அத்தை பையன் இவனா தான் இருக்கும்”, என்று எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தான் மனோஜ். 
“இந்த மனோஜ் சரியான சாமியார், அவனை லவ் பண்ணுற பொண்ணு கூட இன்னொருத்தான் நின்னு பேசிட்டு இருக்கானே? இவன் அப்படியே பொறாமைல பொங்க வேண்டாமா? ஏதோ கடமை கண்ணாயிரம் மாதிரி வண்டியை பாத்துட்டு இருக்கான். இவனை எப்படியாவது வெறுப்பேத்தலாமா?”, என்று யோசித்தாள் ஆஷா. . 
அங்கே அனைவரும் அவரவர் யோசனையில் இருக்க ஜெயச்சந்திரனோ அவள் மனது புரியாமல் அவளிடம் கடலை வறுத்துக் கொண்டிருந்தான். “என்ன ஆச்சு ஆஷா? என்ன யோசிக்கிற? நான் கேட்டுட்டே இருக்கேன், நீ பதிலே சொல்லலை?”, என்று கேட்டதும் தான் அவன் புறம் திரும்பினாள். 
“இவன் என்ன கேட்டான்னு தெரியலையே. படுபாவி, இன்னைக்கு பாத்தா நான் இவன் கண்ணுல மாட்டனும்”, என்று எண்ணியவள் “இல்லை என் பிரண்டோட பர்சை என்கிட்ட விட்டுட்டு போயிட்டா. அதை தான் யோசிச்சிட்டு இருந்தேன். நீ என்ன சொன்ன அத்தான்? நான் கவனிக்கலை”, என்று சொல்லி சமாளித்தாள். 
“அத்தையும் மாமாவும் உன்கிட்ட ஏதாவது சொன்னாங்களான்னு கேட்டேன்”
“இவன் எதை சொல்றான்?”, என்று எண்ணி “அம்மா அப்பா என்ன சொன்னாங்க? நீ எதைப் பத்தி பேசுற?”, என்று கேட்டாள். 
“இல்லை நிர்மல் ஊர்ல இருந்து வந்த உடனே நமக்கு நிச்சயதார்த்தம் வைக்க போறாங்கன்னு பேசினாங்க. அதைத் தான் கேட்டேன்”, என்று ஜெயச்சந்திரன் சொன்னதும் வேகமாக மனோஜைத் தான் பார்த்தாள் ஆஷா. 
ஜெயச்சந்திரன் அப்படிச் சொன்னதும் அதிர்ச்சியாக அவர்களை நிமிர்ந்து பார்த்தான் மனோஜ். அவனுடைய அதிர்ச்சியைக் கண்ட ஆஷாவுக்கு “ஹே பாருடா, சும்மா அதிர்ச்சில திரும்புறான். அப்ப என் மேல இவனுக்கும் ஒரு ஸ்பார்க் இருக்க தான் செய்யுதா? சும்மாவே உன்னை விட மாட்டேன் மாம்ஸ். இப்ப உன்னோட அதிர்ச்சி தெரிஞ்ச பிறகா விடுவேன்?”, என்று எண்ணிக் கொண்டாள். 
“என்ன ஆஷா அப்ப அப்ப கனவுலகத்துக்கு போயிற?”, என்று கேட்டான் ஜெயச்சந்திரன். 
“ம்ம் வேண்டுதல்”, என்று எண்ணியவள் “அத்தான், நாம இதை அப்புறமா தனியா பேசலாமா?”, என்று சொல்லி மனோஜின் மனதில் பொறாமைத் தீயை கூடக் கொஞ்சம் எரிய விட்டாள். ஆனால் அவள் நினைத்த படி அவன் பொறாமைப் பட்டானா என்பது அவன் மட்டுமே அறிந்த ரகசியம். 
“இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் பேசுறாங்களா? தினமும் ஏதாவது கேக்கணும்னு சொல்லி ஒரு மணி நேரமா என்கிட்ட மொக்கை போடுறா. ஆனா இவ கல்யாண விஷயத்தை நம்ம கிட்ட சொல்லலையே? நிர்மல் வேற வாரானாமே? அவனுக்கு என்னை நினைவு இருக்குமா? என்னைப் பாத்ததும் அவனுக்கு அடையாளம் தெரியுமா? என்கிட்ட எல்லாம் பேசுவானா? இல்லை மதிக்காம கண்டுக்காம போயிருவானா?”, என்று யோசித்தான் மனோஜ். 
அவன் தன்னைப் பற்றி தான் எண்ணுகிறான் என்று ஆஷா அவனையே குறுகுறுவென்று பாக்கவும் “இந்தாங்க வண்டி, சரி பண்ணிட்டேன்”, என்ற படி எழுந்து விட்டான் மனோஜ். 
“வண்டில என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் ஜெயச்சந்திரன். 
“கொஞ்சம் லூசா இருக்கு. வேற ஒரு பிரச்சனையும் இல்லை. கொஞ்சம் டைட் வச்சா எல்லாம் சரியா போகும்”, என்றான் மனோஜ். 
அவன் ஆஷாவைத் தான் லூசு என்கிறான் என்று ஜெயச்சந்திரனைத் தவிர மற்ற அனைவருக்கும் புரிந்தது. 

Advertisement