அதன் பின் வந்த நாட்கள் ஆஷாவுக்கு டென்ஷன் மிகுந்ததாகவே இருந்தது. தினமும் மாலை சரண்யா மனோஜிடம் கடலை போட ஆரம்பித்தாள். “எனக்கு அதை சொல்லுங்க. உங்க வீட்டைப் பத்தி சொல்லுங்க. இதைச் சொல்லுங்க”, என்று மனோஜிடம் பேச்சுக் கொடுப்பாள்.
மனோஜை பேச வைக்க ஆஷா என்னவெல்லாம் செய்தாளோ அதையே சரண்யாவும் செய்ய ஆரம்பித்தாள். நிர்மலும் ஆஷாவும் தான் அமைதியாக இருப்பார்கள்.
ஒரு நாள் “இந்த ஃபார்ம் பில் பண்ணிக் கொடுங்க”, என்று மனோஜிடம் கொடுத்தாள் சரண்யா.
“நான் கொடுக்கணும்னு நினைச்சேன். அதுக்குள்ள இவ கொடுத்துட்டாளே”, என்று கடுப்புடன் இருந்தாள் ஆஷா. இருவரையும் முறைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய தங்கையை வியப்பாக பார்த்த நிர்மல் “உன்னோடது எங்க ஆஷா? கொடு. நான் பில் பண்ணித் தரேன்”, என்று சொல்லி வாங்கினான்.
மனோஜ் நிரப்பிக் கொடுத்ததும் அதைப் பார்த்த சரண்யா “என்னோட முழுப் பேர் உங்களுக்கு எப்படித் தெரியும்?”, என்று கேட்டு சந்தோஷப் பட்டாள்.
“இவ ஏன் திடீர்னு இப்படி கொந்தளிக்கிறா”, என்று எண்ணிய ஆஷாவுக்கு அப்போது தான் அவளுடைய பெயர் சரண்யா பொன் செல்வி என்று நினைவு வந்தது.
“இவளோட முழுப்பெயர் எப்படி மனோஜ்க்கு தெரியும்? சரண்யா சொல்லிருப்பாளோ? ஆனா அப்படி சொல்லிருந்தா இப்ப அவளாவே எப்படி இவ்வளவு சந்தோஷப் படுவா?”, என்று எண்ணினாள்.
“என்ன சரண்யா கேக்குற? உன்னோட பேர் சரண்யா தானே?”, என்று கேட்டான் நிர்மல்.
“என்னோட பேர் சரண்யா பொன் செல்வி. ஆனா நான் மனோஜ் கிட்ட சொன்னதே இல்லை. ஆனா சரியா எழுதிருக்காங்க. அதான்”, என்று சரண்யா சொன்னதும் அனைவரும் மனோஜ் முகத்தைப் பார்த்தார்கள்.
“அன்னைக்கு சும்மா உன்னோட பேக் பாத்துட்டு இருக்கும் போது உன்னோட நோட்லே அப்படி எழுதிருந்ததைப் பாத்தேன்”, என்று சாதாரணமாக சொன்னான் மனோஜ்.
“அடப்பாவி, அவ பேகை எல்லாம் இவன் குடைஞ்சிருக்கானா? அந்த அளவுக்கு வந்தாச்சா? அன்னைக்கு நாம எங்க போய்ட்டோம்?”, என்று எண்ணிய ஆஷா “என்னைக்கு?”, என்று கேட்டாள்.
“நீயும் நிர்மலும் ஒரு நாள் லீவ் போட்டுருந்தீங்கல்ல? அன்னைக்கு நானும் சரண்யாவும் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அன்னைக்கு தான்”, என்று மனோஜ் சொன்னதும் ஆஷா பொறாமையில் காண்டானாள்.
அதே கோபத்தோடு “அண்ணா, வா நாம கிளம்பலாம்”, என்று நிர்மலை அழைத்தாள் ஆஷா.
எப்போதுமே அண்ணன் என்று அழைக்காதவள் அப்படி அழைக்கவும் அனைவரும் அவளையே குழப்பமாக பார்க்க ஆஷாவோ “அண்ணா நீ இப்ப வரப் போறியா?”, என்று காரமாக கேட்டாள்.
தன்னுடைய தங்கையின் மனதை புரியாத அவனும் “சரி டா நான் கிளம்புறேன். பாய் சரண்யா”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
ஆஷாவோ மனோஜ் மற்றும் சரண்யா விடம் சொல்லாமலே கிளம்பி விட்டாள். அதில் மனோஜ் புருவம் உயர்ந்தது.
“என்ன ஆச்சு இவளுக்கு? கோபமா போறா. ஆஷா இப்படி இருக்க மாட்டாளே?”, என்று கேட்டான் மனோஜ்.
அதன் பின் வந்த நாட்களில் எல்லாம் ஆஷா மனோஜிடம் பேசவே இல்லை. நால்வரும் இருக்கும் போதும் சரண்யாவே பேச மனோஜ் பதில் சொல்வான். ஆனால் நிர்மல் மட்டும் ஆஷா அமைதியாக அமர்ந்திருப்பார்கள்.
மனோஜ் ஏதாவது ஆஷாவிடம் கேட்டாலும் ஆமா இல்லை என்று மட்டும் முடித்துக் கொண்டாள். “ஆஷாக்கு என்ன ஆச்சு?’, என்று மனோஜ்க்கு குழப்பமே.
அவனே வழிய வழிய அவளிடம் பேசிப் பார்த்தான். பதில் மட்டும் சொல்வாள். மற்ற படி நிர்மல் கிளம்பும் வரை தன்னுடைய நோட் எடுத்து ஹோம் வொர்க் செய்ய ஆரம்பித்து விடுவாள்.
ஒரு நாள் நிர்மல் உடல் நிலை சரியில்லை என்று லீவ் எடுத்திருக்க ஆஷா வருவதற்கு முன்பே வந்து காத்திருந்தான் மனோஜ். ஆஷாவும் சரண்யாவும் பிராக்டிஸ் முடிந்து இவனை நோக்கி நடந்து வரும் போது சரண்யாவை மனோரமா மேம் நிற்க சொல்லி விட்டார்கள்.
“நீ வெயிட் பண்ணு ஆஷா. மேம் யூனிபார்ம்க்கு அளவு கொடுக்க சொன்னாங்க. நான் சொல்லிட்டு வரேன். மனோஜ் கிட்ட சொல்லிரு”, என்று சொல்லி யூனிபார்ம்க்கு அளவு கொடுக்கச் சென்றாள் சரண்யா.
மனோஜ் அமர்ந்திருந்ததைப் பார்த்தாலும் நிர்மல் இல்லாததால் நேராக சைக்கிள் எடுக்கச் சென்றாள் ஆஷா.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த மனோஜ் அவள் செய்கையில் திகைத்துப் போனான்.
“ஏய் ஆஷா, என்ன பாத்துட்டு பாக்காத மாதிரி போற? நான் உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்ல. நிர்மல் ஏன்
இன்னைக்கு ஸ்கூல்க்கு வரலை?”, என்று கேட்டான்.
“அவனுக்கு உடம்பு சரியில்லை. அதான்”, என்று பதில் கொடுத்து விட்டு சைக்கிளை எடுத்தாள்.
“என்ன சரண்யாவை விட்டுட்டு கிளம்புற?”
“நான் எதுக்கு அவளுக்கு வெயிட் பண்ணனும்? அவளுக்காக வெயிட் பண்ணத் தான் நீங்க இருக்கீங்களே?”, என்று காரமாக கேட்டாள் ஆஷா.
“ஏய் ஆஷா எனன் ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரி பேசுற? கொஞ்ச நாளாவே நீ இப்படி தான் இருக்குற? பிராக்டிஸ் முடிஞ்சதும் பத்து நிமிஷம் இங்க உக்காந்துட்டு தானே போவோம்? ஏன் இன்னைக்கு சீக்கிரம் கிளம்புற?’
“நிர்மல் இல்லை. அதான் நான் போறேன்”
“அவன் இல்லைன்னா என்ன? அதான் நான் இருக்கேன்ல?”
“நீங்க எனக்காகவா இருக்கீங்க? சரண்யாவுக்காக தானே இருக்கீங்க? அவ யூனிபார்ம் அளவு கொடுத்துட்டு இருக்கா. இப்ப வந்துருவா. நான் கிளம்புறேன்”
“ஆஷா என்ன ஆச்சு மா? என் மேல ஏதோ கோபமா இருக்கன்னு புரியுது. ஆனா ஏன்னு தெரியலை. நான் என்ன செஞ்சேன்? ஏன் ஒரு மாதிரி பேசுற?”
“ஏன் நான் ஒரு மாதிரி பேசுறது உங்களுக்கு இப்ப தான் தெரிஞ்சதா?”
“ஏய் ஆஷா எனக்கு உன்னைப் பத்தி நல்லாவே தெரியும். நீ கொஞ்ச நாளாவே என்கிட்ட சரியா பேசுறது இல்லை. என் மேல கோபமாவே தான் இருக்குற”
“என்னை பத்தி உங்களுக்கு தெரியுமோ? இதை நாங்க நம்பனும்”
“ஏன் இப்படி சொல்ற?”
“சரி எங்க என்னோட பேர் என்னன்னு சொல்லுங்க பாப்போம்”
“உன்னோட பேர் ஆஷா. இதுல என்ன இருக்கு? ஏன் இப்படி கேக்குற?”
“மத்தவங்களோட முழுப்பேர் எல்லாம் நீங்க தெரிஞ்சு வச்சிருப்பீங்க. என்னோட பேர் மட்டும் உங்களுக்கு எப்படி தெரியும். என்னோட பேர் ஆஷா பிரியதர்ஷினி. அது கூட உங்களுக்கு தெரியலை. ஆனா அவ பேரை மட்டும் அவ சொல்லாமலே கண்டு பிடிச்சிருக்கீங்க. போங்க
போங்க உங்க ஆள் வந்துட்டா. அவ கிட்டயே பேசுங்க”, என்று சொல்லி விட்டு சைக்கிள் எடுத்துக் கொண்டு சென்று விட்டாள் ஆஷா.
போகும் அவளையே திகைத்து போய் பார்த்துக் கொண்டு அசையாமல் நின்றான் மனோஜ்.
“என்ன ஆச்சு? ஆஷா கிளம்பிட்டாளா? நீங்க என்ன இங்கயே நின்னுட்டீங்க? வீட்டுக்கு போவோமா?”, என்று கேட்டுக் கொண்டே அவன் அருகில் வந்தாள் சரண்யா.
தன்னுடைய அதிர்வில் இருந்து வெளியே வந்த மனோஜ் “நீ வீட்டுக்கு போ சரண்யா. பி. டீ சார் என்னை கொஞ்ச நேரம் இருக்க சொன்னாங்க. நாளைக்கு பாக்கலாம்”, என்றான்.
“நான் வேணா கொஞ்ச நேரம் வெயிட் பண்ணவா? நாம சேந்து போகலாம்”
“இல்லை இல்லை. நீ கிளம்பு. நான் மேட்ச் பத்தி சார் கிட்ட பேச வேண்டியது இருக்கு”, என்று சொல்லி விட்டதால் அவனையே பார்த்த படி கிளம்பினாள் சரண்யா.
எப்போதும் நால்வரும் அமர்ந்து கதை பேசும் இடத்தில் அமர்ந்த மனோஜ் ஆஷா பேசியதைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு அவளுக்கு? அவ பேர் தெரியலைன்னு இவ்வளவு கோபமா அவளுக்கு? சரண்யாவை உங்க ஆளுன்னு வேற சொல்றா. ஆஷா இப்படி எல்லாம் பேசமாட்டாளே”, என்று அவளைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான்.
இப்படியே சிறிது நேரம் யோசனையில் செல்ல ஆஷா மனதை புரிய முயன்றான். “சரண்யா கூட நான் பேசுறது ஆஷாவுக்கு பிடிக்கலை போல? ஆனா ஏன்? அவ பிரண்டு தானே இவ. அப்புறம் அவ மேல என்ன கோபம் இவளுக்கு?”, என்று எண்ணியவனுக்கு அப்போது தான் சரண்யா அவனிடம் பேச அதிகம் ஆர்வம் காட்டுவது புரிந்தது.
“ஐயோ இது என்ன இப்படி ஒரு பிரச்சனை? ஆஷா மனசுல இருக்குறதை நான் எப்படி எடுத்துக்க? இந்த சரண்யாவும் ஏன் இப்படிச் செய்யணும்? சரண்யா வந்ததில் இருந்தே ஆஷா கோபமா தான் பேசுறா. அப்ப ஆஷா மனசுல என்ன இருக்கு? நிர்மலுக்கு ஆஷா நினைக்கிறது தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பான் அவன்? ரெண்டு பேர் கூட பேசுறதையும் கட் பண்ணுறது தான் நமக்கு நல்லது”, என்று முடிவெடுத்து விட்டு வீட்டுக்கு சென்றான்.
வீட்டுக்கு செல்லும் வழி, அதன் பின்னர் என அனைத்தும் ஆஷாவைப் பற்றியே தான் அவன் எண்ணவோட்டம் இருந்தது. அவ கூட பேசக் கூடாது, அவளைப் பத்தி யோசிக்க கூடாது என்று எண்ணியே அவளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தான் மனோஜ். அதே நேரம் ஆஷாவும் அவன் மீது கொலைவெறியில் தான் இருந்தாள்.
அவள் மனதில் இருக்கும் உரிமை உணர்வை அவனிடம் காட்டி விட்டு வந்தாலும் அவன் மீதான் கோபம் அவளை விட்டு செல்ல மறுத்தது.
வீட்டுக்கு சென்றதும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளிடம் “என்ன ஆச்சு ஆஷா? ஏன் ஒரு மாதிரி இருக்க?”, என்று விசாரித்தான் நிர்மல்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் நாலைல இருந்து கிரவுண்ட் போகவேண்டாம்னு பாக்குறேன்”, என்றாள் ஆஷா.
“ஏய், லூசா டி நீ? என்ன சொல்ற? ஆசைப் பட்டு தானே சேந்த?”
“ஆமா, ஆனா இப்ப பிடிக்கலை“
“விளையாடாத ஆஷா. உனக்காக பேசி அம்மா கிட்ட எவ்வளவு கஷ்டப் பட்டு சம்மதம் வாங்குனேன் தெரியுமா? இப்ப என்னடான்னா நீ சாதாரணமா நிக்கப் போறேன்னு சொல்ற? என்ன ஆச்சு உனக்கு?”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எனக்கு பிடிக்கலை”
“என்ன பிடிக்கலை? ஆன்? கொன்னுறுவேன் கொன்னு. உனக்கு இத்தனை நாள் பிராக்டிஸ் கொடுத்து மனோரமா மேம் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாங்க? அது மட்டுமில்லாம அடுத்த மாசம் டிஸ்டிரிக்ட் லெவல் மேட்ச் வேற இருக்கு. நீ உடனடியா முடிவு எடுத்தா எப்படி சரியா போகும்? என் தங்கச்சி இப்படி பொறுப்பு இல்லாம இருக்குறது எனக்கு பிடிக்கலை. நீ திடீர்னு இப்படி சொல்ல என்ன காரணம்?”, என்று விசாரித்தவன் கூர்மையாக அவளைப் பார்த்தான்.