அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர நிர்மலும் சிவானியும் ஹனிமூன் முடிந்து வந்து விட்டார்கள். அவர்கள் வந்த உடனே அவர்கள் தலையில் ஒரு இடியைத் தூக்கிப் போட்டார் முத்துவேல்.
காலையில் வந்து வீட்டில் இறங்கிய சிவானியும் நிர்மலும் குளித்து முடித்து சிவானி வீட்டுக்கு போய் விட்டு வரலாம் என்று எண்ணி கிளம்பினார்கள். அவர்கள் கிளம்பியதை கண்டு முத்துவேல் புருவம் உயர்த்தியதும் “சிவானி வீட்டுக்கு போயிட்டு நாளைக்கு வரோம் பா. இன்னும் ரெண்டு நாள்ல நானும் சிவானியும் வேலைல ஜாயின் பண்ணனும். இனி எப்ப வரோமோ தெரியலை. அதான் தலையைக் காட்டிட்டு வரோம்”, என்றான் நிர்மல்.
“அங்க தங்க எல்லாம் வேண்டாம் நிர்மல். இப்ப போயிட்டு மதியம் போல வந்துருங்க. இன்னொரு தடவை அவங்க வீட்ல தங்கிக்கலாம்”, என்று அவர் சொன்னதும் சிவானி முகம் சுருங்கிப் போனது. மனைவியின் முகம் கண்ட நிர்மல் “என்ன ஆச்சுப்பா?”, என்று தந்தையிடம் கேட்டான்.
“பாப்பாவைக் கூப்பிட கார் அனுப்பிருக்கேன். அவ இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவா. இன்னைக்கு சாயங்காலம் நம்ம பாப்பாவை எங்க கட்சியோட தலைவர் மகனுக்கு பொண்ணு கேக்க வராங்க. நான் ஆஷா கிட்ட காரணம் சொல்லலை. நீங்களும் சொல்லிறாதீங்க?”, என்று குண்டை போட்டு விட்டு செல்ல நிர்மலும் சிவானியும் அதிர்ச்சியாக பார்த்துக் கொண்டார்கள்.
“இன்னொரு நாள் உங்க வீட்டுக்குப் போகலாம் சிவானி. இப்ப ரூமுக்கு வா”, என்று அவளை அழைத்துச் சென்ற நிர்மல் “இப்ப என்ன செய்யுறது?”, என்று கேட்டான்.
“என்னங்க இப்படி ஆகிருச்சு? இதுக்கு ஏதாவது நாம முடிவெடுக்கணும். கண்டிப்பா இந்த நிச்சயதார்த்தம் நடக்கவே கூடாது”
“சரி, நீ உன் அண்ணனை வரச் சொல்லு. இன்னைக்கே ஒரு முடிவு தெரியட்டும்”, என்று சொல்லி விட்டு உடை மாற்றச் சென்றான்.
அப்போது ஆஷாவும் வீட்டுக்கு வந்து விட்டாள். “எதுக்கு மா என்னை வரச் சொன்னீங்க?”, என்று கேட்டாள் ஆஷா.
“சாயங்காலம் உன்னை பொண்ணு பாக்க வராங்க. அதனால தான் உன்னை கிளம்பி வரச் சொன்னேன். நம்ம அப்பாவோட கட்சி தலைவரோட பையன் தான் மாப்பிள்ளை. அவங்களுக்கு உன்னை போட்டோல பாத்தே ரொம்ப பிடிச்சிருச்சாம். மனசை கண்ட படி அலைய விடாம அடக்க ஒடுக்கமா இருக்க பாரு. அவங்க வந்ததும் நீ சரின்னு சொல்ற? இல்லைன்னா விளைவுகள் வேற மாதிரி தான் இருக்கும்”, என்று புஷ்பா சொல்லிச் செல்ல கோபத்துடன் தன்னுடைய அறைக்குச் சென்று விட்டாள் ஆஷா.
அறைக்குள் வந்ததும் கையில் இருந்த பேகைத் தூக்கி வீசியவள் உடனே மனோஜை தான் அழைத்தாள். அதே நேரம் சிவானியும் அவனுக்கு அழைத்துக் கொண்டிருக்க ஆஷாவுக்கு லைன் போக வில்லை.
சிவானியின் அழைப்பை மனோஜ் ஏற்றதும் “அண்ணா நீ உடனே எங்க வீட்டுக்கு வா”, என்று அழைத்தாள்.
“என்ன ஆச்சு அம்மு? ஏதாவது பிரச்சனையா? ஆஷாவோட அம்மா உன்னை எதுவும் சொன்னாங்களா?”, என்று பதட்டமாக கேட்டான். தேனிலவு முடிந்து வந்த உடனே அவள் இப்படிச் சொன்னதால் அவனுக்கு பயமாக இருந்தது.
“என்னை ஏதாவது சொன்னா நான் பாத்துக்குறேன். இல்லைன்னா என்னோட புருஷன் பாத்துக்குவார். என்னைப் பத்தியே கவலைப் படுறதை விட்டுட்டு கொஞ்சம் உன்னையே நினைச்சிட்டு இருக்குற ஆஷாவை நினைச்சுப் பாரு”
“ஏன் அவளுக்கு என்ன? நேத்துக் கூட பேசினேனே?”
“சாயங்காலம் அவளை பொண்ணு பாக்க வராங்களாம். ஆஷா இப்ப வந்துட்டு இருக்காளாம். இனியும் விட முடியாதுண்ணா. அவ பாவம். நீ எங்க வீட்ல வந்து பேசு”, என்று அவள் சொன்னதும் அதிர்ந்து போனான்.
“உன் பிரண்ட் எதுக்கு வாரா? சந்தோஷமா கிளம்பி வந்தா அவளை அவனையே கட்டிக்க சொல்லு”, என்று கோபமாகச் சொன்னான்.
“அம்மு, நான் வந்தாலும் அவங்க பொண்ணு தர மாட்டாங்க. என்னால உனக்கு தான் பிரச்சனை ஆகும் டா”, என்றான்.
“அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீ வா”
“நான் வந்து உன் மாமனார் மாமியார் கிட்ட பேசினா புரிஞ்சிக்க மாட்டாங்க அம்மு. சும்மாவே மிரட்டுவாங்க? இப்ப நீ அவங்க வீட்டுக்கு மருமகளா வேற ஆகிட்ட? உன்னோட வாழ்க்கை எனக்கு முக்கியம்மா”
“அண்ணா, என்ன ஆனாலும் சரி, இன்னைக்கு பேசியே ஆகணும். நிர்மலும் உன்னை கிளம்பி வரச் சொன்னாங்க. இனியும் தள்ளிப் போட முடியாது”, என்று சொல்லி போனை வைத்தாள்.
அப்போது ஆஷா போன் வரவும் அதை அவன் எடுத்ததும் “யார் கிட்ட இவ்வளவு நேரம் பேசிட்டு இருக்கீங்க? நான் முக்கியமான விஷயம் பேச வந்தா நீங்க வெட்டிக் கதை பேசிட்டு இருக்கீங்களா?”, என்று கோபமாக கேட்டாள்.
“ஐயோ ஆஷா வெட்டிக் கதை எல்லாம் இல்லை. சிவானி தான் அங்க நடக்குறதைச் சொன்னா”
“ஓ, தெரிஞ்சிருச்சா? இப்ப என்ன செய்ய போறீங்க?”
“அதை தான் யோசிச்சிட்டு இருக்கேன்?”
“ஓஹோ, என்ன சாதாரணமா யோசிக்கிறேன்னு சொல்றீங்க? ஏதாவது ஹோட்டல்ல ரூம் போட்டு யோசிக்க கூடாது?”
“இன்னைக்கு நடக்க போற நிச்சயதார்த்தத்தை என்னால நிறுத்த முடியும். ஆனா இந்த விஷயத்தை எல்லாம் ஒரெடியா நிருத்தனும்னா அதுக்கு நம்ம கல்யாணம் நடக்கணும்”
“ஹிம் புரியுது”
“அப்புறம் என்ன வறீங்களா இங்க?”
“யோசிச்சு சொல்லட்டுமா?”
“நீங்க யோசிச்சிக்கிட்டே இருங்க. உங்க பின்னாடியே அலைஞ்சதுனால நான் உங்களுக்கு ஈஸியா போய்ட்டேன்ல? அப்படியே போயிருங்க”, என்று சொல்லி போனை வைத்தவள் அதன் பின் அவனுடைய போனை எடுக்கவே இல்லை.
உடனே வண்டியை எடுத்துக் கொண்டு ஆஷா வீட்டுக்கு சென்றான். நெஞ்சம் திக் திக் என்று அடித்தது தான். ஆனாலும் அவனுக்கு வேறு வழி இருக்க வில்லையே. அவள் வீட்டை நெருங்கும் போதே பால்கனியில் இருந்து அவன் வரவை பார்த்து விட்டாள் ஆஷா.
அவனைக் கண்டதும் அவள் கண்கள் மின்னின. அந்த மின்னலை அவனும் கண்டு கொண்டான். அவன் அவளை என்ன சொன்னாலும் அவன் மீது வெறுப்பைக் காட்டாத அவளை அவனுக்கு அவ்வளவு பிடித்து தொலைத்தது. அவனுக்கான அவளின் தேடலில் கர்வம் கொண்டான் மனோஜ்.
தோட்டத்தில் அமர்ந்திருந்த முத்துவேலும் அவனை ஆச்சர்யமாக பார்த்தார். பின் அவனுடைய தங்கையைக் காண வந்திருப்பான் என்று எண்ணினார். இருந்தாலும் உள்ளுக்குள் ஆஷா நிச்சயதார்த்தத்தை நிறுத்த வந்திருப்பானோ என்ற பயம் பிறக்க தான் செய்தது.
சாதாரண குடும்பம் என்றாலும் நன்றாக படித்த சிவானியை மருமகளாக ஆக்கிக் கொள்ள முயன்றவர் ஆஷாவுக்கு அவனைப் மாப்பிள்ளையாக நிற்க வைக்க மனதில்லை.
தயக்கத்துடன் உள்ளே வந்தவன் அவரைக் கண்டதும் “வணக்கம் சார்”, என்று கரம் கூப்பினான்.
“வாங்க தம்பி. சிவானியைப் பாக்க வந்தீங்களா? உள்ள வாங்க”, என்று சொல்லி அவனை உள்ளே அழைத்துச் சென்றார்.
அவருடன் சென்றவன் அவர் சிவானியை அழைக்க செல்லவும் “இல்லை நான் உங்களைப் பாக்க தான் வந்தேன். உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்”, என்றான்.,
“சாயங்காலம் அண்ணி வீட்ல இருந்து எப்ப வருவாங்கன்னு சொன்னாங்களா?”, என்று கேட்ட படி வெளியே வந்த புஷ்பா அவனைக் கண்டு திகைத்து விட்டாள். “இவன் எங்க இங்கே?”, என்று கடுப்புடன் அவனைப் பார்த்தவள் வா என்று கூட அழைக்க வில்லை.
அவனுக்காக காத்திருந்த சிவானியும் நிர்மலும் வெளியே வந்தார்கள். ஆஷாவும் அவசரமாக அங்கே ஓடி வந்தாள்.
எதுவோ நடக்க போகுது என்று புஷ்பாவுக்கு இதயம் எம்பிக் குதித்தது.
“உட்காருங்க தம்பி”, என்றார் முத்துவேல்.
அவன் அமர்ந்ததும் அவன் எதிரில் அமர்ந்தவர் “இப்ப சொல்லுங்க, என்கிட்ட என்ன பேசணும்?”, என்று கேட்டார்.
“எனக்கு ஆஷாவை…. ஆஷாவை…. எனக்கு கல்யாணம் பண்ணித் தருவீங்களா?”, என்று கேட்டே விட்டான். அதில் ஆஷா கண்களில் மின்னல் வந்தது. இதைத் தானே அவள் எதிர் பார்த்தாள்.
அவன் அப்படிக் கேட்டது தான் தாமதம் “என்ன டா சொன்ன? யார் வீட்டுப் பெண்ணை யார் பெண் கேக்குறது? என்ன பயம் விட்டுப் போச்சா? எவ்வளவு தைரியம் இருந்தா நீ என் மகளை பொண்ணு கேப்ப?”, என்று கத்தினாள் புஷ்பா.
அவன் கேட்டது அதிர்ச்சியாக இருந்தாலும் “புஷ்பா அமைதியா இரு”, என்று அரட்டினார் முத்துவேல்.
ஆஷா நடப்பதை அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கண்களில் பதட்டமும் ஒரு எதிர்பார்ப்பும் இருந்தது.
சட்டென்று திரும்பி தன்னுடைய மகள் முகத்தை பார்த்தார் முத்துவேல். அவள் முகத்தில் கெஞ்சலும் மன்றாடலும் இருந்தது.
மகளை நினைத்து ஆச்சர்யம் தான் அவருக்கு வந்தது. இவ்வளவு உறுதியாகவா ஒரு பெண் இருப்பாள் என்று வியப்பு வந்தது. எந்த விதத்தில் இந்த பையன் இவளுக்கு பொருத்தம்? எதனால் இவளுக்கு இவனை பிடித்திருக்கிறது என்று யோசித்தார்.
அது சிறு வயதில் ஆஷா மனதில் விழுந்த விதை என்று அவருக்கு தெரியாதே. அது மரமாகி வேரூன்றிய பிறகு வெட்டவா முடியும்?
ஆஷாவுக்கு இவன் பொருத்தமானவன் தானா என்று யோசித்தவருக்கு, அவன் கடையைப் பார்த்த போதே நல்ல உழைப்பாளி என்று புரிந்தது. ஆனாலும் தகுதி ஒன்று இருக்கே என்று யோசித்தவர் மீண்டும் மகளைத் தான் பார்த்தார்.
அவளோ தவிப்புடன் நின்றிருந்தாள். “என்னங்க பொறுமையா இருக்குறது? இவன் எங்க, நாம எங்க? இவன் எப்படி நம்ம பொண்ணைக் கேக்கலாம்? நம்ம பொண்ணைப் பிடிக்க தான் அவன் தங்கச்சி நிர்மலை வலை போட்டு பிடிச்சிருக்கா. இப்ப பின்னாடியே இவனும் வந்துட்டான்”, என்று புஷ்பா வார்த்தையை விட “அம்மா”, என்று அரட்டினான் நிர்மல்.
“என்ன டா அதட்டுற? உன் பொண்டாட்டியைச் சொன்ன உடனே கோபம் பொத்துக்கிட்டு வருதா? உன் தங்கச்சியை இந்த பிச்சை காரப் பய பொண்ணு கேட்டு வந்துருக்கான். நீ அதைக் கேக்க மாட்டியே? நீ என்ன செய்வ? அந்த அளவுக்கு தான் இவ உன்னை மயக்கி வச்சிருக்காளே”, என்று சிவானியைத் திட்டினாள்.
“இப்படி நடக்கும்னு தான் நான் அவ்வளவு தயங்கினேன்”, என்ற பார்வையை தன்னுடைய தங்கையை நோக்கி வீசினான் மனோஜ்.
“புஷ்பா, பிடிக்குதோ பிடிக்கலையோ சிவானி இந்த வீட்டுக்கு மருமகளா வந்துட்டா. அவளை ஏதாவது சொன்னா அது நீ உன் மகனைச் சொல்ற மாதிரி தான். அம்மான்னு அவன் பொறுமையா இருந்தாலும் அவன் பொறுமையை நீ ரொம்ப சோதிக்க கூடாது. நான் தான் பேசிட்டு இருக்கேன்ல?”, என்று அதட்டினார் முத்துவேல்.
கணவனின் அதட்டலில் அமைதியான புஷ்பா மனோஜை கொலைவெறியாக முறைத்தாள். அவள் முகத்தில் கோபம் தாண்டவம் ஆடியது. அதைக் கண்டு சிவானி வாழ்க்கைக்கு ஏதாவது வில்லங்கம் வந்து விடுமோ என்று பயந்து போனான் மனோஜ்.
அனைவருமே அவரவர் யோசனையில் இருக்க முத்துவேலுமே ஆழ்ந்த சிந்தனையில் தான் இருந்தார். அந்த யோசனை எல்லாம் புஷ்பாவுக்கு இல்லையே. “என்னங்க என்ன யோசிச்சிட்டு இருக்கீங்க? இவனை முதல்ல வெளிய போகச் சொல்லுங்க. நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சேனோ அது நடந்துருச்சு”, என்றாள் புஷ்பா.
“உன்னை அமைதியா இருக்க சொன்னேன் புஷ்பா”
“பொறுமையா இருந்தது எல்லாம் போதும். எவனோ ஒருத்தன் வந்து பொண்ணு கேட்டா அதை நாம கண்சிடர் பண்ணனுமா? இதுக்கெல்லாம் காரணம் இவ தான்”, என்று மகளை சாடியவள் பின் சிவானி புறம் திரும்பி “என்ன டி அமைதியா இருக்க? உன் அண்ணனை இப்ப போகச் சொல்லலை அவன் அசிங்க பட்டு தான் நிப்பான். யாரைக் கேட்டு அவன் இங்க வந்தான். அவன் இங்க இருந்து போகலை நான் என்ன செய்வேன்னு தெரியாது”, என்று திட்டினாள்.
நிர்மல் எதுவோ சொல்ல வரவும் அவன் கையை பற்றிய சிவானி “என்ன பண்ணுவீங்க அத்தை? சொல்லுங்க உங்க மகளை எங்க அண்ணன் பொண்ணு கேட்டா என்ன பண்ணிருவீங்க? நான் தான் எங்க அண்ணனை வரச் சொன்னேன். அதனால தான் அவன் வந்தான். எப்ப என்ன பண்ணலாம்னு சொல்ல வாரீங்க?”, என்று கேட்டாள்.
அவள் கேள்வியில் புஷ்பா வாயை மூடிக் கொள்ள “சிவானி, அவ உன்னோட மாமியார். கொஞ்சம் மரியாதையா பேசுமா”, என்றார் முத்துவேல்.
“நான் மரியாதையா தான் மாமா பேசுறேன். ஆனா அத்தை அப்படி நடந்துக்குறது இல்லை. எனக்கு இப்ப தெரிஞ்சாகனும். எங்க அண்ணன் ஆஷாவை பொண்ணு கேட்டா இவங்க என்ன பண்ணிருவாங்க? முன்னாடி எங்க அண்ணன் கிட்ட போய் என்னோட மகளைப் பாத்தா உன்னோட தங்கச்சியை ஏதாவது செஞ்சிருவேன்னு மிரட்டிருக்காங்க. உங்களுக்கு இது தெரியாமலா இருக்கும்? சொன்ன மாதிரி என்னைக் கொன்னுறுவீங்களா? சொல்லுங்க”, என்று ஆக்ரோஷமாக கேட்டாள்.