“பார் டா. இன்னைக்கு தான் சாருக்கு நான் சைட் அடிச்சது தெரிஞ்சிருக்கோ? இருந்தாலும் வர வர நீங்க ரொம்ப மாறிட்டீங்க பாஸ்?”, என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே அவன் அருகில் அமர்ந்தாள் ஆஷா.
புன்னகையுடன் காரை எடுத்தான் மனோஜ். கார் மஹாபலிபுரம் நோக்கி சென்றது. வாய் ஓயாமல் சந்தோஷமாக பேசிய படியே வந்தாள் ஆஷா. அவளுக்கு இது பொன்னான வாய்ப்பல்லவா?
எப்போதும் போல் உம்மென்று இல்லாமல் அவள் பேச்சுக்கு கவுண்டர் கொடுத்த படி வந்தான் மனோஜ். இருவருக்கும் அந்த பயணம் பிடித்திருந்தது. வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக இருந்தார்கள்.
அங்கே சென்று இறங்கியதும் முதலில் கதை பேசிய படியே சிற்பங்களை பார்வையிட்டார்கள். பின் கடலுக்கு சென்றார்கள். அலையில் கால் நனைத்த படி மனோஜ் அருகில் சந்தோஷமாக நின்றாள் ஆஷா.
இந்த தருணம் அவள் வாழ்வில் ஒரு பொக்கிஷம். எத்தனை நாள் அவள் இப்படி ஒரு தருணத்திற்காக ஏங்கியிருப்பாள்? அது நிறைவேறியதில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தது அவள் முகம். அவனும் அப்படியே. மனதில் இருந்த தளைகள் அனைத்தும் விலகியது போல உணர்ந்தான்.
இருவருக்குமே சந்தோஷமாக இருந்தது. ஆங்காங்கே காதல் ஜோடிகள் கடலில் நனைந்த படி விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று நிகழ்ந்தது.
அவள் அவன் புறம் திரும்பி “நாமும் இப்படி விளையாடுவோமா?”, என்று கேட்க “மாத்து டிரெஸ் ஒண்ணுமே இல்லை. அதெல்லாம் வேண்டாம்”, என்று சொல்லிக் கொண்டிருந்தான் மனோஜ்.
அவள் அவனிடம் கெஞ்சிக் கொண்டிருக்க அவன் கவனம் அவள் மேல் இருந்தது. அப்போது ஒரு பேரலை வந்ததை இருவரும் கவனிக்க வில்லை. அந்த அலையில் சிக்கிய இருவருமே நிலை தடுமாறி தண்ணீரில் விழுந்தார்கள்.
நிறைய ஆட்கள் அங்கே குளித்துக் கொண்டிருப்பதால் யாரும் இவர்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. ஒரு நொடியில் மனோஜ் தன்னை நிலை படுத்திக் கொண்டான்.
ஆனால் பயந்து போய் இருந்த ஆஷாவோ மனோஜின் கையை இறுக்கி பிடித்துக் கொண்டாள். அவள் பயத்தை உணர்ந்தவன் அவள் முதுகில் தடவிக் கொடுத்து தைரியம் சொன்னான். அதிக பயத்தில் அவன் தோள் சாய்ந்தாள் ஆஷா.
அவன் என்ன சமாதானம் சொன்னாலும் நடுக்கம் குறையாமல் அவன் கை அணைப்பில் நடுங்கிக் கொண்டிருந்தாள். மூக்கின் வழியாக தண்ணி வேறு உள்ளே ஏறி இருக்க அவளுக்கு எரிச்சலாக வந்தது.
கண்களை மூடி பயந்து போய் இருந்தவளைப் பார்த்து “ஏய், கண்ணை முழிச்சு பாரு டி”, என்று சிரிப்புடன் சொன்னான் மனோஜ். கண்களை திறந்து பார்த்த போது அவன் கைகளுக்குள் இருந்தாள் ஆஷா. அவளை அணைத்துப் பிடித்திருந்தான் மனோஜ்.
“வாய் மட்டும் எப்படி பேசுற? ஒரு அலைக்கு பயந்து சாகுற? ரெண்டு பேரும் நல்லா நனைஞ்சிட்டோம். சரி நேரம் ஆச்சு வா கிளம்புவோம்”, என்று சொல்லி அவன் சிரிக்கவும் அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்து விட்டு அவனை விட்டு விலகி நின்றாள்.
அவள் முறைப்பதைக் கண்டவன் “என்ன ஆச்சு விலகிட்ட? பயம் போயிருச்சா? சரி வா போகலாம்”, என்ற படியே காரில் ஏறினான். அவன் அருகில் அமர்ந்த ஆஷா அவனைப் பார்த்து சிரித்தாள்.
“போவோமா?”, என்று கேட்டான் மனோஜ்.
“கொஞ்ச நேரம் இருக்கலாமே பிளீஸ்?”
“நேரம் ஆச்சு டி?”
“நாம இன்னும் பேசவே இல்லையே?”
“இவ்வளவு நேரம் அதைத் தானே செஞ்சோம்?”
“இன்னும் நீங்க ஐ லவ் யுவே சொல்லலை”
“நீயும் தான் சொல்லலை”
அவனை நிமிர்ந்து பார்த்தவள் “ஐ லவ் யு”, என்றாள்.
அதில் அவன் கண்கள் மின்னியது. “ஆஷா”, என்று அவன் உதடுகள் உச்சரிக்க அவனையே பார்த்த படி இருந்தாள்.
சொல்லாமல் விட மாட்டாள் என்று உணர்ந்தவன் அவள் கன்னத்தில் தன்னுடைய கைகளை வைத்து “ஐ லவ் யு டி. எனக்கு உன்னை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அது எப்ப எப்படின்னு எல்லாம் எனக்கு சொல்லத் தெரியாது. ஆனா பிடிக்கும். நீ என்னைப் பாக்க வந்தாலே எனக்குள்ள அப்படி ஒரு பரவசம் வரும். அதுவும் சின்ன வயசுலே உன்கூட பேச அவ்வளவு பிடிக்கும். அதுவும் அன்னைக்கு என்னோட பேர் உங்களுக்கு தெரியலைன்னு நீ சண்டை போட்டப்ப அப்பா அந்த உணர்வை வார்த்தையால சொல்ல முடியாது. சில பல காரணங்களுக்காக உன்னை விட்டு விலகி போனாலும் சத்தியமா உன்னை எனக்கு பிடிக்கும் டி”, என்று அவளுடைய கண்ணுக்குள் பார்த்துச் சொன்னான்.
அடுத்த நொடி சந்தோஷம் தாங்க முடியாமல் அவன் நெஞ்சில் சாய்ந்து விட்டாள் ஆஷா. அதை எதிர் பார்க்காத அவனும் அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.
அவன் மார்பில் முகம் புதைத்திருந்தவளின் தலை முடியைக் கோதிய படியே பேச ஆரம்பித்தான் மனோஜ். “நீ நான் சொல்றதை நம்புவியா இல்லையான்னு தெரியாது ஆஷா. ஆனா உண்மைலே நீ மட்டும் தான் என்னோட மனசுல நிறைஞ்சு போயிருக்க. உன்கிட்ட இருந்து தப்பிக்க தான் திவ்யாவை கல்யாணம் பண்ணிக்க போனேன். ஆனா அப்ப எப்படி மனசு கஷ்டமா இருந்துச்சுன்னு எனக்கு தான் தெரியும்? அதுக்கப்புறம் திலீபன் கல்யாணம் நடந்தது எனக்கு நிஜமாவே சந்தோஷம் தான். உன்னோட நினைவுகள் தான் எனக்கு உயிர்ப்பையே தந்துச்சு தெரியுமா?”, என்று ஆரம்பித்து தன்னுடைய இத்தனை நாள் தேடலையும் அவளிடம் சொன்னான்.
அனைத்தையும் கேட்டவள் “ஆமா ஆமா இப்ப வந்து சொல்லுங்க. அந்த திவ்யா உங்க தம்பியை விரும்பலைன்னா இந்நேரம் அவளை தானே கட்டிருந்துருப்பீங்க?”, என்று மனத்தாங்களுடன் கேட்டாள்.
இதற்கு என்ன விளக்கம் கொடுக்க என்று தெரியாமல் அவன் அமைதியானதும் “சரி சரி பழசை எல்லாம் பேச வேண்டாம். போவோம்”, என்று சொல்லி அவனிடம் இருந்து விலகி அமர்ந்தாள்.
“நான் சொல்ல வரதைக் கேளு டி”
அவன் உதட்டின் மீது விரலை வைத்தவள் “மூச், எதுவும் பேசக் கூடாது. கிளம்பலாம்”, என்றாள்.
ஆள் அரவமற்ற தனிமை, தன்னுடைய உதடுகளில் மீதிருந்த அவள் விரல்களின் மென்மை, அவளின் நெருக்கம் அவன் காதல் உணர்வுகளை மேல் எழுப்ப அவளையே இமைக்காமல் பார்த்தான்.
கடல் நீரில் நனைந்து போயிருந்த ஈர உடை அவள் உடலை ஒட்டித் தழுவியிருந்தது. அவன் பார்வை அவள் உடையில் விழ அதை உணர்ந்த ஆஷா கூச்சதுடன் வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள். அவன் பார்வையில் அவளுக்கு பதட்டம் வந்திருந்தது. அடி கண்ணால் அவனைப் பார்ப்பதும் நகத்தைக் கடிப்பதுமாக இருந்தாள்.
அவள் செய்கையில் வந்த சிரிப்பை அடக்கியவன் “என்னைப் பாக்காம அங்க என்ன டி பார்வை வேண்டி இருக்கு? அங்க யார் இருக்காங்களாம்? உனக்கு வேண்டியவங்க யாரும் இருக்காங்களோ?”, என்று கேட்டு வம்பிழுத்தான்.
அவனைத் திரும்பி முறைத்தவள் “இப்ப எதுக்கு என்னை டின்னு சொன்னீங்க?”, என்று கேட்டாள்.
“ஏன், உன்னை நான் இதுக்கு முன்னாடி டின்னு சொன்னதே இல்லையா?”
“சொல்லிருக்கீங்க தான். அதை வச்சு தான் உங்க மனசே எனக்கு புரிஞ்சது. ஆனா, நீங்க எதுக்கு பிடிக்கலை பிடிக்கலைன்னு சொல்லி டின்னு சொல்றீங்க? அது தான் புரியலை”
“புடிக்கலைன்னு சொன்னது பொய்ன்னு சொல்லிட்டேனே? எனக்கே தெரியாம தான் டீன்னு சொல்லிறேன். மனசுக்குள்ள உன்னை என்னோட மனைவியா நினைச்சதுனால தன்னாலே வந்துருக்கும் போல?”, என்று சொல்லிக் கொண்டே அவள் தோளைச் சுற்றி கையைப் போட்டான்.
மரங்கள் அடர்ந்த இடத்தில் அவர்கள் கார் நின்றதால் ஆட்கள் யாரும் அந்த பக்கம் இல்லை. அவன் செய்கையில் அவள் தடுமாறி “என்ன இது? கையை எடுங்க. எனக்கு எப்படியோ இருக்கு?”, என்றாள்.
அப்படிச் சொன்னால் அவன் விலகுவான் என்று அவள் எதிர்பார்க்க அவன் அதிகம் அழுத்தம் கொடுத்து அவளை தன் பக்கம் திருப்பினான். அவனின் முரட்டுத் தனமான அழுத்தத்தில் அவன் முகம் பார்த்தாள் ஆஷா. அவன் தலை முடியும் ஈரத்தில் கலைந்திருந்ததைக் கண்டவளுக்கு அதை சரி செய்ய மனம் துடித்தது.
அந்த உணர்வைக் காட்ட முடியாமல் அவள் கண்களை மூடிக் கொள்ள அவள் கன்னத்தில் தன்னுடைய இரு கைகளையும் வைத்து அவள் முகத்தையே பார்த்தான் மனோஜ். அவன் கைகளின் கதகதப்பு அவள் கன்னத்தின் வழியே அவள் உடலுக்குள் பயணித்தது.
“இவ தான் எவ்வளவு அழகு”, என்று வியந்து போய் அவளைப் பார்த்தான். கன்னத்தைப் பற்றி இருந்த அவன் கைகளைப் பிடித்தவள் அவனுடைய ஆண்மை பொருந்திய அந்த கைகளின் திண்மையைக் கண்டு சிலிர்த்து போனாள்.
கண்களைத் திறந்து நடுங்கும் இதழ்களுடன் அவனைப் பார்க்க அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்தான். அவள் ஆச்சர்யமாக அவனைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் இதழ்களில் தன்னுடைய இதழ்களைப் பதித்தான். ஏதோ ஒரு பெரிய அலை தன்னை அடித்துச் செல்வதைப் போல மூச்சு முட்டிப் போனாள் ஆஷா.
முதல் முத்தத்தில் ஆஷாவால் அவனிடம் இருந்து விலக முடியவில்லை. விலகவும் அவள் விரும்ப வில்லை. தோய்ந்து போனவளாக அவன் கைகளுக்குள் சரிந்து விழுந்தாள். அவள் கைகளும் அவன் முதுகில் ஊர்வலம் போனது. அவள் சரணாகதியில் அவன் முத்தத்தின் வேகம் கூடியது. அவள் கைகள் அவன் முதுகை இறுக்கிப் பிடித்தது. அவன் ஏற்படுத்திய நெருக்கத்தில் ஆஷா மூச்சுத் காற்றுக்காக திணறிப் போனாள். விருப்பத்துடன் தோற்றுப் போனவளாக அவன் கைகளுக்குள் அடங்கிப் போனாள் ஆஷா.
அவனுக்கோ அவளை விடவே முடியாத நிலை. அவளின் மென்மையும் நெருக்கமும் அவனை சித்தம் குலைய வைத்தது.
சில நிமிடங்களுக்கு பிறகு அவளை அவன் விட்ட போது அவளால் அவன் முகம் காண முடியாமல் வெட்கம் வந்து தொலைத்தது.
“ஆஷா”, என்று கிறக்கமாக அழைத்தான் மனோஜ்.
“ம்ம்ம்”, என்று முணுமுணுத்தவளுக்கு வார்த்தை தான் வரவில்லை.
“என்னைப் பாருடி”, என்று கிறக்கமாக சொன்னதும் அவள் கண்கள் மூடிக் கொண்டது. அவளை பேசவைப்பதற்காகவே “நான் செஞ்சது உனக்கு பிடிக்கலையா?”, என்று கேட்டான் மனோஜ்.
உடனே அவனை கண் திறந்து முறைத்து பார்த்த ஆஷா “சும்மா உளறிட்டு இருக்காதீங்க”, என்று கோபமாகச் சொன்னாள்.
“அப்ப உனக்கு பிடிச்சிருந்ததா?”, என்று கேட்டு வம்பிழுக்க அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
புன்னகைத்த படியே காரை எடுத்தவன் அவளை வீட்டின் அருகே விட்டுவிட்டு “போன் பண்ணுறேன்”, என்று சொல்லி விடை பெற்று சென்றான். ஆஷாவுக்கும் அந்த நாள் இனிமையானதாகச் சென்றது போல இருந்தது.