“ஐயையோ கால் ஹிஸ்ட்ரியை அழிக்காம விட்டுட்டோமே?”, என்று எண்ணியவள் “அம்மா காலைலே கடுப்படிக்காத. ஏதாவது சொன்னா நான் பல்லு கூட விளக்காம சென்னை கிளம்பிருவேன் பாத்துக்கோ”, என்று மிரட்ட அவளை முறைத்த படியே வெளியே சென்றாள் புஷ்பா.
“அப்பாடி தப்பிச்சிட்டோம்”, என்று எண்ணி போனில் இருந்த தடயத்தை அழித்தவள் பல் துலக்கச் சென்றாள்.
சிவானி அறையை விட்டு வெளியே வரும் போது ஹாலில் தரையில் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தாள் ஆஷா. சிவானியின் வரவைக் கண்டு “குட் மார்னிங் டி. அண்ணின்னு எல்லாம் கூப்பிட வர மாட்டிக்கு சாரி”, என்று சொல்லி புன்னகைத்தாள்.
அவளை பார்த்து சும்மா பார்மாலிட்டிக்காக சிவானி சிரிக்க அதில் வித்தியாசத்தை உணர்ந்த ஆஷா “சிவானி, என்ன ஆச்சு? எதுக்கு டல்லா இருக்க?”, என்று கேட்டாள்.
வீட்டு வாசலில் சேர் போட்டுக் அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்த புஷ்பா மற்றும் முத்துவேல் ஆஷா அப்படிக் கேட்டதும் நிமிர்ந்து சிவானியைப் பார்த்தார்கள்.
அவர்கள் அங்கே அமர்ந்திருக்கிறார்கள் என்று தெரிந்து தான் சிவானி அப்படிச் செய்தது.
“எனக்கென்ன குறைச்சல்? நான் நல்லாத் தான் இருக்கேன்?”, என்று ஏதோ போல சொன்னாள் சிவானி.
“இல்லையே உன் பேச்சு வேற மாதிரி இருக்கு. சந்தோஷமா இருந்த மாதிரி இல்லையே? உங்க வீட்டைத் தேடுதா சிவானி?”, என்று கேட்டாள் ஆஷா.
“உங்க அண்ணனை நான் ஆசைப் பட்டு தான் கட்டிக்கிட்டேன். அப்புறம் எதுக்கு அடுத்த நாளே பிறந்த வீட்டுக்கு போகணும்னு நினைக்க போறேன். இது வேற? அதை எல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது?”, என்று சிவானி வருத்தத்துடன் பேசவும் ஆஷா குழப்பமானாள். முத்துவேல் மற்றும் புஷ்பா கூட என்ன பிரச்சனையா இருக்கும் என்று எண்ணி சிவானியை கூர்ந்து கவனித்தார்கள். .
“ஏய். என்ன டி? எங்க வீட்டுக்கு மருமகளா வந்துருக்க? வந்த அடுத்த நாளே டல்லா இருந்தா எப்படி?”, என்று கேட்டாள் ஆஷா.
“ஆமா சந்தோஷப் படுற மாதிரி எல்லாம் நடந்தா நான் ஏன் இப்படி இருக்க போறேன்?”, என்று நொடித்தாள் சிவானி.
“பொடி வச்சு பேசாத சிவானி. அண்ணன் ஏதாவது சொன்னானா?”
“ப்ச், சொன்னாங்க சொன்னாங்க. அதைக் கேட்டு தான் இந்த கடுப்பு”
“என்ன டி சொன்னான்?”
“வேற என்னத்த சொல்லுவாங்க? அவங்க தங்கச்சிக்கு கல்யாணம் இன்னும் நடக்கலையாம்? அதனால நாம மட்டும் சேந்து வாழ்ந்தா நல்லாவா இருக்கும்? அதனால உனக்கு கல்யாணம் முடியுற வரைக்கும் நாங்க ரெண்டு பேரும் தள்ளி தான் இருக்கணும்னு உங்க அண்ணன் கண்டிஷன் போடுறார்”, என்று சிவானி சொன்னதும் ஆஷாவுக்கு தர்ம சங்கடமாக போனது.
கூடவே “இவ என்ன இவளோட அந்தரங்கத்தை இப்படி சொல்றா? ஒரு வேளை நான் குளோஸ் ஃபிரண்ட் அப்படிங்குறதுனால என்கிட்ட சொல்றாளோ?”, என்று எண்ணம் வந்தாலும் “இந்த அண்ணன் ஏன் இப்படி செய்றான்?”, என்ற கோபமும் வந்தது ஆஷாவுக்கு.
தனக்காக யோசித்து நிர்மல் அவன் வாழ்க்கையை வாழாமல் இருக்கிறானோ என்று கவலைப் பட்ட ஆஷா “இது என்ன பைத்தியகாரத் தனம் சிவானி?”, என்று கேட்டாள்,
“அதெல்லாம் பைத்தியகாரத் தனம் எல்லாம் இல்லை. எங்க அண்ணன் கூட எனக்கு முன்னாடி கல்யாணம் பண்ணிருந்துச்சுண்ணா இதைத் தான் சொல்லும். எனக்கு அதெல்லாம் கோபம் இல்லை. நான் இந்த வீட்டு மருமகள். உனக்கு அண்ணி, இன்னொரு அம்மா மாதிரி. கூடவே நீ என்னோட குளோஸ் ஃபிரண்ட். அதனால உன்னோட வாழ்க்கையைப் பத்தி நானும் உங்க அண்ணனும் யோசிக்காம வேற யார் யோசிப்பா. அதனால உங்க அண்ணன் சொன்னது எனக்கு சந்தோஷம் தான். என்னோட கோபம் வேற”, என்று சிவானி சொன்னதும் முத்துவேல் மற்றும் புஷ்பா கூட சிவானியை பெருமையாகவும் ஆர்வமாகவும் பார்த்தார்கள்.
“அண்ணன் சொன்னதே தப்பு. இதுல நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ணுற? எனக்காக யோசிச்சு நீங்க வாழாம இருக்கணுமா? சரி அதை விடு. அது உங்க பெர்சனல். என் கூடப் பிறந்தவன் நல்லா சொதப்பி வச்சிருக்கான். நீ கவலைப் படுறதுக்கான காரணத்தைச் சொல்லு சிவானி. நீயே கோப படுற மாதிரி அவன் வேற என்ன சொன்னான்”, என்று கேட்டாள் ஆஷா.
“உன்னோட வாழ்க்கை நல்ல படியா அமையுற வரைக்கும் நாங்க வெயிட் பண்ணுறது எங்களுக்கு சந்தோஷம் தான் ஆஷா. ஆனா எங்க அண்ணன் எங்களுக்கு ஹனிமூன் போக டிக்கட் போட்டுருக்கான். ஆனா உங்க அண்ணன் அது எதுக்கு நமக்குன்னு சொல்லி வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க? சும்மா டூர் போன மாதிரி போகலாமேன்னு கேட்டதுக்கு கோப பட்டுட்டாங்க”, என்று சொல்லிச் செல்ல அதைக் கேட்ட அனைவருக்கும் என்ன சொல்ல என்று தெரியாத நிலை.
சிவானி அப்படிச் சொன்னதின் விளைவு அடுத்த ஒரு மணி நேரத்தில் முத்துவேல் மகனிடம் விசாரணையை ஆரம்பித்து விட்டார்.
“என்ன நிர்மல் இது? நீ தான் அந்த பொண்ணை பிடிச்சிருக்குன்னு சொன்ன? அப்ப கூட ஆஷா கல்யாணம் முடியட்டும்ன்னு சொன்னதுக்கு சுயநலமா பேசின? இப்ப அவ கூட வாழாம இருந்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டார் முத்துவேல்.
“அது வந்துப்பா.. அது… அப்ப அப்படி தோணுச்சு. ஆனா இப்ப ஏதோ மனசு உறுத்துது. ஆஷாவுக்காக நான் யோசிக்கணுமே?”
“உன் தலை. அவளுக்காக யோசிக்க நாங்க இருக்கோம். நீ உன்னோட வாழ்க்கையைப் பாரு. நீங்க ஹனிமூன் போங்க. நான் இதுக்கு ஒரு ஏற்பாடு செய்றேன்”, என்று சொல்லி அவர்களை கிளம்பச் சொன்னார்.
ஆஷாவும் தன்னுடைய அண்ணனை கழுவி கழுவி ஊற்றியதின் விளைவு சிவானியை அழைத்துக் கொண்டு பறந்து விட்டான். அன்று மாலை ஆஷாவும் சென்னை கிளம்பி விட்டாள். “என்ன பிளான் சொதப்பிருச்சா?”, என்று கேட்டான் நிர்மல்.
“மாமா முகம் மாறினதைப் பாத்தா ஏதாவது பண்ணுவார்னு தோணுது. அப்ப பாப்போம்”, என்று சிரித்தாள் சிவானி.
“நான் என்ன உன் கூட வாழாமயா டி இருக்கேன்? அப்படி போய் சொல்லிருக்க. எனக்கு வருத்தம் தான்”
“நாம அப்படிச் சொன்னா தான் சிவானிக்கு உடனடியா மாப்பிள்ளை பாப்பாங்க. அப்படி பாக்க ஆரம்பிச்சா சீக்கிரம் அண்ணன் கல்யாணத்தை முடிச்சிறலாம்?”, என்று புன்னகையோடு சொன்னாள் சிவானி.
“சரி சரி ஹனிமூனை பிளான் போட்டு வம்பாக்கிறாத சிவானி குட்டி. கொஞ்சம் எனக்கும் கருணை காட்டு”, என்று அவன் கெஞ்ச அவள் மிஞ்ச என்று அவர்கள் தேனிலவு நாட்கள் அழகாக சென்றது.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. அப்போது ஒரு நாள் துரைப்பாண்டி மனோஜிடம் வந்து நின்றார்.
“சொல்லுங்கப்பா”, என்றான் மனோஜ்.
“இல்லை, சிவானி சென்னைல மாப்பிள்ளை வீட்டுக்கு போயிருவா. நானும் உன் அம்மாவும் மறுபடியும் சென்னைக்கு போய் என்ன பண்ண? பேசாம இங்கயே இருந்துரட்டுமா பா?”
“நானும் அதை தான் பா யோசிக்கிறேன். ஒரு ஒரு வாரம் எனக்கு டைம் கொடுங்க. நிர்மல் வந்த அப்புறம் அவன் ஏதாவது சொல்லுறானான்னு கேட்டுட்டு சொல்றேன்”, என்று சொன்னதும் அவர் சரி என்றார்.
அதற்கு அடுத்த நாளே ஆஷாவைப் பார்க்க சென்னை கிளம்பி விட்டான் மனோஜ். சென்னை வீட்டுச் சாவி அவனிடம் இருந்ததால் அவனுக்கு வசதியாகப் போனது.
நேராக வீட்டுக்குச் சென்று குளித்து முடித்தவன் ஆஷாவை அழைத்தான்.
“என்ன சார் இந்நேரம் பண்ணிருக்கீங்க?”, என்று கேட்டாள் ஆஷா.
“பாக்கணும்னு தோணுச்சு. அதான்”
“அது என்ன பாக்கணும்னு? அங்க இருந்துட்டு எப்படி பாக்க முடியும்?”
“யார் சொன்னா அங்க இருக்கேன்னு? உன் வீட்டுக்கு வெளிய தான் இருக்கேன். இன்னைக்கு உனக்கு லீவ் தானே? கிளம்பி வா வெளிய போகலாம்”, என்று சொன்னதும் ஆனந்தமாக கத்தினாள் ஆஷா.
“நிஜமாவா சொல்றீங்க?”, என்று அவள் குதூகலிக்க “சீக்கிரம் வா டி”, என்று அழைத்தான்.
“வீட்டுக்குள்ள வறீங்களா?”
“வேண்டாம் ஆஷா. செக்யூரிட்டி உங்க வீட்டுக்கு தகவல் சொன்னா தேவையில்லாம பிரச்சனை. நீ கிளம்பி வா. நான் வெயிட் பண்ணுறேன்”
“சரி இதோ வரேன்”, என்று சொல்லி கால் மணி நேரத்தில் கிளம்பி வந்தாள்.
வீட்டுக்கு சற்று தொலைவில் தான் காரை நிறுத்தி இருந்தான் மனோஜ். மஞ்சள் நிறச் சட்டை மற்றும் கருப்பு பேண்ட் அணிந்து அட்டகாசமாக இருந்தான் மனோஜ்.
சாதாரண ஸ்கூல் யூனிபார்மில் இருந்த போதே அவன் மீது பைத்தியமானவள் இந்த உடையை ரசிக்காமல் இருப்பாளா? ஆவலாக அவனைப் பார்த்தாள். அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் அழகு அவனை எதுவோ செய்தது.
இருவரும் மாறி மாறி தங்களின் இணையை ரசித்துக் கொண்டிருக்க தூரத்தில் எதுவோ ஒரு பறவை கூவியது. அதில் நடப்புக்கு வந்த மனோஜ் “சைட் அடிச்சது போதும். கார்ல ஏறு”, என்றான்.