அவன் அப்படிச் சொன்னதும் “வாயை மூடு”, என்று கத்திய புஷ்பா “அவன் தான் அப்படி பேசுறான்னா நீங்களும் பொறுமையா அவன் கிட்ட பேசிட்டு இருக்கீங்க?”, என்று கேட்டாள். 
புஷ்பா அப்படிச் சொன்னதும் நிர்மல் முகம் சுருங்கிப் போனது. “பட்டு பட்டுன்னு பேசாத புஷ்பா. இப்ப உள்ள பிள்ளைங்க என்ன எல்லாம் பண்ணுறாங்க? அவன் நம்ம கிட்ட வந்து சொல்றான்னு சந்தோஷப் படணும். முதல்ல யார் என்னன்னு விசாரிப்போம். பொண்ணு யாரு நிர்மல்?”, என்று கேட்டதும் நிர்மலுக்கு தடுமாற்றம் வந்தது. 
“என்னோட ஃபிரண்ட் மனோஜோட தங்கை சிவானி தான் பா பொண்ணு”, என்று நிர்மல் சொன்னதும் அங்கே மூவருக்கும் யாருக்கு அதிக அதிர்ச்சி என்று தெரியாமல் திகைத்தார்கள். 
“இந்த அண்ணன் என்ன சிவானியைச் சொல்றான்? அவளை எப்படி? இவங்க ரெண்டு பேரும் அதிகம் பாத்துகிட்டதே இல்லையே? சிவானி.. சிவானி அண்ணனை விரும்புறாளா”, என்று ஆஷா திகைக்க புஷ்பாவோ அவனை கனல் கக்கும் விழிகளால் முறைத்தாள். 
“நிர்மல் அந்த மெக்கானிக் பையனோட தங்கச்சியையா சொல்ற?”, என்று கேட்டார் முத்துவேல். 
“ஆமாப்பா”, என்று அவன் சொன்னதும் “பாத்தியா நீ ஆரம்பிச்சு வச்சது எங்க வந்து நிக்குதுன்னு? எல்லாத்துக்கும் நீ தான் டி காரணம்? உன் ஃபிரண்ட் தானே அவ? அந்த பயலைக் கல்யாணம் பண்ணணும்னு உன் அண்ணன் மனசையும் கெடுத்து வச்சிருக்கியா நீ?”, என்று ஆஷாவை திட்டினாள் புஷ்பா. 
ஆஷா இதை எதிர்பார்க்காததால் மௌனமாக தலை குனிந்தாள். அவளுக்கு என்ன சொல்ல என்றும் தெரியவில்லை. நிர்மல் சிவானியை விரும்புறேன் என்று சொன்னதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. 
“அவளை ஏன் மா திட்டுறீங்க? அவ மேல எந்த தப்பும் கிடையாது. அவளுக்கே இப்ப தான் இந்த விஷயம் தெரியும். ஆஷாவை திட்டுறதை இதோட விடுங்க. அப்புறம் நான் சொன்னதுலயும் எந்த தப்பும் இருக்குறதா எனக்கு தெரியலை. எங்க ரெண்டு பேர் மேலயும் என்ன தப்பு இருக்கு சொல்லுங்க?”, என்று கேட்டான் நிர்மல். 
“நீங்க யாரை வேணும்னாலும் லவ் பண்ணிட்டு வருவீங்க? நானும் உங்க அம்மாவும் எதுவும் கேக்க கூடாதுன்னு சொல்றியா நிர்மல்?”, என்று கேட்டார் முத்துவேல். 
“நான் அப்படிச் சொல்லலை. எங்களை இந்த மாதிரி செய்யும் படியா மாத்துனதே நீங்க தான்னு சொல்றேன்”
‘நிர்மல்”
“கத்தாதீங்க ம்மா, உங்களுக்கு எப்பவும் உங்க ஸ்கூல் வேலையும் உங்க ஸ்டேட்டசும் முக்கியம். அப்பாவுக்கு கட்சி, ஆபீஸ், எலக்சன் தான் முக்கியம்? உங்களோட வாழ்க்கையை நீங்க மட்டும் வாழணும்னா எதுக்கு எங்களைப் பெத்துக்கணும்”
“யார் கிட்ட பேசுறேன்னு புரிஞ்சு தான் பேசுறியா?”, என்று கேட்டார் முத்துவேல். 
“இன்னைக்காவது மனசுல இருக்குறதை பேசுறேன்னு சந்தோஷப் படுங்கப்பா. நீங்க எங்க மேல உண்மையான அன்பை செலுத்திருந்தா நாங்க இப்படி தடம் மாறிருக்க மாட்டோம். நான் பாரின் போனப்ப கூட பாருங்க, சிவானிக்கு துணைக்கு அம்மாவை இருக்க சொன்னா செக்யூரிட்டியை விட்டுட்டு போறீங்க? எங்க ரெண்டு பேருக்காகவும் நீங்க என்ன செஞ்சிருக்கீங்க? எங்க கூட உக்காந்து பேச உங்களுக்கு நேரம் இருந்துருக்கா? அதனால எங்களை நாங்களே ஒதுக்கி கிட்டோம். எங்க வாழ்க்கை துணையா யார் வந்தா நல்லா இருக்கும்னு தோணுதோ அவங்களை தேர்ந்தெடுத்துருக்கோம். இதுல என்ன தப்பு?”
“டேய் என்ன டா இப்படி பேசுற? நாங்க உங்களுக்காக தானே உழைக்கிறோம்”
“நாங்க கேட்டோமா பா? எனக்கு கட்சியும் அவளுக்கு ஸ்கூலும் வேணும்னு நாங்க கேட்டோமா?”
“பழைய கதை எல்லாம் வேண்டாம் நிர்மல். எனக்கு அந்த பிச்ச கார குடும்பத்துக் கூட சம்பந்தம் பண்ண இஷ்டம் இல்லை. இது எப்பவுமே நடக்காது”, என்றாள் புஷ்பா. 
“உங்க கிட்ட பணம் இருந்தா நீங்க கோடீஸ்வரங்க. பணம் இல்லைன்னா அவங்க பிச்சைக்காரங்களா? எல்லாருமே மனுசங்கன்னு ஏன் நினைக்க மாட்டீங்க மா? உண்மையை சொல்லப் போனா அதிகமா சந்தோஷமா இருக்குற அவங்க தான் பணக்காரங்க. நீங்க எல்லாம் மாறவே மாட்டீங்க. இது தான் உங்க முடிவுன்னா அப்ப என்னோட முடிவையும் கேட்டுக்கோங்க. என்னால சிவானியைத் தவிர வேற யாரையும் கட்டிக்க முடியாது. ஆஷா அளவுக்கு சிவானி படிச்சிருக்கா. நல்ல வேலைல இருக்கா. கஷ்டப் பட்ட குடும்பம்னாலும் சாப்பாடுக்கும் அன்புக்கும் அவங்க வீட்ல எந்த பஞ்சமும் இல்லை. நீங்களா எனக்கும் சிவானிக்கும் கல்யாணம் செஞ்சு வச்சா கவுரமா போயிரும். இல்லைன்னா நான் உங்களை எதிர்த்து கல்யாணம் பண்ண வேண்டி இருக்கும்”, என்று சொன்ன நிர்மலை அனைவரும் அதிர்ச்சியாக பார்த்தார்கள். 
இப்படிச் சொல்பவனிடம் அவர்களால் என்ன சொல்ல முடியுமாம்? புஷ்பா அவனை முறைத்துக் கொண்டிருக்க “அம்மா, என்னோட முடிவை மாத்த சிவானியையோ அவ குடும்பத்தையோ நீங்களும் அப்பாவும் மிரட்ட முடியாது. அவங்களுக்கு ஏதாவது நடந்தா அது உங்களால தான்னு நான் என்னோட இன்ஸ்பெக்டர் ஃபிரண்ட் கிட்ட எழுதிக் கொடுத்துருக்கேன்”, என்றான். 
“நிர்மல், என்ன இது?”, என்று கேட்டார் முத்துவேல். 
“ஆஷா மனோஜ் கூட பேசுறான்னு அவனை காரை வச்சு இடிச்சு காலை ஓடிச்சவங்க தானே நீங்க? நான் லவ் பண்ணுறது தெரிஞ்ச அப்புறம் சிவானியை ஏதாவது செஞ்சா என்ன செய்யுறது? அதான் அப்படி எழுதிக் கொடுத்தேன். என்னோட பிரண்ட் கிட்ட தான் கொடுத்துருக்கேன். அதை கேஸ் பைல் பண்ண வச்சிராதீங்க. சிவானி வீட்ல யாருக்காவது ஏதாவது ஆச்சுன்னா உங்களுக்கு நானும் கிடைக்க மாட்டேன். உங்க சொத்தையும் இழந்து நீங்க ஜெயில்ல தான் இருக்கணும். நானே கல்யாணம் பண்ணிக்கணுமா, இல்லை நீங்களே பெரிய மனசு பண்ணி சிவானி வீட்ல போய் சம்பந்தம் பேசப் போறீங்களான்னு யோசிச்சு முடிவு சொல்லுங்க”, என்று ஒரே போடாக போட்டான். 
“சரி இதுக்கு நாங்க சம்மதிக்கிறோம்”, என்று முத்துவேல் சொல்ல அவரை முறைத்த புஷ்பா “இவன் மிரட்டினா நீங்க பயந்துருவீங்களா?”, என்று கேட்டாள். 
“கொஞ்சம் அமைதியா இரு புஷ்பா. நிர்மல், உன்னோட கல்யாணத்துக்கு நாங்க சம்மதிக்கிறோம். ஆனா கல்யாண வயசுல தங்கச்சியை வச்சிக்கிட்டு நீ கல்யாணம் பண்ணினா ஊர்ல தப்பா பேசுவாங்க. அதனால முதல்ல அவ கல்யாணம் முடியட்டும்”, என்றார் முத்துவேல். 
அதைக் கேட்ட ஆஷா தன்னுடைய அண்ணனை முறைத்தாள். “இப்படி என்னை மாட்டி விடுறியே?”, என்ற கேள்வி அவள் பார்வையில் இருந்தது. “என்னைப் பத்தி யோசிக்காதீங்கப்பா. அண்ணன் இது வரைக்கும் அவனுக்குனு எதுவும் உங்க கிட்ட கேட்டது இல்லை. சிவானி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. அவ அண்ணன் வாழ்க்கையில் வந்தா அண்ணன் ரொம்ப சந்தோஷமா இருப்பான்”, என்றாள் ஆஷா. 
தன்னுடைய தங்கையின் வார்த்தைகளில் நெகிழ்ந்தவன் மனதைக் கல்லாக்கிக் கொண்டு “அப்பா, ஆஷா வாழ்க்கை வேற, என்னோட வாழ்க்கை வேற? எதுக்கு எங்க ரெண்டு பேரோட வாழ்க்கையை இணை கூட்டுறீங்க? ஆஷா அவ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழணும்னு நினைக்கிறா. நீங்க அதுக்கு சம்மதிக்க மாட்டீங்க? உங்க ரெண்டு பேருக்கு இடைல கிடந்து நான் என்னோட வாழ்க்கையை வாழாம இருக்கணுமா?”, என்று நிர்மல் கேட்டதும் “இவன் எப்படி இவ்வளவு சுயநலமா மாறினான்?”, என்று எண்ணி அவனை ஆச்சர்யமாக பார்த்தாள் ஆஷா. 
புஷ்பாவுக்கும், முத்துவேலுக்கும் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை. ஆனாலும் அவன் இஷ்டத்துக்கு விட முடியாமல் “நீ இப்படி சுயநலமா எப்படி மாறின நிர்மல்? ஆஷா உன் தங்கச்சி இல்லையா?”, என்று கேட்டார் முத்துவேல். 
“யார் இல்லைன்னு சொன்னா? ஆஷாவுக்கு கல்யாணம் முடிஞ்சு அவ குழந்தையை பாத்த அப்புறம் கல்யாணம் பண்ண எனக்கும் ஆசை தான். ஆனா அவ மனசுக்கு பிடிச்ச வாழ்க்கையை நீங்க அமைச்சு தருவீங்களா?”
“அது எப்படி முடியும்?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“முடியாதுல்ல? நீங்க அப்படிச் செய்ய மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். அவ ஆசையை நீங்க நிறை வேத்த மாட்டீங்க? நீங்களா ஒரு மாப்பிள்ளையை பாத்தா அவ கட்டிப்பாளா? அவ மாட்டேன்னு சொல்லுவா. ரெண்டும் நடக்காதப்ப நான் எதுக்கு வெயிட் பண்ணனும்? நான் நாலு மாசத்துல பாரின் போக வேண்டியது இருக்கு. அதுக்குள்ள கல்யாணம் முடிச்சு சிவானிக்கு விசா எல்லாம் ரெடி பண்ணனும். நல்ல யோசிச்சு ஒரு முடிவா சொல்லுங்க. நான் சென்னை கிளம்புறேன். ஆஷா நீ வரியா. இல்லை ரெண்டு நாள் இங்க இருக்க போறியா?”, என்று கேட்டான் நிர்மல், 
“இங்க இருந்தா அம்மா பேசியே கொன்னுரும்”, என்று எண்ணிய ஆஷா “நான் வரேன். நாளைக்கு ஆபீஸ் போகணும்”, என்று சொல்லி அப்படியே கிளம்பி விட்டாள். 
இருவரும் காரில் ஏறி அமர்ந்ததில் இருந்து ஒரு வார்த்தை கூட பேச வில்லை. அந்த ஊரில் எல்லையைத் தாண்டின பிறகு தான் “எப்படிண்ணா சிவானியை?”, என்று கேட்டாள் ஆஷா. 
“அது… அது வந்து… உன்கிட்ட பேசணும்னு தான் சிவானி எனக்கு பேஸ்புக்ல மெஸ்ஸேஜ்  பண்ணினா. அப்படியே பேசி…. எங்களுக்குள்ள…. உனக்கு சிவானி ஓகே தானே?”
“இப்ப கேக்குற? நான் மாட்டேன்னு சொன்னா விடவா போற? சரி சரி முறைக்காத. எனக்கு சிவானியை ரொம்ப பிடிக்கும். ஆனா மனோஜ் கூட பேசக் கூடாதுன்னு சொன்ன? ஆனா நீ சிவானியை கட்டிக்கிட்டா…..”
“நான் ஒண்ணும் மனோஜ் கூட உன்னை பேச வேண்டாம்னு சொல்லலை. கொஞ்ச நாள் பேச வேண்டாம்னு தான் சொன்னேன்”
“ஹிம் அம்மா அப்பா ஒத்துப்பாங்களா?”
“தெரியலை, பேசிருக்கோம்ல? பாப்போம்”