அத்தியாயம் 16 
நீ திருடிச் சென்ற இதயத்தை
எவ்வாறு மீட்டெடுக்க
என்று தெரியாமல் விழி
பிதுங்கி நிற்கிறேன் நான்!!!
“பேசணும்னு மெஸ்ஸேஜ் அனுப்பிருந்தீங்களே? சொல்லுங்க”, என்று கேட்டாள் சிவானி. 
“இந்நேரம் வீட்ல இருப்பியே? எப்படி கால் பண்ணுற? அத்தை மாமா இல்லையா?”, என்று கேட்டான் நிர்மல். 
“பக்கத்துல இருக்குற கோவிலுக்கு போயிருக்காங்க. என்ன விஷயம்?”
“இல்லை. அது வந்து.. அதை எப்படி சொல்றது?”
“என்கிட்ட என்ன தயக்கம்? சொல்லுங்க”
“நாம முன்னாடியே பேசினது தான். நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“திடீர்னு ஏன்?”
“சொன்னேனே? ஆஷா பத்தி தான். அவளுக்கு மனோஜ் நினைவு வந்துருக்கும் போல? நாம காதலை சொல்லாம கல்யாணத்தை பண்ணிக்கிறோம்னு தான் பேசிருக்கோம். ஆனா எனக்கே உன்னை விட்டு இருக்க கஷ்டமா இருக்கு. அவ ரொம்ப வருஷமா அவனையே நினைச்சிட்டு இருக்கா. அப்ப அவளுக்கு எப்படி இருக்கும்?”
“புரியுது. ஆனா என்ன செய்யன்னு தெரியலையே? கண்டிப்பா ரெண்டு பேர் வீட்லயும் ஒத்துக்க மாட்டாங்க. எங்க வீட்ல கூட அண்ணா உங்களை மாப்பிள்ளையா ஆக்கிக்க சான்ஸ் இருக்கு. ஆனா உங்க வீட்ல கண்டிப்பா செய்ய மாட்டாங்க. நாம திருட்டுத் தனமா தான் கல்யாணம் பண்ணனுமா?”, என்று சோகமாக கேட்டாள் சிவானி. 
“அதை சொல்லத் தான் கால் பண்ணுனேன். நான் எங்க அம்மா அப்பா கிட்ட நம்ம கல்யாணம் விஷயம் பேசலாம்னு இருக்கேன்”
“அப்படியா? ஆனா கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்கன்னு தெரியுமே? உங்க லெவல்ல தான் உங்களுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணணும்னு பாப்பாங்க. அது மட்டுமில்லாம ஆஷா இருக்குறப்ப நீங்க கல்யாணம் பண்ணினா அதுவும் தப்பா பேசுவாங்களே?”
“நம்மளை பத்தி அடுத்தவங்க கிட்ட விளக்கம் கொடுத்துட்டு இருக்க முடியாது சிவானி. நான் எங்க வீட்ல பேசுறேன். என்ன சொல்வாங்கன்னு எனக்கே தெரியும். ஆனா எப்படியாவது பேசி சம்மதம் வாங்குறேன். சம்மதம் வாங்கி அவங்க உங்க வீட்டுக்கு பொண்ணு கேட்டு வந்தா உங்க வீட்ல ஓகே சொல்லுவாங்களா? நாம எல்லாமே யோசிக்கணுமே?”
“கண்டிப்பா சொல்ல மாட்டாங்க தான். ஆனா நான் கட்டினா உங்களைத் தான் கட்டுவேன்னு சொல்லுவேன். என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருக்கு தானே? ஆனா அண்ணா தான் என் மேல கோப படும்”
“அதெல்லாம் உன் மேல உங்க அண்ணனால ரொம்ப கோப பட முடியாது. உன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு போதுமா. எனக்கு இன்னொரு டவுட். எங்க வீட்ல ஒத்துக்கலைன்னா நாமளே கல்யாணம் பண்ணிக்கலாமா?”
“நமக்கு வேறே வழி இல்லைன்னா அதை தான் செய்யனும். எனக்கு எல்லாமே சம்மதம் தான்”
“சரி சிவானி, நான் ஆஷாவைக் கூட்டிட்டு ஊருக்கு போறேன். அப்படியே அம்மா அப்பா கிட்ட பேசுறேன். ஓகே வா?”
“சரி, ஆல் த பெஸ்ட்”, என்று சொல்லி போனை வைத்தாள். 
அவள் வைத்ததும் ஆஷாவைக் காணச் சென்ற நிர்மல் “ஆஷா, ஆபீஸ் கிளம்பலையா?”, என்று கேட்டான். 
“குளிச்சிட்டேன் அண்ணா. இன்னும் நேரம் இருக்கே. அதான் உக்காந்துருக்கேன்”
“ஓ, இன்னைக்கு நீ லீவ் போடுறியா? நாம ஊருக்கு போவோமா?”, என்று கேட்டான் நிர்மல். 
கண்கள் மின்ன சந்தோஷமாக “சரி”, என்றாள். ஊருக்கு போனால் மனோஜைப் பார்க்கலாமே என்று எண்ணினாள்.
அவள் எண்ணத்தை உணர்ந்தவன் “ரொம்ப சந்தோஷப் படாத மா. நான் உன் ஆளைப் பாக்க எல்லாம் கூட்டிட்டு போகலை. வேற ஒரு விஷயமா போறேன்”, என்றான். 
“அங்க வர போயிட்டு மனோஜை எப்படி பாக்காம வரதுண்ணா?”
“உனக்கு உன் கவலை. சரி விடு. அவன் கடை வழியா காரை விடுறேன். கார்ல இருந்தே அவனைப் பாத்துக்கோ. எனக்காக
கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ டா. அதுக்கப்புறம் அவன் கிட்ட பேசு. ஓகே வா?”
“நீ இவ்வளவு தூரம் சொல்லும் போது நான் கேக்காம இருப்பேனா? சரி அதை விடு. இப்ப என்ன ஊருக்கு கிளம்புற? என்ன விஷயம்? அம்மா அப்பா வரச் சொன்னாங்களா?”
“அதெல்லாம் இல்லை. என்னோட கல்யாணம் விஷயம் பேச போறேன்?”
“என்ன உனக்கு கல்யாணமா? என்ன உளறுற?”
“நிஜமா தான் ஆஷா. எனக்கு ஒரு பொண்ணை பிடிச்சிருக்கு. அதான் அம்மா அப்பா கிட்ட பேச போறேன்”
“ஐயையோ கல்யாண விஷயம் பேச வேண்டாமே? இப்ப தான் நான் நிம்மதியா இருக்கேன். நீ உன்னோட கல்யாணம் பத்தி பேசினா இந்த அம்மா எனக்கும் கல்யாணம் பண்ணணும்னு பேசுமே?”, என்று சொன்ன ஆஷா பின் தன்னுடைய தலையில் தட்டிக் கொண்டே “சாரிண்ணா, சுயநலமா யோசிச்சிட்டேன். உன்னோட கல்யாணம் நடந்தா எனக்கு நிஜமா ஹேப்பி தான். நீ மட்டும் போய் பேசிட்டு வாயேன்”, என்றாள். 
“உன் ஆளை வெளிய இருந்தே பாக்கணும்னு சொன்ன? உனக்கு மனோஜைப் பாக்க ஆசை இருந்தா என்கூட வா. இல்லைன்னா உன் இஷ்டம்”, என்று சொல்லி விட்டு அவளை குறுகுறுவென்று 
பார்த்தான் நிர்மல். 
“எப்பண்ணா கிளம்புறோம்?”, என்று கேட்டு அசடு வழிந்தாள் ஆஷா. 
“கார்ல தான் போறோம். இப்ப கூட கிளம்பலாம். சரி நீ கிளம்பு போகலாம்”, என்று சொல்லி அவன் தயாராக செல்லப் பார்த்தான். 
“என்ன பொசுக்குன்னு கிளம்புன்னு சொல்லிட்டு போற? நீ விரும்புற பொண்ணு யாருன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே?”
“அதை அம்மா அப்பா கிட்ட சொல்லும் போதே கேட்டுக்கோ”, என்று சொல்லி அவளை கிளம்பச் சொன்னவன் தானும் கிளம்பச் சென்றான். ஆஷா கிளம்பியதும் காரை எடுத்தான் நிர்மல். 
இவர்கள் ஊருக்கு சென்ற போது மாலை ஐந்து மணி ஆகியது. மனோஜ் ஷோ ரூம் வழியாக தான் வண்டி செல்ல வேண்டும் என்பதால் அவன் கடைக்கு முன்னே காரை நிறுத்தினான். அந்த இடத்துக்கு சென்றதும் திகைத்தாள் ஆஷா. 
“அண்ணா, என்ன இந்த இடமே இப்படி மாறிருச்சு? உன் ஃபிரண்ட் எப்ப இப்படி மாத்தினாங்க?”, என்று ஆவலாக கேட்டதும் “எனக்கு தெரியாது”, என்று பொய் சொன்னான் நிர்மல். 
“நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லலை பாரேன். நிஜமாவே அவனுக்கு என்னைப் பிடிக்கலையோ? நான் தான் ஏதோ குருட்டு தனமா அவனுக்கு என்னைப் பிடிக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேனா?”, என்று சோர்வுடன் கேட்டாள் ஆஷா. 
“நீ ஒண்ணும் மனசை போட்டுக் குழப்பிக்காத. என்னோட கல்யாணம் முடியட்டும். நான் மனோஜ் கிட்ட பேசுறேன்”
“நீ பேசியாண்ணா அவன் காதல் எனக்கு கிடைக்கணும்? அதெல்லாம் வேண்டாம். சரி இப்ப உன்னோட கல்யாணத்துக்கு வீட்ல சம்மதம் சொல்லுவாங்களா? அந்த பொண்ணு நம்ம இனமா? நல்ல பணக்கார பொண்ணா? ஏன்னா இதைத் தானே நம்ம வீட்ல கேப்பாங்க”, என்று வெறுப்புடன் சொன்னாள். 
“வீட்டுக்கு போனதுக்கு அப்புறம் எல்லாம் சொல்லுறேன். கொஞ்சம் அமைதியா வாயேன்”
அவனுடைய டென்ஷன் மிகுந்த குரலில் என்ன உணர்ந்தாளோ அமைதியாக அமர்ந்து கொண்டாள். 
சிறிது நேரம் இருவரும் அங்கேயே அமர்ந்திருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த படியே மனோஜ் அப்போது வெளியே வர அவனை ஆசை தீர பார்த்தாள் ஆஷா.
பார்க்காத இந்த நாட்களில் அவன் இன்னும் அழகனாக மாறி விட்டது போல இருந்தது ஆஷாவுக்கு. அவனைப் பார்க்கும் இந்த அற்புத நொடியை அவள் மனப் பெட்டகத்தில் சேகரித்து வைத்தாள். 
“பாத்தாச்சா என்னோட மச்சானை? இங்கயே இருந்தா யாருக்காவது சந்தேகம் வரும். கிளம்புவோமா?”, என்று கேட்டான் நிர்மல்.
அவள் சரி என்றதும் காரை எடுத்தான் மனோஜ். “நீ என்ன அவனை மச்சான்னு சொல்ற? எப்பவும் அப்படி கூப்பிட மாட்டியே? என்னைக் கட்டிக்கிட்டா அவன் உனக்கு மாப்பிள்ளை தானே? எப்படி மச்சானாகும்?”, என்று கேட்டாள் ஆஷா. 
“இப்படி யோசிச்சிட்டே வா. வீடு வந்துரும்”, என்று சொல்லி அமைதியாகி விட்டான் நிர்மல். 
திடீரென்று வந்து நின்ற பிள்ளைகளைக் கண்டு திகைத்தார்கள் புஷ்பாவும் முத்துவேலும். 
“நிர்மல், பாப்பா என்ன ரெண்டு பேரும் திடீர்னு சொல்லாம வந்துருக்கீங்க?”, என்று கேட்டார் முத்துவேல். 
“அதானே ஒரு போன் கூட பண்ணலையே?”, என்று கேட்டாள் புஷ்பா. 
“அப்பா,, அது வந்து உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்”, என்று இழுத்தான் நிர்மல். அவனுக்கு பயத்தில் தொண்டைக் குழி ஏறி இறங்கியது. 
“என்ன ஆச்சு டா? மறுபடியும் பாரின் கிளம்புரியா?”
“இல்லைப்பா, அது வந்து….எனக்கு ஒரு பொண்ணைப் பிடிச்சிருக்கு… எனக்கு… அவளுக்கு….அவளை….. கல்யாணம்”, என்று திக்கி திணறி சொன்னான் நிர்மல். 
அவனை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தாள் ஆஷா. “எனக்காக பேசும் போது எவ்வளவு தைரியமா பேசுறான்? ஆனா அவனுக்காக பேசும் போது எவ்வளவு தடுமாறுறான்?”, என்று எண்ணிக் கொண்டே தன்னுடைய அண்ணனைப் பார்த்தாள். கூடவே அவன் விரும்பும் பெண் யாராக இருக்கும் என்று குறுகுறுப்பாகவும் இருந்தது. 
“என்ன பேசுற நிர்மல்?”, என்று கேட்ட முத்துவேல் தன்னுடைய மகனை கூர்மையாக பார்த்தார். 
அவர் பார்வையில் சிறிது பயமும் தடுமாற்றமும் வந்தாலும் “நான் ஒரு பொண்ணை விரும்புறேன்.. அவளை….”, என்று திக்கி திணறியே பதில் சொன்னான். ஆஷாவுக்காக பேசும் போது அண்ணன் என்ற உரிமையில் தைரியமும் கூடவே வந்து விடும். இன்று அவனுக்காக என்னும் பொழுதில் அதிகம் யோசிக்கவே செய்தான்.