“எனக்கும் அது குழப்பம் தான். எனக்கு தோனுனது என்னன்னா எங்க அம்மா தான் ஏதோ மிரட்டிருக்கணும். அதை மனோஜ் சொன்னா தான் நமக்கு தெரியும். என்னால தான் மனோஜால படிக்க முடியாம போச்சு. அப்படி இருக்கும் போது நான் எப்பவாது மனோஜை விட உசத்தின்னு நினைப்பேனா? இப்ப நம்ம சிவானி கூட தானே என்னை மாதிரி படிச்சிருக்கா. அவ அவளோட அண்ணனோட தான் தான் உசத்தினு நினைப்பாளா?”
“எங்களுக்கு என்ன சொல்றதுன்னு தெரியலையே மா. அந்த வயசுலே உங்க அம்மா அப்படி செஞ்சாங்கன்னா இப்ப நீ இங்க வந்துருக்குறது தெரிஞ்சா என்ன செய்வாங்க. திருப்பியும் எங்களுக்கு தானே மா பிரச்சனை? இப்ப தான் எங்க குடும்பம் கொஞ்சம் நிம்மதியா இருக்கு”, என்று அவர் சொன்னதும் ஆஷாக் கண்களில் கண்ணீர் வந்தது.
“இன்னைக்கு சாயங்காலம் என்னோட அத்தை பையன் கூட எனக்கு நிச்சயதார்த்தம் வச்சிருக்காங்க. எனக்கு இப்ப என்ன செய்யன்னே தெரியலை. நீங்க தான் எனக்கு ஒரு வழி சொல்லணும்”
“அழாத மா. நீ கிளம்பு. நான் உன்னை உன்னோட வீட்ல விட்டுட்டு வரேன். நீ உங்க வீட்டுக்கே போயிருமா”, என்று துரைப்பாண்டி சொன்னதும் “அத்தை, நீங்களாவது மாமா கிட்ட சொல்லுங்க அத்தை”, என்றாள் ஆஷா.
“என்னங்க நீங்க தம்பியை வரச் சொல்லுங்களேன். அவன் வந்து முடிவு சொல்லட்டும். அந்த பொண்ணு மனசோடிஞ்சு நம்மளை நம்பி வந்துருக்கு. அவளை மறுபடியும் அங்கயே அனுப்புறீங்கன்னு சொல்றீங்க?”, என்று கேட்டாள் பார்வதி. அதில் ஆஷா கண்கள் மின்னின.
“பார்வதி என்ன சொல்ற நீ? அப்ப இந்த பொண்ணை இங்க இருக்க வைக்க போறியா?”
“அது மட்டுமில்லைங்க, நம்ம மனோஜுக்கு இவளை கட்டி வைக்கலாம், என்று சொன்னதும் ஆஷா மனம் நிம்மதியானது.
“பைத்தியம் மாதிரி உளறாத பார்வதி. அதனால நம்ம குடும்பத்துக்கு ஆபத்து வரலாம்”
“வரட்டுமே, நானா இவ அம்மாவான்னு பாத்துக்குறேன். என்ன தைரியம் இருந்தா என் மகனை கார் ஏத்தி கொல்லப் பாத்துருப்பா. அவளை சும்மா விடுறதா? பணம் இருந்தா என்ன வேணும்னாலும் செய்வாங்களா? இப்ப அவ மகள் நம்ம கிட்ட இருக்கா. இனி அந்தம்மா நம்மளை என்ன செய்றான்னு நானும் பாக்குறேன்”
“நீ பொறுமையா இரு பார்வதி, இங்க பாரு மா ஆஷா. உன் விசயத்துல மனோஜ் என்ன சொல்றான்? அவன் உன்னை விரும்புறானா? அதை முதலில் தெளிவா சொல்லும்மா”
“தெரியலை மாமா”
“இப்படிச் சொன்னா எப்படிம்மா? உனக்கே தெரியலைன்னும் போது எப்படி மா இது நடக்கும்? எங்க பையன் உன்னை விரும்பிருந்தா நாங்க சந்தோஷமா கட்டி வைக்கிறோம். இப்ப நீ கீழ வா. நான் உன்னை மனோஜ் கிட்ட கூட்டிட்டு போறேன். அவன் முடிவு சொன்ன உடனே என்னன்னு முடிவு எடுக்கலாம்”, என்று சொல்லி அவளை கீழே அழைத்து வந்தார்.
அங்கே அனைவரும் குழப்பத்தில் இருக்க அனைத்துக்கும் காரணமான மனோஜ் நிர்மலுடன் உள்ளே நுழைந்தான்.
இருவரைக் கண்டதும் ஆஷா அவர்களை முறைத்து பார்க்க அதே முறைப்போடு அவளை பார்த்தார்கள் இருவரும்.
“ஆஷா நீ இங்க என்ன பண்ணுற? உங்க வீட்ல உன்னை தேடுராங்களாம். நிர்மல் கூட போ”, என்றான் மனோஜ்.
“நான் போக மாட்டேன். இங்க தான் இருப்பேன்”, என்று சொல்லிக் கொண்டு பார்வதி முதுகின் பின் ஒழிந்தவள் பார்வதி தொளைக் கெட்டியாக பிடித்துக் கொண்டாள்.
அதில் மனோஜ் பல்லைக் கடித்தான். “விளையாடாத ஆஷா எதுன்னாலும் பொறுமையா பேசிக்கலாம். இப்ப வீட்டுக்கு வா. நான் அம்மா அப்பா கிட்ட பேசுறேன்”, என்றான் நிர்மல்.
“மாட்டேன், அங்க வர மாட்டேன். இங்க தான் இருப்பேன். அத்தை என்னை அனுப்பாதீங்க அத்தை”
“மனோஜ், இந்த பொண்ணு உன்னை ரொம்ப விரும்புதுப்பா. நாங்க பாக்குற பொண்ணை எல்லாம் வேண்டாம்னு சொல்லிட்ட. இந்த பொண்ணையே கட்டிக்கோ பா”, என்றாள் பார்வதி.
“அம்மா நீ கொஞ்சம் சும்மா இரு. உனக்கு ஒண்ணும் தெரியாது”, என்று சொன்ன மனோஜ் “உனக்கு என்ன பைத்தியமா ஆஷா? நிர்மல் கூட வீட்டுக்கு கிளம்பு. நீ இங்க இருக்க முடியாது”, என்றான்.
“மனோஜ், என்னப்பா இதெல்லாம்? அந்த பொண்ணு என்னல்லாமோ சொல்லுது. ஆக்ஸிடெண்ட் பத்தி எல்லாம் சொல்லுச்சு. சரி பழசை எல்லாம் விடு. நீ இந்த பொண்ணை விரும்புரியா?”, என்று நேரடியாகவே கேட்டார் துரைப்பாண்டி.
ஆஷா எதிர்பார்ப்புடன் மனோஜைப் பார்த்தாள். நிர்மலுக்குமே “இவன் விரும்புறேன்னு ஒரு வார்த்தை சொன்னால் எல்லா பிரச்சனையையும் சரி பண்ணலாமே”, என்று தோன்றியது.
தன்னுடைய தங்கையின் காதலை அங்கீகரிக்க அவன் தயாராக இருந்தாலும் அவளுடைய ஒருதலைக் காதலை அவன் ரசிக்க வில்லை. அதனால் மனோஜும் அவளை விரும்பினால் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கலாமே என்று கூட அவன் எண்ணினான். அதனால் துரைப்பாண்டி கேள்வி கேட்டதும் நிர்மலும் ஆவலாக மனோஜைப் பார்த்தான்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லைப்பா, அவ ஏதோ லூசு மாதிரி உளறுறா. நான் கல்யாணம் பண்ணாம இருக்குறது பிரச்சனைன்னா நீங்களும் அம்மாவும் எனக்கு பொண்ணு பாருங்க. நான் கட்டிக்கிறேன்”, என்று துரைப்பாண்டியிடம் சொன்னவன் “நிர்மல் தேவையில்லாம எதுக்கு பிரச்சனை? உன் தங்கச்சியைக் கூட்டிட்டு கிளம்பு. முதல்ல அவளுக்கு பிடிச்சிருக்குற லூசை தெளிய வை”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டான்.
மனோஜ் சொன்னதைக் கேட்டு நிர்மலுக்கே ஒரு மாதிரி இருந்தது என்றால் ஆஷா நிலைமையை சொல்லவும் வேண்டுமா?
தன்னுடைய காதலை நிராகரித்ததும் இல்லாமல் தனக்கு லூசு பட்டம் கொடுத்தவனை வெறித்து பார்த்தாள்.
“இப்ப உனக்கு போதுமா? இது உனக்கு தேவையா ஆஷா? அன்பைன்னாலும் அதை பிச்சையா கேக்குற அளவுக்கு உன்னோட தரம் ஒண்ணும் தாழ்ந்துரலை டா. உனக்கு என்ன இல்லை சொல்லு? இன்னைக்கு சாயங்காலம் ஜெயா கூட நடக்க இருக்குற
நிச்சயதார்த்தத்தை நிறுத்த வேண்டியது என்னோட பொறுப்பு. அதுக்காக நீ அடுத்த வீட்ல வந்து இப்படி கெஞ்சிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்லை”, என்று கோபத்துடன் சொன்னான் நிர்மல். அவனால் அனைவரின் முன்னிலையிலும் தன்னுடைய தங்கை அவமானப் பட்டதை தாங்க முடியவில்லை.
“அண்ணா”, என்ற கதறலுடன் அவன் தோள் சாய்ந்தாள் ஆஷா. அவளை இறுக அனைத்துக் கொண்டவன் “கொஞ்சம் அண்ணன் சொல்றதைக் கேளு மா. என்னை நம்புற தானே? நீ அடுத்தவங்க கிட்ட கெஞ்சுறதை என்னால சகிச்சிக்க முடியலை மா. உன்னை வேண்டாம்னு சொல்றவங்க கிட்ட கெஞ்சணுமா மா? வேண்டாம் மா. கொஞ்ச நாள்ல எல்லாம் மறந்துரும் மா. நாம நம்ம வீட்டுக்கு போகலாமா டா?”, என்று கேட்டான் நிர்மல்.
ஆஷா அமைதியாக அழுது கொண்டிருக்கவும் எதுவும் பேசாமல் தன்னுடைய கைக்குள் இருக்கும் தங்கையை அழைத்து கொண்டு செல்லப் போனான்.
பின் என்ன நினைத்தானோ பார்வதி மற்றும் துரைப்பாண்டியைப் பார்த்து “ஆஷா உங்க எல்லாருக்கும் சிரமம் கொடுத்துட்டா. அவளுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்”, என்று சொல்லி விட்டு மனோஜ் புறம் திரும்பினான்.
“உன் மனசுல இல்லாத காதலை வர வைக்கணும்னு நினைக்கிறது தப்பு தான். ஆனா ஒரு அண்ணனா என்னால உன்னை மன்னிக்க முடியலை மனோஜ். நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்? அவ மேல உனக்கு அன்பு இல்லைன்னா அவளை அவாய்ட் பண்ணிருன்னு. எல்லாம் இவ தப்பு தான். அவளோட அன்பை பெற தகுதி இல்லாத உன்னை விரும்புனது தான் அவளோட பெரிய தப்பு. உன்னை நினைச்சு அவ எவ்வளவு வலியை அனுபவிக்கிறா தெரியுமா? சிவானியை என் தங்கை என் தங்கைன்னு பீத்துவியே? ஆனா இன்னைக்கு என்னோட தங்கச்சி நிலைமையை பாத்தியா? எங்க வீட்டு இளவரசி டா இவ. ஆனா உன்னால அவ பட்ட கஷ்டம் கொஞ்சம் நஞ்சம் இல்லை. நான் பாரீன்ல இருந்து வந்த அன்னைக்கே உன்கிட்ட என்னோட தங்கச்சியை விரும்புரியான்னு கேட்டேன். நீ இல்லைன்னு சொன்னேன்? ஆனா அதை இவ தாங்க மாட்டான்னு அவ காதலை ஏத்துக்கோ, உங்க கல்யாணத்தை நான் நடத்தி வைக்கிறேன்னு சொன்னேன். அப்புறம் ஏண்டா உனக்கு என்னோட தங்கச்சி காதல் உனக்கு பெருசா தெரியலை. அவளா உன் பின்னாடி அலையுறான்னு அவளை சீப்பா எடை போட்டுட்டல்ல? உன் பின்னாடியே அலைஞ்சவளுக்கு நீ கொடுத்த லூசு பட்டம் ரொம்ப பெருசு டா. எல்லாத்துக்கும் ரொம்ப தேங்க்ஸ்”, என்று வருந்தி பேசினான் நிர்மல்.
அவன் குரல் மனோஜ் இதயத்தை துளைக்க “நிர்மல் நான்….”, என்று சொல்லி சமாதானப் படுத்த வந்தான்.
“நீ இனி எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம் மனோஜ். இனி ஆஷா உன் வாழ்க்கையில் வர மாட்டாள். உனக்கு வேற பொண்ணு பாக்க சொல்லிட்டல்ல? இனியும் மானம் கெட்டு போய் உன் பின்னாடி இவ அலைய மாட்டா”, என்று சொல்லி விட்டு அவளை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட்டான்.
அவர்கள் சென்றதும் “மனோஜ் என்னப்பா இதெல்லாம்?”, என்று கேட்டார் துரைப்பாண்டி.
“நாம நினைக்கிறது எல்லாம் எப்பவுமே நடந்துராது மா. அதுவும் எனக்கு நான் ஆசைப் பட்டது எதுவும் நடக்காது. என்னோட விதி அப்படி. அவ நல்ல பொண்ணு தான். அவளுக்கு கட்டாயம் நல்ல வாழ்க்கை கிடைக்கும். நான் பொண்ணு பாக்க சொல்லிட்டேன்னு உடனே பாக்க ஆரம்பிக்கதீங்க. கொஞ்ச நாள் ஆகட்டும். நான் கிளம்புறேன்”, என்று வலியுடன் சொன்னவன் வெளியே சென்று விட்டான்.
இது வரை நடந்ததை அனைவரும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். திவ்யா கூட “இந்த மனோஜ் அத்தானுக்கு என்ன பைத்தியமா? இவ்வளவு பணக்காரியா படிச்சா பொண்ணே தேடி வருது. வேண்டாம்னு சொல்றாங்களே”, என்று எண்ணினாள்.
நித்யாவோ தன்னுடைய தம்பிக்கு “சொந்தத்தில் ஏதாவது பொண்ணு இருக்கா, இதே சூட்டோட கல்யாணத்தை முடிச்சு வச்சிறலாம். அப்ப தான் நம்ம கைக்குள்ள இருப்பான்”, என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
ஆனால் மனோஜ் மேல் உண்மையான அன்பு வைத்திருந்த சிவானியோ தளர்ந்த நடையுடன் அங்கிருந்து செல்லும் தன்னுடைய அண்ணனையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கடைசியாக அவன் பேசிய போது அவனது கலங்கிய முகத்தையும் , அவன் கண்களில் இருந்த வலியையும் கண்ட சிவானி அசைவற்று நின்று விட்டாள்.