மனோஜ் நினைத்தது போல நிஜமாகவே ஆஷா மனோஜ் வீட்டுக்கு தான் சென்றாள். அங்கே செல்வதற்கு தயக்கம் தான் என்றாலும் அவளுக்கு வேறு வழி இருக்க வில்லை.
மனோஜ் அவளுடைய காதலை ஏற்றுக் கொண்டிருந்தால் அவனுடன் கை கோர்த்து எவ்வளவு நாட்கள் வேண்டும் என்றாலும் போராடலாம். ஏன், வாழ்க்கையின் விழிம்புக்கே செல்லலாம். ஆனால் அவன் அவளை ஒரு பொருட்டாகவே எண்ணாது இருக்க அவள் மட்டும் தனியே என்ன செய்யவாம்? அதற்காக அவளால் வேறு ஒருவனை திருமணம் செய்ய இயலுமா?
மனதில் பூத்த நேசத்துக்காக, அவனை காதலித்த் பாவத்துக்காக அவள் மட்டுமாவது போராடி தானே ஆக வேண்டும். அதனால் தான் இங்கே வந்தாள்.
ஆனால் உள்ளே சென்று என்ன பேசுவது? தான் மனோஜை விரும்புவதைச் சொன்னால் வீட்டில் உள்ளவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எல்லாம் குழப்பமாக இருந்தது.
ஆனால் அவள் இப்போது எந்த முடிவும் எடுக்க வில்லை என்றால் அதன் பின் அவளால் எதையும் செய்ய முடியாமல் போய் விடும். என்ன தான் தன்னுடைய மனதை தேற்றிக் கொண்டாலும் அவனுடைய வீட்டுக்கு செல்ல தயக்கம் இருக்க தான் செய்தது.
மனோஜ் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தியவள் ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டு படியில் ஏறினாள்.
இரண்டு கதவும் திறந்து தான் கிடந்தது. ஆனால் ஒருவருமே அவள் கண்ணில் படவில்லை. “அவரவர் ரூமில் இருப்பார்கள் போல”, என்று எண்ணியவள் கதவில் கை வைத்து தட்டினாள்.
கதவு தட்டும் சத்தம் கேட்டு வெளியே வந்த துரைப்பாண்டி அங்கு நின்ற ஆஷாவைக் கண்டு புருவம் உயர்த்தி “யாரும்மா நீ? சிவானி பிரண்டா?”, என்று கேட்டார்.
“ஆம”, என்னும் விதமாய் அவள் தலை அசைத்ததும் “உள்ள வா மா”, என்று அவளை அழைத்தவர் “சிவானி, சிவானி இங்க வா மா”, என்று அழைத்தார்.
அவர் அழைத்ததில் அனைவரும் வெளியே வர அங்கு வந்த சிவானி சத்தியமாக ஆஷாவை எதிர் பார்க்க வில்லை.
“ஏய், ஆஷா வா வா. வருவேன்னு சொல்லவே இல்லையே? அம்மா அப்பா இவ பேரு ஆஷா. என்னோட ஃபிரண்ட். என் கூட தான் காலேஜ்ல படிக்கிறா. ஏற்கனவே உங்க கிட்ட சொல்லிருக்கேன்ல? அன்னைக்கு கூட இவ கூட தான் வெளியே போனேன்”, என்று சந்தோஷமாக வரவேற்று அம்மா அப்பாவுக்கு அறிமுகப் படுத்தினாள்.
அவளுடைய வரவேற்புக்கு அதிகமாக சந்தோஷப் படாமல் ஒரு மார்க்கமாக சிரித்து வைத்தாள் ஆஷா.
“இவ என்ன இப்படி இருக்குறா? இவ முகமே சரியில்லையே”, என்று எண்ணிய சிவானி ஆஷாவையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
“உக்காரு டா. எதுக்கு நின்னுட்டே இருக்க?”, என்று சொன்னாள் பார்வதி.
“வேலைக்கு அவ வீட்ல விடலைன்னு இப்படி இருக்குறா போல?”, என்று எண்ணி “என்னோட ரூமுக்கு வா ஆஷா. நாம உள்ள போய் பேசலாம். அம்மா நாங்க உள்ள போறோம்”, என்று அழைத்தாள் சிவானி.
ஆஷா தயங்கிய படியே நிற்க “உள்ள போ மா. நான் டீ எடுத்துட்டு வரேன்”, என்றாள் பார்வதி.
“இல்லைம்மா….. இல்லை அத்தை….. அதெல்லாம் வேண்டாம்”, என்று திக்கி திணறி பேசினாள் ஆஷா.
அவள் பேசியதைக் கண்டு சிரித்த பார்வதி “முதல் முறையா வீட்டுக்கு வந்துருக்க. ஏதாவது சாப்பிடணும். சிவானி அவளை உள்ள கூட்டிட்டு போ”, என்றாள்.
அப்போது துரைப்பாண்டியும் “நான் வெளிய போயிட்டு வரேன் பார்வதி”, என்று சொல்லி விட்டு கிளம்ப போனார். அப்போது “மாமா, ஒரு நிமிஷம்”, என்று அழைத்தாள் ஆஷா.
அவள் மாமா என்று அழைத்தது அனைவருக்கும் வியப்பாக இருந்தாலும் யாரும் பெரியதாக எதுவும் எடுக்க வில்லை. ஒன்றாக படிக்கும் தோழிகளின் பெற்றோரை அப்படி அழைப்பது வாடிக்கை தான் என்பதால் சாதாரணமாக எடுத்துக் கொண்டார்கள்.
நித்யா, திவ்யா கூட “இந்த பொண்ணு எதுக்கு வந்திருக்கும்?”, என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
“என்ன மா? என்று கேட்டார் துரைப்பாண்டி.
“நான் இப்ப சிவானியை பாக்க வரலை. உங்க கிட்டயும் அத்தை கிட்டயும் ஒரு முக்கியமான விஷயம் பேசணும்னு வந்தேன்”, என்றாள் ஆஷா.
அவள் அப்படிச் சொன்னதும் பார்வதியும் துரைப்பாண்டியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
சிவானியும் திகைத்து விழித்து கொண்டிருக்க மற்றவர்களும் அவளை ஆராய்ச்சியாக பார்த்தார்கள்.
அவளுடைய உடை, நகை அனைத்துமே அவள் சாதாரண குடும்பத்து பெண் இல்லை என்று உணர்த்தியது.
“ஏய் ஆஷா என்ன ஆச்சு டி? எதுக்கு அம்மா அப்பா கிட்ட பேசணும். ஏதாவது பிரச்சனையா?”, என்று கேட்டாள் சிவானி.
“சிவானி பிளீஸ், நான் எல்லாம் உன்கிட்ட அப்புறம் சொல்றேன். இப்ப அத்தை மாமா கிட்ட கொஞ்சம் நான் தனியா பேசணும்”
“சரி வா மா. உள்ள போய் பேசுவோம்”, என்று சொல்லி அவளை அறைக்குள் அழைத்து சென்றாள் பார்வதி. துரைப்பாண்டியும் அவர்கள் பின்னால் சென்றார்.
“இப்படி வந்து உக்காருமா”, என்று அங்கிருந்த சேரைக் காட்டினாள் பார்வதி.
அவள் அமர்ந்ததும் அவளுக்கு எதிரே துரைப்பாண்டியும் பார்வதியும் அமர்ந்தார்கள்.
“இப்ப சொல்லு மா. எங்க கிட்ட நீ என்ன பேசணும்?”, என்று கேட்டார் துரைப்பாண்டி.
“முதல்ல நான் என்னைப் பத்தி சொல்லிறேன் மாமா. என்னோட பேர் ஆஷா”, என்று ஆரம்பித்தவள் தன்னைப் பற்றியும் தன்னுடைய பெற்றோர்களைப் பற்றியும் சொன்னாள்.
அவளுடைய தந்தையை, அவர்களுடைய பள்ளியை அனைவருக்கும் தெரியுமாதலால் அந்த வீட்டுப் பெண்ணா என்று அனைவருக்கும் திகைப்பாக இருந்தது.
“உன் அம்மா அப்பாவைப் பத்தி கேள்வி பட்டிருக்கோம் மா. உங்க ஸ்கூல்ல தான் என்னோட மூத்த மகன் படிச்சான்”, என்றார் துரைப்பாண்டி.
“எனக்கு உங்க மூத்த பையனை ரொம்ப பிடிச்சிருக்கு. எனக்கு
கல்யாணம்நு ஒண்ணு நடந்தா அவர் கூட தான்”, என்று அவசரமாக சொல்லி விட்டு அவர் முகம் பார்த்தாள்.
அவள் சொன்னதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தார்கள். அவளுக்கும் தர்ம சங்கடமாக இருந்தது. தெரியாத வீட்டுக்கு வந்து “நான் உங்க பையனை கல்யாணம் பன்னிக்க நினைக்கிறேன்”, என்று அந்த பெண்ணே வந்து சொன்னால் அவளை அனைவரும் எப்படி நினைப்பார்கள் என்று அவள் அறிந்ததே. ஆனால் அவளுக்கு வேறு வழி இல்லையே.
“ஏமா, நீ மனோஜையா சொல்ற?”, என்று கேட்டாள் பார்வதி.
“ஆமா”
“ஏமா, உனக்கு ஏதாவது மனநிலை சரியில்லையா? உன்னைப் பாத்தாலே படிச்ச பொண்ணுன்னு தெரியுது. உங்க வீட்டு வசதியும் எங்களுக்கு தெரியும். எங்க பையன் நிலைமை தெரிஞ்சு இப்படி வந்து சொல்ற”, என்று கேட்டார் துரைப்பாண்டி.
“உங்க பையனோட நிலைமைக்கே நான் தானே காரணம்?”
“நீ என்னம்மா சொல்ற? நான் பாத்துட்டு இருந்த வேலையை அவன் பாக்குறான்”
“அது என்னமோ உண்மை தான். ஆனா அவர் படிக்காததுனால தானே அவர் இந்த வேலை பாக்குறார்”
“நீ ஏதோ தப்பா நினைச்சிட்டு இருக்க மா. அவன் வீட்டு சூழ்நிலை புரிஞ்சு தான் படிக்க போகலை. அப்புறம் மனோஜ் அப்படி எல்லாம் எந்த பொண்ணையும் விரும்புறேன்னு சொல்லவே இல்லை. என்னைத் தான் பொண்ணு பாக்க சொன்னான். நீ அவன் மனசுல இருந்தா எங்க கிட்ட சொல்லிருப்பான்ல? என் கூட பிறந்தவளோட மகளைத் தான் அவனுக்கு பாத்தோம். ஆனா அவளை சின்னவன் கட்டிக்கிட்டான். அவன் மனசுல நீ இருந்தா அந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சிருக்க மாட்டானே?”
“உங்க பையன் மனசுல நான் இருக்கேன்கிறது என்னோட நம்பிக்கை. அதை என்னால நிரூபிக்க முடியாது. ஆனா என்னோட மனசுல அவர் தான் இருக்குறார். நான் வாழ்ந்தா அவர் கூட தான் வாழ்வேன். என்னையும் மனோஜையும் நீங்க தான் சேத்து வைக்கணும்”
“அது எப்படிம்மா முடியும்? உங்க குடும்பம் வேற, எங்க குடும்பம் வேற? உங்க அப்பா அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்னு தெரியுமா? சரி குடும்பத்தை விடு. வாழப் போற உங்க ரெண்டு பேரையும் எடுத்துக்கோ. நீ சிவானி கூட படிச்சிருக்கன்னா நீ ஒரு இஞ்சீனியர். ஆனா அவன் பத்தாவது தான் படிச்சிருக்கான். எப்படி மா உங்களுக்குள்ள ஒத்து போகும்? என்னைக்காவது அவனை அவன் தாழ்வா நினைச்சிட்டா உங்க வாழ்க்கை வம்பா போகும் மா”
“இந்த வேறுபாடு பெரிய விஷயம் தான் மாமா. ஆனா மனோஜ் படிக்காம போனதுக்கு காரணமே நானா இருக்கும் போது அந்த விஷயம் பெருசா ஆகுமா?”
“நீ என்ன மா சொல்ற?”
“மனோஜ் ஸ்கூல் படிக்கும் போது ஒரு ஆக்ஸிடெண்ட் ஆச்சு நினைவு இருக்கா?”
“ஆமா, ரொம்ப கஷ்டப் பட்டு தான் எழுந்து வந்தான்”
“அந்த ஆக்ஸிடெண்ட் நடந்ததே என்னால தான்”
“உன்னாலயா? உன்னைப் காப்பாத்த போய் தான் அவனுக்கு அப்படி ஆகிருச்சா? அவன் மனித நேயத்துல உனக்கு உதவிருப்பான் மா. அதை நீ காதல்னு எடுத்துக்குறதா?”
“காதலுக்கும் மனிதநேயத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியாம இருக்குமா மாமா? அந்த ஆக்ஸிடெண்ட்டை பண்ணதே எங்க அம்மா தான். மனோஜை கார் வச்சு தூக்கினது எங்க அம்மாவோட ஆட்கள் தான்”
“என்ன? நீ என்ன மா சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டார் துரைப்பாண்டி. பார்வதியும் திகைத்து போய் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“ஆமா, நான் உங்க பையன் கூட பேசுறது பிடிக்காம எங்க அம்மா தான் ஆள் வச்சி அப்படி பண்ணினாங்க. அது மட்டுமில்லாம நீ இன்னும் ஸ்கூல்க்கே போக கூடாதுன்னு மிரட்டி மனோஜ்க்கு டிசி கொடுத்துட்டாங்க”
“இவ்வளவு நடந்துச்சா? இதெல்லாம் உண்மையா? ஆனா அவன் உங்க ஸ்கூல்ல தானே படிக்க முடியாது. ஆனா வேற இடத்துல படிக்கலாமே? அவன் எங்கயும் போக மாட்டேன்னு சொல்லிட்டானே”