Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-2
அவள் கற்று கொடுத்திருந்தாள்.. எப்படி ஒரு விழி அசைவில் போதை தலைக்கேறி கறிங்கி போகவேண்டும் என்று… இதழ் மெருகில் எப்படி தன்னை மறக்க வேண்டும் என்று.. காலின் சுண்டு விரல் நகத்தில் எப்படிச் சிக்கித் தவிக்கலாமென்று… ஈர கூந்தல் வாசத்தில் எப்படி ஒரு செண்பக தோட்டத்தை நுகரலாம் என்று..  ஒவ்வொரு ஏற்ற இறக்கத்திலும் எப்படியெல்லாம் ஏறி.. சருக்கி… வழுக்கி… கரைந்து போகலாமென்று.. சிற்றிடையில் முகம் புதைத்தால் எப்படி அவன் உஷ்ணத்தை தணிக்கலாமென்று.. ஐந்தரையடி பெண்ணிடம் தன் இதயத்தை எப்படி எல்லாம் தொலைக்கலாமென்று ஒருத்தி சொல்லிக் கொடுத்தே சென்றிருந்தாள். அதனால் அவனுக்கு இப்பொழுது பெண்களை ரசிக்கத் தெரியும்! 
“இத்தன வருஷத்துல நீ நிறைய மாறிப் போயிருக்க! சின்ன பொண்ணா பார்த்தது… இப்போ பார்.. உன்னையே ரொம்ப அழகா க்ரூம் பண்ணியிருக்க..”,  புன்னகைதான். அவன் ஒவ்வொரு வார்த்தையும் அவளுக்குள் மின்னலென இதயத்தில் இறங்கும் என்று தெரியாமல், வார்த்தையோடு கூட அவனும் ஆழமாய் அவளுள் இறங்கிக் கொண்டிருந்தான்.
‘அஷோக்கா.. அஷோக்கா அவளிடம் அப்படிப் பேசுவது? மண்டை அடிபட்டதின் விளைவா? இல்லை.. காலத்தில் மாயாஜாலமா?’
அவள் இன்ப அதிர்ச்சியை வெளிக்காட்டாமல், நிதானமாய், “தலையில அடி இல்லனு தான் நினைச்சேன்.. ஒரு ஸ்பெஷல் ஸ்கேன் எடுக்கணும் போல இருக்கே..” அவள் சிரிக்காமல் சொல்லவும்
“ஓய்.. என்ன சொல்ர? நான் நல்லா தான் இருக்கேன்..” என்றான் கலவரத்துடன்.
“ஓ.. அப்படியா? பேச்சை பார்த்ததும்.. மண்டையில அடி பலமோனு நினைச்சேன்!” அவள் குறும்பு சிரிப்பில், அழகான பல்வரிசை தெரியச் சிரித்தவன், “நல்ல பேசர நீ… சரி, நான் இன்னும் எத்தனை நாள் இங்க??” சலிப்போடு கேட்க
“ம்.. அப்புறம்?” என்றாள் கையை மார்புக்கு குருக்காய் கட்டி..
“ரொம்ப போர் அடிக்குது..” என்றான் பாவமாய்
“நேத்து தான் கண்விழிச்சிருக்க? அதுக்குள்ள என்ன அவசரம்?” உரிமையான ஒரு சின்ன அதட்டல்
“நீ ஏன் சொல்ல மாட்ட.. உனக்கென்ன ஜாலியா..” என்று அவன் ராகம் இழுக்க..
இருவரும் பேச்சு எந்த தடங்கலும் இல்லாமல் சுலபமாகவே வந்தது. அவர்கள் பேச்சு தொடர்ந்து கொண்டே போனது அடுத்த ஒரு மணி நேரத்திற்கு! ஏதேதோ பேசினார்கள். அவள் படிப்பு.. வேலை.. கனவு.. அரசியல் எது என்று இல்லாமல் ஏதேதோ…
பேச்சின் நடுவே, “வாமா… என் மகன் என்ன சொல்றான்?”, கேட்டுக்கொண்டே சுசீலா உள்ளே நுழைந்தார்.
“போர் அடிக்குதாம்.. எப்போ வீட்டுக்கு போலாம்னு கேக்கறாங்க ஆன்டி!”
அவன் நாடி பிடித்துப் பார்த்து, இரத்த அழுத்தத்தை பரிசோதித்து, சுசீலாவின் பக்கம் திரும்பினாள்.
“சீஃப் டாக்டர் கிட்டப் பேசினேன் ஆன்டி, இன்னும் ரெண்டு நாள் அப்சர்வேஷன்ல இருக்க வேண்டி இருக்கும். ஸ்கேன் ரிசல்ட் வந்திடுச்சு அத பத்தி உங்கட்ட சீப் டாக்டர் சொல்லுவார்.. பெருசா பயப்படுர மாதரி இல்ல ஆன்டி. சீக்கிரமே சரி ஆகிடுவார்”, சொல்லிவிட்டு நகர முற்பட்டவளை,
“நல்லா தானே இருக்கேன்.. இதுக்கு மேல இங்க இருந்து என்ன பண்ணறது?” மீண்டும் சலிப்போடு கேட்டான்.
சுசீலாவிற்குமே ஆச்சரியம் அவர் மகனா இப்படி சலுகையோடு பேசுகிறான் என்று!
“அஷோக்.. என்ன இது சின்ன பையன் மாதரி.. லுக் அட் யு.. உடம்பு பூரா காயம். அது இன்ஃபெக்ட் ஆகாம பார்த்துக்கணும்.. தலைல அடி பட்டிருக்கு.. இன்னுமே தலை வலி இருக்கு!  கொஞ்சம் பொறுமையா ஒத்துழைச்சா, சீக்கிரம் கிளம்பிடலாம்!” அவனைப் பார்த்து கண்ணைச் சிமிட்டிவிட்டு மெல்ல வாயிலை நோக்கி நகர்ந்தாள்.
கதவருகே சென்றவள் ஏதோ சொல்ல நினைத்து திரும்பிப்பார்க்க, ‘என்ன’ என்பது போல் அவன் புருவத்தை உயர்த்தி தலையசைக்க, சிறு புன்னகையை உதிர்த்து, ”வரேன்… அப்புறம் பார்ப்போம்”  என்று கதவை திறந்தாள் .
“எப்போ?” என்ற அவன் சத்தம் அவள் புன்னகையை  அதிகப் படுத்த..
“சீக்கிரம்..” என்றவாறு வெளியேறினாள். 
கதவு சாத்தப்பட்டதும் சுசிலவை நோக்கி, “அப்பப்போ எங்கம்மா காணாம போரிங்க?”
“சுதாவ பார்க்க”, என்றார், குரலில் எந்த உணர்ச்சியும் இல்லாது.
சிறிது நேரம் மௌனம் சாதித்துவிட்டு, அவனே மீண்டும் கேட்டான், “யாருமா அது? நேத்து கூட வெங்கட் ‘சுதானு’ சொன்னானே..”
சுசீலாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை. அருகிலிருந்த மேசை மேல் ஏதோ தேடுவது போலா அவனுக்கு முதுகைக் காட்டி நின்றுகொண்டார்.
“அம்மா.. சுதா யாருன்னு கேட்டேன்.. எதுக்கு நீங்க சும்மா சும்மா அவங்கள பாக்க போறீங்க? யார் அவங்க?”
எச்சில் விழுங்கி விட்டு சற்று நிதானமாய், “நம்ம மீனாட்சி பாட்டியோட பேத்தி”  என்று ஒருவழியாய் சொல்லி முடித்தார்.
“பாட்டிக்குப் பேத்தியா?… இது என்ன புது கதை? திடீர்னு எங்க இருந்து வந்திருக்காங்க? இங்க என்ன அவங்களுக்கு வேல?” குரலில் ஒரு எரிச்சல் எட்டிப் பார்த்தது. ‘இத்தனை வருடம் அவரை தனியாய் விட்டுவிட்டு எப்பொழுது என்ன திடீர் உறவு?’ என்ற எண்ணம்.
“அவ உன்னவிட சின்ன பொண்ணுடா.. ரொம்ப பாசமான அழகு பிள்ளை கண்ணா.. அவ மேல கோபப் படாத! அவளுக்கு உடம்பு முடியலை..”, மேலே பேச முடியாமல் திணற, நர்ஸ் உள்ளே நுழைந்து அவரை தெய்வமாய் காப்பாற்றினார்.
“மேடம் சீஃப் டாக்டர் உங்களை பார்க்கணுமாம். மீனாட்சி மேடமும் அங்க வெயிட் பண்றாங்க..”
இதற்காகவே காத்திருந்தவர் போல மகன் கேள்விகளை மறந்து, “இரு டா கண்ணா.. வந்துட்டேன்!” என ஓட்டமும் நடையுமாய் டாக்டர் அறையை அடைந்தார்.
சுசீலாவின் தலை மறைந்த இரண்டு நிமிடத்தில் பிருந்தா மீண்டும் அஷோக் அறையினுள் நுழைந்தாள்.
“சீக்கிரம்னா இவ்வளவு சீக்கிரமா?” பல் தெரிய சிரித்தான். ஏனோ அவளைப் பார்த்தாலே அவனுக்குள் ஒரு குதுகலம். அவளோடான நேரம் பிடிக்க.. அவளைப் பார்த்ததும் அவன் இதழ் விரிய, அவளுக்குள்ளும் ஒரு வித பரவசம்.
அவன் கட்டில் அருகில் சென்று அவனைப் பார்த்தவண்ணம் குனிய, அவள் மூச்சுக் காற்று அவனை உரசிச் செல்ல.. அவன் ஒன்றும் பேசாமல் அவள் கண்களை  பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனருகில் இருந்து அவள் விட்டுச் சென்ற ஸ்டதெஸ்கோப்பை எடுத்து அவனிடம் காட்டி “விட்டுட்டு போய்டேன்!” என்று சொல்ல.. அவன் தலையை அசைத்து விட்டு லேசாய் புன்னகைத்தான்.
அவள் போக முற்பட, “வெங்கி வர வரைக்குமாவது இருந்துட்டு போயேன்… தனியா இருக்கக் கடியா இருக்கு” என்றான் அவள் முகம் பார்த்து.
அவள் கைக்கடிகாரத்தைத் திருப்பி பார்த்தவள், “இன்னும் ஃப்ஐ மினிட்ஸ் தான் இருக்கு.. ரவுண்ட்ஸ் போகணுமே..” என்று ஸ்ட்ராபெரி உதட்டை சுழித்தாள்.
“அது இருக்கட்டும்.. நீ இங்கையே இரேன்.. டெய்லி அதே மூஞ்சிகளை எத்தன தரம் பார்ப்ப? என்னைக் கொஞ்சம் பாரேன்! எனக்கும் போர் அடிக்காம இருக்கும்” என்றான்.
அஷோக் சொன்ன பின் அவளால் அசைய முடியுமா என்ன? “போகணுமே..” சொல்லிக்கொண்டே நின்றாள் அடுத்த ஒரு மணி நேரம்.. அவள் ஃபோன் வைப்ரேட் ஆகும் வரை.
“போணுமே…” என்றாள்.. நகர விருப்பமே இல்லாமல்.. சலிப்போடு..
“ம்ம்ம்.. டைம் கிடைக்கும் போது வா.. இன்னும் கொஞ்சம் நேரம் இருக்க முடியாதா..” என்றவனிடம்..
“எனக்கும் ஆசை தான்.. ஆனா கடமை அழைக்குதே.. வீட்டுக்கு போகரதுக்கு முன்னாடி வந்துட்டு போறேன்.. ரொம்ப போர் அடிச்சா.. கொஞ்சமா டீ.வி. பார்.. டைமுக்கு போகலை சீஃப் வறுத்து எடுத்திடுவார்! இப்போ கிளம்புறேன் ப்ளீஸ்..” என்று கொஞ்சியவண்ணம் கூறிவிட்டுச் செல்ல எத்தனித்தவள், மனது கேட்காமல் அவனருகில் மீண்டும் வந்து, “தலைல அடி பட்டிருக்கு அஷோக்.. அதனால என்னால உனக்கு படிக்க புக்ஸ் கூட தர முடியது. தல வலி ஆரம்பிச்சிடும்! நீ நல்லா  ரெஸ்ட் எடுத்தா தான் சீக்கிரம் வீட்டுக்குப் போக முடியும். டியுட்டி டாக்டர் யார்கிட்டயாவது கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமானு கேட்டு பாக்கறேன். நான் வர வரைக்கும் கொஞ்ச நேரம் கண்ண மூடிட்டு படுத்திரு.. சீக்கிரம் வர பார்க்கறேன்”
பதில் பேசாமல் அவளையே பார்த்துக்கொண்டு படுத்திருந்தவனைப் புருவம் உயர்த்தி ‘என்ன?’ என
‘என் மேல உனக்கு கோபமே இல்லையா பிருந்தா?’ என்று நினைத்தவன் வெறுமனே, “யூ ஆர் பியூடிஃபுல்  பிருந்தா!” என்றான்.
“ம்ம்? என்ன?” என்று புருவம் சுருக்கி புன்னகையோடு கேள்வியாய் பார்த்தவளை,
“வெளில மாதரியே உள்ளையும் நீ அழகுனு சொன்னேன்! தூய்மையான உன் மனசு அழகுனு சொன்னேன்..” என்றான்.
பிருந்தாவின் முகம் ஆயிரம் வாட் மிங்குமிழ் (பல்பு) போல பிரகாசித்தது… உள்ளுக்குள் எழுந்த பூரிப்பு முகத்தில் புன்னகையாய் வெளிவந்தது, “உனக்குக் கண்டிப்பா ஒரு ஸ்கேன் பண்ணி தான் ஆகணும்.” அழகாய் சிரித்தாள்.
“எனக்கு டைம் ஆச்சு.. படுத்திரு.. சீக்கிரம் வந்துடுறேன்!” அவன் கையை மென்மையாய் தட்டி கொடுத்துவிட்டு வாயிலை நோக்கிச் சென்றாள்.
அவள் முதுகைப்  பார்த்துக் கொண்டிருந்தவன்..
“பிருந்தா… ஒரு நிமிஷம்..” கதவு வரை போனவள் திரும்பிப் பார்த்து, “ம்?” என்று கேள்விக்குறியோடு திரும்பி பார்த்தாள். அவனின் ‘பிருந்தா’ அவளுக்குள் ஏதேதோ செய்ய,  அவன் ‘‘பிருந்தா’’வை கேட்டுக்கொண்டே வாழ்ந்துவிட மாட்டோமா என்றிருந்தது. அவளை அறியாமலே, அவள் இதயம் போலவே.. அவள் கால்களும் அவள் பேச்சைக் கேட்காமல் அஷோக்கை நோக்கிச் சென்றது.
அவன் மீண்டும் மீண்டும் அவள் அருகாமையை விரும்புவது போல் நடந்துகொள்ளவும் அவளால் அவள் எண்ணங்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ளவே முடியவில்லை. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லையுண்டு… பாவம் அவள் மட்டும் என்ன விதிவிலக்கா.. முற்றிலுமாக கரைந்துவிட்டாள்.
ஒரு நாள்.. இரண்டு நாள் காத்திருப்பல்ல… முழுதாய் ஒன்பது முழு வருடக் காத்திருப்பு… அவன் கிடைக்கவே மாட்டான் என்று தெரிந்தபின்னும் அவன் நினைவில் வாழ்ந்தவள்.
அவள் மனம் அவன் வசம் பாய்வதை அறிந்து கொள்ள எந்த பட்டப்படிப்பும்  தேவையில்லை. மாங்கா-மடையனுக்கு கூட பார்த்ததும் தெரிந்துவிடும் அவள் பொலிவின் அர்த்தம்.. அஷோக்கிற்கும் தெரியத் தான் செய்தது.
ஒரே இடத்திலிருந்து பழக்கப் படாதவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உடல் வலி ஒரு பக்கம்.. தூக்கம் பிடிக்கவில்லை. காலில் சக்கரம் கட்டி பறப்பவனுக்கு எதையுமே செய்யாமல் நேரத்தைக் கழிக்கத் தெரியவில்லை.
இதில் யாரேனும் அவனைப் பார்க்க வந்தால் அவர்களின் பேச்சு அவனை இம்சித்தது. சிலரை அவனுக்கு தெரியவில்லை, அது இன்னுமே எரிச்சை கூட்டியது. ஆனால் பிராந்தாவைப் பிடித்தது. நேரம் அவளோடு தொல்லையே இல்லாமல் கழிந்ததது. இருவருக்கும் நன்றாய் ஒத்துப் போனது.
சில மாத நிகழ்வுகள் அவனுக்கு மறந்து போகவே உடலோடு உள்ளமும் ஒரு வகை வலியில், அவன் எளிதில் காயப்படும் நிலை. இருட்டில் தனியாய் மாட்டிக்கொண்ட பயம். எளிதில் தன் மனதுக்கு ஒத்த ஒருவரிடம் தோழமைக்காய் தோள் சாயும் நிலை. ஒரு மருத்துவராய் அவன் நிலை பிருந்தாவுக்கு நன்றே விளங்கியது.
அவனுக்குத் தோழியாய் அவள் தேவை.. அவளுக்கு உள்ளம் கவர்ந்தவனாய் அவன் தேவை.. தேவைக்கு இருவர் கரமும் ஒன்று சேர்ந்து.
முட்டுச் சந்தில் நின்றான். வழி தெரியவில்லை. உலகமே இருட்டாய் தோன்ற.. ஒளியாய் பிருந்தா தெரிந்தாள்.. அவள் கை நீட்டப் பற்றிக்கொண்டான்.
கேள்வி: கைகோர்த்திருக்கும் இருவரில் ஒருவருக்குள் பற்றி எரியும் காதல் தீ மற்றவரைப் பற்றிக் கொள்ளும் வாய்ப்பு ஏதேனும் இருக்கின்றதா?  
பதில்: வாலிப வயது.. கொள்ளைக் கொள்ளும் அழகு.. எடுத்துப் பருகும் தூரம்.. பஞ்சும் நெருப்பும் அருகிலிருந்தால்…? 
 

Advertisement