Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 46-1
“ஹீ லவ்ஸ் மீ… ஹீ லவ்ஸ் மி நாட்” (He loves me.. He loves me not)
அன்று இரவு பிருந்தாவிற்குத் தூக்கம் பிடிக்கவில்லை. அறை முழுவதும் ஜெர்பரா மலர் வாசம். மேசையை அலங்கரித்திருந்த ஜெர்பரா மலர் கொத்து அவள் கையில் உயிரை விட்டுக் கொண்டிருந்தது.
மலரின் ஒரு இதழைப் பிடுங்கி, “ஹீ லவ்ஸ் மீ…” என்றாள்.
அதைக் கீழே போட்டுவிட்டு அடுத்த இதழைப் பிடுங்கி, “ஹீ லவ்ஸ் மி நாட்” என்றாள்.
இது ஒரு வகை விளையாட்டு, கடைசி இதழ் கையில் இருக்கும் வேளை எந்த வரி உச்சரிக்கப்படுகிறதோ.. அதையே பதிலாக எடுத்துக் கொள்ளவேண்டும். ஒரு கொத்து பூவும் முடிந்திருக்க அவளுக்குத் தான் இன்னும் பதில் கிடைத்திருக்கவில்லை.
அவளால் ‘அவன் காதலிக்கவில்லை’ என்ற பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது. அதனால் ஒரு மலரைக் கூட முழுதாக பிய்த்திருக்கவில்லை.
மெத்தையில் படுத்தவள் தூக்கமின்றி புரண்டாள்..
“அக்கா.. தூங்கு இல்ல என்னைத் தூங்க விடு.. எதுக்கு இப்படி புரண்டுகிட்டே இருக்க?“ அருகில் படுத்திருந்த அவள் தங்கை அவளை இடிக்க,
“ம்…” என்று திரும்பிப் படுத்துக் கொண்டாள். முகத்தில் ஒரு வித பூரிப்பும், உதட்டில் அரும்பி இருந்த புன்னகையும், கண்களில் கனவுமாய் படுக்க முடியாமல் தவித்தாள்.
நெஞ்சுக்குள் நண்டாய் அஷோக்கின் நினைவுகள் குடைந்தது. அவளின் அறியா வயதில் அவளை அறியாமல் அவன் அவளுள் நுழைந்து எத்தனை விடியா இரவை கொடுத்தான்? சத்தம் கேட்காமல் அவள் விம்மிய விம்மல்கள் அவள் தலையணை மட்டுமே அறியும்.
அவன் சொல் கேட்டு அவள் ஒதுங்க.. ஒதுங்க மறுத்தது அந்த ஒற்றை இதயத்தை மட்டும் சுட்ட காதல்.
இன்றுவரை சூரியனாய் சுட்ட அவன் நினைவெல்லாம் மாறி குளிரும் நிலவாய் அவளை அலைக்கழித்தது.
ஏழு வருடங்கள்! மிக நீளமான ஏழு வருடங்கள் முன் அஷோக்கைக் கடைசியாகப் பார்த்தது! அதற்கு முன்பே இரண்டு வருடக் காதல். ‘ஒரு முறையாவது அவனை மீண்டும் பார்க்க மாட்டேனா’ என்று எத்தனையோ முறை யாசித்திருக்கிறாள்.
முயன்றிருந்தால் பார்த்திருக்கலாம். அவன் இருப்பிடம் தெரியும், அது மட்டுமா? அவனைப் பற்றி.. அவன் குடும்பம்.. குலம்.. கோத்திரம்.. தொழில் என் அனைத்தும் அத்துப்படி! தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் அவன் ஜாதகத்தையே வாய்ப்பாடு போல் ஒப்புவிப்பாள்.
ஊரெல்லாம் அவள் அழகில் திரும்ப.. அவன், அவள் மனதைக் கவர்ந்தவன் மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அது தான் அவளை அவனிடம் இழுத்துச் சென்றதோ? ‘அவன் கண்ணுக்கு நான் தெரியவே இல்லையா?’ ஏங்கிக் கரைந்த தினங்கள் பல.. ‘இன்று? இன்று அவன் கண்ணுக்கு நான் தெரிந்தேனே…’ முதல் முறையாய் கர்வம் கொண்டாள் தன் அழகின் மீது! அவன் வெளியழகில் மயங்குபவனில்லை என்பதை என்று அவள் உணரப் போகிறாள்? 
யார் பொல்லாத நேரமோ இவள் உள்ளழகு அவனை ஈர்க்கும் சக்தியைப் பெற்றுள்ளதே..
பள்ளிப் பருவ காதல்.. காலம் மாற மறைந்துவிடும் என்று தான் அவன் நினைத்தான். வேண்டாம் என்று கூறவில்லை.. அவள் அவன் நண்பனின் சகோதரி அல்லவா.. ‘படிப்பைப் பார்.. படித்து முடித்து வா’ என்று கழுவும் நீரில் நழுவிய மீனாய் சென்றுவிட்டான். இன்று அவளும் வளர்ந்து அவள் காதலும் வளர்ந்து அவன் முன்.. நந்தவனமாய்.
சொல்லிச் சென்றவனை அதன் பின் பார்க்க விழையவில்லை. அப்போதைய மனநிலையில் படிப்பு முடியுமுன் அவனைப் பார்க்கக் கூடாதென்ற வைராக்கியம். பின் அவளாய் மீண்டும் அவனைத் தேடிச் செல்ல மனம் ஒப்பவில்லை. வேண்டாம் என்று சென்றவன் பின் காதல் பிச்சையா கேட்ட முடியும்…
நெகிழும் நினைவுகள் என்று எதுவுமே இல்லாமல் ஒரு ஆயுள் காத்திருந்தாள் அவனுக்காய்… அவன் வரவேயில்லை. வாடிய சூரியகாந்தியாய் அவள் வாழ்வை எதிர்கொள்ள இன்று அவள் முன் மீண்டும் சூரியனாய் அவளை பிரகாசிப்பிக்க வந்து வந்துவிட்டான்.
மறந்து போன புத்தகம் போல அவன் நினைவை மற்ற எண்ணங்களினால் புதைத்து போட்டிருந்தாள். இந்த ஏழு வருடங்களில் அவள் வாழ்விலும் எத்தனையோ மாற்றங்கள், எத்தனையோ எதிர்பார்ப்புகள்.
அதில் அவனை சந்திப்பது அவள் எதிர்பார்ப்புகளில் இல்லாத ஒன்று. அன்று அவசர பிரிவில் அவன் முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்ததும் உறைந்து போனாள்.
‘வாழ்ந்தால் உன்னோடு இல்லை மண்ணோடு’ என்ற தத்துவம் எல்லாம் இல்லை.. வாழ்வின் நிதர்சனம் அறிவாள். அதனால் அவள் நிம்மதியை அவள் இன்று வரை இழக்கவில்லை. இருந்தாலும்…
காய்ந்துபோன விதை நீர் பட்டால் முளைக்காதா என்ன? உள்ளத்தின் ஆழத்திலிருந்து அவன் உயிர்கொண்டு மீண்டும் அவள் முன் நின்றான், பூதாகரமாய்.. முடிந்ததாய்  நினைத்ததெல்லாம் மீண்டும் உயிர்பெற்ற உணர்வு! காதல் அவளைத் தேடி வந்துவிட்டது. கை சேராது என்ற காதல் கை சேரும் இடத்தில்.
அவனைக் காண ஆசைப்பட்டது நிஜம் தான். ஆனால் இப்படி செங்குருதியில் நனைந்தவனாய், நினைவிழந்தவனாய்  அல்ல. அவன் திடமான உடலெல்லாம் கிழிந்து தொங்க.. இரத்தம் சொட்ட.. அவனைப் பார்த்தவளுக்கு மயக்கம் மட்டும் தான் வரவில்லை. இவனை விடப் பயங்கரமாய் நொறுங்கியவர்களைப் பார்த்திருக்கின்றாளே.. அவர்களுக்கு பதறாத இருதயம் இவனுக்காய் பிசைந்து வலித்ததே.. ‘இறைவா.. என் அஷோக்கா…’ என்று தான் நினைத்தாள். அவன் அவளை வேண்டாம் என்று சொல்லாமல் சொன்னவன் தான்… இருந்தாலும் அவன் அவளுக்கு ‘என் அஷோக்’ என்று தான் தோன்றினான்.
அஷோக்கிற்காக  அவள் மனம் பதறியது அவளுக்குச் சற்றும் வியப்பளிக்கவில்லை. ‘இனி அவன் உயிருக்கு எந்த சேதமும் இல்லை’ என்று அறியும் வரை அவள் உயிர் அவள் வசமில்லை.
அவன் ஒற்றை பார்வைக்கு எத்தனை நாள் தவமிருந்தாள். அவள் பெயரை அவன் உச்சரிக்க.. அதை அவள் காது குளிர கேட்க.. ஏழு வருடம் காத்திருந்தாள். அவள் காத்திருப்பு வீண் போகவில்லையே..
அவனும் அவளை மறக்கவில்லையே… ஒன்பது வருட தவத்தின் பலன்.. ‘பிருந்தா’ என்று அழைத்தானே. ‘பிருந்தா…’ என்று அவன் கூப்பிட்டது அவள் காதில் தேனாய் ஒலித்தது.
“பிருந்தா… பிருந்தா..” ஆகா என்ன இனிமை..
“பிருந்தா… அடியே பிருந்தா… எழுந்திரு!!! இன்னைக்கு ஹாஸ்பிட்டல் போலியா?” ‘இது அம்மாவின் சத்தமாயிற்றே’ கண்ணைக் கசக்கியபடி மெத்தையில்  எழுந்து அமர்ந்து கொண்டாள். கையில் கரண்டியோடு அம்மா..
வெட்கமாய் போனது.
“இன்னும் எவ்வளவு நேரம் தூங்குவ? படுக்க சொன்னா நேரத்துக்குப் படுக்காத… ரூம் பூரா குப்ப பண்ணி வச்சிருக்க, விடிய விடிய முழுச்சிருந்து புடுங்க ஒன்னும் இல்லேனு பூவ பூரா புடுங்கிட்டு இருந்தீயாக்கும்? காலைல நேரத்திற்கு எழுந்திரிக்காத!! பொம்பள பிள்ள மாதரியா வளற்ற? உன்னவிட சின்னவ.. அவ எழுந்துக்கரா நேரத்துக்கு… உனக்கு என்ன கேடு?
என்னைக்காது ஒரு நாள் அந்த சூரிய உதயத்த பார்த்திருக்கியா நீ? வக்கனையா.. கொட்டிக்கர நேரத்துக்கு எழுந்தா போதும்… எல்லாம்  ரெடியா மேச மேல வரும்!!
போர வீட்டில இப்படி தூங்கினா என்ன நினைப்பாங்க? என்ன பொண்ண வளத்து வச்சிருக்கானு என்னை தானே சொல்லுவாங்க.. எல்லாம் உங்கப்பா குடுக்கர செல்லம்.. அவரச் சொல்லணும்..” என்று அம்மா காலையிலேயே தன் அர்ச்சனையை ஆரம்பித்தார்.
அவர் கூறிய ‘போர வீடு’ அவளுக்காகக் காத்திருந்த ‘ஜீவா’ வீட்டைக் குறிக்க.. அவளுக்கோ அஷோக்கின் வீடு தான் ‘போர’ வீடாய் தோன்றியது. இரண்டு கண்ணிலும் நட்சத்திரமும் இதயமுமாய் ஒன்றுசேர்ந்து தெரிக்க.. காதில் அம்மாவின் வசை இனிக்க.. சிரித்துக்கொண்டே நாளை ஆரம்பித்தாள்.
ஜீவா, லண்டன் வாசி. பெரியளவில் பேசப்படும் இதய மருத்துவர். ஒரு அருவைசிகிச்சை செய்ய சென்னை வந்திருக்க.. அங்கு பிருந்தா பரிட்சயமானாள். அவள் அசத்தும் அழகும்.. அதைவிட மேலான அறிவும்.. அவள் தொலைநோக்கு சிந்தனையும்.. அவள் குடும்பம்.. என எல்லாம் ஜீவாக்கு பிடித்துவிட.. சம்பந்தம் பேச வந்தனர் ஜீவா வீட்டினர். பிருந்தா, யோசிக்க ஆறு மாத கால அவகாசம் கேட்க ஜீவா லண்டன் திரும்பிவிட்டான். இது நடந்து ஒரு மாதம் முடியவில்லை! ஜீவா அவள்  எண்ணத்தில் பதியவில்லை. அவகாசம் கேட்டதோடு அவனை மறந்தும் விட்டாள்.
அஷோக்கின் நினைவு அவளுக்குள் ஒரு புத்துணர்ச்சியைத் தர.. பொரிந்து தள்ளிக் கொண்டிருந்த அம்மாவை முத்தம் வைத்துச் சென்றாள். அதற்கும் திட்டு வாங்கினாள். வாங்கிய வசை கூட தேன் மழையாய் தான் தோன்றியது இன்று!
அம்மா, அப்பா, அண்ணன், தங்கை என எல்லோருக்கும் அவள் செல்லம். அஷோக்கோடு பள்ளியிலும், ஐ.ஐ.டி மெட்ராஸ்ஸில் அவள் அண்ணன், வினோத் படித்திருந்தான்.  தற்போது அவன் அமெரிக்காவில் வாசம்.
அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள். அவர்கள் வழியில் இரு மகள்களும். பிருந்தா எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு தற்போது அவள் தாய்மாமாவின் புகழ் பெற்ற மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் பணி புரிந்து வருகிறாள்.
அவளின் நீண்ட நாள் கனவான ‘இம்பீரியல் காலேஜ் லண்டன்’லில் மேற்படிப்புக்காக விண்ணப்பமிட்டு காத்துக்கொண்டிருக்கிறாள். அவள் தங்கை அனுராதா, எம்.பி.பி.எஸ் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறாள். 
படுக்கும் பொழுது இருந்த அதே துடிப்பும் பூரிப்பும் உள்ளத்தைவிட்டு நீங்கவில்லை. காலை உணவை முடித்துக்கொண்டு, கண்ணனுக்கு மை, உதட்டிற்குச் சாயம், கூந்தலை ஒன்றிற்கு நான்கு முறை சரிபார்த்தல் என்று கண்ணாடிமுன் சற்று அதிக நேரம் செலவழித்து விட்டு “கிளம்புறேன்..மா” என அம்மாவிற்கு ஒரு முத்தமும், “லவ் யூ.. பா” என அப்பாவிற்கு ஒரு முத்தமும், “பாய் அனு குட்டி” எனத் தங்கைக்கு ஒரு முத்தமும் தந்துவிட்டு வாசலில் நின்றுகொண்டிருந்த அவளின் பென்சில் கிளம்பினாள்.
காலை நேரச் சாலை நெரிசல் கூட அவள் முகமலர்ச்சியை ஒன்றும் செய்ய முடியவில்லை. வழி நெடுக மேக மண்டலத்தில் தேவ தூதர்கள் நடுவில் அஷோக்கோடு பண்ணில் மறுகிக்கொண்டிருந்தாள்.
“என்ன  பிருந்தா… அசத்தலா வந்திருக்க? எதாவது விசேஷமா?” என்று தோழி அவள் தோளை இடிக்க,
“ஒண்ணும் இல்லையே கவி.. எப்பவும் போலத் தான் இருக்கேன்”, என்று மழுப்ப..
“ஆமா ஆமா இன்னைக்கு தானே உன்னை முதன் முதலா பார்க்குறேன்.. சும்மா கத விடாத… என்ன விஷயம்… மேக் அப் கொஞ்சம் பலமா இருக்கே.. உன்ன இது தான் முதல் தரம் இப்படி சிரிச்ச முகமா.. இவ்வளவு சந்தோஷமா பாக்கரது. டாக்டர் லண்டன்ல இருந்து வராரா?”
வாய் பேசாவிட்டாலும் முகமலர்ச்சி காட்டி கொடுத்தது.
“பச்… கவி.. நான் தான் அதைப் பத்தி பேச வேண்டாம்ன்னு சொல்லி இருக்கேனே…”
“சரி.. உனக்கு பிடிக்கல.. நான் பேசல. சொல்லு யாரு அது? உனக்கு பிடிச்சவர்?”
“ஒண்ணுமில்லை.. ஒருத்தி நல்லா டிரஸ் பண்றதுக்கு ‘ரீசன் கேட்டா.. என்ன சொல்றது? போடி.. போய் வேலையப் பார்!” எரிந்து விழ நினைத்து எக்கசகமாய் தோற்றுப் போனாள்!
“ஒக்கே கன்ஃபர்ம்ட்! சரி சொல்லு, யார் அவர்? பேர் என்ன? எங்கப் பார்த்த? உம்.. சீக்கிரம் சொல்லு பா!!”
“சும்மா உளராத… அப்பிடி எல்லாம் ஒண்ணும் இல்ல.. போடி.. வேலையை பாரு, போ..”, புன்முறுவல் மாறாது எரிந்துவிழுந்து விட்டு.. கோட்டையும் ஸ்டெதஸ்கோப்பையும் கையில் எடுத்துக் கொண்டு அஷோக்கைக் காணும் எண்ணத்தில் விரைந்தாள்.
“கோட்ட போட்டுட்டு போ,  இப்படியே போன, எவனும் டிஸ்சார்ஜ் ஆகமாட்டான். 
தானா  சிரிச்சுகிட்டே போகாத.. அப்புறம் வேற ஆஸ்பத்திரிக்கு பேஷியன்ட்டா அனுப்பிட போராங்க..” என்று கவிதா கூறியது அவள் காதில் விழுந்ததிற்கான அறிகுறியே இல்லாமல் கனவில் மிதந்த வண்ணம் நடந்தாள்.
“ஹாய் அஷோக்!” புன்னகையோடு அறைக்குள் பிரவேசித்தவள், தலை கட்டை மாற்றிக் கொண்டிருந்த நர்சை நகர சொல்லிவிட்டு அவள் மாற்ற ஆரம்பித்தாள்.
“ஹாய் பிருந்தா..” அவன் முகத்திலும் புன்னகையும்.. ஒரு ஆர்வப் பார்வையும்.
கட்டை மாற்றி விட்டு முகத்தைத் துடைத்து, மற்ற காயங்களையும் துடைத்து அவளே மீண்டும் மருந்திட்டு கட்டையும் போட்டு விட்டாள்.
“நீ எப்போ நர்ஸ் ஆன?”
“ம்ம்… இப்போ தான்.. நீ டிஸ்சார்ஜ் ஆகரவரைக்கும்.. உனக்கு மட்டும்!” என்றாள் அவள் வேலையைச் செய்து கொண்டே.
சிறிதாய் புன்னகைத்து கொண்டே, “அப்போ நான் ஸ்பெஷல்?”
“அது இன்னுமா உனக்கு தெரியல அஷோக்? என்னைக்குமே நீ எனக்கு ஸ்பெஷல் தான்.”
“தாங்க்ஸ்.. ஆமா.. இன்னைக்கு என்ன விசேஷம்?” என்றான்
“யாருக்கு… புரியல?” கேள்வியாய் அவனை பார்க்க
“அநியாயத்துக்கு அழகா வந்திருக்க? பாவம் ஹார்ட் பேஷியன்ஸ்..” என்றான் விரிந்த புன்னகையை அடக்காமல்.
‘இவனா சொன்னான்? என்னைப் பார்த்தா? என்னை பார்த்தா சொன்னான்.? இவனுக்குப் பெண்களை எல்லாம் ரசிக்கக் கூட தெரியுமா?’ அவள் காதை அவளால் நம்ப முடிய வில்லை.. மேலும் கீழும் குதிக்க வேண்டும் போல் மனம் துள்ளியது. ஒரு முறை ஒரே ஒரு முறை.. ஆசை பார்வை பாப்பானா என்று எத்தனை வருடம் ஏங்கினாள். ஆகாசத்தில் பறப்பது போன்றிருந்தது.
இந்த உணர்வு ஒன்றையும் வெளிக்காட்டாமல் ஒரு சிறு புன்னகையுடன் முடித்தாள்.
அவளுக்கென்ன தெரியும் அவனைப் பற்றி! காலம் அவனையும் மாற்றியிருந்ததே. ஒருத்தி மாற்றியிருந்தாள். 

Advertisement