Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 41
வியாழன் காலை சூரியன் விழிக்கும் முன்னே கண்விழித்த கண்ணன் போர்வையை உதறிவிட்டு எழ அவன் பார்த்தது அருகில் அவனுக்கு முதுகைக் காட்டி படுத்திருந்த தன்னவளைத் தான். மங்கலான வெளிச்சம் அறையை நிரப்பியிருக்க.. அவள் போட்டிருந்த இரவு உடையின் சட்டை நகர்ந்து அவள் இடையைத் தாராளமாய் காட்ட.. மனம் மனைவி மீது பாயவும் அவளருகில் படுத்துக் கொண்டான்.
அலை அலையாய் இருந்த அவள் கூந்தலை வருடவுமே, அவள் தூக்கம் களைய ஆரம்பித்தது. அருகில் வந்து அவள் தோளில் இதழ் பதித்து அவள் வாசம் நுகர்ந்தவன் எவ்வளவு நேரம் தான் நல்லவனாகவே இருப்பது என.. கை மெதுவாய் இடை வழியே வயிற்றிற்கு இறக்கி முன்னேர, மூடியிருந்த சுதாவின் கண் சட்டெனத் திறந்து விட்டது.
கூச்சம் பிடுங்கித் தின்ன.. ஒரு இன்ப அவஸ்தை..  என்ன செய்யவேண்டும்.. தெரியவில்லை. தெரியவேண்டிய அவசியம் இருக்கவில்லை. உடல் மயக்கத்தைத் தழுவவும், அவள் எதிர்பார்க்கவில்லை அவன் ‘ஷிட்! யூ ஆர் ஆன் இடியட்.. மேன்!’ என்று சொல்லிக்கொண்டே கையை உருவுவானென்று.
போர்வையால் அவளை மீண்டும் போர்த்தி விட்டு எழுந்துவிட்டான். கண்ணில் மயக்கம் போய் நீர் கோர்க்க ஆரம்பித்தது. ‘ஷிட்டா?’ ‘நானா?’ ‘ஏன்?’.. ‘நேற்றிலிருந்தே ஏன் இப்படி?’ கேட்டகவும் தயக்கம்.. என்னென்று கேட்க?
கண்கள் திறந்து பார்க்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை. அவன் டென்ஷனை உணர முடிந்தது. குளியலறை கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் மீண்டும் நிசப்தம். அசையாமல் கண்மூடியே கிடந்தாள். கணவன் தன்னை தொட்டு விட்டு இப்படி சொல்லிவிட்டானே என்ற வருத்தம் அவளை அசைய விட இல்லை. ‘இதுவும் கடந்து போகும்’ மனதுக்குள் சொல்லிக்கொண்டே படுத்திருந்தாள். மீண்டும் தூங்கியும் விட்டாள்.
சூரிய கதிர்கள் ஜன்னல் வழி வந்து அவள் முகம் வருட, கண்களை திறந்தவளுக்கு விருந்தாய் இருந்தது அவள் கண்ட காட்சி. பால்கனி சென்று பார்த்தாள்.
கண்ணிற்கு தெரிந்த தூரம் வரை அடுக்கடுக்காய் பனி படர்ந்த மலைகள்.. மங்கலாய் தெரிந்தது. மேகம் தொப்பியாய் மலை உச்சிகளை மூடியிருக்க, அதன் சரிவெங்கும் பச்சை பசேல் எனத் தேயிலைத் தோட்டம். காட்டேஜை சுற்றி பலவகை மலர்கள். 
கண்ட காட்சி கண்களில் வழி இறங்கி உடலைப் புத்துணர்ச்சி செய்ய புன்முறுவலோடே குளியலறைக்குச் சென்றாள். அந்த கதவில் சிறிய ‘போஸ்ட்’ ஒட்டப்பட்டிருந்தது.
“குட் மார்னிங்.. வில் கோ ஃபார் அ ரன் ஆஃப்டர் ஒர்கவுட். வில் பி பாக் இன் டூ அவர்ஸ்” 
‘ஓ.. பனை மரம் எங்க போனாலும் கரெக்டா எக்சர்சைஸ் பண்ணிடுவாரா? குட் குட்!’
பொறுமையாய் காலைக் கடன்களை முடித்து, குளிராய் இருக்கவும் உடலுக்கு மட்டும் தண்ணீரைக் காட்டி விட்டு கதவைத் திறந்து பார்க்க அவன் இன்னும் வந்திருக்கவில்லை. அறையில் தனியாயிருக்கவே தொடை வரை நீண்ட ஸ்லிப் மட்டும் அணிந்து வெளிவந்தாள். பெட்டியை தூக்கி டேபிளில் வைக்கவும் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவள் ஆருயிர் கணவன்.
திரும்பிப் பார்க்க.. இருவர் பார்வையும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொள்ள.. அவன் பார்வையை அவள் முகத்தைப் பார்த்தது சொற்ப நேரமே. அவன் பார்வை போகும் திசை அவளைப் பாடாய்ப் படுத்த, பெட்டின் புறம் திரும்பிக்கொண்டாள். அவசரத்திற்குப் பெட்டியின் ‘நம்பர் லாக்’ எண்ணும் மறந்து போக.. அதை இப்படியும் அப்படியுமாய் மாற்ற.. அவள் பின்னால் வந்து நின்றான்.
தான் சகஜமாய் இருப்பது போலக் காட்டிக் கொள்ள அவள் பட்ட பாடு அவளுக்குத் தான் தெரியும். அவன் பின்னின்று அவளை உரசிக்கொண்டே ‘0-0-0’கு மாற்றி பெட்டியை திறக்க, பெட்டி திறந்துகொண்டது. இவள் உடலும் விழித்துக்கொண்டது. இதயம் படபடப்பை எப்படி சமன் செய்வது? தடதட இதயத் துடிப்பு அவனுக்குக் கேட்டுவிடுமோ? உதட்டைக் கடித்துக் கொண்டு பெட்டியை பார்த்து நின்றாலும் கவனம் முழுவதும் அவள் முத்துக்குப்பின் நிற்பவன் மேல் மட்டுமே.
தலை முடி அனைத்தையும் மேல் தூக்கி க்ளிப் செய்திருக்க, ஆங்காங்கே சிறு முடிக்கற்றைகள் சுருளாய் தொங்க அதிலிருந்து நீர் முத்துகள் அவ்வப்போது சொட்டியது. அதில் ஒன்று அவள் தோள்பட்டையில் சொட்ட அதையே பார்த்து நின்றான். அவனும் அசையவில்லை அவளும் அசையவில்லை. 
அவன் இதழ் அவள் தோளில் இருந்த ஒரு சொட்டு நீரில் பதிய.. அவன் கை அவள் தோளிலிருந்து ஸ்லிப்போடு வழுக்கிக்கொண்டு இறங்க.. அவள் மூச்சு நின்று வெளிவந்தது.. அவள் கண்களும் ஒரு மயக்கத்தைத் தழுவ ஆரம்பித்தது.
அவள் வெற்று முதுகில் அவன் இதழ் உரசியது தான் தாமதம்.. கூச்சத்தில்.. அவள் உடலில் பரவிய இன்ப அவஸ்தையில்  முதுகு முன் நகர… அவன் விலக.. அவளுக்கு ஒரு நொடி ஒன்றும் புலப்படவில்லை. இன்பமான ஆகாய பயணம்.. சட்டென்று முடிய, தரையில் விழுந்த வலி.. கண்ணன் இன்னும் அவள் பின் தான் நின்றிருந்தான்.
அவன் அவளைத் தொட்டிருந்தால் கூட அமைதி அடைந்திருப்பாளோ.. அதைத் தான் மனதும் எதிர்பார்த்ததோ? அவள் இதயமோ தாரு மாராய் துடித்துக் கொண்டிருந்தது. அவன் அப்படியே நிற்க, அவள் நெஞ்சு அடைத்து கண்ணீர் வந்து விடும் போல் இருந்தது.
அவன் நீண்ட பெருமூச்சு அவள் தோளில் உஷ்ணமாய் இறங்க, அவள் முழு பலத்தையும் கொண்டு திரும்பவும் அவன் பல்லைக் கடித்து, கண்களை இருக்க மூடியிருந்தது தெரிந்தது. அடுத்த நொடி அவன் கண் திறவாமலே திரும்பிச் சென்று விட்டான்.
மூக்கு விடைக்க, இதழ் துடிக்கக் கண்ணீர் எட்டிப் பார்த்தது. ‘தாலி கட்டினதும் நான் பிடிக்காம போய்டேனா? கண்ண மூடிக்கர அளவுக்குத் தான் இருகேனா?’
‘உனக்கு என்ன தான் பிரச்சைனை?’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது. பேசத் தைரியமில்லை. போன முறை பேச்சு.. சண்டையாய் மாறி இருவரையும் வதைத்தது போதாதா?
‘ஏதோ தயக்கம்.. சரி ஆகி விடும். இதுவும் கடந்து போகும்!’
ஷவரின் கீழ் நின்றவன் நிலை இன்னும் மோசம். உயிருக்கு உயிராய் காதலித்தவளே கைபிடித்தாயிற்று. விரும்பி, ஆசை ஆசையாய் தாலி கட்டியாயிற்று.. என் மனைவி என்ற உரிமையும் வந்தாயிற்று.. ஆனாலும் ஒரு திரை.. நெருங்க ஒரு தயக்கம். இவன் அருகில் சென்றதும் அவள் தான் விறைத்து விடுகின்றாளே… அப்படி தான் அவன் நினைத்தான்! பெண்களுக்கே உரியக் கூச்சமாயிருக்கும் என்று தோன்றவில்லை.
அன்று அவனுள் புதைந்து போக துடித்தவள் இன்று அசையாமல் நிற்பதோடு இல்லாமல் அவஸ்தையில் நெளிகிறாள். இப்படி தான் அவனுக்கு தோன்றியது.. யார் அவனிடம் சொல்ல அது இன்ப அவஸ்த்தை என்று!
அவன் வீட்டில் அவளை நெருங்குகையில் இல்லாத உடல் மொழி இன்று இருக்கவே அவனுக்குள் ஒரு தயக்கம். காரணம் உள்ளுக்குள் புதைந்து கிடந்தாலும் அவன் உணரவில்லை.
‘மும்பையில் நடந்ததை நினைத்து இன்னுமா மனதைக் குழப்பி கொண்டிருக்கிறாள்? என்ன சொல்லி இவளுக்குப் புரிய வைப்பது?’ என்ற எண்ணப் போராட்டம்.
இரண்டு நிமிடம் மனம் திறந்து பேசினால் இந்த கண்ணாம் பூச்சி ஆட்டம் ஒரு முடிவுக்கு வரும். ஆனால் யார் பூனைக்கு மணி கட்டுவது.
குளித்துவிட்டு வெளிவந்தவன் மேல் சில்லென்று தென்றல் மோதியது. பால்கனி கதவு திறந்திருக்கச் சுதா வெளியில் நின்றிருப்பது தெரிந்தது. உடை மாற்றிச் சென்றவன் எப்பொழுதும் போல், “சாப்பிட போலாமா? பசிக்குது!” என்று அவளருகில் போய் நிற்க..
திரும்பிப் பார்த்தவள் முகத்தில் அப்படி ஒரு அலுப்பு ‘சாப்பாட்டு ராமன்.. இத தவிர வேற எதுமே தெரியாதா?’
“என்ன சுதா? பசிகலியா?”
“பசிக்குது.. உங்களுக்குத் தான் தெரியல! நீங்க தான் ஓவரா பண்றீங்க!” அவள் குரலில் இருந்தது என்ன? கோபமா? வலியா?
‘இப்போ எதுக்கு கோவிசுக்குரா? சாப்பிடத் தானே கூப்பிட்டேன்?’ முழிக்க மட்டும் தான் முடிந்தது அவனால்.
பெண்களின் மனம் தெரியவில்லை. சுதாவின் மனது.. சுத்தமாய் படிக்கத் தெரியவில்லை. அவள் வரிகளின் நடுவிலும் பாவம் அவனுக்குப் படிக்கத் தெரியவில்லை!
உடல் உரசும் நேரம் மட்டும் தான் இந்த மனப்போராட்டம்.. மற்ற நேரம்.. எப்பொழுதும் போல் உல்லாசமும் சிரிப்பும் பஞ்சமில்லாமல் இருந்தது.
“வா..” கையோடு கை கோர்த்தே சென்றான். அன்று முழுவதும் ஊர் சுற்றினர்.
இருவரும் எப்பொழுதும் போல மகிழ்ச்சியாகவே நேரத்தை செலவிட்டனர். ‘ஸ்பைஸ் (மசாலா) தோட்டம், தேயிலைத் தோட்டம், அருவி, நூறு வருட பழமை வாய்ந்த தேவாலயம் எனக் கண்டு களித்தனர்.
யானைச் சவாரிக்காய் சுதாவை ஏறச் சொல்ல அவளோ பயத்தில் நடுங்க அவளை ஏற்றுவதற்குள் யானைப் பாகனும், அஷோக்கும் ஒரு வழி ஆகி விட்டனர். பெரிய பெரிய ரோலகோஸ்டர் சவாரி கூடச் செய்து விடலாம்.. யானை வேண்டாம் என்று சொன்னால் யார் அவள் பேச்சைக் கேட்டது?
“மேடம் இது லைஃப் டைம் ஓப்பர்சுனிட்டி” என்று எதை எதையோ யானைப்பாகன் கூறி யானை மேலை போடப் பட்டிருந்த மெத்தை மேல் அவளை ஏற்றிவிட, அரை மனதோடே ஏறி அமர்ந்தாள். நல்ல பெரிய சைஸ் யானை. அதன் மேல் ஒரு 5” மெத்தை. அதில் பிடித்துக் கொள்ள சிறிய இரும்பு கம்பி.. அவ்வளவே.. அமர்ந்தவள் காலுக்கும் பிடிமானம் இல்லை. அந்த சின்ன கம்பியைப் பிடித்துக் கொண்டு அமரவே கொஞ்சம் பீதி கிளம்பியது. கால்கள் இரண்டும் இரண்டு மீட்டர் தூரம் அகண்டிருக்க கையில் மட்டுமே பிடிப்பு.
“யானை போய்டப் போகுது.. சீக்கிரம் ஏறுங்க” என்று அஷோக்கைத் துரித படுத்தினாள். யானைப் பாகன் நடக்க யானையும் கூட நடக்க ஆரம்பித்து.
முதலில் “இவ்வளவு தானா? இதுக்கு தான் பயந்தேனா?” என்றவள் யானை கீழ் நோக்கிச் சரிவில் நடக்கவும், “ஆ… கண்ணன் என்னை பிடிங்க.. நான் விழுந்திடப் போரான்.. அச்சோ.. விழுந்தா யானை மெதிச்சு செத்துடுவேன்.. என்னங்க.. என்னை டைட்டா பிடிச்சுக்கோங்க.. உங்களுக்கு நான் உயிரோட வேண்டாமா.. டைட்டா கட்டி பிடிங்க.. விட்டுடாதீங்க..” என்று யானை நிற்கும் வரை அவள் நிறுத்தவே இல்லை. அஷோக்கிற்கு யானை நடந்து கொண்டே இருக்காதா என்ற ஏக்கம்.
யானை நின்றது தான் தாமதம்.. சுதாவால் நிற்க முடியவில்லை. பயத்தில் ஒரே வாந்தி! அஷோக்கிற்குப் பாவமாய் போய்விட, அவள் தலையைத் தாங்கி, முகம் கழுவி விட்டான்.
அடுத்த பத்து நிமிடத்தில், மீண்டும் சுதாவானாள். “மத்தியம் சாப்பிட்டது.. இண்டைஜஷன்” என்று வாந்தியின் காரணத்தைத் தெளிவு படுத்தினாள்.
அஷோக் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஓ.. அப்படியா? நான் கூட பயத்தினாலனு நினைச்சுட்டேன்..” என்று நிறுத்தி கொள்ள, அவளிடமிருந்து அடியையும் வாங்கி கொண்டான். அவளுக்கும் சிரிப்பு தான் வந்தது. நமக்குத்தான் ‘குப்புற விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டாதே’
மாலை கிளம்பி காட்டேஜ் வரும் வழியில் கேட்டாள், “நீங்க சனிக்கிழமை தானே வரதா இருந்துச்சு?”
“இல்ல.. சனிக் கிளம்பி.. ஞாயிறு வரதா இருந்துது”
“அப்போ எப்பிடி நேத்து வந்தீங்க?”
“உன்ன பாக்க தான்..”
“இது என்ன.. கேட்ட கேள்விக்குத் தான் பதில் சொல்லுவீங்காளா? என்ன நடந்துது? எப்படி கரெக்டா அங்க வந்தீங்க?”
“அந்த உருப்படாதவன் கூடவே ஒருத்தன் இருந்து அவன் ப்ளான் எல்லாம் எஃசிக்யூட் பண்ணறான். அவன் என் ஆளாகி ரொம்ப மாசம் ஆச்சு. அப்பிடி தான் தெரியும்.
ஆனா அவனுக்குமே விஷயம் செவ்வாக்கிழமை தான் தெரிஞ்சுது. எனக்குச் சொல்லவும்.. நான் உன்ன கான்டாக்ட் பண்ண ட்ரை பண்ணினேன்.. முடியல. டைம் வேஸ்ட் பண்ணாம வந்துடேன்.”
“ஓ..”
“என்ன ஓ.. எவ்வளவு பெரிய வேலை செஞ்சிருக்கேன் வெறும் ‘ஓ’னு சொல்ற?”
“யாருக்கு செஞ்சீங்க? உங்களுக்கு தானே.. அப்புறம் என்ன?”
அவனைப் பார்த்தவள், “வரும்போதே தாலி கட்ர ப்ளான்ல தான் வந்தீங்களா?”
“இல்ல.. நான் உன்ன இப்படி ‘ப்ரைட்’ மாதரி மணமேடைல பார்ப்பேனு எதிர்பாக்கல.. பார்த்த அப்பரம தாலி கட்டாம இருக்க முடியல?”
காட்டேஜை வந்தடையவும் மணி ஆறரை ஆக, “டின்னர் முடிசூட்டு ரூம் போலாமா? மணி ஆச்சு!”
இம்முறை அவளுக்குக் கோபம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது.
“நீ ரிலாக்ஸ் பண்ணு.. எனக்குக் கொஞ்சம் வேல இருக்கு.. ஓரே ஒரு மணி நேரம் தான்” அறையினுள் வந்தவனின் முதல் சம்பாஷனை இது!
சற்று நேரம் அமர்ந்திருந்தவள் உள்ளே சென்று கண்ணனைத் தான் பார்த்தாள். மிக மும்முரமாய் யாரோடோ பிஸினஸ் பேசிக் கொண்டிருந்தான். அவசர வேலை என்று தெரிந்தது. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு பிடிவாதம். இந்த நேரம் கண்ணன் அவளுக்கு வேண்டும் போலிருக்க, ‘நானா.. வேலையா’ என்னும் வண்ணம் அவன் அருகில் போய் நின்றுக் கொண்டாள்.
பேசிக்கொண்டே புருவம் உயர்த்தி ‘என்ன?’ என்றவனிடம் ஒன்றும் சொல்லாமல் அவனையே பார்க்க.. ‘பிளீஸ்.. ரொம்ப இம்பார்ட்டேன்ட்’ என்று வாயசைத்தான். 
முகத்தைத் தொங்கவிட்டுக் கொண்டு அவள் போக.. அவளை அப்படி பார்த்தபின் அவன் எப்படி வேலையில் கவனம் செலுத்த? வேலையை பாதியில் விட்டுவிட்டு அவள் பின்னால் ஓடினான்.
“லட்டு..” அவள் தோள் தொட்டுத் திருப்ப.. அவளுக்குள் அப்படி ஒரு ஆனந்தம்.. முகம் காட்டியது. 
“என்ன டா போர் அடிக்குதா?”  
“இல்ல” என்றாள்.
“அப்போ என்ன?”
“கால்ல நெயில் பாளிஷ் போடணும்.. போட்டு விடுரீங்களா?” என்றாள்.
அவனுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. வீம்பிற்குத் தான் கேட்கிறாள் என்று தெரியும். அவளைச் சின்ன விஷயத்திற்குக் கூட நோகடிக்க விரும்பவில்லை. இது அவளோடு கழிக்க வேண்டிய நேரம் இப்படி வேலையைக் கட்டிக் கொண்டு அழ அவனுக்கு மட்டும் வேண்டுதலா என்ன?
முகத்தில் புன்னகை விரிய, “என்ன கலர்? எடு.. போட்டு விடுறேன்.. ஆனா இது தான் என் ஃபர்ஸ்ட் டைம்.. கேவலமா போட்டேனு திட்ட கூடாது”
காலை மடியில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு விரலாய் நேர்த்தியாய் சாயத்தைப் பூசிவிட்டான். கண்கோட்டாமல் அவனையே பார்த்து அமர்ந்திருந்தாள்.
அவன் கண்ணசைவில் அவனுக்கு ஊழியம் செய்ய ஒரு கூட்டமிருக்க.. அவன் வேலையெல்லாம் தூர எறிந்துவிட்டு அவள் கால் நகத்திற்கு நிறம் பூசிக்கொண்டிருக்கிறான். கர்ம சிரத்தையாக!
“நல்லா போட்டிருக்கிறேனா?” கேட்டவனிடம்
“இல்ல.. ரொம்ப சுமார் தான்.. பட் ஓக்கே.. கொஞ்ச ப்ராக்டீஸ் குடுத்தா சரி ஆகிடும்.. ஒழுங்கா காகத்துக்கோங்க.. கொஞ்ச நாளுக்கப்பரம் என்னால குனிஞ்சு போட முடியாது.” நெயில் பாலிஷை அவனிடமிருந்து வாங்கிவிட்டு, “நீங்கப் போங்க.. நான் டி.வி. பாக்க போறேன்” என்று ஹாளை நோக்கிச் சென்றாள்.

Advertisement