சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 36
“உடனே வா” என்று பாட்டி அழைக்க மறுநாள் காலை விமானத்தில் வீடு வந்த சுதாவை அன்பாய் வரவேற்றான் அவள் அத்தை மகன்.
“ஹாய் சுதா” என்றான் அழகாய் புன்னகைத்துக் கொண்டே.
அதிர்ச்சி தான் அவனைப் பார்த்தது. ‘அச்சோ…இங்கேயே வந்துவிட்டானா’ என்று தான் பார்த்தாள் தீபக்கை. ‘இது என்ன இவன் என்னை நிம்மதியாய் இருக்கவே விட மாட்டானா?’ என்ற எண்ணம் எழுந்தாலும் பயம் எல்லாம் வரவில்லை. எப்படியும் அவனை எதிர்கொண்டு தானே ஆகவேண்டும்.. என்றோ ஒரு நாள் நடக்க வேண்டியது இன்றே நடந்துவிட்டதாக எடுத்துக் கொண்டாள்.
“வா உள்ள.. அங்கேயே நின்னுட்ட.. எப்படி இருக்க?” என்றான் அத்தை மகனாய்.
அவளிடம் தான் கோபத்துக்குப் பஞ்சம் இருப்பதில்லையே.. “இங்க என்ன பண்ற?” என்றாள் அடக்கபடாத எரிச்சலோடே.
“என்ன சுதா பேச்சிது? வீட்டுக்கு வந்த பிள்ளையை வாங்கனு கூப்பிட மாட்டியா? உன் மரியாதை எங்க போச்சு?” அவனுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த பாட்டி அவள் காதில் சொல்வதாய் நினைத்து ஊருக்கே கேட்கும் படியாய் கூற அவளுக்கு பற்றி கொண்டு தான் வந்தது. 
‘என்னை தவிற யாரை பார்த்தாலும் பாட்டி பல்லை காட்டும்!’, அவளால் அவனை முறைக்க மட்டும் தான் முடிந்தது.
“என்ன பாட்டி நீங்க? நான் என்ன வேற வீட்டு ஆளா? வானு தனியா கூப்பிட்டு உபசரிக்க?” குரு நகையோடு தீபக் கேட்க,  பாட்டிக்கு உச்சி குளிர்ந்து விட்டது. அவன் வசிகர பார்வையும், சிரிப்பும், அவன் உயரமும்.. தோரணையும்.. யாருக்குத் தான் அவனைப் பிடிக்காது. பார்க்கப் பார்க்க திகட்டாத திடகாத்திரமான ஆணழகன். ‘இவனைக் கட்டி கொள்ள இந்த சுதா பெண்ணுக்கு என்ன கேடு? இவன் கிட்டப் போய் கோவிச்சுட்டு வந்திருக்கு?!’ அவனைப் பார்த்த நேரத்திலிருந்தே பாட்டியின் மிகப் பெரிய சந்தேகம் இது. இவன் தான் சுதாவின் கணவன் என்று முடிவே எடுத்துவிட்டார். விட்டால் இன்றே முகூர்த்தம் பார்த்து மணமேடையில் ஏற்றிவிடுவார் போலும்.
“பாரு பேசி பேசி.. விஷயத்தை இன்னும் சொல்லலை.. சுதா பெட்டியில பத்து நாளுக்குத் துணி எடுத்து வச்சுக்கோ.. தம்பி உன்னைத் தான் கூட்டிட்டு போக வந்திருக்கு!” அசராமல் பாட்டி அவள் தலையில் கல்லை எடுத்துப் போட்டார்.
‘தொல்லை’ பாட்டி உருவில் அல்லது வேறு உருவில் வருமென்று பார்த்தால் இரண்டு பேர் உருவத்தில் வந்து நிற்கிறது!!
‘கண்ணக்கட்டுது’ என்ற நிலை தான் சுதாவிற்கு.
“நான் யாரோடையும் எங்கேயும் போக முடியாது பாட்டி!” விரு விருவென உள்ளே செல்ல
பின்னோடு சென்றவன், “சுதா.. அப்பாக்கு ரொம்ப முடியல.. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்கோம். கண்விழிச்சதும் உன்ன தான் கேப்பார்.. வா சுதா..” அவன் பேச பேச, அவனைச் சந்தேகமாய் பார்த்துக் கொண்டே, “தீபக்.. என் கிட்ட விளையாடாத!” எனவும்
“சத்தியமா சுதா.. அப்பாக்கு உன் நினைப்பு தான். உன்னைத் தனியா விட்டுடேனேனு.. மாமாக்கு கொடுத்த வாக்க காப்பாத்த முடியலனு அம்மாட்ட சொல்லிட்டே இருந்தாங்களாம். கையோட அம்மா கூட்டிட்டு வர சொன்னாங்க.. இங்க பார் ரெண்டு பேருக்கும் ஏர் டிக்கெட்.. இந்தா அம்மாட்ட பேசு” ஃபோன் போட்டுக் கொடுத்தான்.
அவள் வாழ்வில் நடந்து கொண்டிருந்த ரகளையில் அத்தை மாமாவோடு பேசுவதை அடியோடு மறந்து போயிருந்தாள்.
பேசியவள், “நீ எதுக்கு வந்த… எவ்வளவு டைம் வேஸ்ட்? ஒரு கால் போட்டு சொன்னா என்ன? நேரா அங்க வந்திருப்பேனே? அத்தையை எதுக்கு தனியா விட்ட?”
“அம்மா தான் நீ தனியா வரவேண்டாம்னு சொன்னாங்க! கூட சித்தப்பா சித்தி எல்லாரும் இருக்காங்க. ஈவ்னிங் ஃப்ளைட்.. நீ கிளம்பி வா.. போலாம்!”
எதையும் நினைக்கவில்லை. சிந்தனையில் மாமா அத்தை மட்டுமே.
அது வரை சிந்தையில் இருந்தவள், விமானத்தில் ஏறியதும் முதல் கேள்வியே “என்னாச்சு?” என்பது தான்.
“ஹார்ட் அட்டக். இந்த மாசத்தில ஏற்கனவே ஒரு தரம் மைல்டு வலி வந்திருக்கு.. முதல் தரம் வலி வந்தது எங்களுக்கு அப்பா சொல்லவே இல்ல!”
“எப்பிடி சொல்லுவார்.. நீ தான் அவரோட ப்ராப்லமே.. ஏன்.. ஏன் நீ இப்பிடி இருக்க? ச்சா.. நல்லா தானே இருந்த, இப்படிக் கண்ட பொறுக்கிங்க கூட சேர்ந்து நீயும் அவனுங்க மாதரி ஆகிட்ட! உன் ஃப்ரெண்டுனு ஒரு தறுதலை இருக்கே.. வெறும் பொறுக்கி மட்டும் இல்ல கடைஞ்செடுத்த கேடு கெட்ட பொறுக்கி, கொலைகாரன்… அவன் கூட எல்லாம்.. ச்ச.. எப்படி தான் உன்னால் இப்படிப் பட்ட தறுதலைகளோட ஃப்ரெண்ட்ஷிப் வச்சிருக்க முடியுதோ? பெத்தவங்கள பத்தி கொஞ்சமாவது யோசிச்சியா? உன் லட்சணம் தெரியவே தான் மாமாக்கு இப்படி.. நல்லா நினைவுல வச்சுக்கோ.. உன் விஷயம் உன் அம்மாக்கு தெரியும் போது, உன் நிலையும் என் மாதரி தான். அம்மா அப்பா இல்லாம வாழர வாழ்க்கை ரொம்ப கஷ்ட்டம் தீபக்.. இருக்கதையும் கெடுத்துகாத. எதுவும் கெட்டு போகல.. திருந்தர வழிய பாரு!” 
அவள் பொரிந்து தள்ள அவன் கோபிக்கவெல்லாம் இல்லை. புன்னகை பூக்கப் பார்த்திருந்தான்.
அவனை முறைத்துக்கொண்டே, “எதுக்கு சிரிக்குர?” என்று எரிந்து விழுந்தாள்.
இன்னுமே அவனுக்குப் புன்னகை விரிந்தது, “நீ இருக்கியே… என்ன அடிச்சாலும் தாங்குவ போல.. இந்த வாய்க்குத் தான்.. ஒரு தரம் என் கிட்ட வாங்கின.. இன்னும் அடங்கரியா பாரு..”
அவள் முகம் இறுகிப் போக, “ஹேய்.. ஹேய்.. சாரி.. பழச விடு.. நான் இனி அத பத்தி பேசல..” என்று நல்ல பிள்ளையாய் வாய் மூடிக்கொண்டான்.
மீண்டும் புலி பதுங்குகிறாதா என்று தான் பார்த்தாள். அதற்கு மேல் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. காதில் ஹேட் ஃபோன் மாட்டிக்கொண்டு கண் மூடிக்கொண்டாள்.
அவர்கள் வந்துசேரும் முன் அறுவை சிகிச்சை முடிந்திருந்தது. ஆனால் அவர் கண் திறக்கவில்லை.
இரண்டு நாட்கள் மாமாவோடே இருந்தாள். ‘மாமா.. கண்ண திறங்க மாமா.. ப்ளீஸ்..ப்ளீஸ்’ இது தான் அவளின் தாரக மந்திரமாய் இருந்தது.  யார் சொல்லியும் மருத்துவமனையை விட்டு நகரவில்லை. பிரிவின் வலியை உணர்ந்தவள், சதீஷிற்கு ஏதேனும் ஆகி விட்டால் என்ற பயமே அவளைக் கொன்றது. கண்ணன் இருந்தால் அறுதலாய் இருக்குமே என்ற எண்ணம் அவளைக் கேட்காமலே வந்து போனது.
அத்தை மடியே சரணாகதி எனக் காத்துக் கிடந்தாள். சதீஷ் கண்விழித்து அவளைப் பார்த்த பின்னரே வீட்டிற்குச் சென்றாள். அங்கு இருப்புக் கொள்ளாமல், மீண்டும் சென்று மாமாவோடே அமர்ந்து கொண்டாள்.
‘என்னைத் தாங்கிய மாமாவை விட்டுவிட்டேனோ’ என்ற எண்ணம். அவளுக்காக சொந்த மகனையே வெளியனுப்பியவர் ஆகிற்றே.
“மாமா படுக்கையில படுத்தா தான் என்னைப் பாக்க வருவியாடா..” அவர் கேட்டதும் குற்ற உணர்வு மேலோங்கத் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தது. 
அவள் முகம் விழுந்து விட, “அழாத சுதாமா.. உன்ன பார்த்ததே போதும்.. உன்ன நல்லபடியா பாத்துக்க தான் என்னால முடியல.. நீ தான் மாமாவ மன்னிக்கணும்”
யார் யாரை சமாதானப் படுத்துவது. பெற்றால் தான் மகளா? பெறவில்லை என்றாலும் சுதா தான் அவர் மகள். தாய்மைக்குப் பெற்றவளாகவோ பெண்ணாகவோ இருக்கவேண்டிய அவசியம் இல்லை போலும். 
வீட்டிற்கு வரும் வரை சதீஷ் – நீலாவதியை தவிர அவள் சிந்தனையில் வேறு இருக்கவில்லை, மாமா தன்னை விட்டுச் சென்றுவிடுவாரோ என்ற பயம் ஒருபக்கம்… மாமாவிற்கு ஏதாவது ஆகிப்போனால், அத்தை என்ன ஆவர் என்ற பயம் மற்றொரு பக்கம். ஒரு வழியாய் சதீஷின் உடல் நலம் தேறி வரச் சுதா ஆசுவாச மூச்சுவிட்டாள்.
இப்பொழுதும் அவள் மனம் கண்ணனைத் தான் தேடியது. அவன் மார்பில் சாய்ந்து இளைப்பாற முடியாத என்று மனம் ஏங்கியது. கைப்பேசியும் கையில் இல்லை.. பாட்டி வீட்டில் மறந்து விட்டிருந்தாள். அவனை எவ்வளவு தள்ளி நிருத்த நினைத்தாலும் முயற்சி தோல்வியே. அவன் வேண்டும் என்று மனம் பிடிவாதம் பிடித்தது.
சதீஷ் – நீலாவதி அறையின் அருகிலிருந்த அறையில் இரவை கழித்தாள். பகல் முழுவதும் மாமாவே கதி என்றும் அவர் தூங்கும் வேளையில் அத்தையிடம் நேரத்தைக் கழித்தாள்.
ஒரு நாளும் தான் தனியே இல்லாதபடி பார்த்துக்கொண்டாள். தீபக் இவளை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. ஏதோ பெரிய குழப்பத்தில் இருப்பது போன்றே யோசனை தாங்கிய முகம்! பழைய தீபக் போலப் பார்க்கும் பொழுது அன்பான புன்முறுவல்.
அவளிடம் பதிலுக்குப் புன்முறுவல் எதிர்பார்க்கவில்லை. அவன் உண்டு அவன் வேலை உண்டு என்று இருந்தான். பயம் இல்லை ஆனால் மிகவும் கவனமாயிருந்தாள்.
மாமாவிடம் நல்ல முன்னேற்றம். மனதில் பயம் இறங்க.. வீட்டில் அவள் பேச்சும் சிரிப்பும் தான். வீடு வீடாகக் காட்சியளித்தது. அத்தையைச் சுற்றிச் சுற்றி வந்தாள், மாமா விழித்திருந்த நேரமெல்லாம் விட்டுப் போன கதை பேசினாள். வரண்டாவின் மாமாவோடு அவள் கண்ணை உருட்டி உருட்டிப் பேச, தீபக்கின் பார்வை சுதா மேல் விழ ஆரம்பித்தது. அதில் வெறி இல்லை ஆனால் கூர்மை இருந்தது. 
அழகாய் இருந்தாள். அன்பாய் இருந்தாள். அவள் இருக்குமிடத்தில் சிரிப்புக்குப் பஞ்சமில்லை. அவளோடு இருந்தால் அம்மா அப்பா முகத்திலும் ஒரு அமைதி தெரிந்தது.
அவளைக் கவனிக்கவும் ஒன்று நன்றாய் புரிந்தது, அவள் இந்த வீட்டுப் பெண்.. இங்கு நன்றாய் ஒன்றினாள். பாட்டி வீட்டில் பார்த்தானே அங்கு ஒரு வித இறுக்கம் அவர்கள் இருவருக்கும்.. எதற்கும் எரிந்து விழுந்தாள்.  பார்வையில் எரித்துவிடும் கோபம். முகத்திலும் ஒரு அமைதியின்மை.
ஆனால் இங்கு.. முகத்தில் ஒரு அமைதி. பேச்சில் இனிமை.  வேலையாள் முதற்கொண்டு அனைவரோடும் சகஜமாய் அன்பாய் பழகினாள்.  மொத்தத்தில் இங்கு அவள் அவளாயிருந்தாள். அவள் ஓட்டம் கலந்த நடை துள்ளும் மான் குட்டி போல் தோன்றியது. முதன் முதலாய் அவள் மேல் அவன் எண்ணம் மாற ஆரம்பித்தது. ‘என் மாமன் மகள்’ உள்ளுக்குள் உச்சரித்துப் பார்த்துக் கொண்டான்.
சுதா அந்த பெரிய வீட்டில் அவன் இருந்த பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. அவனைப் பார்க்கும் தருணம் மட்டும் சுதாவிடம் மௌனம். ‘அவள் இன்பத்தோடு சேர்த்து என் பெற்றவர்களின் இன்பத்தையும் என் சுயநலத்திற்காகச் சூறையாடி விட்டேனோ’ என்று எண்ண ஆரம்பித்தான்.
அவன் எண்ணம் முற்றிலும் உண்மை. சுதா உண்மையில் அவள் சுயத்தைப் பாட்டி வீட்டில் தொலைத்து கொண்டிருந்தாள். அன்பான அமைதியான சூழலில் வாழ்ந்தவளை எடுத்து கொஞ்சம் கூட பொருந்தாத இடத்தில் இடம்பெயர்க்க, பாட்டியின் குணம் அவளை வதைத்தது. பாட்டி அவர் மன நோயை அவளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். கொஞ்சம் கொஞ்சமாய் அவளும் ஒரு வித ‘டிப்ரெஷனில்’(depression) விழுந்து கொண்டிருந்தாள்.
தனிமையை உணரவிடாத கார்த்தி அவளோடு இல்லை. ஆஃபீஸ் போகப் பிடிக்கவில்லை. வீட்டில் இருக்கமுடியவில்லை. அவளின் ஒரே வடிகால் கண்ணன்.. அவனும் அவளுக்கு இருக்கவில்லை. தனிமை போக்கியவன்.. தனிமையைக் கொடுத்தான். அவனோடு பேசுவதே அரிதாக.. அவனும் தன்னை விட்டுச் செல்ல போகிறான் என்றதும் ஒரு பயம்! அழுத்திக் கொண்டிருந்த வருத்தம், பயம், வேதனை எரிமலையாய், கோபமாய் அவனிடமே வெடித்தது. அதுவும் ஒருவகையில் நல்லதே.. இதயம் வெடித்து சாகாமலிருக்க…
இருவருமே சூழ்நிலை கைதிகள். இருவருக்கும் ஒருவரை ஒருவர் வேண்டும்.. ஆனால் தள்ளி நிற்க வேண்டிய நிலை!
மாமா வீட்டில் அவள் தான் இளவரசி ஆகிற்றே.. குறைகள் நீங்க.. அவள் தனிமை ஏக்கம் போக.. அவள் இயல்புக்கு மீண்டும் வந்துவிட்டாள். முகத்தில் புன்னகை மாறவில்லை. நடையில் துள்ளல். 
அவளை இங்கேயே வைத்துக் கொண்டால் என்ன என்ற எண்ணம் அதி வேகமாய் தீபக் உள்ளுக்குள் தோன்ற ஆரம்பித்தது. காய்ந்த சருகில் பற்றிய நெருப்பு போல்! எப்படியும் ஒரு முறை அவனுக்கு நிச்சயிக்கப் பட்டவள் தானே..
தீபக்கிற்கு இப்படியாக ஒரு குழப்பம் எழ, நிம்மதியான சூழலில் சுதாவிற்கோ அவள் குழப்பமெல்லாம் நீங்கி ஒரு தெளிவு ஏற்பட்டது. ‘யாருமில்லாது குடும்பம் வேண்டி நீரில் மூழ்கையில் அதிலிருந்து வெளிவரக் கண்ணனை பிடித்துக்கொண்டேனா.. துணை வேண்டி.. ஒரு பாதுகாப்புக்காக அவன் தேவைபட்டானா… அவனிடம் காதல் இல்லையா? வெறும் ஆணிடம் ஏற்படும் ஈர்ப்பும் மட்டும் தானா.. அதனால் தான் அவனிடம் அட்டை போல் ஒட்டிக்கொண்டு அவனையும் படுத்தி தானும் நிம்மதி இழந்தேனா..’ இன்னும் என்னென்ன சந்தேகம் இருந்ததோ.. எல்லாம் தெளிவாகியது.
அவளுக்கு குடும்பம் இருக்கத் தான் செய்கிறது. தாய் தகப்பன் இருக்கத் தான் செய்கிறார்கள். தீபக்கிற்குத் திருமணம் முடிந்தால் அவளுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச நெருடலும் போய்விடும்.. 
‘கண்ணன் அவள் தேவைக்கான பிடிப்பு இல்லை. அவள் வாழ்விற்கான அர்த்தம். அவள் உயிர்நாடி. அவள் சுவாசக் காற்று! அவன் மேல் இருப்பது ஈர்ப்பல்ல.. காதல் தான்! சண்டை இடும் வரை அவன் மீது இருந்த உணர்வு அனைத்துமே உயிரோடு கலந்த உணர்வு தான்..’ சித்தம் தெளிய அவனை பார்க்க மாட்டேனா? என்ற ஏக்கம்..
24/7 கண்ணன் நினைவோடே வீட்டைச் சுற்றி வந்தாள். ஒன்று மட்டும் திண்ணம்.. கண்ணன் இல்லாமல் தான் இல்லை என்று. சண்டையோ சமாதானமோ அவனோடு தான் தன் வாழ்க்கை என்பதில் சந்தேகமே இல்லை,
இந்த ஒரு மாத வன வாழ்வு அவளை அதிகமாய் யோசிக்க வைத்தது. அவனை இந்த ஜென்மத்தில் அவள் இதயத்திலிருந்து பிரிக்க முடியாது. பிரிவும், மௌனமும் அதை அவளுக்கு உணர்த்தி இருக்க அவன் வரும் நாளை ஆவலாய் எதிர்நோக்க ஆரம்பித்தாள். ஆனால் அவள் பேசிய பேச்சு…
 
‘’போனால் போ’ என்று போனவன் என்ன ஆனான்?’ 
“போ போ என் இதயம் தரையில் விழுந்து சிதறிப் போகட்டும்
போ போ என் நிழலும் பிரிந்து என்னைத் தனிமையாக்கட்டும்
கோவம் உன் கோவம் என் நெஞ்சைக் கொன்று போக
கண்கள் என் கண்கள் கண்ணீரில் நனையுதே
போதும் இப்போதும் எப்போதும் உன் நினைவுகள்
பாவம் என் உள்ளம், சொல்லாமல் கரையுதே ..”
யூ-ட்யூபில்(youtube) இந்த பாடலை தான் ஓயாமல் ஒலிக்க விட்டு கேட்டுக் கொண்டிருந்தான் அஷோக். இன்னுமே அவள் கூறிய வார்த்தையிலிருந்து அவன் வேளி வரவில்லை.