Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 67_2 
வீலென்ற சத்தம் சுதாவை நிகழ்விற்குக் கொண்டு வர, மீண்டும் அவள் பார்வை சத்தம் வந்த இரண்டாம் தளத்திற்குச் சென்றது. ஒரு குட்டி பையன் உருண்டு புரண்டு ரகளை செய்து கொண்டிருந்தான்.
அந்த சிறுப்பெண் மீண்டும் விளையாட உள் சென்றிருப்பாள் போலும்.. ஆளைக் காணவில்லை. அந்த பழையவனுடன் ஒரு புதியவனோடு பேசிக்கொண்டிருந்தான். புதியவன் முகம் தெரியவில்லை. முதுகைப் பார்த்தவள் பார்வை அவனை அளந்தது.
நெடியவன். உடலை இறுக்கிப் பிடித்த கருப்பு டி-ஷர்ட் அணிந்திருந்தான். முதுகிலிருந்து இடுப்பு நல்ல நேர்த்தியான v வடிவம். புடைத்து நின்ற கழுத்து, காலரில்லா டி-ஷர்டில் பார்ப்பவரை இம்சித்தது. இறுகிய தோள்பட்டை தசை, அவன் கையசைவில் அதன் பலத்தை பறைசாற்றியது. முறுக்கேறிய புஜம் டி-ஷர்ட் கைக்குள் அடங்காமல் புடைத்துக் கொண்டு வெளி வந்தது. அவ்வப்போது அவன் கை மடித்து தலை கோத அவன் அர்ம்ஸில் சிறு குன்று போல் எழுந்து நின்று எதிரிலிருந்தவன் பொறாமைக்கு ஆளானது. நீளமான கால்கள். முட்டிவரை ஷாட்ட்ஸ் அணிந்திருந்தான். கை கொள்ளா தலை முடி அவ்வப்போது அவன் விரலோடு கொஞ்சியது. மொத்ததில் பல பெண்கள் தூக்கத்தை கெடுக்கும் ஆண் அழகன்!
சுதாவிற்கு ஒரு வித ஆர்வம் வந்து ஒட்டிக்கொண்டது. அவன் உடல் கட்டும், உயரமும் அவளை ஈர்த்தது. கண்ணை எடுக்கவில்லை. திரும்பினால் முகம் பார்க்கும் ஆர்வம். இன்று முழுவதும் கார்த்திக்கிடம் அவனைப் பற்றிக் கூறுவாள்.
பேசிக்கொண்டே அவன் தலை திருப்பவும் அவன் ஒரு பக்க முகம் தெரிந்து. தாடி மீசையோடு இருந்தான். மீதி இருந்த முகத்தைக் கருப்பு கண்ணாடி மறைத்திருந்தது. நெற்றியிலும் முடி கொத்தாய் புரண்டது.
‘பாக்க சரியா இருக்கான்.. மாடல் மாதரி.. நம்ம ஊர் ஆளு… டேய் முகம்னு ஒன்னு எங்க டா.. பொதருக்குள்ள மறச்சு வச்சிருக்க?’ 
யாரோ ஒரு பெண் அவனைக் கடந்து செல்ல.. அவள் லேசாக அவனை இடித்துவிட… ஹாப்பா.. அவனுக்கு வந்த கோபத்தைக் கண்டு இவள் கண் விரிந்தது. அவளை அறைய கை ஓங்கிவிட்டான். அருகிலிருந்த தோழன் அவனை பிடித்து நிறுத்தினான். அவன் அடித்தால் அவளால் எழுந்திருக்க முடியுமா? முரடன்! ‘வாழ்க்கையில இந்த ஆள் கிட்ட மட்டும் போயிடவே கூடாது டா சாமி! அப்படியே போனாலும் அவன் மேல விரல் கூட பட்டிட கூடாவே கூடாது’
அவனை பார்த்துக்கொண்டிருக்கவே அவன் உருவம் அவளுள் இறங்கி, அவளை அறியாமலே அவளை எங்கோ அழைத்துச் சென்றது.
அவனும் இப்படி தானே இருப்பான்… என்ன இவன் அவனை விட இன்னும் அதிக நேரம் ஜிம்மில் இருப்பான் போலும்!
ஆனால் அதே வனப்பு! மயக்கும் தோரணை. நிற்பது.. உடல் மொழி கூட அவனைப் போலவே தான்!
இவனுக்கு மட்டுமா கோபம்… அவனுக்கும் கோபம் வருமே… ஆனால் என்ன அருகில் இருப்பதைத் தான் உடைப்பான்.. இவன் மூக்கையே உடைத்துவிடுவான் போலும்!
‘கண்ணன்’ இன்று ஏனோ மீண்டும் மீண்டும் அவன் நினைவே.
‘பனை மரம்’ புன்னகைத்துக் கொண்டாள். ‘எப்படி இருக்கிறாரோ?’ கூகிளில் தட்டினால் அவன் சரித்திரமே பார்க்கலாம். ஆனால் திருமண மேடையில் அவனைப் பார்த்ததோடு சரி. பார்த்துப் பார்த்து ஏங்க முடியாது என்று அன்று விட்டுவிட்டாள். இன்று வரை அவனைப் பற்றிய ஒரு சிறு விடயம் கூட தெரியாது. தெரிந்துகொள்ள எத்தனிக்கவில்லை. இன்று.. அதற்கான தகுதி தனகில்லை என்று விட்டுவிட்டாள்.
சுய நினைவுக்கு வந்து அங்குப் பார்க்க அவனில்லை. ‘போய்டானா?’ நேரம் பார்த்தவள் காதில் விழுந்தது கீதமாய்.. “அய்ட்டை… டூக்கு” மருமகனின் சத்தம்.
ஒரு மாத பாசம் முத்தமாய் அவள் முகத்தை நனைத்தது. அத்தையும் மருமகனும் அதிக க்ளோஸ்… கட்டி அணைத்து உச்சி முகர்ந்து… நீண்ட முத்தம் வைத்தாள் அவன் தலையில். அதன் பின்..”போடும்” என்று அவன் விலகும் வரை கொஞ்சல் படலம் தொடர்ந்தது.
அவள் பாஸ்டன் வரும் வரை அவள் தான் அவன் உலகம்… அவளுக்கும் அப்படி தான். இன்று அந்த உலகத்தில் இன்னும் ஒருவன் இருக்கின்றான்.
இரண்டாம் தளம் கூட்டிச் சென்றாள் அருளை… அவன் விளையாட, அண்ணன் தோளில் சாய்ந்து அண்ணியோடு கதை அளந்தாள். மனம் விட்டுச் சிரித்தாள்.
அன்று முதல் இன்று வரை சுதா வாழ்வில் தனிமை இல்லை.. வாழக் கற்றுக்கொண்டாள். இல்லை, வாழ வைத்தனர்!
நிறைய விஷயம் பேசினார்கள். அடுத்த மாதம் டேனி குடும்பம் சென்னைக்குக் குடி பெயரப் போவதைப் பற்றி… கலிபோர்னியா வீட்டை விற்று இதில் கிடைத்த பணத்தை முதலீடாகக் கொண்டு ஆரம்பித்த மென்பொருள் நிறுவனத்தை மூன்று மாதத்தில் சென்னையில் திறப்பது பற்றி.., அங்கு அவர்கள் குடும்பம் வசிக்க கட்டிய பெரிய வீட்டைப் பற்றி… கம்பனி தொடக்க விழாவும், வீட்டின் கிரக பிரவேசமும் ஒரே வாரத்தில் நடத்துவது பற்றி… இன்னும் என்னன்னமோ பேசினார்கள்.
வீட்டை நோக்கி கார் பயணிக்கவும், காரை செலுத்திக்கொண்டே சுதா அருகிலிருந்த அண்ணியிடம் கேட்டாள்,
“அண்ணி.. ச்செரி ப்ளாஸம் பாக்க போலாமா?” என
ஏப்ரம் மாதம்.. அங்கு வசந்த காலம்… ஊரே மலர்களால் நிறைந்திருக்கும் மாதம்!
“எங்க? டி.சி-க்கா?”
“இல்ல அண்ணி… இங்க தான்.. போகலாமே…?”
“குளுருதே குட்டிமா?”
“ரொம்ப நேரம் வேண்டாம்.. ரெண்டே மணி நேரம்… நீங்க கிளம்ப சொன்னதும் கிளம்பிடலாம்”
வீட்டிற்கு சென்று உணவு முடித்து ஒருவழியாகக் கிளம்பி பூந்தோட்டத்தை மத்தியம் அடைந்தனர்.
சுதாவின் புது தோழிகளும் வந்திருக்கப் பெண்கள், ஆண்கள், குட்டி வாண்டுகள் என்று ஒரு கூட்டமே அங்கிருந்தது.  
“லிண்டா.. இந்தா இவனைப் பிடி… எப்போப் பார் அருளை கடிக்கரதே இது வேலையா போச்சு…” ஜான்சி ஒரு குட்டி வாண்டை அங்கிருந்த லிண்டா என்றவளிடம் கொடுக்க… அவன் ஜான்சியைப் பார்த்து குறுகுறுவென விழிக்க…
“போடா வாலு” என்று அந்த ஒன்பது மாத பொடியனை முத்தமிட்டாள்.
“அய்ட்ட.. ஆர் யூ கம்மிங் ஆர் வாட்..” அருள் சுதா கையை பிடித்துக் குதித்துக் கொண்டே இழுக்க..
“அண்ணி.. வாங்க.. அவர் எங்க?” ஜான்சியை சுதா கூப்பிட..
“யாரு? அண்ணாவா? உன் அண்ணாவோட அந்த பக்கம் யாரையோ பாக்க போயிருக்காங்க!” ஜான்சி சுதாவிற்கு பதில் கொடுக்க..
ஆளுக்காள் பேச இடமே நாயகரா நீர் வீழ்ச்சி சத்தத்தில் நிறைந்தது. மணி துளிகள் நிமிடமாக கரைந்தது.
இலையில்லா மரங்கள் இடத்தை நிரப்பியிருக்க… மரத்தை நிரப்பியிருந்தது இளஞ்சிவப்பு வண்ண மலர்களும், வெள்ளை மலர்களும். அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஒரு இதயம் அங்கிருந்தது.
சுதா பிள்ளைகளை விரட்டி பிடித்து ஓடிக்கொண்டிருந்தாள். ஓட்டமும் ஆட்டமுமாகச் சிரிப்பு சத்தத்திற்கு பஞ்சமிருக்கவில்லை.
“அருள்.. டேய் பசங்களா… பார்த்து ஒடுங்க… தரை சரி இல்ல தடுக்கி விழுந்திடுவீங்க!” ஜான்சியின் குரல் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தவில்லை. சுதாவையும் தான்!
ஏப்ரல் மாதம். இளம் குளிர்… சுற்றி பலவண்ண மலர்கள்… தலையைத் தூக்கினால் கண்ணை நிறைத்தது இளம் சிகப்பும், வெள்ளை மலர்களும். இடையிடையே கொஞ்சமாய் தெரிந்த நீல வானம், பார்த்து ஆசை தீராது. இந்த அழகை அதிகப்படுத்திய பிள்ளைகளின் சிரித்த முகங்கள்.
மயில் (ஸட்ஜமம் ஸ), காளை (ரிஷபம் ரி), ஆடு (காந்தாரம் க), கொக்கு (மத்தியமம் ம), குயில் (பஞ்சமம் ப), குதிரை (தைவதம் த), யானை(நிஷாதம் நி).. இந்த ஏழு சப்த ஸ்வரங்களுக்குப் பின் எட்டாவது ஸ்வரமாய் சுதாவின் சிரிப்பொலி!
இது எதுவுமே அந்த மரத்தடியில் அமர்ந்திருந்த ‘உடலை இறுக்கிய கருப்பு டி-ஷர்ட் காரனை’ அசைக்கவில்லை. யாரவன்… காலையில் மாலில் பார்த்தவனா? அவனே தான்! இதற்கு முன்..? ம்ம்ம்… அவனே தான்!!
அவன் காதில் ஹெட் ஃபோன் இசைக்க… கருப்பு கண்ணாடிக்குள் கண்கள் மூடியிருக்க… அவனுக்கு அந்த அழகிய காட்சி தெரியவுமில்லை… அருகே ஒலித்த இன்னிசை கேட்கவுமில்லை. 
“வந்து நேரமாச்சு கிளம்பலாம்..” ஜான்சி குரல் கொடுத்தாள். அவர்கள் கூட்டம் மூட்டையை கட்டிக்கொண்டு கிளம்பிக்கொண்டிருக்க.. வாண்டுகளை ஜான்சி கிளப்பிக் கொண்டிருந்தாள்.
முதுகும் தலையும் மரத்தில் சாய்ந்திருக்க… வாய் சவ்வு மிட்டாய் சவைக்க.. மடிந்திருந்த இடது முழங்காலில் இடது கை தொங்க.. வலது கை நீண்டிருந்த வலது தொடையில் கிடந்தது. அவனிடம் வேறு அசைவில்லை.
கண்ணை திற… சுற்றத்தைப் பார்.. அவனை யார் உலுக்குவது? அந்த புதருக்குள் மகமும் தெரியவில்லை. தெரிந்தாலாவது அவன் மனவோட்டத்தை அறியலாம், அவன் மனம் முழுவதும் அவன் கேட்டுக்கொண்டிருக்கும் பாடலின் வரிகளில் லயித்திருக்க… அவனுக்கு உலகம் தெரியவில்லை.
“எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ
கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள்
எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே
மேயல் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே
உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே
அழகிய திருமுகம் ஒருதரம் பார்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன்
நுனி விரல் கொண்டு ஒருமுறை தீண்ட நூறு முறை பிறந்திருப்பேன்….”
மனம் உருக கேட்டுக் கொண்டிருக்கின்றானோ? அப்படி தான் தோன்றுகிறது.
சில்லென்ற காற்று அவன் மேனியை வருடிச் செல்ல… அவன் தலை மேல் பூக்கள் உதிர.. அவன் மடியில்.. அதிலிருந்த அவன் கையில், ஒரே பார்வையில்..  ஒரே வார்த்தையில்..  ஒரே தொடுதலில்.. அவன் உயிரை உறைய வைக்கும்  பூ பந்து ஒன்று தொப்பென்று விழுந்தது.
பிரை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும்
நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும்..

Advertisement