Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
இறுதி அத்தியாயம் 
ஏதேதோ கனவோடும் கிறக்கத்தோடும் மனைவியைக் கையில் ஏந்திக்கொண்டு முன்வாசலை நோக்கி நத்தை வேகத்தில் அஷோக் நடக்க… கதவருகில் அவர்கள் வந்தது தான் தாமதம்,
“யேய்ய்ய்ய்ய்ய்!” என்ற சத்தத்தோடும் கரகோஷத்தோடும் ஒட்டுமொத்த குடும்பமும் ஹாலில் நின்று ஆர்ப்பரித்தது. கண்ணனுக்குத் தான் கூச்சமாய் போனது.
மனைவியை மனமேயில்லாமல் இறக்க, ஆலம் சுற்றி இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றார் சுசிலா.
சுதா, “அம்மா…” ஆசையாய் கட்டிக் கொண்டாள் சுசிலாவை.
“நான் உங்ககிட்ட சொல்லாம போயிருக்கக் கூடாது. ஆனா எனக்கு அப்போ வேற வழி தெரியல”, சுதா கண் கலங்க.. அவர் கண்ணிலும் நீர் நிரம்பியது.
“விடுடாமா, சந்தோஷமான இந்த நேரத்தில எதுக்கு இப்போ பழசை எல்லாம் பேசிட்டு? நீ வந்ததே எனக்குப் போதும். நீ என்ன மா.. ஒழுங்கா சாப்பிடுறதே இல்லையா?”
கண்கலங்கப் பார்த்தவளின் நெற்றியில் ஆழ்ந்த முத்தம் வைத்தவர், “பேச நிறைய நல்ல விஷயம் இருக்கு சுதா, அதைப் பேசுவோம். உன் அண்ணனை  பார்த்ததே அவ்வளவு மனசுக்கு நிறைவு.. அப்படியே பரதன பார்த்த மாதரி இருக்கு! அந்த குட்டி பையன்.. அச்சோ… அவன் பேர கேட்கவே இல்லையே… அவன் பேரென்ன?”
அம்மாவும் மனைவியும் பேசுவதைக் கண்குளிர புன்முறுவலோடு பார்த்து நின்றிருந்த மகன் முகம் பார்த்த பின் அவர் வேறு என்ன கூறுவார்? தொலைந்து போன எல்லாமே மீண்டு வந்துவிட்ட உணர்வு சுசிலாவிற்கு.
சுதா விளக்கேற்றவும், அஷோக் ஆசையாய் நெற்றியிலும், வகிட்டிலும் குங்குமம் வைத்துவிட்டான்.
“ம்மா.. இவங்க என் அத்த மாமா..” என்று அறிமுகப் படுத்த ஆரம்பிக்கவும், “நாங்க எல்லாருமே வந்து ரொம்ப நேரமாகுது. அறிமுகமாகிட்டோம்” என்று முந்திக்கொண்டு வந்து நின்றான் தீபக்.
ஒவ்வொருவராய் வாழ்த்துச் சொல்லி நகர,
“சீ…பா” சத்தம் கேட்ட திசை நோக்கி கண்ணன் செல்ல… சுதா ஓரமாய் நின்றிருந்த கார்த்திக்கிடம் சென்றாள்.
“வீட்டுக்கு வந்திட்டேன் கார்த்தி… என் கண்ணன்ட்ட நான் வந்திட்டேன் கார்த்தி” என்றாள், நா தழுதழுக்க..
அவள் தலையைத் தடவிக் கொடுத்தவனுக்கு வார்த்தை வரவில்லை. கண்ணில் நீர் வழிய, “நீ நல்லா இருக்கணும் என் செல்ல பேரீச்சம்” என்றான்.
“எனக்குக் கொடுத்த சத்தியத்தை காப்பாத்தவே இல்ல நீ”, என்றாள் பொய் கோபத்தோடு.
அவளைப் பார்த்து அவன் புன்னகைக்க.. “லவ் யு கார்த்தி.. லவ் யு சோ மச் கார்த்தி.” என்று அவன் கையை கட்டிக்கொண்டு தோள் சாய்ந்தாள்.
ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. எத்தனை தூங்க இரவை அவனுக்குத் தந்தாள். அவள் வாழ்வு என்றாவது மலராத என்று அவன் ஏங்காத நாளில்லையே… இன்று அவன் சுதா, அவள் உயிர் கண்ணனோடு! உணர்ச்சி மிகுதியில் அவன் தோள் சாய்ந்து அவள் நிற்க, அவன் கண் குளமாகச் சுதா தலையை வருடிவிட்டுக்கொண்டே நின்றான்.
அவன் கன்றுக்குட்டி அவள். அவளில்லா வீட்டிற்குப் போகவேண்டும்.. அது அடுத்த வேதனை. திருமணமான மகளைப் பிரியும் தாயாய், குதுகலமும் பரிதவிப்பும் ஒன்று சேர நின்றிருந்தான்.
டேனியோடு பேசிக்கொண்டே “சீபா..”வில் கண்ணன் மூழ்கிப் போனாலும் கண் முழுவதும் சுதா மேல் தான்.  
டேனியின் வீட்டு கிரகபிரவேசத்திற்கு வந்த ஒட்டு மொத்த குடும்பமும் இங்கு தான். வீடு திருவிழாக் கோலம் பூண்டது. சுசீலாவைக் கையில் பிடிக்க முடியவில்லை. வருடங்கள் பின் கண்ணெல்லாம் நட்சத்திரமும் வாயெல்லாம் பல்லுமாய் சுற்றிக் கொண்டிருந்தார்.
ஜோ, கண்ணன் கழுத்தைக் கட்டிக்கொண்டு அவன் கையிலிருந்து இறங்க மறுக்க, அருள் அவன் தாத்தாவோடு தோட்டத்தில் வண்ணத்துப் பூச்சியைத் தேடிச்சென்றான்.
இடுப்பு வலியோடு பிருந்தா வந்து நிற்பாள் என்று ஒருவருமே எதிர்பார்க்கவில்லை. ஜீவாவிற்கு இதில் உடன்பாடு இல்லை என்பதை முகம் காட்டிக் கொடுத்தது.
“ஏய்… இங்க என்ன டி பண்ற? உனக்குத் தான் ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம்னு வலி வர ஆரம்பிச்சிடுச்சே..” ஜான்சி பதற,
“அவள விடு ராணி, பேசிட்டு கிளம்பிடுவா”, கூறிக் கொண்டே ஜான்சியை இழுத்துச் சென்ற அருணா, பிருந்தா-அஷோக் பற்றிய விபரம் ஜான்சியிடம் கூற, ஜான்சியின் சப்த நாடியும் அடங்கிவிட்டது.
அருணா சில விஷயங்கள் கூற… பிருந்தா சிலவற்றைக் கூற.. கூட்டிக் கழிக்க எல்லா விடயமும் பிருந்தாவின் பார்வைக்கு வந்துவிட்டது. பிருந்தாவிற்கு எவ்வளவு அதிர்ச்சியோ அதற்குக் கொஞ்சமும் குறையா அதிர்ச்சி ஜான்சிக்கு!
கார்த்திக்கைத் திருமணம் செய்ய வற்புறுத்திய தினங்களில், ஜான்சி மடி சாய்ந்து சுதா கதறியதெல்லாம் ஜான்சி நினைவில் வந்து போனது.
“என் புருஷன் இல்லாம என்னால முடியல அண்ணி… அவர் இடத்தில என்னால வேற யாரையும் நினைக்கக் கூட முடியலை. நான் இருந்தா தானே வேற கல்யாணம் பண்ணனும்? நான் செத்து போய்டவா” என்று உணவில்லாமல்.. உறக்கமில்லாமல் துடிதுடித்தாளே. பிருந்தாவைப் பற்றி.. அவள் நின்று போன திருமணம் பற்றி ஒரு வார்த்தை பேசி இருந்தால்.. இந்த கொடுமை சுதாவிற்கு நடந்தே இருக்காதே.
ஒரு முறை ஜான்சி கேட்கவும் செய்தாளே.. “அந்த கோவிலுக்கு ஏதாவது வேண்டுதலா வந்தியா?” என்று. அன்றே உண்மையைச் சுதா கூறியிருந்தால்..? அவள் எப்படிக் கூறுவாள்? என்னவென்று கூறுவாள்? தன் கணவனுக்குத் திருமணம் என்றா? அதனாலேயே அந்த நாள் பற்றிய பேச்சை அவள் தவிர்த்தாள். விஷயம் வெளிவராமலே போனது.  
இப்படி தான் நடக்க வேண்டும் என்றிருக்க ஜான்சி என்ன செய்திருக்க முடியும்?
பிருந்தாவை பார்த்ததும் அவளருகில் வந்தான் அஷோக்.
“என்ன ஜீவா?” கேள்வியோடு ஜீவாவைப் பார்க்க
“சொன்னா ஏதாவது கேட்கணும்! வலி ஆரம்பிச்சிடுச்சு.. ஹாஸ்பிட்டல் போகாம இங்க வந்து நிக்கிறா!”
“என்ன பண்ற இங்க?” என்றான். அவள் பதில் பேசவில்லை.
அவனே, “சாரி பிருந்தா..வர முடியல” என்றான்.
“இம்ம்..” அவள் கண் சுதாவைத் தேட
அவனுக்கு என்ன தோன்றியதோ..
“பிருந்தா..” என்றான்.  அந்த ஒற்றை வார்த்தையில் பல வருடம் அவனை அவள் தாங்கியதற்கான நன்றிகள் அடங்கியிருந்ததை அவளும் அறிவாள்.
இப்படி தானே அவனைப் பார்க்க ஆசைப்பட்டாள். பார்த்தே விட்டாள். கணவனை விட்டு வயிற்றில் பிள்ளையோடு இவனைத் தனிமையில் விடாமல்.. எப்படி எல்லாம் அவன் பின்னே சுற்றித் திரிந்தாள்.
அவள் வலது கையை கையில் எடுத்துக்கொண்டவன்.. “சுதா இல்லாம பைத்தியம் பிடிச்சு செத்தே போயிருப்பேன் பிருந்தா.. என்னை நீ சாக விடல. தேங்க்ஸ்” என்றான்.
வேடிக்கையாக இருந்தது பிருந்தாவிற்கு ‘இவனை நரகத்தில் தள்ளி, குத்தி கிழித்த எனக்கு நன்றியா? எனக்குத் தெரியவில்லை… ஆனால் இவனுக்கு எல்லாம் தெரியுமே.. இருந்தும், என்னைக் கொன்று போடாமல் என்னிடம் நட்பு பாராட்டினானே..’ நெகிழ்ந்து போனாள்.
கண் கலங்க… “என்னை மன்னிச்சிடு அஷோக்… ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன். எவ்வளவு பெரிய பாவம் செஞ்சிருப்பேன்? நீ தான் என்னை காப்பாத்திட்ட!”
பின்னோடு சாய்ந்தவள் அவளை என்றும் போல் இன்றும் தாங்கி நின்ற ஜீவாவின் இடக் கையை அவள் கழுத்தோடு கட்டிக் கொண்டு, “இல்ல.. அஷோக் நீ என்னை நியாயப்படி வெறுக்கணும். அப்புறம் அந்த தேங்க்ஸ்… அத நான் தான் உனக்கு சொல்லணும். தேங்க்ஸ் அஷோக்!” என்றாள், கணவன் கையில் அவள் கண்ணீர் சொட்ட.
சுதாவோடு தனியே பேசினாள். மன்னிப்பை யாசித்தாள். முன்பொரு காலம் அஷோக்கைக் காதலித்தாக ஒப்புக்கொண்டாள். மருத்துவமனையை விட்டு சுதா வெளிவந்ததும் அவள் யாரிடமும் சொல்லாமல் போகவே, அவள் மனதுக்குப் பிடித்தவனோடு சென்றுவிட்டதாய் பாட்டி கூற அஷோக்கின் காதல் ஒரு பக்க காதலாயிருக்கும் என்ற எண்ணத்தோடே மணமேடை ஏறியதைக் கூறினாள். தாலியைப் பார்த்தவன் கண்ணீரைக் கண்டபின் அவன் காதல் தீவிரம் தெரியவே திருமணம் நின்றதாகக் கூறினாள்.
“ரெண்டு சொட்டு கண்ணீர் என் கையில தெறிச்சுது. நீ இருந்தாலும் இல்லைனாலும் அவர் மனசில உனக்கு மட்டும் தான் இடம் இருக்கும்னு தெரிஞ்சுகிட்டேன். நான் அவர் வாழ்க்கையில எங்கேயுமே இல்ல… இருக்கவும் முடியாதுனு உணர்ந்தேன்..
இன்னைக்கு.. நீ ராணி கூட வரவும் நீ அவ ஃப்ரெண்ட்-னு நினைச்சேன். அருணாவ கட்டிப் பிடிக்கவும், ஜான்சி உன் கிட்டக் கல்யாணம் நின்ன விஷயம் சொல்லியிருக்கணும்னு தோணிச்சு! நீ இன்னும் அஷோக்கை நினைச்சுட்டு இருக்கேனு நினைச்சேன்… கொஞ்சம் நேரம் முன்னாடி, அருணாட்ட உன்ன எப்படி தெரியும்னு கேட்ட பிறகு தான் புரிஞ்சுது நான் செஞ்ச தப்போட அளவு! அறியாமலே நீங்க ரெண்டு பேரும் பிரிய காரணமானேன். ஆனா அது வெறும் தப்பு இல்ல, பாவம்! பெரிய பாவம் செஞ்சிருக்கேன். மன்னிச்சுக்கோன்னு ஒரு வார்த்தையில கேட்கரது ரொம்ப சுயநலம் தான்.. ஆனாலும் கேட்கறேன்… மன்னிப்பியா?”
சுதா ஒன்றும் பதில் பேசவில்லை. அஷோக்கை அழைத்து அவன் சட்டைப்பையிலிருந்த வளையலை எடுத்து அணிவித்தவள், “ட்வின்ஸ்னு சொன்னார். நான் உங்களுக்காக வேண்டிப்பேன். நல்லபடியா குழந்தை பெத்திட்டு வாங்க. எது நடக்கணுமோ அது நடந்து தான் ஆகும். உங்களால என் அண்ணா எனக்கு கிடைச்சாங்க. எனக்கு இப்போ புகுந்த வீடு மட்டுமில்ல.. என் மேல உயிரா இருக்கப் பிறந்த வீடும் இருக்கு. மன்னிப்புனு பெரிய வார்த்தை எல்லாம் பேசாதீங்க.”
சங்கடமில்லாமல் பிருந்தாவை அனுப்பி வைத்தாள்.
“என் பாக்கெட்டுல வளையல் இருந்தது உனக்கு எப்படி லட்டு தெரியும்” என்று கேட்டதிற்கு.. “என் தாலி உங்க நெஞ்சுல குத்தும் போது, எனக்கு வளையல் குத்தாதா?” என்றாள், இரவில் மல்லி கொடி அடியில் அவள் மடி சாய்ந்திருந்த கண்ணன் தலை கோதி.
பல வருடக் கதை பேசினர். இது தான் என்றில்லாமல் எல்லாம் பேசினார்கள். அவனுக்கு அவர்கள் காதல் கதை கேட்டு ஆசை தீர்ந்த பாடில்லை.
“சொல்லுச் சொல்லு” என்று கேட்டுக் கேட்டு பூரித்தான். பல இடங்களில் வாய் விட்டு சிரித்தான். சில இடத்தில் அழகாய் வெட்கப்பட்டான்.
சுதா, மடியில் தலைவைத்து அவள் இடையைக் கட்டிக் கொண்டு ஆசையாய் கதை கேட்டுப் படுத்திருந்தவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்… “நீங்க பொண்ணு வேணும்னு கேட்டீங்க.. இதே இடத்தில வச்சு தான்”, என்று
செண்பக மலரை இழுத்து முகர்ந்தவன், “சரியா தான் கேட்டிருக்கேன்.. உன்ன மாதரி அழகான கண்ணோட… என் கனவில வருவியே லாங் கர்லி ஹேர்ரோட.. அந்த மாதிரி வேணும். அப்புறம் உன்ன மாதிரியே குறும்போட.. அது ரொம்ப முக்கியம்! பெத்து குடு..” என்றான்.
“இப்படி செண்பக பூவ வச்சு கொஞ்சினா எல்லாம் பிள்ள பிறக்காது!”
சுதாவின் விரல்களில் இதழ் பதித்து, “ஓ.. அப்போ எப்படி பிறக்குமாம்?..” அவன் குறும்பாய் சிரிக்க…
“ம்ம்ம்..”, சிரித்துக்கொண்டே, “ஒரு மந்திரம் சொன்னா.. பகவான் கொடுப்பாராம்…” அவனைத் தள்ளிவிட்டு அவள் ஓட..
“ஏய் நில்லு டி… என் லட்டு குட்டி.. யாரோ உனக்கு தப்பா சொல்லி இருக்காங்க.. நான் சரியா சொல்லித்தறேன்..” என்று பின்னோடு ஓடினான். காதலாய்.. சிரித்துக் கொண்டே.
என்றுமில்லாமல் இன்று வழக்கத்திற்கு மாறாய் செண்பகமும் மல்லியும் கொட்டிக்கிடக்க இடமே அவர்கள் வாழ்வு போல் நறுமணத்தால் நிரம்பியிருந்தது.  

Advertisement