Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
இறுதி அத்தியாயம்
 
சில வருடங்களுக்கு பின்:
கடல் பச்சையும் பழுப்பும் கலந்த கோலிக்குண்டு கண்ணுருட்டி, “டேஷ்ட் நேணும்?” என்று அஷோக் முகம் பார்த்து பிஞ்சு பஞ்சு போதி தலையை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டே கேட்க,
“கொடுமை பண்ற கண்ணமா.. புளிப்பு தாங்கலடா செல்லம்.. உன் அம்மாவாது கொஞ்சமா டையல்யூட் பண்ணித் தரா… நீ அப்படியே பிச்சிட்டு வந்து என் வாயில திணிக்கிற..” தன் கையில் தூக்கி வைத்திருந்த மூன்று வயது குட்டி கண்ணமாவோடு சண்டை பிடித்துக் கொண்டிருந்தான் நம் நாயகன்.
எப்பொழுதும் போல அவர்கள் அறையை ஒட்டிய பால்கனியில் சுசிலா மகிழ்ச்சியோடு பூ தொடுக்க, தன் ஆறு மாத மேடிட்ட வயிரோடு அவர் மடி மீது தலை வைத்துப் படுத்துத்திருந்தக் கண்ணனின் லட்டு இதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தாள்.
அஷோக் அவன் குட்டி கண்ணமா, ‘இஷா’வை நெஞ்சோடு அணைத்துத் தூக்கி வைத்திருக்க, “டேஷ்ட் நேணும்?” என தன் அழகிய கண்களை உருட்டி உருட்டி தலையை மேலும் கீழுமாய் தலையாட்டிக் கொண்டே, பிடிவாதமாய் ஒரு தளிர் கரத்தால் அவன் வாயைத் திறந்து மற்றொரு பிஞ்சு கையால் நெல்லிக்காயை அப்பா வாயில் ஊட்டி (திணித்து) கொண்டிருந்தாள்.
கண்ணனின் மகள் பார்க்க, சுதாவின் கண்களோடு குட்டி சுசிலாவே தான். அழகான சுருள் முடி. சுதாவையும் மிஞ்சும் குறும்பு. சுதாவின் செல்ல வானரங்களின் அழகிய பொம்மை அவள்.. செல்லம் அதிகம். ஒரு குட்டி மரத்தையும் விடுவதில்லை. இப்பொழுதெல்லாம் சுசிலா பதறுவதில்லை. அவரும் மருமகள், பேத்தியின் ஜோதியில் ஐக்கியம்!
“மாமா.. ஜோ என்னை அடிக்கிறான்”, அருள் ஓடி வர, கூடவே மாடியே தட தடக்க ஓடி வந்தனர் மற்ற குட்டி பட்டாளங்கள்.
அருளின் தங்கை அபிநயா, இஷாவை விடச் சற்றே பெரியவள். “மாமா.. நான்” என்று அவனிடம் கைகளை உயர்த்த, மறு கையில் அவளைத் தூக்கிக் கொண்டான். 
ஜோசஃப், “அம்மாஆஆ..” என்று சுதாவின் மடியில் அமர்ந்து கொள்ள, கார்த்தி அவன் ஆறு மாத ‘ஜேன்’னுடன் உள்ளே நுழைந்தான். சற்று நேரம் பொருத்து பார்த்த ஜோ, கண்ணன் அவனைத் தேடி வராமல் போகவே “மை சீபா” என்று செல்ல, அதன்  பின் கண்ணன் கையில் அவன் மட்டும் தான். கார்த்தியும் சுதா போல் தான் கண்ணனும் ஜோவும். தாயிக்கும் கன்றுக்குமான உறவு!
இருதினம் முன் அனிதாவின் திருமண நிச்சயம் முடிந்திருக்கவே இன்று இஷாவின் மூன்றாவது பிறந்த நாள். அதைக் கொண்டாடவே அனைவரும் வந்திருந்தனர்.
தீபக்கின் மகள் க்ரிஷிகா, அருளின் செல்லம். அவனை பார்த்துவிட்டால் எங்கும் அவன் வால் பிடித்துச் சென்றுவிடுவாள்.
அனி, ஜானு, பிருந்தா, லிண்டா, ரேனு, ஜென்னி, சுதாவோடு கதையடிக்க,
சுசிலா, ஷாலினி, ஷாந்தா, நீலாவதி அவர்கள் பார்ட்டிக்கு வேண்டியதைக் கவனிக்கச் சென்றனர்.
பால்ராஜ், தேவசகாயம், சதீஷ் ஒரு புறம் அமர, 
வெங்கட், டேனி, தீபக், ஜீவா மாடியில் நீச்சல் குளமருகில் பேசிக்கொண்டிருந்தனர்.
கண்ணனைச் சூழ்ந்திருந்தது குட்டி பட்டாம்பூச்சிகள். ‘என் அப்பா… மை சீபா.. என் மாமா’ சத்ததின் நடுவில் நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்தான் கார்த்திக்கோடு. குட்டீஸ் அனைவருக்கும் பிடித்த இடம், மாடியில் இருக்கும் நீச்சல் குளம்.
என்றோ ஒருகாலம் யாருமில்லா மாளிகையில், நிலவின் ஒளியில், ஒளியிழந்தவனாய், இதே நீச்சல் குளத்தில் தான் தன்னந்தனியே மிதந்து கொண்டிருப்பான். இன்று அதே நீச்சல் குளம்.. ஆனால் யார் அவனை தனியே விட்டது? அவனைச் சுற்றிச் சிரிக்கும் தாமரைகள்.
இன்றும் நீரில் கண்ணன் மிதந்துக் கொண்டு தான் இருக்கிறான்.. முதுகில் ஜோவோடும் இஷாவோடும்!
வெங்கட், ஜென்னி சிங்கப்பூர் வாசம். சென்னைக்கு வந்து செல்வதோடு சரி. வெங்கட்டிற்கு இரண்டு வயதில் ஒரு மகன். அவனும் நீச்சல் குளத்தில் தான் கார்த்திக் கையில். இவர்களோடு இரண்டு தேவதைகளும் அடக்கம். 
கார்த்திக் இன்னும் அமெரிக்கா வாசம். வருடத்திற்கு ஒரு முறை இந்தியா வந்துவிடுவான். லிண்டாவிற்கு இந்த குடும்ப பாங்கு மிகவும் பிடித்துவிட அவர்களும் கூடிய சீக்கிரம் இந்தியா வந்துவிடும் வாய்ப்புகள் அதிகம்.
பிருந்தா ஜீவா லண்டன் வாசம். அனியின் திருமண நிச்சயம் வந்தவர்களும் இன்று இங்கு தான், அவர்களின் இரண்டு குட்டி தேவதைகளோடு!
டேனியேல் அவன் நிறுவனத்தைக் கவனித்துக்கொள்ள ஷாலினி தம்பதியினர் வீட்டைக் கவனித்துக் கொள்ள, ஜான்சி இசையில் முழு கவனம் செலுத்திக் கொண்டே இசைப் பள்ளியில் பாடம் நடத்தி வருகிறாள்.
வீடு கலகலக்க, சிட்டுக் குருவிகளின் மழலை சத்தம் வீட்டை அலங்கரிக்க,  பேசி, களித்து, உண்டு, உறவாடி… இன்பமான தருணங்கள் இவை. அனைவருக்குமே!
நாளை அவரவர் வாழ்வை நோக்கி.. அவர்கள் இலக்கை நோக்கி… இன்று, இந்த நிமிடம், அவர்கள் குடும்பத்திற்கானது.
இரவு வீடு ஒரு வழியாய் அடங்க…
“ஜானு குட்டி.. பசங்க தான் அவங்க பாட்டி தாத்தா கூட படுக்க போயாச்சே.. என்னை கவனியேன்.. எனக்கு மட்டுமே ஒரு பாட்டு பாடேன்..” என்றும் ஆசை குறையாது மனைவியைத் தாங்கும் அன்பு கணவனாய் டேனி..
“கார்ட்டி.. போடும் விடு..” என்று சிணுங்கிய மனைவியின் வாய் பொத்தி.. “ஷ்.. சத்தம் போடாத டி.. பக்கத்து ரூம்ல அத்தான் இருக்காங்க. சுதாவைச் சொன்னேன்.. ‘உன் தமிழ் கொஞ்சும் தமிழ்னு!’.. உன் தமிழ என்னனு சொல்ல.. செல்லம் ‘த்’ சொல்லுங்க..” மகன் கற்றுத் தேர்ந்தபின்னும், மனைவிக்குச் சலிப்பில்லாமல் அவள் சிணுங்க சிணுங்க தமிழ் சொல்லித் தரும் கார்த்தி..
இவர்கள் இருவருமே என்றும் சுதாவின் வாழ்வில் ஆலமர வேர்கள்.
அடுக்களையில் நின்று கொண்டிருந்த சுதாவை பின்னிருந்து அணைத்துக்கொண்டே, “எல்லாரும் படுக்க போயாச்சு.. என் லட்டு குட்டி மட்டும் இங்க தனியா என்ன பண்ணுது?”,  என்றது அவள் கண்ணனே.
அவன் கை மனைவியின் மேடிட்ட வயிற்றை வருட, “குங்கும பூ போட்டு பால் குடிக்கிறேன்.. நம்ம குட்டி கண்ணனுக்கு!” என்றாள், அவன் மேல் வசதியாய் சாய்ந்து நின்று கொண்டே.
இது என்றும் நடக்கும் கூத்து தான் என்பதால் பாட்டியும் பேத்தியும் இஷாவின் பிறந்த தினத்திற்காக புதிதாக நட்ட பலா கன்றைப் பார்த்து, அதற்கு ‘குட் நைட்’ கூறிவிட்டுப் படுக்கச் சென்றுவிட்டனர்.
நல்ல மகளாய்… பொறுப்பான தாயாய்… அன்பான மாமியாராய்.. ஹிட்லர் பாஸாய் இருந்தவரின் புதிய அவதாரம்- செல்ல பாட்டி! எல்லாவற்றையும் போல் அதையும் பிழையின்றி செய்து வருகிறார். இப்பொழுதெல்லாம் பாட்டியும் கொஞ்சம் வால்! இவர்கள் மூன்று பேருக்கு நடுவில் கண்ணன் தான் பாவம்! மூன்று பெண்களுக்கும் தண்ணீர் காட்டக் குட்டி சிங்கம் ஒன்று வந்துவிடும் சில மாதங்களில்.
“பாப்பாவ மட்டும் கவனிச்சா போதாது.. சிங்க குட்டியோட அருமை அம்மாவையும் கவனிக்கணும்.. நின்னு நின்னு என் லட்டுக்கு கால் வலியே வந்திருக்குமே! வா போலாம்” என்று அவளை கைகளில் ஏந்திக் கொண்டு ‘கையில் மிதக்கும் கனவா நீ’ என்று ஹம் செய்து கொண்டே தங்கள் அறை நோக்கிச் சுமந்து செல்லும் அன்பு கணவனாய் என்றுமே அவள் கண்ணன்!
சுதா, அவன் கனவு மட்டும் அல்ல.. அவன் வாழ்வின் அச்சாணி! தவறவிட்டு, கடவுள் கிருபையால் மீண்டும் கிடைத்த பொக்கிஷம்! அவன் கை எட்டும் தூரத்தில் அவனுக்கே அவனுக்கான சொர்கம்.
அவளால் அவன் வாழ்வு சொர்கமானதா இல்லை அவனால் அவள் வாழ்வு சொர்கமானதா என்பதை அவர்களால் இன்றுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் முயற்சியை இருவரும் கைவிடப்போவதுமில்லை!
இன்றும் சொல்லிக்கொண்டு தான் இருக்கின்றான் அவன் அன்றிலிடம்.. “உன் கிட்ட அப்படி என்ன லட்டு ஸ்பெஷல்? கண்டு பிடிக்காம விடமாட்டேன்” என்று.
அவளும் சலிக்காமல் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறாள், “கண்டு பிடிச்சிட்டிங்களா?” என்று.
மாடிப் படி ஏறிக் கொண்டே குழைவாய், “லட்டு…” என்றான்.
“ம்ம்?” கொஞ்சமும் குறையா ஆசையோடு
“ஒண்ணே ஒண்ணு குடே…ன்..!”
“பச்.. எனக்கு மூடே இல்ல..” என்றாள் உள்ளடக்கிய சிரிப்போடு
“உனக்கு இல்லாட்டி பரவால.. எனக்கு இருக்கு. ஒண்ணு குடுக்கட்டா?” கொஞ்சலாய் வந்தது வார்த்தைகள். 
“ஓ குடுங்களேன்… இந்தாங்க என் சுண்டு விரலுக்கு… இல்ல இல்ல சுண்டு விரல் நகத்துக்குத் தாங்க.. அதுவும் நெயில் பாலிஷ் போட்டு விட்டா மட்டும்!” வம்பு செய்து கொண்டிருந்தாள்.
இருவருக்குமே தெரியும் அவன் அந்த சுண்டு விரல் நகத்தைக் கூட விடப்போவதில்லை என்று.
கட்டிலில் சுதாவைக் கிடத்தி அவளை தன் மார்போடு சேர்த்தணைத்துப் படுக்க, அவள் கேட்டாள், “உங்களுக்கு அன்றில்னு ஒரு பறவை இருந்தது தெரியுமா?” என்று..
“ம்ம்… ஆண் அன்றிலும் அது துணையும், பிரியவே பிரியாதாம். அப்படி பிரிஞ்சா அது உயிர் பிரிஞ்சுடுமாம்” என்றான் கண்ணன், சுதா உச்சந்தலையில் இதழ் பதித்து.
“நான் கூட அப்படி தான் கண்ணன். நான் கூட உங்க அன்றில் தான்”, என்றாள், அவன் நெஞ்சில் இதழ் பதித்து, அவன் அன்பிற்கு ஒரு சொட்டும் குறையா காதலோடு.
 
 
ஒரு ஊரில இரண்டு அன்றில் பறவைகள் இருந்ததாம். ஒரு ஆண் அன்றில். ஒரு பெண் அன்றில். அந்த அன்றில் பறவைகள் பெயர் என்னனு கேட்டா, இந்த கதை படிச்ச எல்லோரும் சொல்லிடுவாங்க எந்த சந்தேகமும் இல்லாம!
“இனிக்க இனிக்க லட்டா… பனைமரம் மாதரி உயரமா.. ஆழமா வேரூன்றின திகட்டாத காதலோட.. பனைமரம் – லட்டு தான்”-னு!
வாழும் காலம் ஒன்றாய் முடியும் வரை கரைபுரளும் காதலோடு என்றென்றும் இன்பமாய் வாழட்டும், சுதா கண்ணன் என்ற இரண்டு அன்றில் பறவைகளும்!
 
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே..
..முற்றும்..
(அவன் நினைவில் அவள் பிம்பமாய் அல்ல, வாழ்வில் அன்றிலாய்… அவர்கள் காதல் தொடரும்)
 
Have anything to say to the author? Write to [email protected]
 
 
 

Advertisement