Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 78_2 
காதல் வாழ்வு முடிந்தது என்று மனதைக் கல்லாக்கி வாழ நினைத்தவர்களுக்கு, எல்லாம் தீடீர் என்று மாறிப் போகவும் நடப்பதெல்லாம் கனவாகி விடுமோ என்ற பயம் ஒருபக்கம்.. எதிரில் நடப்பதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அலை அலையாய் ஏதேதோ உணர்வுகள் முந்திக் கொண்டு வந்து ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டது.
அவன் கண்கள் வாஞ்சையாய் அவளை வருட.. அவளுக்குள் ஒரு இதம் பரவியது. ‘வந்துவிட்டேன்.. என் அன்றிலிடம் வந்தே விட்டேன்’
சுதா கண்கள் கண்ணீரோடு சிரிக்க.. பார்த்துக்கொண்டிருந்தவன் கண்களும் தான்!
பொங்கும் பானையில் மூடி போட்டால்.. கசியும் பால் போல் அவன் புன்னகை அவன் மூடிய இரண்டு உதட்டுக்கும் நடுவே கசிந்தது.
இன்னும் ஒரு வார்த்தை பேசவில்லை. உணர்வுகள் பேசிக்கொண்டது..
உயிரின் துடிப்பும், கண்ணில் கசிந்த காதலும் ஒற்றை வார்த்தைக் கவிதையாய் வந்தது. காதலாய்… கவிதையாய்.. “லட்டு..” என்றான்.
கேட்கக் கோடி காதுகள் வேண்டும்.. இந்த பரவசத்தை. உடலைச் சிலிர்க்க வைக்கும் ஒற்றை வார்த்தை. மற்றவர்களுக்கு எப்படியோ.. அவன் உயிருக்கு ஒரு பெயர் இருந்தது. அதைத் தான் உச்சரித்தான்.
ஒற்றை வார்த்தையால் என்ன மாயம் செய்ய முடியும்? செய்தது, ஏதேதோ மாயம் செய்தது. ஆறு மாத சொர்கமான வாழ்வை அவள் முன் கொண்டு வந்தது. அவனோடு இட்ட ஊடல் முதல் கூடல் வரை கண்ணெதிரே தெரிந்தது.
மயில் இறகாய் அவன் பின்னங்கை கன்னம் வருட… கண்சொக்கி மயங்கிப் போனாள்.
உள்ளுக்குள் தேங்கிக் கிடந்த காதல்.. அடைப்பையெல்லாம் உடைத்துக்கொண்டு மூடிய கண் விழி அருவியாய் கொட்ட, அழுதாள். கை மாலையாய் மாறா நெற்றி இரண்டும் முத்தம் வைக்க.. அழுது கொண்டே சிரித்தாள்… மூக்கு நுணி சிவக்க… உதடு துடிக்க… கண்ணில் நீர் வழியக் கவிதையாய் ஒரு சிரிப்பு. துடைக்கத் தோன்றாத கண்ணீர். 
உறிஞ்சிய மூக்கை புறங்கையால் துடைத்து கொண்டே அவனைப் பார்த்துச் சிரித்தாள்.
கண்ணனின் கை, அமர்ந்திருந்தவள் இடையைச் சுற்ற.. வீற்றிருந்தவள் உடல் சிலிர்க்க.. இதயம் தட தடக்க.. அவனுக்குள் புதைய மனம் துடித்தது.
எப்பொழுது தூக்கினான்? தெரியவில்லை. இன்னும் முகம் உயர்த்தி அவளைத் தான் பார்த்திருந்தான்.  காதலால் சிலிர்த்து.. மோகத்தால் தகித்து.. பிரிவால் மரித்தவன் இன்று மனைவியின் தீண்டலால் உயிர்த்தான்.
மேனியின் ஒட்டு மொத்த ரத்தமும் அவன் முகத்தில். உணர்வுகளின் தேக்கமாய்.. உஷ்ணமாய்.. பளீர் முகம் சிகப்பாய் மாறிக் கொண்டிருந்தது.
அவள் வெற்றிடையில் முகம் புதைக்க.. சுவாசக் காற்றோடு அவள் மணம் நுரையீரலை நிறைக்க.. உடல் குலுங்கியது. வலியெல்லாம் கண்ணீராய் கரைந்தது. அவள் வயிறு நனைந்த அதே நொடி அவன் உச்சந்தலை நனைந்தது.
யார் யாரில் புதைந்தார்கள் தெரியவில்லை. உணர்ச்சி என்ற ஒற்றை புள்ளியில் இரு உயிர்களின் சங்கமம் நடந்தேறியது.
‘முன் காலத்தல அன்றில்னு ஒரு பறவை இருந்துதாம். ஆண் அன்றிலும் பெண் அன்றிலும் பிரிஞ்சு வாழவே வாழாதாம். தூங்கும் போது கூட பிரிஞ்சு இருக்காதாம்! அப்படியே.. ஒண்ணு மாட்டும் இறந்து போனா, அதோட துணை பறவையும் தன்னோட  உயிரை விட்டுவிடுமாம்!’
இறந்து தான் போயிருந்தனர் இன்று வரை! இல்லை அது சுலபம்! இறப்பும் அவர்களை விட்டுவிட்டது. இறக்கமில்லா இறப்பு கூட கரம் நீட்டவில்லை.. ஒவ்வொரு நொடியும் இறந்து இறந்து மிகக் கொடுமையான வாழ்வை வாழ்ந்து வந்தனர்.
அவன் அணைப்பு இன்னும் இன்னும் அவளை இறுக்க அவளும் அவனுள் புதைந்து போனாள்.
எப்பேர்ப் பட்ட வலி.. இதயத்தைப் பிழிந்தெடுத்த மரண வலி… எல்லாம் கண்ணீராய் கரைந்தது. சிதறிய நினைவில் பிம்பமாய் வாழ்ந்தவள் இன்று அவன் கையில் உயிருள்ள முழு உருவமாய் அவன் வாழ்வை முழுமையாக்க!
அணைத்த வாக்கில் இறக்கியும், அணைப்பிலிருந்து விட மனம் வரவில்லை. இடையே வந்துபோன காலங்களில் அடக்கப்பட்ட ஏக்கங்கள் எல்லாம் இதழ் பிரித்து உரைக்கத் தான் ஆசை.. ஆனால் உறைக்காமலே இதழ் படித்த கவிதையால் ஏக்கங்களை உணர்த்திக் கொண்டிருந்தான்.
வந்து போன தனிமையில், நீ தவித்தாயா நான் தவித்தேனா என்ற யுத்தம் முடிய வெகு நேரம் பிடிக்க.. செம்மை இடம் மாறியது. சற்று முன் அவன் தானே சிகப்பு பிழம்பாய் இருந்தான்?
நெஞ்சோடு சாய்ந்தவள் உச்சந்தலையில் உணர்வுகளெல்லாம் ஒட்டுமொத்தமாய் கொட்டி ஆழ்ந்த முத்தம். தலை வழி அவள் பாதம் வரை ஒவ்வொரு அணுவையும் சென்றடைந்தது. என் வாழ்வின் நிறைவாய் வந்தாயே என்ற காதல் முத்தம். நீயின்றி சிதைந்தே போனேன் என்ற வலியின் முத்தம். உன்னை விடுவதில்லை என்ற நிறைவின் முத்தம். ஒற்றை முத்தம் ஓராயிரம் கதை சொன்னது.
காற்று இடைபுகவில்லை.. இடையே உறுத்தி நின்ற தாலியில் கண் நிலைக்க..  கை ஆசையாய் வருட
“மிஸஸ். சுதா கண்ணன்” என்றாள் காந்தமாய் அவள் கணவனிடம்.
முகம் பார்த்தவன், “ரா..ட்..சசி!” என்றான் இரும்பாய் அவன் மனைவியிடம்.
அவள் காந்தம், அவன் இரும்பு. அதில் மாற்றமில்லை.
ராட்சசியைக் கூட இவ்வளவு அழகாய் சொல்ல முடியுமா என்ன? அவன் சொன்னான். அருகிலிருந்தால் உயிரைத் தந்து.. விலகினால் உயிரை குடிக்கும் அவனின் செல்ல ராட்சசி அவள்.
தோளை அணைத்திருந்தவன் கை வழுக்கிக்கொண்டு மிருதுவாக மென்மையாக கீழ் இறங்க.. “லட்டு..” என லயித்துக் கொண்டே அவள் உள்ளங்கையில் முகம் முதைக்கும் எண்ணத்தோட அவள் கையை அவன் கன்னத்திற்குக் கொண்டு செல்ல.. எதையோ கைக்குள் அடக்கி வைத்திருந்தாள்.
“என்ன வச்சிருக்க?” கையை விரித்துப் பார்க்க.. உள்ளங்கையில் நெல்லிக்காய்.
புன்னகைத்தான். “ஆரம்பிச்சிட்டியா?”
அவள் கையிலிருந்த நெல்லிக்காயைக் கடிக்க, அதனால் வாயில்  சுரந்த எச்சிலை ‘ஸ்’ என்று கண்சுருக்கி காதில் ஜிமிக்கி ஆட ஒரு முறை சிலிர்த்து  கொண்டாள். நெல்லியைச் சுவைத்துக் கொண்டே முகத்தில் எழுந்த புன்சிரிப்போடே ஒரு புருவம் உயர்த்தி, “டேஸ்ட் வேணுமா?” கேட்டுக்கொண்டே மீதியிருந்த நெல்லிக்காயை அவள் வாய்க்குள் போட்டு அவன் ராட்சசி அழகாய் சிரித்தாள்.
இதுவரை ருசித்தது போதவில்லை போலும்.
சும்மாவே அவளைப் பார்த்தால் கிறங்கிப் போவான், தங்கக் கதிரில் சிரித்து கொண்டிருந்தது ஒரு லட்டு….
‘லட்டு…’ உருகி .. கிறங்கி… மயங்கி.. விழுந்தே போனான்.
அவன் மூளை அவளை மறந்திருக்கலாம். அவனில் உள்ள ஒவ்வொரு அணுவும் அவளை சுமந்துகொண்டிருக்கிறது. அவளை எண்ணாத பொழுதில்லை. உயிரோடு உணர்வோடு கலந்து விட்டவளை ஆசையாய் பார்த்துக் கேட்டான், “அது தான் எல்லாத்தையும் வாய்க்குள்ள போட்டுட்டியே.. என்னத்த டேஸ்ட் பாக்க?” என்று.
“டேஸ்ட் வேணுமா வேண்டாமா?” என்று நமுட்டு சிரிப்பு சிரித்தவளிடம் ஆசையாய் வாங்கிக்கொண்டான்.
வாய் புளிக்க, கண் சுருங்க… “எப்படி டி இத சாப்பிடுர..” மனைவியைக் கையில் பூக்குவியலாய் அள்ளிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.
இரு உள்ளங்களை கொன்று, வாழ்ந்த காதல்.. இன்று அந்த உள்ளங்களை உயிர்பெறச் செய்தது. காவிய காதல், இரு உள்ளங்களின் இறப்பில் வாழ்வது இல்லை போலும்.
“வாய இங்க கொண்டுவாங்க எப்படினு திரும்பவும் சொல்லித் தரேன்.. இந்த தரம் கொஞ்சம் நீளமா?” களுக்கென்று சிரித்தவளிடம்
“அடியேய்.. கத்தாதடி.. யார் காதுலயாது விழுந்திட போகுது?” அவன் ரகசியம் பேச.. யாருமில்லா அந்த தோட்டத்தில், பேசிய வாய்க்கு அவள் பாடம் எடுக்க..
“அம்மா.. புளிப்பு தாங்கல லட்டு..” கொஞ்சலாய்… குழைவாய்… ஏக்கமாய்..  
எத்தனை நாள் கனவில் நெல்லிக்காயை உண்டாள்.. அந்த கனவிலும் நினைக்கவில்லை நெல்லியைக் கனியாய் உண்பான் என்று. வாய் புளித்தாலும் உள்ளுக்குள் இனித்தது. அது விட்டுச் சென்ற இதம் பிடித்தது.
“பொண்டாட்டியை பாக்க வெறும் வாயா யாரு வரச் சொன்னது? கீழ கிச்சென் தாண்டி தானே வந்தீங்க? ஒரு அதிரசம்? பணியாரம்?..”
“விருந்தே சாப்பிட போரேன்… அதிரசம் எதுக்குனு யோசிச்சேன்?”
“ம்ம்கும்.. இது தான் வாய்லயே வட சுடரது… வந்து இவ்வளவு நேரம் ஆச்சு… போனா போகுதேனு ரெண்டு கிஸ்… அதுக்கே இந்த அலட்டலா?”
பாலைவனத்தில் சொட்டு நீருக்குக் காத்திருந்தவனுக்குச் சுனையாய்…
“ரெண்டா? ரெண்டு மணி நேரமா இங்க தான் இருக்கோம். ஆமா.. நீ இவ்வளவு பேசுவியா? புள்ளபூச்சீனு நினைச்சேன். வாயாடி… வாயடுர வாய அப்படியே கடிச்சுத் தின்ன போறேன் பாரு!”
“அதுவாது எப்படி செய்யணும்னு நினைவில இருக்கா…? இல்ல இப்போ என் கிட்ட கத்துகிட்டது தானா?”
“அடியேய்… மானத்தை வாங்காத டி என் லட்டு ராட்..சசி..”
மனம் எல்லாம் நிறைந்து போனது. அவர்களோடு நமக்கும். அவன் ராட்சசனாய் மாறி  விருந்தை அருந்துவானோ… ராட்சசிக்கு விருந்தாய் போவானோ… அது அவர்கள் வசதியைப் பொறுத்தது.
அதன் பலனாய் பத்து மாதத்தில் இங்கு ஒரு மழலை சத்தம் நிச்சயம் கேட்கும்! அதன் பின் அவன் மகளோடு அவளும் இதோ இதே மாமரத்தில் ஏறி அங்குள்ள குருவிக் கூட்டைப் பார்க்க தான் போகிறார்கள்.. அவர்கள் விழுந்து விடுவார்களோ என்ற பயத்தில் சுசிலா பதறத் தான் போகிறார். “பாட்டி இந்த முட்டையை எடுத்துட்டு வரட்டா.. நாம இந்த பேபி குருவியை வளக்கலாமா? அது மம்மி தேடாதே..” என்று கேட்கத் தான் போகிறாள்… கேட்பவர் உள்ளம் குளிரத்தான் போகிறது!  மகன் பிறந்தால்? அவன் கேட்பான், “பாட்டி முட்டையை எடுத்துட்டு வரேன்.. ஆம்லேட் போட்டு தருவீங்களா?” என்று! 
யாருக்குத் தெரியும்? அடுத்தடுத்து காதல் பரிசாய் இரண்டும் வரலாம். சுசிலா நிறுவனத்தை மகன் வசம் விட்டுவிட்டு பேரப்பிள்ளைகளோடு முழு நேரம் இன்பமாய் சுற்றலாம்.
“லட்ட்ட்டு..”
“ம்ம்ம்?”
“இந்த வெக்கம் வெக்கம்னு ஒன்னு இருக்குமே… அது என்னனு தெரியுமா உனக்கு?” அவளுக்கு வெட்கம் வந்ததோ இல்லையோ,  அவனுக்குள் துளிர்த்தது.
புன்னகை பொங்கி வழியக் கேட்டாள். “அப்படினா..? எந்த கடையில கிடைக்குதாம்?”
காதல் மடை திறக்க கொஞ்சலாய், “மாடியில நம்ம ரூம்ல இருக்காம்.. கொஞ்ச நேரத்தில அது எப்படி இருக்கும்னு காட்டறேன்..”
அவர்கள் பேசிக்கொண்டே செல்ல.. சத்தம் தேய்ந்துகொண்டே போனது.
“அச்சோ… நேரங்காலம் இல்லாம என்ன பேச்சிது…”
“பேச்சு மட்டும் இல்ல…”
ஏன் தேய்ந்து போனது சத்தம்? நாம் மரத்தடியில் நின்றுவிடவே!
மூன்றரை வருடம் பின் அவர்களின் தனிமையில் நந்தியாக நாம் எதற்கு? வாழட்டும்… எல்லா இன்பமும்.. செல்வமும் பெற்று காதல் நிறைந்த வாழ்வை வாழ வாழ்த்தி இங்கேயே நின்றுவிடுவோம்.
கடல் காற்றும் மல்லி மணமும், செண்பக மணமும் வீச.. அவர்கள் இன்ப அனத்தல் ஆரம்பித்துவிட்டது.
“ஏய்… என்ன சொல்லிட்டு.. என்ன பண்ற? இப்போவே அப்படி பாக்காத லட்டு..” குழைவாய் அவன் சத்தம்
“ஏனாம்..” ரகசியமாய் அவள்
“படுத்தரடி லட்டு..” ஒட்டு மொத்த மோகத்தையும் அள்ளி தெளித்த வார்த்தைகள்.. அவள் காது மடலில் இதழ் உரச..
“எப்படி? இப்படியா?” சிதறிய சோழியாய் அவள்
“உரசாத டி..” அவஸ்தையோடு அவன்
“தூக்கி வச்சிருக்கது நீங்க… என்னை சொல்லுங்க! சரி ஏன் உரசக் கூடாது..?” குழைவானக் கொஞ்சலாக அவள்
“தெரியாதா உனக்கு?” கிரக்கமாய் அவன்
“தெரியாது.. என்ன வேணும்?” வெட்கத்தின் சத்தம்
“நீ தான். நீ மட்டும் தான். எனக்கே எனக்கு மட்டும்.” அனைவரும் அறிந்த ரகசியத்தைத் தெவிட்டா காதலோடு அவள் இதழுக்கு உறைத்தான்.
“பதிலுக்கு என்ன கிடைக்கும்?” விடை தெரிந்தே பிஸினஸ் பேசினாள்.
“பதிலுக்கு என்னை முழுசா எடுத்துக்கோ.. உனக்கே உனக்கு மட்டுமா!”
கண்ணீர் மல்க கேட்டாள்… “இப்போவாது சொல்லட்டுமா?” என்று
“என்னத்த?”
“என் காதல..?”
“வேண்டாம்.. இந்த மாதரியே ஆயுசுக்கும் உணர்த்து” என்றான்.
கண்டிப்பாக உணர்த்தி உணர்ந்து கொண்டே இருப்பார்கள், அது நிச்சயம்.
இன்று வானம் இருட்டியிருக்கவில்லை. காற்றில் ஈரப்பதமும் அதிகமில்லை. அவர்கள் வண்ணமயமான வானம் இருட்ட போவதும் இல்லை.  

Advertisement