Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 78_1 
ஊசி விழுந்தால் கேட்கும் அமைதி! ஹாலில் வைத்திருந்த ஆள் உயரக் கடிகாரம், அதன் கனமான பெண்டுலத்தை ஆட்டி ‘டங்க்.. டங்க்..’ என அடித்து அங்கிருந்த மௌனத்தைக் கலைத்தது.
குழந்தைகள் மூவரும் உறங்கியிருக்க, டேனி வீட்டில் கடிகாரத்தின் சத்தம் மட்டுமே!
ஷாலினியும் ஜான்சியும் அங்கிருந்தோருக்கு தேநீர் கலந்து கொடுத்து, சாப்பிடப் பண்டங்கள் நிரப்பினர்.
ஒருவரும் ஒன்றும் பேசிக்கொள்ளவில்லை. அஷோக் தான் சுதாவின் கணவன் என்று தெரிந்துவிட அனைவர் மனதிலும் கொண்டாட்டம். அவனுக்குத் தான் நிலை கொள்ளவில்லை. சுதாவைப் பார்க்கும் ஆவலில் அவனால் இயல்பாய் இருக்க முடியவில்லை. ஏதோ பிரசவ அறை முன் தவம் கிடக்கும் கணவன் போல் இருப்பு கொள்ளவில்லை அவனுக்கு. கண்மூடி விரலால் நெற்றியை மணி நேரமாய் அளந்து கொண்டிருக்கிறான்.
அஷோக்கால் பேசமுடியவில்லை. காபியும் வேண்டாமென்று விட்டான். அனைவர் முகத்திலும் சொல்லொண்ணா பூரிப்பு! அவன்   அமைதியாய் இருக்கவுமே அனைவரும் வேறு வழியில்லாமல் அமைதி காத்தனர்.
ஜான்சி வீட்டிற்கு வந்து நேரமாகியும் சுதா வந்திருக்கவில்லை. மண்டபத்திலிருந்து திடீர் என்று, “நான் என் வீட்டுக்கு போறேன் அண்ணி!” என்றுவிட்டுச் சென்றவள் தான்.. இன்னும் வந்து சேரவில்லை. எங்குச் சென்றாள் என்று யாருக்கும் தெரியவில்லை. கைப்பேசிக்கு அழைத்தால் அது வீட்டிலே அடித்து ஓய்ந்தது.
அஷோக் அமைதியாக அமர்ந்திருந்தான். பார்க்க அப்படி தான் தெரிந்தது. மூன்று வருடத்திற்கு மேல் ஓட்டிவிட்டான்.. இப்பொழுது நொடி முள்ளைக் கூட யாராவது நகர்த்த மாட்டார்களா என்று பார்த்திருந்தான். அதுவும் அவனை சோதிக்கவென்று நகரவில்லை.
‘சுதா! என் லட்டு.. என் மனைவி!’ மீண்டும் மீண்டும் ஆசை தீர மனதில் அசைபோட்டுக் கொண்டான்.
‘என்னவளையே ஒதுக்கி வைத்து செத்துச் செத்து வாழ்ந்தேனே.. சுதா.. வா என்னிடம்..’ மனம் ஓலமிட்டது.
நெஞ்சில் புதைந்து போனவளை வலியோடு நித்தமும் பிய்த்து இழுக்க வேண்டாம். அவள் சிங்காசனத்தில் காலமெல்லாம் வீற்றிருக்கலாம்.. அவன் மனைவியாய். மனம் துள்ளிக் குதித்தது.
எங்கே அவன் அவளைத் தேடி செல்லும் நேரம் அவள் இங்கு வந்து விட்டால்? அதற்காகவே அமைதியை தொலைத்து அமைதியாய் அமர்ந்திருந்தான். ‘வீணாக்கிய வருடங்கள் போதாதா… எங்குப் போனாள் இவள்?’
மணி ஐந்து தொடவும் அஷோக் எழுந்து விட்டான். அவனால் அதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
ஜான்சியை கூப்பிட்டான். நூறாவது முறையாகக் கேட்டான், “அவ என்ன சொல்லிட்டு கிளம்பினா? வீட்டுக்கு தானே வரேன்னு சொன்னா? நல்லா யோசிச்சு சொல்லுங்களேன். ஏதாவது மிஸ் பண்ணிட்டீங்களா?”
“வீட்டுக்கு போரேன்னு சொல்லிட்டி உடனே கிளம்பிட்டா. நானும் வரேன்னு சொன்னதுக்கு.. வேண்டாம் உங்க ஃப்ரெண்டோட வளைகாப்பு ஃபங்ஷன் முடிஞ்சதும் நீங்க கிளம்புங்கனு சொன்னா!”
அதுவரை வெளியில் சென்றதாக கூறப்பட்டிருக்க.. இப்போது தான் வளைகாப்பு என்ற வார்த்தையை ஜான்சி உதிர்த்தாள். ஒருவரும் பிருந்தாவின் வளைகாப்பு ஒரு பொருட்டாக இருக்கும் என்று எண்ணவில்லை.
பொறுமை வற்றிப்போனவன், நெற்றி சுருங்க “வளைகாப்பா?” எனவும்
அவன் கேட்ட வேகத்தில் கொஞ்சம் பயந்து தான் போனாள். “ஆமா.. என் ஃப்ரெண்டுக்கு” என்றாள் தயங்கித் தயங்கி.. 
“உங்க ஃப்ரெண்ட் பேரென்ன?” சந்தேகமாய் கேட்டவனிடம்
“பிருந்தா..” என்றதும்…
முகம் சட்டென்று மாற… நொடியில் மனம் கணக்குப் போட்டு முடித்தது.
“பிருந்தா? அஃப் கோர்ஸ் இட்ஸ் பிருந்தா!” என்று தலையை ஆட்டிக்கொண்டே புன்னகைத்தான்.
“என்னாச்சு பாஸ்?”
“ஒன்னும் இல்ல கார்த்தி. அவ சரியான இடத்துக்குத் தான் போயிருக்கா. நாம தான் தப்பான இடத்தில காத்திட்டு இருக்கோம். அவ, வீடுன்னு சொன்னது… அவ வீட்டை. அங்க தான் இருக்கா…” அதன் பின் வினாடி தாமதிக்கவில்லை.
அவன் அம்மாவை வெகுநாள் கழித்துத் தேடினான். தன் வாழ்வின் சுகத்தைப் பகிர்ந்துகொள்ள…
காருக்கு இறக்கை முளைத்தது. வீட்டிற்கு விழுந்தடித்துக்கொண்டு சென்றவன், அடுக்களையிலிருந்து சத்தம் வர அங்கு ஓடினான்… மைதிலி சமைத்துக் கொண்டிருந்தாள்.
‘எங்க டி போன..’ மனம் பரபரக்க, மாடிப் படிகளை இரண்டும் மூன்றுமாகக் கடந்து அவர்கள் படுக்கை அறைக்குச் செல்ல… மெத்தையில் கண் நிலைத்து நின்றது.
உடைகள் அங்குமிங்குமாய் களைந்திருக்க, பட்டுப் புடவை ஒன்று மெத்தையில் கிடந்தது.. வருடங்கள் முன் விட்டுச் சென்ற பெட்டி மேசையில் திறந்திருக்க, அதிலிருந்தும் துணி இறைத்திருந்தது. நேர்த்தியற்ற அறை ஒருவனுக்கு இத்தனை மகிழ்ச்சியைத் தர முடியுமா என்ன?
புடவையைக் கையில் எடுக்க, சுதாவையே தொட்ட உணர்வு. அதில் முகத்தைப் புதைத்துக் கொள்ள உடல் சிலிர்த்து நின்றது. அவன் சுதா.. அவன் மனைவியாய் வாழ்நாள் முழுதும் அவனோடு இதே அறையில்… மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.
நேற்று வரை அருங்காட்சியகமாய் இருந்த வீடு இன்று நந்தவனமாய் தோன்றியது. பார்த்த எல்லாம் அழகாய் தோன்றியது. பிடிக்காத அறை பிடித்தது. கலைந்தே கிடக்கப் போகும் மெத்தை கண்ணை ஈர்த்தது. சுவரிலிருந்த ஓவியம் சிரித்தது. ஏதோ மேகத்தின் மத்தியில் இருப்பது போன்ற உணர்வு.
“ராமுண்ணா வந்துட்டாங்களா? டேய் ஓடுங்கடா… மாமா வந்துட்டாங்க!” வேறு யார்? அவன் மனைவியே தான்!
வீட்டின் பின்னிருந்த தோட்டத்திலிருந்து குட்டி வானரங்களின் சத்தத்தோடு அவள் சத்தம் குயிலிசையாய் கேட்டது.
‘என் மனைவியின் குரல்’ மனைவி என்ற வார்த்தை கூட இனித்தது.
“பனை மரம்… வந்தாச்சா?” சத்தம் கேட்க, பால்கனியிலிருந்து எட்டிப் பார்க்க கீழே மரக் கிளையிலிருந்தாள்.
“பார்த்திட்டே இருந்தா.. யாரு என்னை இறக்கி விடுறது?” வாயடித்தாள்.
மாமரத்தின் கிளையில் கொலுசொலிக்க காலை ஆட்டிக் கொண்டு அமர்ந்திருந்தவள்  ஜூட் சில்க் புடவை உடுத்தியிருந்தாள். மூன்று மாதம் முன் மெத்தையை மாற்றும் பொழுது அதனடியிலிருந்து பொக்கிஷமாய் கிடைத்த அவளின் புடவை. அதன் பின் விசாரித்ததில் மைதிலி பெட்டியை எடுத்துக் கொடுத்திருந்தாள். கூடவே சில பல அர்ச்சினைகளையும் வாங்கினாள்.. அது வேறு கதை.
பின் குத்தாமல் மாராப்பை அள்ளி வாரிப் போட்டு அது சரிந்து கீழே விழாமலிருக்க முந்தியை இடுப்பில் சொருகி இருந்தாள். முடியில் ஒரு சின்ன க்ளிப்பிட்டு தலை நிறைய மல்லியுமாய் அவளின் அக்மார்க் வசிகர புன்னகையுடன் காந்த விழிக் கொண்டு அவனை தான்  அண்ணாந்து விழி தூக்கிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
நொடியில் கீழே தோட்டத்திற்கு ஓடி வந்தவன் அவளைக் கண்டதும் பத்தடி முன்பே  நின்றுவிட்டான்.  
கடைசியாக ஒரு குட்டி வானரம் ஓடிக்கொண்டிருந்தது. மரக்கிளையிலிருந்து குதிக்கும் முன் சத்தம் கேட்டு தலை உயர்த்த சற்று தொலைவில் கண்ணன். அவள் கண்ணன். மூச்சு விடவே சிரமாய் போக.. அதன் பின் எங்கு குதிப்பது. வாயடித்தவள் மௌனியானாள்.
காண லட்சம் கண் வேண்டும் அவர்கள் காதல் பார்வையை. சுற்றி இருந்த எல்லாம் மங்கலாய் போக, அவன்.. அவன் மட்டும் தான் தெரிந்தான். வண்ணமயமாக. அவளின் எல்லாமாக.
சுதாவின்… இல்லை லட்டின் மாய கண்ணன். மயக்கும் குறுஞ்சிரிப்பு இல்லை. இருந்தும் மயங்கித் தான் போனாள் பெண். குளிராய்.. அனலாய்.. அவஸ்தையாய்.. அமரவும் முடியாமல் குதிக்கவும் முடியாமல் மூச்சு முட்டும் இன்ப அவஸ்தை. அருகில் வந்தால், அவனுக்குத் தோலாய் மாறும் வேகம். ‘இன்னும் என்ன? வா’ பேச நா எழவில்லை. இதயத்தின் அழைப்பு அவனுக்குக் கேட்டிருக்கும் போலும்.
சோலையின் நடுவே மரக்கிளையில் வீற்றிருந்தவள் மேல் இலைத்தழைப்பினூடாக மாலை வெயில் தன் தங்கக் கதிரை முகத்தில் தெறித்துச் சிதறிச்சென்றது.. தங்க விக்கிரகமாய் தெரிந்தாள்.
கால் நகர மறுக்க.. சிலையாய் நின்றுவிட்டான். இப்படி தான் வருவாள், கனவில். அவன் தொடுமுன் காற்றோடு மறைந்து போவாள். இது கனவாய் மாறிப்போனால்? அவள் மறைந்து போனால்? கால் நகர மறுத்தது.
அவன் மனைவியை கண்ணில் பருகிக்கொண்டே, உள்ளம் துடிக்க.. உயிர் துடிக்க நின்றவன் மனம் அடித்துச் சென்ற காற்றோடு அவள் காலடியில் விழ.. நடை மறக்க கால் நின்றேவிட்டது.
நினைக்கவில்லையே… இந்த திருநாள் அவன் வாழ்வில் வரும் என்று நினைக்கவே இல்லையே. செத்துச் செத்தே வாழ்ந்து முடிப்பான் என்று எண்ணியவனுக்கு இது இன்ப அதிர்ச்சி. அவளைப் பற்றி கனவு காணக் கூட அருகதை இல்லை என்று நினைத்திருக்க… அவளோ இரத்தமும் சதையுமாய் உணர்வு பொங்க அவன் முன். அவனுக்கு மட்டுமே சொந்தமாய். அவன் காதல் மனைவியாய்!
மூச்சு விடவா.. வேண்டாமா?
புன்னகைக்கவா.. வேண்டாமா?
நகரவா.. வேண்டாமா?
இருவருக்குமே அவஸ்தையான நிமிடம்.
செயற்கை அருவியின் சலசலப்பும்.. பறவைகளின் மெல்லிசையும் பின்னிசையாய் மாற.. அவள் மலர்ந்த வசீகர முகமும் காந்த பார்வையும் அவனை அவள் வசம் இழுக்கத் தான் செய்தது.
பார்வை பசையாய் அவள் மேல் ஒட்டிக்கொள்ள… அடி மேல் அடியாய் மெல்ல நடந்தான், கீழே கிடந்த சருகுக்கும் வலிக்காமல். அவன் நடக்க… அவளுக்கு மூச்சு வாங்கியது.
அவன் அருகில் வரவும் மூச்சு இன்னும் அதிகமாய் அவளுக்கு வாங்க.. இதழ் தன்னால் பிரிந்தது. இருபுறமும் தொங்கிக் கொண்டிருந்த கை மரக்கிளையை இறுக பிடித்துக் கொண்டது.
அவன் மார்பு உயர மரக்கிளையில் அமர்ந்திருந்தாள். குதித்துவிடும் உயரம் தான். தன்னை மறந்தவளுக்கு அது தோன்றவில்லை. வந்து விட்டான். மிக அருகில் நின்றான். அவன் மணம் நாசி வழி உள் சென்று பாடாய்ப் படுத்த..
தலை உயர்த்தி கண்களால் விழுங்கிக் கொண்டிருந்தவனை அவளும் தலை கவிழ்ந்து கண் இமைக்காமல் பார்க்கத்தான் செய்தாள். இவனைக் காணத் தானே இத்தனை பாடு! கோலிக்குண்டு விழி நிலையில்லாமல் உருண்டு கொண்டே அவனைப் பருக.. அவன் விழி அசையவில்லை.
அவள் கண்ணுக்குள் அவனைத் தேடினானோ? பார்த்த இருவருக்கும் போதவில்லை. பார்க்கப் பார்க்க இன்னும் இன்னும் பார்க்க வேண்டும் போல…
தெவிட்டா உயிருள்ள ஓவியம் போல அவளும் ஓவியத்தைத் தீண்டும் தூரிகையாய் அவன் பார்வையும்…
இங்கு தான், இந்த இடத்தில் தான், இதே மரத்தடியில் தான் முதல் முதலாய் அவள் விழி வழி அவன் உள்ளே நுழைய, அவளோ நேரே அவன் நெஞ்சுக்குள் தஞ்சம் புகுந்திருந்தாள். சரித்திரம் திரும்பியது அவர்களுக்காக. 

Advertisement