Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 77
சுதா மண்டப வாசலில் பேசிக்கொண்டிருக்க, உள்ளே நுழைந்த ஜான்சியின் கண்கள் அருணாவைத் தேடிக் கண்டுபிடித்தது. முதல் வரிசையில் கணவனோடு அமர்ந்திருந்தாள். அவள் ஏதோ பேசிக்கொண்டிருக்கத் தலையைக் குனிந்து காதை அவள் வாயருகில் வைத்துக் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் கை அவள் இருக்கையைச் சுற்றி இருக்க.. பார்க்க அவளை அணைத்துக் கதை பேசுவது போல் அழக்காய் இருந்தது. அவன் முகத்திலும் மென்மை கரைபுரள கண்ணில் காதல் இழைந்தோடியது. மூன்று வருடம் முன் ஒரு கோவில் திருமண வைபவத்தில் பார்த்த அதே அருணாவின் கணவனா இது? அவனே தான் போலும்.. இன்று அனைவர் கண்ணுக்கும் அவன் ராஜ காளையோடு ராஜகுமாரன் போல் தான் தெரிந்து கொண்டிருக்கிறான்.
அவன் ஏதோ அவள் காதில் சொல்ல, முகம் சிவக்க அவன் கையில் செல்லமாய் அடி வைத்தாள். “கொஞ்சம் சும்மா இருக்க மாட்டீங்களா? போங்க உங்க மகன பிடிங்க.. ஓடிட்டே இருக்கான். எங்கேயாது விழுந்து வைக்கப் போரான்.”
கணவன் மனைவி, இருவர் முகத்திலும் அளவில்லா மகிழ்ச்சி குடிகொண்டிருந்தது.
அருணாவின் மாமியார் மூத்த மகனோடு பெங்களூரில் வசிக்க, அருணாவிற்கும் அவள் கணவனுக்குமிடையே பிளவை உண்டு பண்ண ஆளில்லை.
பிருந்தா முயற்சி எடுத்து இருவரையும் மேரேஜ் கௌன்ஸ்லிங் அனுப்பியிருக்க, அது நல்ல பயன் தரவே செய்தது. கடந்த மூன்று வருடத்தில் இருவருக்குமிடையே பெரிய மாற்றம். அருணாவை விவாகரத்து செய்துவிடும்படி அவன் தாய் கூறவுமே விழித்துக் கொண்டான். அதன் பின் தான் மனைவியோடு இசைந்து வாழ எல்லா முயற்சியும் எடுக்க ஆரம்பித்தான்.
காதல் மிகுதியால் இன்று அவள் சிப்பி-வயிற்றில் அவர்களின் காதல் பரிசு. இன்னும் இருவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அது தெரியவும் அருணாவை அவள் இராஜகுமாரன் தாங்கப் போவது திண்ணம். அவள் ஆசைப் பட்ட படியே அவன் கன்னத்தை அவள் வயிற்றில் வைத்து பிள்ளையின் அசைவைக் கண்டிப்பாகக் கேட்பான். அவன் இழந்த இன்பத்தை எல்லாம் இரண்டு மடங்காக வசூலித்து அவள் இழந்ததை இரட்டைதனையாகத் தர தான் போகிறான்.
“ஹாய் ண்ணா.. ஹாய் டி”, சிரித்துக்கொண்டே அருணா அருகில் ஜான்ஸி அமர்ந்துகொண்டாள்.
“அண்ணா.. வீட்டுக்கு வாங்கண்ணா. இந்த தரம் ரெண்டு நாள் தங்கி இருந்திட்டு தான் போகணும்” ஜான்சி
“ஏய்.. போன வாரம் தானே கிரகபிரவேசத்துக்கு வந்து தங்கினோம்.. ஏதோ வராத மாதரி அலுத்துக்கர” அருணா கூற..
இருவரும் அதையும் இதையும் என்று ஏதேதோ பேசிக்கொண்டிருக்க..
ஜான்சி அருகில் சென்று அமர்ந்துகொண்டாள் சுதா. மணியின் பேச்சால் ஏற்பட்ட குழப்பம் முகத்தில்!
கண் சுசிலாவைத் தேடியது. கண்டு பிடிக்க முடியவில்லை. மனம் கண்ணனை நோக்கி பாய்ந்தது. கண்ணன் வருவானா? ஒரு முறை பார்க்க ஆசை தான். ஆனால் எதற்கு.. அவன் குடும்பத்தில் வீண் குழப்பம்.
பெருமூச்சோடு, கையிலிருந்த ஜூசை வாயில் ஊற்றிக் கொண்டே அண்ணி அருகில் அமர்ந்தவள் அடுத்ததாய் மேடையைப் பார்க்கத் தாய்மை தந்த அழகான வயிறோடும், முழு பொலிவோடும் சிரித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா!
ஆர அமர அமர்ந்தவள், இருக்கையிலிருந்து பட்டென்று எழுந்துவிட்டாள்.
வாயில் ஊற்றிய ஜூஸ் தொண்டையைத் தாண்டி கீழே இறங்காமல் அங்கேயே மாட்டிக் கொண்டு நின்றது.
‘ஐயோ…. இங்கா வந்தேன்?’ மணி… சுசிலா… கண்ணன்… தலை சுற்றியது.
‘அண்ணிக்கு எப்படி பிருந்தாவை தெரியும்?’
அவளுக்குப் புரை ஏறவும்.. “பார்த்து குட்டிமா…” கூறிக்கொண்டே முதுகில் தட்டி விட்ட அண்ணியிடம் மேடையிலிருந்த பிருந்தாவைக் காட்டி, “அண்ணி… இவங்க?” என்று மென்று விழுங்க..
அதே தருணம் சுதாவைப் பார்த்துப் புன்னகைத்தாள் பிருந்தா. புன்னகைத்தவளைப் பார்த்து புன்னகைக்க வேண்டாமா? சுதாவிற்கு ஒன்றுமே தோணவில்லை. பார்த்துக்கொண்டே நின்றிருந்தாள்.
“என்னோட கூட படிச்சவ! சின்ன வயசு ஃப்ரெண்ட். பிருந்தா. நான் அருணா பிருந்தா… நாங்க மூனு பேரும் ரொம்ப க்ளோஸ். ஸ்கூல்ல எங்களை முப்பெரும் தேவியர்ன்னு கூப்பிடுவாங்க” அவள் கதையை அவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்க..
சுதா ஒரு நிலையிலில்லை. அழுகை வந்துவிடும் போல் இருக்க… மூச்சை இழுத்து பிடித்துக் கொண்டாள்.
“நான் கிளம்பறேன் அண்ணி..”
“இப்போ தானே வந்தோம்… உக்காரு. நான் வெளியில போனேன்.. அவ மேடைய விட்டு கீழ வந்து என்னை கொன்னே போட்டுடுவா!”
அழவும் முடியாமல்… அமரவும் முடியாமல் அவஸ்தையாய் போனது, சுதாவிற்கு.
“அவ இப்போ டாக்டர். கல்யாணம் ஆன கையோட ரெண்டு வருஷம் கிட்ட லண்டல இருந்தா… அங்க தான் படிச்சா! வயத்தில ட்வின்ஸ்ஸா.. அதனால நாலு மாசம் இருக்கும் போதே அம்மா வீட்டுக்கு வந்துட்டா!”
சுதாவின் இதயம் தட தடக்க ஆரம்பித்தது. இன்னும் சிறிது நேரத்தில் கண்ணன் வருவானே.. மேடை ஏறுவானே… அவளால் பார்க்க முடியுமா? கண்ணனோடு பிருந்தாவை? அவனை விட்டுக் கொடுத்துவிட்டுச் செல்லும் போது இருந்த அதே வலி. இதயத் துடிப்பு அதிகரித்தது. அதன் துடிப்பும் அவஸ்தையும் தாங்கத் தான் முடியவில்லை.
கண்கள் அஷோக்கைத் தேடியது. எல்லா இடமும் தேடியாயிற்று அவனைக் காணவில்லை. மீண்டும் மேடையில் கண் நிலைக்க..
பிருந்தாவின் அருகில் ஒரு ஆடவன் அமரவும், ‘யாரிது?’ என்று சுதா நினைத்து முடிக்கும் முன், அவன் எழுந்து பிருந்தாவின் கழுத்தில் மாலை அணிவித்து கையிலும், கன்னத்திலும் சந்தனம் பூசி நெற்றியில் குங்குமம் வைக்க, சுதா எழுந்தே விட்டாள்.
முதல் வரிசையில் அமர்ந்த சுதா எழுந்ததும் ஜான்சி மட்டுமல்ல பிருந்தாவும் கவனித்தாள். சுதாவிடம் இருந்து பார்வை அகலவே இல்லை.
ஜான்ஸி, “என்ன சுதா? எதுக்கு சும்மா சும்மா எழுந்துக்கர? வீட்டுக்கு போரதில என்ன தான் அவசரம்?”
“அண்ணி.. அது.. அங்க இருக்கவர்?”
“ஜீவா அண்ணா. அவ புருஷன்.”
‘என்ன? என்ன சொன்னார்? ஒழுங்காகக் கேட்டதா?’ மனம் திக் திக் என்று எகிறி குதித்துக் கொண்டிருக்க… ஒழுங்காக கேட்டதா என்ற குழப்பம்.
“என்ன? என்ன அண்ணி சொன்னீங்க? ஹஸ்பன்டுனா சொன்னீங்க? இவரா பிருந்தா ஹஸ்பன்ட்?” இல்லை என்று விடக் கூடாதே… மனம் பதை பதைத்து. கடவுள் காலில் விழுந்தே விட்டாள். ‘ஆண்டவா… கேட்டது உண்மையாக இருக்க வேண்டுமே..’ இன்னும் அண்ணியிடமிருந்து ஏன் பதில் வரவில்லை…? நொடி கூட நகர மறுத்தால் என்ன தான் செய்வாள்?
மூன்று மாதம் முன் கண்ணன் மடியில் விழுந்த நொடி முதல் அவன் விரல் பிடித்து பிரிந்த நொடி வரை மனதில் வந்து போனது. அவன் முகம்.. அதிலிருந்த வேதனை… ‘ஐயோ…. என்ன செய்து வைத்திருக்கிறேன். எனக்கு ஒரு குடும்பம் இருப்பதாய் நினைத்தவன் மனம் எப்படி எல்லாம் துடித்துப் போயிருக்கும்?’ மனம் துவண்டு போனது.
“ஆமா இவர் தான் பிருந்தா புருஷன். அவ கல்யாணம் ஒரு பெரிய கதை! முதல்ல இவர தான் இவளுக்கு பார்த்தாங்க. அப்பறம் வேர ஒருத்தரை விரும்பரதா சொன்னா… ஆனா அவருக்கு வேர பொண்ணு மேல விருப்பம் போல.. ஏதோ கட்டாயத்தில மணமேடை வரைக்கும் போய்ருக்கார். ஆனா தாலி கட்டர நேரம் அவரும் கட்டல இவளும் வாங்கிக்கல.. கடைசி நிமிஷம் வரைக்கும் அவர் அந்த பொண்ணையே தேடிட்டு இருக்கவே இவ வேண்டாம்னு சொல்லிட்டா போல. அன்னைக்குத் தான் நாம முதல் முதல்ல சந்திச்சோம்!”
‘என் கண்ணன்… எனக்கு மட்டுமே’ போன உயிர் மீண்டது.
“அந்த மனுஷனுக்கு வேற பொண்ணு மேல விருப்பம் இருக்கும் போது இவ கூட எப்படி குடும்பம் நடத்த முடியும்? அருணா சொன்னா கல்யாணத்தன்னைக்கு சாவு வீட்டில உக்காந்திருந்த மாதரி இருந்தாராம். அவர மட்டும் இவ கல்யாணம் பண்ணி இருந்தா இப்படி சந்தோஷமா இருக்க வாய்பே இல்ல. அவளே ஒத்துகிட்டா..  
பத்திரிக்கை வைக்க வந்த அன்னைக்கு அருணா தான் அவள உக்கார வச்சு அவர கல்யாணம் பண்ணவே பண்ணாதனு ஒரே அட்வைஸ்! அருணா புண்ணியத்தில பிருந்தா வாழ்க்கை தப்பிச்சுது!”
கூறிக்கொண்டிருந்தவள், அசைவில்லாமல் நின்றவளை பார்த்து, “சுதா என்ன ஆச்சு?” என்று உலுக்கவும்,
“ஒன்னும் இல்லண்ணி..” என்று அப்படியே கண்ணை மூடி அமர்ந்துவிட்டாள்.  உணர்வுகள் முட்டி மோதிக்கொண்டு வந்தது. கண்ணனை பார்த்து.. ஈர்த்து.. வேர்த்து.. பிரிந்து.. தவித்து.. எல்லாம் நினைவில் வந்தது. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மூன்றரை வருடம்.. எத்தனை எத்தனை தாங்கொண்ணா துயரம்… எத்தனை தூங்க இரவு. எத்தனை முறை இறந்துவிட முடியாதா என்று தவித்தாள். அனைத்தும் தேவையே இல்லாத வேதனைகள். ‘யாருக்காகவும் என்னை விட்டுடாத லட்டு’ எத்தனை கலக்கத்தோடு கூறினான். எப்படி விழிப்பேன் கண்ணன் முகத்தில்? ‘எப்படி என்னை நீ நம்பாமல் போனாய்’ என்று கேட்டால் என்ன செய்வேன்.
உடலெல்லாம் வியர்க்க… மனம் பதைபதைக்க அசைவில்லாமல் அமர்ந்தே இருந்தாள். ‘கண்ணா மன்னிப்பாயா..’ மனம் யாசித்தது.
பஸ்டன் மாலில் கண்ணன் அவளை அணைத்து, கூறியதுமே தெரிந்திருக்க வேண்டாமா? அவன் மனதிலும் வாழ்விலும் வேறு ஒருத்திக்கு இடமில்லை என்று! அவன் கண்ணிலும், அவன் குரலில் இருந்த வலியை ஏன் அன்றே உணறவில்லை?
அவளுக்குத் தெரிந்திருக்க வேண்டாமா? அவன் மறந்தாலும் நித்தமும் அவள் மட்டும் தான் அவன் நிலைவில் என்று! அவள் மட்டும் தான் அவன் உயிரில் உணர்வில் கலந்தவள் என்று! எப்படி அவள் உயிரைப் பிரியலாம்? பிரியும் வேளை அவன் உயிரை எடுத்துவிட்டல்லவா சென்றாள்.
முடிந்த தருணங்கள் மீண்டும் வரப் போவதில்லை, அதை நினைத்து வருந்தி என்ன பயன்? அவர்கள் சேர்வதற்கு இனி தடையில்லை. நினைத்த மாத்திரத்தில்… இதயத்தில் ஒரு மெல்லிய சாரல். உடலில் ஒரு படப்படப்பு. ‘கண்ணனாவது உன்னைக் கோபித்துக் கொள்வதாவது. இன்னும் இங்கு என்ன செய்கிறாய்? ஓடு ஓடு’ என்றது மனம்.
அந்த கூட்டத்தில் அருணாவைக் கட்டி அணைத்து, அவன் கன்னம் சிவக்கும் வரை முத்தம் கொடுத்தாள். ஆயிரம் ‘த்தாங்க்ஸ் கா’ என்றாள் கண்ணீர் மல்க. யாருக்கும் ஏன் என்று தான் புரியவில்லை.
பிருந்தாவிற்கு புரிந்தது. இதயம் கனத்துப் போனது. அவர்கள் பிரிய அவளும் காரணமாயிருந்தவள் அல்லவா? இனி நாளுக்கு நான்கு முறை அஷோக்கிற்கு, ‘நான் இங்கு சுகமே.. நீ அங்கு சுகமா?’ என்று அழைப்பு விடுக்க வேண்டாம். அஷோக் வாழ்வில் இன்றோடு எல்லாம் சரியாகி விடும் என்ற நம்பிக்கை துளிர்த்தது.
பிருந்தாவைப் பார்க்க அவளும் இவளைத் தான் பார்த்து நின்றாள். இருவர் முகத்திலும் சொல்லொன்னா உணர்வலைகள். கண் வரை முட்டி நின்ற கண்ணீர் இருவருக்கும் பொது. மூக்கு விடைக்க… எச்சில் விழுங்கி நின்றனர். இருவருக்கும் இருந்த இடம் மறந்து போனது. மேடையிலிருந்த அவள் பார்வையும் கீழே நின்றிருந்தவள் பார்வையும் ஆயிரம் பேசிக்கொண்டது.
இருவர் பார்வையும் தழுவிக்கொள்ள.. சுதாவின் பார்வை பிருந்தாவின் வயிற்றை வருட… பிரிந்தா அவள் கையால் வயிற்றை வருடிக்கொண்டாள். அதில் ஒரே ஒரு அர்த்தம் இருந்தது. நான் உன் வழியில் இல்லவே இல்லை என்று!
சுதா கை தானாய் பிருந்தாவை பார்த்து கூப்ப.. இருவர் கண்ணிலும் கண்ணீர் மடை திறந்தது.. இதழ் புன்னகைக்க  அவள், “போ… சந்தோஷமா இரு” என்றாள், நீர் கோர்த்த கண்ணால்.
பிருந்தா கண்ணீரைத் துடைக்க ஜீவா வந்துவிட்டான், “என்னடா பேபி பண்ணுது? முடியலியாமா… உள்ள போலாமா பேபி… என்ன பண்ணுது பேபிமா..? இது எல்லாம் வேண்டாம்னு சொன்னா கேக்கரியா? கழுத்தில மாலை வெயிட்டா இருக்கா? கழட்டிடட்டுமா?” என்று. அவன் குரலில் தான் எத்தனை தவிப்பு… காதல்..
காலையிலிருந்தே பிருந்தா முகமும் சரி இல்லை. மூச்சு அதிகமாக வாங்கியது. வயிறு நன்கு இறங்கியிருக்க… ஜீவாவிற்கு இன்று வலி வந்துவிடுமோ என்ற சந்தேகம். அவளை ‘தாங்கோ தாங்கென்று’ தாங்கினான்.
‘பேபி.. பேபி’ என்று அவளை, நிமிடம் கண்பார்வையை விட்டு நகரவிடவில்லை.
இரட்டையர் என்று தெரிந்த பின் எத்தனையோ முறை கூறிவிட்டிருந்தான் கடைசி நிமிடம் வரை வளைகாப்பைத் தள்ளி வைக்க வேண்டாமென்று. இன்று தான் நடக்க வேண்டும் என்றிருக்க அவன் என்ன செய்யமுடியும்?
அவர்கள் குழந்தைகளின் பிறந்த நாளன்று சுதா அஷோக் மீண்டும் உயிர் பெற வேண்டும் என்றிருக்க.. அவனால் என்ன செய்திருக்க முடியும்?  

Advertisement