Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 76_1
கெட்டி மேளம் முழங்க, நாதஸ்வரம் இசைக்க.. கட்டும் தாலியால், புது பந்தம் ஏற்பட, இரு ஜீவன்களின் வாழ்வு மாறிப்போகும்.  
அன்றும் அப்படி தான்.. சுமார் மூன்றரை வருடம் முன் ஒரு நாள், ஒரு மலைக் கோவிலில் ஒலித்த  ‘கெட்டி மேளம்’ என்ற சத்தம் நான்கு ஜீவன்களின் வாழ்வை ஒரேயடியாய் புரட்டிப் போட்டது.
அஷோக், பிருந்தா மணவறையில் வீற்றிருந்தனர். மணக்கோலத்தில் ஆயிரம் கனவோடு வீற்றிருக்க வேண்டிய இரு இதயங்களும் ஏகப்பட்ட குழப்பத்தில்.
மணமகன் கண்ணும் மனமும் அவன் அணுவரை துளைத்துச் சென்றவளை தேட.. மணமகள் கண்ணோ எதிரே இருந்தவன் கலவர முகத்தில் நிலைத்திருந்தது.
இப்படி ஒரு சூழலில் ஐயர், அவர் செய்ய வந்த வேலையை செய்யும் நோக்கத்தோடு தாலியை வீட்டின் மூத்தவர் கையில் கொடுத்து மணமகனிடம் கொடுக்க சொல்ல… வாங்கியவர் மங்கள நாணைக் கண்ணில் ஒற்றி மணமகனிடம் நீட்ட.. அங்கு முழங்கியது ‘கெட்டி மேளம்’ என்ற ஒலி!
கணவன் இன்னொருத்தி கழுத்தில் மங்கலநாணைப் பூட்டுவதை பார்க்க த்ராணி இல்லாமல் சுதா அங்கிருந்து சென்றிருந்தாள். அஷோக் நீட்டப்பட்ட மாங்கல்யத்தை எச்சில் விழுங்கி உயிர் பிரியும் வலியோடே பார்க்க… பிருந்தாவின் பார்வை ஜீவா மேல்.
அதுவரை இருக்கையின் நுணியில் அமர்ந்திருந்தவன், அவள் பார்வை அவன் மேல் நிலைக்க இருக்கையில் வாகாய் அமர்ந்து கொண்டான், கையை மார்புக்குக் குறுக்காய் கட்டிக் கொண்டு.
அஷோக் தாலிக் கயிற்றை வாங்கியிருப்பானா மாட்டானா என்று தெரியும் முன்னே அதைக் கையில் வாங்கியது பிருந்தா! அஷோக் கேள்வியாய் அவளைப் பார்க்க, ஜீவா முகத்தில் புன்னகை. அறிந்திருப்பான் போலும்.
தாலியைக் கையில் வாங்கியவள் சலசலப்பைக் காதில் வாங்காமல், அருகிலிருந்த அறைக்குச் சென்றாள். பின்னோடு வந்த குடும்பத்தை.. ‘ப்ளீஸ்..’ என்ற ஒற்றை வார்த்தையும் அவளின் ஒற்றை பார்வையும் தூர நிருத்தியது. பெற்றவர்கள் விழிக்க, “நான் பேசறேன்” என்று அவன் பின்னால் சென்றான் அஷோக்.
‘அவன் நிறுத்தியிருந்தால் அவனை வீட்டார் தூற்றா மாட்டார்களா? இனி ஒருவரும் அவனை ஒரு வார்த்தை கேட்க மாட்டார்களே. இதற்கு மேல் வாழ்ந்து என்னத்தை சாதிக்க?’ எண்ணங்கள் அலை மோத, நெஞ்சு வெடித்துவிடும் வலியை முகத்தில் காட்டாமல் ஜன்னல் கம்பியை இறுகப் பிடித்து வெளியே வெறித்து நின்றிருந்தாள். 
அஷோக் என்ன பேசுவான்? அவளை இந்த நிலையில் தள்ளியது அவனல்லவா? ‘ஏன் இந்த கொடுமை எனக்கு… என்னால் என்னைச் சுற்றி இருப்பவர்களுக்கு ஏன் நிம்மதி இல்லை’ என்ற கழிவிரக்கம்.
லட்சம் கனவைச் சுமந்து அவனுக்காகத் தவமிருந்து மணமேடை வரை வந்தவள் அவன் கண்ணீர் காணச் சகிக்காமல் எழுந்து வந்திருக்க என்ன சொல்லி அவளைத் தேற்றுவான்?
“ஏன் பிருந்தா?” என்றான் தொண்டை கரகரக்க..
அழுகை முட்டு கொண்டு வந்தாலும் இனி அவள் கண்ணீர் துடைக்கும் உரிமை அவனுக்கில்லை… அதனால் அதை அவள் உள்ளிழுத்துக் கொண்டாள்.
“போ அஷோக்” என்றாள்.
“வா பிருந்தா.. எல்லோரும் காத்திருக்காங்க” என்றான் ஜீவனே இல்லாமல்.
“நீ போ அஷோக்” என்றாள்.
“என்னை உன்னால மறக்க முடியுமா? முடியும்னு சொல்லு நான் போறேன்” என்றான். அவனால், அவன் வலியை அவளுக்கும் கொடுக்க மனம் வரவில்லை. ஒருத்தி அவனை விட்டு செல்ல.. ஏமாற்றத்தின் வேதனையை அறிந்தவன் ஆகிற்றே.
அவன் முடிக்கவில்லை. “ஷ்! நீ சொல்லாத… உன்ன மறக்க சொல்லிடவே சொல்லாத! என்னால உன்ன மறக்கவே முடியாது. உன்ன என் மனசார காதலிக்கிறேன். என் காதல் உண்மையானது. அதனால உன்னைத் தங்க கூண்டுல போட்டு பூட்ட மாட்டேன். உன் மனசை ரணமாக்கி அதனால் என் காதல் ஜெயிச்சா… அந்த காதல் எனக்கு வேண்டாம் அஷோக். பயப்படாத.. நீ என்னை பார்த்து கண்ணீர் வடிக்கர மாதரி என் வாழ்க்கையை நான் கெடுத்துக்கவே மாட்டேன். கண்டிப்பா அப்பா சொல்ர ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிப்பேன். சந்தோஷமா வாழுவேன். கொஞ்சம் கஷ்டம் தான்… ஆனா என்னால முடியாத விஷயம் இல்ல. சோ நீ கில்டியா ஃபீல் பண்ணாத! எனக்கானவன் நீ இல்லேனு நினைக்கும் போது ரொம்ப வலிக்குது அஷோக்… தாங்க முடியல..” கண்ணீர் மல்கக் கூறினாள். அவன் முகம் பார்க்க விழையவில்லை. திரும்பவும் இல்லை. வெளியே வெறித்தே நின்றாள்.
மனமெல்லாம் வலித்தது. தாங்க முடியாத பாரம். பாலைவன கானல் நீராய் போனது அவள் காதல். ‘இலவு காத்த கிளியா நான்?’ மனம் கேள்வி கேட்டது.
“பார்த்துக்கலாம் பிருந்தா.. வா. என்னால அப்படி உன்னை விட முடியாது பிருந்தா..”
அவனின் இந்த ஒற்றை வரி அவள் உயிர் வரை தொட்டது. ஜான்சி கூறியது.. ‘கல்யாணத்த நிறுத்து… வாழ்க்கை பூரா உனக்கு உயிர கொடுக்கர நண்பனா இருப்பார்’, நினைவில் வந்து போனது.
‘ஜான்சியின் கூற்று நிஜம் தான் போலும். நல்ல மனம் படைத்தவன். வாழ்நாள் முழுதும் இருப்பான் எனக்காக.. ஒரு தோழனாய்’ எண்ணிக்கொண்டவள் தயக்கமே இல்லாமல் பேசினாள். 
“இது சரி வராது அஷோக். வேண்டாம் அஷோக். கொஞ்சம் நேரம் நான் தனியா இருக்கணும். நீ போ ப்ளீஸ். இந்த முடிவு கண்டிப்பா உனக்காக இல்ல. எனக்காக. நீ எனக்கு ஒத்துவர மாட்ட. போ..” என்றாள்.
சற்று நேரம் சென்றும் அவள் பின் அரவம் கேட்கவே..
“உன்ன இங்க இருந்து போகச் சொன்னேன் அஷோக் என் வாழ்க்கையில நீ இல்லவே இல்ல.. போய்டு அஷோக்” என்றாள்.
பின்னால் மூச்சு சத்தம் கேட்டுக்கொண்டே இருக்க..
“இன்னும் ஒரு நிமிஷம் நீ இங்க இருந்தா கூட நான் என் முடிவ மாத்திடுவேன்… அப்பறம் தாலிய உன் கையில கொடுத்து கட்டுனு சொல்லிடுவேன்…” என்றாள் மிரட்டும் தொனியில்.
“குடேன்… குடுத்திட்டு சொல்லித் தான் பாரேன்…” கவிதையாய் வந்தது பதில்.
சத்தம் ஜீவாவுடையது. திரும்பியவள் அவனைப் பார்த்ததும், அவனைப் பார்த்துக்கொண்டே நின்றாள். கண்ணில் நீர் முட்டிக் கொண்டு நின்றது.
“எப்போ குடுக்கர?” என்றான் அழகான ஆண்மகன் முகத்தில் அழகான புன்னகையோடு. ஆழமான வார்த்தைகள்.
“என்னத்த?” என்றாள் திக்கி திணறி!
“தாலிய?”
கையிலிருந்த தாலியைக் காட்டி, “இதையா?” என்றாள் கேள்வியாய்.  
“இதனாலும் ஒக்கே தான்… இல்ல கொஞ்சம் டைம் கொடுத்தேனா… நானே என் செலவில புதுசு வாங்கி கட்டுவேன். என்ன சொல்ர?” என்றான்
“நான் இன்னுமே அவர காதலிக்கிறேன்.. ஜீவா”, என்றாள். உள்ளிருந்த வலி எல்லாம் கண்ணீராய் பாய..
“தெரியும்!” என்றான் அமைதியாக.
“தெரிஞ்சும்.. என் கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கறீங்க?”, வழிந்த கண்ணீரைத் துடைக்கக் கூட தோன்றாமல்.
“இப்போதைக்கு உன் மனசில கொஞ்சோண்டே கொஞ்சுண்டு இடம். அப்புறம் உன் கழுத்தில ஒரு தாலி கட்டுர அளவுக்கு இடம். இப்போதைக்கு அது போதும்.” என்றான். விளையாட்டு போல் சொன்னாலும், உணர்ந்து உறைக்கப்பெற்ற காதல் வார்த்தைகள்.
“என்னால அவரை மறக்க முடியாது ஜீவா… என் மனசு பூரா அவர் மட்டும் தான். இந்த கல்யாணத்த வேண்டாம்னு நான் எழுந்து வந்ததும் அவர் நிம்மதிக்காக மட்டும் தான்! அவர் செத்தா கூடவே சாகவும் நான் தயார். அவர் வாழ நான் சாகவும் தயார். உங்களுக்கு புரியுதா… அவர் வாழ நான் சாகவும் தயார் ஜீவா… அது தான் இப்போ நடந்திருக்கு! எனக்கு உயிரோட இருக்கக் கூட பிடிக்கல. என் கிட்ட உங்களுக்கு கொடுக்க ஒன்னுமே இல்ல!” என்றாள்.
“நான் கேட்டத மட்டும் கொடுத்து தான் பாரேன்…” என்றான் கவிதையாய்.
“என்ன கேட்டிங்க?” சோகமே உருவான குழந்தை போல் அவனை ஏறிட்டாள்.
“உன் கழுத்தில் ஒரு சின்ன ஸ்பேஸ்… அங்க ஒரே ஒரு மஞ்சள் கயிறு கட்ட உரிமை.”
“என்னால உங்க கூட வாழ முடியாது ஜீவா!” வலியோடு விழுந்த வார்த்தைகள்.
“என்னால நீ இல்லாம வாழ முடியாது பிருந்தா.. இல்லாத ஒரு காதலுக்காக உன் வாழ்கையை அழிக்கத் தயாரா இருக்க நீ, உன் முன்னாடி இருக்கக் காதலுக்காக கொஞ்சம் வாழ ட்ரை பண்ணித் தான் பாரேன்.”
“…”
“என்ன பாக்கர? எனக்காகக் கஷ்டப் பட்டு சாக எல்லாம் வேண்டாம். நீ உனக்கு பிடிச்ச மாதரி ஈசியா வாழேன். என் கூட! எனக்கு நம்பிக்கை இருக்கு.. என் கூட நீ இருந்தா, உனக்கு உன்ன பிடிக்கரத விட, உனக்கு என்னைப் பிடிக்கும்..!”
“ச்சான்சே இல்ல”
“உனக்குப் பயம்.. எங்க ச்சான்ஸ் குடுத்தா என்னைப் பிடிக்க ஆரம்பிச்சிடுமோனு!”
“அப்படி எல்லாம் இல்லவே இல்ல”
“நான் வேணும்னா சேலஞ்ச் பண்றேன்… இன்னும் கொஞ்சம் மாசத்தில உனக்கு இந்த உலகத்திலேயே என்னைத் தான் பிடிக்கும்” என்றான்
“நீங்க தான் தோப்பீங்க…”
“நான் ரெடி.. நீ ரெடியா?”
என்ன மனிதன் இவன்… அவள் வலி நிவாரணி இவன் தான் போலும்.
அவள் விழிக்க…
“நீ புத்திசாலி பொண்ணு, அதனால் தான் யோசிச்சு முடிவு எடுத்திருக்க. நீ கோழை இல்ல. சாக எல்லாம் மாட்ட… வாழத்தான் போற. அந்த வாழ்க்கையை என் கூட வாழேன். நானாவது சந்தோஷமா இருந்துட்டு போறேனே. ஃப்ரெண்ட்ஸ்சா இருப்போம். காலம் மாறும், நமக்குள்ளேயும் காதல் வரும்… அப்போ விஷயத்தை அப்போ பார்ப்போம்.”
“..”
“என்ன சொல்ற?”
உள்ளடைத்து வைத்திருந்த வலியை அவனிடம் கொட்ட எளிதாக இருந்தது. அவன் தோளும் மார்பும் அவளுக்காகக் காத்திருந்தது. அவள் காதலை அவமதிக்கவில்லை. கண்டிப்பாக அவள் அன்பான இதயத்திற்கு ஏற்ற தோழனாக… கணவனாக.. அவள் உலகமாக இருக்க எல்லா தகுதியும் இவனுக்கு மட்டும் தான்!
“உங்களுக்கும் இப்படி தான் வலிச்சுதா?” வலியோடு ஏறிட்டாள்.
“..” மென்மையான சிரிப்பு… அதில் அப்படி ஒரு வலி!
“அவரை விரும்பிட்டு உங்களை எப்படி கல்யாணம் பண்ணுவேன்?”
“நீ பண்ண வேண்டாம்… இப்போதைக்கு நான் மட்டும் பண்ணிக்கறேன். உனக்கு என்னை பிடிச்சதும்… என்னை நீ பண்ணிக்கோ!”
குழப்பத்தோடு அவனைப் பார்க்க..
“இந்தா இது என் மோதிரம். இதே சைஸ்ல ஒரு மோதிரம் வாங்கி வச்சுக்கோ… உனக்கு என்னை பிடிக்கர வரைக்கும் நீ எனக்கு மனைவியா இரு! உனக்கு எப்போ என்னை பிடிக்குதோ… அன்னைக்கு நீ வாங்கி வச்சிருக்க மோதிரத்தை எனக்குப் போட்டு என்னை உன் பாதியா ஏத்துக்கோ… என்ன சொல்ர? இத விட நல்ல டீல் கிடைக்காது.. யோசிச்சுக்கோ..”, புருவம் உயர்த்தி புன்னகைத்தான்.
அவன் உள்ளங்கையிலிருந்த மோதிரத்தை எடுத்தாள். அவன் முகம் பார்க்கவில்லை. நாடி பிடித்துத் தூக்கினான். வழிந்த உப்பு நீரைத் துடைத்தான்.
அவள் கண்ணுயர்த்தி, “அவர ரொம்ப விரும்பினேன் ஜீவா… மனசெல்லாம் வலிக்குது ஜீவா. அவர் கடைசி வரைக்கும் என்னை விரும்பவே இல்ல ஜீவா. ஏன் அவருக்கு என்னை பிடிக்கல?” என்றாள் ஏக்கமாய்.
“ஏன்னா நீ எனக்கானவ.” என்றான்.
இதழ் துடிக்க ஊமையாய் அழுதாள். அவன் புஜத்தில் நெற்றி உரையச் சாய்ந்தவளைத் தடுக்கவில்லை.
“என்னால முடியுமான்னு தெரியலை ஜீவா..”
“பத்து மாசம் ஒரு குழந்தையைச் சுமந்து ஆசை ஆசையா பெத்தா… அது இறந்தே பிறந்துடுச்சாம். அதுக்காக அந்த அம்மா அடுத்து பெத்துக்கவே மாட்டேன்னு நினைக்கரது இல்ல. வாழ்க்கையில எதுவுமே நிரந்தரம் இல்ல. எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கு… ஒரு துடக்கம் இருக்கு! உன் பழைய விருப்பம் முடிஞ்சு… இன்னையோட புது வாழ்க்கை ஆரம்பமாகுது. போட்டு குழப்பிக்காதா.. எல்லாம் சரியாகிடும். அழுது ரெண்டு பேருமா வாழ்க்கையை வீணாக்கலாம்… இல்ல முயற்சி  பண்ணி அத நம்ம விருப்பப்படுர மாதரி சந்தோஷமா வாழ்ந்திட்டும் போகலாம். நாம வாழ்ந்து தான் பார்ப்போமே..”
அழகான வார்த்தைகள். அன்பாய் உரைக்கப் பெற்றது.
“ம்ம்ம்”
“நாம இங்க இருக்கவே வேண்டாம். அடுத்த முகூர்த்ததுல கல்யாணம் பண்ணிக்கலாம். லண்டன் போய்டலாம். நீ படி. மத்தெல்லாம் நடக்க வேண்டிய நேரத்தில நடக்கும்!” என்றான்.
“அப்போ என்னை எந்த விதத்திலேதும் தொந்தரவு பண்ண மாட்டீங்க தானே?”
“அப்படி எல்லாம் உன்ன விட மாட்டேன். நிறையத் தொந்தரவு பண்ணுவேன்… அப்பப்போ காலைல உனக்கு எழுந்துக்க சோம்பலா இருக்க அன்னைக்கு பெட் காபி கொடுத்து கொடுமை பண்ணுவேன்…
குளிருது, இருந்தும் போர்வைக்கு வெளியில போகணுமேனு நீ யோசிக்கர போதெல்லாம்… அந்த போர்வைக்குள்ள உன்ன கட்டிகிட்டு படுத்துப்பேன்… வேலை செய்ய முடியாம நீ தான் டார்ச்சர் அனுபவிப்ப.
காலையில பூர நின்னு வேலை பார்த்துட்டு நிம்மதியா உக்கார நினைக்கும் போது உன் வலிக்கர பாதத்தை பிடிச்சு விட்டுப் பாடா படுத்துவேன்..
நீ மாசமானதும் உன்னை என் கையில வச்சு தாங்கி கொடுமை படுத்துவேன்… ஒரு தோள்ள என் மகளையும் இன்னொரு தோள்ள உன்னையும் போட்டுகிட்டு ரொம்ப உன்ன தொந்தரவு பண்ணுவேன்..” 
கண்ணீரோடு புன்னகைத்தாள்…
“கொடுமை பத்தாட்டி சொல்லு… இன்னும் நிறையக் கொடுமை செய்யறேன்” என்றான் பனித்த கண்களோடு… விரிந்த இதழோடு
“பத்தாது” என்றாள் அவன் முகம் பார்த்து… 
ஜீவா… யாரிவன்? அவன் பிருந்தாவின் ஜீவா. அவளுக்காகவே படைக்கப் பட்டவன். அஷோக் ஏன் அவள் வாழ்வில் வந்தான்? இவர்கள் தான் ஒன்று சேரவேண்டும் என்பது விதி என்றால்… ஏன் இத்தனை வலி? சில நேரங்களில் நம்மைச் சுற்றி நடப்பதற்குக் காரணங்கள் இல்லாமலே போகலாம். அந்த நேரங்களில் தேவையில்லாத காரணங்களைப் புறம் தள்ளி வாழப் பழகிக்கொள்ள தெரியவேண்டும்.
இனி அஷோக்கை பார்ப்பதில்லை என்ற முடிவு மூன்றே நாளில் தகர்ந்தது. மருத்துவமனையில் மாமாவைப் பார்க்க வந்த நேரம் சுசிலாவும் அங்கு வந்திருந்தார். அஷோக்கின் உடல் நிலை காரணமாக!
மூன்று நாளாக உண்ணாமல் உறங்காமல் யாரிடமும் பேசாமல் பித்துப் பிடித்தது போல் அமர்ந்திருந்த மகனைக் காணச் சகிக்காமல் மருத்துவர் ஆலோசனைக்காக வந்திருந்தார்.
கேள்விப்பட்ட பிருந்தா சென்றாள் அவனைப் பார்க்க. பிருந்தாவோடு மட்டும் பேசினான். அவள் வாழ்வைக் கெடுத்துவிட்ட குற்ற உணர்வு!
அவனை அந்த நிலையில் அவளால் பார்க்க முடியவில்லை. அவனுக்காக அவன் மேல் வைத்திருந்த காதலை எல்லாம் மூட்டை கட்டிப் போட்டவள், குற்ற உணர்வு அவசியம் இல்லை என்றாள். அவன் மேல் இருந்தது சிறு வயது ஈர்ப்பின் நீடிப்பு என்றாள். ஜீவாவைப் பிடித்ததாக கூறினாள். ஜீவாவோடு விரும்பி மணம்புரியப் போவதாகக் கூறினாள். அவன் முன் ஜீவாவிடம் தாலியும் வாங்கினாள். ஜீவாவின் துணையோடு அவனுக்குத் தெரிந்த முகாமில் சேர்த்து மருத்துவம் பார்த்தாள்.
ஜீவா எங்குமே தடையாக இருக்கவில்லை. அவர்கள் இருவருக்குமே அவர்கள் தோழமை தேவை என்று விட்டு விட்டான். முந்தைய காதலனாக இருப்பதை விட இன்றைய தோழனாய் இருக்கட்டுமே என்று நினைத்தான். 
ஜீவாவிற்கு புரிந்தது, பிருந்தாவின் வாழ்வைக் குறித்த கவலையும் அதனால் வந்த குற்ற உணர்ச்சியும் அஷோகின் மன அழுத்ததிற்கு காரணம் என்று.
அஷோக்கை அவனுக்குத் தெரிந்த மருத்துவ முகாமிற்குக் கூட்டி சென்றது ஜீவா தான். அவன் வீட்டிலிருந்து  ஐந்து மணி நேரம் பிரயாணம். வாரம் ஒரு முறை பிருந்தாவை அவனே கூட்டிச் சென்றான். அவ்வப்போது அஷோக்கை வீட்டிற்கு அழைத்துச் சென்றான். பிருந்தாவின் காதல், அழகான நட்பாய் மாறியது.
திருமணம் ஆனப் பின் பிருந்தாவும் தன்னால் ஆன மட்டும் முயன்றாள் ஜீவாவோடு ஒன்ற. மிகவும் கடினமான தருணங்களைக் கடக்க ஜீவா மென்மையாக உதவினான்.
கணவன் தோழனானான். அதன் பின் தோழன் காதலனாக மாற.. ஒரு கட்டத்தில் ஜீவாவின் அன்பிற்கு அடிமை ஆகிப்போனாள் பெண். ஆறு மாதத்தில் அவனுக்கு மோதிரம் போட்டுவிட்டாள். சரி பாதியானாள் முழுமனதோடு! 
வாழ்வு இப்படிச் சுகிக்குமா.. என்று வியக்கும் அளவுக்கு மாறி போனது.
அவள் கனவிலும் நினைக்காத அளவு காதல் புரிந்தான் அவள் கணவன். ‘இவனை ஏன் நான் முதலில் பார்க்க வில்லை?’ என்ற எண்ணம் பெண்ணுக்குள் துளிர்க்க செய்தான். 
நிம்மதியாக அஷோக்கைப் பார்த்துப் பேச ஆரம்பித்தாள். மனமெல்லாம் ஜீவா இருக்க… அஷோக்கிடம் மீண்டும் உரிமையான ‘வா போ’ என்ற அழைப்பு ஆரம்பமானது. அவளின் மாற்றம் அஷோக்கையும் மாற்றியது.
திருமணமான புதிதில் எந்த மரத்தடியில் தனியே நின்று குலுங்கி அழுதாளோ அதே மரத்தடியில் ஜீவாவோடு உலகம் மறந்து நின்றாள். ஜன்னல் வழியே அஷோக் அதைப் பார்த்த பின் அஷோக்கிற்கு உயிர் மீண்டது.
பிருந்தாவின் நாணமும் சிவப்பேறிய முகமும் அஷோக்கின் குற்ற உணர்ச்சியைத் துடைத்துப் போட்டது. முகாம் விட்டு வெளி உலகைப் பார்த்தான் அஷோக்.
அஷோக்கிற்குப் பிடித்த பிருந்தாவோடு அவன் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் பழகினான். தெரிந்தோ தெரியாமலோ அவன் மன உளைச்சலுக்கு அவளும் ஒரு காரணமாகிப் போனாள். ஆனால் அவனை விட்டுவிடவில்லை. காலத்தோடு போராடி அவனை மீட்டாள். அவளும் ஜீவாவும் அஷோக்கிற்கு இல்லாமல் போயிருந்தால் இன்று அவன் கல்லறையில் பூ பூத்திருக்கும் என்பது திண்ணம்.
காதலித்தவனோடு மீண்டும் தோழமையோடு பழக முடியுமா என்றால்? முடியும்! ஜீவா போன்ற அன்பு கணவன் கிடைத்தால்!
காதல் என்பது இரு மனதும் ஒன்று சேர்ந்து இன்பமாய் வாழ வழி வகுப்பதாய் இருக்க வேண்டும். அனைவர் காதலும் காலத்தை வெல்வதில்லை. காதலுக்காக வாழ்வை மாய்த்துக்கொள்வது,  பெற்றவர்களுக்கும் அவர்களை உண்மையாய் நேசிக்கும் சுற்றத்திற்கும் செய்யும் துரோகம். கண்ணீரோடு ஒற்றை காதலோடு வாழ்வதை விட… அன்பான கணவனைக் காதலிக்கக் கற்றுக்கொண்டாள் பிருந்தா.
மயிரிழையில் பிருந்தா ஜீவாவிற்கு மீண்டு கிடைக்க… உண்மையிலேயே அவளைக் கண்ணுக்குள் வைத்துத் தாங்கினான் காதல் கணவனாய்.
அன்பான, அருமையான பிருந்தாவிற்கு கடவுளின் பரிசு ஜீவா!
இன்று அவளுக்கு மண்டபத்தில் சீமந்தம்.
அவளைப் பார்த்து விக்கித்து நின்றிருந்தது ஒரு ஜீவன். அது அஷோக் கண்ணன் என்பவனின் ஜீவன்.

Advertisement