Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 75_1
 
லேம்போர்கினி தன் கட்தரி கதவைத் திறக்க உள்ளிருந்து வந்த அஷோக்கைப் பார்த்த டேனியின் நட்பு வட்டாரங்கள் அவனைச்  சூழ்ந்துகொண்டு, “ஹல்லோ சர்.. வணக்கம் சர்.. வாங்க வாங்க’ என்று வரவேற்கவுமே கார்த்திக் வாசலுக்கு வந்துவிட்டான்.
அஷோக்கின் பின்னோடு வந்த ஃபார்ச்சூனரிலிருந்து இருவர் ஆஜானுபாகுவான உடலமைப்போடு அவன் முன்னும் பின்னும் வர, அவர்களிடம் ஏதோ அவன் சொல்ல அமைதியாய் வந்த காரில் சென்று அமர்ந்து கொண்டனர்.
‘வாழ்ந்தால் இவனை போல் அல்லவா வாழ வேண்டும்’ என்றது பல கண்கள். அங்கிருந்த இளைஞிகள் கண்களோ.. ‘இவனோடே வாழ வேண்டும்’ என்றது.
ஆளை மயக்கும் அவனின் பழைய குறுஞ்சிரிப்பும், வசிகரிக்கும் கண்களும், இவர்களை இப்படி நினைக்க வைத்ததில் தவறில்லை.
மூடிய இதய கதவின் பின்னிருந்த வலியை இவர்கள் அறிய ஞாயமில்லை. அது அறிந்திருந்தால் யார் விரும்புவார் அவன் வாழும் இந்த உயிரற்ற வாழ்வை? பார்ப்பதெல்லாம் நிஜமில்லை. எல்லோர் வாழ்விலும் ஒரு திரை இருக்கத் தான் செய்கிறது.. அதன் பின் என்ன இருக்கிறது? அது அவரவருக்கு மட்டுமே வெளிச்சம்!
“ஹாய் கார்த்திக்..” வலது கையை பிடித்தவன் இது கையால் கார்த்திக்கின் தோளை அணைத்துக்கொண்டே உள்ளே நடக்க, ‘மூன்று மாதம் முன் பார்த்தவனா இவன்?’ என்றிருந்தது கார்த்திக்கிற்கு. என்ன மாயம் செய்தாள் சுதா?
அவனிடம் பேசப் பேச அவனை டேனிக்கும் மிகவும் பிடித்துவிட்டது. அவன் தகுதிக்கு அவன் இங்கெல்லாம் எப்படி வந்தான் என்றே யாருக்கும் புரியவில்லை. கொஞ்சம் கூட பந்தாவோ அலட்டலோ இல்லை. ஏதோ ஒரு காலத்தில் தன் கீழ் வேலை பார்த்த ஒருவன் கூப்பிட தொழில் வட்டாரத்தில் புகழ்ச்சியின் உச்சியில் இருக்கும் ஒருவன் வருவதா?
கார்த்திக் தோளிலிருந்து கை எடுத்தானில்லை. ஏனோ கார்த்திக்கால் சகஜமாகப் பேச முடியவில்லை. அவனின் அவஸ்தையை அஷோக் உணர்ந்தான். ஆனால் அவனிடம் காட்டிக் கொள்ளவோ கேட்டுக்கொள்ளவோ இல்லை.  
தீபக் அஷோக்கை அங்கு எதிர்பார்க்கவில்லை. அஷோக் அவனோடும் நல்ல விதமாகப் பேச, தீபக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.
அரை மணி நேரம் இருந்து அனைவரோடும் பேசியவன், “அப்போ நான் கிளம்பறேன் கார்த்திக். தாங்க்ஸ் ஃபார் ஹேவிங் மி ஹியர். நான் சொன்னேன் இல்லையா… ஃபங்ஷன்? போகனும்! அப்பரம் பார்ப்போம்” என்று கைகுலுக்கியவனிடம்
“பாஸ்..  நீங்க இங்க வந்ததுக்கு நான் தான் தாங்க்ஸ் சொல்லணும்” என்றான்.
வாசல் நோக்கிச் சென்றவன், “கார்த்தி… ஜோ எங்க? பாக்க முடியுமா?” என்றான்.
“என்ன பாஸ் கேள்வி… உக்காருங்க தூக்கிட்டு வரேன்” என்றவன் என்ன நினைத்தானோ.. 
“வாங்களேன் பாஸ் அப்படியே வீட்டைச் சுத்தி காட்டறேன்.. போன வாரம் தான் கிரகபிரவேசம் பண்ணினோம்..”, பேசிக்கொண்டே மாடி அறைக்கு அழைத்துச் சென்றான்.
“காலையில இருந்து வந்தவங்க எல்லாம் குழந்தையைத் தூக்க.. அவன் கொஞ்சம் இரிடேட்டடா இருக்கான். சோ அவன் உங்கட்ட வரலைனா வருத்த படாதீங்க. நானே ஒரு நாள் உங்கட்ட கூட்டிட்டு வரேன்”
“நோ ப்ராப்ளம்… சும்மா பார்த்திட்டு போறேன். பார்த்து மூனு மாசம் ஆச்சு அவனுக்கு என்னை யார்னே தெரிய வாய்ப்பில்லைனு தெரியும் கார்த்தி..” என்றவனை நிறுத்தியது கைப்பேசி!
கைப்பேசி திரையைப் பார்த்தவனிடம், “பேசிட்டு இந்த ரூம்க்கு வாங்க பாஸ்… இங்க தான் இருக்கான்” என்று அஷோக்கிற்குத் தனிமை கொடுத்து கார்த்திக் அங்கிருந்து நகர்ந்தான்.
சிரித்துக்கொண்டே கைப்பேசி அழைப்பை எடுத்தவன், “அவ தான் சின்ன பிள்ளை மாதரி சண்டைபோட்டா, நீங்களுமா? பத்து நிமிஷத்தில கிளம்பிடுவேன். ரொம்ப முக்கியமான ஒருத்தரை பார்த்திட்டு பத்தே நிமிஷத்தில கிளம்பிடுவேன்… சரி அவட்ட குடுங்க பேசறேன்..”
“பத்தே நிமிஷம்” என்றான். “நீ கேட்ட டிசைன்லயே வளையல் வாங்கி வச்சிருக்கேன்” என்றான். “நீ மேடையில ஏறதுக்குள்ள அங்க இருப்பேன்” என்றான்.. இன்னும் ஏதேதோ பேசி மறுமுனையைச் சமாதானம் செய்து.. கைப்பேசியை அணைத்தவன், கார்த்தி சென்ற அறைக் கதவு திறந்திருக்கவும் அதைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவன் அப்படியே நின்றுவிட்டான்.
அவன் அறையின் பிரதி. ஃப்ரெஞ்ச் சாளரம் முதல் தொங்கி கொண்டிருந்த திரைச்சீலை வரை! மனம் பிசைய ஆரம்பித்தது. மூன்று மாதம் முன் விமான நிலையத்தில் சுதா கூறியது நினைவில் வந்தது. கட்டிலைப் பார்த்தான். ஏன் அதே நினைவோடு வாழ நினைக்கிறாள்? தவறில்லையா? ‘ஐயோ… சுதா.. எங்குத் தள்ளிவிட்டேன் உன்னை!’ மனம் கனத்தது.
கார்த்திக்கிற்கு விஷயம் தெரியும் என்று தோன்றியது. ‘அதனால் தான் நெளிந்து கொண்டிருக்கின்றானோ?’ அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை. போக எத்தனித்தவனுக்குக் குழந்தை ஒரு எரிச்சலோடு சிணுங்கிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
ஒரு முறை ஜோவைப் பார்க்க எழுந்த ஆசையை அடக்க முற்படவில்லை. மனதில் பதிந்துபோன அந்த கள்ளமில்லா சிரிப்பும்.. பவள இதழ் கொடுத்த முத்தமும் இன்னும் நினைவிலிருக்கக் கால் தானாய் பால்கனி நோக்கி சென்றது.
கார்த்தி அங்கிருக்கவில்லை. அனிதா சற்று தள்ளி ஜோவை தோளில் போட்டு தட்டிக் கொண்டிருந்தாள். அவன் ஒரு வித எரிச்சலோடு நெளிந்து கொண்டிருந்தான்.
கார்த்தி அனியிடம் சொல்லிவிட்டுச் சென்றிருப்பான் போல், அஷோக்கைக் கண்டதும், “வாங்க… அத்தான் டூ மினிட்ஸ்ல வரேன்னு சொல்லிட்டு போனாங்க..”  எனவும் 
புன்னகைத்தவன், “ஜோ..?” என்றது தான் தாமதம்.. தோளில் படுத்திருந்த குழந்தை, தலை நிமிர்த்திச் சட்டென்று திரும்பிப் பார்த்தான். மூன்று நொடி கண்சுருக்கிப் பார்த்திருப்பான், அவ்வளவு தான். அனி கையிலிருந்து எம்பிக் குதிக்க… அனி அவனை கீழே தவற விடும் முன், “டேய்…” என்று ஓட்டமாய் சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டான்.
மணிக் கணக்காய் தாயைப் பிரிந்த குட்டி கன்று போல் கண்ணன் கழுத்தில் தலையை இடிப்பதும், கழுத்தைக் கட்டிக் கொள்ளுவதும், கண்ணன் முகம் பார்த்து அரிசி பல் காட்டி மயக்கச் சிரிப்பைச் சிரிப்பதும்.. கன்னம் தடவி.. கன்னத்தில் இடமில்லாமல் போகவே இதழில் முத்தம் வைத்த பின்னும் அவனுக்கு நிலை கொள்ளவில்லை. சிணுங்கல் எங்குப் போனதோ… ஓரே கொஞ்சல் சிரிப்பு.
அஷோக் ஜோவை தூக்கிப் போட்டுப் பிடிக்க வயிறு குலுங்கச் சிரிக்க… பார்த்துக்கொண்டிருந்த அனிக்கு ஆச்சரியமாய் போனது. யார் அருகில் நெருங்கினாலும் முகத்தைத் திருப்பி.. சிணுங்கி.. அனியை முகத்தில் அடித்து.. பல முறை தோளைக் கடித்து.. காலையிலிருந்து அனியை ஒருவழியாக்கி கொண்டிருந்தவனா இவன்?
குழந்தை கண்ணைப் பறிக்கும் அசாத்திய அழகு. காலையிலிருந்து பார்ப்பவர்கள் எல்லாம் அவன் கன்னம் தொட… தூக்க முயற்சிக்க அவனுக்குள் ஒரு வித அசௌகரியமும் எரிச்சலும். யார் சமாதான படுத்தியும் அடங்காமல் அனத்திக் கொண்டே இருந்தவனா இது?
நெஞ்சோடு அணைத்து உச்சிமுகர்த்தவன்.. கொஞ்சி பேச ஆரம்பித்தான்..
“என் குட்டி செல்லம் எப்படி இருக்கீங்க? இன்னும் என்னை ஞாபகம் வச்சிருக்கீங்களா பட்டு குட்டி? என்னைத் தேடினீங்களா? நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணினேன்..” அவன் பேச பேச, ஜோவும் ஏதோ பேசினான்.
“சீபா.. சீபா” என்று கொண்டே இருக்க
“என்ன சொல்றான்?” என்று அனியிடம் கேட்க
“தெரியலையே” என்றாள்.
இவர்கள் கொஞ்சிக் கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருந்த அருள் மெதுவாய் அஷோக் அருகில் வந்தவன், அவன் டி-ஷர்ட்டை இழுத்து, “மாமா.. நான் கூட தூக்கு” என்றான். 
புன்னகை முகமாய் அடுத்த கையில் அவனைத் தூக்க, அவனும் அஷோக்கோடு பொருந்திக் கொள்ள அஷோக்கிற்கு வியப்பே.
“மாமா.. ஜோ மாடியே நானும் நீங்களும் பூல் போணும். பட்டர்ஃப்ளை பிடிக்கணும்” என்றான் அருள்.
ஏதோ பழக்கப் பட்ட மாமாவிடம் பேசுவது போல் பேசியவனிடம்,
“ஓ… போகலாமே… என் வீட்டுக்கு ஒரு நாள் கூட்டிட்டு போறேன்.. அங்க நி பிடிக்க நிரைய பட்டர்ஃப்ளை  இருக்கு… ஆசை தீர விளையாடப் பூல் இருக்கு. என் கூட வரியா?” 
“யெஸ் மாமா.. வலேன். இப்போவே போலாம்” என்றான் தயக்கமே இல்லாமல்.
“இவன் யாரு?” என அனியைப் பார்க்க..
இவனுக்கு எப்படிப் புரியவைக்க என்று யோசித்தவள், “உங்க ஃப்ரெண்ட் கார்த்திக்கோட.. சிஸ்டர் சன்” என்றாள்.
“உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என்று குழந்தையை பார்க்க..
“ஓ.. டெடியுமே! அட்ட செல் ஃபொன்ல காட்டி” என்றான்.
அஷோக்கிற்கு ஒன்றும் புரியவில்லை.
“உங்க பேர் என்ன?” என்றான் கொஞ்சும் தோரணையில்
“அசுல் மொசி வல்மன்” என்றான்
முழித்தவன், “என்னமா?” எனவும்
“அருள்மொழி வர்மன் பாஸ்” கூறிக்கொண்டே வந்தான் கார்த்தி!
“அருள்மொழி வர்மன்! பேர் ரொம்ப நல்லா இருக்கு!”
“போங்க பாஸ்.. வயசு மூனாவுது.. பாவம் அவனுக்கே சொல்ல வரல.. எல்லாம் எங்க அப்பா பண்ற வேலை. பொண்ணுக்கு ஜான்சி ராணி… அவ பெத்ததுக்கு அவன் வாய்ல கூட நுழையாத பேரு! நல்ல வேளை நானும் என் மகனும் தப்பிச்சோம்.”
அவனோடு விளையாடாமல் மற்றவரோடு அஷோக் பேசி கொண்டிருக்கவும் கவனம் திருப்ப ஜோ, “சீ பா.. சீ பா” என்று சத்தம் எழுப்ப
“என்ன டா செல்லம் சொல்றீங்க?” என்று கேவியாய் ஜோ முகம் பார்க்க, அருள் எடுத்து கொடுத்தான், “அவன் சிட்டப்பா சொல்றான்” என்று!

Advertisement