Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 74
“சீக்கிரம்.. வாங்க… நம்ம வீட்டு ஃபங்ஷனுக்கு நாமளே லேட்டா போகலாமா?” ஒருவழியாக முழு குடும்பமும் கிளம்பி டேனியின் புது மென்பொருள் நிறுவன கட்டிடத்தை அடைந்தனர்.
ஒரு வாரம் கார்த்திக்கும் டேனிக்கும் தூக்கமில்லை. கட்டிடத் திறப்பு விழா வேலைகள், அன்றே அங்கு ப்ராஜெக்ட் ஆரம்பிக்கத் தேவையான வேலைகள் என்று அதுவே இருவர் நேரத்தையும் இழுத்தது. பெற்றவர்கள் விட்டுச் சென்ற ஆசீர்வாதம் தங்கை ரூபத்தில் அவன் கனவைச் சாத்தியமாக்கியது.
கரகோஷத்திற்கிடையே ரிப்பன் வெட்டப் பட, வெற்றிகரமாகக் கட்டித்தை திறந்து வைத்தார் மத்திய மந்திரி. தொழில் வட்டாரத்தில் பெயர் போன பல பெருந்தலைகளும் வருகை புரிந்திருக்க நினைத்ததைக் காட்டிலும் பிரம்மாண்டமாக விழா நடைபெற்றது.
டேனியால் நம்பவும் முடியவில்லை. எதிரில் நடப்பதை நம்பாமலும் இருக்க முடியவில்லை. ஏழு வருட உழைப்பு இன்று அவன் முன் வளர்ந்து நிற்க.. அதற்கு இப்படி ஒரு விளம்பரம் அவன் எதிர்பாராத ஒன்று.  முகம் கூட தெரியாத யார் யாரோ வந்து தங்களை அறிமுக படுத்தி, வாழ்த்திச் சென்றனர்.
ஏரியா கௌன்சிலர் கூட டேனிக்கு அறிமுகமில்லை. ஆனால், “எதனாலும் சொல்லுங்க தம்பி.. பார்த்துச் செய்திடலாம்” வட்டம்.. மாவட்டம் எல்லாம் பேசி சென்றது.
மனம் நிறைந்து போனது. இதற்கு எல்லாம் காரணமானவன் இன்னும் வரவில்லை. டேனியின் கண் அவனின் சிறப்பு விருந்தினருக்காக அலைபாய்ந்தது.
கார்த்தி தான் அவனோடு பேசி இத்தனையும் சாத்தியமாக்கி இருக்க, டேனி கார்த்தி முன் நின்றான்.
“கார்த்தி.. வந்திடுவார் இல்ல?”
“கண்டிப்பா வரேன்னு சொல்லி இருக்கார். அவர் வீட்டுலையும் ஃபங்ஷன் போல… வந்ததும் கிளம்பிடுவேனு சொல்லியிருக்கார்.”
மாதங்கள் முன் அஷோக்கை அமெரிக்காவில் சந்தித்து வீட்டிற்கு அழைத்து வந்த அன்று டேனியோடு கைப்பேசியில் பேசுகையில் பேக்சு வாக்கில் வீட்டில் இருக்கும் அஷோக்கைப் பற்றி கார்த்தி கூற… அஷோக்கைக் கொண்டே அவர்கள் கட்டிடத்தைத் திறக்க டேனியேல் ஆசைப் பட, கார்த்தி அஷோக்கிடம் கேட்க, அவன் வீட்டில் விசேஷம் இருக்கவும் அவனே தலையிட்டு பல பெருந்தலைகளை வரவழைத்து வெகு விமரிசையாய் டேனியின் கட்டிடத்தைத் திறக்க உதவினான்.
அவனை நேரில் காணத் தான் டேனி காத்திருப்பது. கார்த்தியும் டேனியும் தவிர இதை வீட்டில் யாரிடமும் கூறியிருக்கவில்லை. அதனால் சுதாவிற்குமே அஷோக் வருவான் என்று தெரிந்திருக்கவில்லை.
காலை உணவு முடிந்து, கூட்டம் வெகுவாய் குறைந்திருந்தது. ஏற்கனவே அவர்களிடம் வேலை செய்யும் சிலரும், டேனியின் நண்பர்கள் பட்டாளமும் அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பின் தங்கியிருந்தனர். இன்னும் சில முக்கிய பிரமுகர்களை எதிர் பார்த்திருக்க, மத்திய விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அஷோக்கிடமிருந்து அழைப்பு வந்தது. வர தாமதம் ஆவதால் வீட்டிற்கே வருவதாகக் கூறினான்.
எல்லாம் முடிந்து வீட்டிற்குச் சென்றனர்.
அஷோக் இன்னும் அரை மணி நேரத்தில் வருவதாக செய்தி வரவும்,  ஜான்சியிடம் வந்த கார்த்திக், “ராணி, உன் ஃப்ரெண்டுக்கு இன்னைக்குத் தானே வளைகாப்பு.. நீயும் சுதாவும் போய்ட்டு வாங்க!” என்றவனை ஆச்சரியமாய் பார்த்தவள்,
“அன்னைக்கு சொன்னப்போ, அவர் கூட ‘போய்ட்டு வா’னு சொன்னார். நீ தானே ‘இது நம்ம வீட்டு ஃபங்ஷன்.. காலைல வர முடியாத தெரிஞ்சவங்க ஈவ்னிங் வீட்டுக்கு வருவாங்க, எங்கேயும் போகக் கூடாது’னு சொன்ன… இப்போ எதுக்கு என்னை தொரத்துர?”
“உன் அறிவு திறன என் கிட்டக் காட்டாத.. சொன்னதைச் செய்.. நீ கிளம்பு.. சுதாவ கூட்டிட்டுப் போ!” என்றான் கட்டளையாக.
“சோ.. உனக்கு சுதாவ இங்க இருந்து நகர்த்தனும்!!! ம்ம்ம்.. எதனாலண்ணா? என்ட்ட சொல்ல மாட்டியா?”
கேட்டிருந்தால் சொல்லியிருக்க மாட்டான். கொஞ்சும் தொனியில் பேசுபவளிடம் எரிந்து விழ முடியாதே.
“இன்னும் ஒரு அரை மணி நேரம் அவ இங்க இருந்த கண்டிப்பா.. அவ முகம் வாடிடும்.. உனக்கு ஓகேவா?”
“யாராது வராங்களா?”
அவளைப் பார்த்தான். யோசனையாய் நின்றவன், “இங்க இருந்தா, அவ ஒரு வாரம் அழுவா… விளக்கம் போதுமா? கூட்டிட்டு போ” என்றான்.
அதற்கு மேல் என்ன சொல்லுவாள்?
“சரிண்ணா.. கூட்டிட்டு போறேன். எப்போ வரணும்?” என்றாள்.
“ரெண்டு மணி நேரத்துக்கப்பரம் எப்போ வேணும்னாலும் வா.”
“அவர்ட்ட கேக்க வேண்டாமா? அவர் ஒத்துக்காட்டா?”
அவளை நம்பாத பார்வை பார்த்தவன்…
“ம்ம்ம்? உன் புருஷன் தானே உன் கிட்ட வேண்டாம் சொல்றது? அப்படியே சொல்லிட்டாலும் நீ சும்மா இருந்துடுவியாக்கும்.. உங்க ரெண்டு பேரையும் இன்னைக்குத் தான் பார்க்குறேன் பாரு.. போமா.. சொன்னதைச் செய்!” என்றான்.
“அவரைப் பத்தி நீ ஒன்னும் சொல்லாத.. சொல்லிடேன். எல்லாரும் உன் பொண்டாட்டி மாதிரி தலையாட்டி பொம்மையா இருக்க மாட்டங்க. அவர் வேண்டாம்னு சொன்னா நான் போக மாட்டேன் சொல்லிடேன்.
எதுக்கும்.. ஒரு வார்த்த நீயே சுதாட்ட சொல்லிடு.. அவ கேக்கர குருக்கு கேள்விக்கு எல்லாம் என்னால யோசிச்சு யோசிச்சு பதில் சொல்ல முடியாது..” என்றாள்.
“சரி.. நீ அவள இங்க வர சொல்லு… அவளே வந்து உன்ன கூட்டிட்டு போவா..”
“இவன் சொல்றதைத் தான் எல்லாரையும் செய்ய வைக்கிறான்…” முணுமுணுத்துக் கொண்டே சென்றாள்.
இருவரையும் பேசி எடுத்து ஒரு வழியாய் கிளப்பி விடுவதற்குள் கார்த்திக்கிற்கு போதும் போதுமென்றாகி விட்டது.
அவன் சொன்னது போலவே சுதா, ஜான்ஸியிடம், “அண்ணி உங்க ஃப்ரெண்டு சீமந்தமாமே.. இங்க என்ன பண்றீங்க? ஃபங்க்ஷன் முடிஞ்சிடுச்சு. யாராவது ஃப்ரெண்ட்ஸ் தான் வந்து போவாங்க.  இங்க நமக்கு வேல இல்ல.. அண்ணாவும் அவன் ஃப்ரெண்ட்ஸ், கூடவே கார்த்தி… வெணும்னா உதவிக்கு வீட்டு ஆம்பளைங்க இருக்காங்க. வாங்க நாம போய்ட்டு வரலாம். இங்க இருந்தா.. நீங்க ஒரு இடத்தில உக்கார மாட்டீங்க.. வாங்க..” என்று வம்படியாய் கூட்டிச் சென்றாள்.
ஜான்சிக்கு சிரிப்பு தான் வந்தது. அவள் கணவனை நோக்க யாரிடமோ பேசிக்கொண்டிருந்தவன் பார்வை இவளை தழுவ, ‘கிளம்பட்டா?’ இவள் உதடசைக்க, ‘போய் வா’ என்று தலை ஆட்டி வைத்தான்.
அழகாய் பட்டுடுத்தி, இருவரும் வளைகாப்பு நடக்கும் மண்டபத்திற்கு சென்றனர்.
அவர்கள் கார் வாயிலை விட்டு வெளியே செல்லவும் ‘லம்போர்கினி அவென்டேடார்’ வழுக்கிக்கொண்டு உள்ளே வந்தது.
அங்கிருந்த அனைவர் பார்வையும் அதன் மேல் தான். அதைத் தாண்டி சென்ற ஜான்ஸி சுதாவிடம், “கார் அட்டகாசமா இல்ல..” எனவும்..
சுதாவும், “ஆமா அண்ணி.. சரியா இருக்கு!
இது செம ஸ்பீட் கார். சுவாரசியமான விஷயம் என்னன்னா.. புகாட்டி, லேம்பொர்கினி, பென்ட்லி காண்டினென்ட்டல், ஆஷ்லி மார்டின், மெர்சடீஸ், ஃபெராரி இப்படி பல எக்ஸ்பென்சிவ் ஸ்பீட் கார் எல்லாம் டுபாய்-ல போலீஸ் காரா இருக்கு…    
இங்க இந்த கார வாங்கினவன் பாவம்! எப்படி இந்த ரோட்டுல ஓட்டுரானோ தெரியல. ரொம்ப திறமை வேணும் இந்த குண்டு குழி ரோட்டுல ஓட்ட! இதெல்லாம் இங்க ஓட்டனும்னா, நடு ஜாமத்துல, ஸ்பீட் பிரேக்கர் இல்லாத ரோட்டுல தான் ஓட்டணும். நம்ம ஊரு ஸ்பீட் ப்ரேக்கரல்ல மாட்டிச்சு.. கார் சீசா மாதரி தான் தொங்கும்” சொல்லிவிட்டு இதுபோல் மும்பையில் நடந்த சம்பவத்தை சொல்லி சிரித்தாள்.
‘இத எல்லாம் இங்க யார் வாங்குவாங்க?’ தானாய் மனம் கண்ணனை நோக்கிப் பாய்ந்தது. ‘எத்தனை கார் வைத்திருந்தான்? இன்னும் அந்த பழக்கம் உள்ளதா? புதிதாக எதை எல்லாம் வாங்கியுள்ளானோ?’
புள்ளி வைத்து.. கோடு போட்டு… ரோடு போட ஆரம்பித்தாள்.
‘தாடியை எடுத்திருப்பாரோ.. இன்னும் எல்லார்டையும் சிடு சிடுனு இருக்கிறாரா.. இல்ல முன்ன மாதிரியே மாறிட்டாரா? இங்கிருந்து பக்கத்தில் தானே வீடு.. சுசிம்மாவ மும்பைல இருந்து கூட்டிட்டு வந்திருப்பாரா? எப்படி இருக்காங்களோ?’
கார் மண்டபத்தின் வாயிலில் நிற்கவும், அலை பாய்ந்த மனதிற்குத் தற்காலிக கடிவாளமிட்டு அண்ணியோடு இறங்கினாள்.
இருவருமாய் பேசிக்கொண்டே உள்ளே செல்லவும் அவள் கண்கள் அங்கு ஓரமாய் நின்று யாருடனோ பேசிக்கொண்டிருந்த நபரின் மேல் விழ, “அண்ணி… நீங்க உள்ள போங்க.. அதோ நிக்கராரே அவர் கிட்ட ஒரு ஹாய் சொல்லிட்டு வரேன்” என அவரை நோக்கி சென்றாள்.
“மணிண்ணா..” என்ற அவளின் மென்மையான சத்தத்திற்குத் திரும்பியவன் அவளைப் பார்த்தது, ஏதோ தவமிருந்து தெய்வத்தைப் பார்த்தது போல், “சின்னமா.. வந்துடீங்களா? எப்பிடி இருக்கத் தாயி… இளைச்சு போய்டியேமா.. நல்லா இருக்கியாமா?” என்று அடுக்கிக் கொண்டே போக..
“ண்ணா… ண்ணா.. ரிலாக்ஸ்… நீங்க எப்படி இருகீங்க?” சிரித்துக் கொண்டே கேட்டாள்.
“நல்லா இருக்கேமா.. எங்கட்ட எல்லாம் ஒரு வார்த்தை கூட சொல்லாம போய்டியே கண்ணு.. நம்ம பக்கத்து வீட்டு பசங்க எல்லாம் உன்ன என்னமா தேடிச்சுங்க தெரியுமா..”
“ம்ம்.. ஏதோ ஒரு அவசரம் சொல்லிட்டு போக முடியலை.. குட்டீஸ் எல்லாம் எப்படி இருக்காங்க?”
“நீங்க போன பிறகு மீனாட்சியம்மா அவங்க வீட்ட சுசிலாமா உதவியோட நற்பணி மன்றம் மாதரி மாத்திட்டாங்கமா.. காலையில பொம்பள பிள்ளைங்களுக்கு ஃப்ரீயா தையல் சொல்லி தராங்க.. சாயங்காலம் ஆனா பிள்ளைங்களுக்கு ஸ்கூல் பாடம் சொல்லித் தர மாதரி செஞ்சு வச்சிருக்காங்க. இப்போ பிள்ளைங்க அங்க தான் சுத்தி திருயுதுங்க!”
“ஒஹ்! ரொம்ப நல்லது. அப்புறம் இங்க எப்பிடி? தெரிஞ்சவங்க விசேஷமா?”
“நம்ம அம்மாவோட வந்திருக்கேன். ஐயா தான் கூட மாட உதவி செய்ய இங்கயே இருக்க சொன்னாங்க!”
“நம்ம அம்மா, ஐயாவா.. அது யாரு?” புன்னகைத்தவளிடம்
“எனக்கு ஒரே ஐயாதானுங்களே? நம்ம ஐயா தான்!” என்றான்.
அஷோக் தானே அவன் ஐயா! அம்மா என்றால் சுசிலா..?!
“ஓ..” சட்டென்று நொடியில் இதயம் பிய்ந்து வயிற்றுக்குள் விழுந்து விட்டதோ?
அவன் பெயரைக் கேட்ட மாத்திரத்தில் உள்ளுக்குள் சடுகுடு ஓட்டம் ஆரம்பித்தது.
நெஞ்சங் கூடு வெற்றிடமாக மாற புன்னகை போன இடம் தெரியவில்லை.
‘ஐய்யோ அவரை பற்றி யாரவது பேசினாலே இப்படி உயிர் உருக வேண்டுமா?’ அவனைப் பற்றிக் கேட்கவும் மனதில் ஒரு ஏக்கம் எட்டு பார்த்தது. ‘இங்கு வருவானா? பார்ப்பேனா? சென்னைக்கு வந்திருக்கவே கூடாதோ? கண்ணா..’ மனம் விம்மியது.
மண்டபத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருக்க அவளுக்கு சூட்டினாலோ.. கேட்ட பெயரினாலோ.. வியர்வை வழிய ஆரம்பித்தது.
“சின்னமா.. நீங்க உள்ள போங்கமா.. இங்க ஒரே அனல்..” என அவளை உள்ளே அழைத்துச் சென்று, “இந்தாங்கமா ஜூஸ்” என ஒரு பேப்பர் கப்பில் திராட்சை ரசத்தைக் கொடுத்துச் சென்றான்.
தொண்டை வறண்டு போக, கையிலிருந்த ஜூசை வாயில் ஊற்றினாள்.
ஏதோ யோசனையோடு அண்ணி அருகில் அமர்ந்தவள் அடுத்ததாய் மேடையைப் பார்க்கத் தாய்மை தந்த அழகான வயிரோடும், முழு பொலிவோடும் சிரித்துக் கொண்டிருந்தாள் பிருந்தா!
வாயில் ஊற்றிய ஜூஸ் தொண்டையைத் தாண்டி கீழே இறங்காமல் அங்கேயே மாட்டிக் கொண்டு நின்றது.

Advertisement