Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 73_2
அலைகள் வேகமாக அடிக்க முழுநிலவை பார்த்துக்கொண்டே கையை தலைக்கு கொடுத்து கடற்கரை மணலில் படுத்திருந்தான் கார்த்திக்கின் சிந்தனையை ஆக்கிரமித்திருந்தவன். மனம் எதையும் யோசிக்கவில்லை. இருந்தும் தூக்கமில்லை. ஒருவித விரக்தி! என்ன வாழ்க்கையோ என்ற எண்ணம். மூன்று மாதத்தில் அவன் வாழ்வில் என்ன சாதித்தான்?
பல அனாதை இல்லங்கள் அவர்கள் மேற்பார்வையில் கொண்டு வந்தான். பல பிள்ளைகள் கல்லூரி படிப்புக்கு உதவினான். அமிலத்தால் வாழ்க்கை சிதைந்த பெண்களுக்கு புது வாழ்வு மையம் ஏற்படுத்தினான். இப்படிப் பல.. 
தினமும் ஒன்றைச் சரியாகச் செய்தான். அது காலை மாலை பிருந்தாவோடு பேசுவது. வாரத்திற்கு இருமுறை சென்று அவளை பார்த்துவருவது.
சுதா பேச்சைக் கேட்டு வெங்கட்டோடு பேசினான். கையோடு அம்மாவை அழைத்து வந்திருந்தான். கூட்டி வந்ததோடு சரி.. அவன் தனிப்பட்ட வாழ்வில் பெரிதாக மாற்றமில்லை. சுதா புண்ணியத்தால் இப்பொழுதெல்லாம் கனவு வருவதில்லை. எப்பொழுதும் போல்.. ஆழ்ந்த தூக்கம் வருவதில்லை. புதிதாக.. கோபம் வருவதில்லை. ஏனோ.. எதிலும் நாட்டமில்லை. ஏதோ நானும் வாழ்கிறேன் என்று வாழ்ந்தான். எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாத நிலை. பார்ப்பவர் கண்களுக்கு இது எதுவும் தெரியவுமில்லை. நன்றாகவே மறைக்கப் பழகி இருந்தான்.
ஊரை ஏமாற்றலாம்.. தாயை? சுசிலாவிற்கு இதை எல்லாம் பார்க்கச் சகிக்கவில்லை. கண்காண மும்பையில் கூட, ‘மகன் இருக்கிறான்’ என்று எதோ நிம்மதியாய் இருந்த உணர்வு! இங்கு மகன் நிலை? ஒரே வார்த்தையில் – ‘பரிதாபம்’. ஒன்று வீட்டில் முடங்கிக் கிடப்பான். இல்லை வீட்டுப் பக்கமே வருவதில்லை. மகனை இழந்து நின்றார். அவரிடம் பேசினான்.. அதில் உயிர்ப்பில்லை. பல ஆயிரக் கணக்கான ஊழியர்கள் வாழ்வைச் சீராக்கியவருக்கு மகன் வாழ்க்கையைச் சீராக்கத் தெரியவில்லை. 
மகனோடு இதே வீட்டில் வம்பு செய்து சிரித்த தினங்கள் என்றேனும் திரும்பக் கிடைக்காதா என்று ஏங்கினார். அவனுக்கு அம்மா மனம் புரியாமலில்லை. ஆனால் அவனால் முடியவில்லை. முயற்சிக்காமல் இல்லை. முயற்சித்தான். பேசினான், சிரிக்கவும் செய்தான்… கண்ணை எட்டாத சிரிப்பு, மனதைத் தொடாத பேச்சு. மற்றவர்களுக்கு அதுவே போதும்.. பெற்றவளுக்கு?
நல்ல வேளையாகக் கெட்ட பழக்கங்கள் பழகவில்லை. அயராது உழைத்தான். அவன் கூடவே பீம்பாய் ஒருவன் சுற்றவே அவன் எங்குச் செல்கிறான் என்ற விடயம் சுசிலாவை அடைந்துவிடும். இன்றும் தெரிந்துகொண்டார்.
மாடியில் நின்றவர் கண் மகனைத் தேடிப் பிடித்தது. நிலவொளியில் ஒரு உருவம் படுத்திருக்க, ஒன்று தள்ளி நின்றுகொண்டிருந்தது. கைப்பேசியில் அழைத்தார். வாய் கூசாமல் பொய் சொன்னான். “மா.. வேலை இருக்கு.. நீங்க படுங்க. வந்திடுவேன்” என்று!
அவர் பேச வாய்பளிக்கவில்லை. ஒரு மணி நேரமாகியும் அவன் அசைந்தானில்லை.
“அஷோக்” சத்தம் கேட்டு கண் திறந்தவனுக்கு அதிர்ச்சி! ஒன்பது மாத வயிற்றைத் தூக்க முடியாமல் துக்கிக்கொண்டு நின்றிருந்தாள் பிருந்தா!
“ஏய்… இங்க என்ன பண்ற? இந்த நேரம் இங்க எல்லாம் நீ வரலாமா?” மண்ணை தட்டிக் கொண்டே எழுந்தான்.
“இடுப்பு வலிக்குது அஷோக்!” என்றாள்.
“அச்சோ… ஏன் என்னைப் பாடா படுத்தர… இங்க ஏன் வந்த? இடுப்பு வலிக்குதுனு இங்க வந்து நிக்கர? அறிவிருக்கா? ஹாஸ்பிட்டல் போக வேண்டியது தானே? ஒரு மெசேஜ் பாஸ் பண்ணினா நான் அங்க வர மாட்டேனா?”
கைதாங்கலாய் வீட்டை நோக்கிக் கூட்டிச் சென்றான்.
“லேபர் பெயின் மாதரி இல்லை. ரொம்ப கத்தாத!” 
“என் ப்ராணன எடு!” வாய்க்குள் அவன் முணுமுணுக்க..
“நீ தான் என் உயிர வாங்கர! இருக்க இடுப்பு வலில என்னை மணல்ல நடக்க வைக்கர!”
தஸ் புஸ் என்று அவள் மூச்சு வாங்க.. ஒருவழியாய் வீட்டை அடைந்தனர்.
சுசிலா நின்றிருந்தார். குற்றம் சாட்டும் பார்வை. ஒருவர் முகத்தையும் அவனால் பார்க்க முடியவில்லை. 
“அவனுக்குத் தான் அவன் மேல அக்கர இல்ல… உனக்கும் உன் மேல அக்கர இல்லையா? இந்த இருட்டில இது என்ன வேலை? அவனுக்குத் தான் யாரும் வேண்டாம்னு முடிவு பண்ணிட்டானே… இன்னுமா உனக்கு அது புரியல? அவனையே கட்டிகிட்டு அழாம.. பிள்ளையை ஒழுங்கா பெத்து எடுக்கர வழிய  பாரு!” அவர் பங்கிற்கு அவளைத் திட்ட.. . 
அவனுக்கு ஏனோ பொறுக்க முடியவில்லை.
“மா… அவள ஒன்னும் சொல்லாதீங்க! நான் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருந்தேன். கொஞ்சம் வேலை, ஒரு வாரமா போகல… ஃபோனையும் எடுக்கல.. அது தான் வந்து நிக்கரா! நீங்க படுங்க அவ இங்கயே இருக்கட்டும். கீழ இருக்க பெட்ரூம்ல படுத்துப்பா. நாளைக்கு கூட்டிட்டு போறேன்” என்று முடிக்க..
“இல்ல அஷோக். ஒரு மாதரி இருக்கு. என்னை வீட்டில விட்டிடுங்க.. அம்மா பார்த்துப்பாங்க… பெயின் வந்தா அங்க இருந்து ஹாஸ்பிட்டல் கிட்ட” அவள் முகம் வலியில் சுருங்க
அவன் பரபரத்தான், “வேண்டாம் வேண்டாம்… நீ எங்கையும் போக வேண்டாம். தேவை இல்லாத அலைச்சல். வலி வர மாதரி இருந்தா நான் கூட்டிட்டு போறேன்… வேணும்னா அம்மாவ இங்க கூட்டிட்டு வர சொல்லட்டுமா? உன் கூடவே இருக்கட்டும்” என்றான்.
பிரசவத்திற்கு நாள் இருக்க இன்னும் ஒரு வாரத்தில் வளைகாப்பு விழா. எப்பொழுதும் போல் அவள் அப்பா நாள், நட்சத்திரம் பார்த்து ஒன்பதாவது மாதத்தில் நல்ல நாளை கண்டு பிடிக்க.. ஒரு வாரத்தில் விழா. அதுவரை தாங்குமா என்பது தற்போதைய கேள்வி!
சுசிலா உள்ளே செல்லவும் அவள் ஆரம்பித்தாள் பொரிய.. “நீங்க ஏன் இப்படி இருக்கீங்க?” 
“ஒரு மனுஷன் அவன் இஷ்டத்துக்கு வாழவே கூடாதா? கொஞ்சம் என்னை தனியா விட மாட்டிங்களா ரெண்டு பேரும்?”
“ஓஹ்… அப்போ நான் உன்னை கஷ்ட படுத்தறேன்.. அப்படி தானே? இதுக்கு மேல எப்படி உன்ன தனியா விடணும்னு எனக்கு சத்தியமா தெரியல! நான் என்ன பண்ணனும்? பேசாமா… அதையும் நீயே சொல்லிடு! உயிரோட இருக்கவா இல்ல இப்படியே செத்திடவா? ஏன் என் உயிர எடுக்கர? உன்ன நினைச்சு நினைச்சே என் நிம்மதியே போச்சு! இப்போ யார் செத்துட்டாங்கனு இப்படி சுத்தர? நான் போய் சேர்ந்த பிறகு இப்படி சுத்து!” முதுகு வலி அதிகமாகவும் அவன் மேல் வெடித்தாள்.
“ஏய்… வாய மூடு! என்ன பேச்சு பேசர! இன்னும் ஒரு தரம் இப்படி பேசரத கேட்டேன்.. பல்ல பேத்திடுவேன் ஜாக்கரத! ஆமா.. உன்ன யாரு வர சொன்ன? ஃபோன் எடுக்காட்டா மனுஷனுக்கு ஏதோ வேலைனு விட மாட்டியா? தேடி வந்திடுவியா? கூடவே சுத்தர அந்த தடியன சொல்லணும்!
கண்டதையும் யோசிக்காம வா.. வந்து படு”
“எனக்கு வலிக்குது,  எல்லாம் உன்னால. இதுல, கொஞ்சம் கூட இறக்கமே இல்லாம பேசர. தப்பு உன் மேலனு ஒரு தரம் கூட ஒத்துக்கவே மாட்டியா? என் உயிர கையில பிடிச்சுகிட்டு உன்னையே சுத்தரேனே… பச்… போ அஷோக்” அவள் குரல் கரகரக்க..
அவனிடம் நீண்ட பெருமூச்சு…
“ஏதாவது குடிக்கரீயா? ரொம்ப முடியலியா?” பாவமாய் பார்த்தான்.
“முடியல… ஒரு வாரமாவே முடியல! வயறு இறங்கின மாதரி இருக்கு. பத்து நாள் தாங்குமானு தெரியல… இதுல நான் உன் பின்னாடியே சுத்தணுமா? அப்பா வீட்டில இல்ல… அம்மாக்கு அவ்வளவு கோபம் என் மேல… எல்லாம் உன்னால தான்!”
“பாரு நீ பண்ற வேலைல.. எத்தனை கஷ்டம் உனக்கு? நான் எங்க போக போறேன்… இங்க தான் சுத்திட்டு இருப்பேன்… நீ இப்படி உன்னையே வருத்திக்காத! போதும் பிருந்தா.. நான் அவ்வளவு எல்லாம் ஒர்த்தே இல்ல!”
அவளால் முறைக்க மட்டும் தான் முடிந்தது.
“சரி வா… படு!”
”மாட்டேன்… கூட்டிட்டு போ..”
“ரொம்ப அடம் பிடிக்கர! எல்லா விஷயத்திலுமே..”
“எனக்கு ஏதாதுனா அம்மாவே பார்த்திடுவாங்க. தேவை இல்லாத ஹாஸ்பிட்டல் ட்ரிப் அவாய்ட் பண்ணலாம்.. ட்ரைவரை வீட்டுக்கு அனுபிட்டேன். நீ என்னை அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போ..”
அவள் பேச… அவன் பேச… கடைசியில் அவனே கொண்டு போய் விட்டு வந்தான்.
“இனி மேல் நேரத்துக்கு வீட்டுக்கு போகல.. வந்து நிப்பேன்.” என்றாள். அவள் தானே..? செய்வாள்! அஷோக்கிற்காக எதுவும் செய்வாள். வலியோடு  நடுஜாமத்தில் அவன் முன் வந்து நிற்கவும் செய்வாள். அவனுக்காக இமயமலை வேண்டுமானாலும் ஏறுவாள்.. பாதாளம் வரை சென்றும் வருவாள். அவன் தள்ளி நின்றாலும் அவனை விட்டுவிட மாட்டாள்.
“உன்ன தொல்லை பண்ணமாட்டேன் தாயே… போ போய் படு..” சிரித்துக் கொண்டே கூறினான்.
புன்னகைத்துக்கொண்டே, “போங்க… நேரத்துக்கு படுங்க! ஹாஸ்பிட்டல் போரதா இருந்தா கால் போடுறேன்… நேரா அங்க வந்திடுங்க” என்றுவிட்டு அவள் செல்ல… அதற்கு மேல் அவன் ஒன்றும் பேசவில்லை. வீட்டிற்குச் சென்று படுத்துக்கொண்டான்.
அதன் பின் அவளை அவன் படுத்தி எடுக்கவில்லை. வாழ்வு அதன் போக்கில் சென்றது எந்த மாற்றமும் இல்லாமல்… அடுத்து வந்த ஒரு வாரம் வரை! அவளின் வளைக்காப்பு வரை! இன்றிலிருந்து சரியாக ஆறாவது நாள் வரை!

Advertisement