Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 73_1
“எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை                                         
எங்கள் சொந்தம் பார்த்தாலே… சொர்க்கம் சொக்கி போகுமே
எங்கள் வீட்டில் பூத்தாலே…  பூவின் ஆயுள் கூடுமே”
யாரும் பாடவில்லை. ஆனால் அந்த வீட்டில் இருப்பவர்களைப் பார்ப்பவர்களுக்கு அப்படி தான் தோன்றும். பெரியவர்களின் பேச்சும், சிரிப்பும்.. குழந்தைகளின் மழலையும், கூச்சலும்  ஒன்று சேர நந்தவனமாக காட்சியளித்தது டேனியின் வீடு. காலையில் வீட்டின் கிரகபிரவேசம் முடிந்திருக்க, வந்த விருந்தினர் எல்லாம் சென்றிருக்க, நெருங்கிய குடும்பத்தினரின் சத்தம் தேனீக்களின் ரீங்காரமாய் கேட்டது.
மீண்டும் அமெரிக்கா செல்லும் நோக்கமில்லை டேனிக்கு. அதனால் கலிஃபோர்னியா வீட்டை விற்று அதே போல் ஒன்றைச் சென்னையில் எழுப்பி இருந்தான். சுதாவின் ஆசைப் படியே சென்னையிலிருந்த ஒரு கடற்கரையை ஒட்டி!
ஹாலில் அனியோடு அருளும் ஜோவும் குரலெழுப்பி விளையாட, அனிதா கையிலிருந்த நான்கு மாதமே ஆன க்ரிஷிகா, தீபக்-ரேணுகா தம்பதியினரின் பெண் குழந்தை, அவள் பங்கிற்கு மழலையில் சத்தம் எழுப்பிக் கொண்டிருந்தாள்.
“அண்ணா.. இங்க வாயேன்”, அடுக்களையை ஒட்டி இருந்த லிவ்விங்க் ரூம் சோஃபாவில் நீலாவதி மடியில் தலை வைத்து, சதீஷ் மடியில் கால் வைத்து படுத்துக் கொண்டே டேனியை கூப்பிட, மாமா அருகில் வந்து அமர்ந்தவன், “என்ன டா ஒரே வேலையா…? கால் வலிக்குதா” என்றவன், சுதா கால் விரலில் சுடக்கு எடுத்துக்கொண்டே மாமாவோடு பேச ஆரம்பித்தான்.
சதீஷ் எழுந்து நடமாட ஆரம்பித்திருந்தார். அவர் படுக்கையில் விழுந்த காரணத்தால் அவரின் தொழிலை எடுத்த நடத்த ஆரம்பித்திருந்த தீபக்,  அப்பாவிற்கு முழு ஓய்வைக் கொடுத்து இன்றும் அவனே அதை நடத்தி வருகிறான். சுதாவின் அன்பான அத்தை மாமா, ரேணுவிற்கும் அன்பான அத்தை மாமாவாக இருக்க… வந்த சில தினங்களில் அவளும் அவர்கள் மகளாகவே மாறிப்போனாள். அன்போடு அவர்களை அரவணைத்துக் கொண்டாள். 
“எல்லாரும் இங்க தான் இருக்கீங்களா?” தூக்கம் கலைந்து எழுந்து வந்த ரேணுகா நீலா முட்டியில் தலை வைத்து காலில் சாய்ந்து கொண்டு அமர்ந்துகொள்ள..
“யாருக்கெல்லாம் டி… யாருக்கெல்லாம் காபி” கேட்டுக்கொண்டே வந்தான் தீபக்.
“அத்தான் எனக்கு லெமன் ஜீஸ்” சத்தம் வந்தது சுதாவிடமிருந்து.
“ஸ்வீட்டா சால்ட்டா?” தீபக் கேட்க..
“அவளுக்கு எப்பவும் ஸ்வீட் அண்ட் சால்ட் தான்”, கூறிக்கொண்டே ஒரு கோப்பை ஜூசோடு வந்தான் கார்த்தி.
“நானும் நேத்துல இருந்து பாக்குறேன், அது எப்படி கார்த்தி ஒவ்வொரு முறையும் அவ கேட்கறதுக்கு முன்னமே அவ தேவை தெரிஞ்சு கொண்டு வர?”, தீபக் கேட்க, கார்த்திக் வெறுமனே புன்னகைத்தான்.
“போன ஜென்மத்தில அவர் என் அம்மா” என்றவள்,
“அப்போ இந்த ஜென்மத்தில?” கேட்ட தீபக்கிடம்
“அதையும் விட..” என்றாள். உண்மை தான். கார்த்திக் அவளின் சதையைக் காக்கும் தோல்.. கண்ணைக் காக்கும் இமை. கடந்த இரண்டு வருடத்தில் அவளுக்கு எல்லாமாகிப் போனவன்.
ஜூசை உள்ளிறக்கிக் கொண்டே கேட்டாள், “அண்ணி தூக்கமா?” என்று.
ஜானு அடுத்த டேனியின் வாரிசைச் சுமக்க, அசதியில் உறக்கம்.
“ஆமா, நாம மட்டும் தான். மத்தவங்க எழுந்திரிக்கர நேரம் தான். நாம காப்பிய குடிப்போம். அவங்க வந்த பிறகு அவங்களை கவனிப்போம்” என காபி, டி-யோடு அவர்கள் ஜோதியில் ஐகியாமாகினர் தீபக்கும் கார்த்தியும். பிள்ளைகளும் இவர்களிடம் படை எடுக்க, பேச்சும் சிரிப்பும் களை கட்டியது. 
இது, அங்கிருந்த அனைவர்  வாழ்விலுமே மறக்க முடியாத திருநாள். ஓரே கூரையின் கீழ் டேனியின் முழு குடும்பமும் எந்த முகசுளிப்பும் இல்லாமல்..  மனம் விட்டு பேசி சிரித்து.. 
டேனி, கார்த்தி, தீபக் என அனைவரின் குடும்பமும் இங்கு தான் ஒரு வாரமாக.
ஒரு வாரமாக மாமாவும் அத்தையும் சுதாவோடு இருக்க, தீபக்-ரேணு முன்தினம் தான் வந்திருந்தனர் அவர்கள் குட்டி மகளோடு. சுதா வந்து வாரம் இரண்டாக, வேலை நிமித்தம் கார்த்தி வந்து இரண்டு தினங்களே ஆகிறது.
சுதாவின் விபத்து தீபக்கை முற்றிலும் மாற்றியிருக்க… அவன் ஒரு நல்ல மகன், நல்ல கணவன், நல்ல தகப்பனுமாக மாறியிருந்தான். வாழ்க்கை அவனுக்கு கொடுத்த அனுபவ பாடத்தை ஒழுங்காக கற்றிருந்தான். 
ரேணு அவன் நிறுவனத்தில் அவன் கீழ் வேலை செய்தவள். வேலை முடிந்து வீட்டிற்குச் செல்லும் வேளை உயிர் மட்டும் மிஞ்சியது. கற்பு என்பது உடல் சம்பந்தப்பட்டதல்ல, அது பெண்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதையும் உணர்ந்தவன், ரேணுவை நோக்கி அன்புக் கரம் நீட்டினான். அது காதலாய் மாறி இன்று அவன் வாழ்வில் ஒரு நிறைவு. 
“டேனி.. நான் நாளைக்கு கிளம்பறேன்… அம்மா அப்பாவோட ரேணுவும் க்ரிஷியும் இருக்கட்டும். ஃபங்ஷனுக்கு ஒரு நாள் முன்ன வரேன்”
தீபக் உறைக்கவும், சண்டைக்கு வந்தது சுதா தான். “அத்தான். இது எல்லாம் கொஞ்சம் கூட சரி இல்ல. இந்த மாதரி ஒரு சான்ஸ் அடிக்கடி கிடைக்காது.. இருக்கலாம் இல்ல? எவ்வளவு ஜாலியா இருக்கு…?”
“இல்ல டா.. உனக்குத் தெரியாததா? சொல்லு.. நம்ம தொழில் நம்ம தானே பார்த்துக்கணும். அடுத்த வாரம் வரும் போது ரெண்டு நான் சேர்ந்தே இருக்கேன்”
அடுத்த வாரம், இன்றிலிருந்து சரியாக ஆறாவது நாள்.. டேனியின் மென்பொருள் நிறுவனத்தின் புது கட்டத் துவக்க விழா இருக்கவே, குடும்பத்தினர் அனைவரும் தங்கி இருக்க தீபக் மட்டும் வேலை விஷயமாகக் கேரளா செல்கிறான்.
இரவு துவங்க, பேச்சும் சிரிப்பும் ஒரு வழியாக அடங்கியது. கடல் காற்று கூந்தலை வருட, மாடி மேல்மாடத்திலிருந்து நிலவு ஒளியில் மின்னிக்கொண்டிருந்த கடலை பார்த்து நின்றிருந்தாள் சுதா.
சுதா இஷ்டப்படி மேல்மாடம் முழுவதும் பெரிய பெரிய தொட்டிகளில் மல்லிச் செடி. இடையளவே இருந்தாலும் எல்லா மல்லிச் செடிகளும் பூத்துக் குலுங்கியது.
உப்பு காற்று மல்லியின் நறுமணத்தை ஏந்திவர… கண்மூடி நின்றாள். நாசியில் வாசம், காதில் அலையின் இரைச்சல்.. மூடியிருந்த கண் எதைக் கண்டதோ.. லேசாகக் கண் ஓரம் நீர் கசிய, இதழ் விரிந்தது.
“அட்டை.. ஐ வானா ஸ்லீப் வித் யு”
கண்ணைத் திறக்க அவளின் இரவு உடையை இழுத்துக் கொண்டே கண்ணைக் கசகிக் கொண்டு நின்றிருந்தான் அருள்.
“வா என் பட்டு” என அவனைத் தூக்கி தோளின் பொட்டு கொண்டு அங்கிருந்த சாய்வு நாற்காலியில் அமர..
“கட நேணும் அட்ட” என்றான்.
குழந்தை அமெரிக்க ஆங்கில சுற்றத்தோடும்.. தமிழ் பெற்றோரோடும் வளர்ந்திருக்கவே அவன் தமிழ் இன்னும் மழலையைத் தாண்டவில்லை. ஆங்கிலத்தின் தெளிவு இன்னும் தமிழில் வந்திருக்கவில்லை.
தோளில் சாய்த்துக்கொண்டே, “என் பட்டுகுட்டிக்கு என்ன கதை சொல்லட்டும்.. “வேதாளமும் விக்கிரமாதித்தனும் கத சொல்லட்டுமா?”
“நோ அட்ட… மாமா வீடியோ நேணும்!”
“உன் கண் இப்போவே சொக்குது. நாளைக்குப் பார்ப்போம். இன்னைக்கு விக்கிரமாதித்தன் கதை. சரியா?”
“எஸ் அட்ட” என்றவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டே கதையை ஆரம்பித்தவள், “விக்கிரமன் சரியான பதில் சொல்ல, அதனால.. அவன் மௌனம் கலைய, வேதாளம் அது தங்கியிருந்த உடலோட பறந்து திரும்பவும் முருங்கை மரத்தில் ஏறிடுச்சு…” என முடித்தாள்.
கதை முடியும் முன் அருள் உறங்கியிருக்க அவனைப் படுக்கையில் கிடத்தவும் ஒரு வாண்டிற்கு மூக்கு வியர்த்தது.
கீழிருந்து ‘வீல்’ என்ற சத்தம் காதை கிழிக்க, “ஆரம்பிச்சுட்டான்… இனி ஒருதரையும் தூங்க விட மாட்டான்..” கூறி சென்றவள் ஜோவோடு வந்தாள்.  
“உங்களுக்கு என்ன வேணும்? ஏன் தூங்கம அழரீங்க? கத சொல்லவா?” ஜோவை கொஞ்ச, அவன் கண்ணும் கையும் காட்டியது அவள் அலைப்பேசியை.
“மூனு மாசமா இதே வேலை டா உனக்கு. இன்னும் எத்தன தரம் அதே ஃபோட்டோவையும் வீடியோவையும் பார்ப்ப… நீ நீச்சல் அடிக்கரத பாக்க உனக்கு அத்தன இஷ்டமா? நீ கெட்டது  போதாதுன்னு அவனையும் கெடுத்து வச்சிருக்க.”
குழந்தை கண்ணனோடு நீச்சல் குளத்தில் விளையாடி கொண்டிருந்தான்.. கண்ணன் கைபிடித்து பட்டாம் பூச்சியை விரட்டினான், அஷோக் இவனைத் தூக்கி போட்டுப் பிடிக்க.. என்றும் போல் இன்றும் அழகு பல்லைக் காட்டி கைகொட்டிச் சிரித்தான்.
ஏனோ குழந்தைகளுக்கு ஓரே விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்யப் பிடித்தது. அவனும் சலிக்காமல் அதே புகைப்படங்களையும், காணொளியையும் காண, சுதாவும் அதைத் தான் பார்த்து அமர்ந்திருந்தாள்.
“இப்படி சிரிச்சுட்டு இருந்தா அப்பா வந்து ‘ஏன் தூங்கலனு’ திட்டுவாங்க. நாளைக்கு நைட் பார்க்கலாம். இப்போ படுக்கலாம் வா..”
அவள் பேசியது அவன் காதில் விழுந்ததா தெரியவில்லை. அருள் போல் சொன்னதும் கேட்கும் ரகமல்ல ஜோ. அவனிம் பேசி எல்லாம் புரிய வைக்க முடியாது. ஒன்று அவன் வயது மற்றொன்று கடைக் குட்டி என்ற செல்லம் அதிகம்.
கார்த்தி, டேனி, தீபக்கைத் தவிர அனைவரும் உறங்க சென்றிருக்க, சுதா அறையில் மட்டுமே விளக்கு எரிய, கார்த்தி, “நீங்க பேசிட்டு இருங்க.. நான் மேல போய்ட்டு ரெண்டு நிமிஷத்தில வரேன்” என்று கூறியவன் இரண்டு இரண்டு படியாய் தாவி மேல் தளத்திற்குச் சென்றான்.
புதுமனை விழா அலைச்சலோ இல்லை இதமான இரவில் காற்றில் தவழ்ந்த கடலின் அலையோசையோ.. எதுவோ ஒன்று சுதாவை ஜோவோடு தூக்கத்திற்குள் தள்ளியிருந்தது.
எல்லா ஃப்ரென்ச் சாளரமும், பால்கனி செல்லும் கதவும் திறந்திருக்க அறை முழுவதும் கடற்காற்றும் விளக்கின் ஒளியும்.
சுதா இடது கையில் தலை வைத்து அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அருள் தூங்க… அவள் நெஞ்சின் மேல் வாகாய் படுத்துக்கொண்டு சின்ன வாண்டு உறங்கிக்கொண்டிருக்க… வலது கையால் அவனை அணைத்திருந்தாள்.
“இப்படி தூங்கினா இவளுக்கு உடம்பு வலிக்காதா..” முணுமுணுத்துக்கொண்டே அருளைத் தனி தலையணையில் படுக்க வைத்து, ஜோவை தூக்க வரவும் அவன் கண் சுதா முகத்தில் நிலைத்தது. கண்ணோரம் உப்பு நீர் வழிந்து காய்ந்த தடம்.
அப்படியே நின்றுவிட்டான். என்ன யோசிக்க வேண்டும் என்று தெரியவில்லை. ‘இன்னுமா?’ என்ற கேள்வியின் பதில் அவனை வதைத்தது.   
அவனையும் கேட்காமல் கண் கசிய, கனத்த நெஞ்சோடே கலைந்து சுதா நெற்றியில் விழுந்து கிடந்த முடியை பின் தள்ள, கை நடுங்கியது. ‘தப்பு செய்துவிட்டேனோ..?’ மனம் வெகுவாய் கேள்வி கேட்டது.
குனிந்து நெற்றியில் இதழ் பதிக்க.. சொட்டு நீர் அவள் நெற்றியில் விழுந்து தெறிக்கக் கண் திறந்துவிட்டாள்.
தூக்கக் கலக்கத்தோடே, “என்ன பா?” என்றவளின் நெற்றி துடைத்து
“ஒன்னும் இல்ல டா… நீ தூங்கு. விளக்க அணைக்க வந்தேன்” என்றான்.
“ம்ம்..” கண்ணை மூடிக்கொண்டே, “மூனு பேரும் சேர்ந்து தண்ணி அடிக்காதீங்க!”
“பியர் எல்லாம் தண்ணி இல்ல டா செல்லம்!”
“ப்ளீஸ் கார்த்தி… இப்போ தான் தீபக் மனுஷனாயிருக்கிறார். அவர வச்சுகிட்டு வேண்டாம்.”
“சரி.. வேண்டாம். நீ நிம்மதியா தூங்கு. ஜோவ தூக்கட்டா?”
“வேண்டாம்” என்று புரண்டு படுத்து அவனை அணைத்துக்கொள்ள அடுத்த நிமிடம் தூங்கிப் போனாள்.
விளக்கை அணைத்து சாளரங்களை மூடி, பால்கனி கதவை மூட சென்றவனுக்கு ஏதோ தோன்ற வெளியே சென்று நின்று கொண்டான். வெளியே காற்றடித்தாலும் உள்ளுக்குள் புழுங்கியது. கடலின் அலை ஓய்ந்தாலும் அவன் உள்ள அலை? நீண்ட மூச்சை இழுத்து விட்டான்.
முழுநிலவு வானை அலங்கரித்திருக்கக் கடல் நீர் மின்னியது. அலைகளும் நிலவைப் பார்த்து ஆர்ப்பரிக்க.. கனத்த மனதோடு அதை பார்த்துக்கொண்டே நின்றான். மனம் முழுவதும் சுதாவின் கண்ணீரும் அதன் காரணக் காரனும்  தான்.

Advertisement