Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 71_4
மாலை விமான தளத்தில் நின்றிருந்தனர். இருவருக்கும் தொண்டை அடைத்தது.
“உங்களுக்கு ஒன்னு தெரியுமா… விபத்து நடந்த அன்னைக்குத் தான் நீங்க என்ட்ட வாய் திறந்து ‘லவ் யூ’-னு சொன்னீங்க! என் கைய உங்க இதயத்தில வச்சு! என் கைவழியா உங்க இதய துடிப்போட உங்க காதல எனக்குள்ள இறக்கினீங்க! நான் தான் சொன்னதே இல்ல. ‘சொல்லாத. வாழ் நாள் முழுசும் உணர்த்து’-னு சொன்னீங்க! முடியாமலே போச்சு!” நீண்ட பெருமூச்சு விட்டாள்.
வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் உணர்ந்து வாழ வேண்டும். யாரின் வாழ்வு எப்பொழுது தடம் புரளுமோ தெரியாது.
கடைசியாக வாய் திறந்து, “ஏன் என்னை விட்டேனு சொல்லவே இல்லையே சுதா?” எனக் கேட்டேவிட்டான்.
“ஒரு ஆறு வாரம் நீங்க லண்டன் போர வேல வந்துது. தவிர்க முடியாத வேலை. என்னால அந்த பிரிவ தாங்கவே முடியல. ரொம்ப சண்டை போட்டேன். பிரிஞ்சு போர ரேஞ்சுக்கு போச்சு! ஆனா அந்த பிரிவுதான் காதலோட ஆழத்த உணர வச்சுது.
நான் உங்க மேல அசை வச்சேன்.. நீங்க என் மேல உயிரையே வச்சீங்க. அதனால தான் அந்த விபத்துக்கப்பரமும் நான் கல்லா நிக்கறேன். நீங்க உயிரில்லாம உடைஞ்சு நிக்கறீங்க!
உங்க கூட நான் இருந்தா உங்க உயிருக்கு ஆபத்துனு சொன்னாங்க…
உங்க தலைவலிக்கு நான் தான் காரணம்னு சொன்னாங்க. நீங்களும் என்னைப் பார்த்தாலே தலையை பிடிச்சுட்டு துடிச்சீங்க.. என்னால தாங்க முடியல.. எனக்கு வேற வழி தெரியல!
உங்க கூட என் வாழ்க்கையை கழிக்கணும்னு ஆசைப் பட்டது உண்மை. உயிரா காதலிச்சது உண்மை. உங்க உயிர் பிரிஞ்ச பிறகு தான் என் உயிர் பிரியணும்னு ஆசை பட்டதும் உண்மை. நான் இல்லாம நீங்க அவஸ்தைப் பட கூடாதுங்கரதுக்காவே அப்படி யோசிச்ச எனக்கு, நான் தான் உங்க ‘எமன்’னு தெரிஞ்சதும் எப்படி இருந்திருக்கும்னு உங்களுக்கு புரியுதா?
நான் ஆசைப் பட்டு பிரியல! உயிர் பிரியர வலியோட தான் பிரிஞ்சேன்” உணர்வுகளை அடக்க மூச்சு வாங்கியது.
அவன் அவளையே பார்க்க… கண்மூடி மூச்சு வாங்க நின்றிருந்தாள். அழுகை முட்டிக் கொண்டு வர, அடக்கிக் கொண்டாள்.
“உங்க நினைவில நான் திரும்பி வரவே மாட்டேன்னு சொன்னாங்க… என்னை நீங்க பார்கலனா என்னை பத்தின எந்த யோசனையும் இல்லாம உங்க குடும்பத்தோட சந்தோஷமா இருபீங்கன்னு தப்பா நினைச்சிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்… எனக்கு அப்போ வேற வழி தெரியல. என்னை மன்னிச்சுடுங்க. என்னலா உங்க வாழ்க்கையைத் தயவுசெஞ்சு கெடுத்துக்காதீங்க. நான் உங்க வாழ்வில வந்த வசந்தமா இருக்கணும்… இப்படி உங்க நிம்மதியை பிடுங்கி உங்களை உருகுலைக்கரவளா வேண்டாம்.”
கண்மூடி மூச்சு வாங்க நின்றவள்… அவனைப் பார்க்க அவன் புன்னகைத்தான்.
“உன்ன பார்த்ததில எனக்கு ரொம்ப சந்தோஷம் சுதா. உன் கூட ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்கேன். அத குடுத்த நீ இப்போ போலவே சந்தோஷமா இருக்கணும். நான் நல்லா தான் இருக்கேன். இருப்பேன். வெங்கட் கிட்ட பேசறேன். அம்மாவா போய் பார்க்கறேன். வீட்டுக்கு கூட்டிட்டு வரேன். நீ சொன்ன மாதரியே சந்தோஷமா நானும் வாழறேன். இன்னைக்கு என் வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு நாள். உன்னோட இனிய நினைவுகளோட போறேன். என்னை நினைச்சு வருந்தாத. கண்டிப்பா நல்லாயிருப்பேன்.” புன்னகை முகமாக விடைபெறத் தயாரானான்.
நேரம் ஆகிவிட.. கிளம்ப எத்தனித்தவன் விரல்களைப் பிடித்துக் கொண்டாள்.. அவள் வலது கை அவன் இடது விரல் நுணியைப் பிடித்திருக்க.. அதை விட முடியவில்லை. சிரித்தாள்.. அதில் அழுகை 80 விழுக்காடும் புன்னகை 20 விழுக்காடும் இருக்க.. அதில் வலி அப்பட்டமாக தெரிந்தது. கீழ் உதட்டை அழுத்தி கடித்துக்கொண்டே சிரித்தாள்.
“கிளம்பறேன் சுதா…” என்றான். எந்த உணர்வும் வெளிக்காட்டாமல். அவனுக்கும் மரண வலி தான்!
“ம்ம்ம்” என்றாள். கையை விடவேயில்லை.
அவன் திரும்பி நடக்க, சொன்னாள். அவன் விரலை இறுக பிடித்துக்கொண்டே சொன்னாள்.
“உங்க கனவு.. அது கனவு இல்ல.”
நின்றுவிட்டான். அவள் நிருத்தி விட்டாள்.
அவன் திரும்பி அவளை கேள்வியாய் பார்க்க, கண்ணீர் மல்க.. நா தழுதழுக்க.. அவன் கண் பார்த்து சொன்னாள். தங்கு தடை இல்லாமல், தெளிவாய், ”கனவில்லை.. நிஜம். அத்தனையும் நிஜம்! அது நாம அனுபவிச்சு வாழ்ந்த வாழ்க்கை. ஆக்ஸிடென்டுக்கு முந்தின நைட் நாம சேர்ந்து தான் இருந்தோம். உங்க வீட்டில.. உங்க படுக்கையறையில.. ஒரே படுக்கையில. கணவன் மனைவியா..” கூறியவளுக்குத் தொண்டை அடைத்தது. கேட்டவனுக்கு இதயம் எகிறி துடித்தது.
சொல்லிவிட்டாள். ஆறு மாத வாழ்வைச் சொல்லிவிட்டாள். 
ஞாபங்கள் அழிய ஒரு ஜென்மம் வேண்டும்… உள்ளத்தை குடைந்து உள்ளிருக்கும் அணுவில் ஆழமாக எழுதிவைக்கப் பட்ட காதலை எப்படி மறக்க முடியும்? பிரிவின் வருடங்கள் கூடக் கூட ஏனோ இவர்கள் காதல் மட்டும் குறையாமல் கூடிக்கொண்டே போகிறது. ஆனால் வெளியில் காட்டிக் கொள்ள முடியாத வேதனையாய் மாறிப்போனது தான் அதன் அவலம்!
கேட்ட செய்தி அவனைக் கொன்றது. ‘இது என் சுதாவா? என்னவளா? இனி இல்லையே..’ நிஜம் கசத்தது. 
பிருந்தாவிடமிருந்து அழைப்பு வந்தது. 
கைப்பேசியோடு சேர்த்து உணர்வுகளையும் அணைத்தான்.
“தாங்க்ஸ் சுதா! வாழ்ந்திடுவேன்” என்றான்.
கண்ணீர் மல்க.. இதழ் கடித்து சிரித்துக்கொண்டே தலையை மேலும் கீழுமாக ஆட்டினாள். அரவணைத்து அவள் கண்ணீர் துடைக்க ஆசை தான். ஆனால் முடியாதே..
அவன் நகரவும், “கிவ் மி எ ஹக் (give me a hug)” என்று நண்பனை தழுவது போல் தோளோடு அணைத்துக் கொண்டாள்.
பேசியாயிற்று… ஆனால் பிரிவை ஏற்க முடியவில்லை. வலித்தது. வலது கை அவன் விரல்களைப் பிடித்து அழுத்த, இடது கை அவன் அவன் சட்டை கையை இறுக்கியது.
பெருவிரலால் அவள் விரலை வருடினான்.
‘இன்னும் நாற்பது வருடம் தான்.. வாழ்ந்து விடலாம்’ என்ற செய்தி அதில் பொதிந்திருந்தது.
என்றோ உள்ளத்தில் சாமாதியாய் போன காதல் விஸ்வரூபம் எடுத்து அவர்களைப் பார்த்துச் சிரித்தது. நெஞ்சைப் பிளந்த வலி முட்டிக்கொண்டு வெளிவர முடியாமல் தொண்டையில் மாட்டிக்கொள்ள.. கேவலாய் வெடிக்க.. அவன் புஜத்தில் கண்ணை நசுக்கிக் கசிந்த கண்ணீரைத் தடுத்தாள்.
அவள் சத்தமாய் அழ, அவன் சத்தமில்லாமல் வாய்விட்டு அழக்கூட முடியாத ஊமையாய் அழுதான். வலி இருவருக்கும் ஒன்று தான்.. இருவராலுமே தாங்க முடியாத வலி…
தேற்றிக்கொண்டாள் அவனுக்காக… புன்னகை முகமாக அனுப்பி வைத்தாள். 
“நீங்க உயிரோட இருக்கணும்னு  உங்கள நானே கொன்னுட்டேன்! நானும் செத்துட்டேன்”
அவன் தலை மறைய மறைய அவள் இதயம் நொறுங்கியது.. இவனை எப்படி மறக்க முடியும். நெஞ்சைப் பிழிந்து கொண்டு துக்கம் தொண்டையை அடைக்க… இனி பொய்யாய் சிரிக்க வேண்டாமே.. முகம் சோகத்தைப் பூசிக் கொண்டது.
நாடி துடிக்க.. உதடு பிதுங்க.. ஓரேயடியாக தன்னை விட்டுச் சென்ற அம்மா வருவாளா என்று வாயிலையே பார்த்து நிற்கும் குழந்தையாய் கண்ணீர் வழிய… பார்த்தாள்.
ஒத்த உசுரு உன்னால
நித்தம் கசியும் கண்ணால
தன்னந் தனியா தூங்குற
குளுருதா புள்ள
மண்ணுப்பட்டு கீருமேன்னு
வச்சிருந்தேன் மாரு மேல
கீழப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள
காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ
பொத்தி வச்சி பாத்துக்கிட்டேன் புரிஞ்சிதா புள்ள
வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன்
காதுமடல் கடிச்சிக்குரேன் 
உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன்,
அதுக்கு மட்டும் – திரும்பி வா புள்ள
திரும்பி வா புள்ள…..
அவர்கள் சேர்ந்து வாழ்ந்த வாழ்வு சிறுகதையாய் போனாலும் அது தந்துவிட்ட சென்ற வலி மட்டும் ஏனோ தொடர்கதையாய் போனது. 
கண்ணன் சுதா வாழ்வை விட்டு போய்க்கொண்டிருக்க.. எத்தனை முறை தான் இந்த வலியை அனுபவிப்பது? நின்று பார்க்கவும் முடியவில்லை… நகரவும் முடியவில்லை. அவன் தலை மறையும் வரை தான். அதன் பின் அவளுக்கான வாழ்கையில் புதைந்து போகவேண்டும்.
ஒவ்வொரு காலாய் பின் வைத்துக்கொண்டே போக யாரோ மேல் இடித்து நின்றாள்.
அவள் தோளைச் சுற்றி கை அணைத்துக்கொள்ளவும்.. இன்னுமே அவளுக்கு விக்கிக் கொண்டு வந்தது. அவள் மூழ்கிபோகாமல காப்பவன்.. இன்று அவள் உணர்வுகளிலிருந்து காக்க வந்து நின்கிறான்.
அவள் திரும்பிப் பார்க்கவில்லை… கண்ணன் தலை மறைந்து கொண்டிருக்க.. அந்த உடலில் மீதமிருந்த கொஞ்சம் உயிரும் வடிய.. அசையாமல் கண்ணனை பார்த்து நின்றாள்.
நிற்பவள் வலி புரிந்தது. அவன் என்ன செய்யமுடியும். அவனுக்கும் வலிக்கத் தான் செய்தது. அவன் என்னதான் சுதாவை நேசித்தாலும்… பாதுகாத்தாலும்.. அது அவளுக்கு போதவில்லையே. 
கண்ணீரைத் துடைத்து தன்னோடு அணைத்துக்கொண்டான்.
சென்று கொண்டிருந்த அஷோக் கடைசியாகத் திரும்பவும் கார்த்தியின் ஒரு தோளில் சுதாவும் மறு தோளில் ஜோ-வும் தெரிய.. இதயம் வலித்தாலும், மனதில் ஒரு நிம்மதி பரவியது.
அவனைச் சுற்றியிருந்த சிறை கம்பி உடைந்திருக்க… சிறகு முளைத்திருக்க.. இன்று நன்றாய் சுவாசிக்க முடிந்தது.
நெற்றியைத் தேய்ப்பது போல் வழிந்த கண்ணீரைத் துடைத்து வேகமாய் அவன் வாழ்வை நோக்கி பயணத்தைத் தொடர சென்றான். வாழ்ந்து விடுவான் நாற்பது.. ஐம்பது வருஷம் தான்! வாழ்வதற்கு நினைவிகள் இருக்க.. கனவோடு வாழவேண்டாம் இனி.
சமாதி என்றால் என்ன? ஆறடி பள்ளம் நோண்டி உயிரற்ற சடலத்தைப் புதைப்பது. 
அது உடலுக்கு மட்டும் தான் போலும். உள்ளத்திற்கு அது தேவைப் படவில்லை.
தன் இணைக்காய்.. தான் காதலிக்கும் நபரின் இன்பத்திற்காய் தன் நிம்மதியை, தன் இன்பத்தை உள்ளுக்குள், எவரும் பார்க்காவண்ணம் ஆழ நோண்டிப் புதைத்து.. அது தெரியாமல் இருக்கப் பொய்யான சிரிப்பால்.. பொய்யான வாழ்வால் மூடுவதும் சமாதி தான். இரு உள்ளங்கள் சமாதி ஆகிக் கொண்டிருக்க.. அந்த சமாதியில் அவர்கள் காதல் வாழ்ந்து கொண்டிருக்கிறது.
உடல்கள் பிரிவதால் காதல் சாவதில்லை. தன்னமில்லா அழுக்கற்ற பேரன்பில் காதல் துளிர்க்கிறது. இவர்கள் காதல் விதை விருட்சமாய் மாறி இன்று பூ பூத்துக் குலுங்குகிறது. காதல் அழியவில்லை! தனித்தனியே வாழ்ந்தாலும் அவர்கள் காதல் அழியப் போவதுமில்லை.
  

Advertisement