Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_2
கார்த்திக் கைப்பேசியை வைத்துவிட்டு, அடுக்களைக்குள் நுழைந்தான்.
“சாரி.. பாஸ்.. தங்க பேமிலி இன்னைக்கு தான் அவங்க வீட்டுக்கு கிளம்பினாங்க. அவ தான் கால் போட்டா.. அது தான் எடுக்க வேண்டியதா போச்சு.. வாங்க அங்க உட்காருவோம்!” கூறிக்கொண்டே மகனையும் அவனுக்கு உணவையும் கையில் எடுத்துக்கொண்டு, இருவருமாய் லிவ்விங் ரூம் செல்ல.. சுதா மாடியிலிருக்கும் தன் அறைக்கு ஓட்டமும் நடையுமாகச் சென்றாள்.
முள்ளின் மீது ஒரு படுக்கை. எந்த பக்கமும் திரும்ப முடியவில்லை. ஒவ்வொரு நிமிஷமும் அவஸ்தையாய் நகர்ந்தது இருவருக்கும். விழுங்கவும் முடியாமல் துப்பவும் முடியாமல்.. விவரிக்க முடியா வேதனை. மற்றவர்களுக்கு உணரமுடியாத வேதனை; சுதா, கண்ணனுக்குத் தாங்கமுடியா வேதனை.
சிறிது நேரம் கழித்து கீழே வந்தவள் உடை மாற்றி, முகம் கழுவி, முடியைத் தூக்கி க்ளிப் செய்திருந்தாள். மூக்கு நுணி சிவந்திருந்தது. அதற்கு இணையாய் கண்களும்.
அவள் அடுக்களை நோக்கிச் செல்ல, கார்த்தி, “சுதா இங்க வாயேன்..” என்றான் ஆர்வமாய்.
நடந்து கொண்டே, “என்ன வேணும்?” என்றாள்.. திரும்பிப் பார்க்காமலே.
“இங்க பாரு உன் குட்டிய.. பிடிக்காம நடக்க ட்ரை பண்றான் பாரு.. சீக்ரம்” எனவும்
வேறு வழி இல்லாமல் திரும்பிப் பார்த்தாள்.
“சூப்பர் இல்ல..” என்று சுதாவைப் பார்த்த கார்த்தி, “ஏய் என்னடி ஆச்சு? அழுதியா? என்ன ஆச்சு?” என்று பதறிக்கொண்டு வர, அவளுக்குத் தான் என்னவோ போல் ஆனது.
கண்ணன் பார்த்துவிட்டானா என்று பார்வை அவனைத் தழுவ அவன் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ஒன்னும் இல்ல இப்போ எதுக்கு அதிர்ச்சியாரீங்க? மேக்கப் கொஞ்சம் ஓவரா போட்டிருந்தேன். அதை எடுக்கவும் முகம் சிவந்திடுச்சு! போங்க போய் அவனைப் பாருங்க..” என்று சத்தமாகவே சொல்லிச் சென்றாள்.
கார்த்தி அவள் பின்னால் சென்றான். “டேய்.. என்ன டா.. நேத்துல இருந்தே சரி இல்ல நீ. கேட்டாலும் சொல்ல மாட்டேன்ற! என்ன டா? என்ன ஆச்சு? என்ட்ட கூடச் சொல்ல முடியாத அளவுக்கு என்ன பிரச்சினை? உடம்பு முடியலையா…” பதறித் தான் போனான் கார்த்தி. இரண்டு வருடத்தில் இப்படி அவளை அவன் பார்த்ததேயில்லை.
“நிஜமாவே ஒன்னும் இல்ல பா.. நீ போ.. வீட்டில ஆள வச்சுகிட்டு என் பின்னாடி சுத்தாத.. போ” என்றுவிட்டு அவள் சமையலில் மூழ்கினாள்.
அந்த சூழலில் அஷோக்கால் இருக்கவே முடியவில்லை. சென்றுவிட்டால் போதும் போல் ஆகிவிட்டது. அழகான குடும்பத்தின் இடையே அவன் இருப்பது சரியில்லை என்று தோன்றியது. தெளிந்த நீரில் கல் எறிந்து விட்ட உணர்வு.
பிருந்தா அழைத்தாள். மூச்சு விட முடிந்தது. சுதாவைப் பார்த்ததை பற்றி மூச்சு விட்டானில்லை.
பேசிவிட்டு வரவும் உணவு தயார் என்றாள்.
உணவு மேசையில் அமர்ந்து இரண்டு வாய் சாப்பிடவும், மகன் அழ ஆரம்பித்தான். சின்ன சிணுங்கலாய் ஆரம்பித்தது. பின் சத்தம் அதிகமாக, கார்த்திக் தூக்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். இது அவ்வப்போது நிகழ்வது தான். 
“நீங்க சாப்பிடுங்க பாஸ்… சுதா பார்த்துக்கோ… இவன் கொஞ்சம் அடங்கினதும் நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்” கார்த்திக் நகர்ந்து கொண்டான்.
அவன் சாப்பிட மட்டுமே வாய் திறக்க… அவளே மீண்டும்  ஆரம்பித்தாள்.
“வெங்கட் எப்பிடி இருக்கார்?”
“தெரியலை மூனு வருஷம் ஆச்சு,,, பேசி!”
“…”
நிமிர்ந்து அவன் எதிரில் அமர்ந்திருந்தவள் முகம் பார்த்தான்.
“உன் கிட்டையும் நான் பேசக் கூடாது தெரியுமா…” என்றான்.
அவள் என்ன சொல்ல வேண்டும்? தெரியவில்லை. பழையது அவன் நினைவில் இல்லை என்றானே..? என்ன சொல்ல வருகிறான்? தோழியாகத் தானே நினைக்கிறான்?
“ஏன் சுதா? ஏன் போன? என் கிட்ட ஒரு வார்த்த சொல்லிட்டுப் போயிருக்கலாமே…”
அவள் ஒன்றும் சொல்லவில்லை. அவனையே பார்க்க.. இடம் வலமாகத் தலையசைத்துவிட்டு மீண்டும் உணவில் கவனம் செலுத்தினான்.
உணவை பார்த்துக்கொண்டே.. தலையைத் தூக்காமல், “உன் கையால நான் இதுக்கு முன்னால நிறைய தரம் சாப்பிட்டிருக்கிறேன் தானே?” என்ற கேள்வியோடு நிறுத்தினான்.
“..” பதில் சொல்ல முடியவில்லை. ‘இவனுக்கு தெரிந்துவிட்டதா?’
“வெங்கட் கூட நான் ஏன் பேசரது இல்ல தெரியுமா?” அவள் முகம் பார்த்து நிறுத்த
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள்.
“அவன் என் கூடவே இருந்தும் பேச வேண்டிய நேரத்தில பேசவே இல்ல. அவன் ஃப்ரெண்ஷிப்புக்கு அவன் மரியாதை கொடுக்கல. என் உணர்வுக்கு மதிப்பு தரலை! தெரிஞ்சும், சில விஷயங்களை என்ட சொல்லாம மறச்சிட்டான்னு தொணுது!  
எல்லா உறவுக்கும் ஒரு மரியாதை இருக்கு. என்ன வேணும்னாலும் காரணம் அவன் சொல்லட்டும்… கடைசியில அவன் உண்மையா இல்ல-ங்கரது மட்டும் தான் இன்ஃபெரன்ஸ் ஆஃப் தி ஸ்டோரி (inference of the story). அவன்ட்ட நான் பேசனுமா?”
“…”
“உன்ட்ட?”
“…” விழித்தாள்.
‘இவன் கேள்விகளுக்கெல்லாம் பதில் தெரியும்! வாய் திறக்க வேண்டுமா? தெரியவில்லை!’
‘இவனுக்கு எதுவோ தெரிந்திருக்க வேண்டும்’ அவன் பேச்சு உணர்த்தியது. சுதாவிற்கோ என்ன சொல்லவேண்டும் என்று தெரியவில்லை.
குழந்தை சமாதானப் படவும், கார்த்திக் வந்து அமர்ந்து கொண்டான். இயல்பாகப் பேசினான். மற்ற இருவரும் பேசியது போல் இருந்தாலும்.. ஒட்டுதல் இல்லை.
பிஸினஸ் லன்சில் அஷோக்கோடு உணவருந்தியதுண்டு. ஆனால் இன்று வீட்டில் அவனோடு ஒரே மேசையில்… கார்த்திக்கிற்கு ஏகப் பட்ட குஷி! பேச்சில் தெரிந்தது.
“இத சாப்பிட்டு பாருங்க பாஸ்… ரொம்ப நல்லா இருக்கும். சுதா கைபக்குவம் யாருக்கும் வராது. அம்மா கையில சாப்பிடுர திருப்தி இவ கைல சாப்பிட்டா மட்டும் தான்..” – கார்த்திக்.
உணவு வழுக்கிக் கொண்டு உள்ளே செல்ல… கூடவே சென்றது பல நினைவலைகள்.
“இத டேஸ்ட் பண்ணவே இல்லையே..” வருடங்கள் முன் ஊட்டிய அவள் விரல் அவன் உதட்டில் உரைந்தது.. அன்று என்ன செய்ததோ நினைவில் இல்லை ஆனால் அவன் எதிரில் தெரிந்த அதே விரல்கள் அவன் கண்ணைக் கரித்தது. மாற்றான் மனைவி… இனி நினைக்க ஒன்றுமில்லை.
தண்ணீர் குடித்து உள்ளிறக்கிக் கொண்டான். எல்லாம் உள்ளுக்குள் ஆழமாகப் புதைந்து போனது.
அவன் கண்ணின் நீர்ப்படலம் அவளின் உயிரைப் பிடுங்கி எடுத்தது. ஒன்று சாக, மற்றொன்று சாகும் அன்றிலின் வலி. நூறு வருடம் இருவரும் பிரிந்து வாழ்ந்தாலும் உணர்வுகள் மாறாது போலும்!
உணர்ச்சிகளை உள்ளே போட்டுப் புதைப்பதில் இருவரும் ஒருவர் மற்றவரை மிஞ்சினர். மூன்று வருடத்தில் ‘உணர்ச்சிகளை கொன்று, சிறப்பாக நடிப்பது எப்படி’ என்பதில் முனைவர் பட்டம் வாங்கி இருந்தனர்.
மீண்டும் குழந்தை சிணுங்க… சுதா தூக்கிக் கொண்டாள். இரண்டு நாட்களாய் அருளோடு வம்பு வளர்த்து அவன் தூக்கம் கெட்டிருக்கவே இன்று எதற்கெடுத்தாலும் அழுகை. நன்றாய் தூங்கினால் எல்லாம் சாரியாகும்.
“கார்த்திக்.. குழந்தையை பாருங்க, நான் கிளம்புறேன். ஹாட் அ குட் டைம். தேங்க்ஸ் ஃபார் எவ்ரித்திங்..” என்று கை குலுக்கியவனிடம், சுதா, “எப்படி வந்தீங்க?” எனவும்
“ஃப்ரண்ட் கூட ஷாப்புக்கு வந்தேன்.. அப்புறம் கார்த்திகோட..”
“இப்போ?”
“கேப்-ல தான்!”
கார்த்திக், “கேப் எல்லாம் வேண்டாம் பாஸ். வாங்க உங்களை நான் டிராப் பண்றேன். ஜோ ரொம்ப அழுதா கார்ல ஒரு சுத்து கூட்டிட்டு போனா, அழுகையை நிறுத்துவான். உங்களையும் ட்ராப் பண்ணினா மாதரி ஆச்சு.. அவனையும் ரைட் கூட்டிட்டு போன மாதரி ஆச்சு ”
“ஹோ?.. ஓகே.. தேங்க்ஸ்..”, என்றுவிட்டு,  “டேக் கேர்” என்று சுதாவை பார்த்து தலை அசைத்து, வாசல் நோக்கிச் சென்றவனையே பார்த்து நின்றாள்.
அவன் வெளியே நின்று கார்த்தியோடு பேசிக்கொண்டிருக்கவும், வீட்டின் மறுபக்கத்திலிருந்த கராஜிலிருந்து ‘வ்ரூரூம்’ என்ற சத்தத்தோடு ‘மஸராட்டி’, அந்த இத்தாலிய இரும்பு குதிரை வந்து நின்றது. இந்த காரை தான் அவர்கள் திருமணத்தைக் கொண்டாட வாங்க வேண்டும் என அஷோக் நினைத்திருந்தான். பின் கார் விபத்து என்று வாழ்க்கை தடம் புரண்டு விட, இதெல்லாம் அவன் சிந்தனையில் இல்லவே இல்லை.
“மஸராட்டி! நைஸ்ஸ்ஸ்..” கூறிக்கொண்டே அதன் ஸ்டீல் உடலைத் தடவிப் பார்த்தான்.
“என் கலெக்ஷன்ல… இது இல்ல கார்த்தி. வாங்கணும்னு நினைச்சேன். அப்புறம் ஏனோ வாங்க தோணல. ஏதாவது செலிப்ரேட் பண்ற மாதரி விஷயம் நடந்தா வாங்கணும்!” 
“என்ன பாஸ் ஏதோ பொம்மை கார் வாங்கணும்னு சொல்ர மாதரி சொல்றீங்க!”
“நெக்ஸ்ட் டைம் சென்னை வரும் போது. வீட்டுக்கு நீங்க கண்டிப்பா வரணும். என் கார் கலெக்ஷன்ஸ் காட்றேன். லிமிடெட் எடிஷன்ஸ் மட்டுமே ட்வென்டி(twenty limited editions) வச்சிருக்கேன். இப்போ தான் ஒரு வருஷமா… இவ்வளவு க்ரேஸ். கன்றோல் இல்லாம! மூனு மாசத்தில வரிங்க இல்ல? டேட் ஃபைனலைஸ்(finalise) ஆனதும் சொல்லுங்க. டேட்ட ஃப்ரீயா வச்சுக்கிறேன்.”
வாகனத்திலிருந்து இறங்கிய சுதா அஷோக்கிடம் ஓட்டுநர் இருக்கையை காட்ட, கார்த்திக் சுதாவைத் தான் பார்த்தான். இது வரை யாரிடமும் அவள் இந்த காரை கொடுத்தது இல்லை. ‘நான் மட்டும் தான் ஓட்டுவேன்’ இப்படி தான் கூறினாள்.
“தேங்க்ஸ்” என்றான் புன்னகை முகமாய்.
அஷோக்கிடம் இன்டர்நேஷனல்  ஓட்டுநர் உரிமம் இருக்க அவன் ஓட்டுநர் இருக்கையில் அமர, கார்த்திக் மகனோடு பின் இருக்கைக்குச் சென்றான். சுதா வருவாளென்று அஷோக்கோ, கார்த்திக்கோ எதிர் பார்க்கவில்லை.
அவள் ஏறவும் அவளைப் பார்க்க, அவளோ “எந்த ஹோட்டல்?” என்று கேட்டு ஜி.பி.எஸ்சில்(GPS) அதை அடிக்க, அது வழியைக் காட்டியது.
மூவரும் அவரவர் உலகில். பிள்ளையும் உறங்கியிருக்க கார்த்திக்கும் கண் அயர்ந்தான்.
கார் ஹோட்டல் வளாகத்தில் செல்லவும் சுதாவிற்கு அழுகை முட்டி கொண்டு வந்தது. கண்கள் குளமாகப் பார்வையை வெளியே செலுத்தினாள்.
பார்க்கிங்கில் காரை நிறுத்தியவன், “பாய்.. சுதா..” என காரின் வெளியே வர
வெளி வந்தவள், “ஏதாவது என்ட்ட கேக்கணுமா?” என்று அவன் முகம் பார்த்தாள்.
பின்சீட்டில் கார்த்திக்கை பார்த்தவன், “உன்ன பார்த்தா ஒரு விஷயம் கேக்கணும்னு நினைச்சேன். ஆனா.. ம்ம்ஹூம்.. வேண்டாம். தெரியாத விஷயம் தெரியாமலே போகட்டும். வாழ்க்கை ரொம்ப சின்னது.. சீக்கிரம் முடிஞ்சிடும்..”
அதற்கு மேல் பேசப் பிடிக்காதவன், “பாய்..” என்று பின் கதவைத் திறந்து, “கார்த்திக்..” என்று அவன் விழித்ததும் அவனிடமும் விடை பெற்று ஹோட்டலுக்குள் சென்றான்.
கைக்கு எட்டும் தூரமே.. ஆனால் பார்க்க மட்டுமே முடியும். சலிப்பாய் இருந்து சுதாவிற்கு. ‘அவ்வளவு தானா? இனி மேல் பார்க்கக் கூட முடியாதா?’ ஏக்கத்தோடு அவன் செல்லவதை பார்த்தவள், அவன் சென்ற பின்னும் பார்த்தே நின்றாள்.
“அவர் போய் ரொம்ப நேரமாச்சு சுதா..”
தூக்கி வாரிப் போட்டது சுதாவிற்கு. கண்ணன் தலை மறைந்துவிட்டது. இனி சுற்றம் தெரியும். அதில் கார்த்திக்கும் அடக்கம்…
“கார எடு” த்வனியில் அடக்கப் பட்ட கோபம் இருந்ததை அவள் உணரத் தான் செய்தாள்.
காலியாயிருந்த அவன் முன்னிருக்கைக்கு வரவில்லை. பின்னால் சென்று மகனின் கார்-சீட் அருகில் அமர்ந்து கொண்டான். பல்லைக் காட்டி மகன் சிரிக்க.. மகனுக்குக் கதை சொன்னான்.. நரி கதை! நீல சாயத்தில் தலையை விட்ட நரியின் கதை!
கதை முடிய… “நீல சாயம் வெளுத்து போச்சு!
ராஜா வேஷம் கலைஞ்சு போச்சு!”, கார்த்திக் பாட.. குழந்தை கை கொட்டி சிரித்தான்.
வீட்டு வாசலில் கார் நிற்கவும், குழந்தையைக் கையிலெடுத்தவன்,
“யாரு சுதா அவர்?”
“..” எச்சில் விழுங்கினாள்.
“இவர் தானா?” என்றான்.
“..” கேட்டுக் கொண்டிருந்தவன் முகம் பார்க்க மனம் கூச, அவள் பார்வை தானாய் தரை நோக்கியது.
“நேத்தே அவர பார்த்திட்டியா சுதா?” அவன் குரலின் அப்படி ஒரு வலி.
“ரெண்டு வருஷமா… எல்லாமே பொய்யா சுதா?” குரல் கரகரத்தது.
அவளிடம் பதிலில்லை
“எல்லாம் முடிஞ்சு போச்சுனு சொன்ன. நானும் நம்பினேன்.. எல்லாமே நடிப்பா?”
“கா..கார்த்தி..” திக்கி திணற மட்டுமே முடிந்தது
அவனுக்குத் தொண்டை அடைக்க “பச்… போடி…” என்று வீட்டினுள் சென்றுவிட்டான்.
காலம் கீறிவிட்ட காயம் இன்னும் ஆறவில்லை. யாருக்கும் தெரியாதிருக்கக் காயத்தின் மேல் வண்ணம் தீட்டியிருந்தாள். இன்று பெய்த கண்ணீர் மழையில் நனைந்துவிட்டாள். சாயம் வெளுத்து விட்டது.

Advertisement