Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 69_1
வீட்டின் பிரம்மாண்டம் அஷோக்கின் கண்ணில் படவில்லை. சுதா சித்தத்தை ஈர்த்தாள்.
உள்ளுக்குள் ஒரு இதம் பரவ.. பனிக் கூழ் வாய் வழி இனிமையாய் இறங்க..
குழந்தை கண்ணை ஈர்த்தான். சுதாவின் சங்கிலியை இழுத்து குழந்தை சூப்ப.. சங்கிலியின் தொங்கிக்கொண்டிருந்த தாலியில் இவன் கண் நிலைக்க, கார்த்திக்கை ‘ப்பா..’ என்ற குழந்தை சுதாவை ‘ம்மா’ என்று அழைக்க..
விழுங்கிய பனிக்கூழ் கனலாய் மாறி தொண்டையோடு.. இதயத்தையும் வயிற்றையும் சுட்டு பொசுக்க… நிஜம் உறைத்தது. இரு இதயங்களுக்கு இடையே, மூன்று வருடம் ‘பிளவாய்’ வந்த நிஜம் அது. அவன் லட்டு அவனை ‘காதலாய் சுற்றி வந்ததெல்லாம் கனவில்’ என்ற நிஜம் அது. இருவரின் வாழ்வின் ‘பாதை வேறு’ என்ற நிதர்சனம் முகத்தில் அறைந்தது!
புருவம் சுருங்க நின்றவனின் பார்வை சென்ற இடமும் அதனால் அவன் முகத்தில் ஏற்பட்ட கலவரமும் பார்த்தவள் கை தானாய் தாலியைப்  புடவைக்குள் எடுத்து விட்டுக் கொண்டது.
சுதா சாயலைக் குழந்தையிடம் தேடினான். குழந்தையின் கண் அவனை வசிகரித்தது. குழந்தைக்குப் பசியோ அசதியோ.. தலையைச் சுதா கழுத்து வளைவில் தேய்த்துக்கொண்டே சிணுங்க ஆரம்பித்தான்
“அவனுக்குப் பசி போல..” என்று எச்சில் விழுங்கியவளிடம்,
“பேரென்ன?” என்றான் குழந்தையை பார்த்துக்கொண்டே..
“வாங்க பாஸ்… உள்ள போகலாம். உட்க்காந்து பேசலாம்” கார்த்திக் உள்ளே அழைத்து சென்றான்.
அஷோக் அவனோடு வீட்டிற்கு வந்ததை கார்த்திக்கால் நம்பவே முடியவில்லை. தலை கால் புரியாத இன்ப அதிர்ச்சி! கார்த்திக் பார்வையில் அஷோக்கின் உயரம் மிக அதிகம். இளம் வயதில் அஷோக் சாதித்த சாதனைகள் அப்படி. இருந்தும் பழகுவதற்கு அவ்வளவு இனிமை. அஷோக் அவனின் ஹீரோ என்று கூடக் கூறலாம். இருதினம் முன் அஷோக்கைப் பார்த்திருக்க வேண்டும், அவன் இனிமை தெரிந்திருக்கும்!
“ஜோசஃப் கார்த்திக். ஜோ-னு கூப்பிடுவோம்” என்றான்.
“ஜோசஃப்?” கேள்வியாய் பார்க்க..
“நான் கிறிஸ்டியன் பாஸ்” என்றான். 
சுதாவின் தாலியின் காரணம் புரிந்தது.
“இன்டெரெஸ்ட்டிங்!” என்றான் மெலிதாக புன்னகைத்தவாறே.. 
“அப்பாவோட க்லோஸ் ஃப்ரெண்டோட டைம்லி ஹெல்பால ப்ரெக்னென்ட்டா இருந்தா அம்மா உயிர் பிழக்க, நானும் நல்லபடியா பிறந்தேனு எனக்கு அங்கிளோட பேர வச்சுட்டாங்க. அவர் கார்த்திகேயன்… அதனால நான் கார்த்திக்!” என்று நீளமான அவன் பெயரின் காரணத்தைச் சொன்னான்.
குழந்தை பசியில் சிணுங்க சுதா, “உக்காருங்க, ஒரு டென் மினிட்ஸ்-ல வரேன்” எனவும்
“இல்ல… நான் கிளம்பறேன். உங்களை எல்லாம் பார்த்ததில ரொம்ப சந்தோஷம். அப்புறம் மீட் பண்ணலாம். நீங்க எங்கேயோ போக கிளம்பிட்டு இருகீங்க…” அவன் நகர முற்படவும், சுதாவிற்கு இதயம் நின்றே போனது.
“இல்ல இல்ல… நாங்க எங்கேயும் போகலை..”  என்றாள் எதுவும் யோசியாமல்.. தவிப்பாய்.
அவள் கார்த்திக்கைப் பார்க்க.. அவனுக்கு அப்படி ஒரு நிம்மதி. தமிழ்ச் சங்க விழாவிற்குப் போக அவனுக்கு விருப்பமேயில்லை. எல்லாம் சுதா படுத்திய பாட்டாலேயே செல்ல ஒத்துக் கொண்டான். அஷோக்கின் புண்ணியத்தால் தப்பித்துக்கொண்டான்.
‘ஹப்பாடா தப்பித்தோம் பிழைத்தோம்’ என்பது போல்.. ”ஆமா பாஸ்.. நீங்க உக்காருங்க… நாங்க எங்கேயும் போகலை!” என்றான் ஆனந்தமாக.
ஒருவாறு பேசி அஷோக்கை அமர வைத்தான். 
அவர்கள் பேச அமரவும் சுதா குழந்தையிடம், “நீ அப்பாட்ட இரு…” என்று அவனை கார்த்தியிடம் நீட்டி, “இவனை வச்சுக்கோங்க நான் குடிக்க ஜுஸ் எடுத்திட்டு வரேன். டின்னரும் ரெடி பண்றேன்..” கூறிவிட்டு.
“ஒரு மணி நேரத்தில ரெடி பண்ணிடுவேன்… ஏழுக்குள்ள உக்காந்திடலாம். சாப்பிடாம போகக் கூடாது” என்று அஷோக் முகம் பார்த்தாள். ‘இருக்க வேண்டுமே’ என்ற வேண்டுதல் அதில்
“ரொம்ப லைட்டா, டிஃபன் மாதரி போதும்..” என்றதோடு நிறுத்துக்கொண்டான்.
அவனுக்குப் பிடித்த ஆப்பிள், கேரெட், பீட்-ரூட்டோடு ஒரு துண்டு இஞ்சியும், எலும்பிச்சை சாரும் சேர்த்து ஜூசரில் ஜூசை தயாரித்து எடுத்து வந்தாள்.
சோஃபாவின் கைபிடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டு ஜூசை சிப்பர் (sipper cup) மூலம் குழந்தை குடிக்க.. கார்த்திக்கும் அஷோக்கும் ஆளுக்கு ஒரு கோப்பை எடுத்துக் கொண்டனர்.
அதை வாயில் வைத்ததும் அஷோக்கின் பார்வை அவளை ஊடுருவியது. ‘இன்னும் அவளுக்கு அவனைப் பற்றி என்னவெல்லாம் தெரியும்?’ என்று தான் பார்த்தான்.
கார்த்திக் அஷோக்கை பிடித்துக்கொள்ள அவள் அடுக்களைக்குள் சென்றாள். அது திறந்த அடுக்களை. ஒரு சதுர அறை சிறு சிறு தடுப்பின் மூலம் அடுக்களை, டைனிங் அறை, டி.வி. சோஃபாவோடு லிவிங் ரூம் என்று மூன்றாய் பிரிக்கப்பட்டிருந்தது.
வீடு பெரிதாக இருந்தாலும் ஒருவர் மட்டும் தனியே நின்று சமைப்பது போன்ற உணர்வு இருக்காது. குடும்பத்தில் அனைவரும் அருகருகே இருப்பது போன்ற உணர்வைத் தரும் அறை அமைப்பு.
கார்த்திக்கிற்குக் கைப்பேசியில் அழைப்பு வர, “பாஸ்… தங்க ஃபோன்ல ஒரு டூ மினிட்ஸ்” என்ற நகரவும் அவனும் கைப்பேசியை நோண்ட ஆரம்பித்தான். இவனையே பார்த்துக்கொண்டிருந்த ஜோ, கையிலிருந்த சிப்பரை தூர எரிந்துவிட்டு மெதுவாக சோஃபாவை பிடித்துக் கொண்டே நடந்து வர ஆரம்பித்தான். அஷோக் குழந்தையைக் கவனிக்கவில்லை.
மெதுவாய் வந்த குட்டி, அஷோக்கையே பார்க்க அவன் கண்டு கொண்டானில்லை. என்றும் போல் இன்றும் முட்டியைத் தொடாத   ஷார்ட்ஸ் அணிந்திருந்தான். அமரவும் அது இன்னும் மேலே ஏறிக்கொண்டது.
பார்த்துக்கொண்டிருந்த அழகு பொம்மை குழந்தை அஷோக்கின் முட்டிக்கு மேல் தெரிந்த தொடைப் பகுதியில் தன் நாடியை வைத்து, அவன் காலை கட்டிக்கொண்டு அவனையே பார்த்து நின்றான். சிகப்பு உதட்டில், குடித்த பழரசத்தின் மினுமினுப்பு, கோலிக்குண்டு விழி.. வழுவழு பளிங்கு சருமம். மனதை மயக்கும் அழகு. 
அஷோக் அவனைப் பார்க்க, நான்கே பல்… அதைக் காட்டி சிரித்தான். இரு பஞ்சு மெத்தைக் கன்னத்தையும் அவன் தொடையில் மாற்றி மாற்றித் தேய்த்துக்கொண்டே சிரிக்க… குழந்தையைத் தூக்கி கையில் வைத்துக்கொண்டான். அவனும் கார்த்தியிடம் ஒன்றிக்கொள்வது போல் அஷோக்கோடு ஒன்றிக்கொண்டான். பால் மணம் மாறாத குழந்தை.. கொள்ளைக் கொள்ளும் கொள்ளை அழகு அஷோக்கை ஒற்றை பார்வையில் கொள்ளையடித்தான்.
‘சுதாவின் குழந்தை’ மனம் உச்சரிக்க, பிள்ளையை நெஞ்சோடு  அணைத்து உச்சி முகர்ந்தான். இருவரும் சிரித்து விளையாடிய ஆரம்பித்தனர்.
சிரிப்பு சத்தம் கேட்டு சுதா எட்டிப் பார்த்தாள். கண்முன் சிரித்துக் கொண்டிருக்கிறான் கண்ணன். மனம் நிறைந்து போனது. கண்ணனின் சிரித்த முகத்தைப் பார்த்துவிட்ட நிம்மதி. அவள் வேண்டிய  நிம்மதி அவன் சிரிப்பில் இருக்க அவனுக்கும் அதைக் கொடுக்க வேண்டாமா? கண்டிப்பாக அவன் நிம்மதியாக இந்தியா செல்வான்.
கார்த்திக்கைப் பார்த்தாள்,, பேசிக்கொண்டிருந்த அவனும் தற்செயலாய் அவளைப் பார்க்க புருவம் உயர்த்தி ‘என்ன என்றான்’… சத்தமில்லாமல் உதட்டை அசைத்தாள்… ‘லவ் யூ கார்த்தி!’ என்றாள். அழகாய் சிரித்தான்.. தெரியும் என்ற பதில் அதில் அடக்கம்.   
நேரம் செல்ல, “ம்மா..” என்று அடுக்களையில் நின்றுகொண்டிருந்த சுதாவைக் குழந்தை காட்டவும், அவனைத் தூக்கிக்கொண்டு, குழந்தை வெளியே சென்றுவிடாது இருக்கத் தடுப்பாய் நின்றிருந்த சிறிய கேட்டை தாண்டி குழந்தையோடு அஷோக் அடுக்களை சென்றான்.
சுதாவின் அருகில் வந்ததும் குழந்தை தன் உடலை நெளித்துக்கொண்டு கீழே இறங்கி அவள் புடவையை இழுத்து, “ம்மா..” எனவும்.. சட்டென்று திரும்பியவள் தோள் பலமாய் நின்றிருந்தவன் மார்பை உராய்ந்து நகர்ந்தது. மூச்சு நின்று மீண்டது இருவருக்கும்.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தார்களே ஒழியப் பேச்சு வரவில்லை.
‘ஏன் வந்தாய்?’ என்று அவனைப் பார்த்து மனம் கதறியது. ‘போய் விடாதே..’ என்று அதே மனம் அழுதது.
‘இது என்ன வேதனை? மீண்டும் இதிலிருந்து எப்படி மீளப் போகிறேன்?’
மிக அருகில் நின்றிருந்தான். அதே நறுமணம் அவனிடமிருந்து. அவளின் இரத்த நாளங்கள் வெடிதுவிடும் போல அவளுள் உஷ்ணம் பரவியது. ‘ஏன் என்ன மறந்தீங்க?’ அவன் சட்டையைப் பிடித்து உலுக்கிக் கத்த வேண்டும் போல் இருந்தது.
கண்ணில் நீர் கோர்க்க அவனை விழுங்கிக் கொண்டிருந்தாள்.
அவளைப் பார்த்தான். அவன் கண்ணில் வலி. வலி மட்டுமே. உயிர் அற்ற விழிகள்.
“எப்படி இருக்கீங்க?” என்றாள்
“ம்ம் இருக்கேன்.” என்றான். ‘அவன் துள்ளலான பேச்சு எங்கே? சிரித்த விழிகளெங்கே?’
‘இந்த நிலையில் பார்க்கவா இவனை விட்டு வந்தேன்’ இதயம் கதறியது.  ஏன் இங்கு? எப்படி இங்கு? அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. ‘தன்னை தெரிகிறதா? நினைவில் நான் உள்ளேனா?’ கேட்காமல் இருக்க முடியவில்லை. தெரிந்து மட்டும் என்ன செய்யப் போகிறாளாம்?
“பழசெல்லாம்..?” என்ன பதில் வேண்டும் என்று தெரியாமலே கேட்டாள்.
“அதுக்கென்ன?”
தயக்கமாய்.. “ஞாபகம்…?!” என்று ஆவலாய் அவன் முகம் பார்த்து நின்றாள்.
“பச்..” இல்லை என்பது போல் தலை அசைத்தான்.
“ஓ..” ஏமாற்றமாய் உணர
“அம்மா எப்படி இருக்காங்க?” என்றாள்
“நீ அவங்கட்ட கூட சொல்லாம வந்திட்டனு வருத்த பட்டாங்க..” என்றான். குற்றம் சாட்டுகிறானோ? அவன் த்வனி குற்றம் சாட்டவில்லை.
“நீங்கக் கல்யாண வேலையில பிசியா இருக்கவும்…” அவன் புருவம் சுருக்கி அவளைப் பார்க்கவும் எச்சில் விழுங்கினாள்.
“நல்லா… இருக்காங்களா?” என்றாள்.
“ம்ம்.. இருக்காங்க. மும்பையில”
“ஓ.. தாத்தாக்கு இன்னும் முடியலையா?”
“இறந்துட்டார்”
“ஓ.. சாரி”
“ம்ம்..”
“தோட்டம் நல்லா இருக்கா?”
“ம்ம்..”
அவள் பார்வையை அவனை விட்டு இம்மி நகர்த்தவில்லை. தயங்கிய பின் கேட்டாள்,
“இப்போ எல்லாம்.. தலைவலி..?”
“இல்ல..” எல்லாம் ஒற்றை வார்த்தை பதில்.
“..” நீண்ட நிம்மதி மூச்சு!
“..”
“பிருந்தா நல்லா இருங்காங்களா?”
“ம்ம் இருக்கா.  அவள உனக்கு தெரியுமா?”
“ஹாஸ்பிட்டல்ல பார்த்திருக்கேன்”
“ஓ..”
“பசங்க?”
“ப்ரெக்னெட்டா இருக்கா.. சிக்ஸ்த் மந்த்..” பர்ஸிலிருந்து அல்ட்ரா சௌண்ட் மூலம் எடுத்த புகைப் படத்தைக் காட்டினான். பிருந்தா, வினோத்திடம் காட்டச் சொல்லி அவன் பர்சில் வைத்த படங்கள் அவை.
கண்ணில் நீர் கோர்க்கப் பார்த்தாள். பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“ட்வின்ஸ்?”
“ம்ம்”
“ஆசை பட்ட மாதரியே பொண்ணா?”
“தெரியல”
“இங்க எப்படி?” முகத்தை நிமிர்த்தாமலே கேட்டாள்.
“பிரிந்தா அண்ணா இங்க தான், பாஸ்டன்ல இருக்கான். அவன பார்க்க வந்தேன்.”
“ஓ..”
பேசினாலும்.. பேச்சு இருவருக்குமே இயல்பாய் வரவில்லை. ஏதோ பட்டும் படாமலும்.. அதுவும் அவனுக்குக் குழந்தை பிறக்கப் போவதை அறிந்தவளால் அங்கு நிற்கவே முடியவில்லை. கால்கள் நடுக்கம் கொடுக்க ஆரம்பித்தது.

Advertisement