Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_2
வலி தாங்க முடியாமல் அவள் கண் மூட.. வழிந்த நீர் அடித்துச் சென்றது அவன் கோபத்தை.
அவன் கோபம் போன இடம் தெரியவில்லை.
அவள் இடுப்பு நரம்பு பிடித்துக்கொள்ள வலியில் அவள் வீரிட.. ஐயோ என்றாகிவிட்டது அவனுக்கு. அவன் வாழ்வில் இன்று வரை அவன் பார்க்க விரும்பாத விஷங்களில் ஒன்று பிருந்தாவின் கண்ணீர்.
அவன் கண்ணீரைத் துடைத்து, ஆற்றித் தேற்றியவள் பிருந்தா! அவள் அழுவதை எப்படிப் பார்ப்பான்? ‘அவளை நோகடிப்பதே உன் வேலையா..’ மனம் சாடியது. அவளோடு அவனும் துடித்துத் தான் போனான்.
அவளும் வலியில் பட்டு.. அவனையும் படுத்தி எடுத்து… நேரம் பிடித்தது அவள் இயல்புக்கு வர.
பிருந்தா அமர்ந்திருந்தாள். அவளருகில் காலை சுவருக்குக் கொடுத்து அவன் நின்றிருந்தான்.
“கோப படமா கேளுங்க ப்லீஸ்.” என்றாள் கெஞ்சும் குரலில்
“உனக்கு புரியலையா பிருந்தா? எல்லாமே சரியா போகும் போது இப்போ ஏன் பிரச்சினையை இழுக்கர?”
“இல்ல… ஒன்னும் சரியா போகல! நீ மனுஷனாகவே இல்ல. நீ வாழர. அவ்வளவு தான்! உனக்குள்ள ஏதோ உன்ன படுத்தி எடுக்குது. கண்டிப்பா அது சுதா தான். பார்த்துட்டு வா. யூ நீட் எ க்ளோஷர் அஷோக். இதுக்கும் மேல இது இப்படியே போகக் கூடாது. போ போய் முடிச்சிட்டு வா!”
சுதா சென்ற சில தினங்களிலேயே விடயம் அவன் காதை அடைந்தது. அவள் அமெரிக்கா சென்றுவிட்டாள் என்று. பாட்டி சொன்னபோது நம்பாத விஷயம் நம்பும்படியாக போனது. நீளமான மூன்று வருடங்கள்.. முள் மீது தூங்கிய மூன்று வருடம். இப்படியே வாழ்ந்து.. ‘முடிந்து’விடும் நோக்கம்.
இன்னும் கனவுகளில் லட்டு என்றவள் வரத் தான் செய்கிறாள். முள்ளாய் தொண்டையில் வலி இருக்கத் தான் செய்கிறது. வலியோடே வாழப் பழகிக் கொண்டான். கனவில் வருபவளைப் பகலில் மறக்க கற்றுக்கொண்டான்.  
அவள் சுதா தானா? தெரியாது. தெரிந்து கொண்டு என்ன செய்யா? விட்டுவிட்டான். காயாத காயம் என்று தெரியாது, பிருந்தா அதைக் கிளர அவனுக்கு வலித்தது.
‘நீ என்ன லூசா?’ என்ற பார்வையோடே, “எதுக்கு?” என்று காய்ந்தவனிடம்
“முற்றுப்புள்ளி தேவையான இடத்தில வைக்கணும் அஷோக்… இல்ல வாக்கியம் முடியாது! அடுத்த வரிக்கு அர்த்தம் இருக்காது. வாழ்க்கையும் அப்படி தான்!
அவங்கள போய் பார்த்துட்டு வரியா?”
இரண்டு நாளில் ஒரு வேலையாக அவன் நியூயார்க் செல்லவிருக்க.. இப்படி ஒரு கோரிக்கையோடு வந்து நிற்கிறாள் பிருந்தா!
“நீ நினைச்சா.. ஒரே நாள்ல அவங்க அட்ரெஸ் உன் கைல! எதுக்கும் அவங்கள ஒரு தரம் பார்த்து பேசிடுடேன்.. உன்ன சுத்தி இருக்க எங்களுக்காக! எத்தன நாள் தான் இப்படியே எரிச்சலோட வாழப் போர? இப்படி எரிஞ்சு விழர முகத்தைப் பார்த்தா குழந்தைகளுக்குத் தான் ஆகாது சொல்லிட்டேன்! ஒரு க்ளோஷர் வேண்டாமா? பார்த்துட்டு வாயேன்?”
“எனக்கு ஒரு புண்ணாக்கும் வேண்டாம். அவள பத்தி தெரிஞ்சு நான் ஒரு ஆணியும் கழட்ட பொறாதில்ல! அதெல்லாம் சரி படாது.. நீ மோதல்ல கிளம்பு.. எனக்கு வேல இருக்கு!”  
அவளின் பதிலை எதிர்பார்க்கவில்லை. ஃபோனை எடுத்தவன், “மேடம அவங்க அம்மா வீட்டில விட்டுடுங்க!”
அவ்வளவு தான் அவன் பேச்சு.
“அஷோக்.. எனக்குப் போக வேண்டாம்.”
அவளைப் பார்த்தவன் பதில் சொல்லவில்லை. மீண்டும் வேலைக்குள் புதைந்து கொண்டான்.
“வெளியில கூட்டிட்டு போறதா சொன்னியே…”
அவன் நிமிரக் கூட இல்லை!
அவனைப் பார்த்தவள் அதற்கு மேல் பேசவில்லை. வீட்டிற்குக் கிளம்பி விட்டாள். இவ்வளவு நேரம் அவன் பொறுமையாகப் பேசியதே அதிசயம். இதற்கு மேல் நிற்க அவளுக்கு என்ன வேண்டுதலா?
“அம்மா வீட்டில யாருமே இல்ல. நான் உன் கூட வரட்டா?” பாவமாகப் பார்த்து நின்றாள்.
“உன்னால படி ஏற முடியாது. வேண்டாம்… நீ உங்க அம்மா வீட்டுக்கு போ. நாளைக்கு வரேன்.” பார்த்துக்கொண்டிருந்த கோப்பிலிருந்து கண்ணெடுக்காமலே..
அவள் கிளம்பவும், “பார்த்து போய்டுவியா?” என்றான் தலை நிமிர்த்தி.
“ம்ம்கும்… உன் வேலையை பாரு. வந்த எனக்குப் போகத் தெரியும்! இரு.. பெத்து ரெண்டத்தையும் உன் கிட்ட குடுத்துட்டு.. நான் ஊர் சுத்த போறேன்.. அப்போ தான் உனக்கு அறிவு வரும்” முணுமுணுத்துக் கொண்டே கைப்பையை எடுத்தாள்.
மீண்டும் கோப்போடு ஐக்கியமானான். முகத்தில் கீற்றாய் புன்னகை அரும்பியது. 
மாசமான பின் நான்கு மாதம் வரை கணவனோடு இருந்த பிருந்தா பின் அம்மாவின் சீராட்டல் தேவைப் படவே இப்பொழுது அம்மா வீட்டோடு வாசம். சேர்ந்தார்போல் அதிக நேரம் அமரவோ நிற்கவோ முடிவதில்லை. அதனால் மருத்துவமனைக்கு அவள் செக்கப்பிற்காக செல்வதோடு சரி!
யாரையும் எதற்கும் எதிர்பார்ப்பதில்லை. வாழ்வின் போக்கில் வாழப் பழகியிருந்தாள்.
அவள் போனதும் தலையைத் தூக்கினான். கண்ணாடி பின் அவள் முதுகு தெரிந்தது. ஒரு வித அவஸ்தையோடே நடப்பது போலிருக்க.. மனது கேட்கவில்லை. அவளிடம் மட்டுமாவது முற்றிலும் கோபத்தை தவிர்க்க வேண்டும்! ஷீலா கூடவே நடந்தாள். மணி அழைத்து செல்வார். கவலை பட தேவையில்லை. அவள் தலை மறைந்ததும் பெருமூச்சோடு, உள்ளெழுந்த உணர்வுகளை வெளி தள்ளினான்.
அதன் பின் வேலையில் மனம் ஈடுபடவில்லை.
வருடம் மூன்றாகியும் சிதறிய நினைவுகள் சிதறியதாகவே இருந்தது. நினைவு மீளவே இல்லை. ஆனால் மீண்டு வந்த சிறு சிறு சிதறிய சில்லுகள் முழுவதும் அவள் பிம்பமே! அவன் லட்டு!
‘லட்டு!’ மனம் உச்சரித்தது. என்ன முயன்றும் அவளை அவன் மனதிலிருந்து எடுக்கவே முடியவில்லை. அவன் ஒத்துக்கொள்ளவில்லை என்றாலும் அது தான் உண்மை. சுதா..? அவள் தான் அவனைக் கொல்லாமல் கொல்லும் லட்டா? இன்றுமே தெரியாது! தெரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை.
இன்றும் தனிமையில் வெட்ட வெளி மாடியில் படுத்திருந்தவன் நட்சத்திரத்தை எண்ணிக் கொண்டிருந்தானோ? அஷோக்கின் கண்கள் வானத்தை வெறித்திருந்தது. ஒரு வருட காலமாகவே மொட்டை மாடியும் ஜிமும் அதை ஒட்டிய படுக்கை அறையும் தான் அவனின் தஞ்சம்.  கீழே இருந்த படுக்கையறையை உபயோகிப்பதில்லை… அந்த பால்கனி பக்கம் போவதுமில்லை. வீட்டில் எங்குமே செல்வதில்லை. மாடியில் இருந்த நீச்சல் குளமும்.. ஜிம்மும்.. கல் சுமைதாங்கியும் தான் அவன் இராஜியம்!
மனம் களைக்கும் வரை அலுவலகம், உடல் களைக்கும் வரை அவனின் ஜிம். மனதை சமன் படுத்த நீச்சல் குளம்… ஏதோ தூக்கமும் விழிப்புமாய் நாட்களை ஓட்டினான்.  
விழித்திருக்கும் பொழுது அவன் கட்டுப்பாட்டில் இருக்கும் அவன் மனம், அவன் கண்ணயர்ந்ததும் விழித்துக் கொள்ளும்.  
பிருந்தா அழைத்தாள். “என் வீட்டில் இரவு.. அங்கே இரவா இல்லை பகலா?” என சரியாக பத்து நிமிடம் நீடித்தது பேச்சு! குட் நைட்டோடு கைப்பேசி அமர்த்தப்பட்டது.
இன்று, பிருந்தாவின் புண்ணியத்தில்.. கண்ணுக்கும் உறக்கத்துக்கும் நடுவே ஒரு இடைவெளியாய்… பூதகரமான இடைவெளியாய் ‘அவள்’ பிம்பம்!
விடிவெள்ளி வரும் நேரம் கண்ணயர்ந்தான்.
கண்ணுக்குள் எங்கோ மாட்டிக் கொண்டிருந்த அவள் பிம்பம் உள்ளிறங்கியிருக்க வேண்டும். கனவில் வந்தாள். கனவில் வருபவளைத் தெரியாவிட்டாலும் கனவிற்கு மட்டும் எங்கிருந்து தான் இத்தனை நிகழ்வுகளை அவனுக்குக் கொடுக்க முடிந்ததோ.. அவனுக்கு வியப்பே!
நேரம் கடந்து கண்ணயர்ந்ததால் ஓடி வந்திருப்பாள் போலும். மேலும் கீழும் மூச்சிரைக்க அவன் முன் நின்றவளைக் காணக் காண அவனுக்குள் பித்தமா, போதையா? எதுவோ.. அது தலைக்கேறியது!
அங்கிருந்த நீளமான சுமை தாங்கியைக் காட்டி, “உக்காரு.. பொறுமையா வரவேண்டியது தானே..” செல்லமாய் தான் கடிய முடிந்தது. ஏனோ அவளிடம் மட்டும் அவனுக்குக் கோபம் வருவதில்லை.
சில மாதமாகவே இந்த சுமை தாங்கி தான் அவன் பாரத்தை இரவெல்லாம் தூக்குகிறது!
எப்பொழுதும் போல் கிரைண்டர் அரைந்து கொண்டிருந்தது. இன்று எதை அரைக்கிறது?
அவள் நெல்லியைக் கடிக்க, அது தந்த புளிப்பில் கண் தானாய் சுருங்க, “ஸ்ஸ்ஸ்ஸ்..”என்று வாயில் சுரந்த உமிழ்நீரை உள்ளிழுத்தாள்.
சும்மா பார்த்தாலே கிறங்கிபோபவன் நிலை தான் பரிதாபமாய் போனது. நாள் முழுவதும் இமைக்காமல் பார்க்கத் தூண்டும் அவன் அழகிய முகபாவம். மற்ற பெண்களின் முகபாவம் மட்டும் தான் துரைக்கு எரிச்சலைக் கிளப்பும் போலும்!
புளிப்பில் சுருங்கிய அவள் மாய கருநீலக் கண்கள் அவனை வேரோடு சாய்த்ததென்றால், எச்சில் ஈரத்தில் மெறுகேறியிருந்த அவள் உதடு நெல்லிக்கனியோடு அவனையும் உள்ளிழுக்கவே செய்தது.
ஒருமுறை அவள் சிலிர்த்துவிட்டு.. ஒன்றை அவனிடம் நீட்டி,”டேஸ்ட் வேணும்?” கேள்வியாய் தலையை மேலும் கீழும் அட்ட, “அம்மா தாயே ஆள விடு… அத நீயே சாப்பிடு.. நீ சாப்பிடுரதை பார்த்தாலே எனக்குப் பல் கூசுது!” இவன் கூற.. பேச்சு தடை இல்லாமல் தொடர்ந்தது. அவனிடம் சிரித்துணைகொண்டே, “இப்போ கிளம்பட்டா?” என வினவ
‘வேண்டாம்’ என்ற மனதின் கூக்குரலை மதியாமல் அவன் வாய் “ம்ம்” என்றதும்
“பாய்..” என்று ஓட ஆரம்பித்தாள்.
“லட்டு பார்த்து போ.. ஓடாத!” என்று இவன் சத்தம் கொடுக்க, அவள் படியில் இறங்கவும், ஏதோ இவன் தான் படியிலிருந்து விழுவது போல் உறங்கிக்கொண்டிருந்தவன் உடல் குலுங்க விழித்துக் கொண்டான்.
‘ஒரு நாளாவது அவள் பெயர் சொல்லி அழைத்தால் தான் என்ன?’ எழுந்தமர்ந்தவனுக்கு கனவில் வந்த அவன் மேல் கோபமாக வந்தது.
இது முதன் முறை இல்லையே! அவனுக்கு. பழகி போன ஒன்று தான் இது. அவன் கனவில் அவள் வருவதும் பின் மறைவதும் அவனைத் தூங்கவிடாமல் பாடாய்ப் படுத்துவதுமாய் எத்தனை இரவுகள்?
இவை அனைத்தும் உறக்கத்தில் மட்டுமே.. விழித்த பின் எத்தனையோ முறை கனவில் கண்டதை அசை போட்டிருக்கிறான். ஆனால் அந்த நிகழ்வுகள் அவன் வாழ்வில் நடந்தவையா? அதன் பிரதிபலிப்பு தானா இந்த கனவு என்பது அவனுக்கு புலப்படவேயில்லை.
இரவில் வருபவளை பகலில் மறக்க கற்றவன், அவள் இம்சிக்காத இரவுகள்… ஏன் வரவில்லை என்ற உணர்வைக் கொடுத்த பகலை கடக்க கற்றானில்லை. 
ஒரு முறை அவளைப் பார்த்தால் தான் என்ன? கேட்டுவிடலாமே.. இது கனவா இல்லை அவர்கள் வாழ்வின் பிரதிபலிப்பாவென்று?
அது உண்மை என்றால் அவனுக்கு இன்னும் ஒரு விஷயம் அவளிடம் கேட்டே ஆகவேண்டும்.
பிருந்தா சொல்லுவது போல்… அவளைப் பார்த்தால்… ஒரு முறை பேசினால்… இதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாமே…. மனம் மிக மிகக் கொஞ்சமாய் யோசிக்க ஆரம்பித்தது.
“பச்! லூசாடா நீ… போடா போடா… முகம் பார்த்து ‘போரேன்’னு ஒரு வார்த்த சொல்லல… அவ இவளா இருக்க வாய்பே இல்ல. போ.. போய் வேலையை பாரு! இப்படி ஒருத்தி உண்மைனா… இத்தன வருஷத்தில ஒரு தரம் உன் முன்னாடி வந்திருக்க மாட்டாளா? இல்லாத ஒருத்திக்காகத் திரும்பவும் இருக்க வாழ்க்கையை கெடுத்துக்காத!” மூளை எச்சரித்தது.
மூளைக்கும் மனதிற்கும் நடந்த வாதத்தில் மூளை வென்றது. மனமோ வலியோடு அவள் பிம்பத் துகள்களை அசைபோட்டது.
ஆசை ஆசை கொண்டு
ஓசை ஓசை இன்றி
நாளும் நானும் வருவேன்
கோடி கோடி யுகம்
நாடி நாடி வந்து
சேவை சேவை புரிவேன்
நெகிழும் நினைவுகள்
நெஞ்சில் பேசுதே….

Advertisement