Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 66_1
இரவு வானில் விண்மீன்கள் மின்ன.. காற்றில் செண்பக வாசம் மிதக்க… அதனோடு பின்னிப் பிணைந்து நாசி வழி இதயத்தை வசியம் செய்யும் மல்லி மணக்க.. அவனோடு அவளிருந்தால்,  இது ஏகாந்த வேளை தான்!
ஆனால் இது எதுவுமே அஷோக்கை ஏகாந்தத்திற்குக் கொண்டு சேர்க்கவில்லை.
யாரிட்ட சாபமோ? காலங்கள் கடந்தோடியும் காயங்கள் காயவில்லை.
அவன் மனம் போல் மாடியிலும் சொற்ப வெளிச்சமே..
நிலவைப் பார்த்து மொட்டை மாடியிலிருந்த நீளமான கருங்கல் சுமை தாங்கியில் கையை தலைக்குக் கொடுத்துப் படுத்திருந்தான். இரண்டு மணி நேர தீவிர உடற்பயிற்சி… நேர காலம் இல்லாமல் அலுவலக வேலை அவனைத் தூக்கத்திற்குள் இழுக்க, இமைகள் மூட..
காற்றோடு வந்த மல்லியும் செண்பகமும் அவளைக் கூட்டி வந்தது.
அவள்??? ஆம் அவளே தான்!
கிறங்கடிக்கும் கண்ணும்.. திகட்டாத அவள் பேச்சும்.. மூடிய இமைக்கு நடுவே முள்ளாய் மாற.. கண் விழித்துக் கொண்டது.
பார்த்த நிலவிலும் அவள் முகம் தான்..
காண்கின்ற எதிலும் அவள் பிம்பம் தோன்ற.. எதையும் பார்க்கத் தோன்றாமல் கண்களை மூடிக்கொண்டான்.
‘ஏன் இந்த சோகம்? இது யார் செய்த சூனியம்?
விதியென்ற பெயரால்.. நாம் பிரிந்தோம்…
மறுபிறவி என்று ஒன்று இருந்தால் அதில் இணைவோம்’ காற்றோடு கலந்த அவள் பிம்பம் பேசியது.
ஆறு மாதம்… முழுதாக ஆறு கொடிய மாதம், நான்கு பெண்கள் அவன் வாழ்வில் செய்த சதியால் மன அழுத்தத்தில் மடிய இருந்தவனை கை பிடித்துத் தூக்கியது பிருந்தா மட்டும் தான்!
உள்ளத்தாலும் உடலாலும் ஒருத்தியிடம் அவனை இழக்க… அவனுக்குள் அவள் புதைந்து போனது தெரியாமல் அவளையே மறக்க… புதிதாய் வந்த உறவை கை நீட்டி ஏற்க… பழையது பூதாகரமாக அவன் முன் எழும்ப… பழையதும் புதியதும் கொடுத்த அழுத்தத்தில் சென்றான் மன அழுத்ததிற்கு.
ஆறு மாதம் மருத்துவமும் பிருந்தாவின் அன்பும் அவனை மீட்டது. அத்தோடு முடியவில்லை.. அடுத்த ஒரு வருடம் தொடர்ந்தது அவன் வனவாசம்! உலகத்திலிருந்த பல காடு, மலை, கடல் என்று தோன்றிய இடத்தில் வாழ்ந்தவன்,  மீனாட்சி பாட்டி இறப்பிற்கும் வராதவன், அவன் தாத்தா இயற்கை எய்தவும்.. சுசிலா படுத்துவிடவும், அம்மாவிற்காக நாடு திரும்பினான். அடுத்த ஆறு மாதம் அம்மாவோடு மும்பை வாசம். மொத்தம் இரண்டு வருடம் சென்னை காற்றைக் கூட நுகரவில்லை.
இரண்டு வருடத்தில் ஒன்றை மட்டும் சரிவரச் செய்தான். லண்டன் பயணம் தவறாது அவ்வப்போது மேற்கொண்டது தான் அது.   
சென்னை வந்து இன்றோடு ஒரு வருடம் முடிய.. அஷோக்கிடம் நிறைய மாற்றம்.
இன்று தனிமையில்.. வான் கூரைக்கடியில் விடியலுக்காகக் காத்திருந்தான். சூரியன் உதித்துவிட்டது. அவன் வானம் விடிந்ததா? தெரியவில்லை! அவன் புதர் முளைத்த முகத்தலிருந்து எதையும் யாரும் அறியமுடியாது!
“யாரு டி அவன்.. செலிபிரிட்டியா?”
உடலை இறுக்கும் கருப்பு டி-ஷர்ட் முட்டி வரைக்கும் ஷார்ட்ஸ்,  யாரை பார்க்கிறான் என்று தெரியாதிருக்கக் கண்ணில் கருப்பு கண்ணாடி. வாயில் சவைக்கும் சவ்வை மென்று கொண்டே.. குட்டி குடுமி போடும் அளவுக்கு இருந்த கேசத்தை கோதிக்கொண்டே.. ஃபேராரியில் இருந்து இறங்கியவனை கைக்காட்ட..
“தெரியல டி.. பாக்க ஜம்முன்னு இருக்கான்”
புதிதாக அந்த நிறுவனத்தில் சேர்ந்திருந்த இருபெண்கள் பேச்சு அவன் காதில் விழுந்ததா? தெரியவில்லை.. திரும்பிப் பார்க்காமல் நடந்தான். முகத்தில் கடுகு போட்டால் வெடித்துவிடும்.
“அவர் தான் பாஸ்.. இங்க வேலை செய்யணும்னா அவர் கண்ல பட்டுடாதீங்க” என்றது வேறு யாருமில்லை அஷோக்கின் பாடிகார்ட்! ஒரு பீம் பாய் எப்பொழுதும் அவனோடு சுற்றித் திரிந்தான். தவறாக நினைத்துவிட வேண்டாம்… பாடிகார்ட் இவனைக் காக்க அல்ல… இவனிடமிருந்து மற்றவரைக் காக்க! 
அவன் மில்லியன் டாலர் லுக் என்னானதோ? கோட் சூட் எல்லாம் எங்குச் சென்றதோ?
இந்த ஒரு வருடத்தில் அவனிடம் பல மாற்றம். வெறி பிடித்தவன் போல் வேலை செய்தான். பார்ப்பவர்களைக் கடித்து குதறினான்.  
மூன்று வருடங்களுக்கு முன் அவனிடம் வேலை செய்தவர்களுக்கு இவன் தோரணை புதிதே..  
அவன் அலுவலக அறையின் கதவு தட்டப் பட.. பதில் உறைத்தானில்லை.
தயங்கித் தயங்கி உள்ளே நுழைந்த ஷீலா, அவன் செக்கரட்டரி, “பாஸ்..?” என்றாள். எச்சில் விழுங்கி!
“ம்ம்..” என்றான் மடிக்கணினியிலிருந்து தலையை உயர்த்தாமலே..
பெண்கள் முகம் பார்க்கப் பிடிப்பதில்லை. அதில் தெரியும் பாவங்கள் பார்த்தாலே அவனுக்கு எங்கிருந்து அத்தனை கோபம் வருமோ? அவனுக்கு தான் தெரியும்!
“சர்… மேடம் உங்களைப் பார்க்க வராங்க..”
“ம்ம்?”
‘ம்ம் என்றால்… அதற்கு என்ன அர்த்தமாம்..?’ விழித்தாள். அவள் நல்ல நேரம் அவன் அவளைப் பார்க்கவில்லை.
“மேடம் சர்!”
சட்டென்று முகத்தைத் தூக்கவும், அவளுக்கு கை கால் நடுங்கவே ஆரம்பித்துவிட்டது. ‘ஐயோ… சாமி ஆட போதே…’
“எந்த மேடம்? அப்பாய்ன்மென்ட் இருந்தா அனுப்புங்க… இல்லேனா பாக்க முடியாது. எனக்கு வேல இருக்கு!” 
அவள் தயங்கித் தயங்கி நிற்கவும்
அவன் மடிக்கணினியில் செக்கியுரிட்டி கேமெரா ஒளிபரப்பில் வந்தவளைப் பார்த்தவன், “சொல்லும்போது யாருனு சொல்லனும்… அவங்க உள்ள வரதுக்கு எதுக்கு என் பர்மிஷன்?” சுள்ளென்று விழுந்தான்! 
சென்ற முறை சுசிலாவை, கேட்காமல் உள்ளே அனுப்பியதற்கும் திட்டினான்.
‘முன்ன போனா கடிக்கரான்.. பின்ன போன உதைக்கரான்… டேய்.. உன்ன பெத்தாங்களா.. செஞ்சாங்களா?’
“இன்னும் என்ன?” என்று எரிந்து விழுந்தவனிடம்
“நத்திங் சர்.” என்று ஓட்டம் பிடித்தாள்.
வந்தவளுக்கு அறைக் கதவை அவன் திறந்து பிடிக்க, தன் ஆறு மாத வயிற்றைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு மூச்சு வாங்க வந்தாள் பிருந்தா.
ஆறு மாதமே, இரட்டை குழந்தைகள். அதனாலையே வயிறு பெரிதாயிருக்க மூச்சும் வாங்கியது.
“என்னாச்சு? கூப்பிட்டா நான் வர மாட்டேனா? உன்ன யாரு இங்க வர சொன்னது? அது தான் முடியல இல்ல… வீட்டில இருக்கரதுக்கு என்ன?”, அவளிடமும் எரிந்து விழுந்தான்.
அஷோக் முற்றிலுமாக மாறியிருந்தான். அவன் தோற்றமும் பழகும் விதமும் கூட! எப்பொழுது யாரிடம் எரிந்து விழுவான் என்று சொல்ல முடியாது. முகத்தில் நீங்கா கடுகடுப்பு குடிகொண்டிருக்கும். பார்ப்பவருக்கு, “முசுடு யார குதர போகுதோ” என்ற எண்ணமே முதலில் ஏற்படும்.
கோபம் அவன் அடையாளமாக மாறிப்போனது. ஏன் எதற்கு என்று இல்லை எல்லாவற்றிற்கும் கோபம்! அவன் அருகில் வரவே பயந்தனர்.
சின்ன தவற்றுக்கே சீறிப் பாய்ந்தான். ஏன் இந்த கோபம்? எதையோ இழந்துவிட்டதின் தவிப்பா? இருக்கலாம். அவனையறியாமலே அவன் உள்ளம் இழந்த இழப்பைத் தாங்க முடியாமல் எதற்கோ ஏங்கித் தவித்தது. அதை மறைக்கும் முகமூடி தான் இந்த கோபம்! யாரையும் அவனிடம் நெருங்க விடாமல் அவனைக் காத்த கோபம்!
மூன்று வருடத்தில், மாற்றம் காணாமல் போனது அந்த தவிப்பொன்று தான். 
பிருந்தாவும் சுசிலாவும் விதி விலக்கு. சுசிலாவிடம் அதிகம் பேச மாட்டான். கேட்கும் கேள்விகளுக்குப் பதில்.. அவ்வளவே.
பிருந்தா, அவள் ஒதுங்க மாட்டாள். என்ன சொன்னாலும் காதில் போட்டுக்கொள்ள மாட்டாள்.  ஆனால் இப்பொழுதெல்லாம் சட்டென்று கண்ணில் நீர் கோர்த்துவிடுகிறது.. அதனால் மாசமான பின் அவளிடம் கடுமை காட்டுவது இல்லை.
ஏனோ அவள் முகபாவம் மட்டும் அவனுக்கு எரிச்சலைக் கொடுப்பதில்லை.
உறவுகள் தோழர்கள் என்று யாருடனும் தொடர்பை வைத்து கொள்ளாது தனக்குள்ளே மருகி கொண்டவன் உலகத்தில் இன்று பிருந்தா மட்டுமே அடக்கம்.
சோஃபாவில் அமரப்போனவளை.. “இங்க உட்கார்ந்துட்டு எழுந்திடிவியா? வா” என்று கை பிடித்து அவன் நாற்காலியில் அமர்த்தினான்.
“ரொம்ப டையார்டா இருக்க… ஃப்ரெஷ் ஜுஸ் குடிக்கிறியா?” மென்மையற்ற குரல்.
“கொஞ்சம் பாசமா தான் பேசேன்! இப்படி எரிஞ்சு விழிந்துட்டே கேட்டா எனக்கு ஒன்னும் வேணாம்.. போ” அவள் முறைக்க.. அவன் கண்டு கொண்டால் தானே..
ஃபோனை கையில் எடுத்தவன், “ஒரு வாட்டர் மெலன் ஜூஸ். நோ ஐஸ், நோ சுகர்!” என்று கூறிய ஐந்தாவது நிமிடம் அது வந்திருந்தது.
நேரே விஷயத்திற்கு வந்தவன், “எதுக்கு வந்த?” எனவும்
“இது என்ன கேள்வி … உன்ன பாக்க எனக்கு ரீசன் வேணுமா?”
அவளை முறைத்துக் கொண்டே, “பச்.. வேண்டாம் தான்… ஆனா எனக்கு வேல இருக்கு பிருந்தா.. என்ன வேணும்?”
“எனக்கு வீட்டில தனியா இருக்க போர் அடிக்குது அஷோக்… வெளில கூட்டீட்டு போறியா?”
“எனக்கு வேல இருக்கு..”
“அய்யோ…. ஏதாவது புதுசா சொல்லேன்..” அவளுக்கும் கோபம் எட்டிப் பார்த்தது
“எனக்கு உன் கூட ஊர் சுத்திட்டு இருக்க நேரமில்ல!”
“என் கூட சுத்தாம வேற யார் கூட சுத்த போர?”
“எதனாலும் உன்ட்ட சொல்லிட்டு தான் செய்யணுமா?” எரிந்து விழுந்தவன், அவள் முகத்தைப்  பார்க்க.. அது ஒரு முழத்திற்கு தொங்கிப்போனது
நீண்ட பெருமூச்சை விட்டு.. அவள் அருகில் நாற்காலியை இழுத்துப் போட்டு “எல்லாத்துலேயும் அடம்!” முணுமுணுத்துக்கொண்டே அமர்ந்தவன்…
“சொல்லு என்ன வேணும்? இந்த உடம்ப வச்சுகிட்டு.. எங்கப் போகணும்?” அமைதியாக கேட்டான்
“…”
“கோவிச்சுகிட்டியா?”
“…”
தலை குனிந்து விரலை பார்த்துக்கொண்டிருந்தவளைப் பார்க்க பாவமாய் போனது. “என் மேல கோபம் கூட வாருமா உனக்கு?”
“பச்… பேசாத”
“சரி.. விடு.. என்ன வேணும்? நீ சொல்லி நான் செய்யறேன்!”
“ஒன்னும் வேண்டாம் எனக்கு! இன்னைக்கு செக்கப்! கிட்ட தானேனு உன்ன பாக்க வந்தேன்… ரொம்ப தான் பண்ற!” என எழ எத்தனிக்க
“இப்போ எங்க போர? உக்காரு கொஞ்ச நேரம். ஒரு சின்ன வேலை இருக்கு! அரை மணி நேரம் தான் எடுக்கும். சேர்ந்து போகலாம்”
“ம்ம்.. கைய பிடி.. ரெஸ்ட் ரூம்.. போகணும்” என்று எழுந்தவள், சற்று நேரத்திற்கெல்லாம் அவன் முன் நின்றாள்.
சிறு குழந்தையின் பிடிவாதம் அவள் முகத்தில்.
“சொல்லு! என்ன வேணும்?” வாகாய் அவன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.
“போறியா?” என்றாள்.. உள்ளுக்குள் உதறல் தான்…. வெளியில் காட்டிக்கொள்ளவில்லை.
“எங்க?” என்றான். புருவம் கேள்வியாய் சுருண்டது. 
‘சாமி…. என்னை இந்த ஒரு தரம் காப்பாத்திடேன்’ உள்ளுக்குள் பலமான வேண்டுதல்.
“அமெரிக்கா?”
அவன் பார்வை அவளை எரித்தது.
“நீ கிளம்பு” என்றான்.. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க.
“எனக்கு உங்கட்ட பேசக் கூட உரிமை இல்லையா? பாக்க.. பேச.. எதுக்கும் பயந்து பயந்து சாகணுமா?” கத்திவிட்டாள். ‘நீ.. நீங்க…’ அவள் மனநிலையை பொறுத்து அவள் வாயிலிருந்து கொட்டியது.
அவன் கத்துவான் என்று எதிர்பார்க்க.. அவனோ புன்னகைத்தான்.
“நீ? உனக்கு என் கிட்ட பயம்? நம்பர மாதரி ஏதாவது சொல்லேன்” என்றான்
“நான் பேசரத கேக்காமலே நீ தான் திட்டீட்டே போக சொன்ன?” அவள் குரல் தாழ்த்த
“நீ பேசப் போரது எனக்குப் பிடிக்காத விஷயமா இருந்தா…?”
“ஏன் பிடிக்காது? போறிங்களா? இல்லையா?” மீண்டும் அவள் குரல் உயர
“பச்.. பிருந்தா… என்ன பிரச்சினை உனக்கு? எல்லாம் நல்லா தானே போகுது? இப்போ எதுக்கு புதுசா முடிஞ்ச விஷயத்த கிளர்ர?” அவன் குரல் சலிப்பைக் காட்டியது.
“முடிஞ்சிடுச்சா? நிஜமாவா? எனக்கு ஒன்னும் அப்படி தெரியலயே…”
“நீ வீட்டுக்கு போ பிருந்தா… இது ஆஃபீஸ்!”
“போ மாட்டேன்… என்ன பண்ண போறீங்க… என்னையும் வெளில தள்ளி உங்க கதவ மூடிக்க போறீங்களா?”
அவன் கோபத்தின் உச்சத்தை அடைய, அவன் எழுந்த வேகத்தில் அவன் சுழல் நாற்காலி ஒரு சுற்றுச் சுற்ற… பயந்த பெண்… சட்டென்று பின்வாங்க… இடுப்பு இழுத்துப்பிடிக்க.. “அம்மா” என்று அலறிவிட்டாள்.
உருண்டு திரண்ட பெரிய வயிறு… அதைத் தாங்கி பிடித்த வளைந்த முதுகு… பாரம் தாங்காமல்.. நிற்க முடியாமல் நின்றவள் முகம் வேதனையில்.. கண்ணில் நீர் வழிய அவனை தான் பார்த்தாள்.

Advertisement