Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 65
ஜான்சியின் முதல் விமானப் பயணம், நடுங்கிக் கொண்டே ஆரம்பித்து காது வலியில் அவதிப் பட்டு பின் அது அடங்கி… பார்க்க ஒன்றுமில்லா வானை வெறித்து அதுவும் முடியாமல் எதிரில் இருந்த திரையில் படம் பார்த்து, கிடைத்த உணவை விழுங்கி… தூங்கி என ஒருவழியாக அந்த நீண்ட பயணம் ஒரு முடிவுக்கு வந்தது. விமானம் தரை இறங்கவும் கண்ணைப் பறித்தது வெளியில் கண்ட காட்சி!
அது ஒரு புதன் கிழமை காலை வேளை. வேலை தினம் என்பதால் கார்த்தி விமான நிலையம் வந்திருக்கவில்லை. வேலை நிமித்தம் பாஸ்டன் சென்றிருக்க, சனிக்கிழமை காலை வருவதாகச் சொல்லியிருந்தான்.
அவர்கள் இருப்பிடம் நோக்கி கார் வேகமெடுத்தது. ஒரு கட்டத்திற்குப் பின் நீளமான சாலையில் அதிக வாகன நெரிச்சல் இல்லை.
“என்னங்க… கொஞ்சம் பொறுமையா போங்களேன்”
“ஏன் ஜானு? முடியலையா?”
“அட நீங்க வேற… வெளியில பார்த்து ஆசை தீரல.. ரசிக்க விடுங்க!” என்றாள் கண்ணை சாலைக்கு இருபுறமிருந்த மரங்களிலிருந்து எடுக்காமலே.
இலையுதிர் காலத்தின் ஆரம்பம் என்றதால் சாலை இருபுறமும் காடு போல் இருந்த மரங்கள், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, மரூன், பளீர் சிகப்பு என்று கண்ணைப் பறித்தது.
பார்க்கப் பார்க்க திகட்டாத காட்சி. ஜான்சி முகத்தில் பூரிப்பு, டேனி முகத்தில் புன்னகை. சுதா? சுதாவின் கவனம் எதிலும் இல்லை. இமை மூடவில்லை… காட்சிகள் கண்வழி இதயம் இறங்கவில்லை.
இது அரை மணி நேரம் நீடித்தது. காட்சி பழக்கப் படவும் சுதாவோடு பேச ஆரம்பித்தாள். சுதாவும் ஒரு முடிவில் இருக்கவே… முயன்று பேசினாள். அமைதியாக இருந்தால் அண்ணன் கேள்வி கேட்பான். ஏனோ அவனிடம் பொய் பேசுவது அவ்வளவு சுலபமாயில்லை. அப்பா பேச்சை மீறி  பழக்கமில்லை. அப்பாவிடம் பொய் பேசியதே இல்லை. அதனால் கூட இருக்கலாம். அவளால் அண்ணனின் வார்த்தைகளை மீற முடிவதில்லை.
மூன்று நாள் வீட்டில் வேலை சரியாக இருக்க.. சுதா அவள் எண்ணங்களிலிருந்து வெளிவந்தாள். டேனி எடுத்த விடுமுறைக்கும் சேர்த்து உழைக்க அது பெண்களுக்கான நேரமாகி போனது.
அண்ணியின் கால் வலித்துவிடாமலிருக்க வேலைகளை இவளே இழுத்துப் போட்டுச் செய்தாள். ஜான்சி மடியில் படுத்து அண்ணியோடும் பாப்பாவோடு கதை பேசினாள்.
வீட்டைச் சுத்தம் செய்யவது, வீட்டிற்குத் தேவையான பொருட்களை வங்குவது, சமைப்பது.. அண்ணி மடியில் படித்துக் கதை பேசுவது.. ஊர் சுற்றுவது, வெளியே பூங்காவில் நடப்பது, சிறுவர் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பது என்று பொழுது வலி ஏற்படுத்தாமலே சென்றது.
“குட்டிமா… அண்ணா நாளைக்கு காலையில வரான் டா..” என்று சுதாவிடம் அண்ணன் புராணம் கொஞ்சம் பாடினாள் ஜான்சி.
“எங்க போயிருக்காங்க?”
“பாஸ்டன்.. அங்க இவங்க க்ளையன்ட் மீட்டிங்காம். மத்தபடி வேலை இங்க தான்!”
பாஸ்டன் என்ற பெயர் கேட்டதுமே நினைவலைகள் வருடங்கள் முன் சென்றது. அங்கு தான் அம்மாவின் கடைசி மூச்சு பிரிந்தது. பாஸ்டனில் இன்னும் அவளுடைய வீடு அம்மாவின் தோழி மேற்பார்வையில் இருக்க.. அவர்களோடு பேசவேண்டும். கலிபோர்னியாவிலும் வீடு ஒன்று இருக்க.. அதையும் அவள் வசம் எடுக்க வேண்டும். அம்மாவின் பொடிக்.. அதுவும் இன்றுமே லீசா ஆண்டி மேற்பார்வையில்! இது எல்லாவற்றிலுமிருந்து வருமானம் சுதாவை அடைந்து கொண்டிருக்கிறது. அண்ணனிடம், அண்ணியிடமும் இன்று இதைப் பற்றி எல்லாம் கூறிவிட வேண்டும் என்ற எண்ணவோட்டத்தின் இடையே அண்ணியின் அண்ணன் பற்றிக் கேட்கவில்லை.
டேனி வீடு வந்து சேர.. பேச நினைத்த விடயங்களை இருவரிடமும் பேசிவிட்டு அவள் அறையில் அடைந்து கொண்டாள்.
காலை விடிந்து சில மணிநேரத்தில் கார்த்திக் அவர்களைக் காண வந்தான். அது இரண்டு படுக்கை அறை கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பு. இங்கு தான் வசித்து வந்தான் டேனியோடு! ஜான்சி வருவதாலேயே அவன் தனியே சென்றுவிட்டிருந்தான்.
அறையிலிருந்த சுதா ஹெட் ஃபோனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, வெளியே கார்த்தி அமர்ந்திருந்ததை அவள் அறியவில்லை.
“அண்ணா.. நீயும் எங்க கூடவே இங்கேயே இருந்திருக்கலாம்..”
“அது சரி படாது டா..”
“போண்ணா.. அவரோட தங்கை வந்திருக்கா. அவர் பேச்ச கேட்டு, எங்க கூட தான் இருக்கப் போரா!”
“ஓ.. பரவால உனக்கு துணைக்கு ஆள் இருக்குனு சொல்லு!”
“ஆமாண்ணா.. அவளை எனக்கு ரொம்ப பிடிச்சு போச்சு. நீயும் பேசி பாரேன் உனக்கும் ரொம்ப பிடிக்கும். உன் கிட்ட சொல்ல நிறைய விஷயம் இருக்கு. அப்பறம் சொல்றேன். இப்போதைக்கு அவர் தங்கையை மீட் பண்ணு. இரு.. உள்ள தான் இருக்கா.. கூப்பிடுறேன்”
கார்த்திக்கிற்குப் புரியவில்லை. மணமாகாத பெண்ணிற்கு அமெரிக்க விசா கிடைப்பது கடினம்… அப்படியே கிடைத்தாலும் பெற்றவர்களை விட்டு அந்த சிறுபெண் இங்கு என்ன செய்யப் போகிறாள்.. எதற்கு இங்கு அழைத்து வந்தனர்? அவளைத் தான்  பார்த்திருக்கிறேனே.. மீண்டும் எதற்கு அறிமுகம்? கேள்விகள் பல இருந்தாலும் ஒன்றையும் கேட்கவில்லை. ‘அவரவர் குடும்பம் அவரவர் விருப்பம்..’ என்று எண்ணிக்கொண்டே கையிலிருந்த காபியைப் பருகிக் கொண்டிருந்தான்.
டேனி யாருடனோ கைப்பேசியில் பேசிக்கொண்டிருக்க, கார்த்திக் அவன் உலகத்தில் சஞ்சரித்தான். தனிமை கிடைத்ததும் எப்பொழுதும் போல் சுதாவை மனம் அசைபோட்டது. கைப்பேசியை எடுக்க.. சுதா அதில் சிரித்துக்கொண்டிருந்தாள். ‘எங்க டி போய் தொலைஞ்ச?’ மனம் சலிப்பைத் தட்டியது. அவளை நினைக்காத நாளில்லை.
கடைசியாக, ‘நாளைக்கு டிஸ்சார்ஞ் கார்த்தி. நாளைக்கு உன்னுடைய நைட்டுக்கு கால் போடுறேன்..’ என்று சுதா கூறியது தான். அதன் பின் அவளிடமிருந்து எந்த தகவலும் இல்லை.
ஸ்ரீ, கனி ஒருவருக்கும் அவள் பற்றிய விபரம் தெரியவில்லை. அவள் பாட்டியும் ஒழுங்கான பதில் தரவில்லை. வீட்டை விட்டு சென்றுவிட்டாள்.. எங்கே என்று யாருக்குமே தெரியவில்லை. அவளைப் பற்றி ஒருமுறை தகவல் தந்தவனிடம் பேச, அவனும் அழாத குறையாய் நின்றான்! 
கைப்பேசி ஒரே பதிலைக் கொடுத்தது. ‘சிவிச்டு ஆஃப்’ என்றது. தெரிந்த டிடெக்டிவ் வைத்து விசாரித்தாயிற்று.. பலனில்லை.
அவளோடான தொடர்பு முற்றிலுமாக அறுபட்ட நிலை. தவித்துப் போனான். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றும் தெரியவில்லை. எங்குச் சென்றாள்? ஏன் சென்றாள்? அவளுக்குப் பிடித்தவனோடு சென்றுவிட்டாளோ? என்னிடம் சொல்லாமல் அவனோடு செல்ல என்ன அவசியம்? அவன் அவளை விட்டுவிட்டானோ? விரக்தியில் தலைமறைவாகிவிட்டாளோ…
தன்னிடம் கூட ஒரு வார்த்தை கூறவில்லையே என்ற வருத்தம் நீங்காமல் இதயத்தை அறுத்துக்கொண்டே இருந்தது.. உயிர் வரை இறங்கியவள்.. தவிப்பை மட்டுமே தந்து விட்டு, இன்று எங்கே மறைந்தாள்… இந்த பொல்லாத உலகில் எங்குச் சென்றாள்? தனியே என்ன அவதிப்படுகிறாளோ?
‘வேலையை விட்டுவிட்டு இங்கு வந்திருக்கவே கூடாதோ? அங்கே இருந்திருக்க வேண்டுமோ?’ குற்ற உணர்ச்சி கொன்றது.
அத்தனை கோடி செலவில் வைத்தியம் நடக்க அவனுக்கு அவளை பார்த்துக்கொள்ள  அங்கு ஜீவன் இல்லை என்று தோன்றவில்லை. தெரிந்திருந்தால் கண்டிப்பாக அவளை விட்டிருக்கவே மாட்டான்.
நாளுக்கு நாள் தவிப்பு அதிகரிக்க ஒரு வித பாரம் மனதில் நிரந்தரமாக குடிகொண்டது. ‘ஒரு முறை கண்ணில் பட்டுவிடு.. கண்ணுக்குள் வைத்துக் காப்பேன்’ என்ற வேண்டுதல் மட்டுமே சுவாசக்காற்றாக மாறிப்போனது.
“அண்ணா.. இவங்க தான்..” என்ற சத்தம் கேட்டு எழுந்தவன் திருப்பி பார்க்க அவனால் அவன் கண்ணையே நம்ப முடியவில்லை.
‘அவளைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்ததால் இருக்குமோ’ என்று கண்ணை அழுத்தி மூடி திறந்து இரண்டடி எடுத்து முன் வரவும் அவளும் அவனைத் தான் பார்த்து நின்றாள். அவளுக்கும் அதிர்ச்சியே..
பழையதை எல்லாம் பின் தள்ளி, புதிய வாழ்வை வாழ நினைத்தவள் அவனைப் பார்த்ததும் மறக்க நினைத்தெல்லாம் கண் முன்னே வந்து சென்றது. மூச்சு முட்டியது. அவள் கார்த்தி? அவள் கார்த்தியே தான், அவள் முன் முழு உருவமாக நின்று கொண்டிருக்கிறான்.
“கார்த்தி..” என்று கூப்பிட நினைத்தாலும் சத்தம் வரவில்லை. தொண்டை அடைத்தது.
எங்கிருந்து அவனுக்கு அவ்வளவு கோபம் வந்ததோ ஒரே எட்டில் அவளருகில் போக, போன வேகத்திலேயே அவளை ஓங்கி அறைந்திருந்தான்.
ஜான்சி நடுங்கிவிட்டாள். கார்த்தியை இப்படி அவள் பார்த்ததே இல்லை. அவனுக்கு கோபம் கூட வருமா? அதுவும் ஒரு சிலபெண்ணிடம் கை ஓங்கும் அளவு? அதிர்ச்சியில், “ண்ணா..” என்று அலறவும், ஃபோன் பேசிக்கொண்டிருந்த டேனி அதைத் தவறவிட்டவன், “கார்த்திக்!” என்று கத்தியேவிட்டான். இருவரின் நிலை மாறாமல் போயிருந்தால் கண்டிப்பாக கார்த்தி வாங்கியிருப்பான் டேனியிடமிருந்து.
அவர்கள் சத்தம் எட்டவேண்டிய நபர்களை எட்டியது போலத் தெரியவில்லை.
கீழே விழப் போனவளை இடது கையால் பிடிக்க.. கன்னத்தைப் பிடித்துக்கொண்டே மீண்டும், “கார்த்தி..” என்று கண்ணீர் மல்கப் பார்த்தவளை, இழுத்து அவள் முகத்தை நெஞ்சோடு புதைத்துக்கொண்டான்.
“ஏன் டி… ஏன்டி இப்படி பண்ணின… நான் என்ன செத்தா போயிட்டேன்..”
டேனியும் ஜான்சியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலும் ஒன்று பேசிக்கொள்ளவில்லை.
தாயைக் கண்ட கன்று போல் அவனிடம் தஞ்சம் அடைந்தவள் குலுங்கி குலுங்கி அழ அங்கு அவள் அழுகை சத்தம் மட்டுமே.
இருவரின் நெருக்கம் பார்த்த டேனி மனைவிக்குக் கண் காட்ட இருவரும் உள்ளே சென்றுவிட்டனர். அவள் அழுதது டேனிக்கு அப்படி ஒரு ஆறுதல். தன்னால் தங்கைக்கு ஆறுதல் தரமுடியவில்லையே என்ற வருத்தம் எட்டிப் பார்க்காமல் இல்லை. அவனுக்குத் தெரியவில்லை. அவனைப் பார்த்தபின் தான் அவள் உயிர் மீண்டது என்று. 
“ஏன் டி..?” என்றான் நா தழுதழுக்க
“நீ சொன்னியே.. அவரை தொலைச்சிட்டேனு என்ட்ட வந்து நிக்காதனு! நான் அவரை தொலைச்சிட்டேன் கார்த்தி.. இப்போ என்ன டா பண்ணுவேன்?” என்று உயிர் போவது போல் அடிவயிறு வலிக்க அழுதாள்.
“தாங்க முடியலை கார்த்தி… காலம் பூரா அவரோட வாழுவேனு நினைச்சேன் டா… இப்போ தனியாகிட்டேன் கார்த்தி..” கார்த்தி கண்ணிலும் கண்ணீர் வழிய.. தலையை தடவிட்டுக் கொண்டே நின்றான்.
கணவனோடு  எத்தனை ஆசையாக ஆரம்பித்த வாழ்வு… எல்லாம் முடிந்து போனது. தான் மரித்ததாகக் கூறியவள் இன்று அதற்காக அழுதாள்.. முடிந்த அவள் திருமணத்திற்காக அழுதாள். இனி கண்ணன் அவள் வாழ்வில் இல்லை… நினைத்து நினைத்து அழுதாள்.
ஒருவன் இழப்பு ஒருத்தியை இப்படி உருக்குலைத்திருக்க அவன் என்ன ஆனான்? யாரவன்? ‘தொலைச்சிட்டேன்’ என்றால்? விடை கேட்கும் நிலையில் அவனில்லை. விடை சொல்லும் நிலையில் அவளில்லை.
இருபது நாள் முன் திருமண மேடையில் விட்டுவந்த அவன் என்ன தான் ஆனான்?
அவனிருந்த தேசத்தில் மத்தியத்தைத் தொட்டிருக்க, அந்த அழகான சூழலில் பிருந்தாவோடு உணவருந்திக் கொண்டிருந்தான் அஷோக்.
“ப்ளீஸ் கொஞ்சமாவது சாப்பிடுங்க… இதையாவது கொஞ்சம் கூட வச்சுக்கோங்க” என்றதைத் தவிர, உணவு முடியும் வரை இருவரும் வேறு பேசிக் கொள்ளவில்லை. உண்ணும் உணவிலும் அவனுக்கு நாட்டமில்லை. முகத்தில் உணர்வில்லை.
மிகவும் அழகான பச்சை புல் படர்ந்த மலைச் சரிவு. ரசிக்கும் படியான குளிர்.. பெரிய பெரிய பசு மாடுகள்.. கழுத்தில் பெரிய மணி தொங்கச் சத்தம் எழுப்பிக்கொண்டே நடந்தது. ஓடை சலசலக்க இருவரும் நடந்தனர். அங்கும் இலையுதிர் காலத்தைக் காட்டும் வகையில் பல வர்ண மரங்கள். மிகவும் ரம்மியமான இடம்.
அங்கிருந்த பல காட்டேஜுகளில் ஒன்றுக்குள் நுழைந்தனர்.. அவள் அணிந்திருந்த ஜேக்கெட்டைக் கழட்டி.. மப்ளரை கழுத்திலிருந்து உருவவும்  மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்ட தாலி வெளி வந்து விழுந்தது. இருவர் பார்வையும் அதில் தான்.
நாற்காலியில் அமர்ந்தவன் இடது கையால் தலையை அழுத்தித் தேய்க.. அவன் வலது கையை அழுத்திப் பிடித்தவள்..
“டேக் இட் ஈசி அஷோக்… என்னைப் பத்தி யோசிக்காதீங்க. ஐ ஆம் ஃபைன்” என்றாள்.
“எத்தன தடவ சொல்ரது பிருந்தா.. எப்பவும் போலவே கூப்பிடுனு..”
“இல்ல அஷோக். இனி மேல் அப்படிக் கூப்பிடக் கூடாது.”
“எல்லாம் உன் இஷ்டம் தானே… எப்படியோ கூப்பிடு!”
எதிரில் மேய்ந்து கொண்டிருந்த மாடுகளை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். முகத்தில் ஏகப்பட்ட களைப்பு. இங்கு தான் ஒரு வாரமாகத் குடியிருப்பு. மலைச் சரிவில்… ஆங்கிலம் மட்டுமே பேசும் பூமியில்!
“நான் கிளம்பறேன் அஷோக். இப்போ கிளம்பினா நைட்க்குள்ள போய்ச் சேர முடியும். நாளைக்கு எல்லாம் ரெடி பண்ணினா தான் மண்டே காலேஜ் ஜாயின் பண்ணச் சரியா இருக்கும்”
“உடம்ப பார்த்துக்கோ பிருந்தா.” கண் மன்னிப்பை யாசித்தது.
“நீங்களும் தான். அடுத்த வாரம் வரேன்.” அவள் கண்ணும் அதையே தான் யாசித்தது.
“வேண்டாம்.. நீ அலையாத! படிப்ப மட்டும் பாரு.” உண்மையில் அவள் வேண்டும் போல் இருந்தது.. ஒரு தோழியாக!
இருவர் கண்களிலும் கண்ணீர் கோர்க்க.. தொண்டை அடைக்க.. பிடித்த அவன் கையை விடவே இல்லை. ஆயிரம் மன்னிப்பு அவனிடம் கேட்க வேண்டும் போலிருக்க அவளால் பேச முடியவில்லை. அவன் முன் அழவும் முடியாது. கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
எல்லாம் கை மீறி சென்று விட இனி செய்வதற்கு ஒன்றுமில்லை. காதல் என்ற பெயரால் ஒருவனைக் கொன்றுவிட்ட உணர்வு. 
ஆனால் உச்சக்கட்ட குற்ற உணர்வில் இன்று அவன்! அவனை விட்டுச் சென்றவள் நினைவிலிருந்து மீள வழி தெரியவில்லை. அவள் அவனை விட்டு வேறு தேசம் சென்று விட்டது வரை தெரிந்தது. தெரிந்து?
பதிலில்லா ஆயிரம் கேள்விகள்… வாழ்க்கையின் வெறுமை… ஏமாற்றிச் சென்றவள் மேல்  கோபம். தன்னிடம் பல உண்மைகளை மறைத்தவர்கள் மேல் வருத்தம். இது எல்லாவற்றிற்கும் மேல் தன்னை மட்டுமே காதலித்த  ஒருத்திக்கு உண்மையாக இல்லாமல் அவள் வாழ்க்கையைக் கெடுத்த குற்ற உணர்வு! எல்லாமாகச் சேர்ந்து தாங்க முடியா மன அழுத்தம்!
அவனுக்குப் பைத்தியம் பிடிக்கும் நிலை! வலிக்கும் இதயத்தை வெளிக்காட்டவில்லை. கனவில் ஒருத்தி வந்து பிச்சு பிடுங்கி அவனைத் தின்ன… நிம்மதி இழந்து.. தூக்கம் இழக்க.. இன்று மருந்து மாத்திரையோடு ஒரு பந்தம்.
பாதி மனநோயாளியாகி விட்டான். மன அழுத்தத்தின் உச்சக் கட்டம்!
ஜன்னல் வழி அவள் செல்லுவதைப் பார்த்து நின்றான். திரும்பிப் பார்த்தாள். அவன் பார்த்துக்கொண்டு நின்றது அவளுக்குத் தெரியவில்லை. கண் அவனை வராண்டாவில் தேட.. அவள் கண்ணில் அவன் படவில்லை. அதற்கு மேல் நடக்கவும் முடியவில்லை. உடல் பலமெல்லாம் வடிந்தது. வலி தாள முடியவில்லை. அங்கிருந்த மரத்தில் சாய்ந்து அழ ஆரம்பித்தாள்.
அவனை அங்கே விட்டு செல்ல மனமே இல்லை. வேறு வழி இல்லை. அவனுக்கு இந்த தனிமை தேவை. இந்த சூழல் அவனுக்கு தேவை. அவன் மனம் தேற!
அவளுக்கான வாகனம் வர.. கண்ணைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தவள் மீண்டும் அவன் புறம் பார்த்தாள். அவன் இல்லை. மீண்டும் கண்ணீர் கொட்டியது. சாகடித்துவிட்டேன் அவனை… என்ற வலியோடு வாகனத்தினுள் அமர்ந்தாள். 
கார் வெளியே சென்றது அந்த மனநிலை காப்பகத்திலிருந்து. (Mindcare Institute for depressed)

Advertisement