Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_2
அறையிலேயே அடைந்து கிடந்த சுதாவை, அனி வம்படியாய் அழைத்துக் கொண்டு வீட்டைச் சுற்றிக் காட்டி, வீட்டிற்கு வெளியிருந்த தொட்டத்தைக் காட்டி என்று அவளை ஒரு வாழியாக்கிக் கொண்டிருந்தாள்.
புது அக்காவோடு அறையைப் பகிர்ந்து கொண்ட அனி, ஹோட்டல் அறையிலிருந்து வந்திறங்கியிருந்த பெட்டிகளை திறக்காமலே இருக்க, “அக்கா உங்க திங்ஸ்ச அடுக்கி வைக்கட்டுமா?” என கேட்டதோடு இல்லாமல், சுதாவின் பெட்டிகளைத் திறந்தவளுக்கு அதிலிருந்தவைகளைப் பார்க்கக் கண் போதவில்லை.
“அக்கா… இந்த ஷூஸ் சூப்பர்.. இந்த சண்டில்ஸ் கண்ணபறிக்குது… இந்த பர்ஸ் ச்சான்ஸ்சே இல்ல… இந்த ட்ரெஸ் எல்லாம் எங்க்கா வாங்கின? இந்த பாவாடை எவ்வளவு பெருசு… சினிமால ஹீரோயின் போட்டுக்கரமாதரி இருக்கே… இது என்ன அது என்ன?…” பதிலுக்கு காத்திராமல் அவள் போக்கில் பேசிக்கொண்டே எல்லாவற்றையும் கடைபரப்பிக் கொண்டிருந்தாள்.
அவள் கைகடிகாரத்தை பார்த்தவள், “இது கண்ண பறிக்குது கா…” எனவும்
“அனிமா.. என்னது எல்லாம் உன்னுது தான்.. பிடிச்சத போட்டுக்கோ. என்ட்ட கேக்க வேண்டாம்” என்றது தான் தாமதம்.. கடை பரப்பியதிலிருந்து பிடித்ததை எல்லாம் எடுத்து மாட்டிக்கொண்டாள். அனிக்கு சுதாவை பிடித்துப் போனது. 
கழுத்தோடு கட்டிகொண்டு கன்னத்தில் முத்தம் தந்து “அண்ணா மாதரியே நீயும் என் மேல ஆசையா இருப்பியாக்கா?” என்றவளிடம்
“நீ போதும் போதும்னு சொல்லர அளவுக்கு” என்றாள் 
“நீ இதெல்லாம் எனக்கு ஷேர் செய்யலனா கூட எனக்கு உனக்கு பிடிச்சிருக்கும். ஏன்னா நீ அண்ணாவோட லிட்டில் சிஸ்டர் இல்லையா? உன்ன பிடிக்காம போன அப்புறம் அண்ணா சேட் ஆகிடுவாங்க. ஆனா இப்போ அண்ணாக்காக இல்ல.. எனக்கே உன்ன ரொம்ப பிடிச்சிருக்கு!  லவ் யூ அக்கா” என்றவளைப் பார்த்தவளுக்கு அவள் பாட்டி தான் நினைவில் வந்தார். அப்படியும் ஒரு மனிதர்? இப்படியும் ஒரு குடும்பம்!  
“நீ எனக்கு அக்காவா? தங்கையா? நீ எந்த ஸ்கூல் போற? எந்த ஸ்டண்டர்ட்?”
இவள் கேள்வியில் அவள் விழி பெரிதாய் விரித்தாளா இல்லை அவள் பதிலுக்கு இவள் பெரிதாய் விழி விரித்தாளா தெரியவில்லை.
இப்பொழுதே சுதாவைப் பற்றி அறிந்ததை வீட்டில் அனைவரிடமும் அறிவிக்க அவள் ஓடிவிட..
மீண்டும் தனிமை ஒட்டிக்கொண்டது.
வீட்டில் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சுதா மட்டும் வந்த அன்று எப்படி இருந்தாளோ அப்படியே தான் இருந்தாள். வாழவும் பிடிக்காமல் சாகவும் முடியாமல்..
ஒரு மூலையில் சுவரோடு சுவராய்… தனிமையில் அமர்ந்திருந்தவள் கண் எதிரில் விரித்து போடப்பட்டிருந்த அவள் உடைமைகளில். எல்லாம் பழைய நினைவைத் தூண்டவே, மனம் தாளவில்லை.  ‘அந்த பாவாடை… முதல் முறை கண்ணனைப் பார்த்த அன்று போட்டது. மதில் சுவரில் அவள் தொங்க.. முள்ளில் மாட்டிய பாவாடையைக் கிழியாமல் எடுத்துவிட்டான்.
இந்த சட்டை, அவனிடம் முதல் முத்தம் வாங்கியபோது போட்டது. இது.. கலர் லென்ஸ்.. உடைக்கு ஏற்றாற் போல் கண்ணின் நிறத்தை மாற்ற.. அவனை முதல் முதல் கவர்ந்தது. இந்த பாவாடை.. அன்று தான் காலில் எண்ணைத் தடவி என்னை எடுத்துக்கொண்டது. இது… என் கழுத்தில் என் கண்ணன் தாலி கட்டியபோது உடுத்தியது…’
முட்டிக்கொண்டு வந்தது.. கண்ணை மூடிக்கொண்டாள். கண்ணை மட்டும் தான் மூட முடிந்தது. ‘கடவுளே.. என்னை எடுத்துக்கொள் இல்லை வாழச் சொல்லிக் கொடு. என்னால் தாள முடியவில்லை’ 
அழவில்லை. அழாமல் இருந்தால் ஒரு கட்டத்தில் இதயம் வெடித்து இறந்துவிடலாம் என்ற நப்பாசை! உள்ளுக்குள்ளே புதைத்துக் கொண்டிருந்தாள். எல்லா வலியையும்… எல்லா கண்ணீரையும்.
நெஞ்சு கூடு மட்டும் துக்கம் தாளாமல் ஏறி ஏறி இறங்கியது.
இரண்டு கோப்பை காபியோடு உள்ளே நுழைந்த டேனி அவள் நிலை கண்டு நின்றுவிட்டான்.
‘ஏதோ அவளை உருக்குகின்றது… அது என்ன?’
கோப்பையை வைத்துவிட்டு அவள் அருகில் அமர்ந்து கொண்டான். உணர்வு பெற்று அண்ணனைப் பார்த்தாள். கதவு மூடப்பட்டாலும் ஜன்னல் திறந்திருந்தது. மூச்சு விடக் கடவுள் வழி காட்டினார்.
அவனும் பேசவில்லை அவளும் பேசவில்லை. மௌனம் பேசியது. அண்ணன் கையை இரண்டு கையை கொண்டும் இறுக பிடித்துக்கொண்டு தலை சாய்த்துக்கொண்டாள்.
அவன் தலை வருட, “நீயாவது என்னைக் கூடவே வச்சுப்பியாண்ணா?” கண்மூடு கேட்டாள்.
என்ன சொல்லுவான்? வேலை இங்கு இல்லை… அவளைப் பற்றி ஒன்று தெரியவும் இல்லை. அவள் டிகிரி முடித்தவள் என்பதே அனி சொல்லித்தான் தெரிந்தது. என்ன ஆனது அவன் உடன்பிறப்புக்கு?
“நான் உன் அண்ணாடா.. இது இரத்த பந்தம்.. எப்பவும் உனக்கு நான் இருப்பேன் சுதா.. ஆனா நீ கொஞ்சம் முயற்சி பண்ணு.. உன்னை என்ன கஷ்ட படுத்துது? நீ சொன்னா தான் என்னால ஏதாவது செய்ய முடியும்.
இந்தா இத குடி…”
காபி அருந்திக்கொண்டே சுதாவிடம் விஷயங்களைப் பேச அமர்ந்தான்.
“வந்ததுல இருந்து உன்ன பத்தி ஒன்னுமே சொல்ல மாடேன்ற.. ஏன் மா? இங்க எங்க இருந்த.. யார் கூட இருந்த? எப்படி தனியான?”
“…”
“ஓ.கே.. டேக் யுவர் டைம்.. இங்க பிடிச்சிருக்கா?”
“ம்ம்..”
“சுதா, நான் லீவ்ல தான் இங்க வந்திருக்கேன். பேபி ஷவர்க்காக தான் வந்தேன். எனக்கு வேலை வெஸ்ட் வெர்ஜினியாவுல. யு.எஸ்-கு ஜானுவோட கிளம்பனும். உனக்கு இங்க அம்மாகூட இருக்க முடியும் தானே?”
“நானும் வரட்டாண்ணா? உன் கூடவே இருக்கேண்ணா?” பாவமாய் உதடு துடிக்க அவன் முகம் பார்த்திருந்தவள் தலையை நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான்.
என்ன சொல்லுவான்? வலியில் துடிக்கும் தங்கைக்காகக் கூட இருக்க முடியாத?
“அவ்வளவு ஈசியா அங்க வர விசா கிடைக்காதே டா.. டூரிஸ்ட் விசா வேணும்னா ட்ரை பண்ணலாம்.. மத்தபடி..” அவன் யோசிக்க
“இல்லண்ணா.. எனக்கு விசா வேண்டாம். நான் யு.எஸ் பாஸ்போர்ட் ஹோள்டர். எனக்கு ட்யுயல் சிட்டிஸன்ஷிப் இருக்கு..” என்றாள். இது தான் அவள் பேசிய நீளமான வாக்கியம்!
பேச்சு தொடர்ந்தது. ஏதோ கேள்வி பதில் போல் அவன் யோசித்து யோசித்துக் கேட்டான்.. விருப்பப் பட்டால் ஒரு வார்த்தையில் பதில் வரும்!
அடுத்து வந்த நாட்களிலும் படுக்கை விட்டு எழவே இல்லை. கொடுப்பதைப் பெயருக்குச் சாப்பிட்டாள். ஷாலினி பார்த்தார்… இன்று வரை எப்படியோ.. இனிமேல் சுதா அவரின் மகளாயிற்றே. சுதாவையும் தாங்கினார்.
“சுதாமா… வா டா..” என்று அடுக்களையில் கூடவே வைத்துக்கொண்டார். அவள் பேசாவிட்டாலும் அவர் பேசினார்.
“சாப்பிடு சுதாமா..” அறையல் சுருண்டு கிடப்பவளிடம் அவள் அறைக்கே உணவை எடுத்துச் சென்று அவள் உண்ணும் வரை கூடவே இருந்து சாப்பிட வைத்தார்.
குளிமா… என்றார். சின்ன சின்ன வேலை சொன்னார். ஜானுவோடு நடை பழக அனுப்பினார்.. எல்லாவற்றையும் சொல்லிச் சொல்லி செய்ய வைத்தார்.
எல்லாராலும் இத்தகைய அன்பு காட்ட முடியாது. அந்த பிஞ்சு மனதுக்குள் தாங்க முடியாத பாரம் அழுத்துவதைப் புரிந்து கொண்டாலும் அவளிடம் துருவவில்லை. கொஞ்சம் அழுதால் சரி ஆகிவிடுவாள். ஆனால் அழவில்லை. சோர்ந்தே காணப்பட்டாள். ஜீவனற்ற விழிகள். 
“இங்க பாரு செடியில பூச்சி பிடிச்சிருக்கு.. அந்த எண்ணையும் சோப்பும் கலந்த தண்ணிய தெளி..” என்று தோட்டத்தில் செடிகளோடு சுற்ற செய்தார். செடிகள்.. அவைகளைப் பார்க்கப் பார்க்க அவள் தோட்டக்காரன் தான் நினைவில் வந்தான். எங்கும் எதிலும் அவன் தான். தென்னையில் சாய்ந்து மார்புக்கு குறுக்காய் கை கட்டி நின்று பல் தெரியச் சிரித்தான்… வாழைப் பூவை பறித்து நீட்டினான்.. ஒவ்வொரு செடியை பற்றிக் கூறினான். முகத்தில் விழுந்த முடியை ஒதுக்கிவிட்டான். ‘போ’வென்றாலும் போக மறுத்தான். கண்மூடினாலும் சட்டமாய் இமைக்குள் அமர்ந்துகொண்டான். எப்படி இவனை மறந்து வாழ முடியும்?
தோட்டத்தில் இருந்த கல்பென்ச்சில் சுருண்டு படுத்திருந்தவள் தலையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டார் ஷாலினி. தலையை வருடி கொடுக்க அவளுக்கு அவள் அத்தை மாமா வேண்டும் போலிருந்தது.  ஏன் அவள் எங்குச் சென்றாலும் அவளுக்காக உருக, அவளிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செலுத்த ஒருவர் இருக்கிறார். ‘கடவுளுக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா?’ என்று எண்ணிக்கொண்டாள்.
தீபக்கை அழைத்தாள். அவள் அழைப்புக்காகவே காத்திருக்கும் சேவகனாய் ஓடி வந்தான். அவளைப் பற்றி வெளியே யாரிடமும் சொல்லக் கூடாதென்ற நிபந்தனையோடு வரவழைத்தாள்.
தீபக்கைப் பார்த்தவர்களுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி! டேனியின் போலவே இருந்தான். ‘இது என்ன டா குடும்பத்தில எல்லாரையும் செராக்ஸ் மஷின்லா இருந்து காபி எடுத்துட்டாங்களா’ என்று தான் ஜானு பார்த்தாள்.
“எங்க தாத்தா இண்டியன் கிடையாது. அவர் கண்-தான் மாமாக்கு.. அம்மாக்கு.. எனக்கு.. சுதாக்கு… எங்க எல்லார் உருவமும் ஓரளவுக்கு ஓரே மாதரி தான்” என்று தெளிவு படுத்தினான்.
உள்ளே நுழைந்த டேனி, தீபக்கைக் கண்டு அப்படியே நின்றுவிட்டான். இருவரும் கண்கலங்கத் தழுவிக் கொண்டனர். அவன் மூலம் சுதா பற்றியும் அவன் குடும்பம் பறியும் அறிந்து கொண்டான். அஷோக் பற்றி பேச உரிமை மறுக்கப்பட தீபக் வாய் திறந்தானில்லை. 
மாமாவை தீபக்கோடு சென்று பார்த்தனர். மாமா… அவள் மேல் உயிராய் இருக்கும் மாமா… படுத்த படுக்கையாய்.. மரகட்டிலில் மருந்தெண்ணெய் தடவிப் படுக்க வைத்திருந்தனர். 
ஏதோ முன்னேற்றம் தெரிவதாய் கூறினர். ஆனால் பார்த்தவளுக்கு அவள் பட்ட வலி எல்லாம் ஒன்றுமே இல்லாதது போன்ற உணர்வு. அவள் வலி மருந்திலும்… தூக்க மாத்திரை உதவியாலும் தாங்கிக்கொண்டாள்.
மாமாவிற்கு அது எதுவும் இல்லை… வலியோடே படுத்துக் கிடந்தார்.
இந்த வலியிலும் மகளைக் கண்ட மகிழ்ச்சியில் முகம் மலர்ந்தார். அருகில் அமர்ந்து எண்ணை நாறியா நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டாள். “சீக்கிரம் சரி ஆகிடுங்க மாமா..” என்றாள். அந்த சூடானா இரண்டு சொட்டுக் கண்ணீர் அவரை குளிர்வித்தது.
அத்தையை மடியில் சாய்த்துக்கொண்டு ஆறுதல் வார்த்தை பேசினாள். அண்ணனோடு செல்வதாய் கூறினாள். மீண்டும் வருவேன் என்றாள். டேனியோடு சுதாவைப் பார்த்ததே  அவர்களுக்கு புது தெம்பைத் தந்தது.
மேகங்கள் மத்தியில் விமானம் செல்ல.. அந்த மேகங்களோடே சுதாவின் பழைய வாழ்வும் சென்றது. அவள் தாய் தந்தையோடு சுகமாய் வாழ்ந்த அவள் கூட்டை நோக்கி ஓர் பயணம். விதியோடு போராடப் போவதில்லை. நினைவுகளை எதிர்த்து நிற்க போவதில்லை. காலம் இழுக்கும் இழுப்பிற்குச் செல்ல தன்னை தயார் படுத்திக்கொள்வாள். 
இவ்வளவு தான் வாழ்க்கையா? ஒரு நாள் வாழ்ந்து மறு நாள் வீழ்ந்து…? தைரியம் இருப்பவர் போராடி மீண்டும் எழுந்து நின்று.. சாதித்து…? மற்றவர் தோல்வியோடே மாண்டு?
மாமா எழுந்து நிற்பார். சுதாவும் தான். அவளை எந்த துன்பமும் வீழ்த்தாது. அடிக்க அடிக்க விழுவாள். ஆனால் கண்டிப்பாய் எழுந்து நிற்பாள். நம்மால் தாள முடியா பாரம் நம்மேல் சுமத்தப் படுவதில்லை.
காலம் யாருக்கும் தயை காட்டுவதில்லை. அடித்து வீழ்த்தும்… முயன்றால் எழுந்து நிற்கலாம். நிற்பவரைத் தான் அது அடிக்கும். அடித்தால் அழுத்தம் கூடும். வெறும் ‘கார்பன்’ அழுத்தத்தால் வைரம் ஆவதில்லையா? நாம் எதில் குறைந்து போனோம்? சுதாவும் வைரமாய் மீண்டு வருவாள் என்று நம்புவோம்!

Advertisement