Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 64_1
டேனியேல் உணர்ச்சிகளுடன் போர் புரிந்து கொண்டிருந்தான். அவன் அமைதியான கடலில், நடந்த நிகழ்ச்சி சுனாமி தான்!  
நிலவு வானத்தை ஆக்கிரமித்திருக்க, அந்த அழகான அமைதியான இருளில் மனைவி மடியில் படுத்திருந்தாலும் மனதில் அமைதியில்லை. அவன் பேச விரும்பவில்லை என்பதை அறிந்ததாலோ.. அவள் வாய் பேசவில்லை. கை மட்டும் கணவன் கேசம் கோதியது.
அவன் குரல் கரகரத்தது. “இது என் குடும்பம் இல்லையா ஜானு?”
“அவங்க என்னை வேண்டாம்னு தூக்கி போட்டுட்டாங்களா?”
“சுதா என் தங்கைனா… அப்போ அனி? வீட்டுல அம்மாட்ட இவள யாருனு சொல்லுவேன்? எனக்கு உண்மை தெரிஞ்சது அம்மா அப்பாவால தாங்க முடியுமா ஜானு?”
“அனி ஒத்துபாளா சுதாவ? அனி என்னை விட்டே கொடுக்க மாட்டாளே..”
“’என்னை எல்லாரும் விட்டுடாங்கண்ணா.. எனக்கு யாருமே இல்ல’னு என் தோள் சாஞ்சு அழுதவள எப்படி தனியா விட்டுட்டு போக?”
அவன் கேள்விகளுக்கு அவன் பதில் எதிர்பார்க்கவில்லை என்பது அவளுக்கு தெரியாமலில்லை. அவன் தவிப்பு.. அவள் மனம் கனத்தது.
“நான் வேணும்னா… இங்கயே இருக்கவா? நீங்க கிளம்புங்க” அவள் கூறி முடிக்கவில்லை. எழுந்து அமர்ந்தவன் மனதில் என்ன ஓடியதோ.. “லவ் யூ ஜானு” என்று இழுத்து அணைத்துக்கொண்டான்.
“நீ தனியா நான் தனியா இருக்கறதுக்கு உன் கைய நான் பிடிக்கல ஜானு! உன்ன விட்டு ஏழு மாசம் இருந்துட்டு நான் தவிச்ச தவிப்பு உனக்கு தெரியுமா? நீ காலடிப்பட்டு வலில துடிச்சப்போ என்னால இங்க வர கூட முடியல… உயிரே போயிடுச்சு! இந்த நிலம நமக்கு வேண்டவே வேண்டாம். அப்படி எல்லாம் என்னை விட்டுடு நீ இங்க இருக்க வேண்டாம். என் குழந்த கூட ஒவ்வொரு நிமிஷமும் நான் இருக்கணும். உன் வலிய என்னால வாங்க முடியாது… ஆனா உன் கூடவே உனக்கு ஆறுதலா இருக்க முடியும். அத வேண்டாம்னு சொல்லிடாத ஜானு!”
“அப்போ சுதா?”
டேனி கொஞ்சம் தேறியிருக்க வேண்டும். அடுத்து வந்த பேச்சு அதை தான் உணர்த்தியது. 
“பச்… உனக்கு அம்மாவைத் தெரியாதா? அவ கண்ண உருட்டி உருட்டி பார்க்கறதுலேயே அம்மா அவளுக்கு அடிமை ஆகிடுவாங்க. அவங்க அடுத்த மதர் தெரசா.. உனக்குத் தெரியாதா… அவங்க பார்த்துப்பாங்க..”
“உண்மை தான்.. உங்களை மாதரியே உங்க தங்கையும் கண்ணாலையே வசியம் பண்ணறா!”
மனைவியைத் தோளில் சாய்த்துக்கொண்டவன் மனம் அம்மாவை யோசித்தது. பெற்றால் தான் தாயா? ஷாலினி போல் ஒரு தாயைப் பார்க்க முடியுமா? யோசனை அவன் பெற்றவர்களை நோக்கிப் பாய்ந்தது. அவன் அம்மா அப்பா எப்படி இருப்பார்கள்..?
வேண்டாம் என்று விரட்டி விட்டார்களா? இவளையும் அப்படி தான் தள்ளிவிட்டார்களா? கேள்விகள் அடங்கவில்லை. இருக்காது என்றது மனம்.
தயங்கிக் கொண்டே கைப்பேசியை எடுத்து சுதாவிடமிருந்து வாங்கிய புகைப்படத்தைப் பார்த்தான். கை நடுங்கியது. அப்படியே அவன் அப்பாவின் நகல்.
சிறு வயது, அவன் அப்பா அம்மாவிற்கு! கையில் ஏழுமாத சிறுவனோடு நின்றிருந்தனர். ‘இது தான் நீ.. இவர்கள் உன் பெற்றோர்! பார்த்துக்கொள்’ சொல்லிக்கொண்டான்.
அவனை நெஞ்சோடு அப்பா அணைத்துப் பிடித்திருந்தார். அம்மா கன்னம் அப்பாவின் தோளில் சாய்ந்திருக்க இவன் நெற்றியோடு அவர் நெற்றி உரசி கொண்டிருந்தது. அம்மாவின் கையும் அவன் முதுகில்.
அனைவர் முகத்திலும் சிரிப்பு! உடல் சிலிர்த்தது. ‘என் அம்மா.. என் அப்பா..’ மனம் கட்டுக்குள் இல்லை. ஒரு முறை பார்க்க முடியாதா என்ற ஆசை அவனைக் கேட்காமலே வந்து ஒட்டிக்கொண்டது.
‘என்னை அவர்கள் விட்டிருக்கவே மாட்டார்கள்!’
‘இங்கு எப்படி வந்தேன்? காணாமல் போனேனோ? அம்மா துடித்துப் போயிருப்பார்களே… அப்பா எங்கெல்லாம் தேடியிருப்பார்.. இன்று எங்கே போனார்கள்..?’ இல்லாத பெற்றவர்களுக்காகக் கண் கசிந்தது.
‘சுதாவுக்கு ஏன் இந்த நிலை? பெற்றவர்கள் எங்கே?’ கேட்க கேட்கக் கேள்விகள் வந்துகொண்டே இருக்க… அவளிடம் காலையிலிருந்து ஒன்றுமே  பேசியிருக்கவில்லை, அதனால் ஒன்றும் தெரியவில்லை. பார்த்ததும் பேசிய ஒற்றை வரி மட்டுமே. நடைப் பிணமாகச் சுருண்டு கிடப்பவளிடம் என்னவென்று கேட்க?. அவள் பெயரை கூறியதே பெரிய விஷயம்.
“டேனி… பனியில என்ன பண்ற…? ராணி… நீ இந்நேரம் மாடியில என்னடா பண்ற… ரெண்டு பேரும் கீழ வாங்க!” அம்மா குரல் கொடுக்க.. கைப்பேசியை அணைத்து வைத்தான்.
“அம்மா… சுதா.. தூங்கிட்டாளா?” டேனி, அம்மா முன் நின்றான்.
“எதையோ வெறிச்சு பார்த்துட்டே இருக்கா… அழவும் மாட்டேங்கறா.. பேச மாட்டேங்கறா.. கொஞ்சம் கண்ணையாவது மூடலாமில்ல? அதுவும் மாட்டேன்றா! ரெஸ்ட் எடுத்தா பரவாலையா ஆகிடுவானு அப்பாவோட தூக்க மாத்திரை ஒன்னு கொடுத்திருக்கேன்.. அப்பவும் பாதி தூக்கமா தான் இருக்கா. அப்போ அப்போ எழுந்து உக்காந்துக்கரா! இன்னைக்கு அவ கூட நானே படுத்துக்கறேன்.. நாளைக்கும் இப்படியே இருந்தா டாக்டர்ட்ட காட்டணும்.. சரி நீ போ.. போய் படு”
ஷாலினி ஒரு வார்த்தை கேட்கவில்லை சுதா பற்றி. மகன் கூட்டி வந்தான். சுதாவைப் பார்க்கப் பார்க்க உள்ளம் உருகியது. அந்த உருக்குலைந்த ஓவியம் அவரை ஏதோ செய்யத் தான் செய்தது. கண்ணீர் நிறைந்த கண்கள் அவரை கலங்கடிக்க… அவளோடே இருந்தார்.
அவளைப் பற்றி என்னவென்று யோசிக்க? வாழ்கையை தொலைத்து வந்து நிற்கிறாள் என்று ஒருவராலும் யோசிக்கக் கூட முடியவில்லை. அவள் அனி அளவு தான் இருந்தாள். திருமணமாகி இருக்கும் என்று எண்ணத் தோன்றும் தோற்றமெல்லாம் இல்லை.
இந்த உலகம் பொல்லாதது. இவளை ஏதோ வகையில் உருக்குலைத்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம். சோர்வோடு இருப்பவளிடம் ஒருத்தராலும் ஒன்றும் கேட்க முடியவில்லை.
டேனியின் இரத்த பந்தமா இவள்? கண்ணைத் தவிர அவள் முகத்தில் ஒன்றுமில்லாது போகவே சாயல் எல்லாம் தெரியவில்லை. இருந்தும் சொல்லிவிடலாம் இருவரின் பந்தத்தை.
ஷாலினிக்கு மகனிடம் கேட்கப் பயம். ‘ஆம்’ என்று சொல்லிவிட்டால்? மேலே ஏதாவது கேட்டுவிட்டால்? மகன் தன்னை வெறுக்க மாட்டான் தான்.. ‘ஏன் என் பெற்றோரிடம் என்னை ஒப்படைக்கவில்லை’ என்று கேட்டுவிட்டால்? 
வந்தவள் வீட்டின் சூழலை முற்றிலும் மாற்றிவிட்டாள்.
இருந்தும் அவள் முக வாட்டம் அவரை ஏதோ செய்ய அவள் வீட்டில் நுழைந்தது முதல் அவளுக்குப் பார்த்து பார்த்துச் செய்தார்.
அறையின் மூலையில் சுறுண்டு கிடந்தவளை டேனி தூக்கி மெத்தையில் படுக்க வைத்தான். அருகில் அமர்ந்து தலையை வருடி விட்டான். “உனக்கு என்ன ஆச்சு டா? அண்ணா இருக்கேன்.. பயப்படாத!” என்றான் அரை மயக்கத்திலிருந்தவளிடம்.
விடிந்தும் மயக்கம் தெளியாது போகவே அடுத்த இருதினம் மருத்துவமனையிலிருந்தாள்.
ஒரு வாரம் விடுப்பை நீடித்திருந்தான் டேனி. மருத்துவமனையிலிருந்த ஷாலினியை வீட்டிற்கு அனுப்பிவிட்டு.. அமர்ந்திருந்தான், சுதா கண்விழிக்க.
டேனியின் தோழன் வந்தான். “மச்சான்.. டி,என்.ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்திடிச்சு டா. சிஸ்டர் உன் தங்க தான்” என்றான் படுக்கையில் கிடந்தவளை பார்த்து. தெரிந்த விடயம் தான். இருந்தும் உள்ளுக்குள் ஏதோ செய்தது.
கசங்கிக் கிடந்த போர்வை போல் கிடந்தவளை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான். சரியான நேரத்திற்குச் சரியான இடத்தில் அவர்கள் இருக்கவே இன்று சுதா உயிரோடு. ஜான்சி கால் பிசகாமலிருந்திருந்தால்… அவன் இந்தியா வந்திருக்கவும் மாட்டான்.. சுதா என்ற அவன் தங்கையைக் கண்டிருக்க முடியாமல் போயிருக்கும். வாழ்க்கை இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கின்றதோ?
கோவில் அடைய ஐந்து படிகள் இருக்கையில் மனைவியைப் படியில் இறக்கியவன்.. “இதுக்கு மேல என்னால முடியாதுடி செல்லம்” என்று இடுப்பை பிடித்துக்கொண்டு நிற்கவும்.. எங்கேயோ பார்த்துக்கொண்ட ஒரு சிறுவன் படியில் சருக்கி விழ போக.. இரண்டே எட்டில் அவனைப் பிடித்து,
“டேய் வழிய பார்த்து நட டா.. கீழ விழுந்தா இருநூறு படிக்கும் மேல.. எலும்பு நொறுங்கிடும். இப்பிடி கருப்பு கண்ணாடி போட்டுட்டு படி இறங்குவியா நீ?” என்று அவளைக் கேட்காமலே அன்று மலை படியிலிருந்து கீழே விழ இருந்தவளைப் பிடித்து நிருத்தி, அவள் கண்ணாடியை உருவி அவளிடம் நீட்டியவனிடம் முகம் பார்க்காமல் “சாரி சர்” என்ற பின் தான் தெரிந்தது அது ‘டேய்’ இல்லை ‘டி’ என்று!
சிறுவன் என்று நினைத்துவிட்டான்… காரணம் அவள் உருவமும் அவள் அணிந்திருந்த உடையும். பதினைந்து வயது சிறுவனின் தோற்றம்.. முடியும் அப்படி தான் வெட்டியிருந்தாள். பாய் கட்! காதில் கண்ணுக்குத் தெரியாத அளவு சிறிய வைரத் தோடு. வெளிர் ஜீன்ஸ்.. வெள்ளை சட்டை முழங்கை வரை மடித்துவிடப் பட்டிருந்தது. நெற்றி மறைத்த தொப்பி… முகம் பாதி மறைத்த கருப்பு கண்ணாடி, முதுகில் ஒரு சிறு பை!
“அண்ணா..” சத்தம் கேட்டுத் திரும்பி பார்த்தான். கண்விழித்து விட்டாள். அவளிடம் பேசவேண்டும். வீட்டில் கண்டிப்பாகத் தனிமை கிடைக்காது.
“என்ன ஆச்சு சுதா? ஏன் இப்படி இருக்க? உடம்புக்கு ஒன்னும் இல்லனு டாக்டர் சொல்றாங்க… உன் மனசுக்கு என்ன பிரச்சினைனு சொன்னா தான் தெரியும் டா.” கைபிடித்து வாஞ்சையாய் முகம் பார்ப்பவனிடம் என்ன சொல்ல?
“இல்லண்ணா.. ஒன்னும் இல்ல! ஒரு டெத்.. மனசு சரி இல்ல.. இப்போ ஓகே..” என்றாள். பேச்சில் ஜீவனில்லை. ‘யார் இறந்தது என்று கேட்டுவிடாதே அண்ணா.. அது நான் தான்’ வறண்டத் தொண்டை வலித்தது. கண் பனித்தது.
அவள் கேட்காமலே தண்ணீர் கொடுத்தான்.
“உனக்கு தோணும் போது சொல்லு! டைம் எடுத்துக்கோ. ஆனா சொல்லித் தான் ஆகனும்! நீ என் பொறுப்பு சுதா.. எனக்கு உன்ன பத்தி எல்லாம் தெரியணும் புரியுதா? திடீர் உறவுனு நினைச்சு என்னைத் தள்ளி வைக்காத! நீ எனக்கு பொக்கிஷம்.. புரியுதா? உன் சந்தோஷம் எனக்கு ரொம்பவே முக்கியம்” என்றான் கண் பார்த்து.
ஆழமான உரிமைப் பார்வை. நான் உன் அண்ணன் என்ற பார்வை. உண்மை வேண்டும் என்ற பார்வை. அவள் கண்ணுக்கு அவன் அப்பாவாகத் தெரிந்தான். அவனிடம் எத்தனை நாள் உண்மையை மறைக்கமுடியும் தெரியவில்லை.
“ம்ம்ம்” என்று தலையாட்டி வைத்தாள்.
அவன் கை பிடித்து அருகில் கட்டிலில் இருத்திக்கொண்டாள். அவன் தோள் சாய்ந்து..
“நீங்க நம்ம அப்பா மாதரியே இருகீங்கண்ணா..” என்றாள். இருக்கும் வலியில் மனதில் எங்கோ ஒரு ஓரத்தில் அப்பாவிடம் வந்துவிட்ட நிம்மதி.
“அம்மா.. அப்பா?” இதயம் துடிக்க கேட்டான்.
“இப்போ இல்லண்ணா..” அதே ஜீவனில்லா வறண்டப் பதில்.
தோளோடு இறுக அணைத்துக்கொண்டான்.
‘இல்லையா?’ உள்ளுக்குள் ஒரு ஏமாற்றம். அழுகை வந்தது. பார்த்தது இல்லை.. பேசியது இல்லை.. ஏன் நான்கு நாள் முன் வரை அப்படி ஒரு உறவு இருந்தது கூட தெரியாது. இன்று? அவர்கள் இல்லை என்றதும் மனம் கனத்தது.
வீடு வரும் வரை அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
அவள் மௌனம் தொற்றுநோய் போல் வீட்டினரை தொற்றிக்கொண்டது. அவனும் ஜான்சியும் மட்டும் தேறியிருந்தனர். நான்கு நாளுக்கு பின் ஏன் திடீர் என்று?
வீட்டின் ஒவ்வொரு மூலையில் ஒவ்வொருவர். அனைவர் முகத்திலும் வருத்தம் குடிகொண்டிருந்தது.
டேனியின் மடியில் முகம் புதைத்து அழுது கொண்டிருந்த அனித்தாவை சமாளிப்பது சற்று கடினமாகவே இருந்தது. என்ன சொல்லியும் சமாதானம் செய்ய முடியவில்லை.
“அனிமா.. என்ன டா.. இப்போ எதுக்கு இப்படி அழுர? நான் என்னைக்கும் உன் அண்ணன் தான் டா..”
“ஆனா எனக்கு மட்டும் இல்லையே..”
‘உனக்கு மாடும் அண்ணனாய் இருப்பேன்’ என்று எப்படி கூறுவான், சுதாவைப் பார்த்தபின்!
அன்று கண்களில் குளமாயிருந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டே.. “சாரி சர்..” துக்கம் தொண்டையை அடைக்க ஒருவழியாய் சொல்லிவிட்டு அவனைப் பார்த்து உறைந்து நின்றவளுக்குப் போக்கிடம் இல்லையே.
அண்ணனாய் தான் இருக்க, ‘யாருமில்லண்ணா’ என்று அனாதையை போல் நிற்பவளுக்கு ‘நான் இருக்கிறேன் உனக்காக’ என்று அவன் நிற்க வேண்டாமா..? அவன் டேனி! அப்படி எல்லாம் அவளை விட மாட்டான். விடவுமில்லை.
காரியங்கள் இப்படி இருக்க.. எப்படிக் கூறுவான்.. ‘நான் உனக்கு மட்டும் தமையனாயிருப்பேன் என்று?’
‘அண்ணா’ என்றல்ல… அவளின் முதல் அழைப்பே ‘அப்பா’ என்பது தான்.
“நீ ஏன் அப்படி நினைக்கர அனி..? உனக்கு இப்போ ஒரு அக்கா.. ஒரு அண்ணன்.. அப்படி நினை டா..”
என்ன சொல்லியும் அவள் விசும்பல் அடங்கவில்லை. அவள் அண்ணனைப் பங்கு போடுவதா? வேண்டுமென்றால் அம்மா அப்பாவை உரிமை கொண்டாட்டும்.. அண்ணை பங்குபோட அவள் தயாராக இல்லை.
இப்பொழுது தான் ஒருவழியாய் அவன் அம்மாவை சமாதானப் படுத்தி வந்தான்.. “மா பெத்தா தான் பிள்ளையா.. உங்க வயத்தில பிறக்காட்டி நான் உங்க மகன் இல்லனு ஆகிடுமா? நீங்க தான் மா… நீங்க மட்டும் தான் மா எனக்கு.. ப்ளீஸ் மா அழாதீங்க. நீங்க மட்டும் என்னை உங்க மகனா வளர்க்கலைனா நான் எங்கையாவது பிச்சை எடுத்திட்டு இருந்திருப்பேன் மா..
அவங்க வேணும்னா என்னை வயத்துல சுமந்திருக்கலாம்.. ஆனா நீங்களும் அப்பாவும் உங்க நெஞ்சுல இன்னுமே சுமதுட்டு இருகீங்களே.. மா இத விட எனக்கு வேற என்ன வேணும்..”
என்ன சொல்லியும் அழுகையை நிறுத்தாதவர், “மா.. பசிகுது மா.. அழுகையை நீங்க எப்போ நிருத்தி எப்போ சமைச்சு எப்போ எனக்கு சாப்பாடு தர போறீங்க?” என்றதும் முகத்தைக் கழுவி மகனுக்குப் பிடித்ததைச் சமைக்கச் சென்ற தாயைப் பார்த்தவனுக்கும் கண்கள் கலங்கத் தான் செய்தது.
எப்படி எல்லாம் பாடு பட்டு வளர்த்தார்கள். இன்று பெற்றவர்கள் இவர்கள் இல்லை என்று தெரிந்ததும் மனம் ஏனோ வலிக்கத் தான் செய்தது. உரிமை கொண்டாட அவன் பெற்றவர்கள் உயிரோடு இல்லை தான்… இருந்தாலுமே ‘மகன் மனதில் தங்களுக்கான இடம் போய்விடுமோ’ என்ற எண்ணமே இவர்களுக்கு கசந்தது. திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தவர்களுக்கு வரமாய் கிடைத்தவன் அல்லவா?
அவர்கள் திருமண நாளன்று அனாதை இல்லத்தில் பிள்ளைகளுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தவர் புடவையை யாரோ இழுக்க, குனிந்து பார்க்க அங்கு அவரை பிடித்துக்கொண்டு நின்றிருந்தான் அவர்கள் டேனியேல்!
“ஹாய் குட்டி பைய்யா.. என்ன வேணும் உங்களுக்கு” என்று பூந்தளிரை எடுத்து உச்சி முகரவும், அவன் தளிர் கரம் நீட்டி அவர் முகம் வருடி, “ம்மா!” என்றதுமே அவர் கண்கள் பனித்து விட்டது. தன்னை முதல் முதலாய் ‘அம்மா’ என்றழைத்த பூந்தளிர் அவர்கள் டேனி! செக்கச்செவேல் என்று தேன் கலந்த பச்சை கண்கொண்டு அவரை மயக்கி விட்டான்.. ஒற்றை வார்த்தையில்.
அன்று அவர் இல்லம் விட்டு வரும் வரை அவர் இடை விட்டு அவன் இறங்கவும் இல்லை. ‘ம்மா’ என்ற அழைப்பை நிறுத்தவும் இல்லை. ‘வந்த அன்றிலிருந்து யாரிடமும் ஒட்டாத பிள்ளை உங்களைக் கண்டதும் ஒட்டிக் கொண்டதே’ என்று அங்கிருந்த மதர் கூட ஆச்சரியப் பட்டார்.
மாலை அவர் கிளம்பவும் அவன் அழுகையை யாராலும் நிறுத்த முடியவில்லை. வீட்டில் வந்த ஷாலினியும் உறக்கம் இழந்தார். பின் அடுத்த நாளே கணவனும் மனைவியுமாய் இல்லத்திற்குச் சென்று அவனை மகனாய் தத்தெடுக்கும் முறையில் ஈடுபாட்டனர்.
அவனுக்காக ஊர் மாறி, அவர்கள் சொந்தங்களுடன் பல வருடம் தொடர்பில்லாமல் தனித்து வசித்தும் வந்தனர். யாராவது ஏதாவது சொல்லி மகனின் மனதை உடைத்துவிட கூடாதே என்று!
சுதாவை வீட்டிற்கு அழைத்து வந்தாலுமே ‘தெரிந்த பெண்’ என்றதோடு நிருத்தி கொண்டான். 
இன்று காலை அவன் நண்பன் மரபணு மூலம் சுதா-டேனி உறவை உறுதி படுத்த..  அவன் அப்பா-அம்மாவிடம் ‘எப்படி’ என்று கேட்கவும் அவனுக்கு எல்லா விபரமும் சொல்லப்பட்டது. அனிக்கு இப்பொழுது தெரியவேண்டாமென்று நினைக்க, அவள் எல்லாவற்றையும் கேட்டிருந்தாள்.
இதோ இப்பொழுது அவன் மடியில் முகம் புதைத்து..
“ஜான்சி இங்க வந்த பிறகு நான் உனக்கு அண்ணனா இருக்க மறந்தேனா?”
“ம்ம்ஹும்!”
“அப்போ சுதா இங்க வந்ததும் நான் மாறிடுவேனு நீ ஏன் நினைக்கனும்?  அண்ணா கிளம்பனும். உன் அக்காக்கு நாம என்ன செய்யரதுனு யோசிக்க வேண்டாமா? இங்க தான் இருக்க போரான்னா, நீ தானே அவளை பாத்துக்கனும்.. எழுந்திரு.. போய் அவ கிட்ட பேசி பழகு!  பழகி பாரு.. உனக்கும் பிடிக்கும். அவளுக்கு இது புது இடம் நீ தான் பார்த்துக்கனும் உன் அக்காவ..போ..”
ஒருவாறு பேசி பேசி அனியையும் சரி படுத்தி அனுப்பி வைத்தான்.

Advertisement