Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 63_3
ஏற முடியாமல் படி ஏறிக்கொண்டிருந்த மனைவியை முறைத்துக் கொண்டிருந்த டேனியிடம், “இப்போ எதுக்கு என்னை சைட் அடிசுட்டே இருக்கீங்க” என பத்து படி கூட ஏற முடியாமல் படி ஓரம் அமர்ந்துகொண்டு தன் கணவனை ஏறிட்டாள் ஜான்சி.
“உன் ஃப்ரெண்டு, யாரும் கல்யாணத்துக்கு வர கூடாதுனு இங்க மேரேஜ் வச்சிருக்காளா?”
“ப்ச்.. ஏதோ வேண்டுதலாம்! அதுவும் மாப்பிள்ளை ரொம்ப பெரியாளு போல. மீடியாக்கு விஷயம் தெரியகூடாதுனு நிறையப் பேருக்குச் சொல்ல கூட இல்ல. வெறும் நெருங்கிய உறவு மட்டும்னு சொல்லிட்டார். சோ கூட்டம் கூட இருக்காது”
“பிக் ஷாட்னா.. எதுக்கு இங்க? அவருக்கு வேற இடமே கிடைக்கலியா? இந்த காலத்திலும் இது என்ன வேண்டுதலோ? யாரும் ஏறக் கூட முடியாத மலை மேல. அவ வீட்டாளுங்க தான் அப்படினா.. அவராவது வாய் திறந்திருக்கலாம்!”
“ஏனோ.. அவருக்கு இஷ்டம் இல்ல போல.. இவ ஒரு லூசு! பாக்க அவ்வளவு அழகு. இவளுக்கா வேற மாப்பிள்ளை கிடைக்காது? பெட்ரோமாக்ஸ் லைட் தான் வேணும்னு நிக்குறா!”
“என்னாடா ஜானு பேசர? ஏதாவது எனக்கு புரியனும்னு தான் பேசரியா?” அவன் விழிக்க
“வாங்க போவோம்..” என்று எழுந்துகொண்டே சிரிக்க மட்டுமே செய்தாள்.
“படி ரொம்ப ஸ்டீப்பா இருக்கு ஜானு… கண்டிப்பா போகணுமாடா?”
“இது என்ன கேள்வி… இங்க வரைக்கும் வந்தாச்சு இன்னும் கொஞ்சம் மேல தான்.. வாங்க!”
“மேடம் பத்து படி தான் ஏறியிருக்கீங்க! நீ போர ஸ்பீடுக்கு இன்னைக்கு போய்க்க மாட்டோம், ஆண்டவா.. சக்தி கொடு” என்று ராகமாய் பாடிக் கொண்டே அவளைக் கையில் ஏந்தி கொண்டு கவனமாய் படி ஏற ஆரம்பித்தான்.
இங்கு வருவதற்கு எப்படி எல்லாம் அவள் கணவனோடு கெஞ்ச வேண்டியதாய் போயிற்று! வளைகாப்பன்று பிருந்தாவிடம் கேட்டாள் திருமணம் பற்றி. அவள் முடிவில் மாற்றமில்லை என்றபின் என்ன செய்ய முடியும்?
முன்னிரவு கணவன் தோள்வளைவில் படுத்திருந்தவள், அவன் வெற்றுமார்பை அளைந்துக் கொண்டே, “என்னங்க..” என்று மெதுவாய் பேச்சை ஆரம்பித்தாள்.
பாதி தூக்கத்தில், “ம்ம்..” என்றவனிடம் “நானும் அருணாவும், பிருந்தாவும் சின்னதுல இருந்தே ரொம்ப க்ளோஸ் ஃபிரண்ட்ஸ் தெரியுமா?” என்றவளிடம்
“டேய்.. ரொம்ப டையர்டா இருக்கு டா.. உன் பழைய ஃப்ரெண்ஷிப் பத்தி இப்போவே சொல்லணுமா?” அலுத்துக் கொண்டான்.
பட்டென்று அவன் நெஞ்சில் அடிக்கவும்
‘ஏன்?’ என்பது போல் பார்க்க,
“ஒரு பத்து நிமிஷம் முன்னை வரைக்கும் டையர்டு இல்ல… இப்போ நான் பேச ஆரம்பிச்சதும் தூக்கம் வருதோ? நாளைக்கு நைட் எனக்கு டையர்டா இருக்கும் சொல்லிடேன்” அவள் சீன் விட…
எழுந்து அமர்ந்து கொண்டவன், “இல்ல டா செல்லம்..  நீ சொல்லு உன் முழு கதையை.. நீ பிறந்து வளர்ந்து.. அவங்களோட பேசின எல்லாத்தையும் ஒன்னுவிடாம சொல்லு! பாரு எனக்கு தூக்கமே வரல” என்றான் அவளைப் பார்த்து வெட்கமே இல்லாமல்.
‘அது!’ என்ற பார்வையை வீசி.. “படுங்க என்ட்ட” என்று மீண்டும் அவன் தோளில் படுத்துக்கொண்டே.. அவன் மார்பில் கோலமிட்டவள், “என்னங்க.. பிருந்தா கல்யாணம்..” என்றாள்.
கடியானவன், “ஜானு… இதுக்கு நூறு தரம் நான் ‘நோ’னு பதில் கொடுத்துட்டேன். இன்னும் எதுக்கு அத பத்தியே பேசர? மலை மேல இருக்கு. இருநூறு படி கிட்ட இருக்கு. தயவு செஞ்சு புரிஞ்சுக்கோ!”
“ப்ளீஸ்ங்க.. அவ ரொம்ப போராட்டம் பண்ணி இந்த கல்யாணம் பண்ணிக்க போரா.. நானும் அருணாவும் அங்க இருக்கணும்! ப்ளீஸ்!”
“என்ன விளையாடுறீயா நீ? உன் கால் இன்னும் சரி ஆகலனு எனக்குத் தெரியும். நீ நடக்க சிரம படுரது எனக்கு தெரியாதுனு நினைசுட்டு இருக்கியா? சும்மா கலட்டா பண்ணாம பேசாம படு. வயத்தில பிள்ளையை வச்சுக்கிட்டு கொஞ்சமாவது உனக்கு உன் மேல அக்கர இருக்கா? இந்த ஒரு விஷயத்திலயாவது என் பேச்ச கேக்க மாட்டியா நீ?”
முதல் முறை அவளிடம் கோபமாய் பேசிய கணவனை பார்த்துக் கொண்டிருந்தவளுக்குக் கண் தன்னால் கலங்க ஆரம்பித்தது.
அவனுக்கு முதுகை காட்டிக் கொண்டு படுத்துக் கொண்டாள். அடுத்த நாள் விடிந்ததும் அவன் முகம் பார்க்காத மனைவியைப் பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளிடம் இரங்கி, “சரி.. போகலாம். ஆனா உன்னால முடியாட்டா.. கீழ இறங்கிடனும். அங்க வச்சு அடம் பிடிக்கக் கூடாது. எனக்கு நீயும் என் குழந்தையும் தான் முக்கியம். ஒத்துகிட்டா போகலாம்..”
அவன் சொல்லி முடிக்கும் முன் அவனைக் கட்டிக் கொண்டு அவன் ‘சரி போதும் விடு’ என்று கூறும் வரை முத்த மழை பொழிந்தாள்.
“இன்னொன்னு.. பட்டுப் புடவை கூடாது. சல்வார் போட்டுகணும்!”
எப்படியோ போனால் போதுமென்று அவன் சொன்னதிற்கெல்லாம் தலையாட்டி வைத்தாள்.
எப்படியும் திருமணத்தை அவள் பார்க்கப் போவதில்லை என்பதை அறிந்திருந்தால் இதனை முத்தம் கொடுத்திருக்க மாட்டாளோ? கொடுத்திருப்பாள்! முத்தங்களுக்குக் காரணங்கள் தேவையில்லை!
ஜான்சி எதிர்ப்பார்க்காத தருணம் மனைவியை கையிலேந்தியவனை பார்த்தவள்,
“என்னங்க பண்றீங்க? பப்ளிக் ப்ளேஸ்ல இது என்ன வேலை?”
“என்னமோ கட்டிலுக்குத் தூக்கிட்டு போர எஃபெக்ட் குடுக்கர?”
“அச்சோ… என்ன பேச்சிது.. யார் காதுலயாவது விழுந்து தொலைக்க போகுது!”
“ஈ காக்கா இல்ல… இதில மனுஷனுங்கள எங்கத் தேட..?”
“ரொம்ப பேசரீங்க! கீழ விடுங்க… பாக்கிரவங்க தப்பா நினைக்க போராங்க!”
“கழுத்த பிடிச்சுக்கோ.. என் பொண்டாட்டி நான் தூக்குறேன்.. எவன் என்னை கேட்க்கரது?”
“சரி.. கடைசி பத்து படி கிட்ட இறக்கி வீட்டுடனும்.. இந்த அருணா கண்ணுல மாட்டினா.. என்ன ஓட்டி தீர்த்திடுவா.. சரியா?”
“இப்போவே என் இடுப்பு உடஞ்சிடும் போல இருக்கு.. அரிசி மூட்ட! கடைசி பத்து படி வரை தூக்கணுமா உன்ன? நான் கூட பத்து படியிலேயே இறங்கி நடக்க ஆரம்பிச்சிடுவனு நினைச்சேன்.. நீ என்னடானா..”
இருவரும் பேசிக்கொண்டே வர அங்கு கோவிலில் தாலி காட்டும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது.
மேடையிலிருந்தவர்கள் கையில் அட்சதை கொடுக்கப்பட்டது. கண்ணனின் கண் கூட்டத்தில் யாரையோ தேடிக்கொண்டிருப்பதைப் பார்த்த சுதாவால் நிற்கமுடியவில்லை. அவன் தவிப்பும்.. அவளுக்கான தேடலும் அவளை கலங்கடித்தது. அவளுக்குத் தெரியும், அவள் இல்லாமல் அவனால் வாழவே முடியாதென்று.
அவனிடம் செல்ல இதயம் துடிக்க, கால்கள் மேடையை நோக்கிச் சென்றுவிடவா என்று கெஞ்ச.. அதற்குமேல் அப்படியே கல்லாய் நிற்க முடியவில்லை.
“நீங்க எல்லாம் என்ன தான் செய்யறீங்களோ தெரியலை. உங்களுக்கு உங்க மகன் வேண்டாம்னு முடிவு பண்ணிடீங்களா? ஏன் அவர் இவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆகர அளவுக்கு அவருக்கு பிரஷர் கொடுக்கரீங்க? அவர் ப்ளட் ப்ரெஷர் எவ்வளவு ஹைய் தெரியுமா? ஏன் இவ்வளவு அஜாகரதை? அவர் நார்மலா இருக்கார்… ஏதோ ஒரு விஷயம் அவர ரொம்பவே பாதர் பண்ணுது.. அத மட்டும் அவர் கண்ணுல காட்டாம இருக்க ஏன் உங்களால முடியலை. தப்பா நினைக்காதீங்க மிஸ்சஸ்.சுசிலா… ஒரு இதயத்துக்கும் மூளைக்கும் இவ்வளவு தான் லிமிட்டுனு ஒரு கணக்கு இருக்கு… அந்த லிமிட்டை புஷ் பண்ணாதீங்க!..” தலைமை மருத்துவர் அன்று சுசிலாவிடம் கூறிக்கொண்டிருந்ததை மீண்டும் நினைத்துக்கொள்ள கால் நின்ற இடத்தில் வேரூன்றி நின்றுவிட்டது.
“கொஞ்ச நாள் கஷ்டமா தான் இருக்கும். அப்பரம் இது தான் வாழ்க்கைனு பழகிடும். நீங்களும் மனைவி குழந்தைனு நல்லா வாழுவீங்க! ஆண்டவனைத் தினமும் வேண்டுவேன்.. என் நினைவு உங்களுக்கு வரவே கூடாதுனு! நான் உலகில எங்க போனாலும் உங்க நினைவா வாழ்வேன். என்னைக்காது உங்க நினைவு திரும்பினா… நான் எப்படி இருக்கேன்னு பார்க்க நீங்க என்னை தேடி வந்தா.. நான் சந்தோஷமா இருக்கேனு உங்களுக்கு ஒரு நிம்மதி கொடுக்கவாது உயிரோட வாழுவேன். நீங்க சந்தோஷமா இருந்தா அது தான் என் நிம்மதியும் கூட. அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா… ஊரறிய கல்யாணம் பண்ணி.. ஆயுசு முடியர வரைக்கும்  ஒன்னுக்குள்ள ஒன்னா வாழலாம்.” அவனோடு பேசுவதாய் எண்ணி, மனதோடு பேசிக்கொண்டாள்.
அவள் ஆசைகள் எல்லாம் நிராசையாய் அடங்கியது. நினைத்தாலும் அருகில் செல்லமுடியா தூரத்தில் அவள் கண்ணன். இருகண்ணிலும் குடியிருந்த கண்ணனின் உருவம் மங்க.. கண்ணீரோடு கரைந்தது அவர்கள் காதல் ஓவியம்! அவன் கரைந்து போகாமல் இருக்க வந்த அழுகையை இழுத்து பிடித்துக்கொண்டாள். திருமண வீட்டில் அழுவதா?
எந்த காதல் அவர்கள் ஒன்று சேர காரணமாய் இருந்ததோ… அதே காதல் இன்று இருவரையும் பிரித்தது. ஊமையாய் போனாள்.. அவள் காதல் கணவனுக்காய்.
பொங்கி வழியும் காதல் வைத்து என்ன செய்ய? அவளோடு அவனுக்கு வாழ்வு இல்லை… அவனாவது உயிரோடு வாழட்டுமே.. அவள் கண்ணனுக்காக எடுத்த முடிவு இது. அவனுக்காக, அவன் நல்வாழ்விற்காக மட்டுமே!
40 வாரம் தான் பிள்ளையைச் சுமக்க முடியும்… அதை உள்ளுக்குள்ளேயே தக்க வைக்க நினைத்தால்.. மண்ணை பார்க்கும் முன் பிஞ்சு விண்ணைக் கண்டுவிடும். வலிக்க வலிக்கப் பிரசவிப்பது அதன் சிரிப்பைக் காண! அதன் உயிர் காக்க!
சுதாவும் அஷோக்கை உள்ளே வைத்து மூச்சு திணற வைக்க விரும்பவில்லை. வலிக்க வலிக்க அவனை விட்டுவிட்டாள்.. அவன் உயிர்வாழ. அவள் காதல் சுயநலம் இல்லாதது. கண்ணனுக்காக எதுவும் தாங்குவாள் எதையும் செய்வாள்… அவனையுமே பிரிவாள். அது அவள் உயிர் பிரிவதற்குச் சமமாய் இருந்தாலும்!
ஆறு வாரப் பிரிவுக்காய் சண்டை போட்டாள்… இன்று ஒரேயடியாய் பிரியப் போகிறாள்… சண்டை போடாமலே… ஒருவித விரக்தி நிலையை அடைந்துவிட்டதாலோ… கல்லாய் சமைந்து நின்றாள். உணர்வுகள் மரத்து போனதா? இல்லை.. மரத்துப் போயிருந்தால் நலமாய் இருந்திருக்கும்.
அடுத்து என்னவென்று அவளுக்கு தெரியாமலில்லை. தாலியை எடுத்துக் கொடுக்க குடும்பத்தில் மூத்தவர் அழைக்கப்பட்டார். அவர் மேடையை நோக்கி வர, பிருந்தாவின் பார்வை அவளையே பார்த்தபடி முன்னிருக்கையில் அமர்ந்திருந்தவன் மேல் விழுந்தது.
முதல் வரிசையில் பிருந்தாவிற்கு நேரே அமர்ந்திருந்தான் ஜீவா. கண்கள் பனித்திருந்தது. அவனுக்கு பார்த்தே ஆகவேண்டும்.. அவள் மற்றவனுக்கு மனைவியாய் போவதை. அதை பார்த்தால் மட்டுமே அவளை அவன் வாழ்வை விட்டு பிரிக்க முடியும். பேசி சிரித்து பழகி புரிந்து காதலிக்கவில்லை தான். பிருந்தா அஷோக்கை எப்படி காதலித்தாளோ அதே போன்ற மௌனமான காதல் இது. இதயம் துடிக்கக் கையை மார்புக்குக் குறுக்காய் கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். இதயம் மருத்துவனால் இதயத்தைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை. அதன் துடிப்பை அடக்கவும் முடியவில்லை. வலியைக் குறைக்கவும் முடியவில்லை. அவனால் விழியை இமைக்க முடியவில்லை. பாவம் எதுவுமே அவனால் முடியவில்லை!!
நினைத்ததை விடக் கொடுமையாய் உணர்ந்தான். எழுந்து சென்றுவிடலாமா என்று கூட தோன்றியது. இது தான் கடைசி. இனி அவளை இப்படிப் பார்க்கும் உரிமை அவனுக்கு இருக்கப் போவதில்லை. அதனாலேயே கண்ணிமைக்காமல் அவளையே பார்த்து அமர்ந்திருந்தான். அவன் வராமல் இருந்திருந்தால் பிருந்தாவிற்கு ஒன்றும் தோன்றியிருக்காது. அவன் சிவந்த முகம், அதிக இறுக்கத்தால் இன்னும் சிவப்பேறி.. அவன் கூர் விழி பனித்திருக்க.. அவன் முகபாவம் அவளைக் கொல்லாமல் கொன்றது. அவன் கண் அவன் வலியைப் படம்பிடித்துக் காட்டியது. அவனிடம் மன்னிப்பை கூட அவள் கேட்டிருக்கவில்லை. அவள் தெரிந்தோ தெரியாமலோ ஆறு மாதம் அவன் மனதில் ஆசையை வளர்த்தவள். அசையாமல் கல்போல் சமைந்திருந்தாள்.
அவனருகே அருணாவின் கணவன் இருந்தான். கால் மேல் கால் போட்டுக்கொண்டு.. எதையுமே பொருட்படுத்தாமல் கையிலிருந்த கைப்பேசியை நோண்டிக்கொண்டே.. அடுத்து அருணா! அவளைப் பார்க்கவே பிருந்தாவிற்கு பயமாய் இருந்தது. கண்ணெதிரே சிதைந்து போன வாழ்க்கையோடு ஒருத்தி இருந்தும் அறிவில்லாமல் அமர்ந்திருப்பவளை எந்த வகையில் சேர்பது?
காதலோடு அவளை பார்த்துக்கொண்டிருப்பவனை விட அவளருகில் யாரையோ தேடிக்கொண்டிருக்கும் அஷோக்கோடு ஒரு வாழ்க்கையை ஏன் விரும்ப வேண்டும்? இந்த வாழ்க்கை இருவருக்கும் நரகம் ஆகிவிடுமோ? ஏதேதோ எண்ண அலைகள். அஷோக்கைப் பார்த்தாள்… அவன் கண்ணில் அப்படி ஒரு வலி. எதையோ தொலைத்த வலி! காதல் இல்லை! நூறு சதவீதம் அவள் மீது காதல் இல்லை! இன்னும் அவன் தான் வேண்டுமா? மூளைக் கேட்டது. இதயம் என்ன சொன்னதோ?
அவளுக்கானவன் கீழே தவமிருக்க… அவள் தவம் ஏன் இவனிடம்? எதற்கு இந்த பிடிவாதம்? சொன்னானே ஜீவா.. “உன் கழுத்தில வேற ஒருத்தன் கையால தாலி ஏறும் வரை நான் உன்ன காதலிச்சிட்டே இருப்பேன். அப்படி நீ எனக்கில்லாம போய்டா… என் வாழ்க்கையை நான் தனியா தான் கழிப்பேன். கண்டிப்பா அதில வேற யாருக்கும் இடம் இல்ல” என்று. அவனைப் பார்க்க பார்க்க கிலி பரவியது. உண்மையிலேயே அவன் அவளுக்காக அவன் வாழ்வை கெடுத்துக்கொள்வானா? தான் என்ன செய்யவேண்டும்? ஜீவாவை பார்ப்பதைத் தவிர்த்தாள். இப்போதைக்கு அவளுக்கு அது மட்டும் தான் தோன்றியது!
மேடைக்கு வந்த பெரியவர் தாலியை எடுத்து அதைச் சரி பார்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டு தெய்வத்திடம் பிராத்திக்க… அஷோக் கையிலிருந்த கைக்குட்டையை விரித்து இருக்கைகளாலும் முகத்தைத் துடைக்கும் பாவனையில் மூடிக்கொண்டான். கண்ணை முழுபலம் கொண்டும் அழுத்திக் கொண்டான். கைக்குட்டை ஈரமானது. முகத்திற்கும் கைக்குட்டைக்கும் நடுவே அவன் உணர்வெல்லாம் வடிந்தது. அவன் சாவுக்கு அவனே அழுது கொண்டான். “என்னை விட்டுடியே லட்டு!” இதயம் குத்தி கிழிந்து வலியில் துடித்தது.
தாலி கட்டும் வேளை நெருங்க, பாதை இரண்டாய் பிரியப் போகும் தருணம். இனித்த கனவு முடிந்து நிஜ வாழ்வைக் கடக்க வேண்டிய தருணம். காதல் கள்ளில் திளைத்த இரு இதயங்களும் கண்ணீர் கடலில். என்னதான் விட்டு கொடுக்க முடிவெடுத்தாலும், அவள் கழுத்தில் தாலியிட்டு முறைப்படி மணந்தவன் ஆகிற்றே.. அவள் கணவன் வேறொருத்தி கழுத்தில் தாலி கட்டுவதை பார்க்கும் தைரியம் வரவில்லை.
இதற்கு மேல் அங்கு நிற்கும் சக்கி இல்லை. தடம் தெரியாமல் அவன் வாழ்விலிருந்து மெதுவாய் செல்ல ஆரம்பித்தாள்.
வலிக்கும் என்று தெரிந்தே பிரிந்தாள் தான். ஆனால் இப்படியும் வலிக்குமா என்று எண்ணுமளவிற்கு இதயம் அழுத்திப் பிசைந்து வலித்தது. இதயத்தை வெளியே எடுத்து விட முடியாதா என்று  யோசிக்கவைத்தது அந்த வலி.
அவள் காணாத வேதனையா? சில மாதம் முன்பு தானே அவள் எலும்புகள் நொறுங்கி சதைகள் கிழிந்து இரத்தம் வழிந்தது! அன்றும் வலித்ததே!! கை விரல் கூட அசைய மறுத்த வலி அது. ஆனால் இன்றைய வலி… இது வேறு. இதைத் தாங்கும் சக்தி இருப்பதாய் அவளுக்குத் தெரியவில்லை. அவள் ஆயுள் ரேகை கொஞ்சம் கொஞ்சமாய் அழிவது போல்.. உடலை விட்டு உயிர் பிரியும் வலி இது!
இதயம் விட்டுவிட்டுத் துடிக்கக் கால் நடுங்க சென்று கொண்டிருந்தவளை அழுதுவிடு எனக் கண்கள் கெஞ்சியது. என்னைக் கொன்றுவிடு இறைவா என மனம் ஓலமிட்டது. அதன் சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்டது.
கண்ணனைப் பிரியவே மாட்டேன், கண்ணனின் அன்றில் நான்.. என்று நினைத்தவள் இதோ போகிறாள். அவள் உயிரைக் கொஞ்சம் கொஞ்சமாய் பிரிந்து வெறும் கூடாய் போகிறாள். மானைப் போலத் துள்ளிக் குதித்த கால்கள் நகர மருத்தாலும் அதையும் இழுத்துக்கொண்டே போகிறாள். ஒன்று மட்டும் நிச்சயம் இனி சுதாவின் வாழ்க்கை முன்னை போல இருக்கப் போவதில்லை.
அன்றில் என்ன வித்தை வைத்திருந்ததோ.. நினைத்ததும் உயிரை விட்டது. இவளுக்கு அது தெரியவில்லை. அவளாய் உயிரை போக்கவும் போவதில்லை. அந்த இரத்த கரை கண்ணன் மேல் சுமந்துவிட்டால்?
ஒரு விஷயம் மீண்டும் மீண்டும் நடக்க.. அது மரத்துப் போக வேண்டாமா? அவளுக்கு இழப்புகள் புதிதல்ல… பார்த்துவிட்டாள் ஏராளமான இழப்புகளை… இன்னும் இதயம் மரத்துத் தான் போகவில்லை. மரண வலியை உயிரோடே அனுபவித்துச் சென்றாள்.
மலை இறங்கப் படி அருகில் அவள் வரவும் ‘கட்டி மேளம், கட்டி மேளம்’ என்று ஆர்ப்பரிக்கும் சத்தம் ‘எல்லாம் முடிந்தது பெண்ணே’ என்று அர்த்தம் கொடுக்க.. கண் அருவியாய் மாற.. மேடை பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டே படி இறங்க, கால் சருக்க.. ‘அப்பா… என் கதை இன்றோடு முடிந்தது’ என்ற நிம்மதி அவளையும் கேட்காமல் மனதில் எழுந்தது.

Advertisement