Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 63_2
மேடையின் பின் பாட்டி சுசுலாவிடம் ஏதோ சொல்ல… சுசுலாவிற்குக் கேட்கவில்லை போலும். சற்று குரலை உயர்த்தினார். அஷோக் காதில் பாட்டியின் சத்தம்! தானாய் முகம் எரிச்சலை பூசியது. முதல் முறையாய் முகத்தில் ஓர் உணர்வு.
விமானத்திலிருந்து இறங்கியதும் நேரே சுதாவை காண பாட்டிவீட்டிற்குச் சென்றவனுக்கு அவள் அங்கில்லாதது பேரதிர்ச்சியே! சுதா வீட்டை விட்டு சென்றிருந்தாள்.
காரணம் தெரியவில்லை. சொல்லாமலே சென்றிருந்தாள். பாட்டியிடம் சண்டை போட்டான்.. பிரயோஜனம் இல்லாமல் போனது. “உங்க பேத்தி தானே… எங்க போரானு கூட தெரியாதா? அவ்வளவு தான் அவ மேல அக்கரையா?” கண் மண் தெரியாத கோபம். கோபம் எல்லாம் வார்த்தையாக வெளி வர, பாட்டிக்குப் பிடிக்கவில்லை. அவன் அவளுக்குப் பரிந்துபேசியது அவருக்கு பிடிக்கவில்லை. பாட்டியும் பேசிவிட்டார். அவருக்கு உண்மையிலேயே அவள் எங்குச் சென்றாள் என்று தெரியவில்லை. ‘போகிறேன்’ சொல்லிவிட்டுச் சென்றவள் தான். அவளைப் பற்றிய தகவல் இல்லை. ஏனோ பாட்டி என்ற கடமைக்கு அவளை மருத்துவமனையில் பார்த்துக்கொண்டார். அங்கும் சுதாவைக் காண கார்த்தியும், ஸ்ரீயும், ராகுலும் வர அவருக்கு வெறுத்தே போய் விட்டது.
அவருக்குப் புரியவில்லை.. புரிந்துகொள்ளும் பக்குவமில்லை. தவறாய் எண்ணிவிட்டார். மகளால் ஏற்பட்ட ஏமாற்றம்… மருமகன் மீதிருந்த கோபம்.. நஞ்சாய் மாறியிருக்க…
‘மீனாட்சியம்மாளின் இரணங்களின் விளைவால் சுதாவின் இதயம் சுக்குநூறாய் போகப் போவது என்று நான் மட்டுமே அறிந்த இரகசியம்’ இன்று அரங்கேறியது.
அவர் வெறுப்பை கொஞ்சம் கொஞ்சமாய் உமிழ்ந்திருக்க அது சுதா வாழ்வை முழுதாய் கூறுபோட்டது.
“அவ என் பேத்தியே இல்ல. நேத்து வரைக்கும் அவ யாருனே எனக்குத் தெரியாது. நான் தனியா தான் இருந்தேன்.. என்னைப் பார்க்க ஒரு தரம் அவளோ அவள பெத்தவங்களோ வந்தாங்களா? அவளுக்கு யாரும் இல்லேனதும் இந்த கிழவி தெரிஞ்சாளா? வந்தவ நடத்தையாவது சரியா இருந்துச்சா? அதுவும் இல்ல. அவ மாமன் மகனோட குடும்பம் நடத்திட்டு அவன அம்போனு விட்டுட்டு வந்தா! அந்த பையனும் அவ கால்ல விழாத குறையா கூப்பிட்டான். ஆனா அவ இங்க கார்த்திக்குனு ஒருத்தனோட சுத்திட்டு இருந்தா. அவன் அமெரிக்கா போயிட்டான். அவனோட தான் போயிட்டா!” என்றார்.
அஷோக்கால் அதை ஜீரணிக்கவே முடியவில்லை. “போதும் நிறுத்துங்க! பேச முடியுங்கரதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவீங்களா? இப்படி பேசி பேசி தான் அவளை துரத்தினீங்களா?” சண்டையிட்டு என்ன பயன்? விவரம் தெரிந்த பெண் இருக்க பிடிக்காமல் அவளுக்குப் பிடித்தவனோடு சென்றுவிட்டாள். அவன் என்ன என்று யோசிக்க?
“அவ ஃபோட்டோ தாங்க..” அதற்கும் அவர் விழிக்க… அவனுக்கு அப்படி ஒரு எரிச்சல். எல்லாம் சேர்ந்து சதி செய்தது அவன் வாழ்வில்! பின்னிப் பிணைந்து வளர்ந்த இரு மரங்களின் நடுவே சீனச்சுவராய் காலம்! அதை எதிர்த்துப் போராடி வென்றவரில்லை. இவர்கள் எம்மாத்திரம்?
எல்லாவற்றிற்கும் இவர் தான் காரணம் என்று மனம் பாட்டியைக் குற்றம் சாட்டியது. அவள் நிலைக்கும்.. அவன் நிலைக்கும்! அவன் அப்படி நினைக்கக் காரணம் இருந்தது. அவன் யோசிக்க யோசிக்க அவனுக்குத் தோன்றியது எல்லாம் இது தான்.
மருத்துவமனையிலும் இவனைச் சுதாவிடம் பாட்டி நெருங்க விடவில்லை. அவளைக் கடைசியாகப் பார்த்த அன்றும் அவள் ஏதோ சொல்ல வரப் பாட்டி தான் தடுத்தார். அது எதுவாக இருந்தாலும்.. அவள் சொல்லி இருந்தால் இன்று இத்தனை தூரம் மனம் குழம்பியிருக்காதே!
அவளைப் பற்றி ஒன்றுமே தெரிய முடியவில்லை. கொஞ்சம் அவகாசம் இருந்தால் அவளைக் கண்டிப்பாகக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கான ஆள் பலமும் பணபலமும் அவனிடம் இருக்க அம்மாவிடம் போய் நின்றான். அவர் பிடிவாதமாய் மறுத்தும் விட்டார்.
“டேய்.. உன்ட்ட தான்.. அத ஹோமத்தில போடுவியாம்..” வெங்கட் அவன் தோள் தட்டிச் சொல்ல… அவர்கள் கொடுத்த எதையோ கருத்தில் பதியாமலே ஐயர் சொன்னதைச் செய்தான்.
திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட ஒன்பது இழை மஞ்சள் நூல்  அவன் முன் வைக்கப் பட்டது. ஜீவன் பிரிந்த உணர்வு. அங்கிருக்கவே அவனுக்குப் பிடிக்கவில்லை. நெஞ்சு அடைத்தது. கண்ணெடுக்காமல் அதை பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தான்.  ஆறு மாதம் முன் தான் இதே போல் ஒரு கோவிலில் தாலியிட்டு சுதாவை அவன் சரிபாதியாக்கினான். இந்த நாள் அவன் பழைய நினைவை மீட்டதா? எதற்கு அதை வெறித்து பார்க்கிறான்?
நினைவில் எதுவும் வந்ததற்கான அறிகுறி இல்லை. ஆனால் முகத்தில் கோபத்தின் சாயல்.. “போடி.. போ. நீ இல்லேனா நான் செத்தா போய்டுவேன். வாழத்தான் போரேன். போ.. போ.. எங்க வேணுமோ போ.. உன்னெல்லாம் நினைக்கக் கூட மாட்டேன்” அவன் மனதிலிருந்தவளோடு சண்டை பிடித்துக்கொண்டிருந்தான்.
ஒரு நீண்ட நிமிடம்.. கண்ணன் கண் அலைபாய்ந்தது. கனவெல்லாம் நிழலாய் அவன் முன் வந்து கோர தாண்டவமாடியது. கனவானாலும் அவளை உணர்ந்தவன் ஆயிற்றே.. அவனை முதல் முதல் ஆணாய் உணர வைத்தவள் ஆயிற்றே.. கண்ணில் நீர் கோர்க்க… இதயம் வலிக்க வலிக்கத் துடிக்க… 
“ப்லீஸ் லட்டு வாந்துடு டி… நீ தான் என் காதலினு என் முன்னாடி வாயேன்.. ப்ளீஸ். என்ன விட்டுடாத லட்டு..” மனதோடு கெஞ்சியும் பார்த்துவிட்டான்.. அவள் அவன் முன் வரவில்லை.
அந்த கூட்டத்தில் அவள் கண்ணில் படுவாளா என்று ஒவ்வொரு பட்டுப்புடவையாய் தேடினான். சுதா அவன் கண்ணில் படவேயில்லை. “ஆண்டவா.. அவள என் கண்ணுல காட்டு.” அவன் வேண்டுதல் கேட்கபட்டதா தெரியவில்லை. 
அதுமட்டுமா தெரியவில்லை…
கடைசி வரை அவனுக்கு அவள் காதலித்தாளா? இல்லையா? என்பது தெரியாமலே போய் விட, மனம் நொந்து போனான். அவன் கனவு அது உண்மையில்லையோ? ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
“இத அதுல போடுங்கோ..” உதிரி மல்லி அவனிடம் கொடுக்கப்பட்டது. திருமாங்கல்யத்தில் தூவச் சொன்னார் ஐயர்.
உயிர் பாதி அவனை விட்டுப் போய்விட்ட வலி. என்ன செய்ய வைத்துவிட்டாள். சுதா மேல் கோபம் கோபமாய் வந்தது. அவளைப் பற்றி நினைக்க நினைவுகள் அதிகமில்லை. ஆனால் மறக்கவும் முடியவில்லை. “இப்போவாது  வந்து தொலையேன் டி… கண்ணானு கூப்பிடேன்… என் நிழல் கூட வேண்டாம்னு உன் பின்னாடியே வந்திடுவேனே” இதயம் துடிதுடிக்கக் கதறியது. “கண்ணா.. போடு!” அம்மாவின் சத்தம்.
உருண்டு வந்த ஒரு சொட்டு கண்ணீர் அவன் கையில் விழுந்து, அவனோடு மல்லி தூவிக் கொண்டிருந்த பிருந்தா கையில் தெறித்து. 
அவன் இதயம் மட்டுமா கதறியது… அதன் இணையும் ஒரு ஓரத்தில் நின்று கொண்டு கதறியது. 

Advertisement