Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 63_1 
குலம் தழைக்கக்  குலை வாழை, மங்கலம் பெருக மஞ்சளும் குங்குமமும் ஏந்திய மாவிலைத் தோரணம், திருமண வைபவம் என்பதைப் பறைசாற்ற மங்கள ஒலியெழுப்பிக் கொண்டு நாதஸ்வர இசை, மேடையைச் சுற்றி மனதை மயக்கும் பூவலங்காரம். நெருங்கிய உறவினரும் நண்பர்களும் சூழ, ஐயர் மந்திரம் ஓத, பட்டு வேட்டி சட்டையோடு முழு கம்பீரத்தோடு மணமகன் கோலத்தில் அமர்த்திருந்தான் அஷோக்.
குட்டி தேவதைகள் பட்டுப் பாவாடை சட்டையில் அங்குமிங்கும் குரலெழுப்பி ஓட.. உறவினர்களின் சிரிப்பொலிகளோடும் மகிழ்ச்சியான சலசலப்போடும் இடமே விழாக்காலம் பூண்டிருந்தது.
“பொண்ண அழைச்சிண்டு வாங்கோ… நாழியாரது!” மந்திரம் ஓதிக்கொண்டிருந்த ஐயர் மணமகளை அழைத்து வரச் சொல்ல.. 
மாப்பிள்ளை வீட்டினர் பெண்ணை பார்த்திருக்கவில்லை. அதனால் ஒரு எதிர்பார்ப்போடு அவர்கள் மேடையை நோக்கி எதிர்பார்ப்போடு காத்திருக்க..
அங்குக் கிரேக்கத்  தெய்வம் அப்ரோடைட் பொறாமை கொள்ளும் அழகோடு வந்தவளைக் கண்டு மயங்காத கண்ணில்லை. அவர்கள் ஜோடிப் பொருத்தம் அங்கிருந்த அனைவர் கவனத்தையும் ஈர்த்தது.
வெண்பட்டு சட்டையில் இருக்கும் வசிகரனை பார்க்கவா.. சிகப்பு பட்டில் மயக்கும் தேவ லோகத்து ரம்பையைப் பார்க்கவா.. பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்கு விருந்து.
அவள் அழகில் அனைவரும் மயங்க.. இழுத்துவைத்த புன்னகை முகமாய், “வா.. உட்க்கார்” என்று இழுத்துவைத்த புன்னகையை உதிர்த்துவிட்டு தன் கடமை முடிந்தது போல் யாருக்கு வந்த விருந்தோவென்று அமர்ந்திருந்தான் அவளைக் கண்டு மதிமயங்க வேண்டிய அத்தருணத்தின் நாயகன்!
கருமேகங்கள் இல்லாத தெளிவான வானிலை. ஆனால் அஷோக் மனதில் மேகமூட்டம். அது முகத்திலும் அப்பட்டமாய் பிரதிபலித்தது.
சுசிலா அங்கு மேடையில் வரவும்.. ‘நிம்மதி தானே’ என்ற பார்வையை வீசியவன் கண்ணில் அத்தனை வலி.
சுசிலா என்ன தான் செய்வார். கனவோடு மகனை வளர்த்தார். அவன் தகப்பன் வழி மகனாய் போகிவிடக் கூடாதே என்று அதிக கவனம் செலுத்தித் தான் வளர்த்தார். பிருந்தாவோடான பழக்கம் தெரியவுமே கண்டிக்கவும் செய்தார். அவன் மனதார விரும்பி கேட்ட பின்னரே, அவளுக்கு நடக்கவிருந்த நிச்சயத்தை நிருத்தி அவர் மகனுக்கு பிருந்தாவை நிச்சயம் செய்து திருமண ஏற்பாட்டையும் செய்தார். திடீர் என்று முன் தினம் வீட்டிற்கு வந்தவன் தனக்குச் சுதா வாழ்வில் பங்கு இருக்குமோ என்ற சந்தேகத்தால் திருமணம் வேண்டாம் என்று சொல்லி சுசிலா கோபத்தை எதிர்பார்க்க… அவர் அவனை வெற்று பார்வை பார்த்து வைத்தார். அவர் வளர்ப்பு பொய்த்து விட்ட வலி! விட்டுச் சென்ற கணவனால் ஏற்படாத ‘தோற்ற’ உணர்வு, கோரிக்கையோடு வந்து நின்ற மகனால்!. ஒழுக்கமான மகனை வளர்க்கத் தோற்றுவிட்ட பார்வை.
“உன் இஷ்டம் அஷோக். உன் வாழ்க்கை இல்லையா.. நீ டிசைட் பண்ணிட்ட! ஒரு பொண்ணு மனசில ஆசையை வளர்த்துட்டு கல்யாணத்தோட முந்தின நாள் வந்து அவ வேண்டாம்னு சொல்லி கல்யாணம் நிருத்த சொல்ர! வாவ்.. அஷோக்.. நாளைக்கு சொல்லாம இன்னைக்கே சொன்னியேனு நான் சந்தோஷ பட்டுக்கவா?
இப்போ நான் எந்த முகத்தோட அவங்கட்ட இத சொல்லுவேன்? அவளுக்கு ஒரு பையனோட நிச்சயம் இருந்துது.. அத நிறுத்தீட்டு உனக்கு நிச்சயம் செஞ்சோம். நீ சொல்லி! இன்னும் ஒரு மாசத்தில அவப் படிப்ப பாக்க போகணும்.. அதுக்குள்ள அவளுக்கு ஒரு நல்ல இடமா அமையணும்… இப்போ அவ அப்பாட்ட நான் போய் என்னனு சொல்லணும்? என் மகனுக்கு மூட் சரி இல்ல.. கொஞ்சம் குழப்பம்.. அதனால கல்யாணத்தை நிருத்திடுவோம். உங்க மக என் மகனை விரும்பினதுக்காக இப்படியே அடுத்த ஏழு வருஷம் கல்யாணம் ஆகாம சுத்தட்டும்… எங்களுக்குக் கவல இல்ல. உங்க மக வாழ்க்கையோட என் மகன் குழப்பம் தான் எனக்கு ரொம்ப முக்கியம்னு சொல்லிடவா?”
“அம்மா.. ப்லீஸ் புரிஞ்சுகோங்க. ஐ திங்க் ஐ ஹேவ் எ பாஸ்ட் லவ் லைஃப்”
“யார் கூட”
“சுதானு நினைக்கிறேன். அவட்ட தான் கேட்கனும்”
“ஓஹ்… நினைக்கிற!! இத நான் அன்னைக்கே கேட்டேனே? அவ வேற ஒரு பையனை விரும்பரதா நீ தான் சொன்ன. உனக்கு அப்படி அவ மேல பிடித்தம் இருந்தா நீ என்ன பண்ணியிருக்கணும்? அவ கிட்ட பேசி இருக்கணும். நீ கேட்டாலும் அவ சரினு சொல்லி இருக்க மாட்டானு இப்போ தெரியுது! அவ அவனுக்கு பிடிச்சவனோட போய்டாளாம். என் கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லலை. உனக்கும் தெரியாது இல்லையா? அவ லைஃப்-ல நீ இருந்திருந்தா அவ இங்க இருந்திருப்பா… அவ வாழ்க்கையை அவ வாழ போய்ட்டா… உன் வாழ்க்கையை நீ பாரு! இல்லாதவளுக்காக உனக்காக காத்திருக்கவ கழுத்தருக்காத! 
இல்ல ‘எனக்குக் கல்யாணம் வேண்டாம்’னு நீ நினைச்சா.. அதுவும் உன் இஷ்டம்! ஆனா அதுகப்பரம் நான் இங்க இருக்க மாட்டேன். நீ இத எமோஷனல் ப்ளாக் மெயில்னு சொன்னாலும் எனக்கு அத பத்தி கவல இல்ல. உன் இஷ்டம். ஒரு பொண்ணு மனசை நோகடிச்சுட்டு.. கல்யாணத்தை நிருத்தி அவளையும் அவ குடும்பத்தையும் கேவலப்படுத்தின பிறகு.. எனக்கு ஒரு டிக்கெட்ட போட்டுடு மும்பைக்கு. ரிட்டர்ன் டிக்கெட் வேண்டாம்!! ஆனா அவள நீ நிர்க்கதியா விட்டா அந்த பாவம் நம்மளைக் குழி நோண்டி புதைச்சிடும் நினைவுல வச்சுக்கோ! உனக்கு உன் அப்பாவே மேல்!”  
கசப்பான வார்த்தைகளை அவர் உமிழ்ந்து விட்டு செல்ல அவன் தோற்றே விட்டான். அம்மாவிடம் வாதிட முடியவில்லை. அதன் பின் அம்மா சொல்லை எங்கிருந்து மீற? சுதாவை அவர் முன் நிருத்தியிருந்தால் அவர் சம்மதித்திருப்பாரோ?
“அஷோக்.. கண்ணு ரொம்ப எரியுது”
சத்தம் கேட்டு பிராந்தாவைப் பார்க்க அவள் கண்கள் சிவந்திருந்தது. “அப்போவே சொல்ல வேண்டியது தானே..” அவனிடமிருந்த கைக்குட்டையை அவளிடம் நீட்டினான்.
“இன்னும் எவ்வளவு நேரம்?” ஐயரிடம் கேட்டு… “இன்னும் கொஞ்சம் நேரம் பொறுத்துக்கோ பிருந்தா.. முடிஞ்சுடும்!” என்றான்… எப்பொழும்போல் தான் பேசினான். புதிதாய் எந்த உணர்ச்சியும் இல்லை. காதலோ.. வெறுப்போ.. நெருக்கமோ.. எதுவுமே இல்லாத ஒரு குரலது.
என்ன முடிந்துவிடுமாம்? அவன் கூறியது திருமண வைபவம்… ஏனோ ‘முடிந்துவிடும்’ என்ற உயிரற்ற வார்த்தை இருவரின் இன்பமோ என்று அவளுக்குத் தோன்றியது! தாலி கட்டியபின் வாழ்வு முழுவதும் அவள் பொறுத்துப்போக  வேண்டிவரும்.. அவனோடான ஒரு ஒட்டற்ற வாழ்வை.
கண் தானாய் முதல் வரிசையில் அமர்ந்திருந்த அருணா மேல் நிலைத்தது. தோளில் மகனோடு.. இவளைத் தான் முறைத்துக்கொண்டிருந்தாள். அவளும் வந்ததிலிருந்து பார்க்கத் தானே செய்கிறாள் மாப்பிள்ளையை. அவனிடம் எந்த வித உணர்ச்சியும் இல்லை. அருகிலிருப்பவளை ஒரு ஜீவனாய் நினைக்கிறானா தெரியவில்லை. அப்படியே அவள் கணவன் போல்!
“என்னங்க.. தோள் வலிக்குது” என்றாள் அருணா, அவள் கணவனிடம்.
அதுவரை தனக்கும் இந்த இடத்திற்கும் எந்த சம்மந்தமுமே இல்லாதவன் போல் கால் மேல் கால் போட்டு கைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்தவன்..
“குடுமா.. நான் தூக்கிறேன்..” என்று எழுந்து மகனை அலுங்காமல் வாங்கிக் கொண்டான்.
தோளில் போட்டுக்கொண்டு அமர்ந்தவன், “அப்போவே சொல்ல வேண்டியது தானே..” மீண்டும் ஒற்றைக் கையால் கைப்பேசியைத் துழாவ ஆரம்பித்தான்.
பார்த்துக்கொண்டிருந்த பிருந்தாவிற்கு ‘பக்’ என்றானது. அவர்கள் பேசுவது கேட்கவில்லை ஆனால் புரிந்தது! சற்று முன் இதே தான் நடந்தது அவளுக்கும்! ஆக.. இது தான் தனக்கும். உதட்டளவில் அன்பாய் பேசும் ஒரு கணவன். அவள் தேவைகள் எல்லாம் பார்த்துக்கொள்வான். பாதுகாப்பாய் இருப்பான். மகாராணி போல் அவனோடு உலா வரலாம். அவள் விரும்பும் அளவு பிள்ளை கொடுப்பான். பிள்ளைகளுக்குத் தகப்பனாய் இருப்பான். அவ்வளவு தான் அவனிடம் எதிர்பார்க்க முடியும்.
அஷோக்கைப் பார்த்தாள்.. நெற்றி சுருங்க ஏதோ யோசனையில்..
“அஷோக்…” என்றாள்
“என்னமா.. ஏதாவது வேணுமா?” என்றான் கரிசனையோடு
கண் கரித்தது… இப்பொழுது அவள் வாழ்வை விட அவன் வாழ்வு முதன்மையாய் தோன்றியது.
“என்ன அஷோக்… கல்யாணம் பிடிக்கலையா?” என்றாள் வலியோடு
வரவழைத்த புன்னகையோடு, “ஷ்! அழாத! எல்லாம் சரியாயிடும்!” என்றான் அவள் கையில் அழுத்தம் கொடுத்து!
அவள் கேட்ட கேள்விக்கான பதில் அவன் நேற்றே கூறியிருக்க இன்று என்ன கூறுவான்?
அம்மாவோடு பேசியபின்னும் அவன் மனம் அமைதி கொள்ளவில்லை. கன்னியாகுமரியை வந்தடைந்ததும் நேரே சென்றது பிராந்தாவைப் பார்க்கத் தான். இந்த திருமணம் சரிவருமா என்ற கேள்வியை அவன் மனது கேட்காத நொடியில்லை. பிருந்தாவிடமே கேட்டுவிட்டான்.
அவன் மனதில் சுதா ஏற்படுத்திய தாக்கத்தையும் மறையாது கூறிவிட்டான். “எனக்கு சுதாக்கும் என்ன உறவுனு தெரியல.  ஆனா அவள பார்த்த அன்னையில இருந்தே என் மனசு பூரா அவ தான். அவ மேல எனக்கு இருந்த ஃபீலிங் என்னன்னு அப்போ தெரியல.. இன்னுமே ஒழுங்கா தெரியலை! ஆனா என்னை முழுசா ஆக்கிரமிச்சிட்டா..
முன்ன பின்ன தெரியாதவ மேல எப்படினு கேக்காத.. எனக்கு அதுவும் தெரியலை.. ஏதோ முன் ஜென்ம விட்ட குறை தொட்ட குறை சொல்லுவாங்களே அந்த மாதரி.. முன் ஜென்ம பந்தம் நினைக்கிறேன்… அதுவும் தெரியல!
அவ கூட இருக்கும் போது அவ என்னவங்குர எண்ணம் மட்டும் தான். அவ என்னைப் பத்தி என்ன நினைக்குறானும் தெரியல! அவ மனசில நிஜமாவே ஒன்னும் இல்லனு நினைக்கிறேன் அது தான்  இப்போ அவளே போய்டா. அவ போனதும் எனக்குள்ள ஒரு ஏமாற்றம் இருக்கத் தான் செய்யுது. ஏதையோ தொலைச்சிட்ட வலி. பழகலனாலும் அவ பிரிவு, நினைச்சத விட ரொம்ப அதிகமா வலிக்குது!
என்னால உன் கூட காதாலோட வழ முடியும்னு தோணல பிருந்தா. கொடுத்த வாக்குக்காகவும், நீ அழ கூடாதுனும் உனக்குத் தாலி கட்டினாலும் அது உனக்கு எப்படி சந்தோஷத்தைக் கொடுக்கும்? கண்டிப்பா என் அப்பா மாதிரி விட்டுட்டு போய்ட மாட்டேன் உனக்கு உண்மையா இருப்பேன்.. ஒரு கணவனா.. அன்பான அப்பாவா! ஆனா என் மனசில இந்த வலி என் உயிர் போரவரை இருந்துட்டே இருக்கும்.. அவ போனதும் என் மனசு அவள மட்டும் தான் தேடுது..” இன்னும் என்னன்னமோ..
அவன் வாய்மொழியாகக் கேட்டபின் பிருந்தாவிற்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியவில்லை. கடைசி நிமிடம். மதில் மேல் இருக்கும் பூனையின் நிலை. ஒரு முறை முடிவு எடுத்துவிட்டால்.. மாற்றவே முடியாது.
இவனோடு திருமணம் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவள் காதல் முடிந்துவிடும்! யோசிக்கவே முடியவில்லை. யாருடனோ உயிரற்ற வாழ்க்கை வாழ்வதற்கு பதில் இவனோடே அதை வாழ்ந்துவிடலாமே என்ற முடிவுக்கு வந்துவிட்டாள். எப்படியும் சுதா என்பவளிடம் இருந்து தட்டிப் பறிக்கவில்லை. விட்டுச் சென்றதை எடுத்துக் கொள்ளப்போகிறாள்.
நெஞ்செல்லாம் கனக்க.. எல்லாம் சரியாய் வர வேண்டும் என்ற வேண்டுதலோடு அமர்ந்திருந்தாள்.
 

Advertisement