Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_2
வெங்கட் இருந்தது இருபத்தி ஐந்து மாடிகள் கொண்ட அடுக்குமாடிக்குடியிருப்பில். அதில் அவன் பத்தாவது மாடியில், மூன்று படுக்கை அறை அபார்ட்மென்டில் வாசம். கட்டிடத்தின் அடுத்துச் சென்ற பிரதான சாலையை, ரோட்டின் மேல் கட்டியிருக்கும் நடைபாதை வழி, கடந்தால் பரந்து விரிந்த கடல், அலையில்லாத கடல்! நீல வானம்… அதன் கீழ் நீலக் கடல்… கடல் முழுவதும் அருகருகில் நின்றுகொண்டிருந்த நூற்றுக்கணக்கான கப்பல்கள்.
சிறிய கன்டெய்னர் கப்பல் முதல் மிகப் பெரிய கன்டெய்னர் கப்பல்கள் வரை அசையாது நின்று கொண்டிருந்ததை அஷோக்கிற்கு பார்க்கப் பார்க்க பரவசமாய் இருந்தது. தினமும் காலையில் நின்றுவிடுவான் பால்கனியில்.. இதைப் பார்க்க!
விடிந்து கொண்டிருக்க.. சூரிய உதயம் பார்க்க நின்று கொண்டிருக்கின்றான். கையில் சூடான காபி கோப்பையோடு! காற்றில் ஈரப்பதம் அதிகம்.. உடலை லேசாக வருட.. உடல் சில்லிட்டது.
இரவு மழையால் வானம் சற்று இருட்டாகவே  காட்சியளித்தது.
“டேய் மச்சான்… கொஞ்சம் தூரல் போடுது டா… ரன்னிங் போணுமா? ரெண்டு நாள்ல கல்யாணம்.. மழ வேண்டாமே..” வெங்கட் கேட்க,
“ம்ம்.. வேண்டாம் வெங்கி..” இவ்வளவு தான் அவன் பேச்சு! கண் சூரிய உதயத்திற்குக் காத்திருக்க.. கையும் வாயும் அதன் வேலையைச் செய்ய, பேசவோ யோசிக்கவோ மனமில்லை. நேற்றை விட இன்று மனம் அமைதியில்! அந்த நீள நீலக் கடல் போல..
“ரொம்ப இருட்டிட்டே வருதே டா.. இன்னைக்கு சன் ரைஸ் பார்க்கரது கஷ்டம் தான்..“ அறையிலிருந்து இவனை பார்த்துக்கொண்டே கூறிய வெங்கட், அலுவலக வேலையை பார்க்க அவன் லேப்-டாப்பிற்குள் புதைந்தான்.
அந்த அலை இல்லாத நீலக் கடல் சூரியன் இல்லாததால் சற்று கருமையை ஒட்டி கருநீலமாகவே காணப்பட்டது. நடுக்கடல் முழுவதும் நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான கன்டெய்னர் கப்பல்களின் விளக்கொளி கடல் நீரில் விழுந்து தங்க, வெள்ளி பாம்புகளாய் கடற்கரையைத் தொட்டது.
கையில் காபியோடு பால்கனி சுவரில் சாய்ந்து கொண்டு கடல் காற்றை அனுபவித்து சிகப்பு பிழம்பிற்காக வானத்தை நோக்கினான். கருவானதில் ஆங்காங்கே சிகப்பும் மஞ்சளுமாய் பூசி இருக்க, திரண்டிருந்த கருமேகத்திற்குள்ளிருந்து சூரியன் மெதுவாய் எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. ஒரு புறம் வானம் விடியலை நோக்கி நகர, மறுபுறம் இருட்டிகொண்டு வருவதை பார்க்க அவனுக்கு சுவாரசியமாகவே இருந்தது.  
வானத்தில் தோன்றிய மின்னலிருந்து கண்ணை அகற்றி, கீழே தெரிந்த சாலையில் கவனத்தைச் செலுத்தினான். சாலை இருபுறமும் ஆவாரம் பூ போல் காட்சியளித்த மஞ்சள் மலர்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது. அந்த பெரிய சாலையில், ஒரு ஸ்போர்ட்ஸ் கார் அளவுக்கு அதிகமான வேகத்தில் வழுக்கிக்கொண்டு செல்ல முன்னிருந்த வாகனம் திடீரென்று ப்ரேக் போட, கட்டுப்பாட்டை இழந்த ஸ்போர்ட்ஸ் கார் முன்னிருந்த வாகனத்தில் மோதியது. மோதிய வேகத்தில் ப்ரேக் போட்டு நின்று கொண்டிருந்த வாகனம் முன்னே தள்ளப்பட்டது. ஷண நேரத்தில் நடந்து முடிந்துவிட்டது. 
கரு வானம் மின்ன.. மேகம் இடி இடிக்க, அப்போது தான் வெளி வந்த சூரியன் எங்கோ என்றோ பார்த்த கோரக் காட்சி நினைவுக்கு வர, மேக போர்வைக்குள் ஒளிந்து கொண்டது.
கண் எதிரே மோதிய வாகனங்கள்… சாலையோர மஞ்சள் மலர்கள்… மழைச் சாரல்.. மின்னல்.. இடி.. இதற்கு மேல் அவன் மூளையால் நாடந்ததை முற்றிலும் மூடி வைக்க முடியவில்லை! 
எல்லாம் நினைவுகளும் வார விட்டாலும் ஏதோ மங்கலாய் மனதில் தோன்றியது. பழைய நினைவுகள் சிதறிய சில்லுகளாய்.. நிகழ்வுகளில் கோர்வை இல்லை.. மங்கலாய்.. தெளிவும் இல்லை! ஒன்றும் புரியவில்லை…
இன்று இல்லை என்றாலும் சில நாட்களில் அல்லது வாரங்களில் கண்டிப்பாய் புரிந்துவிடும் என்று நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை!
இன்று? கண்முன் வந்துகொண்டிருக்கும் அந்த சிதறிய நினைவுகளில் ஒரு மங்கலான பிம்பம் மட்டும் அவன் உள்ளத்தில் சூராவெளியாக எழும்பியது.
அப்படியே அமர்ந்துவிட்டான். கண் இருட்டி கொண்டு வந்தது. தெள்ளத் தெளிவான காட்சி! காண்பது கனவா நிஜமா? கண்மூடினால் காணாமல் போவாளா.. இல்லை கண் திறந்தால் காணாமல் போவாளா? தெரியவில்லையே… அவளை இழக்க மனமில்லாமல் அவன் விழி இமைக்க மறுத்து நின்றது.
ஏதோ ஒரு சத்தம்… எங்கோ விழுந்த உணர்வு! அவன் என்ன ஆனான்.. அவனுக்குத் தெரியவில்லை. உடல் வலித்தது. ஆனால் அவன் எதிரில், அவன் அம்மாவின் பென்ஸ் நசுக்கப் பட்ட நிலையில். உள்ளே ஓர் உயிர்! மனதெல்லாம் துடிக்க… கண்ணில் நீர் வழிய அவளை பார்த்தான். யாரென்று தெரியவில்லை. முகத்தை மூடியிருந்த இரத்தத்தைத் துடைத்தால் அவன் கனவில் வருபவள் என்று தெரியும். யார் துடைப்பது? அவனைத் தான் பார்த்திருந்தாள். கன்னத்தில் கம்பி குத்தியிருக்க… அதைப் பிடுங்க நினைத்த கையை அசைக்க முடியவில்லை!! ‘ஏன் பார்த்துக்கொண்டு சும்மா இருக்கிறாய்.. போ அவளைக் காப்பாற்று..’ அன்றைய அவனிடம் கெஞ்சினான். 
அவள் இமையிலிருந்து இரத்தம் சொட்டச் சொட்ட இவனுக்கு வலித்தது. அவள் கண் திறந்து அசையாமல் வலியோடு அவனையே பார்த்திருக்க… அவளை ஏன் காப்பாற்ற யாருமில்லை? கண்ணை சிமிட்டேன்… உயிர் பிரிந்துவிட்டாதா? நினைத்த மாத்திரத்தில் அவனுக்கு அதற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. அவள் கண்மூடும் முன் இவன் இமை மூடிவிட்டதே..
மூடியிருந்த விழியிலிருந்து உப்பு நீர் வழிய சுவரோடு சாய்ந்து அமர்ந்துவிட்டான்.
யாரிவள்? அம்மாவின் பென்ஸ்.. பதில் சொன்னது!
வாய், “சுதா!” என்று முணுமுணுக்க.. தலையை பிடித்துக்கொண்டான்! வலியெல்லாம் இல்லை. காட்சியைப் பார்த்த அதிர்ச்சி! தாங்கவியலா பாரம்!
‘எனக்குத் தான் ரொம்ப அடி இல்லையே… நான் ஏன் அவட்ட போகல? அப்படியே அவள விட்டுடேனா? அவ மனசளவில ரொம்பவே துடிச்சிருப்பாளே?’ ஆயிரம் கேள்விகள்!
மருத்துவமனையில் எலும்புக் கூடாய் காட்சியளித்தவளை நினைத்தான். இவளா அப்படி தேய்ந்து போனது? மனம் கனத்தது! உருகுலைத்துவிட்டேனே.  
‘அவள உயிரொட கொன்னுட்டு உனக்கு கல்யணாம்? கொண்டாட்டம்?’ கேவலாம உணர்வதை தடுக்க முடியவில்லை.
மருத்துவமனையிலிருந்த சுதாவைத் தெரியவில்லை. அவன் கனவில் வரும் லட்டு என்பவளையும் அடையாளம் தெரியவில்லை. இதோ.. இன்று செந்நீரில் குளித்து கொண்டிருப்பவள் முகமும் தெரியவில்லை. என்ன தான் அவனும் செய்வான்? எல்லா பெண்களும் பின்னுக்கு செல்ல…
இரத்தத்தில் தோய்ந்திருந்த சுதா மட்டுமே அவன் மனதில்! முகம் தெரியாவிட்டால் என்ன? இது சுதா தான்! கண்டிப்பாக இது அவர்களுக்கு நடந்த விபத்தே. அப்படி இருந்த உருவம் தான் இப்படியாகி  விட்டதா? இருவர் முகமும் தெரிய வேண்டாம்.. ஒன்று கூட்டல் ஒன்று என்ன என்பதற்குப் பதில் கூடவா தெரியாது?
‘ஆகமொத்ததில் பாட்டி வீட்டுச் சுதாவும் இப்பொழுது படமாய் தெரிந்த விபத்தில் வந்த பெண்ணும் ஒன்று தான்! இதில் சந்தேகமில்லை!’
‘ஆனால் கனவில் வருவது? அவளும் சுதா தானோ? அவளின் பழைய புகைப்படம் பார்த்தால் தெரிந்து விடும்! அதெல்லாம் வேண்டாம். அவளிடமே கேட்டு விட வேண்டியது தான்!’
மனதில் இரண்டு சந்தேகங்கள்.. ஒன்றுக்கு விடை கிடைத்துவிட்டது. அடுத்த கேள்விக்கான விடையைப் பெறச் சென்னை நோக்கிப் பயணம்.
இன்று வரை ஏதோ பிம்பம் என்று எண்ணிய உருவம்.. நழல் அல்ல நிஜம் என்ற எண்ணமே புத்துணர்ச்சியைக் கொடுத்தது. ‘சுதா தானா அவள்’ என்று உறுதிப் படுத்த மனம் பராபரத்தது. திடீர் என்று அவன் லட்டு அவனை முழுவதுமாக ஆக்கிரமித்தாள். அவன் லட்டு வேண்டும் என்றது மனது! அவள் மட்டும் தான் வேண்டும்!
“நீ என் காதலியா?” சுதாவிடம் கேட்கவேண்டும். ‘அவள் என்ன வேண்டுமென்றாலும் நினைக்கட்டும்! ஆம் என்றதும்.. குறிக்கப்பட்ட நாளில் சுதாவோடு திருமணம். பிருந்தா புரிந்துகொள்வாள். “இல்லை” என்ற பதில் அவனுக்குப் பிடிக்கவில்லை. அதனால் அதைப் பற்றி அவன் யோசிக்கவில்லை! யோசித்திருக்க வேண்டுமோ?
சுதா “ஆம்” என்று சொல்லவேண்டுமே.. சொல்லுவாள். சொல்லுவதற்கென்ன… மருத்துவமனையில் என்னை அப்படிப் பார்த்தாளே.. என் கை பிடித்து.. என் நெஞ்சில் புதைந்தாளே… அவள் தான் அவளே தான்…’ மனம் ஏகமாய் அடித்துக் கொண்டது. கூடவே அவளாய் இருக்கவேண்டும் என்ற வேண்டுதலும்!
பைத்தியம் பிடிக்கும் முன் விடை கிடைத்தால் சற்று நலமாயிருக்கும்! யாருக்கு? அவனுக்கும் நமக்கும்!! 
ஒருத்திக்குக் கொடுத்த வாக்கு? அவள் கனவு? அவள் கண்ணீர்? அங்கு நடந்து கொண்டிருக்கும் திருமண ஏற்பாடு? சுசிலா? எதுவும்.. யாரும் அவன் நினைவிலில்லை!  
விமானத்தின் வேகத்தை விட அவன் லட்டு அவன் இதயத்தை வேகமாக துடிக்கச் செய்து கொண்டிருந்தாள்.
விமான பயணம் 4.30மணி நேரம் தான்.. ஆனால் மொத்த பயண நேரம் எட்டு மணி நேரம்!! அந்த எட்டு மணி நேரப் பயணத்தில் அவன் லட்டைப் பொறுமையாய் ரசித்து ருசிக்க.. மூன்று முறையே பார்த்த அவன் லட்டு, அவனை முழுவதுமாக மென்று தின்றிருந்தாள். 
 

Advertisement