Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_1 
“மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை பல கோணத்தில் புகைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் கை தேர்ந்த நிழற்பட கருவியாளர்.
ஆங்கிலத்தில் அவர் சொல்லச் சொல்ல.. கர்ம சிரத்தையாய் இழுத்துப் பிடித்த புன்னகை முகத்தோடு தம்பதிகள் அவர் சொல்லுவது போலெல்லாம் நின்றனர்.
“முத்தம் கொடுக்கர மாதரி ஒன்னு எடுத்திடலாம்” அவர் கூறவும்.. தம்பதிகள் உதடு மோதிக்கொண்டது. சுற்றம் மறந்து ஒருவருக்குள் ஒருவர் புதைந்தனர்.
சுற்றியிருந்தவர்கள் கண்டுகொண்டதற்கான அறிகுறியில்லை. ஆனால் ஒருவன் மட்டும் லச்சையே இல்லாமல் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான். யாரடா இது இப்படி? பட்டிக்காட்டான் போல்? நம் அஷோக்கே தான்!
இது நடப்பது இ.சி.பி. எனப்படும் கிழக்கு கடற்கரை பூங்காவை ஒட்டிய கடற்கரையில். இன்னும் மூன்று தினங்களே திருமணத்திற்கு இருக்க, அஷோக் சிங்கப்பூரை விட்டு அகன்றானில்லை.
சுசிலாவும் மகன் ‘வேலையாய் சென்றுள்ளான்… திருமணம் முன் வந்துவிடுவான்’ என்று ஏதேதோ சொல்லி பெண்வீட்டில் சமாளித்தார். தலைவலி சரியாகவும் அடுத்த விமானத்தில் வந்தவன் தான்… இன்னும் இங்கு தான் சுற்றித் திரிகிறான் இலக்கில்லாமல்!
கண் அவர்களின் நெருக்கத்தைப் பார்த்தாலும் சிந்தனை அங்கில்லை. ஏன் அவனுக்கு இப்படி எல்லாம் இன்னும் பிருந்தாவோடு தோன்றவில்லை? இந்த கேள்வி அவனைக் கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. திருமணத்திற்கு மூன்று நாட்களே இருக்க… பிருந்தாவோடு மணிக் கணக்காய் பேசுவதில்லை. உண்மையில் பேசுவதே இல்லை என்ற நிலை. இந்நேரம் மனைவியாக போகிறவளைப் பற்றிய எண்ணங்கள் அலை மோத வேண்டாமா? இரவு தூக்கம் அவளால் கெட வேண்டாமா? ஏனோ அது எதுவுமே இல்லை. ‘அன்றைய’ இரவிலாவது தோன்ற வேண்டுமே…
சிந்தனையோடு மணலில் எதையோ வரைய முயற்சித்துக் கொண்டிருந்தான்…
அவனுக்கு வரையத் தெரியவில்லை. அவன் மனதை அரித்துக்கொண்டிருந்த ஒரு உருவம்! ஏதோ ஒரு பெண்ணின் முகம்… எதையுமே அவன் உணராமல் ஆட்காட்டி விரலால் கிறுக்கிக் கொண்டிருந்தான்.
கவனம் மணலிலும் பதியவில்லை.
எதிலும் கவனம் பதியாமல், என்ன தான் அப்படி சிந்தனை? தம்பதிகளை ஏன் அப்படிப் பார்த்து வைத்தான்?   ‘திருமணம் முன் ஒரு முத்தம் கூட பகிர்ந்து கொள்ளவில்லை… ஏன் இது கூட தோன்றவில்லை? என்னிடம் ஏதேனும் கோளாறிருக்குமோ?’
‘மிகவும் அழகான பெண் பிருந்தா.. சிந்தனையை சிதறடிக்கும் வடிவம்.. இருந்தும் அனுபவிக்க ஆசையில்லை. ஏதேனும் ஆண்மை குறைபாடு இருக்குமோ? அவளிடம் கணவனாய் நல்ல முறையில் குடும்பம் நடத்த வேண்டுமே… முடியுமா? அதற்கான மருத்துவரை பார்க்கவேண்டுமோ? அவளிடம் கேவல பட்டுவிட மாட்டேனே..?’  நீண்ட பெருமூச்சு! இது தான் அவன் சிந்தனையில்!
படம் பிடித்துக்கொண்டிருந்த திருமண குழு இடத்தை காலி செய்ய அமைதியாய் ட்ராக் பேன்டை முட்டி வரை மடித்துவிட்டவன் கையை தலைக்கு கொடுத்து ஈர மணலில் படுத்துக்கொண்டான். முதுகு சில்லிட்டது,
சுதா என்பவள் அவன் மனதில் பின் சென்றிருக்க.. யோசனை அவன் வருங்காலம் பற்றி மட்டுமே. அதிலும் அதிக அலட்டலில்லை. நடப்பது நடக்கட்டும் என்ற நிலைக்கு வந்துவிட்டான். 
பிள்ளைகள் சிரிப்பு சத்தம் தூரத்தில் கேட்டது. மாலை சூரியன் கடலுக்குள் குளிக்க இறங்கிக் கொண்டிருந்தது. மூடியிருந்த கண்ணில் கருப்பு கண்ணாடி.. சூரியன் கண்ணைத் தாக்காமல் தடுத்தது. முகத்தில் இதமான சூரிய கதிர்கள். கண் மூடி படுத்தவாறே அலையின் ஓசையை ரசித்தான். மனம் லேசாக.. ஒரு இன்ப அனுபவம். 
கடலிலும் அதிக இரைச்சலில்லை! முட்டி மடிந்திருக்க.. அவ்வப்போது தங்கக் கதிர் தாங்கிய அலைகள் அவன் பாதத்தை தழுவி முத்தமிட்டுச் சென்றது. மனம் அமைதியானது. எந்த சிந்தனையும் அவனை ஆட்கொள்ளவில்லை. சிறு சிறு அலைகளால் எழுந்த ஓசை மட்டுமே! கூடவே தூரத்தில் கேட்ட பிள்ளைகளில் சிரிப்பு சத்தம். தூங்கினானா..? இல்லை என்று தான் தோன்றுகிறது. மனம் ஒருவித தியான நிலையில்.
எப்பொழுது எழுந்து நின்றான்? அருகில் யார்? பெரிய பெரிய அலைகள் தொட்டுத் தொட்டு சென்றது. முட்டி வரை போட்டிருந்த ஷாட்ஸ் எப்பொழுது நனைந்தது? அருகிலிருப்பவள் அலையில் விளையாட அவனும் அவளோடு நனைந்திருந்தான். நின்றிருந்தவன் இதயம் இன்பத்தில் திளைத்தது. அருகிலிருந்த ‘அவள்’ உடல் அவனை உரசியதாலா? அவள் சின்ன சின்ன தீண்டல்கள் கூட அவனுள் ஏதேதோ மாற்றம் செய்தது. அவளைச் சுற்றிக் குட்டி வானரங்கள் சில. பிள்ளைகள் சிரிப்பு சத்தம் கூடவே அந்த பெண்ணின் சிரிப்பும். இருட்ட ஆரம்பிக்கவும், பிள்ளைகள் ஓடிவிட்டனர். தனிமையில் அவனும் அவளும்! 
அவனா ஏக்க பார்வை பார்ப்பது? அஷோக்கே தான்.. கடல் நீரில் நனைந்திருந்தவளை விழுங்கிக் கொண்டிருந்தான்.. பார்வையால். காதலைத் தாண்டிய ஏக்கப் பார்வை அது. அவனுக்குள் இப்படி ஒருவனா? அவனையும் அறியாமல், கண்மூடி படுத்திருந்தவன் இதழ் புன்னகையை  தழுவியது. மாதங்கள் பின் இத்தனை அமைதியை அவன் இன்று தான் அனுபவிக்கின்றான்.
‘பெண் அவனைப் பார்த்துச் சிரித்தாள். அவள் சிரிப்பில் அவன் கரைந்தான். அவனை இருமுறை இம்சித்த அதே அழகி தான்.
“ரொம்ப இருட்டிடுச்சு லட்டு.. வா போகலாம்!” என்றான், ஒற்றை விரலால் அவள் கன்னம் வருடி..
அவள் கண்ணிலும் ஆசை பார்வை.. அவனை அவளுள் இழுத்துக்கொண்டது.
“தூக்கு..” என்றாள்..
குமரியாய் அவனுள் இறங்கிக் கொண்டே.. குழந்தையாய் கொஞ்சிக் கொண்டிருந்தாள்.
“கூலி இல்லாம.. முடியாது!” என்றான் அவள் இதழ் பார்த்து
“முடியாது.. கடமையைச் செய் பலன் எதிர்ப்பாக்காதே..” என்றாள் கள்ளச் சிரிப்போடு!
அவள் பற்களுக்குள் மாட்டித் தவித்த இதழ்களை அவன் பற்களுக்குள் சிக்கவைக்க ஆசை தான்..
‘போடி..’ செல்லமாய் கோபித்துக்கொண்டாலும் கடமையைச் செய்தான்.. பூச்செண்டாய் கரத்தில் தவழ்ந்தாள். அவர்களிடம் இந்த நெருக்கம் புதிதல்ல போலும்.. இருவர் உடல் மொழி உணர்த்தியது.
கடல் மணலை கடந்து தரை சேரும்முன் யாருமில்லா அந்த இருட்டு கடற்கரையில், ‘பலனாய்’ கூலியைப் பெற்றிருந்தான். அவன் உடலும் கையும் இதழும் அவளை உணர்ந்தது. அவளோடு அவனிருக்கையில் அவனிடம்  எந்த குறைபாடும் இருப்பதாக தோன்றவில்லை. ஏதேதோ இன்ப உணர்வுகள் அவனுள் விழித்துக்கொண்டது.
இதயம் படபடக்க… உடல் இருந்த அத்தனை நரம்பும் சிலிர்க்க கண் திறந்தான்… இருட்ட ஆரம்பித்திருந்தது. அவள் இல்லை. இங்கு தானே இருந்தாள். எப்பொழுது மீண்டும் படுத்தேன்? எழுந்து அமர்ந்தவன் கருப்பு கண்ணாடியைக் கழட்டிச் சுற்றும் முற்றும் பார்த்தான். எந்த மாற்றமும் இல்லை! இருட்டாகத் தான்  இருந்தது. இது அவன் வீட்டின் பின் இருக்கும் கடற்கரை இல்லை! இதில் ஏது பெரிய அலைகள்? அவளில்லை! கனவு போலும்! கனவு கண்ணி கனவில் தானே வருவாள். முகம் விழுந்து போனது. ‘இன்னும் நீடித்திருக்கலாமோ… ஏன் கண் திறந்தேன்?’ நொந்துக்கொண்டான். அவளை மீண்டும் கொண்டுவரும் முயற்சி தோல்வியைத் தழுவியது!
‘உதட்டின் மென்மை அவன் ஏற்கனவே உணர்ந்தது தான் இருந்தாலும் இன்றும் சிலிர்த்தது. அவள் இதழும், உடல் வளைவும் அவனை இம்சித்தது! கடல் நீரில் மூழ்கி நின்றால் தணியுமோ? மருத்துவரைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை போலும்! அவனிடம் எந்த குறையும் இல்லை. அதில் ஒரு நிம்மதி!
யோசிக்க மறந்தது.. இந்த உணர்ச்சி ஏன் கனவில் வருபவளிடம் மட்டும் என்று!
“யாரடி பெண்ணே நீ?” மனம் கேட்டது.
அவளோடு பேசிக்கொள்ளும் அளவிற்கு நிலைமை முத்தி போவதை உணர்ந்தான்.
பிள்ளைகளின் சிரிப்பு சத்தம் அருகில் கேட்டது. இளம் பெண் ஷார்ட்ஸ் டி-ஷர்ட் அணிந்திருந்தாள். முடியைத் தூக்கி ஒரு க்ளிப்பில் அடக்கி இருந்தாள். இதோ.. இப்பொழுது வந்தாளே அவள் போலவே…
அவன் யோசிக்கவெல்லாம் இல்லை.. ஓடிச் சென்று அவளைத் திருப்பினான். பெண் பயந்து போனாள். இது யாரோ..! “சாரி!” என்று ஷூவை அணிந்தவன் கடற்கரையை ஒட்டிய நடை பாதையில் நடக்க ஆரம்பித்தான். பின் அதுவே நிதானமான ஓட்டமாய் மாறியது. அசராமல் பதினைந்து கிலோமீட்டர் ஓடினான். 
அவன் சிங்கப்பூர் வந்ததும் அவன் கனவுகள் பற்றி அறியவேண்டியிருக்க… அங்கிருந்த மருத்துவரை பார்த்திருந்தான். பலன் இல்லை. அவர்களும் அதே கதையை மீண்டும் கூறினார்கள். பழைய நினைவின் தாக்கமாகவும் இருக்கலாம்… மனம் எதையோ அதிகமாய் யாசிக்க அதன் பிரதிபலிப்பாக இருக்கலாம்… பழைய நினைவாகக் கூட இருக்கலாம். தொடர்ந்து மருத்துவமனை வந்தால்.. கண்டுபிடித்து விடலாம் என்றனர். ‘அவர்கள் புது கட்டிடம் கட்டிட நான் தான் கிடைத்தேனா?’ அன்றே ஓட்டம் பிடித்துவிட்டான். 
இது மூன்றாவது முறை! அவள் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் இதயத்தில் பதிய ஆரம்பித்தது. இனி ஆளை நேரில் பார்த்தால் கண்டு பிடித்துவிடலாம் என்ற நம்பிக்கை வந்தது…
‘ஆனால் அப்படி ஒருத்தி இல்லை… இது கட்டுப்பாடற்ற மனதின் பிரமை. திருமணம் செய்தால் சரியாகிவிடும்..’ இது அவனின் தற்போதைய நம்பிக்கை! ‘சற்றுமுன் பார்த்த தம்பதியரின் தாக்கம்… கூடவே அவன் ‘நெருக்கத்தை’ பற்றிய கேள்விகள்.. அவன் சிந்தனைகள்.. அதனால் ஏற்பட்ட கனவு’, இதுவும் அவன் ஆராய்ச்சி முடிவு!  
இன்று அவள் கண் என்ன நிறம்…? பிரவுன்!’ ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு நிறம்.. நிஜ உலகிற்குச் சாத்தியமில்லை தான்! கனவு தானே.. இருந்துவிட்டுப் போகட்டும்! புன்னகைத்து கொண்டான்.
இப்படி அவன் முடிவுக்கு வர காரணம் உண்டு!
கனவு 1: மருத்துவமனையில் சுதாவின் கடல் பச்சை விழியைப் பார்த்து மயங்கினான். படுக்கும் முன் இணையத் தளத்தில் எலிசபெத் டெய்லரின் ஊதா நிற விழியில் லயித்து உறங்கினான். ஊதா நிறம் கொண்ட கண்ணழகி கனவில் வந்து சென்றாள்… அவன் ஆசைக்கிணங்கி!
கனவு 2: மருத்துவமனையில் சுதா உதட்டைப் பார்த்தான். ஆண்மகனுக்கான சின்ன தடுமாற்றம். அவள் உதட்டின் மென்மையை நினைத்து கொண்டே தூங்க.. அவன் ஆசையைத் தணிக்க வாந்தாள் அதிரச அழகி!
கனவு 3: கடற்கரையில் தம்பதிகள் நெருக்கம், பிள்ளைகளின் சத்தம், அவன் உணர்வுகளில் சந்தேகம்… எல்லாம் ஒன்று சேர.. இன்று புது கனவு. கனவின் முடிவில் இவன் சந்தேகமும் சென்ற இடம் தெரியவில்லை!
கனவுகளின் ஆராய்ச்சி முடிவு:- எல்லா கனவும் அவன் உள்ளத்தின் பிரதிபலிப்பு! அவன் மனதில் எழும்பும் உணர்வு அலைகளின் பிரதிபலிப்பு! அவ்வளவே!!
இந்த நிமிடம் வரை அவன் ஆராய்ச்சி முடிவில் அவனுக்குச் சந்தேகமில்லை! ஆனால் அடுத்த 24மணி நேரத்தில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம்.. அவன் முடிவில் அவனுக்கே சந்தேகம் வரலாம்!
சிந்தனையோடு.. ஓட்டமும் முடிந்தது. வெங்கட் அங்கு வரவே கடலோர உணவகத்தில் உணவருந்தி அங்கிருந்த சிமென்ட் இருக்கையில் அமர்ந்து கொண்டனர். அஷோக் சிந்தனையோடு ஒன்றியதில் அருகிலிருந்தவன் தூரமாய் போனான். அதனால் பேசிக்கொள்ளவில்லை. இங்கு வந்த நாள் முதலே பேச்சு அதிகமில்லை. வெங்கட்டிற்குப் பழகிவிட்டது போலும். அவன் ஜென்னியோடு கைப்பேசியில் கடலை வறுத்துக் கொண்டே வீட்டை நோக்கி நடந்தான்.
அஷோக் நகர்ந்தானில்லை!
அங்குமிங்குமாய் நடந்துகொண்டும் ஓடிக்கொண்டும் ஜனம். இவர்களுக்குத் தனிப் பாதை… சைக்கிள் ஓட்டிகளுக்குத் தனிப் பாதை. கடற்கரையோரம் புல்வெளியில் பல நிறத்தில்.. பல வடிவத்தில் கேம்ப் டென்டுகள் எழும்பி இருந்தது. கைகளை பின்னுக்குக் கோர்த்து அதில் தலையைச் சாய்த்தவாறு கால்களை ஆட்டிக்கொண்டே வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
அந்த கடலோர நடைபாதையில் இரவு பதினொன்று.. பன்னிரண்டு மணிக்கும் தனியே நடந்தும், ஓடிக் கொண்டும் பெண்கள்! அப்பெண்கள் சிறிய உடைய அணிந்திருந்தாலும் அவர்களைப் பார்வையாலேயே துயில் உரியும் துச்சாதனர்கள் இல்லை.
தனியே செல்லும் பெண்களை, கூட்டமாக வெறி பிடித்த மிருகங்கள் விரட்டி செல்வதில்லை. கடத்தி சென்று கதற விடுவதில்லை. ஏன் பிரம்படிக்குப் பயமா? இல்லை சிறுவயதிலிருந்தே ஒழுக்கத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்க்கப்பட்டுள்ளார்களா? ஊர் முழுவதும் இருக்கும் வெளிச்சமும், கேமராக்களும், பிரம்படியுமாகக் கூட இருக்கலாம்! தெரியவில்லை!
நம் பாரத தேசம் இப்படி ஒரு பாதுகாப்பை நம் பெண்களுக்கு எப்பொழுது கொடுக்கும்? பெண்களைத் தெய்வமாய் போற்றும் நம் பாரத தேசத்தில் ஐந்து வயதுக் குழந்தையும் காமுகர்கள் விடுவதில்லை. சிறு குழந்தையையும் நாள் கணக்கில் சிறை பிடித்துவைத்து கூட்டமாய் கூடி வதைக்க எப்படி முடிகிறது? விடை தெரியவில்லை!
எங்கே போனது நம் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு? அவை வெறும் காகிதத்தில் மட்டும் தானா? மன்னிக்கவேண்டும்… இதற்கும் பதில் இல்லை!! 
நிலவு இருட்டில் அவனிருக்க… ஒளியில்லா இருட்டில் நம் இந்தியப் பெண்கள். கதைக்கு வருவோம்…
விடிய ஆரம்பித்துவிட்டது! 

Advertisement