Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 59
 உறக்கம் வரவில்லை. இமைகள் தழுவ மறுத்ததாலா? இல்லை நினைவுகள் மனைவியைத் தழுவிக்கொண்டிருப்பதாலா?
கண் கனவை சுமக்க… உறக்கம் மறக்க.. சொர்க்கம் எங்கே என்று தேடி, தன் கூடு நோக்கி ஒரு இன்ப பயணத்திற்கான காத்திருப்பு! யார் காத்திருப்பது? டேனியேலே தான்.
ரிச்மண்ட், வெஸ்ட் வெர்ஜீனியா, இன்டெர் நேஷனல் ஏர் போர்டில் போர்டிங் கேட்டில் மனைவியின் நினைவில் மூழ்கி இருந்தான் டேனியல்.
ஜான்சிக்கு வளைகாப்பு விழா. அதற்குக் கிளம்பி மூன்று வார விடுப்பில் வந்துகொண்டிருக்கிறான், கண்ணில் கனவோடு! அவளைப் பார்த்து ஏழு மாதங்கள் ஆகியிருந்தது. கணுக்காலில் தசை நார் கிழிந்து, அது சரியாகி, பின் தலைச் சுற்றல் என்று மாதங்கள் நகர்ந்துவிட, ஐந்தாவது மாதம் வளைகாப்பு வைத்து அவளைக் கணவனோடு அனுப்ப நினைத்த வேளையில் அவன் வேலை விஷயமாய் பாஸ்டன் செல்லவேண்டி இருக்க, ஏழாம் மாதம் நாள் பொருந்தி வர, இன்னும் சில தினங்களில் வளைகாப்பு. அடுத்த சில தினங்களில் மனைவியோடு அமெரிக்கா பயணம்.
இரண்டு நிருத்தம், ஒவ்வொரு நிறுத்தலில் சில மணித்துளிகள் வீணே போகும்.. அவன் வீட்டிலிருந்து ஆரம்பித்து திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து மீண்டும் பயணப்பட்டு அவன் வீடு வந்து சேர இருபத்தி நான்கு மணி நேரம் போதாது! அங்கிருந்து திருவனந்தபுரம் வரும் வரை இருந்துவிடலாம். இந்திய மண்ணை மிதித்த பின், அடுத்த சில மணி நேரப் பயணம் சித்திரவதையே….  
ஏழு மாதம் தள்ளியவனால், அந்த சில மணி நேரத்தை நகர்த்த முடியவில்லை. தினமும் விடியோ காலில் பார்த்துவிடுவான். இருந்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா? பெண் பார்க்கப் போன அன்று இருந்த அதே மனநிலை. உள்ளமெல்லாம் ஜானுவை பார்க்கும் குதுகலம்.. அவன் மனைவி.. அவன் பிள்ளையை தாங்கிக்கொண்டு.. கண்மூடி கனவில் ஒரு பயணம்.. மிக இனிமையாய்..
ஜான்சிக்கும் தூக்கம் பிடி படவில்லை. மேடிட்ட வயிற்றை தடவிக்கொண்டே இருந்தாள். “நாளைக்கு அப்பா வந்திடுவாங்க..” என்று பிள்ளைக்குச் சொல்லுவது போல தனக்கே சொல்லிக் கொண்டாள்.
கால் தசை நார் கிழிந்து இரண்டு மாதத்தில் ஒருவாறு சரி ஆனாலும் வலி இருந்து கொண்டே இருந்தது. வயிற்றில் பிள்ளை இருப்பதால், பிரசவத்திற்குப் பின் அறுவைசிகிச்சை செய்ய முடிவெடுத்திருந்தனர். வலி இருப்பதாக யாருக்கும் காட்டிக்கொள்ளவில்லை. எங்கே வலி என்று சொன்னால் கணவனோடு தனியே இருக்க வேண்டாம் என்று விடுவார்களோ என்று.
மூன்றே வாரத்தில் அவள் உயிராய் போனவன்.. ஏழு மாத பிரிவு.. கண்ணில் கனவோடு ஒவ்வொரு நொடியையும் நகர்த்த முடியாமல் அவஸ்தையாய் காத்திருக்கிறாள்.
இரவெல்லாம் அரைகுறை தூக்கம்.. நான்கு மணிக்கே எழுந்து கணவனைக் காணும் ஆவலில் குளித்து.. கிளம்பி அறையில் நடை பயின்றாள்.
காது முழுவதும் வாசலில். ஒரு வித படபடப்பு.. முதல் மதிப்பெண்  வாங்கியே பழக்கப் பட்ட மாணவன் பொதுத் தேர்வின் மார்க்ஷீட்டுக்காக காத்திருப்பானே… அதையும் விட அதிக படபடப்புடன்…
“என்ன டா குட்டி… அப்பாவ இன்னும் காணம்?” அவளும் தூங்காமல் அதையும் தூங்க விடாமல் அமைதியில்லாமல் நடை பயின்றாள். இன்னும் புடவை முந்தியின் நுணி கிழிந்து கையில் வராதது அதிசயமே..
இது ஒரு விதமான சுகம்.. வலி நிறைந்த சுகம். காதலின் அளவை அறிந்து கொள்ளும் சுகம். நீ இன்றி தவித்தேனே… நீ தவித்தாயா என்று அவனிடம் கேட்க… நானும் தவித்தேனே.. என்று அவன் கூறுவதைக் கேட்கும் சுகம். அடுத்த சில நாட்கள் உலகை மறந்து அவன் அணைப்பில் இருக்கப் போவதை நினைத்து இதழ் விரியும் சுகம்..
அவன் நினைவிலேயே கால் வலியும் உணராமல் நடை பயின்றாள். மனம் தானாய் எதை எதையோ நினைக்கக் கண் கனவில்… முகம் நிறம் மாறுவதும், இதழ் விரிவதும் பின் பல்வரிசைக்கு நடுவில் கீழ் உதடு கடி படுவதுமாய் ஒரு வித இன்ப அவஸ்தை..
கண்கள் சுருங்க… காது கூர்மையானது. எதிர்பார்த்த தருணம்… மூச்சு வாங்க ஆரம்பித்தது. வந்துவிட்டான். இதயம் படபடத்தது. இவ்வளவு நேரம் நடை பழகியவளுக்கு நடக்க மறந்தது.
விடியற்காலையில் கார் சத்தம் வாசலில் கேட்கவும், அவசர அவசரமாய் ஓடிவந்து.. கை நடுங்கக் கதவைத் திறந்து நின்றவளுக்கு இதயம் அடித்துக்கொண்டது. ‘எங்குப் போனாய்… வா வந்து உன் முகம் காட்டு’ என்று அடித்துக் கொண்டது.
ஷாலினி முழித்திருந்தாலும் அவர் வெளியே வரவில்லை. இரண்டு நாட்களாய் மருமகளின் அவஸ்தையை பார்த்துக்கொண்டு தானே இருக்கிறார்.
கைகள் இரண்டிலும் பெட்டியோடு வராண்டா படி ஏறியவன் மனைவியைப் பார்த்ததும் நின்ற இடத்தில் அப்படியே நின்றுவிட்டான். வீடியோவில் பார்ப்பதற்கும் நேரில் பார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கத் தான்  செய்தது.
ஒரு சுற்று பூசி உடல் மெருகேறி.. அவன் முத்தை சிப்பி வயிறு ஏந்தி.. முகம் செம்மையைத் தழுவி.. கண் நிரைய காதல் ஏந்தி.. உதடு துடிக்க.. வித்தியாசமாய் தான் இருந்தாள், அவன் ஜானு! உயிர் வரை சிலிர்த்தது.
பெட்டியை நின்ற இடத்தில் வைத்துவிட்டு பார்வையால் மனைவியை விழுங்கிக்கொண்டே வர, அவள் கண்கள் நீர் திரையிடக் கதவில் சாய்ந்தவாறு அவனை பார்த்துக்கொண்டே நின்றாள். கால் தோய்ந்து போனது.
உடல் களைத்ததா.. உயிர்த்ததா.. தெரியவில்லை. ஆனால் நிற்க முடியவில்லை.
கண் மங்க.. கண்ணை அழுத்தி மூடி திறந்தாள். கண் முன் அவள் அன்பு கணவன்… உன்னைப் பார்க்கத் தானே தவமிருந்தேன்.. கண்கள் கதறியது.
இருவரின் மூச்சுக் காற்றும் மோதி யுத்தம் செய்ய… பார்வை ஈட்டியாய் இருவருக்குள்ளும் இறங்க.. இருவரும் பேசவில்லை. பார்வை மட்டுமே.
தென்றல் காற்றே நின்று விடு…  மூச்சு முட்டுகிறது இருவருக்கும்.
இருவர் கண்ணும் பனிக்க… அவன் உள்ளங்கை அவள் கன்னத்தைத் தாங்க.. அவள் முகம் அதில் விழக் கண்ணீரும் சேர்ந்தே விழுந்தது.
வார்த்தைகளுக்கு பஞ்சமாகிப்போனது. அது தேவையில்லாததாலோ? மனைவியை அவன் மார்போடு தழுவிக்கொண்டான். எத்தனை மாத ஏக்கம். அவளும் அவனுள் புதைந்துகொண்டாள். சத்தமில்லாமல் அவள் உடல் குலுங்க.. அவன் சட்டை கசங்கி நனைய… அவள் உச்சந்தலை முத்த மழையால் நனைந்தது.
இத்தனை நாள் எங்கிருந்தது இந்த உணர்வுகள்? கை நடுங்கக் கணவனை அணைத்தவள் இதழும் நடுங்கிக் கொண்டே இருந்தது. ‘இனி என்னை விட்டுச் செல்வாயா?’
‘நொடிப் பொழுதேனும் உன்னை விட மாட்டேன்’ பலம் கொண்டு அவனை தன்னுள் புதைத்து அவளும் அவனுள் புதைந்து கொண்டாள்.
கழுத்தில் இதழ் உரச, “மிஸ்ட் யூ சோ மச் ஜானு..” என்றவன் உள்ளமெல்லாம் மெழுகாய் அவள் காலடியில் உருகியது. மனைவியின் முகத்தை கையிலேந்தியவன் அவன் முகம் முழுவதும் முத்த ஊர்வலம் நடத்தி, ஒரு வழியாய் அதன் இணையோடு உறவாட விட்டான்.
உடல் பாரமெல்லாம் தடம் தெரியாமல் போக.. இருவரும் சந்திரனில் மிதந்தனர்.
அவள் ‘மிஸ்ட் யூ’ சொல்லவேண்டி இருக்கவில்லை. அவன் உதட்டில் இறங்கிய உப்பு நீர் சொன்னது அவர்கள் பிரிவின் வலியை. ஏழு மாத உப்பு சத்து குறைவு இனி அவனுக்கு இல்லை.
அவன் நிருத்த அவள் ஆரம்பிக்கவென இருவரும் தங்களை மறந்த ஒருவருக்குள் ஒருவர் புதைய, கடிகாரம் ‘டங், ட்ங்’ என ஐந்து முறை அடித்து நின்றது.
அவளை மீண்டும் அணைத்து விடுவித்தவன் பார்வை அவள் வயிற்றில் நிலைத்தது. ஏழு மாத்திற்குச் சிறிதாகவே தோன்றியது.
அம்மாவின் அறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்கவே, அவள் புடவையை விலக்கி வயிற்றில் முத்தம் ஒன்றைப் பதித்து, “உள்ள போ.. பெட்டியை எடுத்துட்டு வரேன்.” என்று நகர்ந்தான்.
ஏழு மாதத்தில் இப்படி விமானத்தில் அனுப்ப வேண்டுமா என்று எண்ணிக்கொண்டிருந்த ஷாலினுக்குமே மருமகள் மலர்ந்த முகம் பார்க்க, அதிலிருந்த பொலிவு, ‘அனுப்புவதே அவளுக்கும் குழந்தைக்கும் நல்லது’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
அம்மாவை அணைத்து விட்டவன், “ம்மா.. எப்படி இருங்கீங்க” என்று பேச்சை ஆரம்பித்து, “அனி குட்டியும் அப்பாவும் தூக்கமா?” என 
“நாங்க நல்லாயிருக்கோம்.. அவங்க ரெண்டு பேரையும் எழுப்பினா.. உன்ன உக்கார விட மாட்டங்க. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. அப்புறம் அவங்கள எழுப்புறேன்.”
ஜான்ஸி, “ப்ரெஷ் ஆகிட்டு வாங்கக் காபி கலக்குறேன்” என்றவளிடம், “டிபன் ரெடி பண்றியா.. ரொம்ப பசிக்குது.. நான் குளிச்சுட்டு வரேன்” என்றான்.
பெட்டியோடு தங்கள் அறைக்குச் சென்றவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம் ஷாலினி, “மா.. நீ போய் அவனுக்கு ஏதாவது வேணுமானு பார்த்து எடுத்து கொடு.. நான் இட்டிலி ஊத்தி, கோழி குருமா வைக்கறேன்…” என்று அனுப்பி வைத்தார்.
ஷவரின் அடியில் நின்றவன் நினைவெல்லாம் மனைவியின் வயிற்றையே சுற்றி வந்தது. அவனோடு வேலை செய்யும் அவன் தோழி கிரிஜா ஏழு மாதத்தில் வயிற்றைத் தூக்க முடியாமல் தூக்கி கொண்டு இடுப்பைப் பிடித்துக்கொண்டே நடப்பாள்.
ஆனால் அவன் மனைவிக்கோ காற்று போன ஒரு கால் பந்தை துணிக்கடியில் வைத்திருப்பது போல் உள்ளது. அவள் முதுகு பின் நின்று பார்த்தால் கர்ப்பிணி என்று தெரியாது!
மனதை உறுத்தினாலும் அவளிடம் கேட்க விருப்பமில்லை. அம்மாவிடமோ மருத்துவரிடமோ கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
குளியலறையை விட்டு வந்தவனை அமர வைத்து தலை துவட்ட, புடவையை விலக்கி அவள் வயிற்றைத் தான் தடவிக் கொண்டிருந்தான்.
“ஒழுங்கா சாப்பிடுரியா?”
“ம்ம்”
“நல்லா தூக்கம் வருதா?”
“ம்ம்”
“மனசைச் சந்தோஷமா வச்சிருக்க தானே?”
“இது என்ன கேள்வி?”
அவள் வயிற்றைத் தடவியவன், “நீ சொன்னா தான் நீ ப்ரெக்னெட்னு தெரியும்..”
சிப்பிக்குள் இருக்கும் முத்தை உணர, சிப்பியில் கன்னம் வைத்துக் கண்மூடி ஒரு தியான நிலை…
“உங்க குட்டி என்ன சொல்றான்”
“..”
“என்னங்க..?” பதில் வரவில்லை.
அவன் முகத்தை அவளை நோக்கி உயர்த்தியவள், “பயப்படுறீங்க தானே?”
“..ப்ச்”
“ஒரு முத்தம் தான் தந்திருக்கீங்க…”
“..?”
“வயிறு பூரா தருவேன்னு சொன்னீங்க?” அவள் குழைய..
“ஆனா வயிறே காணோமே… நீ ஒழுங்கா சாப்பிடுர தானே?”
அவன் முகத்தில் அப்படி ஒரு கலவரம்..
கணவன் உச்சந்தலையில் ஆழ்ந்த முத்தம் பதித்து.. அவன் மடியில் அமர்ந்து கொண்டாள்.
அவன் நெஞ்சில் கோலம் வரைந்துகொண்டே, “நான் நல்லா இருக்கேன். பேபியும் நல்லா இருக்கு! ஸ்கேன் பார்த்து டாக்டர் எல்லா வளர்ச்சியும் சரியா இருக்குனு சொல்லிட்டாங்க.. சிலருக்கு இப்படி தான் இருக்கும். எட்டு மாசத்துக்கப்பாம் கொஞ்சம் பெருசாகும்னு டாக்டர் சொன்னாங்க! இதெல்லாம் ஒரு வரம் மாதரி.. கஷ்ட்டமில்லாம சுமக்கரது..
அருணா மாதரி கொஞ்சப் பேருக்கு வயிறும் உடம்பும் பெருசாகி கஷ்டப் படுத்தும்.. அவக் கால் ரேண்டும் வீங்கி… ஒரே அரிப்பு வேற.. ரொம்ப கஷ்டபட்டா!
நான் எப்பவும் போல தான் இருக்கேன்.. நான் எல்லா வேலையும் செய்யலாம்.. ஒரு பிரச்சினையும் இல்லங்க.. எனக்காகச் சந்தோஷ படுரத விட்டுட்டு வருத்த படுறீங்களே?”
அலைகள் ஓய.. ‘ஹப்பாடி..’ என்று மூச்சுவிட்டான். ஒரு கவலை போனது.. இனி அடுத்து?
அவன் மடியில் வசதியாக மனைவியை அமர்த்திக்கொண்டவன் அவள் இதழ் வருடிக்கொண்டே “அப்போ எப்பவும் போல இருக்கலாமா? உனக்கு கஷட்டமாயிருக்காதா?” குரல் ஏகத்திற்கும் குழைய
“ம்ம்..இருக்கலாம்” என்றாள் முகம் சிவக்க
கை அதன் போக்கின் வயிற்றைத் தடவிக் கொண்டிருக்க, “ஜானு,,” என்றான் இன்னும் குழைவாய் அவன் கன்னத்தில் மூக்கை உரசிக் கொண்டே..
“ஆனா அதுக்குன்னு நேரங் காலம் இருக்கு… இப்போவே ஆரம்பிக்காதிங்க. வீட்டுல எல்லோரும் எழுந்திரிக்கர நேரம்.. பசிக்குதுனு சொன்னீங்க வாங்கச் சாப்பிடலாம்..” ஸ்ட்ரிக்டாகச் சொல்ல நினைத்தவள் முகம் ஏகத்திற்கும் செம்மையைப் பூசிக்கொள்ள.. இதழும் சொல் பேச்சு கேட்காமல் விரிந்தது.
ஏழு மாத பிரிவின் தாக்கம், மனைவியின் அருகாமை  தந்த மயக்கம் அவள் கூறியது அவன் காதில் விழுந்தால் தானே.. மடியிலிருந்து எழ எத்தனித்தவளை அள்ளிக்கொண்டு,  “பசிக்குது தான்.. சாப்பிடத் தான் போறேன்..”
அவன் சிரிக்க.. அவள் கண்கள் அவனை விழுங்க.. மேனி தள்ளாட.. இதழ் நாணி கோண.. அவலாய் இருவர் உள்ளத்தோடு உடலும் மோத…
அவன் மயக்கத்தை அவளுக்குத் தந்த பின்பே அவளை விடுவித்தான். கடந்த 24 மணி நேரத்தைக் கடக்க முடியாமல் தவித்த தென்ன.. இப்பொழுது மணி நேரத்தை நொடியாய் கழித்த வித்தை தான் என்ன?
“சொன்னா கேக்குறது இல்ல..” சிவப்பேரிய முகத்தில் தவழ்ந்த புன்னகையோடு பொய்யாய் கோபித்துக்கொண்டே.. “நான் வெளியில போறேன்.. சீக்கிரம் வந்து சேருங்க!”
சொன்னவளை மீண்டும் இழுக்க… “இன்னும் என்ன?”.. வெட்கத்தில் பேச்சு வருவேனா என்றது
“நான் குடுப்பேன்னு சொன்னது.. நீயா கேட்ட பிறகும் குடுக்காட்டி நான் என்ன புருஷன்.. சரித்திரம் என்னைத் தப்பா பேசாதா?”
“நான் என்ன கேட்டேன்?” சத்தம் அவன் காதைத் தொட்டதா? வாயிலிருந்து வெளி வந்தால் தானே காதை தொட..
மீண்டும் படுக்கையில் படுக்க வைத்து அவள் சிரிக்கச் சிரிக்க வயிற்றில் அவன் இதழால் விடாமல் கோலம் போட.. அவள் என்ன நெளிந்தும் நிறுத்தாதவன் அவன் ஜூனியர் அப்பா முகத்தில் எட்டி உதைத்த பின்னே விட்டான் அவன் அன்பு காதல் மனைவியை.
காதல் சுகமானது. கொஞ்ச.. மிஞ்ச.. தாங்க… ஒருவன் இருந்தால் காதல் சுகமானதே.. ஜானுவை கேட்டால்… டேனியைக் கேட்டால் அவர்கள் கூறுவார்கள் காதல் எவ்வளவு சுகமானது என்று!
இரவாக நீ… நிலவாக நான்..
உறவாடும் நேரம் சுகம்தானடா…

Advertisement