Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_2
அவன் இன்பம் துன்பம்… சிரிப்பு அழுகை.. அவன் வாழ்க்கை.. எல்லாமே அவள் தான். அவன் உலகமே அவள் தானே.. பாவம் இதை எதையுமே அவன் உணராதது யாரின் துரதிஷ்டம்?!
தன்னை சமன் படுத்திக் கொண்டவன், “ஷ்… சுதா… உடம்பு தான் சரி ஆகிடுச்சு இல்ல.. இன்னும் ஏன் அழர? எல்லாம் சரி ஆகிடும்” சமாதானம் சொன்னான்.
கண்ணை உயர்த்தி அவன் விழியில் அவள் விழி கலக்கக் கேட்டாள்.
“நிஜமாவே தெரியலியா என்னை? தெரிஞ்சுக்க விருப்பம் இல்லையா? நான் உங்களுக்கு யாருனு தெரியவே வேண்டாமா?” விசும்பலோடு வந்த அவள் குரல் அவனை அசைத்தது.
பதில் ஏதும் சொல்லவில்லை. ‘சொல்’ என்பது போல் பார்த்து நின்றான்.
அவள் நிலை தடுமாற… “வா வந்து உட்க்கார் முதல்ல… உட்கார்ந்து பேசலாம்..”
அவளை கட்டிலில் அமரவைத்து அவள் காலடியில் முட்டி போட்டவன்.. வாஞ்சையாய் அவளைப் பார்த்தான்.
“சாரி… உன்ன வந்து பார்த்திருக்கணும்… கொஞ்சம் சுயநலமா இருந்திட்டேன். எப்பவும் எல்லோரும் உனக்கு இருக்க மாட்டாங்க. ஆனா உன் உயிர் இருக்க வரை இந்த உடம்பு உன் கூடவே இருக்கும். அத நீ தான் பார்த்துக்கணும். எப்படி உடம்பைக் கெடுத்து வச்சிருக்க பாரு. நிக்கக் கூட இன்னும் முடியல. சுத்தமா தெம்பே இல்ல உடம்பில! இது ரொம்ப நல்ல ஹாஸ்பிட்டல். இங்க சாப்பாடும் மோசம் இல்ல. நீ சாலிட்ஸ் சாப்பிட ஆரம்பிச்சிட்ட தானே… ஏன் உன் உடம்பு இப்படி இருக்கு? உன் வருத்தம் எதுவா வேணும்னாலும் இருக்கட்டும்… சாப்பாடில, உன் ஹெல்த்தில விளையாடக் கூடாது. நான் சொல்றது புரியுதா? மூனே மாசத்தில முன்ன எப்படி இருந்தியோ அதே மாதரி தெம்பாயிடனும்… புரியுதா? என் பேச்ச கேட்ப தானே?”
“ம்ம்ம்..”
“இல்ல… வாய் திறந்து சொல்லு. நான் ஒழுங்கா சாப்பிடுவேன்னு சொல்லு!”
தலையாட்டி விட்டு.. 
“நீங்க ஒழுங்கா சாப்பிடுவீங்க..” அழகாய் சிரித்தாள். ஆறு மாதம் பின்… பாரம் எல்லாம் கர்ப்பூரமாகக் கரைந்து போக.. அழகாய் சிரித்தாள்.
வாய்விட்டுச் சிரித்தவன்.. “வாலு… ஒழுங்கா சொல்லு! அப்போ தான் நீ சொல்ல வந்தத சொல்ல விடுவேன்”
அது தானே.. இவனாவது பிஸினஸ் பேசாமல் இருப்பதாவது!
“நான் ஒழுங்கா சாப்பிடுவேன். உடம்பை கெட்டுத்துக்க மாட்டேன். மூனே மாசத்தில பூசனிக்காய் மாதரி ஆகிடுவேன்”
வாய் விட்டு சிரித்தான். ஆறு மாதம் பின் இன்று தான் அவனின் முதல் சிரிப்பு!
சிரித்துக்கொண்டே கேட்டான், “ஏன் வேற காயே தோணலியா?”
முகத்தில் மென்மையோடு ஒரு வித மகிழ்ச்சி குடிகொண்டது..
“வேணும்னா தர்பீஸ் ஆகட்டுமா? பசிச்சா.. அப்படியே கடிச்சுக்கலாம்?” ஆர்வமாய் அவனிடம் கேட்டாள்.
“இப்போவே பசிக்குதே.. என்ன பண்ணலாம்…?” ஏதோ உளறல்… ஆனால் இருவருக்கும் கவிதை!
அவள் கையை பிடித்துப் பார்த்தான்… “கடிக்க வெறும் எலும்பு தான் இருக்கு.. முருங்கைக்காய் மாதரி இருக்கு உன் கை?”
“முருங்கைக்காயா? உங்களுக்கு தான் அது பிடிக்கும். எனக்கு நம்ம தோட்டத்து கொய்யா தான் ரொம்ப பிடிக்கும்” என்றாள்.. கண்ணில் கனவோடு
“நிறைய காச்சு தொங்குது… வா பறிச்சு தாறேன்…”
“வேண்டாம்.. நானே ஏறி பறிச்சுப்பேன்… உங்களுக்குத் தெரியுமா? நான் நல்லா மரம் ஏறுவேன்.. நம்ம மாமரம் இருக்கில்ல அதுல ஒரு குருவி கூடு…” என்று கண்விரித்து அவன் தோட்ட கதையைப் பேசினாள். தன்னை மறந்து ரசித்தான்.
“ஒத்த கொய்யாக்காக ஒரு டப்பா லட்டை என் கிட்ட இருந்து மிரட்டி வாங்கினீங்க.. தெரியுமா?”
“நீ…? உன்ன பார்த்தா அப்படி ஒன்னும் பயபடுர ஆளு மாதரி இல்லையே… நீ என்னை லட்டுக்கு விலை பேசி இருப்ப…” என்றான் சரியாய்.
“ஆமா… நீங்க உங்க லட்ட பார்த்ததும்.. மதிமயங்கிட்டீங்க… லட்டு அப்படியே உங்களுக்குள்ள வழுக்கிட்டு போயுடுச்சு… அப்புரம் உங்களையும் லட்டையும் பிரிக்கவே முடியல..” அவள் சொன்ன அர்த்தம் அவனுக்குப் புரியவில்லை..
“எனக்கு லட்டுனா ரொம்ப பிடிக்கும்” என்றான்
“தெரியும். என்னையும் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்” என்றாள் அவன் கண் பார்த்து..
“அப்போ பிடிக்கும்… இப்போ பிடிக்குதா?” இதயம் படு வேகமாய் துடித்தது… அவனிடம் சொல்ல வேண்டும்.. நான் தான் உன் லட்டு என்று!
“உன்ன கூட ஒருத்தருக்கு பிடிக்காம போகுமா என்ன? உன்ன பத்தி பேசரவங்க எல்லாம் அப்படியே உனக்குள்ள லயிச்சு போயிடுராங்களே…”
“நீங்க?” கண் மின்னியது. ஏதோ வெளிச்சம் தெரியத்தான் செய்தது.
“நானும் தான். கூடவே அப்படி என்னடா இவட்ட ஸ்பெஷல்னு கண்டுபிடிக்க ஆசை..” என்றான்.
ஆறு மாதம் முன் அவன் கையணைப்பில் இதை தானே கூறினான்…
“கண்டுபிடிங்களேன்.. யார் தடுத்தா?” கண் சிரிக்க… இதழ் விரியக் கூறினாள்.
“என் கூடவே இரு கண்டுபிடிக்கிறேன்…” என்றான்.
இருவர் முகத்திலும் புன்னகை.
அழகான ஸ்வரத்தின் நடுவே அபஸ்வரமாக ஒலித்தது…
“நீ வந்துட்டியாமா? நீ என்ன கண்ணா இன்னும் போகலியா?” பாட்டியின் சத்தம்.
அவள் பாட்டியைப் பார்க்கவே இல்லை. கண் முழுவதும் அவன் மேல் தான்.
 
பிடித்திருந்த அவள் கையை விட்டுவிட்டு, “இல்ல பாட்டி ஃபோன விட்டுட்டு போயிட்டேன்… எடுக்க வந்தேன்..” என்றான் எழுந்து கொண்டே.
அவளை நோக்கி, “என் பேச்ச நீ கேட்டா… நீ சொல்ரத நான் கேப்பேனு சொன்னேனே… சொல்லு சுதா..  சொல்லிட்டு இருந்தியே… நீ எனக்கு?” எனவும் பாட்டிக்குத் தூக்கி வாரிப் போட…
“இது என்ன கேள்வி… அவ உனக்கு ஃப்ரெண்டு! இதுல என்ன சந்தேகம் உனக்கு?” என்று அவன் கவனத்தை திருப்ப ஆரம்பித்தார்.
நர்ஸ் உள்ளே நுழைந்தாள் மருந்து கொடுக்க… அவன் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்!
கண்மூடி அமர்ந்திருந்தவனுக்கு மனம் ஏகமாய் அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. அவளைப் பார்த்தாலே இது ஒரு அவஸ்தை! இனம் புரியாத ஒரு அரிப்பு உள்ளுக்குள். ‘ஃப்ரெண்டா? ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டு.. என்னை ரொம்ப பிடிக்கும் போல.. அழுதுட்டா… என் கிட்ட அவ உணர்வ கொட்டிட்டா…’ உள்ளுக்குள் ஒரு வித பூரிப்பு!
சட்டையின் ஈரம் காயாமல் அங்கு உப்பு கரை தெரிந்தது. தொட்டுப் பார்த்தான். மெல்ல நீவி விட்டான். அவள் தலையை நீவுவதாய் தோன்றியது. ‘அழ வச்சிட்டேனா.. என் கூடவே இருந்தா அழமா இருப்பாளா?’ மனம் கடிவாளம் இல்லா குதிரையாய் எங்கும் பாய்ந்தது. 
“அஷோக்… என்ன பா.. ஃப்ளைட்டுக்கு டைம் ஆகலியா? இன்னும் இங்க இருக்க?” வந்து நின்றாள் பிருந்தா.
“பிருந்தா?” அவன் குரலில் அதிர்ச்சி..
“என்ன அஷோக்?” அவன் அதிர்ச்சியில் அவளுக்குக் குழப்பம்!
பித்து பிடித்தவன் போல் நின்றான். ‘பிருந்தா… பிருந்தா…’ மீண்டும் மீண்டும் அவள் பெயரை மனதில் பதியவைத்தான். ‘எப்படி இவளை மறந்தேன்? சுதாவைக் கண்டால் உலகத்தையே மறப்பேனா?’
தலை சுற்றியது. பிருந்தா தானே அவனுக்கு உலகமாய் இருக்க வேண்டும்? இல்லையே.. ஏன்?
சுதாவோடு அரை மணி நேரம் இருந்திருப்பானா? அவன் இயல்பில் இருந்தான்.. நான்கு வரி பேச்சில் அழ விட்டாள்.. சிரிக்க வைத்தாள்.. உணர செய்தாள்.. அவளுக்குள் இழுத்துக் கொண்டாள்.
பிருந்தாவுடன் ஆறு மாதமாக உணராததை எல்லாம் இவளிடம் அரை மணி நேரத்தில் உணர்ந்தான். 
“அஷோக்? என்ன ஆச்சு? யூ ஓக்கே?”
“? என்ன? என்ன பிருந்தா? என்ன சொன்ன?” அவனுக்கு மனம் தடுமாற ஆரம்பித்தது.
சுதாவின் வலி நிறைந்த கண்… அவனைப் பார்த்துச் சிரித்த கண்.. அது மட்டுமே அவன் சிந்தனையில்.
“அஷோக்? என்ன ஆச்சு?” அவனை உலுக்கி அவன் எண்ணவோட்டத்தைக் கலைத்தாள்.
“ம்ம்? என்ன? என்ன பிரிந்தா?” மீண்டும் அதையே கேட்டான்.
ஏதோ சரியில்லை என்று அவளுக்குத் தெரிய…
“ஏய்.. என்னபா பண்ணுது?”
“நோ… நோ.. ஐ ஆம் ஆல்ரைட்!” என்றான்.
நர்ஸ் வெளியே செல்லும் முன், “குட் ஈவ்னிங் டாக்டர்” என்றாள்
“அவங்களுக்கு எப்படி இருக்கு?” பிருந்தா நர்சிடம் கேட்கவும்..
அஷோக்கின் பார்வை கட்டிலில் அமர்ந்திருந்த சுதா மேல் நிலைத்தது. அவளும் இவனைத் தான் பார்த்துக்கொண்டிருந்தாள். கவலையும் சோர்வும் அவள் முகத்தில் அப்பியிருக்க.. இவனுக்கு காட்டாற்று வெள்ளம் போல உள்ளம் கரை புரள ஆரம்பித்தது. என்னவெல்லாம் சொல்லி அவன் மனதை கட்டுக்குள் வைத்திருந்தான். எல்லாம் புரண்டு வந்த ஆற்று வெள்ளம் அடித்துச் சென்று விட்டது. அவளை விட மனதேயில்லை. ஏனென்றே தெரியாமல் சுதா வேண்டும் என்றது மனம். அவளிடம் வரும் உணர்வு வேறு யாரிடமும் வருவதில்லையே..
பார்க்க அழகில்லை. உடலில் சதை கூட இல்லை. பெண்களுக்கான அழகு என்ற இலக்கணத்தில் அவளுக்குத் தான் கடைசி இடம். ஆனாலும் அவன் கண்ணுக்கு இது எதுவுமே தெரியவில்லை.
அவளை காணும் ஒவ்வொரு முறையும் அவன் அவன் வசம் இருபதில்லை. அவனை நினைத்து அவனுக்கே வெறுப்பு வந்தது.
“அஷோக்?”
அஷோக்கின் பார்வை பிருந்தா மேல் விழ, அவனைக் குழப்பமாய் பார்த்தவள் முகத்தில் ஏதோ கலக்கம்.
“என்ன அஷோக்… அப்படி பாக்கர?”
அவன் கண் மட்டும் தான் அவளைப் பார்த்தது. எங்கோ மிதப்பது போன்ற உணர்வு.. மனம் எங்கெல்லாமோ சென்றது.
‘அஷோக் என்னுடைய உயிர் பா.. அவரில்லாமா நான் இல்ல பா..’ பிருந்தாவின் அழு குரல் அவன் மூளையை குடைந்தது. பின்னங்கழுத்து வலித்தது.
‘அஷோக்.. நீ வண்டில்ல ஒவ்வொரு பூவா தாவ… உங்க அப்பா குணம் உனக்குள்ள வந்துது… தேவ இல்லாம ஒரு பொண்ணு வாழ்கைல விளையாடின… உனக்கு அம்மா இல்ல. நினைவுல வச்சுக்கோ.. ஒரு வீட்டுல ஒரு சுசிலா போதும்’ அம்மா உறைத்தது சம்மட்டியாய் இதயத்தில் இறங்கியது. சுளீர் என்று பின்னந்தலை ஒரு முறை வலித்தது.
பின்னங்கழுத்தை தேய்த்துக் கொண்டே கழுத்தை ஆட்டிக் கொண்டான்.
‘பிருந்தா.. நீ தான் என் மனைவி. நான் தான் உன் கழுத்தில தாலி கட்டுவேன்… என்னை நம்பு! உங்க அம்மா அப்பா முடியாதுனு சொன்னாலும்… யார் எதிர்த்தாலும் உன் கழுத்தில என் தாலி தான்!’ அவன் வாக்குறுதி??!!
‘நிஜமாவே தெரியலியா என்னை? தெரிஞ்சுக்க விருப்பம் இல்லியா? நான் உங்களுக்கு யாருனு தெரியவே வேண்டாமா?’
அவனை ஏக்கத்தோடு பார்த்த அந்த விழிகள்… எதையோ சொல்லத் துடித்த அந்த உதடு.. அவனை இறுகப் பிடித்த அவள் விரல்கள் அவனைப் புரட்டிப் போட்டது. நெஞ்சில் பட்ட ஈரம் தீயாய் சுட்டது. ‘சொல்லு யார் நீ எனக்கு?’
‘பிருந்தாவை மணப்பதா? சுதாவை தானே என் மனம் விரும்புகிறது? பிராந்தாவிடம்.. அவள் அப்பாவிடம் கொடுத்த வாக்கு? என்ன செய்து கொண்டிருக்கிறேன்? ஐயோ!!!! எனக்குள் என்ன நடக்கிறது?’ 
‘என் வாழ்வில் இரண்டு பெண்களா? நானும் என் அப்பா போல் தானா? ஒரு பெண்ணை மணக்கச் சம்மதித்த பின் வேறு ஒருத்தியிடம் மனம் அலைபாயுதே… அதுவும் அவளுக்கு ஒரு காதலன் இருக்கும் பொழுதே… என்ன ஈன புத்தி என் புத்தி… அம்மாவிற்குத் தெரிந்தால்.. மன்னிப்பாரா? சுதாவுக்குத் தெரிந்தால்.. என் முகத்தில் விழிப்பாளா? பிருந்தா? உனக்கு எப்படி நான் துரோகம் செய்வேன்…’
இது போதாதென்று எவளோ ஒரு அழகி அவ்வப்போழுது வந்து வஞ்சனையில்லாம் முத்தம் தந்து செல்கிறாள். என் மனம் இதை தான் யாசிக்கின்றதா? வெளியே யாரிடமும் பகிரமுடியாத கேவலம்! நான் அவ்வளவு கேவலமானவனா?
பதில் இல்லாதா ஆயிரம் கேள்விகள்…. உடல் குளிர.. வியர்வை வழிய.. தலை கனக்க… இரத்தமெல்லாம் சூடாக.. குற்ற உணர்வு அவனைத் தகிக்க.. அவனுக்குள் ஏதோ செய்தது.
இவளோடு இவனுக்குத் திருமணம். அவள் திருமணம் கார்த்தியோடு!! இதயம் அடைத்தது. 
அவனுக்கு அவனையே தெரியவில்லை. இல்லாத பதிலை மூளையின் தேடினான். மருத்துவர் செய்யாதே என்றதை செய்தான்! அதகமாக மூளையை வருத்திக்கொண்டான்.
தலை ‘வின்’ என்று வலி கொடுக்க ஆரம்பித்தது. ஒட்டுமொத்த இரத்தமும்  அவன் தலையை நோக்கியா பாய்கிறது? தலை சூடாக.. முகம் சிவக்க.. மின்னல் போல வெட்டி வெட்டி தலை வலிக்க ஆரம்பித்தது.
மாதங்களுக்கு பின் மீண்டும் ஏன் இந்த வலி? முதல் நாள் சுதாவைப் பார்த்த அன்று வந்த அதே தலை வலி. அவனால் தாங்க முடியவில்லை. மண்டை சுள்ளென்று வலிக்க, வயிற்றை புரட்டிக்கொண்டு வர.. கால்கள் பலம் இழக்க.. கண்கள் இருள.. அவன் தலை வெடித்துவிடும் போல் வலிக்க.. துடித்துப் போனான். தலை சரிய.. உடல் மயக்கத்தைத் தழுவியது.
‘சொன்னேனே.. கேட்டியா?’ என்ற பார்வை பாட்டியிடமிருந்து.. கண்ணீர் வழிய!
“உன்ன படுத்த படுக்கையா பார்த்தவனுக்கு நீ யாருனே தெரியல… ஆனா அவனால தாங்கவே முடியல.. தல வலில புழு மாதிரி பிள்ளை துடிச்சிட்டான். ரெண்டு நாள் கண் முழிக்கவே இல்ல. சுசி, மகன் கூடவே சாக தயராகிட்டா. நாங்க அவன் பிழைக்க மாட்டானு தான் நினைச்சோம். பிழைச்சான். அதுக்கப்பரமும் உன்ன பார்த்தாலே அவனுக்குத் தலை வலி வரும்! ரொம்ப கஷ்டப்படுவான். இந்த ஒரு மாசமா அவன் இங்க வரவும் இல்ல.. உன்ன பார்க்கவும் இல்ல.. தல வலியும் இல்ல. கண்ணன் பிருந்தா கூட சந்தோஷமா இருக்கான். அவன் நிம்மதி பத்தி உனக்கு அக்கரையே இல்லையா? அவனை பிடிக்கும்னு சொன்னா போதுமா? அவன் உயிரோட வேண்டாமா? உனக்கு என்ன குறை? ரெண்டு பையனுங்க உன்ன விரும்பரானுங்க.. அவங்க ரெண்டு பேர்ல உனக்கு பிடிச்சவன கல்யாணம் பண்ணிட்டு நீயும் சந்தோஷமா இருமா. அவன விட்டுடு சுதா! பழைய உண்மை எல்லாம் அவனுக்கு தாங்கர சக்தி இல்ல சுதா… அவனை கொன்னுடாத!”
இன்று காலை சுதாவிடம் பாட்டி உரைத்தது. அப்பொழுது அவள் அதை முழுதாக நம்பவில்லை.
‘பாட்டி நிஜம் தான் சொன்னாரா?’ பயந்து போனாள்.
அவனோடு அறையிலிருந்த இருவர் துடிக்க.. ஒருத்தி இறந்தே போனாள். பாட்டியும் பிருந்தாவும் இந்த வலியை ஒரு முறை பார்த்திருக்கின்றனர். அன்று சாவைத் தொட்டு விட்டு வந்தான். உடல் நடுங்க பிருந்தா வாய் விட்டுக் கதறி அழுதாள். அவள் ஒரு மருத்துவர் என்பது எல்லாம் மறந்து போனது. “அஷோக்…. அஷோக்… அஷோக்..” கையில் ஏந்தி துடித்துக் கதறி அழுதாள்.
பார்த்துக்கொண்டிருந்த சுதா பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள்… வெடித்துவிடும் நெஞ்சோடு. ‘மனைவி கணவனுக்கு தலை வலியாய் போனாள்’ என்ற கேலி பேச்சைக் கேட்டுச் சிரித்திருக்கிறாள். இன்று அனுபவித்தாள். சிரிப்பெல்லாம் வரவில்லை. ‘என்னை விட்டுப் போய்விடுவானா… என்னால் இறந்து விடுவானா? நான் என் கணவனுக்கு உயிர்க் கொல்லியா?’ கண்சிமிட்டாமல் அமர்ந்தே இருந்தாள். எல்லாம் கானல் நீராய் போனது.
எத்தனை அடித்தாலும் தாங்குவாளா? விதி சோதித்தது. அவள் கண்முன்னே அவள் கணவனை அவசர பிரிவிற்கு எடுத்துக் கொண்டு செல்ல… எந்த உணர்வுமே வெளிக்காட்டாமல் அமர்ந்திருந்தாள். 
அவன் அவளைத் தான் இன்னும் காதலிக்கின்றான். அது அவள் மட்டுமே அறிந்த உண்மை. அவனால் அவளை மறக்கவே முடியாது. அவன் உள்ளுக்குள் என்றும் புதைந்தே இருப்பாள். ‘அவன் உடலை அவள் பிரிந்தால் அவன் உயிர் மிஞ்சுமே..’ தவறாக நினைத்துவிட்டாள். அவன் உடலை பிரிந்தால்.. உடல் மட்டும் தான் மிஞ்சும்… அவளுக்குமா அது தெரியவில்லை?
அவள் வாழ்க்கையினுள் தென்றலாய் வந்தான். வந்த வேகத்திலேயே வேளியே போகிறான். அவளைக் கேட்காமலே கனவைப் போல வசந்தமாய் வந்தவன்.. இதோ வந்த வழியே போகிறான் வெறும் வேதனை மட்டுமே அவளின் சொந்தமாய் விட்டுவிட்டு.
“என்னை விட்டுடாத லட்டு.. நீ இல்லேனா நான் இல்லாம போய்டுவேன்..”
“இல்ல கண்ணன்.. நான் இருந்தா தான் நீங்க இல்லாம போய்டுவீங்க!”
தீர்மானத்தோடு கண்ணை மூடி படுத்துக்கொண்டாள். கண்ணின் இடுக்கிலிருந்து வெள்ளிக்கோடு தலையணையை நனைத்து.
கண்ணனோடு கை கோர்த்து சென்றாள்.. ஒற்றையடிப் பாதையாய் மாறியது… ஒருவர் மட்டுமே செல்ல முடியும்! உயிர் துடிக்க.. போவென்று அவனை விட்டு விட்டாள்.
நம்மை தொடரும் நிழல் கூட நிரந்தரம் இல்லாத வாழ்வில்.. நிலையானது ஏதேனும் உண்டா? இந்த உண்மையை உணர்ந்தவன் ஞானி ஆகிறான். 
ஜெனனமும் பூமியில் புதியது இல்லை
மரணத்தை போல் ஒரு பழையது இல்லை
இரண்டும் இல்லாவிடில் இயற்கையும் இல்லை
இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை
….
பிறப்பு இல்லாமலே நாள் ஒன்றும் இல்லை
இறப்பு இல்லாமலும் நாள் ஒன்றும் இல்லை
நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை
மறதியை போல் ஒரு மாமருந்தில்லை…
..
மறதியை போல் ஒரு மாமருந்தில்லை… காய்ந்து போகாத காயங்களும் இல்லை!
ஜனிப்பதால் மரிக்கிறோம். அன்பு ஜனிப்பதில்லை.. அதனால் அது மரிப்பதில்லை.

Advertisement