Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 58_1 
“நாளைக்கு என்னோட வரியா சுதா? காதல் பண்ணு.. கல்யாணம் பண்ணுனு கேட்க மாட்டேன். எனக்கு அதுல எல்லாம் விருப்பமும் இல்ல.. எண்ணமும் இல்ல! ஆனா உனக்கு ஒரு துணையா இருப்பேன். என் கூட வரியா சுதா?”
சுதா கை பிடித்துக் கண்கலங்கக் குரல் கரகரக்கக் கேட்டுக் கொண்டிருப்பது தீபக்கே தான்.
அவனோடு போக மறுக்க, “உன் குடும்பம் நாங்க தான்.. உன் அத்தை மாமா தான் உனக்குப் பிடிக்குமே,, ஏன் சுதா பிடிவாதம் பிடிக்கர? அம்மா அப்பா வீட்டில இல்லைனா என்ன.. அது உன் வீடு தான் சுதா. வா டா!”
தன் வாழ்வில் இப்படி எல்லாம் இறங்கிச் சென்று யாரிடமாவது யாசித்திருப்பானா? மற்றவரிடம் எப்படியோ… சுதாவிடம் மட்டும் இப்படி ஒரு மாற்றம். அவள், அவன் உறவு என்ற எண்ணம் அவன் மனதில் அழுத்தமாய் பதிந்துவிட அன்பையும் அக்கரையையும் பொழிந்தான்.
“இல்ல.. நீங்கப் போங்க. நான் இங்க தான்.. இருப்பேன்.” முன் போல் இல்லையென்றாலும் பேச முடிந்தது. சரளமாகப் பேச இன்னும் சில மாதம் ஆகும் என்றுவிட்டனர்.
சுதா பட்ட பாடெல்லாம் போதும்.. அவளைப் பார்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணம் உள்ளத்தின் ஆழத்தில்! அதனாலேயே வாரம் தவறாமல் வந்துவிடுவான்.  ஆசிரமம் செல்லும் வேளையெல்லாம் அம்மா அப்பா அவளைப் பற்றிக் கேட்காத நாளில்லை. ஆறு மாதத்தில் சதீஷ் உடல் நிலையில் முன்னேற்றம் தெரிய ஆரம்பித்திருந்தது. இப்பொழுது இவள் நிலை ஓரளவிற்கு அவர்களுக்கும் தெரிய… அவர்களுக்கு இவளை இன்னும் பாட்டியிடம் விடுவதில் விருப்பமில்லை. 
அவனுக்கும் இன்னும் அவளை இங்கு விடுவதில் கொஞ்சம் கூட விருப்பமில்லை. காரணம் இருந்தது. அது அஷோக்கின் திருமணம்.
“எல்லாம் தெரிஞ்சும் இப்படி பேசினா எப்படி சுதா? நீ விரும்பரவன் வேற பொண்ண கல்யாணம் பண்ணப் போரான்? என்ன பண்ணலாம் சொல்லு.. அவன் சட்டையை பிடிச்சு சண்டை போட போறியா? என் கூட வா.. உனக்கு எப்படி வேணுமோ அப்படியே இரு. நீ விருப்படர ஒரு நல்லவனுக்கு நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்.. இல்ல கல்யாணம் வேண்டாமா.. அதுவும் உன் இஷ்டம். வா டா”
அவளுக்கு புரிந்தது தீபக்கின் மன உளைச்சல், ‘சுதா நிலைக்குத் தான் தான் காரணம்’ என்று அவன் வருந்துவது அவளுக்கு நன்றாகவே புரிந்தது. அவளுக்கும் அப்படி தான் தோன்றியது.. அவள் நிலைக்கு அவன் தான் காரணம் என்று. அதனாலேயே அவனை இன்னும் பிடித்தது. அவன் மட்டும் நல்லவனாய் இருந்திருந்தால்… இன்று அவன் மனைவியாய் அல்லாவா இருந்திருப்பாள்? கண்ணன் என்பவனை அவள் கண்டிருக்கவே மாட்டாளே. தீபக்கால் தான் கண்ணன் அவள் வாழ்வில் வந்தது. அவனால் தான் கண்ணன் அவள் கழுத்தில் மங்கள நாண் பூட்டி மனைவியாக்கியது. அதனாலேயே தீபக்கைக் கோபிக்க அவளால் முடியவில்லை.
அவன் எப்படி எல்லாமோ கேட்டுவிட்டான் அவளிடம் ஒரே பதில் தான். எப்பொழுதும் போல் கேட்டு கொண்டிருந்த பாட்டிக்குத் தான் மண்டை குடைச்சல். அவர்கள் பேச்சு கேட்கவில்லை. ஆனால் என்ன பேசுகிறார்கள் என்பது புரிந்தது. அவள் மறுப்பு, அது தான் அவர் கோபத்தை ஏற்றிக்கொண்டிருந்தது. நடப்பு புரியாமல் இப்படி பிடிவாதம் பிடிக்கின்றாளே என்ற கோபம்!
சுதா நடமாட ஆரம்பித்துவிட்டாள். ஆறு கொடிய மாதங்கள் எப்படியோ முடிந்து விட்டது. சுதந்தர காற்றை நுகரலாம். எல்லா வருத்தத்தையும் பின் தள்ளி.. மீண்டும் புதிதாய் வாழ்வை ஆரம்பிக்கலாம்! அவள் கணவன் வீடு இங்கிருக்க.. அவளுக்கு மாமா வீட்டில் என்ன வேலை?
யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். கண்ணனிடம் எல்லாவற்றையும் கூறி எல்லாவற்றையும் சீர் செய்துவிடும் எண்ணம் தான் சுதாவிற்கு. அப்படி எல்லாம் அவள் கணவனை யாருக்கும் விட்டு கொடுக்கும் நோக்கம் எல்லாம் இல்லை. கண்ணனால் அவளை மட்டும் தான் காதல் செய்ய முடியும்! அவளில்லாமல் அவன் ஏது? அவள் அவனின் அன்றில்.. அது அவளுக்கு மட்டுமே தெரியும்! அவனின் ஒவ்வொரு அணுவும் அவள் பெயரை உச்சரிக்குமே. இவர்களுக்குத் தான் தெரியவில்லை! ‘நிச்சையமாம்.. திருமணமாம்?’ 
பாட்டி அவளோடு பேச்சு வார்த்தை நடத்தும்வரை தான் இந்த துணிச்சல்!
தீபக்கோடு செல்ல மறுத்தாள். ‘நாளை கண்டிப்பாகக் கண்ணன் வருவான்’ என்று காத்திருந்தாள். அன்று மாலையே வந்தான். அவள் அறையில் இல்லாத வேளை வந்தான். 
மருத்துவமனை வந்த அஷோக்.. சுதாவின் டிஸ்சார்ஜ் விபரம் கேட்டு அதன் சம்பிரதாயம் அனைத்தையும் மூர்த்தி வைத்து முடித்துவிட்டு, சுதாவிடமும் பாட்டியிடமும் விபரத்தைக் கூறியதும் சென்று விட வேண்டும் என்று நினைத்துத் தான் அவள் அறையை நோக்கி நடந்தான். ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் கடவுளின் அவசியம் இருபதில்லையே…
அறையில் நுழைந்த அஷோக்கைப் பாட்டி, “வா டா கண்ணா…” என்று ஆரம்பிக்க பேச்சு அதன் போக்கில் சென்றது.
இடையே மருத்துவமனையிலிருந்து பிருந்தாவின் அழைப்பு வர தானும் மருத்துவமனையில் சுதா அறையில் இருப்பதாய் அறிவித்து, செல்லும் வேளை அவளைப் பார்ப்பதாய் கூறி வைத்தான்.
பாட்டியைப் பார்த்து விட்டுச் செல்லும் நோக்கத்தொடுத் தான் வந்தான். வந்தவன் கண்கள் சுதாவைத் தேடியது.
கடைசியாகப் பார்த்த வேளை கட்டில் கிடையாய் கிடந்தாள். இன்று கட்டில் காலியாக இருக்க அவனுக்குள் ஒரு ஆர்வம்.. ‘எங்குச் சென்றாள்’… கேட்டுவிட்டான் பாட்டியிடம்.
“நாளைக்கு வீட்டுக்கு அனுப்பதுக்குள்ள என்னன்னமோ டெஸ்ட் எடுக்கணுமாம்.. காலையில இருந்தே இது தான் நடக்குது. அதுதான் நர்ஸ் கடைசியா, ஏதோ டெஸ்ட் எடுக்க வீல் ச்சேர்ல கூட்டிட்டு போயிருக்கா.. வந்திடுவா!”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கவும் பாட்டி கேட்டார், “பத்திரிக்கை அடிச்சாச்சா? உனக்கு பிருந்தாவ பிடிச்சிருக்கு தானே?”
“ஆமா பாட்டி, பத்திரிக்கை அடிச்சாச்சு. ஊருக்கு அம்மா எடுத்துட்டு போயிருக்காங்க. நாள் கம்மியா இருக்கா… அதனால ரொம்ப வேகமா வேலை நடக்குது. கல்யாணத்துக்கு வெறும் நெருங்கின சொந்தம் மட்டும் தான். அவங்க ஊர்ல மலை மேல கோவில்ல. அது தான் அவங்க வழக்கம் போல! ரொம்ப இட வசதி எல்லாம் இல்லை. கல்யாணம் மலையில. கீழ கொஞ்ச தூரத்தில ஒரு பெரிய சத்திரம் இருக்கு.. அங்க தான் மத்த சம்பிராதயங்க! ரிஷப்ஷன் சென்னையில பெருசா பண்ணிடலாம்னு ப்ளான். எல்லாம் அவ ஆசைபடி தான்…”
“பிருந்தா நல்ல பொண்ணு. நல்ல குடும்பம்… அவ உனக்கு எல்லா விதத்திலும் பொருத்தம் கண்ணா.. அவ அன்னைக்கு அவ ஃப்ரெண்டுட்ட உன்ன விரும்பரதா சொல்லிட்டு இருந்தா.. காதுல விழுந்துது.. அவ உன் மேல உயிரே வச்சிருக்கா கண்ணா.. அவ கூட நீ வாழ்ந்தா சந்தோஷமா இருப்ப..” அவர் பிறப்பின் நோக்கத்தைக் கச்சிதமாய் செய்து கொண்டிருந்தார்.
அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தான். அதனால் தானே இந்த திருமணத்திற்கு சம்மதித்தான். அவள் அவன் மேல் வைத்திருக்கும் காதாலுக்காக.. 
சுதாவைப் பாட்டி வெறுக்கவில்லை. நடுவில் தீபக் தன்னோடு தகாதவாறு நடந்து கொண்டான் என்று சுதா கண்ணனோடு சொல்லிக் கொண்டிருந்ததை இவர் கேட்காமலிருந்திருந்தால்.. கார்த்திக்கிடம் அன்பாய் பழகுவதைப் பார்க்காமலிருந்திருந்தால்… ராகுலும் ஸ்ரீயும் அவளை அவ்வப்போது மருத்துவமனையில் வந்து பார்க்காமலிருந்திருந்தால்… முதல் முறை சுதாவை மருத்துவமனையில் பார்த்ததும் கண்ணன் தலையை பிடித்துக்கொண்டு சாவின் விளிம்பைத் தொடாமல் இருந்திருந்தால்… இன்று சுதா கண்ணனின் மனைவியாய் இருக்கப் பாட்டி நந்தியாய் இருந்திருக்க மாட்டார்.
“மீனாட்சி மேடம் உங்களை சீஃப் பார்க்கணுமாம்.. இப்போ வர முடியுமானு கேட்க சொன்னாங்க..” நர்ஸ் வந்து நின்றாள்.
“நீங்க பாருங்க பாட்டி… நான் கிளம்பறேன்…” இருவருமாய் கிளம்பவும், வெளியே கார் வரைச் சென்றவன் அறையில் விட்டு வந்த ஃபோனை எடுக்க மீண்டும் அறைக்குச் சென்றான்.
சுதாவை நர்ஸ் படுக்கையில் அமர வைத்து விட்டு வெளியே சென்று கொண்டிருந்தாள்.
உள்ளே நுழைந்த அஷோக் ஏதோ யோசனையில் அவளைக் கவனிக்கவில்லை. சோஃபாவில் விட்டு சென்ற கைப்பேசியை எடுத்துக் கொண்டிருந்தான்.
“ஹாய்…” சத்தம் வந்த திசை நோக்க.. கட்டிலருகே நின்று கொண்டிருந்தாள் சுதா. இனிமையான இதமான குரல். 
“ஹாய்… நீ இங்க தான் இருக்கியா? கவனிக்கல..” என்றான் இன்முகமாய்.  
ஒளி மங்கியதோ.. இல்லை அவள் அப்படித் தெரிந்தாளோ… உருக் குலைந்த ஓவியமாய் மங்கலாய் இருந்தாள்.
அவள் புன்னகைத்தாள். கண் மட்டும் தான் அந்த முகத்தில் இருந்தது. கன்ன எலும்பு புடைத்து.. கழுத்தெலும்பு தெரிய நின்றிருந்தாள்.
அவள் புன்னகைத்தாள். அவனுக்கு வலித்தது. புதர் போன்ற தலைமுடியும்.. குச்சியான தேகமும்… சோர்ந்த முகமாய்.. எலும்பு கூட்டில் பச்சை துணி தொங்க நின்றிருந்தாள். என்ன கோலமிது? பெற்றவர் இல்லாத அனாதை குழந்தையின் நிலை இது தான் போலும்! அவன் உள்ளம் பதரியது.
சென்ற முறை பார்த்த போது கூட இவ்வளவு மோசமில்லையே… அவளைப் படுக்கவைத்துவிட்டுத் திரும்பிக் கூட பார்க்காமல் போனேனே. ‘அவள் உன்னை விரும்பவில்லை என்றால் திரும்பிக் கூட பார்க்க மாட்டாயா?’ மனசாட்சி ஏகத்திற்கும் கடிந்தது.
“எப்படி இருக்கீங்க?” என்றாள். கொஞ்சம் சிரமம் தெரிந்தது அவள் பேச்சில்.
“நான் கேட்க்கணும்… நீ கேட்க்கர…” வருத்தத்தை மறைத்து இழுத்துப் பிடித்துப் புன்னகைத்தான்.
“நான் இருக்கேன்… எனக்கென்ன?” என்றாள்.
அவனுக்கு என்னவோ போலானது. கண் பனித்துவிடும் அபாயம்.
“சாரி..” என்றான்.
“..?”
“வேலையா அப்ராட் போனேன்… உன்ன பாக்க வரமுடியலை..” சப்பை கட்டுக் கட்டினான். சொன்ன பின் இன்னும் கேவலாம் உணர்ந்தான்.
அதற்கும் புன்னகைத்தாள். “இந்த தரம் எனக்கு என்ன வாங்கினீங்க?” கண் மின்னக் கேட்டாள்.
அவன் உடைந்தே போனான். இவள் பழக்கப் படுத்தியதா? இவளுக்கு வாங்கியதை தான் பிருந்தாவிற்கு கொடுத்தேனோ? அதை மட்டும் தானா கொடுத்தான்? 
என்ன பதில் கூறவேண்டுமென்று தெரியவில்லை. பாவமாய் பார்த்தான்.
“எனக்கு ஒன்னும் வாங்கலியா? என்னை மறந்துட்டீங்களா?” உடைந்த குரலில் கேட்டாள்.
‘ஆம்’ என்று சொல்ல நா எழவில்லை.
“இல்ல.. வந்து…” என்று இழுத்தான்.
“என் நினைவு எதுவுமே இல்லையா? முழுசா மறந்துட்டீங்களா?” ஏக்கமாய் ஒலித்தது.
‘என்னைக் கொல்லாதே..’ கத்த வேண்டும் போல் இருந்தது. ஏனோ மனம் துடித்தது. அவளின் வலி இவனுக்கு பிடிக்கவேயில்லை.
“ஆனா எனக்கு உங்களை அணு அணுவா தெரியும்” என்றாள்.
ஐயோ என்றிருந்தது.
“அப்படி எல்லாம் இல்ல… எனக்கும் உன்ன தெரியும்..” என்றான்.. அவளை நோகடிக்க மனமின்றி.
இருவருக்கும் இடையே இடைவெளி அதிகம். மௌனம் ஆட்சி செய்தது.
“சாரி… வெணும்னு மறக்கல..” என்றான் பரிதாபமாய்
இன்னும் எத்தனை சாரி சொல்லுவதாய் உத்தேசமோ?
அவன் வாடிய முகம் அவளை அசைக்க… அவன் வருந்துவது அவளுக்குப் பிடிக்கவில்லை போலும்.
“என் கண் என்ன கலர் சொல்லுங்க பார்ப்போம்..” என்றாள் கண்ணை மூடாமலே…
நீரில் நீந்திக் கொண்டிருந்தது அவள் விழிகள்.
அவனுக்கு தொண்டை கரகரத்தது.  “எமரல்ட் க்ரீன் அண்ட் ஹேஸல்” என்றான். அவனுக்கு விக்கிக்கொண்டு வந்தது.
அவளுக்கு பேச்சு எழவில்லை. அழுகை முட்டிக் கொண்டு வந்தது. அவன் மடி வேண்டும்.. என்ன சொல்ல? எப்படி சொல்ல.. ‘நான் உன் மனைவி’ என்று.
பாட்டி சொன்னதில் ஒரு விழுக்காடு உண்மை இருந்தால் கூட அவனால் உண்மை தாங்க முடியுமா? தீபக் வந்து சென்ற பின் பாட்டி அஷோக்கின் உடல் நிலையை விளக்கியிருக்க.. சுதாவிற்குப் பயம் அவர்கள் உறவை பற்றி எடுத்த எடுப்பில் பேச. அவன் நிலை தெரியாமல் மனம் திறக்க முடியாதே!
அவள் கண்ணில் நீர் வழியவும் அருகில் வந்தான்.
“பாருங்க… உங்களுக்கு என்னை மறக்கல… என் கண் கலர் தெரியுதே” என்றாள் கண்ணீர் வழிய.. இதழ் துடிக்கவும் அதைக் கடித்து நிறுத்தினாள்.
அவள் கண்ணீரை அவன் துடைக்கவில்லை.. அது அவனுக்குத் தெரியவில்லை. அந்த விழி மட்டும் தான் தெரிந்தது. அதில் தெரிந்த வலி… தவிப்பு… அவனால் உணர முடிந்தது. ஆனால் ஏன் என்று தெரியவில்லை. இவன் அவளை மறந்ததினால் ஏற்படும் கண்ணீரா? ஏன்? 
கண்ணையே பார்க்கவும்.. சிந்தனையில் மறந்து கிடந்த ஊதா கண்ணழகி வந்து போனாள்…
அவன் அசைவற்று நிற்கவும்… அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வர.. சுதாவின் உதடு துடித்தது. பார்த்தவனுக்குள் ‘அதிரச அழகி’ வந்து போனாள்.
தலையை சிலுப்பிக்கொண்டான். அவளிடம் என்ன பேசவேண்டும்? தெரியவில்லையோ? மூளை வேலை நிறுத்தம் செய்தது. அவள் ஒவ்வொரு அசைவும்… உணர்வும் அவனை அசைத்தது.
‘என் தோளில் அழு’ என்று அணைக்க தோன்றியது. இது புது வித உணர்வு. ‘என்னோடு வா.. அழாமல் பார்த்துக்கொள்வேன்..’ சொல்லத் துடித்தது உதடு! ஏன்? அவள் நிர்க்கதியாய் நிற்பதாலா? ஆதரவற்று நிற்பவளுக்கு ஆதரவு தரவா மனம் துடிக்கின்றது? இல்லை! அங்கு நிற்பது அவன் உயிரின் சரிபாதி என்பதால்!! பாவம் அவனுக்கு ஒன்றுமே புலப்படவில்லை. மீண்டும் மீள முடியா இருட்டில் மாட்டிக்கொண்ட உணர்வு! இதயம் பிசைந்தது.
‘ஏய்… யாரடி நீ? ஏன் என்னைக் கொல்லாமல் கொல்லுகின்றாய்?’ அவளைப் பிடித்து உலுக்கத் தோன்றவும்.. சுதாரித்துக் கொண்டான்.
அவன் மனம் தடுமாறுவது அவனுக்குத் தெரிந்தது.
அவளிடம் ஒன்றும் சொல்லாமல் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.
 அவன் போவதை அவளால் தடுக்க முடியாது. ஆனால் அதற்கு முன் ஏதாவது சொல்லியே ஆகவேண்டும்… என்ன சொல்ல.. எப்படிச் சொல்ல?
“கண்ணா..” என்றாள்.
கதவை அடைந்திருந்தான். ‘கண்ணா..’ அவனுள் ஏதோ செய்ய… நின்றுவிட்டான்.
அம்மா கூப்பிடும் அதே உரிமை அதில். வெங்கட்.. பிருந்தா.. இருவர் தான் இன்றைய தினத்தில் அவனுக்கு நெருக்கம். அவர்களே ‘அஷோக்’ என்று நிறுத்திக்கொள்ள இவள் மட்டும் கண்ணா என்றாள்.
“கண்ணா.. நான் பேசணும்” என்றாள்.
‘அண்ணா… இல்லை கண்ணா..’ முகம் புன்னகையைத் தழுவியது.
திரும்பி பார்த்தான். பாதி அறை வரை நடந்திருந்தாள் பிடிமானம் இல்லாமல். விழுந்துவிடும் அபாயம் இருக்கவும்.. பிடிக்க ஏதேனும் கிடைக்குமா என்று அவள் கண் தேட..
இரண்டே எட்டில் வந்தவன் அவள் கரத்தை பிடித்துக் கொண்டான்.
“நீ இப்படி அசட்டுத் தனம் பண்ணக்கூடாது. விழுந்தா இன்னுமே கஷ்டம். கேர்ஃபுல்லா இருக்கணும் சரியா?” என்றான்.
அடக்க முடியாத துக்கம் அவள் தொண்டியை நெரிக்க.. கால் நடுங்க.. அவன் மார்போடு சாய்ந்துகொண்டாள். அவனுக்குமே அதே நிலை தான். அவள் யாரோ என்ற உணர்வு இல்லை. ஏதோ ஒரு பெண்ணாய் யோசிக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவன் தலையை வருட.. அவள் வெடித்தாள். அவன் சட்டை ஈரமாக.. அவன் நெஞ்சு கரைய அழுதாள்.
நல்லவுயிர் நீ எனக்கு, நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு, சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லைநிகர் புன்னகையாய் மோதுமின்பமே கண்ணம்மா…

Advertisement