Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 57_2
ஒருத்தி வாழ்வில் அவன் இருப்பது அறியாமலே அடுத்து ஒரு பெண்ணின் மனதில் வேரூன்றி விட்டான். இது ஒரு கொடுமையா நிலை அவனுக்கு. இன்னும் தெரியவில்லை. இரு பெண்களையும் ஒன்றே பார்க்கும் வேளை.. அவன் நிலை? ஒழுக்கத்தையே முதன்மையாகக் கொண்டு வளர்க்கப்பட்ட அஷோக் என்ற மனிதன் என்ன ஆவான்? திருமணம் முன்பே காதலின் மிகுதியால், ஒருத்தியை மனைவியாய் தன் மனதில் குடியேற்றி, அவளுள் உருகிக் கரைந்து போனவன்; அவள் வலியைத் தாங்க இயலாதவனாய் அவள் நினைவை மறந்துபோன அவனின் ஆழமான காதலை உணரும் வேளை, பிருந்தா என்ற அப்பாவி பெண்ணுக்கு என்ன பதில் சொல்லுவான்? பிருந்தாவை ஏற்ற பின் முதல் மனைவி நினைவில் வந்தால்? அது இன்னுமே மோசம்!! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
“என்ன கண்ணா பதில் இல்லை?” அம்மா கேட்டார்.
நினைவிலிருந்து மீண்டான்.
“என்ன மா..?”
“அவங்க வீட்டில பேசட்டா?”
“ம்ம்ம்.. பேசுங்கமா..”
“ம்ம்ம் சரி… நல்ல யோசிச்சுட்டியா?”
“ஆமா மா.. அவ தான்!”
“இங்க பாரு கண்ணா.. என் குடும்ப வாழ்க்கை மூனு மாசம் தான். ஆனா அதனால ஆயுசுக்கும் மன வேதன தான். நீ இல்லேனா நான் இல்ல… உன் நிம்மதி எனக்கு ரொம்ப முக்கியம். அதே சமயம் என் வாக்கும், வர மருமக நிம்மதியும் எனக்கு ரொம்பவே முக்கியம். யோசிச்சுக்கோ… முடிவு பண்ணி சொல்லு. நான் போய் பேசின பிறகு கால பின் வைக்க மாட்டேன். அவ தான் உனக்கு மனைவி.. நீ அவ கூட வாழ்நாள் பூரா சந்தோஷமா வாழனும்… முடியும்னா சொல்லு. பேசறேன்”
அவர் சொல்லச் சொல்ல ‘ஏன் என்னால் முடியாதா? எல்லாம் முடியும்’ என்று தோன்றவே  “ம்ம் சரி மா! நீங்க பேசுங்க. எனக்கு யோசிக்க இதில ஒன்னுமே இல்ல” என்றுவிட்டான்.
சுசீலாவிற்கு மனம் நிறைந்துவிட மகன் உச்சந்தலையில் முத்தம் பதித்து அவன் முகத்தை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
“நீ நல்லா இருக்கணும் கண்ணா.. என்னைக்குமே உன் மனம் போலச் சந்தோஷமா இருக்கணும். கண்டிப்பா சந்தோஷமா இருப்ப! எங்க உன் அப்பா மாதரி ஆகிடுவியோனு ஒரு சின்ன நெருடல் உள்ளுக்குள்ள குத்திட்டே இருந்தது. ஆனா நீ என் மகன் தான்னு நிருபீச்சிட்ட டா கண்ணா.. கல்யாணம் பண்ணி பிள்ளைங்க பெத்து ரொம்ப சந்தோஷமா இருப்ப டா செல்லம் நீ”
உச்சந்தலையில் முத்தமிட்டு… “நான் பேசறேன்… எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் மேரேஜ் ஃபிக்ஸ் பண்ணிடலாம்!”
“…”
எழுந்து வீட்டினுள் சென்று கொண்டே, “நீ சுதாவைப் பார்த்து ரெண்டு வார்த்த சொல்லிட்டு போ.. வீட்டில இருந்து யாருமே வெள்ளிக் கிழமை போகாட்டி வருத்தப்படுவா..”
“சரி மா ஹாஸ்பிட்டல் வேலையை நான் பார்த்துகிறேன். நீங்க நிம்மதியா இருங்க மா”
சொல்லியாயிற்று.. அவள் முகம் எப்படிப் பார்ப்பான்? தயக்கம் இருக்குமோ? இருக்காது. அவன் சுதாவைத் தள்ளிவைத்துவிட்டானே.. அப்படி தான் நினைத்தான்.
மறுநாள் வேலையில் அவனால் முழு கவனம் செலுத்த முடியாமல் போகவே வேலை நேரத்தை இழுத்தது. அம்மா இன்று இரவு பிருந்தா வீட்டில் பேசப் போகிறார். அது தான் அவனைத் தின்றது. அவன் அதை உணராமல் இல்லை.
பிருந்தாவோடு அவன் எதிர் காலம்!! ‘அவளுக்கு நல்ல கணவனாய் இருக்கவேண்டும்!’ அதுவே அன்றைய ஜெபமானது!
‘அஷோக் – பிருந்தா!’ நீண்ட பெருமூச்சை இழுத்து விட்டுக் கொண்டான்.
அளவுக்கு அதிகமாய் அவன் மேல் அன்பு வைத்திருக்கும் பிருந்தாவை விட ஏற்ற வாழ்க்கைத் துணை அவனுக்குக் கிடைக்க முடியாது என்பது ஆறுதல். அவளை விட முடியாது. ‘என்னுடைய பைத்தியக்கார சிந்தனையிலிருந்து காக்க அவள் கண்டிப்பாய் எனக்குத் தேவை!’. காதல் இல்லை தேவை இருந்தது! திருமணத்திற்கு அது போதுமா? தாலிக்கு ஒரு சக்தி உண்டு.. அது எல்லாவற்றையும் சரி செய்யும்.. அஷோக்கிற்கு அது தெரியாமல் இல்லை! கண்டிப்பாய் அவளை நிம்மதியாய் வைத்துக் கொள்வான். சந்தேகமில்லை அவனுக்கு!
அன்று மதியம் வேலை நடுவில் பிருந்தாவின் அழைப்பு வர, அதன் விளைவாய் மாலை வேலை முடிந்ததும் கார் அவள் வீட்டின் முன் நின்றது. வாசலில் அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தவள், வாடிய முகத்தோடு அவன் முன் வந்து நின்றாள்.
வரண்டாவில் நின்றவாறே, “என்ன ஆச்சு? அழுதியா?” கேள்வியோடு அவளை பார்க்க, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் மெள்ள எட்டி பார்க்க ஆரம்பித்தது. விழிகளை தாழ்த்தியவள், ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள்.
அவள் தலையை ஆட்டிய வேகத்தில் முகத்தில் விழுந்த முடியை பின்னுக்கு ஒதுக்கி விட்டு கொண்டே, “என்ன ஆச்சு? இப்போ எதுக்கு அழர? எதாவது வீட்டுல பிரச்சினையா? அவசரம்னு ஃபோன்ல ஒரு வார்த்த சொல்லுறதுக்கு என்ன? மதியமே வந்திருப்பேனே… மொதல்ல கண்ண தொட…  சொல்லு என்ன ஆச்சு?” கண்ணை அவனே துடைத்தும் விட்டான்.
“லண்டன் இம்பீரியல்ல சீட் கிடைச்சிடுச்சு..”
“வாவ்… சூபர் பிருந்தா!!! கங்கிராட்ஸ்!! உன் உழைப்பு, உன் கனவு… வாவ் பிருந்தா.. ரொம்ப நல்ல விஷயம்… சிரிச்சுட்டே சொல்லாம இத போய் அழுதுகிட்டே சொல்லுவியா?  கண்ண தொட, வா உள்ள போகலாம்..” மீண்டும் அவனே துடைத்தும் விட்டான்.
சொல்லிக்கொண்டே வீட்டினுள் செல்ல படியேறியவன் கையை பிடித்து  நிறுத்தியவள்,
“வீட்டுல எனக்கு கல்யாண ஏற்பாடு பண்றாங்க! ஏதோ ஜாதகத்தில கோளாறாம்… ஏற்கனவே எனக்கு அது தெரியும்! சீக்கிரம் கல்யாணம் பண்ணனுமாம். ஆனா அதுக்காக… இப்படி என்னை கேட்காமலே அவசர படுவாங்கனு எதிர்பாக்கல!”
“ஏற்பாடு தானே.. பண்ணட்டும். மாப்பிள்ளை ரெடி..” புன்னகைத்தான்.
“பச்.. அஷோக்! யூ.கே. போகரதுகுள்ள வீட்டில பார்த்த ஜீவாவ கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி கம்பல் பண்றாங்க. நாளைக்கு நிச்சயம் பண்ணப் போறாங்களாம்… ஒரு மாசத்துக்குள்ள கல்யாணம்.. நாள் குறிச்சிட்டாங்க.. இன்னைக்குத் தான் சொல்றாங்க.
உன்னைத் தவிர நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்க மட்டேன்.”
“பண்ண வேண்டாம்.. நீ என்னையே பண்ணிக்கோ.. இப்போ அழுகையை நிறுத்து பிருந்தா!”
“சொன்னா கேட்கவே மாட்டேங்கிறாங்க. வாக்கு கொடுத்துட்டாங்களாம்!!” 
“அத நான் பார்த்துக்கறேன். நீ டென்ஷன் ஆகாத!”
ஹாளிலிருந்த சோஃபாவில் அமர வைத்துவிட்டு பெற்றோர்களை வரவழைத்து அறிமுகம் செய்து வைத்தாள். அவன் அந்த குடும்பத்திற்கு அன்னியன் இல்லாததால் அதிக அறிமுகம் தேவைப் பட வில்லை.
அலுவலகத்திலிருந்து நேரே வந்தவன் போட்டிருந்த கோட்டை கழட்டி தொடையில் போட்டு அவன் அமர்ந்திருந்த தோரணையும், அவன் பேச்சிலிருந்த கம்பீரமும் யாரைத் தான் அசைக்காது.
அவன் பக்கா பிசினஸ் மேன் என்பதை நிரூபித்தான். பெண்களை மட்டுமா அவன் பார்வையும் புன்னகையும் வசிய படுத்தும்? அவன் பேசப் பேச விஸ்வநாதனால் மறுக்கவே முடியவில்லை. எல்லாவிதத்திலும் பொருத்தம்! அஷோக்கை எப்படி மறுக்க முடியும்?
“நீங்க சொல்லுரது சரி தான் தம்பி.. ஆனா இவ சொல்லித் தானே  ஜீவா வீட்டுக்குச் சரி சொன்னோம். இப்போ திடீர்ன்னு வந்து அவளே மட்டேனு சொன்னா அவங்க முகத்த பார்த்து நான் என்னனு சொல்லுவேன்? 
எத்தன மாசம் முன்னாடி முடிவானது? அதுவும் அவ சம்மதத்தோட!! ஆறு மாசம் டைம் கேட்டா.. அவங்களும் பொறுமையா இருந்தாங்க… இப்போ கடைசி நிமிஷத்தில என் தலைல கல்ல போட்டா…? நீங்க ஒரு பிசினஸ் மேன் தானே…
நீங்களே சொல்லுங்க தம்பி… கொடுத்த வாக்குறுதிக்கு மரியாதை தராதவன் எல்லாம் ஒரு மனுஷனா?” 
ஏற்கனவே அஷோக்கிற்கு அவள் சொல்லியது தான். அவன் பேச வாய் திறக்கும் முன், விஸ்வநாதன் மேல் பார்வையை செலுத்தியவள், “அப்ப்ப்பா! அப்பவும் நீங்க தான் முடிவு பண்ணினீங்க… நான் ஆறு மாசம் டைம் கேட்டேன் தான். நான் யோசிக்க தானே டைம் கேட்டேன். எப்போ பிடிச்சிருக்குனு சொன்னேன்? பிடிச்சிருந்தா நான் ஏன் உங்கட்ட சொல்லல? ஏன் ஒரு தரம் கூட ஜீவா கூட பேசல? நீங்களும் அதைப் பத்தி அப்பரம் பேசவே இல்ல… அதனால் அது அவ்வளவு தான்னு நான் நினைச்சேன். என்னை கேக்காம உங்கள யார் அவசர பட்டு வாக்கு கொடுக்க சொன்னா? எல்லாம் நீங்களா முடிவெடுத்துட்டு இப்போ என்னை சொல்றீங்க?” குரல் கரகரக்க… நா தழுதழுக்கக் கொட்டி முடித்தாள்.
அவள் சொதப்பவும்.. கண்ணை இறுக்கு மூடி திறந்தவன்… ‘இவ கொஞ்ச நேரம் வாய மூட மாட்டாளா?’ என்று பார்க்க
அமைதியாக பேசிக்கொண்டிருந்தவர் அமைதியைக் கைவிட்டு, “ஆமா உங்களை எல்லாம் வளர்கிறது மட்டும் தான் பெத்தவங்க வேல.. உங்கள நம்பி யார்கிட்டையும் ஒரு வாக்குறுதி கொடுத்தா… நீ யார் குடுகனு கேப்ப?”
“ஐயோ.. அப்பா… நான் அப்பிடி சொல்லலைபா…” என்று வந்து அவர் கால் அருகில் அமர்ந்து கொண்டாள். 
முகத்தை அவர் மடியில் புதைத்து தேம்பிக்கொண்டே, “அப்பா ப்லீஸ் பா.. நான் அஷோக்கைத் தான் விரும்பறேன். ஜீவாவ பாக்கலாம்னு நீங்க சொன்னபோ அஷோக் வாழ்கையில நான் இல்ல பா. அஷோக் எனக்குக் கிடைக்கவே மாட்டார்னு நினைச்சேன்.. இப்போ அப்பிடி இல்லபா.. அஷோக் என்னோட உயிர் பா.. அவரில்லாம நான் இல்ல பா..
நீங்க சொல்லுறதுக்காக ஜீவா கூட என்னால வாழமுடியாது பா.. ப்லீஸ் பா.. அது நான் அவருக்கு பண்ணுர துரோகமாகாதா? மூனு பேர் வாழ்க்கைபா. நான் லண்டன் போகலை.. எனக்குப் படிப்பு கூட வேண்டாம் பா.. ஆனா அஷோக் இல்லாம… ப்லீஸ் பா… சொன்ன ஒரு வார்த்தைக்காக என் வாழ்க்கைய கேக்கறீங்களேப்பா.. என்னால அஷோக் இல்லாம சந்தோஷமா இருக்கவே முடியாதுப்பா”
அஷோக்கிற்கு மூச்சு முட்டியது. ‘இவ்வளவு காதலா? என் மேலா? அதற்கு எனக்கு என்ன தகுதி உள்ளது? ஆசையாய் ஒரு வார்த்தை பேசியதில்லை. காதலாய் ஒரு பார்வை பார்த்தது இல்லை.’
‘எல்லாம் சரியாய் வரவேண்டும்… இவளுக்கு நல்ல கணவனாய் இருக்கவேண்டும்’ என்ற இடைவிடா வேண்டுதல் மட்டுமே! கண்டிப்பாய் நல்ல அன்பான கணவனாய் இருப்பான், அதில் அவனுக்குமே சந்தேகமில்லை! அவனுக்கு அவள் மேல் அதிக பாசம் இருக்கத் தானே செய்கிறது. அவள் கண்ணீர் அவனை பாடாய்ப்படுத்த தானே செய்கிறது. கண்டிப்பாய் கண் கலங்காமல் பார்த்துக் கொள்வான். சொல்லிக் கொண்டான்!
ஏன் மீண்டும் மீண்டும் இதே போல் சொல்லிக் கொண்டிருக்கின்றான்? அவனுக்குத் தான் வெளிச்சம்!! கஷ்டப் பட்டு இழுத்துப் பிடித்து கணவனாக முயல்வதாலா? இருக்கலாம்!
விஸ்வநாதனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. சிறிது நேரத்தில் சுசீலாவும் வந்துவிட… அவரை எதிர்த்து ஒரு வார்த்தை பேச முடியவில்லை. சுசீலா எல்லாவற்றிற்கும் சம்மதித்தார்.. அடுத்த நாள் நிச்சயம்… மூன்று வாரத்தில் பெண்வீட்டு ஊர்  கோவிலில் திருமணம்… சென்னையில் ரிஷப்ஷன்.. என எல்லாவற்றிற்கும் சம்மதித்தார். ஜீவா பின்செல்ல.. அஷோக் முன்வந்தான்!
பிருந்தா அவள் அம்மா கையை படபடப்போடு பிடித்துக் கொண்டு நிற்க அவருக்கு அவள் மனம் நன்றாய் புரிந்தது. அவர் கண் அசைக்க விஸ்வநாதன் தலையசைத்தார்.
மறுநாள் விடியல் அனைவர் மனதிலும் மகிழ்ச்சி கரைபுரள… அஷோக் பிருந்தா மோதிரம் மாற்றிக்கொள்ள… பெற்றோர், உற்றார் உறவினர் முன் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாய் இனிதே நடந்தது திருமண நிச்சயம்.

Advertisement