Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 57_1
கடவுளின் படைப்பு தான் எத்தனை அழகு? எத்தனை நிறத்தில் தான் மலர்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசம். காலை தென்றல் மலர்களைத் தழுவி அதன் வாசத்தைப் பரப்ப.. அதன் மணத்தாலும் தேனாலும் அது ஈர்க்கும் வண்டுகளும், தேனீக்களும், பாட்டாம் பூச்சிகளும் தான் எத்தனை எத்தனை?
வண்டுகள் ரிங்காரமிட்டது. கவலையே இல்லாமல் மலர் விட்டு மலர் தாவியது. அம்மா உரைத்தது அஷோக் நினைவில் வந்து சென்றது. பிருந்தாவைப் பற்றி அம்மாவிடம் கூறி.. அவர்கள் வீட்டில் பேசச் சொல்ல வேண்டும். ஒரு நீண்ட பெருமூச்சு!
சிறிது நேரத்திற்கெல்லாம், “குட் மார்னிங் கண்ணா!” என்று இரண்டு காபி கோப்பையோடு மகனோடு சுசீலா வந்து அமர்ந்து கொண்டார்.
‘மார்னிங் மா..’ என்று சிறு புன்னகையை உதிர்த்துவிட்டு, சிறிது நேரம் அமைதியாய் நாளிதழில் மூழ்கினான்.
“கண்ணா..” என்று சுசீலாவும்
“மா..” என்று அஷோக்கும் ஒரே நேரத்தில் பேச ஆரம்பிக்க..
“என்ன கண்ணா? சொல்லு..”
“எனக்கு ஒரு அவசரமும் இல்ல மா… நீங்கச் சொல்ல வந்ததை முதல்ல சொல்லுங்க..”
“அடுத்த வெள்ளிக் கிழமை சுதாவை டிஸ்சார்ஜ் பண்ணுறாங்க! இன்னும் கொஞ்ச நாள் தான் ஆஸ்பித்திரில, அப்புறம்  வீட்டுக்கு வந்திடுவா!!” கூறிய சுசீலா முகத்தில் தான் எத்தனை பூரிப்பு.
“ஓஹ்..”
“அம்மா அம்மா-னு என்னையே சுத்தி வருவா.. அவ கூட இருந்தா நல்லா பொழுது போகும்.. அலுக்காம பேசுவா.. இப்போ பேச ஆரம்பிச்சுட்டா..  கொஞ்சம் சிரம படுரா… ஆனா பேசரா. நான் கூட வாய்ஸ் போய்டுமோனு பயந்தேன்.” என்றார் மகிழ்ச்சியோடு.
அவர் பேசிக்கொண்டே இருக்க.. அவன், “ஓஹ்..” என்று நிறுத்திக்கொண்டான்.
“ரொம்ப நல்ல பொண்ணுடா கண்ணா.. நான் கூட நீங்க ரெண்டு பேரும் விரும்பரீங்கனு நினைச்சேன்.. நீ என் கிட்ட எதையும் மறைக்க மாட்டியா அதனால நானா கேக்கல!  இந்த ஆக்ஸிடென்டுக்கு முன்ன ஒரு ஆறு மாசம் ஒரே டென்ஷன்.. அப்பாக்கு முடியலை.. சென்னை மும்பைனு ஒரே அலைச்சல். வீட்டில அதிக நேரம் இருக்க முடியல.. உன்ன கவனிச்சுக்க முடியல… அப்புறம் அந்த லண்டன் வேல வேற.. இப்போ எல்லாம் ஒரு வழியா சரியான ஃபீலீங்..
நீ பாத்தியா அவ பாய் ஃப்ரெண்ட? நல்ல பையனா? பேசினியா? உனக்கு பிடிச்சுதா? அவள நல்லா பார்த்துப்பான் தானே? எதுக்கும் அவனைப் பத்தி விசாரி.. ரெண்டு பேருக்கும் பொருத்தம்னா நான் மீனாமாட்டையும் அவ அத்தைட்டையும் பேசறேன்… ரொம்ப நல்ல பிள்ளை… அவ மனசு போல நல்ல வாழ்க்கை அமையணும். எனக்குத் தான் கொடுத்துவைக்கல அவள என்னோட வச்சுக்க..”
“…” அவர் பேசியதைச் சுவாரசியம் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தான். அவளைப் பற்றித் தெரிந்து என்ன செய்வதாம்? கொஞ்சமேனும் சிரத்தையோடு கவனித்திருக்கலாம்! கவனிக்க விருப்பமில்லை! அங்கொன்றும் இங்கொன்றுமாக காதில் விழுந்தது. இதயம் தொடவில்லை.
“அவ முடி பட்டு மாதரி இருக்கும்… நீளமா இடுப்பு வரைக்கும். நான் இங்க இருந்தா.. அவளும் இங்க தான் இருப்பா.. நம்ம மல்லி பூவ கட்டி வச்சுவிடுவேன். இப்போ பாரு.. அவ இல்லாம அது சும்மாவே பூத்துப் பூத்து கொட்டுது.
இந்த பொடுசுங்க எல்லாம் ஏன் உன்ன பார்த்தா சிரிக்குதுங்க? எல்லாம் அவ வேல தான்! சரியான வாலு. இதுங்க எல்லாம் பின்னாடி இருக்க  மாமரத்தில தான் பாதி நேரம் தொங்கும்! அவ தான் கேங் லீடர்! எப்போ விழுந்து கால கைய உடச்சுக்குங்களோன்னு பயமா இருக்கும்! கேட்டா… ‘அம்மா நீங்களும் உங்க மகன் மாதரி பயந்தாகோலியா இருக்காதீங்க… எனக்கு மௌன்டெய்ன் க்ளைம்பிங் தெரியும்’னு பதில் பேசுவா. சரியான வாயாடி… கும்பகர்ணீ… நீ அவள கிரைண்டர்னு சொல்லுவ.. எப்போ பார் எதையாவது அரைச்சுகிட்டே இருப்பா… அதுக்கும் உன் கூட சண்டை போடுவா!
அவள ரொம்ப பிடுக்கும் எனக்கு.. குழந்தைக்கு அம்மா அப்பா இல்ல… சின்ன வயசில ரொம்ப அனுபவிச்சிட்டா.. இனியாவது நல்லா இருக்கணும்” சுசீலாவின் கண் பனித்து நா தழுதழுக்க, தொண்டையைக் கனைத்துக்கொண்டார்.
“உன் தோட்டம் அவளுக்கு அப்படி ஒரு இஷ்டம்.. அவ செண்பக பூவ பிச்சா மட்டும் நீ ஒன்னும் சொல்ல மாட்டியா.. அங்க தான் நான் தப்பா புரிஞ்சுகிட்டேன்… உனக்கு அவளை பிடிக்கும்னு.. அப்போவே கேட்டிருக்கனும்… தேவ இல்லாம என் மனசுல ஆசைய வளர்த்துகிட்டேன்.
இப்போ உனக்கு திரும்பவும் பொண்ணு பாக்க ஆரம்பிக்கணும். இந்த வாட்டி நான் சொல்ரவ கழுத்தில வாய மூடிட்டு தாலி கட்டணும் சரியா?”
‘அப்போவே எனக்கு அவள பிடிக்குமோ..’ என்று எண்ணியவன்.. ‘அது தானே பார்த்தேன்.. அவளை நான் எப்படி மிஸ் பண்ணியிருப்பேன்.. அவளும் அவக்கண்ணும்..’ முகம் புன்னகையைத் தழுவ.. ‘அவளைப் பற்றி யோசிக்காதே மனமே.. இனி பிருந்தா தான்..’ என்று சொல்லிக் கொண்டான். ‘இல்ல தப்பா எல்லாம் யோசிக்கல.. அப்படி யோசிக்கவும் மாட்டேன்.’ சொல்லிக் கொண்டான்.
“நான் நாலு நாள் கழிச்சு மும்பை கிளம்பணும். அப்பாக்கு திரும்பவும் முடியலையாம் கண்ணா. பாவமா இருக்கு அப்பாவ பார்த்தா.. ரொம்ப பலகீனம். அங்க ஆஃபீஸ் பக்கம் போய் மாசக் கணக்காகுது.. ஒரு பத்து நாள் இருந்து எல்லாத்தையும் பார்த்திட்டு வரனும். டிஸ்சார்ஜுக்கு நான் இருக்க முடியாது அதனால நீ தான் டிஸ்சார்ஜ் வேலையைப் பாக்க வேண்டி இருக்கும். நீ போய் அவங்கள பாரு.. முரளி ஃபார்மாலிட்டீஸ் பார்த்துபார்.. நான் அங்க அதிகம் போரதில்லனு மீனாமா ரொம்ப கோவிச்சுகிட்டாங்க”
“மா நான் சிங்கப்பூர்க்கு.. வெங்கட் கிட்ட வராத சொல்லிட்டேனே… டிக்கெட் கூட புக் பண்ணியாச்சு மா..” தயகத்தோடு கூற
“ஓஹ் .. ஆமாம் சொன்னியே… என்னைக்கு?” என்று யோசனையோடு கேட்க,
“அடுத்த வியாழக்  கிழமை மா..!! நைட் எட்டு மணி ஃபிளைட்!”
“சரி.. நீ வியாழன் மூர்த்தியோட போ.. அவர் ஹாஸ்பிட்டல் பேமென்ட் செட்டில் பண்ணிடுவார். நீ அவங்கள பார்த்துட்டு வந்திடு போதும்! மணி-ட்ட வீட்டுக்கு கூட்டிட்டு வர  சொல்லிடறேன். மத்ததை மீனாட்சிமா பார்த்துப்பாங்க!
நீ கொஞ்சம் சீக்கிரம் ரிட்டர்னாகப் பாரு. என்னால பத்து நாள் எங்கையும் நகர முடியாது!
வந்ததும் உனக்கு பொண்ணு பாக்க தரகர்ட்ட சொல்லணும். உன் கூட இருக்க ஒருத்தி வந்துட்டானா.. கொஞ்ச நாள் நான் எங்க அப்பா கூட நிம்மதியா இருந்துட்டு வருவேன். எனக்குக் கொஞ்ச நாளைக்கு ரெஸ்ட் வேணும் டா.. உடம்பும் மனசும் ரொம்ப டயர்டா இருக்கு!”
“மா… பிருந்தா பத்தி என்ன நினைக்கறீங்க?”, கேட்டே விட்டான். இனி யோசிக்க ஒன்றும் இல்லை என்ற எண்ணம்.
“ஃப்ரெண்டுனு சொன்ன?”
“ஏன் மா.. ஃப்ரெண்ட கல்யாணம் பண்ணக்கூடாதா?”
“உனக்கு பிருந்தாவ பிடிச்சிருக்கா கண்ணா?” அம்மா கேட்டார்..
இதே போல் ஒரு கேள்வியைத் தானே அன்று பிருந்தாவும் கேட்டாள்.
“உனக்கு சுதாவ பிடிக்குமா அஷோக்?” என்று
அவர்கள் சேர்ந்து காபி பருகிக்கொண்டிருக்கும் வேளை அவள் கேட்டாள். அவனுக்குப் புரையேறிவிட்டது.
கேட்டவள் முகத்தில் ஒரு தவிப்பு. ‘இல்லை என்று சொல்லிவிடு’ என்ற தவிப்பு. அவள் என்ன முயன்றும் அவனுக்குப் புரிந்தது.
அவன் எதிரில் இருந்தவளிடம் கை நீட்ட அதை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“நான் உன்ன மேரேஜ் பண்ண ஆசை படுறேன் பிருந்தா… இது என்ன கேள்வி?” என்றான்.
“அது இல்ல… அன்னைக்கு.. நீ.. அப்படி சொன்னியா..” தயங்கி தயங்கி வார்த்தை வந்து விழுந்தது. உள்ளுக்குள் பயந்து பயந்து அவஸ்தையாய் ஒரு பேச்சு.
“வா..” என்று அவளை அவன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்.
அது ஒரு ‘காபி ஷாப்’. ‘U’ வடிவ சோஃபா நடுவில் டீ மேசை.
“ம்ம்.. சொல்லு..” என்றான்.
“எனக்கு மனசு போட்டு அடிச்சுக்குது. தப்பு பண்றேனோனு… அவங்க பேர நீ சொல்லவும் உனக்கு பிடிக்குமோனு…” முடிக்கவும் முடியாமல்… முடிக்கவும் தெரியாமல்… மனம் பிசைய அவனையே பார்த்தாள். முடிந்துவிடுமோ? தவிப்பு அப்பட்டமாய்.. முகத்தில்.
அவளிடம் என்ன சொல்லுவான்? குருடன் இருட்டில் நின்றால் என்ன? வெளிச்சத்தில் இருந்தால் என்ன? நிறம் தெரியவில்லையே… என்னவென்று சொல்லுவான்?
“சுதா மேல விருப்பம் வந்தது நிஜம் தான்! ஏன் எப்படி-னு கேட்காத! தெரியல. மே பீ என்னால தான் அவ படுத்திட்டானு நினைச்சதாலையா… இல்ல.. இல்ல… தெரியல சொல்ல. ஏதோ ஒரு வித ஈர்ப்பு. இந்த மாம்பழ வாசத்துக்கு ஈ மாதரி… அவள பார்த்ததும் ஒரு வித… அந்த உணர்வ எனக்குச் சொல்ல தெரியல பிருந்தா. ஆனா இப்பொ இல்ல. அவள பார்த்தே வார கணக்காகுது! பார்க்கணும்னு யோசிக்கக் கூட இல்ல!”
“அவங்க உன் கூட இருக்கும் போது தான் ஆக்ஸிடென்ட். அவ்வளவு காலைல உன் கூட அவங்க…”
“சோ?”
விழித்தாள்.
“க்ரோ அப் பிருந்தா… அவ அம்மாவோட பெட். அம்மாவ பாக்க என்னோட வந்திருக்கா!”
அவள் அவனையே பார்க்க… மனதை மறைக்க தோன்றவில்லை.
“எனக்கு மட்டும் அவ மேல ஃபீலிங் வந்தா போதுமா? அவளுக்கு வர வேண்டாமா? அவளுக்கு என் மேல வெறும் ஃப்ரெண்ட்ஷிப் மட்டும் தான். இப்படி பாக்கரவங்க மேல ஏற்படுர ஈர்ப்ப எல்லாம் பெருசா எடுத்துக்க முடியாது. டி.வி-ல பாக்கர அழகான பொண்ணுங்கள நினைக்கர விடல பையனுங்க, அவனுக்கான பொண்ணு வந்ததும் அவப் பின்னாடி போரது இல்லையா… அப்படி தான்னு வச்சுக்கோயேன்..”
அவன் பேச்சு அவளுக்குப் புரிந்ததா என்று கூட புரியவில்லை. ஒன்று புரிந்தது. சுதா என்பவள் வாழ்வில் இவன் இல்லை என்று! ஒரு நிம்மதி!!
இவன் வாழ்வில் அவள் இருந்தாளா? முகத்தில் ஒரு கலவரம்.
காபி அருந்தியதும் நடந்தனர், பெசன்ட் நகர் பீச்சில். அவன் தோள் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.
அவன் மணலில் எதையோ வரைந்துகொண்டிருந்தான்.
அவள் மௌனம் அவனை ஏதோ செய்திருக்கவேண்டும்…
“என்ன ஆச்சு? என் மேல நம்பிக்கை இல்லையா?” என்றான்.. வரைந்துகொண்டே
“நம்பிக்கை இல்லாம தான் உன் பின்னாடியே நாய் குட்டு மாதரி சுத்துறேனா? அப்படி எல்லாம் நினைக்காத! ஏதோ கேக்கணும்னு தோணிச்சு கேட்டேன். உன் கூட வாழ போறேன் அஷோக், என் மனசில நெருடல் இருக்க கூடாதில்ல… திருடிங்கர மாதரி.. அது தான். நம்பிக்கை இல்லமா இல்ல..”
மண்ணில் வரைவதை நிருத்தியிருந்தான். அவன் கன்னம் பிடித்து அவள் முகம் பார்க்க அதில் தெளிவு இல்லை. அவன் மனமும் அப்படி தான் இருந்தது. சுதாவைத் தள்ளி வைத்துவிட்டான். பிருந்தா தான். இருந்தும் ஒரு வித உணர்வு.. என்ன அது?
கண் விரித்து அவனையே பார்த்தாள். அந்த கண்ணில் தூய்மையான அன்பு மட்டும் தான் தெரிந்தது. என்ன நினைத்தானோ..
“பிருந்தா.. நீ தான் என் மனைவி. நான் தான் உன் கழுத்தில தாலி கட்டுவேன்… என்னை நம்பு! உங்க அம்மா அப்பா முடியாதுனு சொன்னாலும்… யார் எதிர்த்தாலும் உன் கழுத்தில என் தாலி தான்!” என்றான்.
“லவ் யூ அஷோக்” என்றாள் கண்ணீர் மல்க.
சுதா பற்றிய உண்மை இந்த நிமிடம் தெரிந்திருந்தால் விலகி இருப்பாளோ? அவளுக்குமே விடை தெரியாத கேள்வி இது!!!

Advertisement