Advertisement

“இன்னும் என்ன வேணும்?” பேன்ட் பாக்கெட்டை துழாவினான்.. “என் ஜாக்? இந்தா சாவி.. வேற எதுவும் இல்லையே” என்று கார் சாவியைக் கொடுக்க..
“உன் ஜாகுவார் வச்சு நான் என்ன செய்ய?”
“சொல்லு என்ன வேணும்..”
ஆசையாய் அவனை பார்த்தாள்… “நிஜமா தெரியாதா? தூங்குரவன எழுப்பலாம்.. தூங்கர மாதரி நடிக்கரவன?.. நீ நடிக்கர.. என்னால எழுப்ப முடியல”
செல்லமாய் அவள் தலையைத் தட்டியவன்.. “கிழவி மாதரி பேசாத.. வா” என்றவன் பட்டுப் புடவையும், தலை நிறைய மல்லிகையும் மணக்க முழு அலங்காரமுமாய், நின்றவளை நோக்கி, “வாவ்! என்ன ஒரேடிய அசத்துர?” என்றான் துள்ளலாய்.
நாணத்தோடு புன்னகைத்து விட்டு, “பிடிச்சிருக்கா?” என்று இரு புறமும் திரும்பிக் காட்டினாள்!
“ரொம்ப!”
“தாங்ஸ்”
“வீட்டுல எங்க யாரையும் காணம்?”
“ஓ அதுவா.. அப்பா ஊருல இல்ல. சொன்னேனே கல்யாண வீடு! அம்மா, நான், அனு எல்லாரும் கல்யாண வீட்டுக்குக் கிளம்பும்போது நீ கால் பண்ணின… ஸோ திடீர் ப்ளான் ச்சேன்ஜ், நான் மாட்டும் உனக்கு வெய்டிங்!”
“நீ இப்பிடி கிளம்பி போனா மாப்பிள மனச மாத்தி உன் கழுத்தில தாலி கட்டிட மாடரா?” என்று பல் தெரியப் புன்னகைதான்.
“மாப்பிள பேரு அஷோக்-ன மட்டும் தான் கழுத்தை காட்டுவேன்!” என்றாள் பதிலுக்கு!
“நீ எங்க சுத்தினாலும் அங்கேயே வந்து நில்லு!?”
“எறும்பு ஊர கல்லும் தேயும்! திரும்பத் திரும்ப கேக்கும் போது உன் மனசுல எனக்கு ஒரு இடம் கிடைக்காதானு தான்!”
“என் மனசுல உனக்கு எப்பவுமே இடம் இருக்கு பிருந்தா… ஆனா அது நீ நினைக்குர மாதரி இல்லியே! சரி, எனக்கு உன் மேலக் காதால் வரவே இல்லனா என்ன பண்ணுரதா உத்தேசம்?”
“வரும்! கண்டிப்பா வரும்.. இன்னைக்கே வரலாம் இல்லாட்டி இன்னும் கொஞ்ச நாள்.. மாசம்.. வருஷம் கழிச்சும் வரலாம்! அதுவரைக்கும் காத்துட்டு இருக்கத் தயார்! கொஞ்சம் சீக்கிரம்.. இப்போவே வந்தா இன்னும் நல்லா இருக்கும்” என்று புன்னகைத்தாள்!
அவள் கையை தன் கைகளுக்குள் ஏந்தியவன் அதையே பார்த்தவண்ணம் அமர்ந்திருக்க, “என்ன அஷோக் யோசனை? என்ன மாதிரி மோதிரம் போட்டு ப்ரோபோஸ் பண்ணரதுன்னா?”
“நீ இருக்கியே.. சரி வா, உன்ன ட்ராப் பண்றேன். ஈவ்னிங் போலாம் வெளில! எங்கனு முடிவு பண்ணி சொல்லு”
“அதுக்குள்ளவா? இரு குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன். ஃப்ரெஷ் ஜீஸ் ஓக்கேவா?” “ம்ம்ம்.. நோ சுகர்”
ஜீசோடு வந்தவள், சுவர் முழுவதும் அலங்காரமாய் அடுக்கி வைத்திருந்த அவள் புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன் அருகில் போய், “எது ரொம்ப பிடிச்சு இருக்கு? போட்டோவா? நானா?” என்று முகத்தை அவன் முன் நீட்டினாள்.
“…” பதில் கூறாமல் அவன் அருகில் முகத்தை நீட்டி நின்றவளைப் பார்த்து கொண்டே நிற்க,
“நீ என்னை லவ் பண்ண ஆரம்பிசுட்ட அஷோக்.. ஐ கேன் சீ இட் இன் யூவர் ஐஸ். ஒத்துக்கோ அஷோக்.. யூ லவ் மீ!” என்று மென்மையாய் அவனுக்கு மட்டும் கேட்கும் சத்தத்தில் கூற, அவன் மெதுவாய் அவள் கன்னத்தை ஒற்றை விரலால் வருட.. அவளுக்குள் அப்படி ஒரு இன்ப ஊற்று! ஒரு வழியாய் கல்லும் கரைந்ததே..
இன்றே அவளிடம் ‘எஸ்’ என்ற பதில் சொல்லும் எண்ணம் தான். ‘நோ’ சொல்ல காரணம் இருக்கவில்லை. ‘எஸ்’ சொல்ல தான் இந்த தயக்கம்!
அழகி தான்.. பேரழகியே தான்! அவளை பார்த்துக்கொண்டே இருக்க விருப்பம் தான். ஆனால் வாழ்விற்கு அது பொதுமா? மீண்டும் பார்க்க தூண்டிய அழகிய முகத்தையும், அவள், மயக்கும் விழியையும், வரைந்து வைத்தார் போன்ற இதழ்கள்– அவனுக்காகத் துடித்ததைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் மூச்சுக் காற்று அவன் மேல் படும் அருகிலிருந்ததை உணர்ந்தான்.
அவன் இதழை பார்த்துக்கொண்டிருந்தவள் இதழ் நோக்கிக் குனிந்தவன் கண்கள் மூட, மூடிய கண் முன் இரு கொலிகுண்டு கண்கள் அவனை ஊடுருவிப் பார்த்தது. அந்த கண்களுக்குத் தான் எத்தனைக் காந்த சக்தி? அவள் கண் அவன் போகும் திசை எல்லாம் அவனோடு பயணித்ததே.. ஒரு விழிப்  பார்வை இப்படி இதயத்தைத் தாக்கமுடியுமா? இதோ முடிந்ததே! கண் மட்டுமா அவனை ஆட்டி படைத்தது? அதோ அவள் வெடித்த கோவைப்பழ செவ்விதழ்கள் அவனை ‘வா’ என்று சிரித்து அழைத்த மாயை தான் என்ன?
அந்த உதட்டில் ஒட்டியிருந்தது சின்ன மல்லி தழை.. அவனுக்குள் ஒரு உஷ்ணம் பரவுவதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ‘அதிரசம் நல்லா இருக்கு!’ என்றது அந்த இதழ்கள். தாங்குமா அவன் இதயம்? இதயம் ‘சுதா…’ என்று துடிக்க வாய் அதை உச்சரித்தே விட்டதே!! ‘சுதா!’ வாய் முணுமுணுக்க அவன் கைபிடியிலிருந்து சட்டென்று விலகிய பிருந்தா அவனை சுயநினைவுக்குக் கூட்டிவந்தாள்!
மூளை தவற்றைச் சுட்டிக் காட்டியது! அவனும் அதிர்ந்துதான் போனான். ‘இராட்சசி! என்னை எதற்கு இப்படி பாடாய்ப் படுத்தவேண்டும்?’  கண்களைத் திறக்க துணியவில்லை. பிருந்தாவை வாழ்க்கைத் துணைவியாய் ஏற்கும் முடிவோடு வந்த அழகா இது!! அவனையே அவன் கடிந்து கொண்டான். இனி இவள் முகத்தில் விழிப்பது தான் எப்படி? மன்னிப்பாளா? பல்லைக் காடித்துகொண்டு மெதுவாய் இமையைத் திறக்க, எதிரில் ‘என்ன?’ என்பது போல் முகத்தை வைத்துக்கொண்டு, இடுப்பிற்கு கைகளை கொடுத்தவண்ணம் நின்றிருந்தாள். 
அவன் வாய் திறக்குமுன் அவளே ஆரம்பித்தாள், “‘டூ குட் டு பி ட்ரூ!’-னா இது தான் போல.  நீயே மனசு மாறினாலும் என் தலை எழுத்து சரியாய் இருக்கணும் இல்ல!”
“சாரி.. சீக்ரம் சரி ஆகிடும். ப்ளீஸ் தப்பா எடுத்துக்காத!”
“எதுக்கு நீ சாரி சொல்லுற? இந்த கன்றாவி போன் ரிங் ஆகிட்டே இருந்துது.  நின்னு தொலைகும்னு பார்த்த நிக்கவே இல்ல! இன்டர்நேஷனல் கால் மாதரி இருந்தது… அது தான் எடுக்கலாம்னு பார்த்தா, கட் ஆக்கிடுச்சு! அரசனை நம்பி புருஷனை விட்ட கதை தான் என் கதை!” என்று சிரித்தாள். முகத்தில் அப்பட்டமாக வேதனை தெரிந்தது. அவள் எதையோ சொல்லி சமாளிப்பது தெரிந்தது.
அவளைக் கூர்ந்து நோக்கியவன், அவள் தலையை மென்மையாய் தடவிவிட்டு, “சீக்கிரம் ஒரு நாள் என் அம்மாவோட வந்து உன் பேரென்ட்ஸ்ச மீட் பண்றேன்” என்று கூறியவன் அவள் உச்சந்தலையில் அழுத்தி முத்தம் வைத்து, அவள் உள்ளங்கையில் அழுத்தம் தந்து, “அப்புறம் பார்க்கலாம். இப்போ நான் கிளம்பறேன். ஹாப்பி பர்த்டே!” என்று அவளை விட்டுச் சட்டென்று நகர்ந்தான்.
‘என்ன நடந்தது? அம்மாவோடு வந்து பேசரேனு சொன்னா… அப்போ அது தானே அர்த்தம்!! எனக்கும் அவனும் கல்யாணம்!’ அவளால் நிற்க முடியவில்லை. சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. எத்தனை ஆண்டு கனவு! அது வெறும் கனவாகவே முடியும் என்றே நினைத்தாளே! அவள் விதி கூட மாறுமா? எங்கே அவன்?
வாசலை நோக்கி விரைந்தவனை நோக்கி ஓடினாள்.
“அஷோக்!” அவள் சதத்துக்கு நின்றவன் முன் போய் நின்றுகொண்டாள். முகம் இன்ப அதிர்ச்சியில் ஜொலித்தது. கண்கள் மினுங்க, இன்பத்தில் ஏற்பட்ட  நீர்திரையோடு, அவன் கையை அவள் இரு கரங்களுக்குள்ளும் பிடித்துக்கொண்டு “நிஜமா? நீ சொன்னது… நான் நினைச்சது.. அஷோ..க்.. என்னால என் காதையே நம்ப முடியல! ஐ லவ் யூ. லவ் யூ ஸோ மச். பேச்சு மாறாமாட்டியே?” ஒருவாறு சொல்லி முடித்தாள்.
“நீ என்ன நினைக்குர?” இதயம் கனக்க.. இன்முகமாய் கேட்டான்.
புன்னகை மட்டுமே பதிலாய் வெளிவந்தது.
“கிளம்புறேன்.. சீக்ரம் பார்க்கலாம்!” என்றான்.
‘பச்’ என்று கன்னத்தில் முத்தமிட்டு, “பாய்” என்று விடை கொடுத்தாள். அவன் வாய் திறந்து அவளை விரும்புவதாக சொல்லவில்லை என்பதை அவள் கவனிக்காமல் இல்லை! ‘சுதா’ என்று சற்று முன் அவன் உளறியதைக் கேட்டவள் தானே..
அவன் வேண்டும்.. எப்படியும் அவன் வேண்டும் என்று தீர்மானமாய் இருந்தாள். அவன் உதறல் அவளுக்குத் தெரிந்தது. அவன் எதிலோ மாட்டி தவிப்பதும் தெரிந்தது. ஒரு மருத்துவராய் அவன் மன உளைச்சல் புரியாமலில்லை. இருந்தும்? இருந்தும் அவன் வேண்டும் என்ற கண்மூடித்தனமான ஆசை. திருமணம் எல்லாவற்றையும் சரி செய்யும் என்று வெகுவாய் நம்பினாள்.
‘சுதா?’ யாரிவள்.. அவனோடு காரில் பயணித்தவள். இருவருக்கும் தொடர்பு இருக்குமோ.. மனதில் ஒரு வலி வந்து சென்றது.
பிருந்தாவின் வலி நிமிடத்தில் மறைய.. அஷோக்கிற்கோ இப்பொழுது தான் வலி அதிகமாகிய நிலை. இன்னும் அங்கிருந்தால் நெஞ்சு வெடித்து விடுமோ என்று இருந்தது அவனுக்கு. இதயம் வெகுவாய் கனத்தது! கண்கள் கரித்தது. தொண்டையில் ஏதோ மாட்டியதோ? எச்சில் கூட முழுங்க முடியவில்லையே?!
அவனுக்கு நிம்மதி வேண்டும்.. எதையாவது தின்று பித்தம் தணிந்தால் போதும் என்ற நிலை! இன்னும் பைத்தியம் மட்டும் பிடிக்கவில்லை.
‘சுதாவை விட்டு தூரம் போக வேண்டும். வெகு தூரம் போக வேண்டும். இதை விடச் சிறந்த வழி வேரென்ன இருக்க முடியும்? அவள் விருப்பம்போல யாரையாவது மணக்கட்டும்! அது எனக்குத் தேவை இல்லாத பிரச்சினை!’ என்று தன்னையே ஆற்றிக் கொண்டான்! இனி சுதா முகத்தில் திருமணம் முன் விழிக்கவே கூடாது என்று முடிவு செய்து கொண்டான்! இன்றோடு சுதா மீதிருந்த காதலோ கன்றாவியோ.. என்னை விட்டுப் போனால் சரி என்ற எண்ணம் மட்டுமே.
“காயத்திற்குத் தையல் வலிக்கத் தான் செய்யும்… தாங்கிக் கொள்.. வலியைப் பழகிக்கொள் மனமே. இதுவும் கடந்து போகும்” வலிக்க வலிக்க எடுத்த முடிவு இது!
உருவமில்லா காதல் ஒருவனை உருக்குலைக்க முடியுமா? முடியும்!

Advertisement