Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 56
இருட்டு திரை விலகியும் கண்விழிக்காமல் நல்ல உறக்கத்தில் அஷோக். அது எந்த இருட்டு என்ற சந்தேகமே வேண்டாம்… இரவு அரசியை மறைத்து சூரியன் வெளிவந்துவிட்டது. இரவு அரசி யார் என்று யோசிக்க வேண்டாம். அது நிலா தான்! நிலாவும், சூரியனும், சுதாவையோ… பிருந்தாவையோ குறிக்கவில்லை!
கைப்பேசியின் ஒலி காதை கிழிக்க.. கண்ணை திறவாமலே அருகிலிருந்த மேசையைத் துழாவி அதைக் கையிலெடுத்தான்.
“அஷோக் ஹியர்..” கரகரப்பாய் தூங்கி வழிய உச்சரித்தான்.
“என்ன அஷோக் இன்னும் தூக்கமா? வேக் அப் மை ஸ்லீப்பிங் ப்யூட்டி!”
அவனுக்குப் பிடித்த சத்தமாயிருக்க வேண்டும்.. தூக்கத்தின் பாதியில் எழுப்பியவளின் குரல் முகத்தில் புன்னகையைத் தான் கொடுத்தது.
“ஏன் பிருந்தா என்னை கொடுமை பண்ற… தூக்கமா வருது மா..” அவன் ராகம் பாட
“அது தான் சொல்றேன்.. எழுந்திரு! அது என்ன தூக்கம்… மணி எட்டு பாஸ்!”
“உனக்குத் தெரியாத நான் படுத்ததே நாலு மணிக்கு தானே… தூங்க விடு”
வேளிநாட்டுப் பயணம்.. காலை நான்கு மணிக்கு வீட்டிற்கு வந்து சேர்ந்தான். சோர்வும் களைப்பும் ஒன்று சேர கண் திறக்க முடியவில்லை.
“தெரியுமே… நீ லண்டன்ல ஃப்லைட் போர்ட் ஆகும் போது பேசினேன்… ஃப்லைட் லேண்ட் ஆனதும் பேசினேன்… நீ குட் நைட் மெசேஞ் போடும் போதும் ரிப்ளை போட்டேன். அப்போ எனக்கும் அதே தூக்கம் கண்ணுல இருக்கணும் தானே… ஆனா இல்ல. ஏன்னு கேக்க மாட்டியா?” வார்த்தையில் கொஞ்சல் கொஞ்சம் அதிகமே. ஆனால் அவனுக்கு அது பிரச்சினை இல்லை போலும்.
“நான் கேட்டாதான் சொல்லுவியா? நீயே சொல்லு எப்பவும் போல..” கண் திறவாமலே புன்னகைத்தான்.
“இன்னைக்கு ஒரு ஸ்பெஷல் டே.. இன்னைக்கு பூரா நான் என்ன சொன்னாலும் நீ என்னை கோவிச்சுக்கவே மாட்டியாம்! என்ன டே?”
எழுந்து அமர்ந்துகொண்டான்.
“ஏய் லூசு… முன்னமே சொல்ல மாட்டியா? ஹாப்பி பர்த் டே பிருந்தா!” மிகுந்த அன்பும் ஆசையும் கலந்தே சொன்னான்.
“தாங்க்ஸ் எல்லாம் சொல்ல மாட்டேன்… நீ லேட். நான் உன் மேல கோபம்!”
“சரி.. உன் கோவம் போக என்ன பண்ணலாம்?”
“உனக்குத் தெரியாதா?”
சிரித்தான். அழகாய் வாய் விட்டுச் சிரித்தான். “வரேன். ஒரு மணி நேரம் டைம் தா…”
“இல்ல இல்ல… நான் ஒரு வெட்டிங் போறேன்… ஈவ்னிங்க்?”
“இல்ல… நீ வெய்ட் பண்ணு… நான் வந்து பார்த்துட்டு போறேன். ஈவ்னிங் வெளியில போலாம்!”
இன்றோடு பிருந்தா அஷோக் பழக்கம் ஆரம்பித்து மாதம் ஐந்து ஆகிறது. கடந்த ஒரு மாதமாக அவன் பேச்சிலும் பழக்கத்திலும் பெரிய வித்தியாசத்தை அவள் கண்டாலும் எதைப் பற்றியும் கேட்டுக் கொள்ளவில்லை.
மறந்து போன பழையதை விட்டு விட்டான். தலை வலி இல்லை. உள்ளத்தில் பாரம் இல்லை. ஏதோ லேசாகிவிட்ட உணர்வு. வேண்டுமென்றே அதை எல்லாம் தவிர்த்தான். பிருந்தாவிற்காக.
நான்கு மாத ஈர்ப்பு. ஒரு நான் காதல். அது முடிந்ததும் மனம் துவண்டு போனாது அஷோக்கிற்கு. பிருந்தா தான் இன்முகமாய் ஆருதலாய் இருந்தாள். அவளுக்கு அவன் ஒரு நாள் காதல் எல்லாம் தெரியாது. என்றும் போல் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தோள் கொடுத்தாள்.
அவனின் ஒரு நாள் காதல் தோல்வி அவனுக்கு வலித்தால்.. ஒன்பது வருடக் காத்திருப்பு என்ன ஒரு கொடுமை. உணர்ந்தான். தன்னை மாற்றிக்கொண்டான். பிருந்தா அவன் வாழ்கையில் ஒரு அங்கமாய் மாறிப்போனாள்.
உள்ளங்கள் ஒன்று சேரவில்லையென்றாலும் மிக நெருக்கமான நட்பு! நட்புக்கும் காதலுக்கும் நடுவே மயிரிழை அளவே தூரம்!
அரை மணி நேரத்தில் குளித்துக் கிளம்பிவிட்டு கீழே வந்தவனை சுசிலா வியப்போடு பார்த்தார். “என்ன கண்ணா? நாலு மணி நேரம் கூட தூங்கல அதுக்குள்ள எங்க கிளம்பிட்ட?”
“பிருந்தா பர்த்டேன்னு காலைலேயே எழுப்பி விட்டுட்டா.. அவள பார்த்துட்டு.. வெங்கட் இன்னைக்கு நைட் சிங்கப்பூர் கிளம்புறான்.. அவனையும் போய் பார்த்துட்டு வரேன்.”
காதல் வந்தால் கூடவே ஒரு கள்ளத்தனம் வரும் என்பார்கள். அது இன்னும் பிருந்தா விஷயத்தில் வரவில்லை. காதல் மலராததாலா?
“சாப்பிட வேண்டாமா?”
“இல்லமா வெங்கட் வீட்டில சாப்பிடுறேன்”
“அவன ஈவ்னிங் தானே பாக்கரதா இருந்துது? அவன் கூட ஏர்போர்ட் போகலியா?”
“இல்ல மா ஈவ்னிங் முடியாது. வெளில போறேன்.”
“வெங்கட் வந்ததே உன்ன பாக்க. அவன் கூட போக முடியாத அளவுக்கு அப்பிடி என்ன வேல?”
“பிருந்தாவ வெளில கூட்டிட்டு போறதா சொன்னேன். அவளுக்கு பிடிச்ச மாதரி  கிஃபிட் வாங்கி தர.. அப்படியே வெளில டின்னர் போறத ப்ளான்!”
“அவ யாரு உனக்கு?” சுசிலா நேராகவே கேட்டார் 
“ம்மா? வ்வாட்?” அவனுக்கு அதிர்ச்சியே
“டு யு லவ் ஹர்?” தெரிந்தே ஆக வேண்டும் அவருக்கு!
“இல்ல மா..” யோசிக்காமலே பதில் வந்தது.
“யூ லைக் ஹர்!”
“யெஸ் மாம்!”
“அவ உன்ன ஃப்ரெண்டா நினைக்கராளா?” அடுத்த கேள்வி அம்மாவிடமிருந்து
“இல்ல மா..” தயங்கி வந்தது இந்த பதில்
“ரெண்டு லைஃப காம்பிளிகேட் பண்ணர அஷோக்!” கண்டன குரல்
‘அஷோக்கா… அம்மாவிற்கு கோபமா?’ மனம் நெருடியது அவனுக்கு
“ம்மா?” பவமாய் பார்த்தான்
“பிடிச்சா பழகு. இல்லியா விலகிடு! ஒரு பொண்ணு மனசில தேவ இல்லாத ஆசைய வளக்காத! நீ வண்டில்ல மலர் விட்டு மலர் தாவ.. குணம் முக்கியம். தப்பான எண்ணத்தோட பழகலனு நீ சொல்லலாம் ஆனா பொய்யான நம்பிக்கை கொடுத்து அவ கழுத்த அறுக்காத.. நம்ம குடும்பத்துக்கு நான் மட்டும் போதும் அஷோக்!”
“ம்மா.. அவளுக்கு என் மனசு தெரியும் மா.. இருந்தாலும் விரும்பரா..”
“ஓஹ்.. நீயும் அவ உணர்வுல குளிர் காயர?”
“ம்மா?”
“அப்போ இதுக்கு என்னடா அர்த்தம்? அவ மனசுல, தெரிஞ்சே தேவ இல்லாத ஆசைய வளர்த்துட்டு… நான் உன் ஃப்ரெண்டுனு சொல்லி அவ மனச சாகடிக்க போறீயா?”
“அம்மா…”
“சரி… அப்போ சுதா?”
“ஏன் மா அவளுக்கு என்ன?”
“உனக்கு அவள தான் பிடிக்கும்னு நினைச்சேன்.. அதுவும் இல்லையா?”
“ம்மா?”
“என்னடா எல்லாத்துக்கும் மா.. மா..ன்னு?”
“இல்லமா அவளுக்கு பாய் ஃப்ரெண்ட் இருக்கு… கார்த்திக்-னு ஒருத்தர்.”
“என்ன உளர? அவ உன்ன பார்க்கரத பார்த்திருக்கேனே… நீயும் அவ கூட நல்லா தானே பழகின? இப்போ இல்லேனு சொல்லர?”
“தெரியல மா.. நினைவுல வரல. பட் அவ வேர பையன லவ் பண்றா.. அவ அவன் கூட பேசிட்டு  இருந்ததை நானே கேட்டேன்.”
“பார்த்துக்கோ… உங்க அப்பா குணம் உனக்குள்ள வந்துது… தேவ இல்லாம ஒரு பொண்ணு வாழ்கைல விளையாடின… உனக்கு அம்மா இல்ல. நினைவுல வச்சுக்கோ..”
“இல்ல மா.. அப்படி எல்லாம் செய்யவே மாட்டேன். சத்தியமா.. நான் உங்க மகன் மா!”
“ம்ம்.. சரி நேரத்துக்கு வா வீட்டுக்கு!”
“பாய் மா..”
வீட்டை விட்டு வெளியின் போனவன் மனம் சுழலில் மாட்டிக்கொண்டது. பிருந்தா விருப்பத்திற்கு அவன் சரி என்று சொல்ல தடையாய் இருப்பது என்ன? சுதாவா?
பேசி பழகாமல் பார்வையால் மட்டுமே விருப்பம் கொண்ட ஒருத்தி அஷோக் என்பவனை ஆட்டி படைப்பது அவனுக்கே சற்று வித்தியாசமாய் தோன்றியது. அந்த கோலிகுண்டு விழி இன்னும் அவனைப் பாடாய் படுத்த தான் செய்தது. சேரவே இல்லை.. விலகுவதற்கு அங்கு ஒன்றுமே இல்லை. இருந்தும் ஒரு போராட்டம்.
சுதாவின் மேல் ஒரு ஈர்ப்பு இருந்தது உண்மை தான். ஏதோ முன் ஜென்ம பந்தம் போல்… ஒரு இனம் புரியாத உணர்வு அவளைப் பார்க்கும் வேளை. அவள் அருகிலிருந்தால் வேறெதுவும் தோன்றுவதில்லை. ஆனால் கார்த்திக்கோடு அவளைப் பார்த்தபின்.. அவர்கள் காதல் தெரிந்தபின்.. அவளைப் பற்றி வேறு விதத்தில் நினைப்பதுக் கூட பாவம்.
பிருந்தா.. அவள் தான் இன்றைய கேள்விக் குறி!! என்ன செய்ய… அவளின் ஒன்பது வருடத் தவம் போன்ற காதல்! இன்னும் இவன் பதிலுக்காய் காத்துக்கொண்டிருக்கிறாள் கண்ணியமாக அவள் எல்லைக்குள். 
அவளை ஏற்க மனம் விழையவில்லை. பல முறை அவளிடம் சொல்லியாயிற்று.. ஆனால் அவள் காத்திருக்கும் முடிவிலிருந்து மாறவில்லை. அவனாலும் அவளை உதறித் தள்ள முடியவில்லை. நல்ல பெண்.. அன்பானவன். அவளிடம் ஒரு குறை இருக்குமா கூற? இன்று அவளின் பிறந்த நாள். பரிசை எதிர்பார்ப்பாள்..
‘அவள் மனம் போல்… அவளுக்குப் பிடித்த பரிசை கொடுக்கவேண்டும்.. அவள் தவம் இன்றோடு முடியட்டும்!’
‘திருமணத்திற்கு காதல் அவசியமா? எந்த மடையன் சொன்னது? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் பாதிப் பேருக்கு திருமணம் நடக்க வாய்ப்பில்லையே..’
‘இத்தனை வருடமாய் இன்னும் ஒருத்தி மேலும் காதல் வரவில்லை. வந்த ஒருத்தியும் எனக்கில்லை. இனி யாரைப் பார்த்து காதலிக்கப்போகிறேன்.. எனக்கெல்லாம் காதல் வராதோ.. ஏன் காதலித்துத் தான் இந்தியாவில் மணமுடிக்கின்றார்களா? திருமணம் பின் காதலித்தால் போகிறது!’
மனம் முழுவதும் போராட்டம். அவனே பல கேள்விகளைக் கேட்டான். அவனே அதற்குப் பதிலும் தந்து கொண்டான்.
கார் பிருந்தா வீட்டு கேட் முன் நிதானிக்க, காவலாளி அவனைக் கண்டதும் பெரிய கேட்டை திறந்து விட்டான். உள்ளே சென்ற காரை ஓரமாய் நிருத்தி விட்டு, வாசலில் காத்துக் கொண்டிருந்தவளை நோக்கி நடந்தான்.
அவனைக் காணத் தான் அவளுக்கு எத்தனை மகிழ்ச்சி! அவனுக்காக முக மலர்ச்சியோடு காத்திருக்க ஒருத்தி! எந்த ஆண்மகனுக்குத் தான் பிடிக்காது. அவனே உலகம் என்று வளைய வந்தவளை விதி அவனுக்குக் காட்ட மறுத்தது! அவள் இடத்தில் வேறொருத்தி!
“அ..ஷோ..க்” என்று ஆசையை ஓடிவந்தவள் அவன் கை பற்றி வீட்டினுள் கூட்டிச் சென்றாள்.
“ஹாப்பி பர்த்டே” என்று கூறியவாரே அவன் வாங்கி வந்த பீச் நிற ரோஜா மலர்க் கொத்தையும், தங்க ‘ப்ரேசலெட்’ ஏந்திய சிறு பெட்டியையும் அவளிடம் நீட்டினான்.
“பண்டோரா ப்ரேஸ்லெட்… வாவ் அஷோக்” கண் மலர்ந்தது.
லண்டனில் வாங்கியது. பார்த்ததும் வாங்க மனம் சொன்னது. ஆனால் யாரிடம் கொடுக்கவேண்டும் என்பது மட்டும் அவனுக்குத் தெரியவில்லை. ஆள் மாறிவிட்டது.
“வாவ்… ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! தங்க்ஸ் பாஸ்” என்று அதை விழி மலர பார்த்தவளை பார்த்துக்கொண்டே நின்றான்! கண்ணைப் பறித்தாள்.
“அவ்வளவு தானா?” என்றாள் ஏக்கமாய்

Advertisement