Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_2
அவளை விட்டால் அழுதுகொண்டே இருப்பாள் என உணர்ந்த கார்த்திக், அவன் போக்கில் பேச ஆரம்பித்தான், “சுப்.. பேசாத! உன் பேச்ச கேட்டு கேட்டு நான் தான் காதுல கட்டுப் போட வேண்டி இருக்கும்னு பார்த்தேன்… பார்த்தா நீ தொண்டைல கட்டுப் போட்டிருக்க..”
“ஒழுங்கு மரியாதையா நான் கிளம்பரதுக்குள்ள என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா இந்த பிரச்சினை வந்திருக்குமா?”
“ஆ.. ஏன் டி என்னைக் கிள்ளின? பேரீச்சம் பழம்”
“நீ வேணும்னா பாரு இந்த தரம் உன்ன அப்படியே தூக்கிட்டு போரேனா இல்லியானு! எனக்கு உன் சம்மதம் கூட வேண்டாம்!”
“ஆ.. வலிக்குது டி.. எரும! படுத்தும் அடங்கல நீ… எப்படி கிள்ர!!”
அவன் பேசிக்கொண்டே இருந்தான். அவன் கண் அசைவே அவனுக்கு போதுமானதாக இருந்தது. சுதாவின் அழுகையும் நிற்க அவள் உதடு அவ்வப்போது அவன் ‘கடி’யால் விரிந்தது. அவளிடம் எப்பொழுதும் போலவே பேசிக் கொண்டிருந்தான்.
“ஒரு வாரம் தான் லீவ் கிடைச்சுது.. இன்னும் ரெண்டு வாரம் கேக்கறேன். இங்க இருக்க வரைக்கும் உன் கூடத் தான்.. அவன் லீவ் குடுக்கலனா, போடா நீயும் உன் வேலையும்னு நிம்மதியா உன் கூடவே இருப்பேன். இருக்கவே இருக்கார் நம்ம ஏ.கே., பாஸ்-னு அவர் முன்னால போய் நின்னா ஒரு வேலை தர மாட்டாரா?”
“இப்படி உன்னை பாக்கவா வந்தேன்.. சின்ன ஆக்ஸிடெண்ட், வீட்டுக்கு சீக்கிரம் வந்திடுவா.. பேச சொல்ரேன்னு உன் வீட்டுல சொன்னாங்க டி.. ஆனா..” அவன் குரலும் அவனோடு உடைய, தொண்டையைக் கனைத்துக் கொண்டான்.
அவனால் பேச முடியவில்லை. அவள் கையை எடுத்து கண்ணில் ஒற்றிக் கொண்டான். அவன் கண்ணிலிருந்து எடுக்கவே இல்லை. நெஞ்சு மட்டும் ஏறி ஏறி இறங்கியது. தன்னை அடக்கிக்கொள்ள வெகுவாய் பாடுபடுவது அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவன் வலியெல்லாம் மூடி அசட்டுப் பேச்சால் அவளைத் தேற்ற முற்படுவதும் தெரியாமல் இல்லை.
இன்றைய நிலையில் அவளுக்கென்று இருக்கும் ஒரே ஜீவன் கார்த்திக் மட்டுமே.
“லவ் யூ கார்..த்தி” என்றாள் எப்பொழுதும் போல் உண்மையாய் நெகிழ்ந்து.
உள்ளுக்குள் சில்லுச்சில்லாய் ஏதோ உடைந்தது! அஷோக் அருகிலிருந்த கருவியை அணைத்து வைத்தான். அசையக் கூட இல்லை. மீண்டும் எதையோ தொலைத்த உணர்வு. ‘லவ் யூ கார்த்தி’ காதை விட்டு அகல மறுத்தது. ‘என்னைக் கல்யாணம் பண்ணியிருந்தா’.. எச்சில் தொண்டை மாட்டிக் கொண்டது.
“ட்..யே..ய்.. அழ..ரி…?” காற்றாய் அவள் சத்தம் வந்தது. அதிகமாய் பேசிவிட்டாள்.. தொண்டை வலிக்க அதற்கு மேல் பேச முடியவில்லை. அவள் கை நனையவும் சட்டென்று அவள் கையை விடுவித்து, “இரு ஃப்யூ மினிட்ஸ்ல வரேன்!” என்று அவசரமாய் வெளியே சென்றான் கார்த்திக்.
இதற்கு மேல் இங்கு இருக்க முடியாதென்று நினைத்த அஷோக் வெளியில் செல்ல..
“..ண்ணா..” என்றாள். காற்றாய் வந்தாலும் அவனுக்குக் கேட்டது. ‘அண்ணாவா?’ என்று அவளைத் திரும்பிப் பார்த்தான். ஏதோ உள்ளுக்குள் உடைந்த உணர்வு! அவளிடம் காதலா? ஈர்ப்பா? முன் ஜென்ம தொடர்பா? அவளை யார் என்று தெரியாது.. ஏன் அவளைப் பற்றி எதுவுமே தெரியாது.. முகமும் கூட! இருந்தாலும் ஏனோ மனம் அவளையே சுற்றியது. ‘அண்ணா’ என்றுவிட்டாள். எல்லாம் முடிந்துவிட்டது.
அவளிடம் வர, சுதா முகம் தவிப்பில் துடித்தது.. ‘என் கண்ணன் என்னை மறந்துவிட்டானா?’ என்ற வலி அது… ‘இது நான்.. உன் லட்டு… உன் மனைவி.. உன் உயிர்..’ இன்னும் ஏதேதோ சொல்லவேண்டும் என்ற தவிப்பு முகத்தில்… உடல் ஒத்துழைக்கவில்லை. பேசிய இரண்டு மூன்று வரிகளில் தொண்டை வலி உயிர்போனது… முயன்றும் பேச முடியவில்லை.
அருகில் சென்றான்.
“என்..ன..ங்க.. நா…ன் உங்..க..” வலியில் கண்ணீர் வழிய, கலங்கிய கண்ணைத் துடைத்து விட்டவன், “ஷ்.. எதுக்கு இப்படி அவஸ்தை பட்டு பேசர? கொஞ்சம் அமைதியாகு! சாரி சுதா! என்னால் தான் உனக்கு இத்தனை பாடு! ப்ளீஸ் பேசாத! அழாத! உன் மனசு எனக்கு புரியுது சுதா. உன் கஷ்டமும். என்னால இங்க ஒரு வாரம் படுக்க முடியல. ஆனா உன்ன இங்க நாலு மாசம் படுக்க வச்ச பாவி நான். புரியுது.. ஆனா என்ன பண்ணரதுனு தெரியலை. நீ உன்னையே வருத்திகிட்டா.. குணமாக லேட் ஆகும். உன்ன இப்படி படுக்க வச்ச பாவத்தை ஏங்கப் போய் கழுவ போரேன்னு தெரியல… இதுல நீ அழுது எதையாவது இழுத்து வச்சுக்கிட்டா நான் என்னை மன்னிக்கவே மாட்டேன்.. நானும் ஏதாவது ஓடுர வண்டி முன்னப் போய் நின்னுட்டு உன் கூட வந்து படுத்துக்கறேன். நான் செய்ய மாட்டேன்னு மட்டும் நினைக்காத. சீக்கிரம் குணமாகி வா.. இல்ல நான் உன் கூட வந்து படுத்துப்பேன்”
‘அவன் மறந்தால் என்ன… இன்னும் அவன் மனம் முழுவதும் நான் தான்.’ கண்ணீர் நின்றது. நெஞ்சு குமுறல் அடங்கியது.
ஏதோ மனக் குமுறல் சொல்லிவிட்டு வெளி வர, கார்த்தி சுவரோடு சாய்ந்து மடித்த முட்டியின் நடுவில் முகம் புதைத்திருந்தான். உடல் குலுங்கிக் கொண்டிருந்தது. ஆணோ பெண்ணோ வலித்தால் கண்ணீர் தானே வலி நிவாரணி. அவனால் அடக்கவே முடியவில்லை.. கொபமும் எரிச்சலுமாய் வந்தது. ஏன்.. எப்படி.. எதுவுமே தெரியவில்லை. ‘எப்படி இருந்தவ இப்படி படுத்துட்டாளே’ மனம் வலித்து அழுதான். 
சுதாவிடமிருந்து எந்த வித தகவலும் வராமல் போகவே தவியாய் தவித்துப் போனான். மாதக்  கணக்கில் தகவல் இல்லை. தகவல் தெரிந்து ஒரு வார விடுப்பு எடுத்து அவளைப் பார்க்க வந்திருந்தான். அவனுக்கு ஒருமுறை வந்து போவது பெரிய செலவு தான். ஆனால் அவனுக்கோ சுதாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்று கிளம்பி வந்து விட்டான். கை கால் முறிவு என்று வந்தவனால் இப்படி அவளை பார்க்கவே முடியவில்லை.
உடல் பாதியாகி.. கன்னத்தில் குழி விழுந்து… காது வரை தாறுமாறாய் வளர்ந்த முடியோடு.. பச்சை உடுப்பில்… எப்படி இருந்தவள்? புசு புசு என்றிருப்பாள். எப்பொழுதும் ‘டிசைனர் வேர்’ அணிந்திருப்பாள்.. தவறாமல் கூந்தலுக்கு ‘கெரட்டின்’ ட்ரீட்மென்ட் செய்து கூந்தலைப் பட்டு போல் வைத்திருப்பாள். உடல் என்றும் பளபளக்கும்.. உயர் தர நறுமண திரவியத்தால் வாசமாய் இருப்பாள். இன்று?
எதுவுமே நிரந்தரம் இல்லாத வாழ்க்கையை வாழ தான் என்ன போராட்டம்!
இவன் மூலமாய் கேள்விப்பட்டு அங்கு வந்த கனி, அருகில் சென்று அவன் தோள் தட்ட, முகத்தைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தான் கார்த்திக்.
“என்ன டா இப்படி இருக்க? எப்பிடி இருக்கா?”
“ம்ம்.. இருக்கா!” என்பதோடு நிருத்தி கொண்டான்.
“ஒரு டு மினிட்ஸ் இரு நான் அவள பார்த்துட்டு வரேன்!”
மேடிட்ட வயிறோடு உள்ளே போக இருந்தவளைத் தடுத்து, “வேண்டாம் கனி.. பாக்காத! தாங்க மாட்ட!” வெடித்து விடும் போல் வந்த உணர்வுகள் அடக்க  மாட்டாமல் நெஞ்சு மேலும் கீழுமாய் ஏறி இறங்க, “போகாதா.. வயத்தில குழந்தை இருக்கு.. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வந்து பார். இப்போ போய்டு.. நான் அவட்ட சொல்றேன்!”
“ஏன் டா.. அவ்வளவு முடியலியா அவளுக்கு!”
“அது என் சுதாவே இல்ல கனி! துரு துரு-னு இருக்கக் கண் பூரா வலி மட்டும் தான்!
வாய தொரந்தா நிருத்த மாட்டா.. அவளால ஒரு வார்த்த கூட முழுசா பேச முடியல.
இப்போ தான் நடக்க கத்துகிட்டக் குட்டி பாப்பா மாதிரி ஓடிட்டே இருப்பா.. ஆனா கழுத்த கூடா அசைக்க முடியாமா கையும் காலும் உடஞ்சு கிடக்குரா.. இப்போவே இப்படினா, நாலு மாசம் எப்படி இருந்திருப்பா?”
“அவள பாக்கவேண்டாம்.. நீ கிளம்பு கனி” என்றான்.
பின்னோடு ஸ்ரீ வர.. கார்த்திக்கால் அடக்க முடியவில்லை.
“என்ன டா?” என்று அவன் கேட்டது தான் தாமதம்.. கட்டி அணைத்து “முடியலட மச்சான்… என்னை சாகடிசிடுனு சொல்றாடா… என் கிட்ட என் சுதா சொல்றா.. என்னை சாகடிச்சிடுனு… நான் என்ன டா பண்ண…
சின்ன ஆக்ஸிடென்ட்னு தான் சொன்னாங்க… அவள பாக்காம இருக்க முடியலனு வந்தேன்.. பார்த்தா.. பார்த்தா… ஐய்யோ..
செத்திடலாம் போல் இருக்கு.. இத பாக்கவா வந்தேன்!! அவ என் குழந்தை டா… என் கண்ணு முன்னாடி.. படுத்த படுக்கையா.. எப்படி டா தாங்குரா? துடிச்சுப் போயிருப்பாளே..
அவள இந்த நிலைமைக்குக் கொண்டுவந்தவன் மட்டும் என் கைல கிடைச்சான்.. அவன் சாகடிச்சிடுவேன்” பின்னங்கழுத்தை பலமாய் தேய்த்து விட்டு அவனைச் சமன் படுத்தியவன், “நீ கிளம்பு கனி.. அவ தனியா இருக்கா..
உள்ள போறேன். உடம்ப பார்த்துகோ. நீ வா டா” பதிலை எதிர் பார்க்காமல் உள்ளே சென்று விட்டான்.
வெளியில் போடப் பட்டிருந்த நாற்காலியில் அமர்த்திருந்த அஷோக் என்ன உணர்ந்தானோ? கதவையே வெறித்துப் பார்த்திருந்தான். அந்த அறையில் இனி அவனுக்கு வேலை இல்லை என்பது மட்டும் அவனுக்குத் தெளிவு!
ஒவ்வொரு முறையும் சுதாவைப் பார்க்க வருவான், எந்த எண்ணமும் இல்லாமல். அவளைப் பார்த்ததும் ஏதோ உணர்வு வந்து ஒட்டிக் கொள்ளும், அவள் ஒற்றை பார்வையில் தன்னை மறப்பான்.. ஷண நேரத்தில் எல்லாம் மாறிப் போகும்! திரும்பிச் செல்லும் போது கனமான இதயத்துடன் செல்வான்! கூடவே தாங்க முடியாத தலைவலியும்!
இன்றும் அப்படி தான் சென்றான் மீண்டும் இங்கு வரும் எண்ணமில்லாமல். இதயம் மரத்துப்போனது. நான்கு மாதம்.. ஆறு முறை பார்த்திருப்பானா? அதற்குள் ஏன் இந்த தாக்கம்? வேறொருவன் காதலியா அவள்?
அண்ணனாக நினைத்துப் பழகிய பெண் மேல் தகாத ஆசை! அவனுக்கு அவன் மேல் வெறுப்பாய் போனது. தலைவலி புரட்டிப் போட்டது. வாந்தி எடுத்து மானம் போகும் முன் அங்கிருந்து நகர்ந்தான். இந்நாள் வரை எதையுமே மறைத்தது இல்லை சுசிலாவிடம். தன் காதலையோ.. திருமணத்தையோ அவரிடம் கூறி இருந்தால் இன்று இத்தனை வலிகளை அவன் சுமந்திருக்க மாட்டான். இப்படி அவர்கள் பிரிந்து போக விட்டிருக்கவே மாட்டார். யாரைச் சொல்ல? காலம் வரைந்த கோலம். புள்ளிகளெல்லாம் தப்பாய் போகவே அது அலங்கோலம் ஆகிக் கொண்டிருக்கிறது.
தொடுவானம் அருகில் தோன்ற, பறவை பறந்தது. அதைத் தொட்டுவிடும் தீரா ஆசையில்… அது தீரா அசையாய் போனது!!!
மறந்து போன மனைவியின் மனம் தெரியவில்லை. தெரியாமல் இரு இதயங்கள் தள்ளி நின்று அழுதது. ‘விதி சரியில்லை’ என்பது உண்மைதான் போலும்! அவளும் அப்படி தான் நம்பினாள். பாட்டியும் அவளிடம் அதைத் தானே சொன்னார். ‘நீ சரி இல்லை… உன் தலை எழுத்து சரி இல்லை..’ என்று. அன்று நம்பாததை இன்று நம்பினாள்.
காதல் ஒரு விசித்திர ஜந்துவாக இருக்கவேண்டும்! அது ஒருவருக்குள் நுழைந்துவிட்டால் அவரின் நிலையை மாற்றிவிடுகிறது. காதலிப்பவர் மனதைக் காட்டிலும் காதலிக்கப்படுபவரின் மனமும் மகிழ்ச்சியும் முதன்மை பெற்றுவிடுகிறது. அஷோக்கோ சுதாவோ இதற்கு விதிவிலக்கல்ல!

Advertisement