Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 55_1
சுதா வெகு நேரமாக முழித்திருக்கவும் நர்ஸ் வந்து சுதாவையும் அஷோக்கையும் பிரித்துவிட்டாள்.
அவளருகில் ‘பேபி மானிட்டர்’ (இரண்டு சிறு கருவிகள்- ஒன்று(பேபி மானிட்டர்) இது சத்தத்தை மற்றும் காட்சியை உள்வாங்கும்.. மற்றொன்று(ஒலி/ஒளி பரப்பி) அதை ஒளிபரப்பும்) வைத்துவிட்டு உள் சென்று அங்கிருந்த ஒலிபரப்பியை உயிர்பிய்த்துவிட்டுப் படுத்துக் கொண்டான். அவள் ஏதாவது பேசினாலோ.. அவனைக் கூப்பிட்டாலோ, அவனருகில் பொருத்தியிருந்த கருவி மூலம் அவனுக்குக் கேட்கும். மெல்லிய சத்தைக் கூட கேட்க முடியும்.
படுத்தவனுக்குத் தூக்கம் எல்லாம் வரவில்லை. சுதாவைப் பிடித்தது. அவன் எதிர்பார்த்தது போல் எந்த காரணமுமே இல்லாமல் அவளைப் பிடித்தது. அவள் பேசாமலே அவளோடு மணிக் கணக்காய் அவனால் நேரம் செலவிட முடிந்தது.
அவள் வாய்க்கும் சேர்த்து கண் கதை பேசியது.. காணக் காணத் தெவிட்டவில்லை அதன் அபிநயம். மற்றவர்களுக்காய் இறங்கும் குணம் அது அவனை வெகுவாய் ஈர்த்தது. ‘லவர் பாய்’ என்று நினைத்திருந்த தீபக் அவன் சிந்தையில் இல்லை. அவள் வாழ்விலும் இல்லை. நிம்மதியாய் உணர்ந்தான். அவள் நினைவில் கண் அசந்துவிட்டான்.
‘“என்ன லட்டு.. பாக்க மாட்டியா?” வாயில் எதையோ அரைத்துக் கொண்டே கேட்டான் கண் மூடி நின்ற ஒரு இளம் பெண்ணிடம்.
“என்ன கொஞ்சம் பாரேன்..” கொஞ்சலாய் விழுந்தது அவன் வார்த்தைகள்..
அடுக்களை பின் இருந்த சுவரில் சாய்ந்து நின்றவள் கண்களைத் திறந்து அவன் முழு உயரத்திற்கும் விழி விரித்து பார்த்தாள். ஏக்க பார்வை.. அவள் கண்கள் தானாய் இரண்டு சொட்டு தண்ணீரை உருட்டி வெளியே விட, குனிந்து அவள் கண்களின் இமைமேல் அவன் இதழ் பதித்தான். ஆழ்ந்த முத்தம்.
அவளை இடையோடு தூக்கி அவன் இதழை அவள் இதழோடு ஒற்றவும், அவன் உடலில் மின்சார பாய்வது போன்ற உணர்வு. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை குளிர்ச்சியும் உஷ்ணமும் ஒன்று சேர புரட்டிப் போட்டது. அவன் அவளைக் கீழிறக்க.. அவனை இழுத்து அவன் ஆரம்பித்ததை அவள் முடித்தாள்.
“அதிரசம் நல்லாவே இருக்கு” என்றாள்.’
பட்டென்று எழுந்து அமர்ந்துவிட்டான். சுற்றும் முற்றும் பார்த்தான். பெண்ணில்லை. இது அவன் வீடே இல்லை. ஒரு நிமிடம் பிடித்தது, உணர்வு பெற!
கனவா?
உடையின் நிறமெல்லாம் கனவில் தெரியுமா? மிகத் தத்ரூபமாய் தோன்றியது. அவளின் உடல் தந்த சிலிர்ப்பு அவனால் உணர முடிந்தது. அந்த நீள பட்டு போன்ற கூந்தலின் ஈரம் கூட உணர்ந்தான். அந்த கூந்தலின் வாசம்.. ஸ்ற்றாபெரி பழம் போல்… இன்னுமே நாசியில் ரிங்காரமிட்டது.
இதே போல் முன் ஒரு முறை வந்தது நினைவில் வந்தது. அதே பெண்ணா? இருக்கலாம். உறுதியாய் தெரியவில்லை. யாரிவள்? அவனுக்குத் தலை விண்ணென்றது..
சுதாவின் ஸ்பரிசம் கொஞ்சமாய் அவன் பழையதை கொண்டு வர அவனுக்கு ஒன்றும் பிடிபடவில்லை. முதலில் அது கனவா? இல்லை பிரமையா என்பது கூட விளங்கவில்லை.
உதட்டைத் தொட்டுப் பார்த்தான். ஈரமில்லை. ஆனால் உணர்ந்தானே அவள் இதழை!
சற்று முன் சுதா உதட்டின் மென்மையை உணர்ந்தானே.. சுதாவாய் இருக்குமோ அந்த பெண்? இருக்காது. அவள் உருவத்திற்கும் இவளுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் இவளால் தான் அப்பேர்பட்ட கனவு வருகிறது என்ற சந்தேகம் எழும்ப.. ஒரு இனம் புரியாத சாரல். காதலா இவள் மேல்? இருக்கலாம்.. தோழியைக் காதலிக்கக் கூடாதா என்ன? முன்பே இருந்திருக்குமோ? உள்ளத்தில் ஒரு ஏகாந்தம் பரவியது. அவளுக்கும் என் மேல் விருப்பம் இருக்குமோ? இருக்கும் என் கையை விடவே இல்லையே.. கால் தரையில் இல்லை. உடல் முதல் உயிர் வரை குளிர்ந்தது. அவன் நிலையில் அவனில்லை. உள்ளுக்குள் ஒரு துள்ளல்.. உடல் முழுவதும் ஒரு பரவசம்…
முன் ஜென்மம் என்பது உண்மை தானோ? இருக்கலாம்.. அவளோடு அவனுக்கு ஏதோ ஒரு தொடர்பு இருக்கத் தான் செய்கிறது. மறந்து போன ஆறு மாத தொடர்போ இல்லை முன் ஜென்ம தொடர்போ.. எதுவோ.. பிடித்திருந்தது. முதல் முறை அவள் விழியைப் பார்த்ததும் இதனால் தான் முத்தம் வைக்கத் தோன்றியதோ… ஏற்கனவே மிக நெருங்கிப் பழகியிருப்போமோ? அதன் தாக்கமோ…? நான் காதல் வயப்பட்டேனா? முத்தம் கொடுத்தேனா? இருந்திருக்காது… இது என்ன உணர்வு? ஆயிரம் கேள்வி… பதில் அவளிடம் மட்டும் தான்.
நடந்ததாய் இருக்கும் என்று அவன் எண்ணவில்லை. கனவோ.. பிரமையோ என்று தான் எண்ணினான். அதற்குக் காரணம் இருந்தது அவனிடம். திருமணம் முன் காதலியே ஆனாலும் இந்த அளவு நெருக்கம் கூட அவனால் அனுமதிக்க முடியாது. சுதா என்ற பெண் அவனின் கோட்பாட்டையெல்லாம் அவளின் ஒற்றை பார்வையால் மாற்றியதை அவன் அறியவில்லையே. சுதா என்று வந்துவிட்டால் எல்லைக் கோடுகளே இல்லை என்பதை யாராவது சொன்னால் இன்று நம்புவானா? 
அவளின் ஒற்றை அழைப்புக்கு நீ தவம் கிடந்தாய் என்று சொன்னால் நம்புவானா?  
உன் உயிரான அம்மாவிற்குத் தெரியாமல் சுதா கழுத்தில் தாலி கட்டினாய் நீ என்று சொன்னால் நம்புவானா? 
அவளின் கால் நகத்திற்குச் சாயம் பூச, அதி முக்கியமான தொழில் பேச்சை நடுவே அந்தரத்தில் விட்டவன் நீ என்று சொன்னால் நம்புவானா? 
நிச்சயம் இல்லை. இத்தனை இல்லைகள் இருப்பதால் அவன் இதை ஒரு வித்தியாசமான கனவு என்று நினைப்பதில் தவறு இல்லையே. ஆனால் ஒன்றை அவன் கவனித்தான். இவளின் தாக்கத்தினால் வந்த கனவு என்பதில் ஒரு சந்தேகம்! அவள் கண் நிறத்தில் லயித்தான்.. ஊதா கண்ணழகி வந்தாள். இவள் உதட்டின் மென்மையில் கிறங்கினான்.. அழகி வந்து முதல் முத்திரையைப் பதித்தாள். ஆக… இவளால் ஏதோ தாக்கம் தனக்குள் ஏற்படுகிறது என்பது தான் அந்த கண்டுபிடிப்பு!
‘அவளிடம் கேட்க வேண்டும்.. அவளால் பேச முடிந்ததும். இல்லை இல்லை, பழக வேண்டும் நானே கண்டு பிடித்துவிடுவேன்.’ 
நேரம் பார்த்தான். மாலை, மணி நான்கு என்றது. முகம் கழுவி அவன் வெளி வாரவும் அவன் படுக்கை அருகில் வைத்திருந்த ‘பேபி மானிடர் ஒளிபரப்பு கருவியில்’ சுதா பேசும் சத்தம் கேட்டது. மென்மையாய்.. திக்கித் திணறி வார்த்தைகள் வெளி வந்தது. அவசரமாய் அவன் வெளியில் செல்ல அவன் நிறுவனத்தில் ஹெச்.ஆர். ஹெட்டாக பணிபுரிந்த கார்த்திக் அமர்ந்திருந்தான். இப்பொழுது இவன் அங்கு வேலையில் இல்லை என்பது தெரியும். ஆனால் சுதாவுக்கும் இவனுக்கும் எப்படி பழக்கம்? நண்பனோ? பார்த்தால் அப்படி இல்லை! 
சுதா கையை பிடித்துக் கொண்டு.. அவள் தலையை வருடிவிட்டுக் கொண்டே இருந்தான். அஷோக்கிற்கு என்னவோ போல் ஆகிவிட்டது. தீபக் அழுதது நினைவில் வந்து போனது. அன்று சுதா முகத்தில் உணர்வில்லை. கண்ணை இறுக்கி மூடி இருந்தாள்.
இன்று இவனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கிறாள். இவள் கண்ணில் தாரை தாரையாய் நீர் வழிய அவன் ஆறுதல் படுத்திக்கொண்டே கண்ணைத் துடைத்து கொண்டிருந்தான்.
கண்ணன், தன்னை மறந்துவிட்டதாய் கூறி விட, அவள் உடைந்தே போனாள்.. கார்த்தியைப் பார்த்துவிட அவளால் முடியவில்லை. அவன் கையை விடவே இல்லை.
நான்கு நாள் முன் தான் தீபக் சுதாவின் கைப்பேசியைக் கவனிக்க அதை சார்ஜ் போட்டான். அது உயிர்ப்பிக்கப் பட்ட அன்றே கார்த்தி அழைத்துவிட்டான். அவனும் நான்கு மாதமாக அவளோடு பேச முடியாமல் தவித்துப் போய்.. தினம் அழைத்துவிடுவான். நினைத்ததும் வரும் தூரத்தில் இல்லை. அதற்கான பண வசதியும் இல்லை. வேலையின் சேர்ந்து ஒரு வருடம் ஆகாத பட்சத்தில் இரண்டு வாரம் விடுமுறை சாத்தியமில்லை. அவளைப் பார்க்கமுடியாமல், பேசமுடியாமல்.. அவள் நலம் அறியாமல் பித்துப்பிடித்தவன் போல் தினமும் அழைத்துவிடுவான், உயிரற்ற ஃபோனிற்கு!
விஷயம் அறிந்ததும் அவன் சேமிப்பை எல்லாம் செலவு செய்து ஒரு வார விடுப்பில் வந்துவிட்டான். இத்தனைக்கும் தீபக் அவனிடம் சின்ன விபத்து.. கைப்பேசி தன்னிடம் உள்ளதால் அவள் பேசவில்லை என்று கூறி முடித்துவிட்டான். ஒருவரையும் காயப் படுத்த அவன் பிரும்பவில்லை.
“ப்ளீஸ் டி.. அழாத… கழுத்து நரம்பு வலிக்க போகுது… ஏதாவது இழுத்து வைக்காதா ப்லீஸ் சுதா..” கெஞ்சிக் கொண்டிருந்தான். இல்லை உருகி கொண்டிருந்தான். எல்லாம் அஷோக் காதில் துல்லியமாய் கேட்டது.
“உனக்கு இப்படி ஆகி இருக்கு… எனக்கு தெரியாம போச்சே… உன் மேல கோபப்பட்டேன்.. பச்… போடி… நான் தான் அழனும்.. நீ அழாத சுதா”
‘என்ன ஒரு உரிமையான பேச்சு!’ கண்ணன் சிந்தனையில்!!
“என்னால முடியலை.. என்னை சாகடிச்சிடு கார்த்தி..” பொறுமையாய் ஒவ்வொரு வார்த்தையாய் திக்கித் திணறிச் சொல்லி முடித்தாள்.
அஷோக் சுக்கு நூறாய் உடைந்து போனான். இவ்வளவு நேரம் பேசினானே.. அவள் ஒரு வார்த்தை அவள் உணர்வைப் பகிரவில்லையே..
“என்ன பேசர சுதா..? நான் இருக்கேன் உனக்கு.. நீ என்ன சொன்னாலும் கேப்பேன்.. அதுக்காக என்ன வேணும்னாலும் பேசுவியா?”
“மனசு வலிக்குது டா.. ரொம்ப.. தாங்க முடியலை.. செத்திடலாம் போல.. நான் உயிரோட வேண்டாம்..” என்றாள் மிகவும் பாடு பட்டு. உடலும் உள்ளமும் வலிக்கக் கண்ணீர் வழிந்தது. அம்மாவைப் பார்த்து உதடு பிதுக்கும் பிஞ்சாய் மாறிப்போனாள்.
“சரி முதல்ல சரியாகுடி செல்லம்.. ரெண்டு பேரும் சேர்ந்தே செத்துப் போவோம்.. இப்போ வேண்டாம்.” மென்மையாய் அவள் தலையை வருடிகொண்டே சொன்னான்.. இல்லை இல்லை… உருகினான்.
ஏதோ பேச அவள் வாய் திறக்க.. அவள் உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து.. “ஷ்!! பேசக் கூடாது சொல்லிட்டேன்.. உனக்கு வலிக்குது. ஒத்துக்கறேன்! எனக்கும் வலிக்குது.. உனக்கு புரியுதா? அப்படி பேசாத! அப்பரம் உனக்கு முன்னாடி நான் செத்து போய்டுவேன்… உனக்கு ஓக்கேனா பேசு…” கண்டிப்பான குரல் அவளை அடக்கியது.
அஷோக் கட்டிலில் அமர்ந்துவிட்டான். ‘அவளை சுற்றி அவளுக்குத் தான் எத்தனை நலம் விரும்பிகள். அவளுக்காக ஏங்கி… தவித்து.. அழும் எத்தனை பாசமான நெஞ்சங்களைச் சேர்த்து வைத்திருக்கின்றாள்!’ அதிசயமாய் தோன்றியது.
 

Advertisement