Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 53 
தினமும் சூரியன் உதித்தது… பின் மறைந்தது. அது மறைந்ததும் நிலவு வானத்தை ஆண்டது.. சூரியன் வரும் வரை. இப்படியே பல பகல்… பல இரவு என்று நாட்கள் எந்த வித மாற்றமும் இல்லாமல் நகர்ந்தது.
அஷோக் மீண்டுமாக முழு மூச்சில் வேலையில் இறங்கிவிட்டான். அவன் அதில் மூழ்கிப் போகும் அளவு வேலை இருந்துகொண்டே இருக்க.. உலகம் மறந்து அதில் ஈடுபட்டான்.
தொழில்… தொழில்… அவன் ஜீவனாய் மாறியது. அதிலிருந்து வெளி வரும் வேளை அவனுக்காகக் காத்திருந்தாள் பிருந்தா.
நாட்களைத் தாண்டி வாரங்களைத் தாண்டி… மாதக் கணக்கான நட்பு(?) அவர்களுக்குள் ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்க.. தினமும் பேசிக்கொண்டனர். வாரத்திற்கு இரண்டு முறையேனும் பார்த்துக்கொள்ளும் நிலை.
இரவு படுக்கச் சென்றதும் பிருந்தா அழைத்துவிடுவாள். தினமும் ஒரு முறை கண்டிப்பாய் பேசிவிடுவாள். சில நேரம் மணிக் கணக்காகப் போகும் பேச்சு! அவன் கண் சொருகி கைப்பேசி கீழே விழும்வரைக் கூட பேச்சுகள் நீளும். அதற்குக் காரணம் இருந்தது. அவனால் தனியாய் இருக்க முடியவில்லை. உள்ளுக்குள் எதையோ தொலைத்துவிட்ட உணர்வு.. ஒரு வலி.. மீள முடியவில்லை.
அங்கு தான் வந்தாள் பிருந்தா!
இரவின் இருட்டிலிருந்து காப்பாற்ற நிலா மங்கையாய்.
ஒன்று நேரில்.. இல்லை ஃபோனில். இது தான் என்றில்லை… ஏதேதோ பேசினார்கள். அவளிடம் பேசும் நேரத்திற்காய் அவனும் காத்திருக்க ஆரம்பித்தான். அவள் ஒரு அறிவு பெட்டகம். தெரியாத விஷயம் இல்லை. எது வேண்டுமானாலும் பேசலாம்… அவளால் சரிக்குச் சரியாய் பேசமுடியும். ஒன்பது வருடம் புத்தகங்களோடு குடியிருந்ததின் விளைவு! 
அவனுக்கு நன்றாய் தெரியும் அவள் மனது. இருந்தும் பேச்சு.. பழக்கம் என்று எதையும் குறைத்துக் கொள்ளவில்லை.
அவளிடம் புரிதல் இருந்தது. மருத்துவமனையில் அவனிடம் மனம் திறக்க நினைத்ததோடு சரி.. அதன் பின் அதைப் பற்றிப் பேசவில்லை.
அவனுக்கும் ஓர் தோள் தேவைப் பட.. அதை அவள் கொடுக்க முற்பட.. பழக்கம், நட்பா காதலா என்று தெரியாத வண்ணம் சென்று கொண்டிருந்தது.
வளர்ந்த ஆண்மகன் சாதிக்க முடியாத பல சாதனைகளைச் செய்து.. உலகை ரசித்து வாழ்ந்து வந்தவன், திடீர் விபத்தால் சுமார் ஆறு மாத நிகழ்வை மறந்திருந்தான். துடைத்து வைத்தார் போன்ற உணர்வு. எதெல்லாம் இழந்தானோ தெரியாது. யோசித்து யோசித்து மனதும் மூளையும் ரணமானது தான் மிச்சம். இதில் இளம் பெண் ஒருத்தியைப் படுக்கையில் படுக்க வைத்த குற்ற உணர்ச்சி வேறு..
நாளுக்கு நாள் எதையோ தொலைத்த ஒரு வருத்தம் உள்ளுக்குள்.. அந்த பச்சை கண் வந்து படுத்தியது.. கோலிக் குண்டு பார்வை அவனையே சுற்றியது… கூடவே அவள் முறை மாமன் கண்ணீரும்!
எதிலிருந்தோ தப்பிக்க வேண்டும்.. அந்த ‘எது’ என்னவென்றும் தெய்யவில்லை. மன உளைச்சல் அதிகமேயனது. அவன் சாயத் தோள் தேவைப் பட்டது. ஒரு நட்பின் தோள். அவன் மனம் வருடி.. வலியை மறைக்க! கிடைத்தது பிருந்தாவின் பாச கரம். பிடித்தும் விட்டான்… கரை ஏற எண்ணி.
அஷோக்கிடம் காதலா என்று கேட்டால் இல்லை என்பான். அவளைத் திருமணம் செய்யச் சம்மதமா என்று கேட்டால், கண்டிப்பாகச் சரி என்று சொல்லும் நிலை. அவள், அவன் குடும்பத்திற்கு.. அவனுக்கு எல்லாவிதத்திலும் சரியான பொருத்தமே.. பத்துக்கு பத்து பொருத்தம். காதலியாய் இல்லாவிட்டாலும் மனைவியாய் கண்டிப்பாய் அவனை வசிகரிப்பாள்.
இன்றும் அவளைக் காணத் தான் புறப்பட்டுக் கொண்டிருக்கின்றான். ஆனால் சிரத்தை எடுத்துக் கிளம்பவில்லை. ஒரு டி-ஷர்ட், ஜீன்ஸ்.
நான்கு முறை கண்ணாடியில் சரி பார்க்கவில்லை. மனதில் ஒரு துள்ளல் இல்லை.
“அம்மா.. பிருந்தாவோட வெளியில போய்ட்டு வரேன்..” சொல்லிவிட்டுக் கிளம்பவும்…
“கண்ணா கண்ணா… கண்ணா” என்று பின்னோடு ஓடிவந்தார் சுசிலா..
“என்னமா?”
“இந்த மைதிலி தான் சாப்பாடு கொண்டு போரதா இருந்துது… அவளுக்குக் கொஞ்சம் முடியலை… நான் போலாம்னு நினைச்சேன்… எனக்கும் எப்படியோ இருக்கு… இத கொஞ்சம் நீயே கொண்டு குடுத்துடேன்..”
“என்ன சாப்பாடு? யாருக்குமா?”
“பாட்டிக்கு டா!”
“சரி மணிட்ட கூப்பிடு சொல்லுங்க… அவர தான் கூட்டிட்டு போரேன்.” என்று அமர்ந்துகொண்டான்.
‘சுதா..’ முகம் தானாய் புன்னகை பூத்தது. பார்த்து மாதம் ஒன்றாகிவிட.. ‘எப்படி இருக்கிறாளோ?’ என்ற எண்ணம். ‘அவ லவர் பாய் அங்க தான் இருப்பானோ? எப்படி அழுதான் பாவம்! என்னாலேயே தாங்க முடியல.. பாவம் அவன்!’ மனம் தீபக்கிற்காக வருந்தியது. அவனை இவன் வருத்தி பாடாய்ப் படுத்தி பைத்தியம் போல் சுற்ற விட்டதெல்லாம் இப்பொது நினைவு வந்தால்? எல்லாம் காலம் செய்யும் மாயம்.
ஐந்து மணிக்கு கார் மருத்துவமனை நோக்கிக் கிளம்பியது. வெகு நேரம் காரில் நிலவிய அமைதியை ஓட்டுநர் மணி உடைத்தார்.
“சார்..”
“சொல்லுங்க மணி”
“சின்னம்மா எப்போ ஐயா வீட்டுக்கு வராங்க? ஆஸ்பத்திரி போனேன்.. அங்க பாக்க விடமாட்டேங்கராங்க..  “
“சின்னம்மாவா?… யாரு சுதாவா?”, புன்முறுவலோடு கேட்டான்.
“ஆமாங்க”
“எனக்கு அவ்வளவா தெரியல மணி.. தெரிஞ்சதும் சொல்லுறேன்.. இப்போ முன்னைக்கு பரவாலன்னு அம்மா சொன்னாங்க ”
“சுதாமாவ இன்னைக்குப் பாக்கும் போது.. இந்த மணி விசாரிச்சேனு சொல்லுங்கய்யா “
“அங்க தானே போறோம்.. நீங்களே சொல்லிடுங்க”
ஏதோ ஒரு வாஞ்சை, தோழி என்றவளைப் பற்றி தெரிந்துகொள்ள..
“மணி நீங்க பேசரத பார்த்தா.. உங்களுக்கு அவங்க கூட நல்லா பழக்கம் போல..”
“அப்பிடி எல்லாம் ரொம்ப இல்லிங்க.. சுதாமாக்கு கார  ஓட்டிட்டு போகும்போது ஏதோ கொஞ்ச வார்த்தை பேசி இருக்காங்க.. எங்க பார்த்தாலும் சிரிச்ச முகத்தோட ரெண்டு நிமிஷம் விசாரிச்சுட்டு போவாங்க.. ரொம்ப தங்கமானவங்கயா..”
“எந்த கார்? அம்மாவோட பென்ஸ்சா?”
“இல்லையா.. உங்க ‘பென்ட்லி’ தான் !”
அவனால் நம்ப முடியவில்லை. அவன் இல்லாதா சமையம் யாருக்கும் அவன் காரை இரவல் தந்தது இல்லை! அது அவனுக்குப் பிடிக்கவும் பிடிக்காது. அப்படியே தேவைப் பட்டால் அதற்காகவே வேறு இரு கார்கள் வைத்திருந்தான்.
தெளிந்த நீரில் மீண்டும் ஒரு சின்ன கல் விழுந்தது. ‘வீட்டு சுவற்றில் சுதாவின் கைவண்ணம்.. காரில் உரிமை… தோழி என்ற உரிமையா? அவ்வளவு க்ளோஸ் ஃப்ரெண்டா?’ 
பேச்சை வளர்க்கும் பொருட்டு, “ரெண்டு நிமிஷம் பேசறவங்க எல்லாம் தங்கம்னு சொல்லிட முடியுமா மணி?”
“அந்தமா குணத்துக்குத் தங்கமே கம்மிங்க. சின்னம்மா யார் கிட்டயும் சொல்ல கூடாதுன்னு சொல்லிருகாங்க..” தயங்கியவாறு தொடர்ந்தான், “ஒரு நாள் என் முகவாட்டாத்த பார்த்துட்டு என்னனு விசாரிச்சாங்க.. ‘பொண்ணு கல்யாணத்துக்கு மாப்பிள வீட்டுல திடீர்ன்னு பத்து பவன் மேல கேட்டா எங்கம்மா போவேன். கொடுகலேனா கல்யாணத்த நிறுத்த போறதா சொல்றாங்க.. பொண்ணு ஆசை படர வாழ்கையை கொடுக்க முடியல’ன்னு கண்கலங்கிட்டேன்.
அன்னைக்கே சின்னம்மா அவங்க நகைய என் கைல கொடுத்து ‘மணி தயவு செஞ்சு வேண்டாம்னு சொல்லிடாதீங்க. பொண்ணு ஆசை பட்ட வாழ்க்கையை கொடுக்க முடியாத வலிக்கு இது ரொம்ப சின்ன தொகை. பத்து பவனுக்கு மேலையே இருக்கு.. சந்தோஷமா கல்யாணத்த நடத்துங்க.’னு நான் எவ்வளவோ மறுத்தும் சின்னம்மா பிடிவாதமா குடுத்துட்டு யார்கிட்டயும் சோல்லக் கூடாதுன்னு சொல்லிட்டு போய்டாங்க.
யாருக்கையா இவ்வளவு பெரிய மனசு வரும்? அது மட்டுமா.. எங்க வீட்டாண்ட இருக்கப் பாசங்களுக்கு.. சனிக்கெழம வந்து படிப்பு சொல்லித் தருவாங்க! எல்லா பசங்களும் ஆச பட்ட படிப்பை படிக்க, அதுங்க பேர்ல பாங்க்ல அக்கௌண்ட் ஓப்பன் செஞ்சு மாசா மாசம் அதுல காசு வரா மாதிரி செஞ்சு குடுத்திருக்காங்க..
அந்த பசங்க எல்லாம் ஒழுங்கா குளிச்சு தல வாரி மனுஷங்க மாதரி மாத்தினதே சின்னமா தான். எங்க பசங்க எல்லாம் இங்கிளீஸ் மீடியம் ஸ்கூல்ல படிக்குத்துங்க. அதுவும் நல்ல நல்ல மார்க் எடுத்து படிக்குதுங்க. நம்ம ராமு மகன் ஊமையா போயிருக்கும்… சுதாமா அந்த பையன் காதில இருந்த பிரச்சினையை கண்டுப்பிடிக்காட்டி. அது தெய்வம்யா… அதுக்கு போய் இப்படி ஆகணுமா?”
மருத்துவமனை வரவும்.. மணி உணவை எடுத்துக்கொண்டு அஷோக்கோடு சுதாவைக் காணும் ஆவலில் விரைந்தான். அஷோக்கிற்கு மனம் தாளவில்லை. எப்படியோ போல் ஆகிவிட்டது. அவள் குணம் பிடித்துப் போனது. ‘நினைத்தது சரி தான்.. அவள் கண் போல் இதயமும் அழகு தான்’ சொல்லிக் கொண்டான். 
உள்ளே செல்லவும் மணி சுதாவிடம் பேசிவிட்டு சென்றார். கண்ணன் பார்வை அவள் மேல் தான். பாட்டி இவனிடம் பேசிக்கொண்டிருக்க அவள் கண் இவன் மேல் தான். இவன் நடக்க நடக்க அவள் பார்வை அவனையே தொடர்ந்தது. பார்க்கவே அழகாய் தோன்றியது.. கன்னம் பிடித்து கண்ணைப் பார்க்கும் ஆவல்.. ‘என்ன தான் அந்த கண்ணுக்குள்ள வச்சிருக்கா?’ அவள் காந்தம் அவன் இரும்பு! அதை யாராலும் மாற்ற முடியாது.
அவள் அருகில் செல்லவும் பாட்டி இடையில் நின்று கொண்டார். அவனால் அவளிடம் பேச முடியவில்லை. என்ன முயன்றும் பேச முடியவில்லை… பாட்டி வாயை மூடவில்லை. ‘நிறுத்து’ என்று கத்தவா முடியும்? அவன் பாட்டி ஆயிற்றே..
‘பேரனைப் பார்த்த குஷி…’ இது அவன் எண்ணம்! அதனால் அவர் முடிக்கக் காத்திருந்தான்… அவளைப் பார்த்துக்கொண்டே!
சுதாவைப் பார்த்தவன் கண்சிமிட்டிச் சிரித்தான். பதிலுக்கு அவள் கண் கலங்கியது. அவள் சோகம் தீர ஏதாவது செய்ய வேண்டும் என் மனம் பராபரத்தது. என்ன செய்ய வேண்டும் தெரியவில்லை.
பிருந்தாவின் அழைப்பு வரவும்.. அவளோடு பேசினான். சுதா காதில் விழத் தான் செய்தது. ஒன்றும் செய்வதற்கு இல்லை. மூன்று மாத பிரிவு அவனை ஒன்றுமே செய்யவில்லையா? மனம் கலங்கப் பார்த்துப் படுத்திருந்தாள்.
சுதாவிடம் ‘பாய்’ என வாய் அசைத்துச் சென்றுவிட்டான். சுதாவிற்கு விக்கிக் கொண்டு வந்தது. அவள் படுத்துவிட்டதால் கண்ணன் தன்னை பார்க்க வருவதில்லை என்று அவளால் சிந்திக்கக் கூட முடியவில்லை. பாராமுகமும் இல்லை.. கண்ணிமைக்காமல் பார்க்கிறான்.. அழகாய் சிரிக்கவும் செய்கிறான்… ஆனால் இது அல்லவே கண்ணன்.
‘என் கண்ணன் எங்குத் தொலைந்தான். ஏதோ சரி இல்லை.. என்ன அது?’ அவளால் நினைக்க மட்டும் தான் முடியும். ஆனால் அதையே நினைத்து வருந்தினால் உடல் குணமடையாது. குணமாகட்டும் நிலைமையைச் சரி செய்துவிடலாம் என்று தன்னை தானே சமாதானம் செய்து கொண்டாள்.
பிருந்தாவோடு புன்னகை முகமாய் பேசியது மனதை குடையவேண்டுமா? தெரியவில்லை. ஆனால் பெண்களோடு அவன் நட்பு பாராட்டுபவன் இல்லையே? என்ன நடக்கின்றது? என் கண்ணன் என்ன ஆனான்? ‘கண்ணா…’ அவள் மனம் தவிப்பில்.
அவன்?
காபி ஷாப்பில் பிருந்தாவோடு அமர்ந்திருந்தாலும் சுதா சிந்தனையை நிறைத்தாள். குச்சி முடி கூட அவளுக்கு அழகாய் தோன்றியது. வாய் நான்றாய் அசைக்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் இன்னும் சத்தம் அதிகம் வரவில்லை. சில மாதத்தில் பேசிவிடுவாள் என்று தோன்றியது. அவள் குரல் எப்படி இருக்கும்..?
“அஷோக்க்க்க்க்..”
பூலோகத்திற்கு இழுத்துவரப் பட்டான்.
“என்ன?”
“இங்க தான் இருக்கியா? நான் பேசிட்டே இருக்கேன்.. நீ ட்ரீம் பண்ணிட்டு இருக்க!”
“இல்ல.. இல்ல.. சொல்லு”
“சொல்லா? அங்க பாருன்னு காட்டிடே இருக்கேன்… சொல்லாம்?”
“எங்க?” என்று அந்த கண்ணாடி சுவர்வழி பார்க்க எதிரில் தெரிந்த தேவாலயத்திலிருந்து திருமணம் முடித்து தம்பதிகள் கிளம்பிக் கொண்டிருந்தனர்.
“அவங்க வெட்டிங் அழகா இருக்கில்ல?”
“ம்ம்ம்..” என்றான்.
“என்ன ஒரு சொரத்தையே இல்லாமா பதில் சொல்ர?”
“இதுல என்ன இருக்கு எஃசைட் ஆக?”
“மேரேஜ் லேஃப் டைம் ஈவென்ட்… அதுக்கு கூட எஃசைட் ஆகாட்டி எப்படி?”
“…”
“உனக்கு மேரேஜ் பத்தி ட்ரீம்ஸ் இல்லேனு சொல்லாத?”
“இல்ல பிருந்தா… அப்படி எல்லம் தான் மேரேஜ் பத்தி ட்ரீம் பண்ணினது இல்ல!”
“நீ கல்யாணம் பண்ற ப்ளான் வச்சிருக்க தானே? வீட்டுல உனக்கு பாக்கராங்களா?”
“…ம்ம் பார்த்திட்டு இருந்தாங்க… இப்போ என்ன ஆச்சுனு தெரியல… அத பத்தி அம்மா பேசரது இல்ல!”
“ஹப்பா… கல்யாண பேச்சு இப்படி கூட ஒருத்தனுக்கு கசக்குமா? அந்த டே.. வாழ்க்கைல மறக்க முடியாத ஒரு டே… அதுல கூட மனசு ஒப்பாட்டி என்ன பண்ண உன்ன?”
“சம்பிரதாயத்துக்கு ஒரு கல்யாணம்.. அதக்கு ஒரு சடங்கு.. அதுல எல்லாம் என் மனசுக்கு ஒப்பல..” என்று அசால்டாய் தோளை குலிகினான்
“அது தான் ஏன்?” 
“சும்மா வீட்டுல சொல்ற பெண்ணை சம்பரதாயதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டு.. அவ கிட்ட உண்மையா மனசு ஒன்றி போகாம, பொதுவா ஏற்படுற ஆண் பெண் ஈர்பால பிள்ளைய பெத்துகிட்டு.. இந்த மாதரி வாழ்கைல எனக்கு விருப்பம் இல்ல.”
“அப்போ லவ் மேரேஜ் ஓக்கேவா? க்ராண்டா ஒரு வெட்டிங்?”
“நானா? லவ் மேரேஜா? தெரியல.. வேஸ் ஆஃப் ட் டைம் அண்ட் மணி!”
“கல்யாணம்  உனக்கு.. வேஸ்ஆஃப் ட் டைம் அண்ட் மணியா?” அதிர்ச்சியாய் கேட்க..
“இந்த மாதரி ஊர கூடி விடிய விடிய செய்யர ஆடம்பர கல்யாணத்த சொன்னேன்!”
“நீ கல்யாணம் பண்ணிக்க போரவ எப்பிடி இருக்கணும்னு நினைக்கிற அஷோக்”
“நான் அதெல்லாம் யோசித்ததில்ல பிருந்தா.. இன்னுமே யாரையும் பார்த்து எனக்கு காதல் வரல.. வாராத ஒண்ண பத்தி என்ன யோசனை வேண்டி இருக்கு சொல்லு!”
சலிப்பாய் பேசியவனைப் பார்த்து அவள் ஒரு நீண்ட பேருமூச்சை விட..
“என்ன.. மூச்செல்லாம்.. பலமா இருக்கு?”
“பின்ன என்ன பிடி குடுத்து பேச மாடேங்குர? லவ் பண்ண மாட்டியாம்!  அரேஞ்ட் மேரேஜும் பிடிக்காதாம்? கல்யாணமும் பண்ணிபியாம்!! என்ன பார்தா லூஸு மாதிரி இருக்கா?”
“மனசை இன்னும் யாரும் கவரலை.. சோ இப்போதைக்கு.. அந்த ஐடியா இல்ல.   யாரும் செட் ஆகாட்டி அம்மா காட்டுர பொண்ணு கழுதில தாலி.. ஆனா சிம்பில்லா கோவில்ல வச்சு!”
“ஓய்… வாங்க போர நீ.. இப்போ தானே ‘இந்த மாதரி வாழ்கையில எனக்கு விருப்பம் இல்ல’னு சொன்ன?” என்று அவனை முறைக்க
“ஹ ஹ ஹா.. விருப்பம் இல்லேனு சொன்னேன். மாட்டேனு சொல்லலியே” என்று வாய் விடு சிரித்தவன்
“எப்படியும் சன்னியாசி ஆரதா ப்ளான் இல்ல! அம்மா விட மாட்டாங்க! சோ.. பிடிச்ச பொண்ணு கிடைக்காத பட்சதில.. அம்மா காட்டுர பொண்ணோட குடும்பம் நடத்தி பிடிச்சுக்க வேண்டியது தான்! சிம்பிள். எது எப்படியொ.. என்னுடைய கொள்கை இது தான்! என்னுடைய வாழ்கையில ஒருத்திக்கு மட்டும் தான் இடம்.. பிடிச்சு மனைவினு ஏத்துக்கிட்டாலும் சரி.. கட்டாயத்துல அம்மாக்காக ஏத்துக்கிட்டு பிடிச்சாலும் சரி!” என்று புன்னகைதான். 
“அப்போ உன்ன கரெக்ட் பண்ணுரதுக்கு பதிலா உன் அம்மாவ கரெக்ட் பண்ணினா போதும் போல!”
“ஹ ஹ ஹா..” அவனிடம் சிரிப்பு மட்டுமே
“நீ என்ன அஷோக் இவ்வளவு போரிங்கா இருக்கா.. உனக்கெல்லாம் ஒரு பொணுகிட்ட மனச பறி குடுக்கரதுன்னா என்னனு கூட தெரியாது..”
அவளை ஒருமுறை உற்றுப் பார்த்து தெளிவாய் அமைதியாய் சொன்னான், “ஒருத்திய பார்க்கணும்.. பார்த்ததும் இதயம் நின்னுத் துடிக்கணும்.. ஏன்னே தெரியாம அவ கிட்ட என்னையே மறந்திடனும்… இருக்க ஒரு மனசையும் அவட்ட குடுத்திட்டு அவளப் பார்க்க தவிக்கணும்.. அவ கூட இருக்க இருக்க அவ மேல இருக்க அன்பு இன்னும் கூடனும். அவ தான் எனக்கு எல்லாம்னு ஆழமா  மனசு நம்பணும்.. இவ இல்லாத வாழ்க்கை, வாழரதே வீண்-னு மனசு சொல்லணும்.. நிறைவா அவ கூட வாழணும்.. அவ உயிர் பிரியர நேரம் என்னுதும் பிரிஞ்சிடனும்!”
அதன் பின் வெறும் அமைதி. அவன் மனது வலித்தது. என்னென்று கொஞ்சம் தெரிவது போல் இருந்தது. இதைச் சொல்லும் வேளை அவனை ‘ஆ’வென்று பார்த்த அழகான கடல் பச்சை நிறக் கண் அவன் இதயத்தை நொடிப் பொழுது நிறுத்தியது நினைவில் வந்து போனது. அதன் தாக்கமாயிருக்கலாம்.
“போலாமா?” கேட்டான்.
அவன் கேள்வி அவள் காதில் விழுந்ததா தெரியவில்லை.., “ஏன் அஷோக்.. எப்போ தோணும்?”
“ம்ம்?? என்ன ‘எப்போ தோணும்’?”
“அது தான் இப்போ சொன்னியே.. ‘ஒருத்தியை பார்க்கணும்.. அப்புறம் அவதான்னு தோணணும்..’ன்னு! அது தான் எப்போ தோணும்?? ரொம்ப நாள் ஆகுமோ?”
பேச்சு போகும் திசை ரசிக்கவில்லை. சலிப்போடு, “இப்போதைக்கு இல்ல. வந்து நேரம் ஆகுது.. கிளம்பலாம்..”
அவள் யோசிக்கவில்லை அவள் மனதைத் திறக்க. “எனக்கு அப்பிடி தான் உன்ன பார்த்தா தோணுது அஷோக். ஆனா உனக்கு அப்படி தோண நான் என்ன அஷோக் பண்ணனும்?” கண்கள் நீர் திரையிட்டது அவளுக்கு.
பட்டென்று சொல்லிவிட்டாள். ஆனால், அவனுக்கு தான் என்ன சொல்லுவதென்று தெரியவில்லை! உண்மை சொல்லுவதே உகந்தது என்று முடிவெடுத்தவன்,   அவள் கையை ஆறுதலோடு பிடித்துக் கொண்டான்.
“ஷ்.. என்ன பிருந்தா நீ…? சும்மா தானே பேசிட்டு இருந்தோம்.. எதுக்கு இப்போ எமோஷனல் ஆர? ப்ளீஸ்… எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும் பிருந்தா.. ஆனா என்னோடைய பழைய லைப்.. அதுல என்ன நடந்துன்னு தெரியனும்! அதுக்கு முன்னாடி வேர கமிட்மென்ட்ஸ் வேண்டாம்னு பாக்கறேன்! உன்னுடைய ஃபிரண்ஷிப்ப நான் ரொம்ப விரும்புறேன். உன் கூட இருக்கும் போது எதையும் ரொம்ப யோசிக்காம நிம்மதியா இருக்கேன்  ப்ருந்தா… லவ் எல்லாம் வரல… இதுனால உன்ன இழக்க எனக்கு விருப்பம் இல்ல. அதுக்குமேல வேண்டமே.. ப்லீஸ்!” என்றான் தெளிவாய்.
அவளுக்குமே ‘ஏன் எப்படி தன் வசம் இழக்கவேண்டும்?’ என்றே தோன்ற அமைதியாய் அவனோடு சென்றாள்.
ஆனால் ‘வேண்டாம்’ என்றால் போவதற்கு அவள் பள்ளிப் பருவ மாணவி இல்லையே..
“உனக்கு தோணும் போது நீ லவ் பண்ணு.. ஆனா என் கிட்ட லவ் வேண்டாம் சொல்லாத! உன்கிட்ட சொல்லாம ரெண்டு வருஷம்.. உன்ன பார்க்காம ஏழு வருஷம் காத்திருந்தேன் என் காதல் குறையாம! நீ சரி சொல்ர வரைக்கும் காத்திருப்பேன்…”
நடந்து கொண்டிருந்தவன் நின்று திரும்பி பார்த்தான். குழந்தையாய் தெரிந்தாள். நெருப்பு சுடும் என்று சொன்ன பின்னும் அதை தொட ஆசைப் படும் குழந்தையாய்!
“ஏன் அடம்பிடிக்கர பிருந்தா நீ? நான் உன் கூட ஃப்ரெண்டா தானே பழகறேன்?”
“இல்ல… உனக்கு பொண்ணுங்க கூட ஃப்ரெண்ட்ஷிப் இல்ல… உனக்கு என்னைப் பிடிக்கும். சும்மா பழசை பிடிச்சுட்டு தொங்கர! சரி.. விடு உனக்கா தோணும். நீ என்னை லவ் பண்ணுவ! காத்திருக்கேன். அது வரைக்கும் ஃப்ரெண்டுனு சொல்லிக்கோ.. போ!”
பிருந்தா தான் அஷோக் வாழ்வில் முதல் வந்தாள்… அவள் தான் அவனுக்கு எல்லாவிதத்திலும் பொருத்தம்… அதற்காகச் சுதா விட்டு கொடுக்கவேண்டுமா? புடவையை ஒரு முறை விட்டுக் கொடுத்தாள்.. கணவனை? சுதா விட்டுக் கொடுக்க வேண்டி வராதோ? (புடவையை விட்டு கொடுத்தாளா? பறிக்கபட்டதா?)

Advertisement