Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 52
 
மணலாய் காத்திருந்தாள்.. தன் காதல் அலை அவளைத் தழுவ!
அவள் கடற்கரை மணலா.. பாலைவன மணலா? காலம் தான் பதில் கூறவேண்டும்.
விபத்து முடிந்து மாதம் இரண்டு முடிந்த நிலை!
அஷோக்கை ஒரு முறை பார்த்ததோடு சரி… ஏன் வரவில்லை? யாரிடமும் எதுவும் கேட்கவும் முடியவில்லை, சுதாவால். முக தாடையில் அறுவை சிகிச்சை முடிந்திருக்க வாய் அசைக்க முடியாத சூழ்நிலை. கழுத்து வலியும் இன்னும் குறையவில்லை.
தொண்டையிலும் அடி கொஞ்சம் பலம். காயம் ஆறும்வரை பேச இயலாத நிலை. கண் மட்டுமே பேசும்.. அதன் பாஷை புரிந்தவனும் இங்கில்லை.
தினம் தினம் அவள் கணவன் வரவுக்காய் காத்திருந்து சோர்ந்து போனாள். அவன் பெயர் கூட காதில் விழுவதில்லை.. அவனைக் கண்டது ‘கனவா?’ என்ற எண்ணம் எழ ஆரம்பித்தது.
பாட்டியைத் தவிர சுசிலாவை அறையில் கண்டிருந்தாள். அவர் முகம் தெளிவாய் இருக்கவே கண்ணனைக் கண்டது கனவில்லை என்று தேற்றிக்கொண்டாள்.
அவளைத் தேடி அத்தையோ.. மாமாவோ.. தோழர்களோ ஒருவரையும் காணவில்லை. ஓரிரு முறை தீபக் வந்ததோடு சரி பின் அவனும் வருவதில்லை. வாழ்க்கை சூனியமாய் தெரியவேண்டும்.. ஆனால் அப்படித் தோன்றவில்லை. கண்ணன் எழுந்து நடமாடுவதே போதுமானதாக தோன்றியது. 
அவனோடு இருந்த நாட்கள்.. அந்த கனவையே மீண்டும் மீண்டும் கண்டாள். அதன் உயிர்ப்பிலே உயிர் வாழ்ந்தாள்.
‘நான் சாவ கிடந்தாலும் உங்களுக்காக எழுந்து வருவேன்..’ அவளுக்கு வாழ ஆசை.. கண்ணனோடு. அவனுக்காக இன்னும் வலியைப் பொறுப்பாள். ஆனால் அவன் எங்கே? அவன் அணிவித்த தாலியும் மோதிரமும் எங்குப் போனதோ..? அது ஒரு பக்க உருத்தல்! பாட்டியிடமிருக்கும். அவரிடமிருந்து அவள் வாங்கவே முடியாது. கண்ணன் தான் வாங்கி போட்டுவிட வேண்டும்!
பாட்டியின் வசை பாடல் எப்பொழுதாவது இருக்கும். ‘இவள் செய்த பாவமும்.. இவள் அப்பன் செய்த பாவமும் அவளைப் படுக்க வைத்ததாய்.’ ஓடவும் முடியாதே… அவரை பார்த்தாலே கண்மூடிக்கொள்வாள். ‘இறக்கம் என்பது இவருக்கு இல்லவே இல்லையா?’ என்ற எண்ணம் எழாமல் இல்லை.
‘பாட்டிட்ட இனி நீ போக வேண்டாம்.. அவங்க இனி மேல் உன்ன ஒரு வார்த்த சொல்ல மாட்டாங்க.  நீ வெறும் அவங்க பேத்தி இல்ல.. உன்ன இஷ்டத்துக்குப் பேச. நீ என் மனைவி.. என்னை மீறி யாரும் உன்ன பேச முடியாது.’ சொன்னவன் வரக் காத்திருந்தாள் சண்டை பிடிக்க!
‘ஏன் என்னை இந்த கிழவியிடம் தனியே விட்டாய்’ என்று அவன் தலை கொதி கேட்க வேண்டும்.
தண்டனையாய் நகத்திற்கு சாயம் பூசச் சொல்லவேண்டும்..
மனம் முழுவதும் அவள் கண்ணன் மட்டும் தான்.
பாட்டிக்கு பயந்து கண்மூட ஆரம்பித்தவள், இப்பொழுது விரும்பியே மூடிக்கொண்டாள்.
கண்மூடி கிடக்கப் பிடித்தது. கண்மூடியிருந்தால் ஒருவரும் அவளைத் தொந்தரவு செய்வதில்லை. அவனைத் தவிர!
அவள் கண்ணுக்குள் கண்ணனோடு காதல் செய்தாள்.
வாய் வலிக்கும் வரை அவனோடு கதையடித்தாள். மூணாறு முழுவதும் சுற்றித் திரிந்தாள் அவன் கைகோர்த்து. கால் வலிக்கும் வரை கடற்கரையில்  நடந்தாள்.. வலித்தால் தூக்கிக்கொண்டான். கூலியும் வாங்கிக்கொண்டான். கண்மூடி காதலனோடு காதலியாய் வாழ்ந்தாள்.
மல்லி கொடியின் அடியில் உடல் கூச அவன் முத்தத்தில் திளைத்தாள். அவன் வருடலை ரசித்தாள். அவன் வாசம் அவள் நாசியில்.. அவன் ஸ்பரிசம் மேனி முழுவதும். கண்மூடி அவள் கணவனோடு மனைவியாய் வாழ்ந்தாள்.
கண் ஓரம் வழியும் நீரைத் துடைக்க அவனில்லை.. இருந்தும் அவனோடு ஒரு வாழ்க்கை… பொய்யான வாழ்க்கையை மெய்யாய் வாழ்ந்தாள். 
மனதையும் உடலையும் ஒன்றாய் அரசாண்டான். விரும்பி அவனிடம் கண்மூடித் தொலைந்து கொண்டிருந்தாள்.
இன்றும் நல்ல உறக்கம். ஏமாற்றாமல் கனவில் வந்தான் தலையை வருடினான்.. அவன் வாசம் நாசியில் நுழைந்தது. அவள் காதில் கிசுகிசுத்தான்.. “லட்டு.. படுத்தரடி லட்டு” கொஞ்சலாய்.. அவளை உரசிக் கொண்டே…
“சுதா என்னை பாரேன்…” என்றான். சத்தம் மயிலிறகாய் இதயத்தை வருடியது.
திடீர் என முழிப்பு தட்ட, கண்ணைப் பட்டென்று திறந்தாள். அவளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு இதயம் நின்று துடித்தது. அவள் கண்ணை அழகு படுத்தியிருக்கவில்லை. கண்டிப்பாய் அவள் கண் தான் அத்தனை அழகு என்ற எண்ணம் தோன்றியது அவனுக்கு.
கண்ணை மூடி திறந்தாள். புன்னகை முகமாய் நின்று கொண்டிருந்தான் அவள் கண்ணன். அதன் பின் கண்ணை இருவருமே இமைக்கவில்லை.
காப்பியத்தில் மட்டும் தான் கண்டதும் காதல் வருமா என்ன? இவர்கள் காதலும் அப்படி விழிமொழி காதல் தானே..
அவள் கண்ணில் லயித்து நின்று விட்டான். என்ன நிறம் அவள் கண்கள்.. அதையே பார்த்து நின்றான். அவள் முக பாவம்.. அது இன்னும் அருமை.. 
காதலுக்குக் கண் இல்லை என்பது இவர்கள் காதலில் பொய்த்துப் போனது.
கண்… அவள்  கண் தான் காதல் அம்பாய் அவனுள் ஊடுருவியது… அன்றும் இன்றும்.
ஏனோ அவள் கண் அவனுக்கு வெறும் கண்ணாய் தோன்றவில்லை. அது சொர்கத்தின் கதவு.. அவனுக்கு மட்டுமே தெரியும் கதவு அது.
தோன்றியதெல்லாம் இது தான்… ‘அவள் மனதும் அவள் கண் போல் அழகோ’ என்று தான்!
ஆம் பார்த்த அன்று முதலே ஒரு தாக்கம், ஏன் என்ன என்று தெரியவில்லை.
அவள் கண் பார்த்ததும், அவள் உள்ளம் அறிந்து கொள்ள.. அவளை அறிந்து கொள்ள ஒரு ஆசை.
மொட்டை மண்டையில் குச்சு குச்சியாய் முடி முளைத்து நின்றது. தலையில் கட்டுப் போய் பெரிதான ப்ளாஸ்திரி. ஒரு பக்கம் முகம் முழுவதும் மூடியிருந்த கட்டு நீக்கப் பட்டு கன்னத்தில் மட்டும் பெரிய ப்ளாஸ்திரி. முன்பிருந்த அதே நிலை. அவளால் கொஞ்சம் கூட அசைய முடியாது. ஆனாலும் இது எதுவுமே அவன் கவனத்தில் பதியவில்லை. அவள் கண் மட்டும் தான்.. அந்த பழுப்பும் கடல் பச்சையும் கலந்த நிறம்.. அவனை வெகுவாய் கவர்ந்தது.
இம்முறை அவள் இதயமும் ஒரு நொடி துடிக்க மறந்தது. கனவா? கண்மூடி மீண்டும் திறந்தாள். அவனே தான்.. அவளைப் பார்த்து நின்றிருந்தான்.. கண் சிரிக்க.. இதழ் சிரிக்க..
“ஹாய்” என்றான் அவள் கண்ணன்..
பேச ஆசை தான் குரல் எழும்பவில்லை. என்ன முயன்றும் கண் குளமாவதைத் தடுக்க முடியவில்லை. கண்ணீர் வழியவில்லை.
தொண்டை வலிக்க “ஹாய்” என்றாள். வெறும் காற்று தான் வந்தது. இன்னும் ஏதோ கேட்டாள். ‘ஹாய்’ புரிந்தது.. உதட்டசைவால்.
“என்ன?” என்று குனிந்து அவள் உதட்டருகில் காதை வைக்க.. அவள் உதடு காது மடலை உரச.. உடல் முழுவதும் மின்சாரம் பாய.. மயிர் சிலிர்க்க.. சட்டென்று எழுந்து விட்டான். எழுந்த வேகத்தில் சுதாவின் ஒரு சொட்டு கண்ணீர் அவன் நெற்றியை முத்தமிட்டிருந்தது.
உள்ளுக்குள் புதிதாய் ஒரு உதறல், அவனுக்குள். எச்சில் விழுங்கி இழுத்துப் பிடித்துப் புன்னகைத்தான். அடிவயிறு ஏதோ செய்தது. உடல் சிலிர்த்தது. கால் தரையில் இல்லை. மின்னலின் தாக்கமா? தெரியவில்லை! ஆனால் பிடித்தது.
அவன் வாசம் அவளுக்கு ஒரு புது தெம்பு…
அவள் விரிந்த கண் பார்த்துச் சிரித்தான். அழகாய்.. வசிகரமாய்.. அவளை அப்படியே முழுதாய் விழுங்கிக்கொண்டான் அவன் புன்சிரிப்பால்.
“ஏர்போர்ட்ல இருந்து நேரா இங்க தான் வறேன்… உன்ன அட்டெண்ட் பண்ற டாக்டரைப் பார்த்தேன்.. நீ நல்லாயிட்டு வரதா சொன்னாங்க.. ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.. தெரியுமா?”
அவள் முழு கண்ணையும் விரித்து அவனைப் பார்த்து கொண்டிருக்க… அவனுக்குப் பேச்சே பஞ்சமாகிப் போனது. ‘இப்படி முழுச்சு பார்த்தா எப்படி பேசரது?’ என்ற எண்ணமே..
“சாரி” என்றான்
அவள் கண்ணைச் சுருக்க..
“ஏன்னு கேக்குறியா?”
கண்ணை மூடி திறந்தாள்.
“நீ என் கூட வரும் போது தானே ஆக்சிடென்ட் ஆச்சு?” என்று நிருத்த ‘அதுக்கு?’ என்பது போல் புருவம் நெளிக்க..
“அதுக்கு தான் சாரி” என்றான்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.. ‘என்ன உளறுகின்றான்’ என்றே தோன்றியது.
“உன் கண் பாஷ எனக்கு புரியுது பார்” என்றான் புன்னகை முகமாய்.
ஏதோ சரி இல்லாத உணர்வு அவளுள்.
‘யாராவது அறையில் இருக்கின்றார்களா? ஏன் இப்படி ஒட்டா தன்மை?’ கண்ணை அறை முழுவதும் சுழல விட்டாள்.
அந்த கோலிக்குண்டு விழி உருண்டதைப் பார்க்க பார்க்கப் பரவசமாய் போனது கண்ணனுக்கு.
கோலிக்குண்டு விழி எப்பொழுதும் போல் அவனை வெகுவாய் ஈர்த்தது.
‘அந்த கண்ணில் இதழ் பதிக்கவா?’ தலையை சிலுப்பிக் கொண்டான். என்ன அசட்டு எண்ணம்? புன்முறுவலோடு பின்னந்தலையில் லேசாய் தட்டிக்கொண்டான்.
“யார தேடுர? பாட்டியவா? அவங்க உன் சொந்தகார பையனோட வெளில பேசிட்டு இருக்காங்க..”
‘தீபக்கா? இருக்கும். அவனைப் பார்த்ததும் டென்ஷன் ஆகிட்டாரோ?’ அமைதியானாள்.
“உள்ள ரூம்ல யாரும் இல்ல தானே… நான் போய் ஃப்ரெஷனப் ஆகிட்டு வரேன்.. சரியா… டூ மினிட்ஸ் தா..” என்று அவன் உள்ளே செல்லவும் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள். அவனை உள்ளுக்குள் இறக்கிக் கொண்டிருந்தாள்.
வலது காலில் ஏதோ ஈரமாய் பட, கண்ணனைத் திறந்தாள். அவள் கால்மாட்டில் தீபக் நின்று கொண்டிருந்தான்.
அவன் உடல் குலுங்கியது. விபத்தாகிவிட்டது என்று பாட்டி சதீஷுக்கு அழைத்த சில தினங்கள் கழித்து வந்தான்.. அடுத்து ஓரிரு முறை.. ஆனால் அவன் வந்த வேளையில் அவள் நினைவில் இல்லை.
அதன் பின் இன்று தான்…
கால் விரலை அவள் அசைக்க வேகம் வேகமாய் ஈரத்தை கையாய் துடைத்தான்.
அவள் முகம் பார்க்க, வா என்பது போல் கை அசைத்தாள். அருகில் சென்றவன் அவள் கட்டிலருகே முட்டி பொட்டு அவள் உயரத்திற்கு அவள் முகம் பார்த்து நின்றான்.
முகத்தில் அப்படி ஒரு களைப்பு. மெலிந்திருந்தான். முகம் மிகவும் வாடி அதன் மெருகு குறைந்திருந்தது. தீபக்கா? பார்க்கவே பாவமாய் தோன்றினான். தோள் கொடுத்திருப்பாள்.. ஆனால் முடியாத நிலை. இந்த நிலையிலும் அவனுக்காய் மனம் வாடியது.
“நான் படிச்சுப் படிச்சு சொன்னேனே… குணா உன்ன விடவே மாட்டானு.. கேட்டியா? இப்போ பார் உன் நிலைய…” தொண்டை அடைத்தது.
“உனக்கு தெரியுமானு தெரியல.. குணா தான் உன்ன படுக்க வச்சது. இப்போ அவனும் இல்ல.. செத்து தொலைஞ்சுட்டான்! இத தான் விதினு சொல்லணும். நான் ஒழுங்கா இருந்திருந்தா இதெல்லாம் நடந்திருக்காது. குணா எனக்கு ஃப்ரெண்ட் ஆகியிருக்க மாட்டான். உனக்கும் எனக்கும் கல்யாணம் நடந்திருக்கும். குடும்பமா இன்னைக்கு எல்லோருமே சந்தோஷமா இருந்திருப்போம்.
ஆனா நான் ஒருத்தன் சரி இல்லாம போக.. நீ வீட்ட விட்டு போக வேண்டியதா போச்சு.. என்னால, நீ தனியா பாடுபட வேண்டியதா போச்சு.. என்னால யாருக்குமே நிம்மதி இல்ல. நான் உன்ன கட்டாய கல்யாணம் பண்ண நினைச்சு உன்ன டார்சர் பண்ணினேன்… ஆனா மறுநாளே.. நீ அப்பாக்கு ஃபோன் போட்டு என்னைப் பண கஷ்டத்துல இருந்து காப்பாத்த சொல்லி இருக்க. உன் பங்கு சொத்தை எனக்கு கொடுக்க சொன்னியாம்.. அப்பா சொன்னாங்க..”
அவள் கண் மாமாவைத் தேட.. ”அப்பா, அம்மா உன்ன பாக்க வர முடியாது சுதா… பெத்தவங்க பாவம் பிள்ளைங்க மேலனு சொல்லுவாங்க… என் பாவம் அப்பாவ சாச்சிடுச்சு..
உன் பாட்டி அப்பாக்கு ஃபோன் பண்ணிச் சொல்லும் போது அப்பா மாடில இருந்தாங்க.. அதிர்சில சாய.. பேலன்ஸ் இல்லாம அப்படியே கிழ விழுந்துட்டாங்க. முதுகுத் தண்டு அடிவாங்கிடுச்சு. டாக்டர்ஸ் ஒன்னும் பண்ணமுடியாதுனு சொல்லிட்டாங்க… இப்போ ஆயுர்வேதா ட்ரீட்மென்ட்-ல இருக்காங்க.. ஆஸ்ரமத்தில தங்கி…
அம்மாக்கு உனக்கு நடந்த ஆக்ஸிடென்ட் தெரியும்.. ஆனா வெறும் கை கால் முறிவுனு சொல்லி வச்சிருக்கேன்.. அப்பாவை விட்டு அம்மாவால வர முடியாதா சூழ்நிலை. அங்க ஃபோன் கூட எடுக்காது ஒழுங்கா… அதனால் நீ பேசலனு சொல்லி வச்சிருக்கேன்.
என்னால முடியல சுதா… சத்தியமா முடியல.. நான் பாவி… ஆனா நான் மட்டும் குத்து கல்லாட்டம் இருக்கேன்… நான் நேசிச்ச எல்லாத்தையும் தொலைச்சுட்டேன்… என்னால முடியல சுதா… நீ என்னை மன்னிப்பியா?
அப்பா முகத்தைப் பார்க்கவே கூசுது.. அம்மாவ பார்த்தா தண்ணி தொண்டையில இறங்க மாட்டேங்குது.. உன்ன பாக்க எனக்கு அருகதை கூட இல்ல.. என்ன மன்னிச்சிடு சுதா.. உன்ன அங்க வச்சு பார்த்துக்கலாம்னு கேட்டேன். டாக்டர் உன்னை அசைக்கவே கூடாதுனு சொல்லிட்டாங்க… வார வாரம் வரேன் சுதா.. என்னை மன்னிச்சிடு சுதா.. 
நான் பாவி. உன்ன நொறுக்கின பாவி.. நம்ம குடும்பத்தை சீரழிச்ச பாவி..” கட்டிலில் ஓரத்தில் முகம் புதைத்து உடல் குலுங்க அழுதான்.
தோளில் அவள் தட்டிக் கொடுக்க அவன் அவள் கைகை பிடித்து கண்ணில் வைத்துக் கொண்டான். அவன் கர்வம்.. ஆணவம் போன திசை தெரியாமல் போனது. அதற்கு அவன் கொடுத்த விலை மிகப் பெரியது.
முகம் கழுவி வெளிவந்த அஷோக் கண்ணில் பட்டது இது தான்.. தீபக் அழ அவள் ஆறுதல் படுத்த அவள் கைபிடித்து அவன் கண்ணீர் விட.. 
அரை மணி நேரம் முன் பாட்டி சொன்னது நினைவில் வந்தது.
அன்று ஒருமுறை ஐ.சி.யூ முன் பார்த்த அதே வாலிபன்.. இன்று வி.ஐ.பி-களுக்கான தனியறை முன்னிருந்த வராண்டாவில் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தவன் அருகிலிருந்து வந்த பாட்டி கூறினார் இவனிடம், “அவன் தீபக். சுதாவோடா அத்தை பையன். அவளுக்கு இப்பிடி ஆனதும் பையன் உடைஞ்சு போய்ட்டான்.. அவ மேல உயிரே வச்சிருக்கான். அவ யாருமில்லாம நின்னப்போ அவ அத்தை தான் கூட வச்சுகிட்டாங்க. அவனுக்குச் சுதா மேல ரொம்ப பாசம்… கேரளால இருந்து வாரம் ஒரு தரம் வந்துடுவான் அவள பாக்க. ரெண்டு மாசத்தில புள்ள  பாதியா இளச்சு போச்சு! இவ இப்படி படுக்காம இருந்திருந்தா இந்நேரம் இவனுக்குத் தான் சுதாவ பேசரதா இருந்துது! அவ பிறந்த நேரம் சரி இல்ல!”
கண்கொட்டாமல் பார்த்து நின்றான் அஷோக். தீபக் நிலை மனம் உருக்கியது. மிக ஆழமான அன்பு தெரிந்தது. எச்சில் விழுங்கிக்கொண்டான்.  ஒதுங்கிக் கொண்டான். உடலில் ஏறிய மின்சாரம் தரை இறங்கியது. சுருக்கென்று ஒரு வலி வந்து போனது.
‘பையன் அவள ரொம்ப லவ் பண்றான் போல.. பாவம்’ என்று தோன்றவே அவளைப் பார்த்தான்.. கண்ணை இறுக்கி மூடி படுத்திருந்தாள். முகத்தில் உணர்வை காட்டவில்லை.
அஷோக் மனதினுள்ளே எழுந்த தீ பொறி தீபக் கண்ணீரால் பொசுங்க… சத்தம் காட்டாமல் அஷோக் வெளியே சென்றே விட்டான்.
தீபக் சென்ற பின்னும் நீண்ட நேரம் காத்திருந்தாள் கண்ணனைக் காண. அவன் தோள் வேண்டும் சாய.. அவள் ஆருயிர் மாமாவின் நிலை அவளைக் கலக்கியது.
ஆனால் அவன் வரவே இல்லை. 
இன்று வரை இல்லாத குழப்பம் அவளுள் குடிக்கொண்டது. ‘எங்குப் போனான்? ஏன் போனான்?’
‘கை கால் உடைந்து.. விலா முறிந்து.. பேச்சிழந்து… அழகிழந்து… கட்டைபோல் படுத்திருப்பதால் அவன் அவளைப் பார்க்க வரவில்லை’ என்று பாட்டி கூறியதை மனம் ஏற்கவில்லை.
‘ஏதாவது காரணம் இருக்கும்… வருவான்.. நான் இல்லாமல் அவன் இல்லை.. நான் அவன் அன்றில்’ என்று காதல் மனது நம்பியது. வருவான் தெரியும்… இருந்தும் வலித்தது.
இரண்டு மாதமில்லாத துக்கம் ஒன்றாய் படை எடுத்து அவள் தொண்டையை நசுக்கி வலி ஏற்படுத்தியது.
தேனாய் இனித்த வாழ்வு சரிந்து தலையில் இடியாய் விழுவது போலிருக்க.. வலித்தது.
கண்ணன் வேண்டும்.. என் கண்ணன் வேண்டும்… மனம் அடம்பிடித்தது. 
 ‘ஓ’வென்று கத்த வேண்டும் போலிருந்தது. உடல் குலுங்கி அழ முடியவில்லை. முதுகுத் தண்டு.. விலா.. தொண்டை வலி புரட்டி எடுத்தது. எதுவுமே பிடிக்கவில்லை. 
தீண்டிய தென்றல் சுட்டது.
கண்ணை மூடினாள். வந்தான் அவள் கண்ணன். சிரித்தான்… வருடினான்… சுதா சுதா.. கழுத்தோடு முகம் புதைத்து பிணாத்தினான்… அணைத்தான்.. முத்தமிட்டான்… அவளால் முடியவில்லை. கண்திறந்தாள் அவன் காணவில்லை.
கண்மூடினாள்.. இதழில் இதழ் பதித்தான்.. அவள் உயிரை உறிந்தான். நெஞ்சு வலித்தது, இதழ் துடித்தது.
கண்ணீர் வழிந்தது.. அவள் கனவு போல் எந்த கட்டுப்பாடும் இல்லாமல்.
பொய் போதவில்லை. நிஜம் வேண்டும் என மனம் கூப்பாடு போட்டது. ‘கண்ணா.. வா’
நிஜம் வரவேயில்லை! அவள் தேடலும் நிற்கவே இல்லை. ‘எங்கே.. நீ எங்கே..?’ கேட்டுக்கொண்டே கண் திறந்து படுத்திருந்தாள். கண்மூடத் துணிவில்லை!
அவள் கடற்கரை மணல் தான். சந்தேகமில்லை. ஆனால் அந்த கடலில் தான் அலை இல்லை!

Advertisement