Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 51
நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல…
அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது. மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்து மூன்று நாட்கள் படுக்கையில் கழித்தான். உறவுகள் வந்து செல்ல நேரம் ஊர்ந்தது. ஒவ்வொருவரும் வந்து துக்கம் விசாரித்தது எரிச்சலைக் கிளப்பியது.
சொல்லிவைத்தார் போன்று ஒரே மாதிரி கேள்வியே அனைவரிடமும்.. “எப்படி ஆச்சு? எங்க ஆச்சு? பார்த்து ஓட்டக் கூடாதா? இப்போ எப்படி இருக்கு? ஒரு வாரம் பத்து நாள் ஹாஸ்பிட்டல்ல இருக்க வேண்டியது தானே… எல்லாத்துலயும் அவசரம்.. பளா.. பளா.. ..பளா!”
வீடே மலர்க் கொத்துகளால் நிரம்பி வழிந்தது. இத்தனைக்கும் விஷயம் வெளிவரவில்லை. விபத்து நடந்திருப்பது பெரிய தொழில் அதிபருக்கும், அரசியல்வாதி மகனுக்கும் என்பதால் விஷயம் கசியவிடாமல் பார்த்துக்கொண்டனர். அப்படி ஒன்று நடந்தது சுசிலா மூலம், வெறும் நெருங்கிய உறவிற்கும், மிக நெருக்கமான நட்பு வட்டாரத்திற்கு மட்டுமே தெரியும்! அதனால் சுதா பக்கம் ஒருவருக்கும் தெரிய வாய்ப்பில்லாமல் போனது.. பாட்டி யாரிடமாவது கூறினால் உண்டு!
ஒருவழியாய் மூன்று நாட்களில் சூறாவளி அடங்க கொஞ்சம் நிம்மதி மூச்சு வெளிவந்தது.
அதற்குமேல் நாட்கள் நகர மறுத்தது. தனியே இருந்த நேரங்களில் சுதாவின் தோற்றம் அவனை வட்டமிட்டுக்கொண்டே இருந்தது. பழைய நினைவுகளை மீண்டும் கொண்டுவரும் முயற்சி தலைவலியை மட்டுமே கொடுத்தது.
தலைவலி விடுவதாக இல்லை என்றதும், மருத்துவரை நாடி மருத்துவமனை சென்றவன், மருத்துவரை முதலில் பார்க்காமல்,  ஐ.சி.யு-வை நோக்கி நகர்ந்தான். தன்னை நம்பி தன்னோடு பயணப்பட்ட தோழியைப் படுக்க வைத்துவிட்டேனே என்ற குற்ற உணர்வு அவனைத் தகித்தது. ஆம், அவன் தோழியைத் தான் பார்க்கச் சென்றான்.. மனதில் வெறும் குற்ற உணர்வோடு.
ஐ.சி.யு வார்டின் வெளி அறையில் பாட்டியோடு ஒரு இளைஞன் பேசிக்கொண்டிருந்ததை அவன் கவனிக்கத் தவறவில்லை. நல்ல வசிகரன்.. ஆனால் முகத்தில் வாட்டம், பல நாட்களாய் சவரன் செய்யப்படாததின் அறிகுறி. கண்களில் ஜீவன் இல்லை.. அவன் முக வாட்டமே கூறியது மருத்துவமனையில் இருக்கும் அவன் உறவு அவன் மனதிற்கு மிக நெருங்கிய சொந்தம் என்பதை!
அவனும் அவன் உறவுக்காய் அமர்ந்திருப்பான் என்று எண்ணினானே ஒழிய அது சுதாவின் அத்தை மகனாய் இருக்கும் என்று கனவில் கூட நினைக்கவில்லை.
“எப்படி இருக்கீங்க பாட்டி?”
சத்தம் கேட்டு தலையை நிமிர்த்தியவர் நின்றிருந்தவனைக் கண்டதும் முகத்தில் கலவரம் பரவியது. சமாளித்துக்கொண்டு,
“என்ன கண்ணா… இங்க என்னடா செல்லம் பண்ணிட்டு இருக்க? நேத்து தானே உன்னை வந்து பார்த்தேன்.. நல்லா இருந்தியே… என்ன கண்ணா?” என்று அன்போடு அவன் தொளை தடவிக்கொண்டே கேட்டார்.
பாட்டிக்குத் தான் அவன் மேல் எத்தனைப் பிரியம்! அந்த அன்பு தான் அவனுக்குப் பாதகமாய் போனது என்று அவர் ஏன் அறியவில்லை?
“தலைய வலிக்குது பாட்டி. டாக்டர பார்த்திட்டு போலம்னு வந்தேன். அதுக்கு முன்னாடி அப்படியே உங்களையும் சுதாவையும் பாக்க வந்தேன்.”
பாட்டி திடுக்கிட்டார். ‘சுதாவையா? எதுக்கு?’ கேட்டுக்கொள்ளவில்லை.
“ம்ம்.. சரி வா.. நம்ம போய் டாக்டர முதல்ல பார்ப்போம்” அவனை இங்கிருந்து நகர்த்தினால் போதும் என்ற எண்ணமே. அவளைப் பார்த்து மீண்டும் இவன் படுத்துவிட்டால்? பயமாய் இருந்தது. அவன் பட்ட அவஸ்தை அப்படி. ‘பட்டும் திருந்தவில்லையே இவன்?!’
அனைவர் கோபத்தையும் வாங்கிக் கொள்ள ஒரு அபலை இருக்கவே.. பாட்டியின் கோபமும் அவள் மேல் தான்.
‘இந்த பொண்ணு… என் பேரன பாடப் படுத்துதே..’ என்று தான் நினைத்தாரே ஒழிய, அங்குப் படுத்திருப்பது அவர் மகளின் செல்ல பொக்கிஷம் என்று அவருக்குத் தோன்றவே இல்லை!
“டாக்டர நானே பார்த்துக்குறேன். நீங்க இங்கையே இருங்க. முதல்ல சுதாவ பார்த்துட்டு வரேன்.”
பாட்டிக்கு மூச்சடைத்தது.. எப்படி சமாளிப்பதென்று தெரியவில்லை. அவருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்துவிட்டது. தடுப்பது போலத் தெரிந்தால் அவன் கேள்விகள் கேட்கக் கூடும் என்பதால் அவர் அவனுக்கு மறுப்பு கூறவில்லை.
“கண்ணா… அவளுக்கு இன்னும் அப்படியே தாண்டா இருக்கு.. பார்த்து மனசை கஷ்ட படுத்திக்கணுமா? வேண்டாம் கண்ணா…” அவர் தயங்க
“தெரியும் பாட்டி. நான் தானே அவள இங்க படுக்க வச்சேன்.. மறக்கல. என்னால என்னை மன்னிக்கவும் முடியல. ஒரு தரம் பார்த்துட்டு வந்துடறேன்.” அவனுக்கும் உள்ளுக்குள் உதறல் தான். அவள் நிலை அறிந்திருக்கவே இந்த முறை அதிர்ச்சி இருக்காது.
அறைக் கதவை மெல்லத் திறந்தான். கைகள் ஏனோ நடுங்கியது.
அன்று போலவே தான் இருந்தாள். அவள் அசைவின்றி கண் மூடி கிடந்தது அவனுக்கு மூச்சை அடைத்தது.
அவன் வந்து போனப்பின் சில மாற்றங்கள்.. இதய துடிப்பு ஓரளவு சீரக ஆரம்பித்திருந்தது. உடல் மருந்தை ஏற்க ஆரம்பித்தது. உணர்வுகள் வந்து வந்து போனது.
‘தோழி… என் தோழியா நீ? உன்னைப் படுக்க வைத்துவிட்டேனே… என்னை பாரேன்..’ அவள் பாதம் தொட்டு நின்றான். அவள் கால் பிடித்து பாவத்தைக் கழுவிட துடித்தது மனது. மனம் அதற்குத் தான் துடித்ததா?
மனத் துடிப்புக்கு அவன் கொண்ட அர்த்தம் இது தான்.
அவள் வலது கையை பற்றினான். “சுதா.. சுதா.. நான் பேசறது கேக்குதா?” ஏனோ நா தழுதழுத்தது! மனம் அன்று போலவே பதறியது.
அவன் மனம் தடுமாறும் என்று அவன் நினைக்கவே இல்லை. அவள் நிலை தெரிந்து தானே வந்தான்.. பின்னும் என்ன?
ஏன் இந்த தவிப்பு என்று அவனுக்குப் புரியவில்லை. முகம் தெரியாத ஒரு புதியவள் அல்லவா அவள்?
ஆனால் அவளுக்குத் தெரிந்தது. சாவிலிருந்து மீண்டு வருவேன் என்று கூறினாளே.. அவன் சுவாசக் காற்று அவள் மூச்சில் கலந்ததோ.. ஏதோ மாயை.. அவளால் அவனை உணர முடிந்தது. அவன் தான்! வந்தே விட்டான் அவளுக்காக. அவன் வாசம் மூச்சோடு கலந்தது.
அவன் சத்தம் அவள் காதுகளில் கேட்க, அவள் மூளை கூர்மையானது. ‘கண்ணனா? என் கண்ணனா? வந்துவிட்டாயா என்னைத் தேடி?’  அவளை அழைத்தவனைப் பார்க்க மனம் விம்மியது.. ஆனால் அவள் கண் இமை பாறையாய் கனக்க அவளால் கண்களைத் திறக்க முடியவில்லை.
மூடியிருந்த கண்களுக்குள் கருவிழி அங்குமிங்குமாய் ஓடியது. கைகளை நீட்டி அவனைத் தொட ஆசை கொண்டாள்… ஆனால் விரலைக் கூட அசைக்க முடியவில்லை.
அவன் உணர்ச்சி போங்க, “சுதா.. பயப்படாதே சுதா.. நீ சீக்கிரம் சரி ஆகிடுவ. பாரு.. யார் வந்திருக்கேனு பாரேன்.. சுதா. சுதா… கொஞ்சம் கண்ண திறயேன் எனக்காக.. ப்ளீஸ்.. சுதா! என்னால சத்தியமா உன்ன இப்படி பாக்கவே முடியல சுதா… எனக்காக.. ஒரே ஒரு தரம் கண்ண திற சுதா… ப்ளீஸ் சுதா.. ப்லீலீலீஸ்ஸ்..”
அஷோக்கா நின்று கெஞ்சுவது? இல்லை.. இது படுத்துக்கிடப்பவளின் உயிரின் ஓசை… அவன் கெஞ்சவில்லை.. உயிரெல்லாம் வடிய அவள் முன் உருகி கொண்டிருந்தான். அவன் உணர்வுக்கு நினைவுகள் தேவை இருக்கவில்லை.
அவள் கருவிழி ஓட்டம் அவனுக்கு ஒரு புது உணர்வைத் தர..  அவள் கையை இறுகப் பற்றிக் கொண்டான். தொண்டை அடைத்துக்கொள்ள அவனால் அதற்குமேல் பேச முடியவில்லை.
“சுதா.. எழுந்திரு சுதா.. ஒரே ஒரு தரம் என்னை பாரேன்.. ப்ளீஸ் சுதா” மன்றாடினான்.
அவள் விரல்கள் மெள்ள அசைந்தது. பலவீனமான அவள் விரல்களால் முடிந்த பலத்தைக் கொண்டு அவன் விரல்களைப் பிடித்துக் கொண்டாள். கண்ணோரம் நீர் வழிய மிகுந்த சிரமத்துடன் இமையை இரண்டு மில்லிமீட்டர் திறந்தாள். என்ன முயன்றும் அதற்கு மேல் திறக்க முடியவில்லை. அவன் தெரிந்தான்.. இமைகளுக்கு நடுவே மங்கலாய். அதுவே அவளுக்கு போதுமானதாயிருக்க, அவள் கண்கள் மீண்டும் மூடிக்கொண்டது.
“சுதா… ப்ளீ..ஸ் சுதா… சுதா” அவன் குரல் அவனுக்கே கேட்க முடியவில்லை. அவன் கண்கள் கரிக்க ஆரம்பித்தது. ‘ஐயோ என்னை நம்பி என்னோடு வந்த பெண்ணை உருகுலைத்துவிட்டேனே’ சொல்லிக்கொண்டான்.
மனம் பதைத்தது. ஆண்மகன் அழுவதா? ஏன் அழுதால் என்ன? அவனுக்கும் உணர்வுகள் உண்டு தானே? அவன் அழட்டும்.. வலி நீங்கும் வரை அழட்டும். ஆனால் யார் அவனிடம் கூறுவது. உன் வலி நீங்காதென்று! வலியோடு வாழ பழகிக்கொள்ளென்று?
அவளைக் கண் கொட்டாமல் கண்ணீர் வழிய பார்த்துக்கொண்டே நின்றிருந்தான்.
எவ்வளவு நேரம் நின்றானோ அவன் அறியான்.
“சார்.. அவங்க கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும். ப்ளீஸ்..” உள்ளே நுழைந்த நரஸ் பணிவுடன் வேண்ட… நீண்ட பெருமூச்சொன்றை விட்டு மெதுவாய் அவன் கையை விடுவித்துக் கொண்டான். அவள் கண்ணீரைத் துடைத்து விட்டு வெளிச் சென்றான்.
தீபக் இவனைப் பார்த்து அமர்த்திருந்தான். அவனுக்கு அஷோக்கின் மேல் கொலைவெறி! கண்ணில் அனல் பரக்க பார்த்திருந்தான். ஆனால் சுதாவிற்க்காய்.. அவள் அவன் மேல் வைத்திருக்கும் காதலுக்காய் கண்டிப்பாய் அஷோக்கோடு சண்டை இட மாட்டான்.
‘அஷோக்கால் தானே இன்று சுதா படுக்கையில். தாலி கட்டும் வேளை இடையே வராமல் இருந்திருந்தால், சுதா இன்று என்  மனைவியாய் என் வீட்டில் சந்தோஷமாய் இருந்திருப்பாளே.. கூட்டிச் சென்றவன் அவனானவது ஒரு தாலியைக் கட்டி மனைவியாய் அவளை பாதுகாக்காமல் போனானே.. வார்த்தைக்கு வார்த்தை அவள் எப்படி கதறினாள்.. ‘கண்ணன் என் கணவனென்று’ பாவி அவளை விட்டுவிட்டானே..’ என்ற கோபம்.
இருந்த மனநிலையில் அவன் முறைப்பதைக் கூட இவன் கவனிக்கவில்லை. பாட்டியிடம் விடை பெற்று மருத்துவரைக் காணாமல் நேராய் காரை நோக்கிச் சென்றான்.
அன்றே பாட்டி சுசிலாவிடம் பேசினார்.. இங்கிருந்தால் கண்ணன் வீட்டில் அடங்காமல் உடலை கெடுத்துக்கொள்வான், அவனை மும்பை அனுப்பிவிட்டால் அவனுக்கு நல்லதென்று. 
சுசிலாவிற்கும் அது சரி என்றே பட்டது. அவன் பொழுது போகாமல் யாரையாவது பார்க்கப் போவதும், யாரவது அவனைப் பார்க்கவருவதுமாய் இருக்கவுமே அவருக்கும் அதே எண்ணம் தான்.
அஷோக்கால் சென்னையில் இருக்க முடியவில்லை. அவன் அறையில் தனியாய் இருக்கவே முடியவில்லை. மூச்சு முட்டல் நிற்கவே இல்லை.
அம்மா மும்பை கிளம்பக் கூறியதும், வெங்கட்டிடம், “என்னால இங்க இருக்க முடியல டா.. நீ சிங்கப்பூர் கிளம்பு.. நான் தாத்தா வீட்டுக்கு போரேன். அங்க எப்பவும் ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கும்.. கொஞ்சம் பெட்டர் ஆனதும் வரேன்..” கூறியதோடு அவனும் மும்பை சென்றுவிட்டான்.
அஷோக்கைக் கண் குளிர பார்த்த சுதாவின் உடல் நிலை தேர ஆரம்பித்தது. நினைவு முற்றிலும் திரும்பியது. கண்கள் திறந்து விட்டாள்… அவனைக் காண! விரல்கள் அசைக்க முடிந்தது.. அவன் கரம் தீண்ட..  மாதம் ஒன்றாகியும் அவனைக் காணத்தான் முடியவில்லை. 
அவனை அடுத்துக் காணும் நாளுக்காய் அரை மயக்கத்தில் அவள் காத்திருக்க ஆரம்பித்தாள்.

Advertisement