Advertisement

சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_1
மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி.
வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு,  நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ் எடுத்துபார்.
டிஸ்சார்ஜ் ஃபார்மலிடீஸ் ஆக்சு… நீ எழுந்திரு!”
வீல்-சேர் பிடிவாதமாய் வேண்டாம் என்றுவிட்டான் அஷோக். காயங்கள் ஆறாத நிலை.. வேட்டி சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்தது. எதிலும் பிடிவாதம் தான். இனி நொடிப் பொழுதும் மருத்துவமனையில் இருக்கவே முடியாது என்று கிளம்பிக் கொண்டிருக்கிறான்.
மாற்றி மாற்றி கேள்வி கேட்டு வெங்கட்டை துளைத்துக் கொண்டிருந்தான்.
“அம்மா எங்க டா.. எப்போ பார் எங்கேயாவது காணாம போயுடுரது!”, அஷோக், அலுப்பாய் கேட்க
“கீழ ரிசெப்ஷன்ல இருக்காங்க..”, வெங்கட், செல்ஃபோனை நோண்டிக்கொண்டே பதிலளித்தான்.
“சாப்பிடப் போன பாட்டி என்ன ஆனாங்க?”, அடுத்த கேள்வி அஷோக்கிடமிருந்து
“சுதா கூட.. ஐ.சி.யூ முன்ன…”, சட்டென்று  வாயை மூடிக்கொண்டான். உளறிவிட்டோமே என்று தன்னையே நொந்துக்கொண்டான்.
நல்ல வேளையாக அஷோக் அதைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. மூச்சு வந்தது வெங்கட்டிற்கு!
“அம்மா நம்ம கூட வராங்க தானே”, அஷோக் கேட்க,
“ஆமா டா..” மீண்டும் கைப்பேசியில் கவனம்.
“சரி பாட்டிய பார்த்துட்டு போலாம். சொல்லிட்டு போகாட்டி வருத்தப் படுவாங்க. ஐ.சி.யூ எங்க?”
கவனம் சிதறியது. நின்றுவிட்டான் வெங்கட்.
“ம்ம்.. போனா தான் வருத்தப்படுவாங்க!” முணுமுணுத்தவனிடம்
“என்னடா?”
“ஒண்ணும் இல்ல!! இந்த பிளாக் தான் வா.. வேற ஃப்லோர்.”
ஐ.சி.யு முன் இருந்த வராண்டாவில் பாட்டியை காணவில்லை.
“பாட்டிய காணம்.. வா போலாம், அப்பறம் பார்த்துகலாம்” அவனை இழுத்துக் கொண்டு செல்லாத குறையாய்  அவசர படுத்தினான் வெங்கட்.
“சார்..” சத்தம் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.
பழக்கப் பட்ட நர்ஸ் நின்று கொண்டிருந்தாள். அஷோக்கும் சுதாவும் அவசர பிரிவுக்கு வரும் பொழுது வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தவள், ஸ்டெச்சரில் இவர்களைப் பார்த்ததும் தானே சென்று மருத்துவருக்கு உதவியாய் நின்றிருந்தாள். முதல் நான் கண் விழிக்கும் வரை அஷோக்கும் இங்கு தான், ஐ.சி.யு-வில் இருந்தான்.
“வெங்கட் சார், இத மீனாட்சி மேடம் கிட்ட கொடுத்திடுவீங்களா?  பேஷியன்ட்-அ பாக்கணும்னு கேட்டிங்களே.. இப்போ போய் பார்த்துட்டு சீக்கிரம் வந்திடுங்க. மூணாவது ரூம். அவங்கள டிஸ்ட்டர்ப் செய்யாம சீக்கிரம் பார்த்துட்டு வந்திடுங்க!”
அஷோக்கிற்குச் சிறு குழப்பம்.. பாட்டி அவர் பேத்திக்குப் பயப்படும்படி ஒன்றுமில்லை என்றதாய் நினைவு! சின்ன நோவுக்கெல்லாம் ஐ.சி.யு-வில் என்ன வேலை?
வெங்கட் வெலவெலத்து போனான்… என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். ‘ஆமா கேக்கும் போது எல்லாம் முடியாதுனு சொல்லிட்டு இப்போ வந்துட்டா..’
பாட்டி சொன்னது நினைவில் வந்தது.
“சுதா நினைவு இல்லாம படுத்திருக்கா. சுதா பிழைக்க மாட்டானு டாக்டர் உறுதியா சொல்றார். கண்ணனுக்கு  சுதாவ ஞாபகமில்ல!
சுதாவும், கண்ணனும் ஒருத்தர ஒருத்தர் விரும்பினாங்க.. அது கண்டிப்பா கண்ணன் உனக்குச் சொல்லி இருப்பான். சுசிக்குத் தெரியாது. தெரியவேண்டாம். உனக்கு உன் ஃப்ரெண்ட் உயிர் முக்கியம்னா இத பத்தி நீ யார் கிட்டையும் மூச்சு விடக் கூடாது.
சுதா அவன் வாழ்கையில வந்து முடிஞ்சுட்டா. அவன் நினைவில இல்லாதவ அவன் வாழ்விலும் இல்லாமலே போகட்டும்.. 
இன்னும் எத்தன நாள் உயிரோட இருபான்னு தெரியல.. அவனாவது இந்த வேதனையில் இருந்து தப்பிகட்டும்..
தெய்வாதீனமா அவ பொழைச்சு வந்தா அப்போ அவங்க நிலமையைப் பாத்து பொறுமையா முடிவெடுக்கலாம்.  நடுவில அவனுக்கா எப்போவாது அவ நினைவு வந்தா.. அப்போ பார்த்துகலாம்! நீ எதையும் சொல்லி உன் ஃப்ரெண்ட நீயே படுக்கவச்சிடாத!”
‘பாட்டிக்கு அவர்கள் வாழ்கையில் இணைவது விருப்பமில்லையா?’ என்ற சந்தேகம் வெங்கட்டிற்கு. ‘சுதா பற்றிக் கூறுவதால் இவன் உயிருக்கு எப்படி ஆபத்து வரும்?’
ஓரிரு நாளில் அஷோக்கிடம் சுதாவைப் சொல்லிவிடும் எண்ணமே அவனுக்கு. அவர்கள் கணவன் மனைவி என்பது தெரியாவிட்டாலும் உயிராய் காதலித்தை அவன் அறிந்திருந்தானே.
சுதா பாட்டிக்கு பிடித்தம் தான். உணவையும் தூக்கத்தையும் கூட மறந்து இங்கு தானே அமர்ந்திருக்கிறார். ஆனால் அஷோக் என்றுமே அவருக்கு ஸ்பெஷல். அவன் வாழ்வில் சுதா நுழையாதது வரை சுதா அவருக்கும் பிடித்தம் தான். தீபக்கை அவள் மணக்கச் சம்மதிக்கும் வரை அவள் பிடித்தம் தான். மீறி சுதா கண்ணன் பக்கம் சாய நினைத்தால்.. பாட்டிக்குச் சுதாவைப் பிடிக்காது. அது தான் அவரின் இன்றைய நிலை!
சிந்தனையிலிருந்து விடுபட்டவன், “இருக்கட்டும் சிஸ்டர் அப்புறம் பார்த்துக்குறேன்” சொல்லிக் கொண்டு தலையைத் திருப்ப.. நர்சும் அங்கு இல்லை அஷோக்கும் இல்லை!!!
வெங்கட் விழித்து முடிப்பதற்குள், அஷோக் சுதாவைக் காண நர்ஸின் உதவியோடு அவள் இருந்த அறைக்குள் சென்றிருந்தான்.
சுதாவைத் தெரியாது. என்றோ ஒரு நாள் அவளோடு வெங்கட் கூறிய பாட்டிக்குச் சென்றிருக்கிறான். ‘பழக்கப்பட்ட பெண்.. அம்மாவோடு நெருக்கம் போலும்.. அவளுக்காக அம்மாவும் தவமாய் தவமிருக்கிறார். போதாக்குறைக்குச் சுதா, அவன் அருமை பாட்டியின் பேத்தி… ஏதோ உடல் உபாதையில் படுத்திருக்கும் பெண், பார்த்துவிட்டுச் செல்வது தான் மரியாதை’ என்று எண்ணியவன்.. வெறும் மரியாதை நிமித்தம் அவளிருந்த அறையினுள் சென்றான்.
ஏதோ சின்னதாய் உடல் உபாதை.. நான்கு நாளில் சென்றுவிடுவாள் என்று பாட்டி வேறு கூறியிருக்க, கண் மூடி ஒரு பெண் படித்திருப்பாள் என்ற எண்ணத்தோடு நுழைந்தவன் அங்கிருந்த பெண்ணின் கோலத்தைப் பார்த்ததும் விக்கித்து நின்றுவிட்டான். கைக் கால் நடுங்கவே ஆரம்பித்து விட்டது.
அவன் ஒட்டு மொத்த நிம்மதியும்.. பேச்சு மூச்சில்லாமல் வெள்ளை துணியில்.. கை கால் முளைத்த மூட்டையாய்.. 
தலையிலிருந்து கால் வரை நொறுங்கிப் போனவளை கட்டுகளால் சேர்த்துப் பிடிக்க முயன்றிருந்தனரோ?
பரிதவித்து போனான். ‘எனக்குத் தோள் வேண்டும் சாய..’ உள்ளம் சத்தமில்லாமல் கதறியது.
தலை முற்றிலும் வழிக்கப் பட்டு தலையில் பெரிய கட்டு.
‘அர ஆழாக்கு சைஸ்ல தான் இருக்கா.. இவ்வளவு தலமுடிய எப்பிடி தூக்கிட்டு சுத்துரா?’ அவன் வியந்து பார்த்து.. முகம் புதைத்து, அதன் வாசத்தில் தன்னை மறந்து.. பட்டு போன்ற வழவழப்பில் எத்தனை நான் கிறங்கிப் போனான்.. அந்த கார்கூந்தல் இல்லை அவன் நினைவைத் தூண்ட.. அவனுக்கு அவளைத் தெரியவில்லை.
இடது பக்க கண், கன்னம் என்று ஒரு பக்கம் முழுவதும் பெரிய கட்டு! பாதி முகம் தெரியவில்லை.
‘ஒரே பார்வையில் அவன் இதயத் துடிப்பை ஒரு நொடி நிறுத்திய வசிகர விழி’ இன்று வெள்ளை கட்டுக்குள்! அவனை கோலிக்குண்டு பார்வையால் அழைத்திருந்தால்.. அவன் கடிக்க அந்த கன்னம் தெரிந்திருந்தால்.. அவன் நினைவு மீண்டிருக்குமோ?
அவன் சுவாசக் காற்றாய் போனவளுக்குச் சுவாசமில்லை.. ஒரு சின்ன ட்யூப் மூலம் மூக்கில் பிராண வாயு செலுத்தப் பட்டுக் கொண்டிருந்தது.
“பனை மரம்..” அவளின் செல்ல பனை மரம் இங்கு தான் வேரூன்றி நிற்கின்றது.. சத்தம் இல்லாமல் படுத்தவள், வாய் திறந்து அவள் பனை மரத்தை கூப்பிட்டிருந்தால் அவன் நினைவைப் பெற்றிருப்பானோ? தொண்டையும் அதிகமாய் அடிவாங்கியிருக்க.. கழுத்தில் பெரிய கட்டு. அதை அசைந்துவிடாமலிருக்க.. பெல்ட். இனி என்று பேசுவாளோ?
போதாக்குறைக்கு உடல் அசைந்துவிடாமலிருக்க உடலை பிடித்துக்கொண்டு கம்பிகள்.
அவள் காதலை எல்லாம் சுமந்த மார்பிலுமிருந்து பல ‘வயர்’கள் கணினியிலும், கண்காணிப்பு திரையிலும்  இணைக்கப் பட்டிருக்க அதற்குள் அவனுக்கு மட்டுமே சொந்தமான அவன் இதயம் இருப்பது தெரியாமலே போனது. அது அவனை மட்டுமே ஏந்தி, அவனுக்காக மட்டுமே துடிக்கும். அவனுக்கு ஏன் தெரியவில்லை?
‘அவள் வெற்றிடை அவன் உஷ்ணம் மட்டுமா தணிக்கும்.. விக்கித்து நிற்கும் அவன் வலியைக் குறைக்குமே.. அது என்ன ஆனதோ?’ அதையும் வெள்ளை துணியில் கட்டிவிட அவன் நினைவு தூண்டப் படவில்லையோ..
இடது கை.. கால் முழுவதும் கட்டு போட்டு தொங்க விட்டிருந்தனர்.
அவள் அணிந்திருந்த ஆஸ்பத்திரி பச்சை உடையில், வலது கையும் காலும் மட்டும் தங்கச்  சிற்பம் போல் அசைவற்று இருந்தது.
அசைவில்லாத வலது கையில் நரம்பு வழி ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருந்தது.
இப்படி ஒரு காட்சியை அவன் காண வரவில்லை. ஏனோ அவன் இதயம் வலித்தது. மூச்சு விடச் சற்று சிரமமாகத் தோன்றியது. அவனால் வருத்தத்தை அடக்கவே முடியவில்லை. முன்பின் அறியாத பெண்ணுக்காய் அவன் உள்ளம் வருந்தியது ஏனென்று தெரியவில்லை.
அவனுக்கு யாராவது ஆறுதல் சொல்ல வரமாட்டார்களா என்ற நிலை.. ஐயோ யார் பெற்ற மகளோ.. ஏன் இந்த நிலை.. உடலில் வலது பக்க கை கால் முகம்.. இவ்வளவு தான் தெரிந்தது. ‘ஓ’வென்று கத்தி அழவேண்டும் போலிருக்க அவனால் அங்கு நிற்கவே முடியவில்லை.
இருபது வயதிருக்குமா? வாழ வேண்டிய இளம் பெண்.. ஏன்? எப்படி இங்கே…? மனம் தாளவில்லை. அவன் பாட்டியின் பேத்தியாயிற்றே.. அப்பொழுது அவனுக்கும் உறவு தானே… அதனால் உள்ளம் ஏங்கியதா? தெரியவில்லை.

Advertisement